“தொட்டுப் பார்த்தால் காகிதம், தொடர்ந்து படித்தால் ஆயுதம்” --இது இன்று ஜனசக்தி இதழைத் தாங்கியுள்ள எழுச்சி வரிகள். அன்று கம்யூனிச மூலவர் காரல் மார்க்ஸ் அவர்கள் எழுதிய இதழ்கள் எல்லாவற்றையும் காகித ஆயுதமாக்கினார் என்பது வரலாறு.

1841ஆம் வருடம் மார்ச்சு மாதம் 3-ஆந்தேதி பெர்லின் பல்கலைக் கழகம், மார்க்ஸ் படிப்பை முடித்துக்கொண்டதற்கான சான்றிதழை வழங்கியது. படிப்பை முடித்த மார்க்ஸ் பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்பினார். பத்திரிகைப் பணி தமக்கு சுதந்திரமானதாக, மனத்திருப்தியைத் தருவதாக இருக்கும் எனக் கருதியதால் பத்திரிகைப் பணியில் இறங்கினார் மார்க்ஸ்.

‘ரைன்லாந்து கெஜட்’ என்கிற இதழ் 1842-ஆம் வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த இதழின் தொடக்க காலம் முதல் இதற்குக் கட்டுரை எழுதினார். மார்க்ஸின் கட்டுரைகள் இந்தப் பத்திரிகை நிர்வாகத்தினருக்குப் பிடித்துப் போனது. விசயங்களை இவர் எடுத்துச் சொல்லும் விதம் அனைவரையும் கவர்ந்தது. வாசகர்கள் மார்க்ஸின் கட்டுரைகளை ஆவலுடன் வாசித்தார்கள். எனவே இந்த இதழ் தொடங்கப் பட்ட பத்து மாதங்களுக்குள் இதழின் ஆசிரியராக மார்க்ஸ் நியமனம் செய்யப்பட்டார்.

மார்க்ஸ் ஆசிரியர் பொறுப்பிற்கு வந்த பிறகு பத்திரிகையின் தோற்றம் மாறியது. ஓவ்வொரு விசயமும் மார்க்ஸின் பார்வைக்குப் போய் வந்த பின்பே பத்திரிகையில் இடம்பெற்றன. அதனால் இதழின் புகழ் நாள்தோறும் வளர்ந்தது. ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்ட ‘ரைன்லாந்து கெஜட்’ மார்க்ஸ் ஆசிரியரான பிறகு மூவாயிரம் சந்தா தாரர்கள் கொண்ட இதழாக முன்னேற்றம் அடைந்தது. அரசாங்க அதிகாரிகள் ‘ரைன்லாந்து கெஜட்’ இதழில் வெளிவருகின்ற படைப்புக்களை ஆர்வமுடன் வாசிக்கத் தவறவில்லை. வாசித்ததின் விளைவு அவர்களின் ஆத்திரத்திற்கு ஆளானார் மார்க்ஸ். இதுநாள் வரையில் சர்க்காருக்காக ஜனங்கள் என்று கருதியோர், ஜனங்களுக்காக சர்க்கார் என்று கருதுகிற அளவிற்குக் கட்டுரைகளை எழுதிக் குவித்தார் மார்க்ஸ். எனவே அரசாங்கம் இவரை... இவரது எழுத்துக்களைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தது.

அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே பத்திரிகை வெளிவரல் வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதிகார சக்திக்குத் தாம் நினைத்ததை முடிக்கும் வலிமை உண்டல்லவா...? அப்போது ருஷ்யாவில் நடைபெற்ற ஆட்சிமுறையைக் கண்டித்துக் கட்டுரை ஒன்று எழுதினார் மார்க்ஸ். ருஷ்ய அரசுக்கும் ஜெர்மனிய அரசுக்கும் நெருக்க மான தொடர்பு இருந்த காரணத்தால் பத்திரிகை மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருவாகிற பத்திரி கைக்கு ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள காரல் மார்க்சுக்கு விருப்பம் இல்லை. எனவே 1843 ஆம் வருடம் மார்ச்சு மாதம் 18-ஆந்தேதி ‘ரைன்லாந்து கெஜட்’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் மார்க்ஸ். இவர் ஆசிரியர் பதவியில் இருந்து விலகிய இரண்டாவது வாரத்திலேயே ‘ரைன்லாந்து கெஜட்’ இதழும் நிறுத்தப்பட்டது.

