பேராசான் சிவத்தம்பி அவர்களுடைய மறைவை அடுத்து வந்த நாட்களில், அவரைத் தாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்ட அளவை, அவருடைய வெவ்வேறு துறை சார் நண்பர்கள் ஊடகங்களில் தெரிவித்தபோது, அறிய, மலைப்பாகவும் மனநிறைவாகவும் இருந்தது. பேராசிரியரின் முழுப் பங்களிப்புகளை ஓரளவுக்கேனும் வகைப்படுத்தி அவற்றை ஒன்று திரட்டும்போது, அவருடைய மீள் தரிசன முழுமையானது, பொய்மை அற்ற வடிவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு, மன நிறைவைத் தருகின்றது.

“பேராசிரியர் சிவத்தம்பி காலமானார்,” என்ற துயர் பகிர் செய்தியை ஆய்வறிஞர்பற்றி மாகரன் லண்டன் ஐஎல்சி - உயிரோடை தமிழ் - வானொலிக்கு அறிவித்த வுடன் நிகழ்ச்சிகளை நாம் இடை நிறுத்தித் துயர் பகிரத் தொடங்கியதும், கருத்துகள் திரளத் திரள, பேராசிரியரே நம்மிடையே அறிமுகப்படுத்திய “காலம் ஆகினார்,” என்ற அர்த்தம் பொதிந்த பதமே அவர் தொடர்பாக, நெஞ்சில் கலக்கத்தோடு, மீண்டும் மீண்டும் நிழலாடத் தொடங்கியது.

ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற பெரு வட்டகைகளில் இருந்து வெவ்வேறு அறிஞர்களும் தோழர்களும் சாதாரண வானொலி நேயர்களும் ஐஎல்சி வானொலியில் அஞ்சலி செய்யக் குவிந்தனர். பேராசிரி யருடைய வழிகாட்டல் சாதனையை வியந்தனர். சங்க காலம் தொடக்கம் சிவத்தம்பி காலம் வரைக்கும் தமிழ் பெற்ற சிறப்பை அவர் பெயரால் போற்றினர். ஒரு முழுமை பெற்ற ஆளுமையாகவே அவரை இனம் கண்டனர்.

இனி, மண்ணிலும் புலத்திலும் இயங்கும் வெவ்வேறு வரி - ஒலி ஊடகங்களில் மேலை நாட்டு, தமிழ்நாட்டு, ஈழத்து அறிவியல், அரசியல், தமிழ் மொழி அறிஞரும் கலைத் துறை போந்தோரும் அவருடைய பன்முக ஆளுமையை மெச்சினர். தமக்கும் பேராசிரியருக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவு தொடர்பாகவும் நெகிழ்ந்து பேசினர்.

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய பலமும் பயிற்சியும் நாடகம், ஊடகம் கல்வி ஆகிய துறைகளிலேயே என்பதால் அவற்றில் துறைபோந்த பேராசிரியருக்கும் எனக்கும் இடையே நிலவிய தொடர்பும் உறவும் நாடக-ஊடக, கல்வித் துறைசார் தனித்துவம் கொண்டவையாகவே திகழ்ந்தன. இலக்கிய ஆழம் கொண்ட அவருடைய அறிவூட்டலும் வழி காட்டலும் எனக்குக் கணிசமான அளவு கிடைத்தன. என்னுடைய கருத்து எதிர்ப்புகளைக் கூர்மையாக கவனத்தெடுப்பார். என்னுடைய நிராகரிப்புகளை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் எனது தனித்துவத்தை மெச்சும் தந்தைப் பெருமிதப் பரிவும்கூட அவரிடம் சுனையாக இருந்தன.

பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக நான் இருந்தபோது, ஒவ்வொரு ஞாயிறு காலையும் கார்த்திகேசு சிவத்தம்பி என்ற முகமறியாக் கல்விமான் எழுதும் சிறுகதை வளர்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளிவரும் வீரகேசரி வார சஞ்சிகையை வணங்கி வாங்குவதற்காக வளாகத்துக்கு வெளியே இரண்டு மைல் நடந்து தமிழ் வளர்க்கும் ஒரு முஸ்லிம் கிராமத்துக்குப் போவேன்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்ட மேல் நாடக டிப்ளோமா நெறியை நான் பயின்ற வேளை, தமிழ் இலக் கியத்தில் நாடகம் தொடர்பாக அவர் எமக்கு நடத்திய விரிவுரைகளில் அவருடைய அறிவும் ஆழமும் என்னை மலைக்கவைத்தன. நான் அறிந்திராத நாடக அறிவுசார் இலக்கியத் தொன்மைச் சங்கதிகள் பலவற்றை அவர் எனக்கு ஊட்டினார். நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் மலை யகத்திலும் உள்ள பெருந்தொகைக் கிராமங்களுக்குச் சென்று அங்கெல்லாம் பாடப்படும் கூத்துகள், ஏட்டிலுள்ள கூத்துகள், ராக கோலங்கள், ஆட்ட வடிவங்கள் என்ற பச்சை மண் தேடலிலும் சேகரிப்பிலும் ஈடுபட்டு என் அறிவை என்பாட்டில் வளர்த்துக் கொண்டவன் நான். நவீன நாடக மேடையாக்கங்களில் அவற்றை எவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் சேர்த்திழைத்துப் புதிய நாடக கோலங்கள் வரையலாம் என்ற முயற்சியில் மட்டுமே அன்றுவரை கவனம் செலுத்தியவன், பேராசிரியர் சிவத்தம்பி சொரிந்த பழந்தமிழ் இலக்கிய அறிவுப் பால் வார்ப்போடு, என் வசமிருந்த தேட்டங்களில் அடங்கிய வளங்களின் செழுமையைப் புதிய கண்ணோடு துருவத் தொடங்கினேன். அப்போதிருந்து என் தாய்த் தமிழ் நாடக புராதன வாய்க்கால் பச்சை மண்ணில் பேராசிரியர் பாய்ச்சிய இலக்கியப் பாலைத் தழுவ விட்டு, அந்தக் குழையலை பக்தியோடு விண்டு நெற்றி நீறிடத் தொடங்கினேன்.

என்னுடைய தொடக்க கால நெறியாட்சியில் உருவான மகாகவியின் கோடை, மகாகவியின் புதிய தொரு வீடு, ஞானம், லம்பேட்டின் பிச்சை வேண்டாம் ஆகிய நாடகங்களை என் பேராசான் பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்ததில்லை என்றே கருதுகின்றேன். எனது நாடகம் எதையும் பார்க்காது அது தொடர்பாக அவர் வெறும் கேள்வி ஞானத்தை வைத்துக் கொண்டு சிலாகித்துப் பேசக் கூடாது என்பதில் அவரிடம் பிடிவாதமாக இருந்தேன். இது, எம் இருவரிடையேயும் இனிய பனிப் போர் ஒன்றைத் தோற்றுவித்திருந்தது. இலங்கையில் நான் நாடக மேடைகளில் வலுவாகக் காலடி பதித்த வேளை, தமது கலாநிதி ஆய்வுக்காகத் தாம் மேல் நாடு சென்றிருந்ததாக அவர் நொண்டிச் சமாதானம் கூறுவதை ஏற்பதற்கு நான் தயாராக இருக்கவில்லை.

பின்னொரு நாளில், வித்யோதய பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியராக அவர் திகழ்ந்த வேளை அங்கு ஒரு நாடகம் தயாரிக்க என்னை அழைத்திருந்தார். நாடகர் நா.சுந்தரலிங்கம் இரண்டு தாள்களில் எழுதிய ஓலங்கள் என்ற நாடகப் பிரதியைப் படிக்கத் தந்தார். “குறைந்தது 15 நிமிடத்துக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில் தயாரிக்க முடியுமாடாப்பா?” என்று கேட்டார்.

