குழந்தைகளை நல்லதொரு பாதைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்பவை குழந்தை இலக்கியங்கள்.  வாய்மொழி இலக்கியமாக இருந்த குழந்தை இலக்கியம் எழுதப்பட்ட இலக்கியமாகப் பல வடிவங்களில் இன்று வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்கிறது.  சாதிக்கக்கூடியவர்களாக, அறிவு படைத்தவர்களாக, புதியதைப் படைக்கும் திறம் படைத்தவர்களாக, கற்பனையில் திளைக்கக் கூடியவர்களாகக் குழந்தைகளை உருவாக்குபவை குழந்தை இலக்கியங்களே.

“குழந்தைகள் பற்றிய எழுத்துக்களை - குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது, குழந்தை களுக்காகக் குழந்தைகளே எழுதுவது, குழந்தை களைப் பற்றி எழுதுவது என வகைப்படுத்தலாம் என்றும், குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது மட்டுமே பெரும்பாலும் குழந்தை இலக்கியமாக அடையாளம் கொள்ளப்படுகிறது” என்றும் இரா.  காமராசு குழந்தை இலக்கியம் பற்றிய வரையறையை முன்வைக்கிறார்.குழந்தை இலக்கியங்களாகப் பாடல்கள், கதைகள், தேவதைக் கதைகள், படக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்...  போன்றவைகளைக் கூறலாம்.

எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகள்

தமிழ் இலக்கிய உலகில் நவீன எழுத்தாளராக வலம்வரும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆங்காங்கே கண்ட தையும், ரசித்து அனுபவித்ததையும், உள்ளது உள்ள வாறு கற்பனைநயம் கலந்து எழுதுவதில் வல்லவர்.  இலக்கியம், சினிமா, நாடகம், பத்திரிகை, இணையம் என்று பல தளங்களிலும் தன் படைப்புப்பணியைச் செவ்வனே ஆற்றி வருபவர்.  முழுநேர எழுத்தாளரான இவர், ‘அட்சரம்’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்.

ஆனந்தவிகடனில் இவர் எழுதிய ‘துணை யெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘கேள்விக் குறி’ ஆகிய தொடர்கள் வாசகர்களைத் தன்வசப் படுத்தின.  இவர் எழுதிய ‘உபபாண்டவம்’ நாவல் மகாபாரதத்தை மையமாகக்கொண்டு எழுதப் பட்டது.  ‘நெடுங்குருதி’ என்ற நாவலானது 2003-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்நாவலாகத் தேர்வு செய்யப் பட்டுப் பரிசு பெற்றுள்ளது.

இவரின் கற்பனையின் சாட்சியாகக் கனவு நகரமாகத் திகழும் ‘ஏழுதலை நகரம்’ குழந்தை களைக் குதூகலப்படுத்தும் புதுவிதமான நாவல்.  குழந்தைகளை மையமிட்ட ‘கிறுகிறுவானம்’ என்ற நாவலானது சிறுவர்களின் மனநிலையைப் படம் விரிக்கின்றது.

குழந்தைகளுக்கான ‘ஆலிஸின் அற்புத உலகம்’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  இவர் தொகுத்து வெளி யிட்டுள்ள ‘உலக சினிமா’ புத்தகம் உலக சினிமாவைத் தமிழில் அறிமுகப்படுத்தும் முகமாக அமைந்துள்ளது. உலக இலக்கியம் குறித்து ‘வாக்கியங்களின் சாலை’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.  இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுதிகள், நான்கு நாடகங்கள், இரண்டு மொழிபெயர்ப்புநூல்கள் வெளியாகியுள்ளன.

கிறுகிறுவானம்-கதைச் சுருக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கிறுகிறுவானம்’ நாவல் ஒரு கிராமத்துச் சிறுவனின் எளிய உரையாடலாக அமைகின்றது.  அவனின் பால்யகால நினைவுகள் ஒவ்வொன்றும் நாவலின் கதை நிகழ்ச்சிகளாக வெளிப்படுகின்றன.

