இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு கடந்த ஆண்டு ஜுலை 2-ஆந்தேதி முதல் 20 நாட்கள் பயணமாக வடஅமெரிக்க நாடுகளுக்குச் சென்று வந்தார்.

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தினர் அவர்களது சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டி இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்து தோழர் நல்ல கண்ணுவை வடஅமெரிக்க நாட்டிற்கு வரவழைத்து உபசரித்திருந்தனர்.

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளிவிழா மாநாடு

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 25வது ஆண்டு விழா - வெள்ளிவிழா மாநாடு வாஷிங்டன் மாநகரிலுள்ள பால்டிமோர் நகரில் ஜூலை 6, 7, 8 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது.

45 தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கனடா நாட்டின் டொரொண்டோ பகுதியிலுள்ள தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இந்த வெள்ளிவிழா மாநாட்டில் இந்தியத் தமிழர்களும் ஈழத்தமிழர் களுமென மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டனர். தமிழ்க் குடும்பத் திருவிழா போலச் சிறப்பாக நடைபெற்றது.

முனைவர் மு.வ.நூற்றாண்டு விழாவும், தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழாவும் சிறப்புச் சொற் பொழிவும் நடைபெற்றன. வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவைத் தலைவர் முனைவர் தண்ட பாணி, ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகச் சாமி உள்ளிட்டோர் மிகச் சிறப்பான முறையில் இங்கு மாநாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் கருத் தரங்குகள் நாடக, திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பலவாறாகப் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பில் தோழர் நல்லகண்ணுவிற்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளைப் பாராட்டி “வாழ்நாள் சாதனையாளர் விருதும்,” பாராட்டும் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

“தமிழ்மொழி பண்பாட்டு வளர்ச்சி” குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தோழர் ஆர்.நல்ல கண்ணு உரைநிகழ்த்தினார்:

“அமெரிக்க - பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தி லிருந்து விடுபட்ட சுதந்திர தினம் ஜுலை 4- 236வது விடுதலை ஆண்டு விழாவினை ஓட்டி, தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழா மாநாட்டைப் பெருமை யுடன் விழாவெடுத்துச் சிறப்பித்துக் கொண்டாடுவது பொருத்தமான நிகழ்வாகும்.

“தமிழால் இணைவோம்- செயலால் வெல் வோம்” என்ற இலச்சினையைப் பொறித்திருப்பதும் உங்கள் குறிக்கோளைக் காட்டுகிறது.

தமிழ்மொழி தொன்மையானது; இலக்கிய வளமும் கருத்துச் செறிவும் காலத்தாலும் வரலாற் றாலும் முந்தியது என ஆய்வு அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, காதல், வீரம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் கொண்டவை என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம் பெரும் காப்பியங்கள் போன்ற இலக் கியங்கள் அனைத்தும் மக்களை மையப் படுத்தி உலக நாட்டத்துடன் கருத்துக் களை வெளிப்படுத்தியுள்ளன.திருக்குறளின் சிறப்பைக் கருதித் தான் திருக்குறள் போன்ற நீதி நூல்களை மூல மொழியில் படித்துணர வேண்டுமென்று மகாத்மா காந்தி தமிழ்மொழியைக் கற்றார்.“தேனினும் இனிய செந்தமிழ்” என்று மகாகவி பாரதியும் “தமிழுக்கு அமுதென்றும் உயிருக்கு நேரென்றும்” பாரதிதாசனும் தமிழ்மொழியை உயிருக்கு நிகராக நேசித் தவர்கள்.

இத்தகைய தொன்மைமிகு தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் உலகம் எங்கும் பரந்துகிடக் கிறார்கள். “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற பழமொழிக்கேற்ப உலக நாடு களில் பணியாற்றி வருகிறார்கள். தமிழின் பெருமையையும், தமிழ்நாட்டின் பண் பாட்டுக்கும் சிறப்புத்தேடும் முறையில் அமெரிக்க நாட்டில் தமிழர்கள் ஒற்றுமை யாக வாழ்வதைக் கண்டு மகிழ்ச்சி அடை கிறோம்.