கருத்துக்கு வடிவமும் அசைவும் ஒலியும் ஒளியும் வர்ணமும் கொடுக்கும் ஐம்புலன் உள்மனக் கொடும் பயிற்சியால் (இன்று வீணடிக்கப்பட்ட) அன்று தேறி வந்திருந்த தன்னம்பிக்கை என்னிடம் இருந்தது. “பிரதிச் சொல்லாடலில் கை வைக்காமலே அரை மணி நேரம் செய்யலாமே!”என்றேன்.

வெவ்வேறு வகை ஓசைகளும் ஓலங்களும் இசையும் ஒளியும் குழைந்தன. வெவ்வேறு தளங்களில் அசைவுகளும் ஆட்டங்களும் இழைந்தன. தமிழ் புரியாக் கூடத்தில் பெருமளவில் மொழி இல்லாக் காட்சியாக்கி ஓலச் சிவிறலில் நிகழ்ச்சியை நிறைவுசெய்தோம். நிகழ்ச்சி நிறைவில் மேடைக்குச் சென்ற பேராசிரியருக்கு அன்று மண்டபத்தை நிறைத்த சிங்கள மாணவர் கூட்டம் முழுமையாக எழுந்து நின்று முழு மனதோடு கரவொலி மரியாதை செய்ததை, பேராசிரியரின் மறைவுக்கு, லண்டன் ஐஎல்சி, உயிரோடை தமிழ் - மக்கள் வானொலி அஞ்சலி செலுத்திய தருணத்தில், அதே நாடகத்தில் பங்கெடுத்த அவருடைய தமிழ் மாணவர்கள், வானலையில் வந்து, காலப் பொறி ஏறி, பின் நகர்ந்து விரிவாக நினைவு கூர்ந்தபோது, நெகிழ்ந்து போனேன்.

புலத்துத் தமிழ் மக்களின் கலை இலக்கிய விழாக் களில் மிகப் பரவலாகக் கலந்துகொண்ட ஊரவர் ஒருவர் என்றால், அவர், பேராசிரியராகத்தான் இருக்க முடியும். வெறுமே தலைமை தாங்குவதோடு நின்றுவிடாது, தம்முடைய புலத்து உறவுகளின் வாழ்க்கை முறை களையும் அவர் ஊன்றிக் கவனித்ததால், மண்ணுக்கும் புலத்துக்கும் இடையே மட்டுமன்றிப் புலத்து நாடுகளுக் கிடையேயும், பண்டைக் காலப் புலவன்போலவும், இன்றைக்கால நல்லெண்ண ராஜதந்திரி போலவும், நம்மிடையே ஓர் உறவுப் பாலமாகவும் திகழ்ந்தார். இதை ஒரு தடவை அவரிடம் சுட்டிக்காட்டியபோது, “எடேய்! என்ர பொறுப்புக் கூடுது எண்ணுறாய், என்னடா!” என்று நெகிழ்ந்தார்!

தமிழ் இலக்கியத்துக்கும், உலக சமுதாயத்துக்கும் பேராசிரியர் புரிந்த சிந்தனைத் தொண்டு என்று அவருடைய அறிவுசார் சாதனைகள்பற்றிப் பல்கலைக் கழகங்களிலும் அவற்றுக்கு அப்பாலும் கற்ற மனிதர் பலரும் போற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வெறும் நடைமுறைப் பாமர மனிசனாக நான் இங்கே குறிப்பிடப் போவது எவர் அரங்கு ஏறுமோ அறியேன். கூறுவது என் கடன் என்றபடியால் குறிப்பிடுகின்றேன்.

புலத்துத் தமிழ்ப் பாலருக்கு அவர் புரிந்த தமிழ்த் தொண்டே காலத்தால் சுவறிய சமூகப் பெருந்தொண்டு என்று துணிந்து கூறுவேன். நம் தமிழ்ப் பாலரின் புதிய புலத்துச் சூழலில் அவர்களுக்கான தமிழ்க் கல்விப் பாதை ஒன்றை உறுதியாகப் படைப்பதற்குப் பேராசிரியர் ஆற்றிய பணியே அவரை ஒரு கால கர்த்தராக எனது இதயத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறது.