வள்ளிக்குளம் என்ற ஊரில் சாதாரண குடும் பத்தில் பிறந்த செண்பகராமன் பள்ளியில் படிக்கும் நாட்களில் ஆசிரியர்களுக்குப் பட்டப் பெயர் வைக்கும் குணமுடையவன்.  ‘முத்தையாவோட தாத்தா கூறிய கதை முழுங்கிக் கதையைக் கேட்டுப் பயந்து எதையும் மனதில் மறைத்து வைக்கக் கூடாது’ என்பதை அறிந்து, தன் மனதிலும் மறைத்து வைத்திருக்கும் பால்ய கால நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறான்.

தனக்கு ஏற்படும் பசியைப் பற்றியும், அதனால் ஏற்படும் ஏக்கத்தைப் பற்றியும் கூறுகிறான்.  பொய் சொல்வது தனக்குக் கரும்பு சாப்பிடுவது போன்றது என்கிறான்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம் இருக்கத் தனக்கு முடி வெட்டுவதும், சாமியைப் பற்றியும்தான் பயம் என்கிறான்.  விளையாடத் தனக்குப் பிடிப்பதாகவும், தூங்குவதும், திருடுவதும் என்றால் மிகவும் பிடிப்பதாகவும் கூறுகிறான்.  நிஜக் குதிரையில் ராஜா ராணி போலப் போவதற்கும், உலக உருண்டையில் உள்ள ஊர்களில் ஏதாவது ஓர் ஊருக்குச் சென்று வந்து விடவும் ஆசைப்படுகிறான்.  பள்ளியில் இருந்து அழைத்துச் சென்ற சுற்றுலாவின் போது, கன்னியாகுமரிக்குச் சென்று வந்ததையும் கூறுகிறான்.

“இப்படித்தான் நான் எதையாவது சொல்லிக் கிட்டே இருப்பேன்.  இப்போ பாதி மறந்து போச்சி; மிச்சம் ஞாபகம் வரும்போது சொல்கிறேன்” என்று முடிப்பதாகக் கதையை முடிக்கிறார்

கற்பனை

“உள ஆற்றலுக்கு உறுதுணையாக நிற்பது கற்பனை.  கற்பனை மனதில் எழும் அளவற்ற எண்ண ஓட்டமாகும்.  கற்பனைக்கு எல்லையில்லை, வரையறையில்லை என்றும், நாம் அறிந்திருக்கும் சில செயல்கள் அல்லது நிகழ்ச்சிகளுடன் நடைபெற இயலாத சில செயல்வடிவங்களைப் பொருத்திப் பார்ப்பது கற்பனை” என்றும் கூறும் உளவியல் அறிஞரின் கருத்திற்கிணங்க நாவலில் சிறுவர் களின் கற்பனை அமைந்திருக்கின்றது.

சிறுவன் தன் நண்பர்களிடம் கண்மாய்ப் பாதையில் ஒரு சிங்கம் வந்ததாகவும், அது தன்னை இங்கே வாடானு கூப்பிட்டதாகவும், தான் பயந்து ஓடி வந்துவிட்டதாகவும் கூற- அவர்களும் ஆர்வத்தில் சிங்கத்தைப் பற்றி மேலும் மேலும் கேட்கவே, சிங்கத்துக்கு இரண்டு ரெக்கை இருந்ததாகவும், பறந்து இங்கே வந்ததாகவும் கூறி நம்பவைத்தான்.  இதனால் ஆசிரியரிடம் அடி வாங்கியதோடு இல்லாமல், மறுநாள் ரெக்கை முளைச்ச சிங்கத்தைக் காட்டு வதாக நண்பர்களை அழைத்துக்கொண்டு கண் மாய்க்குச் செல்கிறான்.  ஆனால் அங்கே சிங்கம் வரவேயில்லை.  “எப்படி வரும் சிங்கம்? தான் உண் டாக்கினது ஆச்சே...” (ப.37) என்று சிறுவன் மனதில் கூறிக்கொள்வதன் மூலம் சிறுவனின் கற்பனைத் திறன் வெளிப்படுகிறது.

