காலையும், மாலையும், காணும் யாவையும் எல்லோருக்கும் ஒரேவிதமாகத்தான் காட்சியளிக் கின்றன. என்றாலும், பார்க்கும் பார்வைக்கேற்ப அவற்றில் ஆயிரம் பரிமாணங்களும், வர்ணஜாலங் களும், அர்த்தச் செறிவுகளுமாய்த் தனித்தன்மையோடு மிளிர்கின்றன. அப்படித்தான் கவிதையும். எழுத்து களால் ஆன சொற்களைக் கொண்டு கட்டமைக்கப் படுவது கவிதை. ஒரு மொழியிலுள்ள சொற்களும், அவற்றின் அர்த்தங்களும் பொதுத்தன்மையானவை என்றாலும் இலக்கியப் படைப்புகளில், குறிப்பாக கவிதைகளில், எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும் இடையேயான தொங்குபாலத்தில் ஊசலாடும் நேரம் அவை வரவாக்கும் அர்த்தச்செறிவுகளும், உணர்வுப் பெருக்குகளும் மிகவும் தனித்துவமானவை.

புதுப்புனல் வெளியீடாய் வரவாகியிருக்கும் பன்முகம் கவிதைகள் தொகுப்பில் (காலங்களுக்கப் பால்) வெளியாகியிருக்கும் கவிதைகளைப் படிக்கும் போது மேற்குறிப்பிட்டுள்ள எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது. ஏறத்தாழ 40 கவிஞர்களால் எழுதப்பட்ட அறுபதுக்கும் அதிகமான கவிதைகள் இடம்பெற்றிருக்கும் இத்தொகுப்பில் அதிகபட்ச மாக ஒரு கவிஞரின் மூன்று கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. வைதீஸ்வரன், இந்திரன், மாலதி, மைத்ரி, ரெங்கநாயகி, விக்கிரமாதித்யன், லாவண்யா, ராணி திலக், கடற்கரை, அய்யப்ப மாதவன், தேவ தேவன், திலகபாமா என நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் முனைப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலானேர் இதில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நவீன கவிதைப் பரப்பில் பரவலாக அறியப் பட்டவர்கள், அந்த அளவு அறியப்படாதவர்கள் என்றாலும் பல வருடங்களாகக் குறிப்பிடத்தக்க அளவு கவிதைவெளியில் பங்காற்றியிருப்பவர்கள் என இருதரப்பினரையும் இத்தொகுப்பில் இனங் காண முடிகிறது.

வாழ்வின் அக, புற விஷயங்கள் அத்தனையும் கவிதைக்கருவாக்கியிருக்கின்றன. இக்கவிதைகளில், சில கவிதைகள் அடர்செறிவாகவும், சில சற்றே நீர்த்தும் அமைந்துள்ளன. சமயங்களில் ஒரு கவிதையிலிருந்து மற்றொரு கவிதைக்கு ஒரு இணைப்புவழி கூட பிடிபட்டு விடுகிறது!

நீர் நிலம் காற்று வானம் கடல் பூமி

எல்லாம் எல்லாம் முன்னதாகவே புழங்கிப்போனதாக

எப்படி சாத்தியம் என்னிலிருந்து

எழுதப்படாத ஒரு கவிதை

பாடப்படாத ஒரு பாடல்

என்று முடியும்’ கடற்கரை’யின் கவிதை ‘ஏற்கனவே’ - இதைத்தான் குறிப்புணர்த்துகிறது என்று தோன்றுகிறது.

‘ஓவியனும் காலமும்’ என்ற தலைப்பிட்ட இந்திரனுடைய கவிதை ‘அந்தியில் / என் ஓவிய அறையின் வாசலுக்கு / வந்தது காலம் / பூனையின் பாதங்களோடு’ என நேரம் போவதே தெரியாமல் காலம் கழிவதையும், காலத்தின், ஓவியத்தின் பிற பரிமாணங்களையும் அழகுற விவரிக்கிறது.

‘ஹவி’யின் ‘தீவு’ என்ற தலைப்பிட்ட கவிதை பூமி மீதான நம் வாழ்க்கையையே ஒரு தீவாக உருவகப்படுத்தி முன்னேறி ‘நீர் கொள்ளுமா கவிதை / நீலமாய் விரிகிறது/ வார்த்தையும் வானம்’ என்று ‘கவிதைக்குள் கவிதையாய்’ மனதை நெகிழச் செய்து நிறைவுறுகிறது.

சில கவிதைகள் நேரடித்தன்மையோடும், சில உருவகங்களும், குறியீடுகளும் நிறைந்ததாகவும் உருப்பெற்றிருக்கின்றன. கீதாஞ்சலி ப்ரியதர்ஷினியின் ‘எனது இப்போதைய வீடு’ நேடித்தன்மை கொண்ட கவிதையொன்றாலும் அதில் சொல்லப்பட்ட கருத்து படிப்பவர் மனங்களில் நெகிழ்வூட்டக்கூடியது. பாவண்ணனின் ‘கருணை’ கவிதையும் அத்தன்மையது. கடவுளின் கதை’ என்ற தலைப்பிட்ட ‘லாவண்யா’ வின் கவிதை ‘நமதைப் போலவே / அவருடைய கதையும் / கந்தல்தான்’ என்று கடவுளையும் நம்மையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்துகிறது என்றால் மாலதி மைத்தியின் ‘கடவுளைச் செய்பவள்’ கவிதை ‘உனக்கான கடவுளை நீயே செய்துகொள்’, என்று கடவுளையே உருவாக்குபவராக மனிதப் பிறவியை மேம்படுத்துகிறது! ‘ரெங்கநாயகியின் பெண்நிலை வாதம்’ நேர்ப்பேச்சுக் கவிதையாகவும், ‘வலை பின்னிக்கொண்டேயிருக்கிறது சிலந்தி’ முழுக்க முழுக்க உருவகக் கவிதையாகவும் உருப்பெற்றிருக் கின்றன.

இந்தத் தொகுப்புக்கு காவனூர். ந. சீனிவாசன் தொகுப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருப்பதோடு விரிவான முன்னுரையும் எழுதியுள்ளார். ஒரு கால கட்டத்தின் கவிதைப்போக்குகளை எடுத்துக்காட்ட இத்தகைய பல தொகுப்புகள் அவசியம் தேவை.

**

காலங்களுக்கப்பால்... (பன்முகம் கவிதைகள்)

காவனூர் ந.சீனிவாசன்

வெளியீடு : புதுப்புனல் பதிப்பகம்

விலை : ரூ.60.00

Pin It