நம் மண்ணின் பாலருடைய தமிழ்க் கல்விக்கு 19ஆம் நூற்றாண்டில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கால கர்த்தராக ஒப்பற்ற பணி புரிந்தாரென்றால் நம் புலத்துப் பாலரின் தமிழ்க் கல்விக்கு 21ஆம் நூற்றாண்டில் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி கால கர்த்தராக ஒப்பற்ற பணி புரிந்தார் என்று இருவரையும் சம தராசிட்டு நன்றியோடு வணங்குவேன். ஆறுமுக நாவலரின் பணி சைவத்துக்கும் தமிழுக்கும் என்றால் பேராசிரியர் சிவத்தம்பியின் பணி சமூகத்துக்கும் தமிழுக்கும் என்பேன்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புலத்துப் பாலருக்குப் புரிந்த இந்தத் தொண்டு தொடர்பாக, ஐஎல்சி - உயிரோடை தமிழ் - மக்கள் வானொலி தவிர்ந்த வேறெந்த ஊடகத் தளத்திலோ அஞ்சலி உரைகளிலோ யாரும் குறிப்பிடாததால், இந்தத் தமிழ்க் கல்வித் தொண்டில் அவரோடு கூடிப் பணியாற்றும் பேறு கிடைத்தவன் என்ற நிலையில் அது பற்றி இங்குச் சிறிது விரிவாகப் பதிவிடத் துணிகின்றேன்.

உயிரைக் காப்பாற்றுவதற்காக உலகெலாம் வெறும் கையராகச் சிதறிப் பறந்த ஈழத் தமிழ்ப் பறவைகள் தாம் சென்றடைந்த புலத்து மரங்களில் கட்டிய கூடுகளில் பொரித்த குஞ்சுகளுக்குத் தங்கள் கலை கலாசாரத் தானிய மணிகளைச் சேகரித்து ஊட்ட விரும்பின. ஒவ்வொரு நாட்டிலும் வார இறுதித் தமிழ்ப் பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதே வேளை, புலம் எங்கணும் வாழும் தமிழ் மக்களையும் தமிழ்ப் பாலரையும் நம் தாய் மண்ணோடு ஊடுசரடாக இணைக்க வல்லது பொதுத் தமிழ்ப் பாட நூலே என்ற கருத்தும் புலத்தில் வலுப்பெற்றது.

பள்ளிப் பாலருக்கான பொதுத் தமிழ்ப் பாட நூல் களைத் தயாரிக்கும் யாகப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட ஜெர்மனியின் சிவசோதி வரதராஜாவும் அவருடைய பீலபெல்டு இளம் தோழர்களும் மிகப் பெரும் நிதிச் சுமையைப் பொறுப்பேற்றதால், தமிழ்க் கல்வி யாகம் சாத்தியம் ஆயிற்று.

நாடகம், ஊடகம் தொடர்பாகப் பேராசிரியருக்கும் எனக்கும் இடையே நிலவிய ஊடாட்டம் மண்ணிலே நீளமாக இருந்தது. கல்வி தொடர்பான எங்கள் தொடர்பு, புலத்திலேயே இடம் பெற இந்த நூலாக்கம் வடிகால் அமைத்தது.

ஒஸ்த்ரேலியாவில் இருந்து ஐரோப்பா ஊடாக அமெரிக்கா வரையுள்ள பெரும்பாலான புலத்துத் தமிழ்ப் பள்ளிப் பிரதிநிதிகள் கூடிய அரங்கு அளித்த ஒப்புதலோடு நூலாக்கப் பணி தொடங்கியது. பணியின் கனதி உணர்ந்து, தமது இயலா உடல்நிலையையும் பாராது, வரதராஜாவின் அழைப்பை ஏற்று, பீலபெல்டின் புகழ் வாய்ந்த வன மாளிகைக்குப் பேராசிரியர் எழுந்தருளினார். அவருடைய அன்பு ஆக்ஞை ஒன்றுக்கு மட்டுமே இசைந்தவர்களாக, புலத்தில் எவரும் எண்ணிப் பார்க்க முடியாத அறிவுக் கனதியான தமிழ் மதியுரைஞர் குழாம் ஒன்று அவர் தலைமையில் அங்குக் கூடியது.