இத்தகைய கற்பனையால், “எதுக்கு சிங்கத்துக்கு ரெக்கையில்லை, அதுதான் காட்டுக்கு ராஜாவாச்சே.  ரெக்கை இருந்தா எங்க வேணும்னாலும் போகலாம் தானே.  இத்தினியூண்டு குருவிக்குக்கூட ரெக்கை யிருக்கு, இம்புட்டு பெரிய சிங்கத்துக்கு ஏன் ரெக்கை கிடையாது.  அப்போ அதைப் போயி எப்படிக் காட்டுக்கு ராஜானு சொல்றது” (ப.37) என்ற சிந்தித்தல் அறிவு சிறுவர்களிடையே மேம்படுகிறது.

உலகில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்யும் ஆற்றல் குழந்தைகளிடம் இயல்பிலேயே அமைந்திருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

இதேபோலச் சிறுவர்கள் கதைகளில் கேட்ட ராஜா ராணிகள் வானத்துக்கு அந்தப் பக்கம் இருப் பதாகக் கற்பனை செய்து அவர்களைத் தேடி வானத்தை நோக்கிப் பயணிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது (பக். 69-70).

நாவலில் கடவுள்களைப் பற்றிய கற்பனை சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.  ஊரில் சுடுகாட்டு முனி இருப்பதாகவும், தனியாகப் போனா முதுகில் அடித்துக் கொல்வதாகவும், வீரப்பெருமாள் சாமி இரவானால் நாலு நாய்களோட வேட்டைக்குச் செல்வதாகவும், எதிரில் யாராவது போனா அடித்து விடுவதாகவும், நாய் இரவில் குரைப்பது வேட்டைக்குப் போகும் வீரப்பெருமாளைப் பார்த்துத்தான் என்றும், பனையடி கருப்புசாமிக்குக் கறிச்சோறு சாப்பிடுற துன்னா ரொம்பப்பிடிக்கும் என்றும், யாராவது தூக்குவாளியில் கறிச்சோறு கொண்டுபோனா பிடுங்கிச் சாப்பிட்ருமாம் (ப.45) என்றும் கற்பனை யாக, கடவுள்களைப் பற்றிக் கூறும் சிறுவர்களின் பயம்கலந்த கற்பனைத் திறன் வெளிப்படுகிறது.

எதிர்காலவியல்

சிறுவர்களின் பல்வேறு ஆசைகளும், பசியும், உணவு குறித்த ஏக்கங்களும் நாவல் நெடுகிலும் பரவலாக மிக எதார்த்தமாக வெளிப்படுகின்றன.  சிறுவர்கள் தங்களின் ஆசைகள், கனவுகள் நிறை வேறாதபோது எதிர்காலத்திலாவது அவற்றை யெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆசைப்பட்ட உணவான இட்லி, தோசை போன்றவை வயிறுமுட்டக் கிடைக்காத சூழலில் இருக்கும் சிறுவன், “நான் வேலைக்குப் போயி சம்பாதிச்சா பெரிய அண்டா நிறைய மாவு ஆட்டி வச்சி காலையிலே இருந்து தோசையா சுட்டு சுட்டு தின்னுகிட்டே இருப்பேன்.  அப்போ யாரு கேட்டாலும் வயிறு முட்ட திங்கச்சொல்லி தோசை குடுப்பேன்.  அன்னைக்கு நீங்க வந்தாகூடச் சாப்பிடலாம்” (ப.23) என்று தன் மனநிலையினை வெளிப்படுத்துகிறான்.

சிறுவர்களுக்கு வண்ண வண்ணமாகப் புதிய ஆடைகளை உடுத்த நினைப்பதில் அலாதியான பிரியம் உண்டு.  நடைபெறாத சூழலில் உள்ள ஒரு சிறுவனின் பகற்கனவாக,

“எனக்கு நாடகத்தில் நடிப்பாங்களே அவங் களை மாதிரி ஜிகுனா வைச்சி சட்டை தைச்சிப் போடணும்னு ஆசை ஆசையா இருக்கு.  ஆனா துணி யாரு வாங்குறது? எங்க கொண்டு போயி தைக்கிறது? எப்பவாவது நானே வேலைக்குப் போயி அந்த மாதிரி சட்டை வாங்குவேன்.  அப்போ அதைப் போட்டுக்கிட்டு இதே தெருவில் பாடிக் கிட்டே நடந்து போவேன்.  என்ன கனவு காணுறேன்னு நினைக்குறீங்களா? நான் அப்படித்தான்!” (ப.63) என்று தன் ஆசையை வெளிப்படுத்தி அதற்கான எதிர்காலத்திட்டத்தையும் முன்வைக்கிறான்.