“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

 மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்ற குறளுரைக்கு ஏற்ப அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் தமிழ்ப்பற்றும் ஆர்வமும் கண்டு பெருமிதம் கொள்கிறோம்; வாழ்த்துகிறோம்” எனத் தோழர் நல்லகண்ணு பேசினார். 

சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய சிகாகோ நகரத்தில் உலக மதங்களின் பேரவை

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை வெள்ளிவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டு ஜுலை 12 அன்று காலை சிகாகோ நகரின் “ஓஹேர்” விமானநிலையம் வந்து சேர்ந்தார் தோழர் நல்லகண்ணு. அவரைக் கூட்டிச் செல்ல சிகாகோவின் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் ஆனந்த், விமான நிலையம் வந்திருந்தார்.

ஆனந்த் மற்றும் அவரது துணைவியார் ஜெயந்தி ஆகிய இருவரும் சிகாகோ நகர தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக் கின்றனர். காலைச் சிற்றுண்டியை ஆனந்த்-ஜெயந்தி இணையர் இல்லத்தில் முடித்துக்கொண்டு, அங்குள்ள “மிலினியம் பார்க்” பகுதிக்குத் தோழர் நல்லகண்ணுவை அழைத்துச் சென்றனர்.

2000 ஆண்டுகளைக் கடந்திட்ட வரலாற்று நினைவாக 2001-இல் தொடங்கிய 21வது நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த ‘மிலினியம் பூங்கா’. இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வாழ்ந்த இந்தியப் பரம்பரையைச் சார்ந்த ‘அசோக்’ என்பவரால் இந்த மிலினியம் பூங்கா வடி வமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்கா பகுதியில் எவர் சில்வர் எஃகு தகடு களைக் கொண்டு ஒரு மாபெரும் காப்பிக் கொட்டை தோற்றத்தில் ஒரு சிறப்பு வடிவமைப்புடன் கட்டமைக்கப் பட்டுள்ளது. கண்ணாடி போன்ற பளபளப்புடன் விளங் கிடும் இந்த வடிவமைப்பினைத் தொட்டு விளையாடுவதற் காகவும் ஆடிப்பாடி மகிழ்வதற்காகவும், வார விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காகவும் அமெரிக்க மக்களும், வெளிநாட்டினரும் பெரும் விருப் புடன் இந்த மிலினியம் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

சிகாகோ நகர் என்றதும் மே தின நிகழ்வுகள் நினைவுக்கு வருவதுபோல, சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக விடுதலைக்கான அவரது புகழ்பெற்ற உரை நிகழ்ச்சியும் நம் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும்.

சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய சிகாகோ நகரத்திலுள்ள உலக மதங்களின் பேரவையைப் (World Parliament of Religion) பார்த்து வர ஆனந்த் அழைத்துச் சென்றார். 

உலக மதங்களின் பேரவையாக இருந்த இடத்தில் தற் போது “ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோ” என்னும் பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இங்குள்ள “ஃபிளர்டன் ஹால்” பகுதியில் தான், 1893 செப்டம்பர் 11 அன்று, அந்த இடத்தில் நடைபெற்ற உலக மதங்களின் பேரவை மாநாட்டில், முப்பதே வயதான இந்தியத் தத்துவ ஞானி” விவேகானந்தர்” உலகப் பிரசித்தி பெற்ற மாபெரும் ஆன்மிக உரையை உலகத்துக்கு வழங்கி உலக அரங்கில் இந்தியத் தத்துவஞானத்தின் மகிமை ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இருந்தார்: 

அன்றைய அமெரிக்கப் பத்திரிகைகள் எல்லாம் விவேகானந்தரின் மாபெரும் உரை வீச்சை வானளாவப் புகழ்ந்து எழுதி இருந்தன. இந்து மதம், புத்தமதம் குறித்து சுவாமி விவேகானந்தர் பலமுறை இந்தப் பேரவைக்கு வந்து பேசி இருக்கிறார் என்றாலும் வேதத்தைப் பற்றியும், யோகத்தைப் பற்றியும் பேசிய அந்த எழுச்சிமிக்க உரை, மத சகிப்புத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியதாக இருந்தது.

