குமரி ஆதவன் எழுதிய அருமை மகளே (கவிதைகள்) நூலை முன்வைத்து...

ஆகச் சிறந்த வார்த்தைகளின் ஆகச்சிறந்த ஒழுங்கமைவு என்றும், அமைதியாய் நினைவுகூரப் பட்ட உணர்வலைகள் என்றும், திடுமெனக் கிளர்ந் தெழும் உள்தூண்டல் எனவும் கவிதை குறித்த விவரிப்புகள் நிறைய உண்டு.  ஏற்கெனவே வாழ்வில் இடம்பெற்றிருக்கும் ஒன்றை இன்னும் துல்லியமாக வடித்துக்காட்டுவதும், வாழ்வின் இனம்புரியா இயல்புகளைப் பொருள்பெயர்த்துத் தருவதும், பலப்பல மனங்களின் பிரதிபலிப்பாய் ஒரு மனதின், மனிதனின் வலிவேதனைகளையும், பரவசங்களையும் எழுத்தில் பகிர்ந்துகொள்வதும் கவிதை என்பதை நாம் அறிவோம்.

கதைக்கருவைப் போலவே கவிதைக்கான கருப் பொருள்களும் மரணம், உறவு, தனிமை, காதல், இயற்கை, பயம், கடவுள் எனக் கணக்கிட்டுச் சொல்லக்கூடியவையே என்பதாலும், இலக்கியம் என்பது எந்தவொரு மொழியிலும் நீள் நெடுந் தொடர்ச்சியான வளர்ச்சியைக்கொண்டது என் பதாலும், ஒரு கருப்பொருளைச் சொல்லும் முறை யிலும், அதற்குப் பயன்படுத்தும் மொழியின் செறி விலும், வாசகருடைய பங்காற்றலுக்கும் ஒரு பிரதியில் இடம்தரும் அளவிலும் ஒரு படைப்பு ‘வழக்கமான ஒன்றாக’ அல்லது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக அடையாளங்காணப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் குமரி ஆதவனின் கவிதைத் தொகுப்பான ‘அருமை மகளே’ (தமிழன் பதிப்பக வெளியீடு) குறித்துச் சில கருத்துகளை முன்வைக்கத் தோன்றுகிறது.ஏறத்தாழ 60 கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளே அதிகம். அவற்றில் நெகிழ்வூட்டும் கவிதைகளும் உண்டு.  நிறையப் படித்துவிட்டதாய் அலுப்பூட்டும் கவிதைகளும் உண்டு.

arumai-magala-_-360‘அம்மா’வை மையப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்டுள்ள நாலைந்து கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  ‘அம்மா’ என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் ‘ஆசையை அழித்து விட்டதில் / புத்தனுக்கும் பெரியவள் நீ’ - அழுத்த மான வரிகள்.  ‘அம்மாவும், வெங்கலச் செம்பும்’ என்ற தலைப்பிட்ட கவிதையிலும் அத்தகைய வரிகள் உண்டு.  ‘கண்ணு கலங்குது’ என்ற தலைப் பிட்ட கவிதையும் அம்மாவைப் பற்றிப் பேசுவதே. அதில் இடம்பெற்றுள்ள ‘காக்காவும், கோழிகளும் / நெல் தின்னுது’ என்றேன்/ ‘பத்து நெல்லு தின்னும் / அதுல நம்ம பஞ்சமா தீந்துரப் போவுது’ என்று கேட்கும் அம்மாவின் உன்னத மனசை அந்த வரிகள் துல்லியமாய் வெளிப்படுத்துகின்றன! தமிழைத் தாயாக நேசிப்பதை எடுத்துச் சொல்கிறது நான்கு வரிக் கவிதையொன்று.

‘முகம் காணத் துடிக்கும் பயணம்’ என்ற கவிதையில், ‘ஒரே சிலுவையில் / நாம் இருபுறமாய் / அறையப்பட்டிருக்கிறோம்.

மனம் காண / மேற்கொண்ட பயணத்தில் / இன்னும் / இடம் வந்து சேரவில்லை’என்ற வரிகள் இல்லறம் குறித்த, ஆண்பெண் உறவு குறித்த, அல்லது எந்தவொரு மனித உறவும் குறித்த அடர்செறிவான விவரிப்பு.  அகம் சார்ந்த இந்த அடர்செறிவான விவரிப்பைப் போலவே ‘கண் மூடிக்/ கண் திறக்கையில்/ தேசத்தின் சொத்துகள்/ களவாடப்பட்டு விட்டன’ என்று ‘கும்பகோணம் பள்ளித் தீவிபத்து’ குறித்த கவிதையும்- ‘குழந்தை களை தேசத்தின் சொத்துகளாக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

இத்தகைய வளமான மொழிப்பயன்பாடு கவிஞருக்குக் கைவந்ததுதான், என்பது தெரிகிறது.  அதை அவர் முழு விழிப்போடு ஒவ்வொரு கவிதையிலும் கைக்கொண்டால் அவருடைய கவிதைகளில் பொதுவாக உணரக்கிடைக்கும் ‘கூறியது கூறல்’ அடியோடு மாறிவிடும் என்பது உறுதி.  ‘கவனம்’ என்ற தலைப்பிட்ட குறுங்கவிதையும், ‘தவிப்பு’ என்ற தலைப்பிட்ட கவிதைகள் இடம்பெறும் ‘எப்படி, இனம் காண்பது / ஏழைகளின் வியர்வை முத்துக்களை?’ போன்ற அடர்செறிவான வரிகளும் கவிஞருடைய மொழியாளுமையை வெளிப்படுத்து கின்றன.  இதை அவர் இன்னமும் முழுநிறைவாகத் தன்னுடைய கவிதைகளில் கையாள முன்வர வேண்டும்.