இதேபோல், கதையில் வரும் சிறுவர்கள் ராஜா ராணி போலக் குதிரையின் மீது ஏறிச் செல்ல விரும்பு கின்றனர்.  அது நடக்காமல் போகவே ஊருக்கு வெளியே இருக்கும் கருப்பசாமி கோவில் வாசல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மண் குதிரையின் மீறி ஏறி உட்கார்ந்து ‘ஹே ஹே’ என்று கத்துகின்றனர்.

“குதிரையில் ஏறிக்கிட்டு பள்ளிக்கூடம் போனா நல்லா இருக்குமில்லே.  நான் எப்படியாவது ஒரு குதிரை வாங்குவேன்.  அதை எனக்கு ஓட்டத் தெரியும்.  அப்படியே அந்தக் குதிரையை ஓட்டிக்கிட்டு வானத்துக்கு அந்தப் பக்கம் போவேன்.  அங்க இருக்கிற ராஜா, ராணி, கோட்டை எல்லாத்தையும் பார்ப்பேன்.  அதுவரைக்கும் இந்த மண் குதிரை போதும்” (ப. 71) என்று கூறுவதிலிருந்து சிறுவனின் ஏக்கம் கலந்த மனப்பக்குவம் வெளிப்படுகிறது.

பொய்

பொய் சொல்லுவது இயல்பாக ஏற்பட்ட ஒரு குணமல்ல.  பழக்கத்தாலேயே உண்டாகிறது என்றும், குழந்தைகளின் பொய் சொல்லும் பழக்கம் பெற்றோர் களிடம் இருந்தும், மற்றோர்களிடம் இருந்துமே வருகிறது என்றும் கூறிக் குழந்தைகள் பொய் சொல்லு வதை விளையாட்டாகச் சொல்லும் பொய், கலக்கத் தால் சொல்லும் பொய், தற்பெருமைக்காகச் சொல்லும் பொய், துன்பம் உண்டாக்கச் சொல்லும் பொய், தப்பை மறைக்கச் சொல்லும் பொய் என்றும் வகைப்படுத்துவர் உளவியல் அறிஞர் பெ. தூரன்.

நாவலில் வரும் குழந்தைகள் விளையாட்டுக் காகப் பொய்கள் சொல்வதாகக் கூறுகின்றனர்.
ரெக்கை முளைச்ச சிங்கம் கண்மாய்க்கு வந்த தாகக் கூறும் பொய், துணி தைக்கும் ஊசி காணாமல் போவதற்குக் காரணம் ஊசிக்கள்ளன் வந்து தூக்கிச் சென்று விடுவதாகக் கூறும் பொய், தேங்காய் வாங்கக் கொடுத்த காசிற்கு மிட்டாய் வாங்கித் தின்று வீட்டில் கேட்பவர்களிடம் காசை இருட்டு பிடுங்கிடுச்சின்னு கூறும் பொய் என்று பல்வேறு பொய்களைக் கூறுவதாகப் பதிவு செய்கிறார்.

பொய் சொல்வதும் அதைப் பாதுகாப்பதும் எவ்வளவு கடினம் என்பதையும், கால், பொய், அரைப் பொய், முழுப் பொய் பற்றியும் கூறுகிறான்.  பேயைப் பத்திச் சொல்லும் பொய்யும் பொய் தானே என்று நம்மிடம் கேட்கிறான்.

“எல்லாரும் கைநிறைய பொய் வச்சிருக்காங்க.  அதை யார் கேட்டாலும் அள்ளி அள்ளித்தர்றாங்க.  நானும் நிறைய பொய் வச்சிருக்கேன்.  என் பொய்யை யாரும் கண்டுபிடிக்கவே முடியாது.  நான் சொல்ற பொய்யைக் கேட்டா சிரிப்பா வரும்.  மத்தபடி நான் யாரையும் ஏமாத்த மாட்டேன்.  பொய் சொல்றது எனக்கு ஒரு விளையாட்டு மாதிரி” என்கிறான்.