அதிலும் அமெரிக்க மக்களை ‘எனது அன்பு மிக்க சகோதர சகோதரிகளே’ என வாஞ்சையுடன் அவர் விளித்துப் பேசியதும், அமெரிக்க ஐரோப்பிய மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

விவேகானந்தர் உரையாற்றிய அந்த உலக மதங்களின் பேரவை 1893-இல்தான் உருவாக்கப் பட்டிருந்தது. ‘ரு’ வடிவ அமைப்பில் செங்கற்களால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு நடுவில் திறந்த வெளியாக நான்கு பக்கங்களிலும் இருந்து பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கவும், பேச்சுக்களைக் கேட்கக் கூடியதாகவும் மிக பிரமாண்டமாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

அந்தப் பேரவை அரங்கத்தில் இரண்டு கூட்ட அரங்குகள் இருந்தன. வடபகுதியில் “ஹால் ஆப் கொலம்பஸ்” தென்பகுதியில் “ஹால் ஆப் வாஷிங்டன்” என்ற பெயரோடு அவை திகழ்ந்தன. இந்த இரண்டு அரங்கங்களிலும் ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கத்தக்கதாகவும் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த அரங்கங்களில் ஒன்றான “ஹால் ஆப் கொலம்பஸ்” அரங்கில்தான் சுவாமி விவேகானந்தர் 1893-இல் உரையாற்றியிருக்கிறார். இந்த இடங்கள் எல்லாம் தற்போது “ஆர்ட் அண்ட் கல்சுரல் இன் ஸ்டியூட் ஆப் இண்டர்நேசனல் ரிசர்ச்சென்டர்”- சர்வ தேச கலை மற்றும் பண்பாட்டு ஆய்வுமைய மாகப் புதுப்பிக்கப்பட்டு ஒரு நிரந்தரமான காட்சி யகமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆர்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் காட்சி யகம் அமைந்துள்ள தெருவுக்கு “விவேகானந்தர் வீதி” எனவும் பெயரிட்டுச் சிறப்பு சேர்த்திருக்கின்றனர்.

அங்கிருந்து திரும்பும் வழியிலிலிருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மையக்கட்டடத்தை அது அமைந்திருந்த 127 மாடியின் உயரத்தைக் காண வியப்பாக இருந்தது.

அன்று இரவு ஆனந்த் வீட்டிலே தங்கி இருந்து அவர்கள் வீட்டில் சுவைக்கக் கொடுத்த இயற்கை உணவை உண்டு மகிழ்ந்தோம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் எந்த நாட்டில் பிழைத்தாலும் தமது தாய்நாட்டின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளையும் உணவுப் பழக்கவழக்கங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கும் மாண்பினை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தோம்.

சிகாகோ அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

ஜுலை 14 அன்று சிகாகோ நகர அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்றுவர பேராசிரியர் சவுரிமுத்துவுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் அங்குச் சென்றதும் எங்களைத் தோழமை யுடன் வரவேற்றனர்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான “பீப்பிள்ஸ் வேர்ல்ட்” பத்திரிகையின் பொறுப்பாளர் தோழர் பார்பரா மற்றும் சில அமெரிக்க ஆப்பிரிக்கத் தோழர்கள் உடன் இருந்தனர். கட்சி அலுவலக அறைகளையெல்லாம் சுற்றிக் காண் பித்தனர்.