தமிழகத்திலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான அகஸ்தியலிங்கம், சுந்தரமூர்த்தி, தமிழிலக்கணத்தில் துறை போந்த பேரறிஞர் செ.வை. சண்முகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத் தலைவர் இராமர் இளங்கோ, சிங்கப்பூரில் இருந்து பாடக் கட்டுருவாக்க நேர்த்தி வழிகாட்டலோடு பேராசிரியர் சுப.திண்ணப்பன், கொழும்பில் இருந்து பேராசிரியர் சோ.சந்திரசேகரன், யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் காரை எஸ்.சுந்தரம்பிள்ளை, சென்னையி லிருந்து ஓவியர் டிராட்ஸ்கி மருது போன்ற கல்விப் பெரு வளன்கள் பீலபெல்டு வன மாளிகையின் அமைதிச் சூழலில் மூன்று வாரமளவில் தங்கினார்கள். புலத்துப் பாலரின் தேவைகளைக் கேட்டறிந்தார்கள். புலத்துத் தமிழ்க் கல்வியாளர் மல்லீஸ்வரி ஆதவன், நா.சி.கமலநாதன், நிர்மலாதேவி வரதராஜா, ஏ.சி.தாசீசியஸ் போன்றோர் நூல்களை எழுதுவதற்கு சிவசோதி வரதராஜாவால் ஒன்று சேர்க்கப்பட, பேராசிரியர் சிவத்தம்பி அழைத்து வந்த அறிவுப் பெருந்தகைகள், தங்கள் நிபுணத்துவ மதியுரையை ஓய்வுறக்கம் இன்றி வழங்கினார்கள்.

மூன்று வாரங்களும் இரவு பகலாகப் பேராசிரியர் சிவத்தம்பி தம்மை வருத்தி உழைத்தார். நூலேறும் ஒவ்வொரு வார்த்தையும் தமது கண்களைக் கடந்தே போக வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். ஓயாது மதியுரைஞர்களோடு கலந்துரையாடினார்.சளைக்காது, பாடங்களை எழுதுபவர்களை அணைத்து ஊக்குவித்து வழிகாட்டினார். சிவசோதி வரதராஜாவையும் பீலபெல்டு தமிழ் இளைஞர்களையும் அவர்களுடைய ஆக்க முயற்சியில் பாராட்டி ஊக்குவித்தார். புலத்துத் தமிழ்ப் பள்ளி ஆசிரியருக்கான வழிகாட்டலையும் பெற்றோருக்கான அறிவுறுத்தலையும் புலத்துக் கள நிலைக்கேற்ப உரிய அறிஞர்களோடு கலந்துரையாடி, தாமே கைப்பட எழுதி, கையேடுகளாக வடிவமைத்தார்.

நூல், கரு வளர்ந்து, கையெழுத்து வடிவமாக முழுமை எய்திய நிலையில் நூலுக்கு வெறுமே தமிழ் என்று பெயரிடுவதைப் பேராசிரியர் உட்பட மதியுரைஞர் யாருமே விரும்பவில்லை. “புலத்து மக்கள், தம் தாய் மொழியின் துணையோடு புதிய தளத்தில் ஒரு தனியான நடை மேற்கொள்வதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்,” என்ற உள்ளுணர்வோடு கலந்துரையாடல் நீள, ஒரு கட்டத்தில், தமிழ் வழி - என்ற பெயரைப் பேராசிரியரே இட்டார்.

“தமிழ் வழியின் உள்ளே ஊரும் உயிராக ஓடவல்ல சொற்கட்டு ஒன்றை யாத்தளியுங்கள்,” என்று மதியுரை அறிஞர் களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர்களிடம் இருந்து தனித் தனி நறுக்குகளாகக் குவிந்தவற்றைச் சுற்றிவர அமர்ந்து ஒவ்வொன்றாக வாய்விட்டுப் படித்தோம். ஒளவையாரின் ஆத்திசூடியிலிருந்து பாரதி, பாவேந்தர் வரை கார்ந்தெடுக்கப்பட்டவை பல குவிந்தன. சுயமாக வந்தவையும் சில இருந்தன.