விளையாட்டு

உலகில் உள்ள பெரியவர் முதல் சிறுவர்கள் வரை விளையாட்டை விரும்பாதவர் எவருமிலர்.  விளையாட்டின் மூலம் குழந்தைகள் வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைகின்றனர்.  இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியான உணர்வையும், ஒற்றுமையையும், சகோதரத்துவ உணர்வையும் பெறுகின்றனர்.

“குழந்தைகள் தங்கள் மனத்தில் அடக்கி வைக்கப் பட்ட உணர்ச்சிகளை விளையாட்டின் மூலம் வெளியிடுகின்றனர்” என்பர் கல்வி உளவியலாளர் வ. விஜயலெட்சுமி.  சிறுவர்களின் உணர்ச்சிகளை வெளியிடும் காரணிகளுள் விளையாட்டும் ஒன்று என்பது இதனால் உணரமுடிகின்றது.குழந்தைகள் இன்று மறைந்துவரும் பல விளை யாட்டுகளை விளையாடி மகிழ்வதை நாவலில் பதிவு செய்துள்ளார்.

நாவலில் குழந்தைகள் கிறுகிறுவானம், மரத்தி லேறி கத்துற விளையாட்டான குரங்கு விளையாட்டு, நிழலா வெயிலா, நீச்சல், கபடி, கோலி, கள்ளன் போலிஸ், கிளியந்தட்டு, காட்டுமணி, எறிபந்து, கிட்டு, பனங்காய் வண்டி உருட்டுதல், காத்தாடி விடுறது, பொன்வண்டு பிடிக்கிறது, சிகரெட் அட்டை விளையாட்டு, தீப்பெட்டி லேபிள் சேகரிக்கிறது, தூண்டில் வைத்து மீன் பிடிக்கிறது போன்ற விளை யாட்டுகளை விளையாடித் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

குழந்தைகளை ஊடகங்கள் தன்வசப்படுத்தி யுள்ளதாலும், எந்திரத்தனமான கல்விமுறையாலும் இன்றைய சமுதாயத்தில் இதுபோன்ற விளையாட்டு களை விளையாடும் குழந்தைகளை விரல்விட்டே எண்ணி விடலாம்.

சொல்லாட்சித் திறன்

இயல்பான பேச்சுவழக்கில் குழந்தைத்தனத் தோடு உரையாடும் சிறுவர்கள் இடையிடையே தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திச் சென்றுள்ளதை அறியமுடிகிறது.தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டிக்குக் கொடுக்கப் படும் தழையைப் பற்றிக் கூறும்போது பாலாட்டங் குழை (ப.17) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.  தன் வீட்டிற்கு வந்துபோகும் எலியின் செயலைக் கூறும் சிறுவன் “ஒன்றிரண்டு எலியும் இருக்கு.  அது நைசாக ஜன்னல் வழியாக உள்ளே இறங்கி வந்து எதையாவது கருமி தின்னுகிட்டு அலையும்” (ப.19) என்று, கேந்திப்பூ, கம்மாய் (ப.20), மஞ்சனத்தி பழம் (ப.23), புளிய விளார் (ப.37), கள்ளன் (ப.37), தொறட்டி (ப.38), முள்வாங்கி (ப.44), பிடரி, ரோமம் (ப.44), களம் (ப.49), உச்சாணிக் கொம்பு, கொடுக் காய்ப்புளி (ப.51), சிரட்டை, உடைமரம் (ப.53), மென்னி (ப. 55), நிமிட்டான்பழம் (ப. 58), மைதானம் (ப.74) என்று பல்வேறு சொற்களைத் தங்களின் உரையாடலின் இடையே சிறுவர்கள் பயன்படுத்தி யுள்ளனர்.

நடமாடும் கேள்விக்குறி

குழந்தைகளின் மனத்தில் ஆயிரக்கணக்கான வினாக்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு அணிவகுத்து நிற்கின்றன.  குழந்தைகளின் இயல்பான பண்பே வினாக்கள் எழுப்புவதுதான்.  எப்போதும் எதைப் பற்றியாவது குழந்தைத்தனமாக வினாக்கள் எழுப்பிக்கொண்டே இருப்பர்.  இவர்களின் வினா கேட்கும் திறனால் அறிவு வளர்கிறது; கற்பனை பெருகுகிறது; படைப்பாற்றல் தூண்டப்படுகிறது; ஆராய்ச்சி மனம் மேலாங்குகிறது.