சுவர்ப் பகுதியை ஒட்டி மிகப்பெரிய புத்தக அலமாரிகள் வைக்கப்பட்டு, பல்வேறு தலைப்பிலான பல்வேறு மொழிகளில் வெளிவந்த, கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமான புத்தகங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புத்தக அலமாரியின் மேல் அமெரிக்க நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்கள் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. உடன் பல பட்டயங்களும், பலப்பல விருதுகளும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவராக விளங்கிய “பால்ராப்சனின்”படத்தை அனைத்திலும் பெரியதாக வைத்திருந்தனர். 1950களில் உலகப்புகழ்பெற்றிருந்த நீக்ரோ பாடகராக விளங்கிய பால் ராப்சன் சிறந்த கம்யூனிஸ்டாகவும் இருந்தார். அவரது இசை நிகழ்ச்சியை நடத்தவிடாமல் கூட்டத் தினரைக் கலைத்து விரட்டிய கொடூரமான நிகழ்ச்சி அப்போது நடைபெற்றது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ‘ஹாவர்ட்பாஸ்ட்’ இந்த நிகழ்வை மையமாக வைத்து எழுதிய நூல் தான் ‘பீக்ஸ்கில்’ என்பதாகும். அப்போது அந்த நூல் மிகவும் பிரபலமாக அமெரிக்கா முழுவதும் வாசிக்கப்பட்டது.

என்னிடம் அந்தநூல் இருக்கிறது என்பதை அறிந்த பார்பரா பெரு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் பால்ராப்சன் வாழ்க்கை வரலாற்று நூலை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் வேர்ல்ட்’ வார இதழாக சிகாகோ நகரத்தி லிருந்து வெளியிடப்பட்டு அமெரிக்கா முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. இணையதளத்திலும் உடனுக்குடன் வெளியாகி அனைவருக்கும் படிக்கக் கிடைக்கிறது.

அந்த வாரம் வெளிவந்திருந்த, ஜுலை 14, 2012 இதழில் “புலம்பெயர்ந்தவர்களின் தேசம் அமெரிக்கா” எனத் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. 1776-இல் குடியேறிகளாக வந்த ஐரோப்பிய நாட்டினர்தான் தங்களை அமெரிக்கர்கள் என அழைத்துக் கொண்டனர். அமெரிக்க தேசத்தில் ஏறத்தாழ 11 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்தவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னமே, முதன்முதலில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் சிவப்பு இந்தியர் களாகிய ஆசிய நாட்டவர்கள்தான். பின்னாளில் வந்த ஐரோப்பியர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஸ்பெயின் நாட்ட வர்கள். அதற்குப் பின்னால் பிழைக்க வந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள்.

20-ஆம் நூற்றாண்டின் மனித உரிமை இயக்கங்களின் பல்வேறு போராட்டங் களால் 1965களில் தான் “புலம்பெயர்ந் தவர்களுக்கான தேசிய உரிமைச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் ஆசிய ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களுக்குச் சம உரிமைகளும் வாழ்வியல் உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட்டன. அவர்கள் வாழ்வியல் உரிமைகள் இன்னும் பலப்பட வேண்டும் என அந்தத் தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில கட்டுரைகளில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பு களை ஏற்படுத்தி வரும் பின்னடைவு, பொருளாதார நடைமுறைகளால் அந்தந்த நாடுகளின் அடித்தட்டு உழைக்கும் மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படு கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“முதலாளித்துவம் ஒரு சமத்துவமற்ற நடைமுறைத் திட்டம்; அதனை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய தேவை இப்போது உருவாகியுள்ளது.

முதலாளித்துவத்தின் பேராசையே இப் போதைய பொருளாதார நெருக்கடிக் கெல்லாம் தலையாய முக்கிய காரணம்” என்றெல்லாம் கட்டுரையில் எழுதப் பட்டிருந்தது.

எந்த ஒரு முதலாளித்துவ பூமியில் தொழிலாளி வர்க்கம் அதன் சர்வதேச உரிமைப் பதாகையைச் செங்குருதி தோய்த்து உலகெங்கும் பறக்கவிட்டதோ, அந்த முதலாளித்துவ பூமியான அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னமும் அதே வீரியத்துடனும், எழுச்சியுடனும் அதன் போராட்ட குணம் குறையாமல் ஒளி கூட்டி, உலகெங்கும் அந்த வெளிச்சத்தைப் பரப்பிவருவதை சிகாகோ பயணத்தின்போது பார்க்கமுடிந்தது.