‘ஆண்டை’யின் அதிகாரத்தைச் சாடும் ‘அதி காரம்’ என்ற தலைப்பிட்ட கவிதையில் ‘மழையைப் போல்/ பாசம் கொள்வதும்/ கோடையைப் போல / கோபம் கொள்வதும் தானே / உங்களது குணம்’ என்ற வரிகளில் மழை என்ற மகோன்னதமான இயற்கைப் பெருவரம் இங்கே எந்தவகையில் அதி காரம் குறித்த எதிர்மறையான பொருளில் தரப் பட்டிருக்கிறது, எந்தவகையில் தரப்பட்டிருந்தாலும் அது சரியா என்ற கேள்விகள் மனதில் தவிர்க்க முடியாமல் எழுகின்றன.

‘சங்கடம்’ என்ற தலைப்பிட்ட கவிதை, வறுமையில் உழலும் பெண், ஆடைகூடப் பெற இயலாதவளாய்த் தவிக்கும் அவலநிலையைப் பேசும் விதத்தில் ஒருவித ‘மிகையுணர்ச்சி’ நிரம்பி யதாக உணரவைக்கிறது.

நிலா மறந்த இரவுகள் - என்ற தலைப்பே ஒற்றை வரிக்கவிதை.  இந்தத் தலைப்பின்கீழ் இடம் பெறும் கவிதை நேரடித்தன்மை வாய்ந்த, எனில், நெகிழ்வூட்டும் காட்சிப்படுத்தல்களால் கட்டமைந் துள்ள கவிதை.

‘களவு போன என் கனவுகளைத் திரும்பத் தர முடியுமா’ என்று கவிஞர் கடலிடம் கேட்கும் ‘கடல் ரகசியம்’ என்ற தலைப்பிட்ட கவிதை, கடலின் பல் பரிமாண அழகுகளைக் கோடிகாட்ட முயன்றிருக் கிறது, எனில், தமிழ்க் கவிதை வெளியெங்கும் நிரம்பியிருக்கும் ‘கடல் பற்றிய கவிதைகளோடு (கடல் பற்றிய கவிதைகள் என்ற தலைப்பில் கவிஞர் பிரம்மராஜன் எழுதியுள்ள 20, 30 தன்னிகரற்ற கவிதைகளை நினைக்காமலிருக்க முடியவில்லை.)  ஒப்புநோக்க, முழுவெற்றி பெறவில்லை என்றே சொல்லமுடிகிறது.

‘ஒன்றும் இன்னொன்றும்’ என்ற தலைப் பிட்ட கவிதையில் ‘பதினெட்டு முறை / சபரி மலை சென்றவர்/ குருசாமியானார்.../ ஐம்பது வருடமாய் / வேளிமலைக்குச் சென்றவர் / படுக்கையிலானார்’ என்ற வரிகளில் இடம்பெறும் ‘வேளிமலை’ குறித்த விவரம் எனக்குத் தெரியாதவரை ‘எத்தனை எளிமை யாக எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கவிதையும் எனக்கு ‘புரியாமை நிரம்பிய’ கவிதையே.  இதற்காக நான் குறைகூற வேண்டியது என் அறியாமையைத் தானே தவிர கவிஞரின் கவித்துவத்தையல்ல.  சரி தானே?!

ஒரு மரம் / வேறொரு மரத்தை வெட்ட / கோடரி உருவாக்கவில்லை/ ஒரு பறவை/ மற்றொரு பறவையைத் தாக்க/ கத்தி தீட்டவில்லை / ஒரு விலங்கு / இன்னொரு விலங்கை வீழ்த்த / ஆயுதம் தயாரிக்கவில்லை எனக் ‘கடவுளின் சிரிப்பு’ என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் வரிகள் மனிதனுடைய ஆறறிவை, எத்தனை தெளிவாகக் கேள்விக்குட்படுத்துகின்றன! அவனுடைய ரத்த வெறியை எத்தனை துல்லியமாக அம்பலப்படுத்து கின்றன!

இப்படி, சாதாரணக் கவிதையிலும் செறிவான தனிக்கவிதையாக இடம்பெற்றுள்ள வரிகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.  அதேபோல், கவிதைகளுக்கான கோட்டோ வியங்களையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

அருமை மகளே
குமரி ஆதவன்
வெளியீடு : தமிழன் பதிப்பகம்
குமாரபுரம் அஞ்சல் - 629189
குமரி மாவட்டம்
விலை : ரூ.60.00

Pin It