ஜெர்சில்டு என்ற உளவியல் அறிஞர் குழந்தை களை ‘நடமாடும் கேள்விக்குறி’ என்று அழைக் கின்றார்.  இத்தகைய கேள்விக்குறியாக வரும் சிறுவர்கள் நாவலில் வருவதைப் பதிவு செய் துள்ளார்.கண்மாயில் மீன்பிடிக்கும் சிறுவன், மீன் அகப்படாதபோது மீனைப் பற்றிய வினா எழுப்பு வதைக் காட்டுகிறார்.

“கண்மாய்க்குள்ளே எத்தனை மீன் இருக்கும்? இந்த மீன்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போகுமா? அதுகளுக்குப் படிக்கிற புத்தகம் இருக்கா? மீன்கள் பேசிக்கிடுமா? மீன்களுக்கு யாரு வாத்தியாரு? இப்படி யோசிக்க யோசிக்க, சிரிப்பா வரும்” (ப. 54) என்று அவனே, அவன் கேட்கும் வினாக்களை நினைத்துச் சிரிப்பதாகக் கூறுகிறான்.  சிறுவர் களின் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந் திருப்பதை அறியமுடிகிறது.

கனவு பற்றிய குழந்தைகளின் வினாக்கள் நாவலில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  கனவு காண்பதைப்பற்றிக் கூறும்போது, “வீட்டில் ஏன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு வரும்? எல்லாரும் ஒரே இடத்தில்தானே படுத்திருக்கோம்.  கனவு எங்கேயிருந்து வரும்? கனவுக்குக் கால் இருக்கா? காலையில கனவு எங்கே போயிருது? எனக்குத் தெரியல.  உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க” (ப.60) என்று நம்மிடையே விடையைத் தேடுவதாகச் சிறுவர்களின் வினா அமைகிறது.

நட்சத்திரங்களை ரசிப்பது என்றால் சிறுவர் களுக்கு அலாதியான பிரியம் உண்டு.  களத்து மேட்டில் படுத்திருந்த சிறுவன் நட்சத்திரங்களைப் பற்றிய வினாவை எழுப்புகிறான்.

“இந்த நட்சத்திரம் எல்லாம் எங்க ஊர்ல மட்டும்தான் இருக்கா? இல்லை வேற ஊர்ல எல்லாம் இதே நட்சத்திரம் தெரியுமா? ஏன் நட்சத்திரம் ஓயாம கண்ணைச் சிமிட்டிக்கிட்டே இருக்கு.  இது ஏன் இப்படி வானத்தில் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி விளையாடுது? நட்சத்திரத்திற்கு அப்பா அம்மா யாரு?” (ப.57) என்று கேட்பதாக அமை கிறது.  இவ்வினாக்கள் விண்ணுலகைப் பற்றிய ஆராய்ச்சியில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கு முன் னெடுப்பாக அமைந்திருப்பதை உணரலாம்.

முடிவாக, எஸ்.ராமகிருஷ்ணன் நாவலில் தொடக்கம், உச்சம், முடிவு என்று பழைய மரபு களைப் பின்பற்றாமல் புதுமையாகச் சிந்தித்துப் புதிய பாதையில் சென்றுள்ளார்.  சிறுவர்களின் பால்யகால மனப்பதிவுகளை எந்த மெருகும் ஏற்றாமல் அப்படியே கொடுத்திருப்பது சிறப்பிற் குரியது.  நாவலைப் படிக்கும் ஒவ்வொரு சிறுவனும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து மகிழ் வதற்கு இந்நாவல் ஓர் உந்துசக்தியாக அமைந்துள்ளது.  கடந்து வந்த பாதையின் வளர்ச்சி வீழ்ச்சிகளைக் கண்டால் மட்டுமே இனி போக இருக்கும் பாதையில் விழிப்புடன் நடைபயிலலாம்.  அதற்கு இந்நாவல் ஓர் எடுத்துக்காட்டு.

முதன்மை ஆதாரம், எஸ்.இராமகிருஷ்ணன், கிறுகிறுவானம் - நாவல்

Pin It