இலினாயிஸ் ஆப்ரஹாம்லிங்கன் நினைவிடம்

சிகாகோ நகர கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு இலினாயிஸ் மாநிலத் தலைநகரிலுள்ள ஆபிரஹாம்லிங்கன் நினைவிடத்திற்குச் சென்றோம்.

“ஆபிரஹாம் லிங்கன் தேசிய நினைவிடம்” என மிகப் பெரிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டிருந்த நினைவிடத்தில் யுத்தங்களில் இறந்த அமெரிக்கப் படை வீரர்களின் கல்லறைகள் நிறைந்திருந்தன. அந்த தேசிய கல்லறைத் தோட்டத்துக்கு அமெரிக்க நாட்டை உருவாக்கி மறைந்த தேசிய தலைவரான ஆப்ரஹாம்லிங்கனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. அங் கிருந்த ஆப்ரஹாம்லிங்கனின் கல்லறை மிக நேர்த்தியான பளிங்குக் கற்களால் அழகான கட்டமைப்புடன் வடிவமைக்கப் பட்டிருந்தது. மிகச் சிறப்பான முறையில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.

“உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு காலத்திலும் வாழ்ந்த மனிதர்களைவிட, மிக உயரிய மேம்பட்ட வாழ் வினை வாழ்ந்திட்ட மாமனிதர் ஆப்ரஹாம்லிங்கன்” என்ற பொன்னான வாசகங்கள் கல்லறையின் கற்பலகையில் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிட முகப்புப் பகுதியில் லிங்கனின் மார்பளவுச் சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மார்பளவுச் சிலையின் மூக்குப் பகுதியைப் பலரும் தொட்டு வணங்குவதால் இயல்பிலேயே நீளமான மூக்குடைய வரான லிங்கனின் அந்தச் சிலையிலிருக்கும் மூக்குப் பகுதி மிகவும் பளபளப்பாகக் காணப்படுகிறது.

ஆப்ரஹாம் லிங்கனின் அந்த மூக்குப் பகுதியைத் தொடு வதின் மூலம் உடல் ஆரோக்கியமாகும் என்ற ஐதீக நம்பிக்கை அமெரிக்க மக்களிடம் உள்ளதாகத் தெரிவித்தனர்.

இலினாயிஸிலிருந்து ஷாம்பெயினுக்கு திரும்பி வந்து இரவு சுப்பு பூர்ணிமா தம்பதிகள் வீட்டில் உணவருந்தினோம். அக்குடியிருப்புப் பகுதியில் இருந்த தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் கலந்துரை யாடலில் பங்கு கொண்டு அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

அமெரிக்காவில் குடிமக்களுக்கான தேவைகளை நிறைவேற்றித்தரவும், அதற்காகத் திட்டமிடவும்” பப்ளிக் யுடிலிடி கமிஷனர்ஸ்” என்ற முழு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் அனைத்துக் குடிமக்கள் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதாகவும், பெண்களுக்கும் கறுப்பர் இனத்தவருக்குமான தனி உரிமைகள் சலுகைகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்ளிட்ட பல தகவல்களை அந்தக் கலந்துரையாடலின் போது அவர்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

சிகாகோவின் மே தினத் தியாகிகள் நினைவிடம்

ஜுலை 15 அன்று காலை ஷாம் பெயினி லிருந்து புறப்பட்டு சிகாகோ வந்து சேர்ந்தோம். “The Origin of Hindu Mythology” என்னும் நூலை சுப்பு பரிசாகக் கொடுத்து வழி அனுப்பிவைத்தார். “வெண்டி டெர்மினிக் ஓ கிளக்கர்டி” என்னும் அமெரிக்க எழுத்தாளர் இந்திய தொன்மங்கள் குறித்து அந்த நூலில் எழுதி இருந்தது வியப்பாக இருந்தது.