நறுக்கு ஒன்றில் இருந்த ஒரு சொற்கட்டு என்னை மின்சாரம் தாக்கியதுபோல அதிர வைத்தது. “தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு!” என்று அது ஒளிர்ந்தது. திரும்பத் திரும்ப அதை வாய்விட்டுப் படித்தேன். ஏக தாள ஒலிக் கொட்டாக அது ஒலிக்கத் தொடங்க மற்றவர்களும் கூடி ஓதத் தொடங்கினார்கள். அதை எழுதியவர் பேராசிரியரே என்பதை அவர் கையெழுத்து அடை யாளம் காட்டியபோது பூரிப்பு பல மடங்காகியது. அதற்கான விளக்கத்தை அவர் அங்கே வழங்கத் தொடங்கியபோது, “தமிழை நாம் வளர்ப்போம்; தமிழால் நாம் வளர்வோம்,” என்ற தொனிப் பொருளில் அவர் அவ்வப்போது உரைப்பதன் அர்த்தம் புரியத் தொடங்கியது.

பலரும் தெரிவிக்கும் கருத்துத் துகள்களை ஒன்று சேர்த்து அவற்றுக்கு உருவம் கொடுத்து, அதையே ஒரு பொதுத் தத்துவமாகச் செதுக்கி, அனைவரும் தம்மை அந்தத் தத்துவத்தில் இனம் காணச் செய்யும் ஒரு நாடக நெறியாளனுடைய நேர்த்தி பேராசிரியரிடம் இருந்ததைப் பாம்பின் கால் பாம்பறியும் நிலை நின்று அந்தக் கணத்தில் உணர்ந்தேன்.

“தமிழ் மக்கள் வரலாற்றின் உயிரே இதுதானே! முன்னைக் காலத்திலும் சரி, இற்றைக் காலத்திலும் சரி, எதிர் காலத்திலும் சரி, ஒரு தேசிய இனமாக, நம்மை நமக்கே இனம் காட்டுவதும் உலக மக்களுக்கு நம்மை இனம் காட்டுவதும் தமிழ் என்ற நம்முடைய உயிர்ப்பின் இருப்புத் தானே? மண்ணிலும் புலத்திலும் சதா காலமும் நம்மை உயிர்ப்போடும் தனித்துவத்தோடும் வைத்திருக்கப் போவதும் இதுதானே! என்ன கவித்துவக் கட்டு!” மூச்சு விடாமல் கூறிக்கொண்டே போனேன். முன்பு, பேராசிரி யரின் மாணாக்கனாக நான் இருந்தபோது, அவருடைய விரிவுரைகள் அவ்வப்போது ஏற்படுத்தும் சிலிர்ப்பு மீண்டும் காட்டாற்று வெள்ளமாக என்னுள்ளே பாய்ந்தது.

ஜெர்மனி, பீலபெல்டு வன மாளிகையில் பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற மூன்று வாரக் கடுந் தவ நோற்பின் அறுவடையாக - முதல் மூன்று வகுப்புகளுக்கான முழுமை பெற்ற தமிழ் வழி - நூல், எழுத்துரு பெற்றிருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து உருப்படிகள் அடங்கிய வளர் நிலை வண்ணத் தமிழ்ச் செண்டு அது!

அதனுள் - படித்தல், எழுதுதல் ஆகியவற்றுக்கு ஒரு நூல்; கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகியவற்றுக்கு இன்னொரு நூல்; ஆசிரியரின் பார்வைக்கு மேலுமொரு குறு நூல்; பெற்றோரின் பார்வைக்கு வேறொரு கை நூல் - இவற்றோடு, பாடங்களோடு ஒட்டிய பாடல், உரையாடல் அடங்கிய ஒரு இறுவட்டு! அறுசுவை விருந்துப் படையலாக அவற்றோடு சேர்த்து மழலைப் பாடல் இறுவட்டும் வண்ணப் பட நூலும்!