சிகாகோ வந்தடைந்ததும் பேராசிரியர் சவுரி முத்து வரவேற்று அங்குள்ள மே தின கல்லறைகள் அமைந்துள்ள “ஹே மார்க்கெட்” பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

சிகாகோ நகரம் வடஅமெரிக்காவின் இலினாயிஸ் மாகாணத்திலேயே மிகப்பெரிய நகரமாகும். அமெரிக்க நகரங்களில் நியுயார்க் மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்துக்கு அடுத்து மிக அதிக ஜனத்தொகையுள்ள மூன்றாவது பெரியநகரமாகும்.

உலகத் தொழில் வணிகத்திற்கு முக்கிய பங் களிப்பை சிகாகோ நகரம் செய்துவருகிறது. வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய “கிரேட்லேக்” மற்றும் “மிசி சிபி” நதி முகத்துவாரப் பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது சிகாகோ நகரம். 1837-ஆம் ஆண்டிலேயே ஒரு பெரும் தொழில் நகரமாக உருவாக்கம் பெற்றிருந்தது.

பிரிட்டிஷ் தொழிற்புரட்சித் தாக்கத்தால் இப் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப் பட்டுத் தொழில் உற்பத்தி கேந்திரமாகவும் சிகாகோ திகழ்ந்திருந்தது. ஆதலால் முதலாளித்துவத்தின் துவக்க காலத்தில், உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி இரவு பகலாக வேலை வாங்கி உள்ளனர்.

உலகின் முதல் தொழிலாளி வர்க்க கோரிக் கையான “எட்டு மணிநேரவேலை” என்ற அடிப் படைக் கோரிக்கையை முன்வைத்திட்ட மேதினத்தின் விளை நிலமும், போராட்டக்களமும் ஆன ஹேமார்க் கெட் கலவரப்பகுதி சிகாகோவில்தான் அமைந் துள்ளது.

இந்த ஹேமார்க்கெட் பகுதியில்தான், 1886-ஆம் ஆண்டு மே 4 அன்று தொழிலாளர் வர்க்க கோரிக்கை ஊர்வலத்தின் போது, காவல்துறையினர் மோதலைத் தூண்டிவிட, “டைனமைட்” வெடிகுண்டு வெடித்துச் சிதறிப் பெரும் கலவரத்தை, போலிஸ் அராஜகத்தை உண்டாக்கியது. கலவரத்தை அடக்கிட, கோரிக்கை ஊர்வலத்தைக் கலைத்திட போலிசார் அடிதடியில் இறங்கினர். போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்களும் பொதுமக்களும் பலியாயினர். இந்த நிகழ்ச்சியே வரலாற்றுப் புகழ்மிக்க “மே தின”நாளாகத் தொழிலாளி வர்க்க உரிமையை நிலை நிறுத்திய நாளாக அமைந்தது.

இதில் எட்டு நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப் பட்டனர். அவர்களில் ஏழு பேருக்கு மரண தண் டனையும், ஒருவருக்குப் பதினைந்து ஆண்டுகாலம் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் இருவருக்கு அப்போதைய இலினாயிஸ் கவர்னர் கருணை காட்டி ஆயுள் தண்டனையாக்கினார். மற்றொருவர் சிறைக் கொடுமையால் சிறையிலேயே இறந்து விட்டார். எஞ்சியிருந்த நால்வரும் 1887 நவம்பர் 11 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

1891-இல் நடந்த இரண்டாவது சர்வதேச மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் நாளை உலகெங்கிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உறுதிமொழி நாளாகக் கொண்டாடு வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த மேதினத் தியாகிகளின் கல்லறைகள் ஹேமார்க்கெட் நகர்ப்புறத்திலுள்ள வனத்துறைப் பகுதியில் மிகப்பெரிய அளவிலான கல்லறைத் தோட்டமாக அமைக்கப்பட்டு மேதினத் தியாகி களின் நினைவிடமாக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தின் முகப்புப் பகுதியில் மாபெரும் நினைவுத்தூபி பீடங்களுடன் அமைக்கப் பட்டு ஒரு தாய் அவளது மரணமுற்ற மகனுக்கு ஒரு கையில் மலரஞ்சலி செலுத்துவதுபோல மிகப் பெரிய அளவில் பளிங்குச் சிலையாகச் செதுக்கப் பட்டுள்ளது.

அந்த வீரமரணமடைந்த மகனின் மேல் ஒரு கையால் மலர்களை வைத்துவிட்டு, மறு கையில் இன்னும் ஒரு மலர்க் கொத்தினை ஏந்தி, தைரிய மிக்க மன உறுதியுடன் கூடிய ஒரு பார்வையை வெளிப் படுத்தி, மிகுந்த தீரத்துடன் நம்மைப் பார்த்து “எங்களது அமைதியானது என்றாவது ஒருநாள் உங்களின் ஓங்கி ஒலித்திடும் குரலை விட மிக சக்தி வாய்ந்தது என்பதை இந்த உலகத் துக்குத் தெரிவித்திடும்” என்ற அந்தச் சிலையின் பீடத்தில் பொறிக்கப் பட்டுள்ள வார்த்தைகளை வெளிப் படுத்துவதைப் போல, ஒரு கம்பீரத் தன்மையுடன் அந்தக் கற்சிலை செதுக்கப்பட்டுத் தோற்றமளிக்கிறது.

இந்த மேதின தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திவருபவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்கள் எதையாவது காணிக்கையாகப் போடு கிறார்கள். தலைவர்களின் முகப்பு பேட்ஜிகள், எழுதுகோலான பேனாக்கள் எனப் பலவற்றைக் காணிக்கையாகப் போட்டிருந்தனர். நாங்களும் எங்களது பேனாக்களைக் காணிக்கையாகப் போட்டு அந்த மே தினத் தியாகிகளுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தினோம்.

இந்தக் கல்லறைத் தோட்டத்தின் முகப்பிலுள்ள நினைவுத்தூண் மற்றும் கற்சிற்பத்தினை சிற்பி ‘ஆல்பர்ட் வினர்ட் என்பவர் 1893-இல் வடிவமைத் திருந்தார். ஏறத்தாழ நூற்றாண்டைக் கடந்த பின்னர் தான், இந்த மேதின நினைவிடம் தேசிய வரலாற்று நினை விடமாக்கப்பட்டுள்ளது. இந்நினை விடம் மட்டும்தான் அமெரிக்காவில் வரலாற்று தேசிய நினைவிடமாகவும் திகழ்ந்து வருகிறது.

உலகமெங்கும் மேதினத்தை மே 1-இல் “தொழிலாளி வர்க்க தினமாக”க் கொண்டாடும்போது அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் 1ஆந் தேதியை “உலகத் தொழிலாளர் ஒற்றுமை தின”மாகக் கொண்டாடுவது சர்வ தேச மேதின வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் நிகழ்ச்சி நடவடிக்கை யாகவே கருதவேண்டியுள்ளது.

மேதினத் தியாகிகளின் நினைவிடத்திற்கு வீர வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பியபோது,

“கோழிக்கு முன்எழுந்து

கொத்தடிமைபோல் உழைத்து

பாடுபட்ட ஏழைமுகம்

பார்த்துப் பதைபதைத்து

கண்ணீர் துடைக்க வந்த

காலமே நீ வருக

மேதினமே நீ வருக (மே 1949)” என்ற கவிஞர் தமிழ் ஒளியின் மேதினக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

இந்தியாவிலேயே முதன்முதலில், 1923-இல் சென்னை நகரில்தான் தோழர் சிங்காரவேலரால் மேதினம் கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மே தினத் தியாகிகளின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் அரிய நல் வாய்ப்பினை நல்கிட்ட வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். வடஅமெரிக்கப் பயணத்தின் மிக மிக முக்கியமான நிகழ்வாக இது அமையக் கிடைத்தது.

இந்த அரும்பெரும் பயண நல்வாய்ப்பின் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வுகளை, அனைவருடனும் பகிர்ந்துகொள்வதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி” எனத் தோழர் நல்லகண்ணு தமது வட அமெரிக்கப் பயண அனுபவங்களை “உங்கள் நூலகம்” வாசகர் களுக்காக வெளிப்படுத்திக் கொண்டார்.

Pin It