வெவ்வேறு புலத்து அரசுகளின் கல்வி அமைச்சுகள் மெச்சும் வகையில், தரமான வெளிப்புறத் தயாரிப்புத் தரத்தில் தமிழ் வழியின் வடிவம் இருந்ததென்றால், ஜெர்மனி சிவசோதி வரதராஜாவையும் பீலபெல்டு தமிழ் இளைஞரையும் பாராட்ட வேண்டும். நூலின் உள்ளடக்கம் தமிழறிஞர்களாலும் உலக அரசுகளின் கல்வி நிர்வாகங் களாலும் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால், அதற்காக, அந்த நூல் முயற்சியைச் சாரத்தியம் செய்த பேராசான் சிவத்தம்பியையே நாம் தொழ வேண்டும்.

ஒவ்வொரு புலத்து நாட்டிலும் தமிழ்க் கல்வி தனித் தனி முயற்சியாக முன்பிருந்தே ஊட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் அனைத்துப் புலத்துத் தமிழ் உறவுகளையும் தமிழ் வழி என்ற நூல் மூலமாக ஒன்றாக இணைத்தமையே பேராசிரியரின் அமைதியான சமூக சாதனைகளுள் நயத்தகு சாதனையாக அமையும் என்பேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊடக வளத்துறைப் பணிப்பாளர் தேவநாயகம் தேவானந்த் அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பாக நாலு வரி எழுது மாறு ஆணையிட்டிருக்கிறார். எழுதத் தயங்கினாலும், எனது வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பதற்கு இது நல்ல வாய்ப்பு என்பதால், தயங்காது ஒப்புக் கொண்டேன்.

தமிழ் அறிவுச் சொத்து நம் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி! பெருந் தொகையாக அவர் எழுதிக் குவித்த கட்டுரைகளும் நூல்களும் நூலகங்களை அலங்கரிக்கட்டும். அறிஞர்களுக்கும் ஆய்வாளர் களுக்கும் தத்துவங்களாகப் பயன் தரட்டும்.

ஆனால் சமூகப் பிரக்ஞை கொண்ட மனிதராக அவரை இனம் காட்டிய அவருடைய ஊர்த் தொண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கவின்கலைத் தொண்டு, ரி.ஆர்.ஆர்.ஒ. மூலம் அவதிப்பட்ட மக்களுக்குப் புரிந்த தொண்டு, வேறுபட்டு நின்ற இனங்களிடையே புரிந்த நல்லிணக்கத் தொண்டு, மண்ணுக்கும் புலத்துக்கும் இடையே புரிந்த உறவுப் பாலத் தொண்டு, தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையே ஏற்படுத்தித் தந்த தமிழ் உறவுத் தொண்டு - போன்றவற்றை ஒன்று திரட்டித் தர யாராவது முன்வர வேண்டும். அந்த யதார்த்தத் திரட்டலிலேயே அவருடைய தத்துவங்களின் சத்தியத்தையும் தமிழுலகம் தரிசிக்கக் கூடுமாயிருக்கும்.

யார் அதைச் செய்யலாம்? யாழ்ப்பாண பல்கலைக் கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை தனித்தோ, கூட்டாகவோ - யாதும் ஊரே யாவரும் கேளிராக இந்த முயற்சியில் ஈடுபடலாம். நிர்வாகக் குறுக்கீடுகளோ அதிகாரத் தடைகளோ ஏற்படும் பட்சத்தில், பேராசிரியரின் நிழலாக, மைந்தனாக, மாணாக்கனாக, தோழனாக, சிந்தைப் பகிர்வாளனாக அனைவராலும் இனம் காணப்படும் சென்னைப் பேராசிரியர் வீ.அரசுவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மற்றவர்கள் புரியலாம்.

இது ஒரு புலத்துத் தமிழனின் விதப்புரையே!

(குறிப்பு: www.odagam.com என்ற இணைய தளத்திலிருந்து எடுத்து வெளியிடப்படுகிறது.)

Pin It