ஜெர்மனியில் இருக்க இயலாதெனத் தீர்மானித்த மார்க்ஸ் தனது தோழர்களுடன் எங்காவது வெளி நாடு சென்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத் திட்ட மிட்டார். பத்திரிகை தொடங்கும் விசயத்தில் மார்க்ஸின் அன்பு நண்பன் ஆர்னால்ட் ருஜிம் ஆர்வமுடன் இருந்தார். இந்த ஆர்னால்ட் ருஜ் மார்க்ஸிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவர். இவர்கள் இருவரும் இணைந்து மாத இதழ் வெளி யிடுவதென முடிவெடுத்தார்கள். இதழுக்கு ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்கிற பெயர் சூட்டப்பட்டது. பத்திரிகை வருவதற்கு ருஜ் மும்முரமாக உழைத்தார். 1844-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ‘ஜெர்மன் பிரஞ்சு மலர்’ முதல் இதழ் வெளிவந்தது. இதில் காரல் மார்ச்சு இரண்டு கட்டுரைகள் எழுதினார். இந்த இரண்டு கட்டுரைகளும் இவருக்கு எண்ணற்ற எதிரிகளை உருவாக்கி விட்டன.

காரல் மார்க்ஸின் கட்டுரைகள் ஜெர்மனிய அரசாங்கத்தாரைக் கதிகலங்க வைத்தது. பத்திரிகை முகவர்கள், புத்தகக் கடைக்காரர்கள் இந்த இதழை விற்பனை செய்யக் கூடாதென நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ரயிலில், கப்பலில் இந்த இதழ்கள் கொண்டுசெல்லக் கூடாதெனத் தடைவிதிக்கப் பட்டது. அதனால் பத்திரிகை முதல் இதழிலேயே பயங்கர நட்டத்தை சந்தித்தது. மார்க்சுக்கும் ருஜிக்கும் கருத்து வேறுபாடும் உருவாயிற்று. எனவே முதல் இதழோடு இது தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. ஆம், முதல் இதழே கடைசி இதழும் ஆகிவிட்டது.

பாரிஸ் நகரத்தில் போர்ன்ஸ்ட்டைன் என்கிற வணிகன் “முன்னேற்றம்” என்கிற பெயரில் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தான். இந்தப் பத்திரி கையில் பொழுது போக்கிற்கான விசயங்களே வெளி யிடப்பட்டுள்ளன. வாழ்க்கைக்குப் பயன்படுகிற சங்கதிகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் பத்திரிகை வளர்ச்சி அடையவில்லை. யோசித்தான்... போர்ன்ஸ்ட்டைன். அவன் விவரமான வியாபாரி அல்லவா...? காரல் மார்க்ஸை இந்தப் பத்திரிகையில் எழுத வைத்தான். மார்க்சின் எழுத்துக்கள் ஜெர்மன் அதிகாரக் கோட்டையைத் தகர்த்திடும் வெடி மருந்தாயின. அப்போது ஆட்சியில் இருந்தவன் நான்காம் பிரடெரிக் வில்லியம் என்பவன். இவனை “கடைந்தெடுத்த பிற்போக்குவாதி” என்று கட்டுரை ஒன்றில் வர்ணித்தார் மார்க்ஸ்.

அரசர்கள், கடவுளின் பிரதிநிதிகள் கிடையாது என்று எழுதினார். ஆம், எழுத்துக்கள் வாயிலாகப் புரட்சிக்கு விதை போட்டார். சும்மா இருப்பார்களா? அரசாங்கத்தினர். அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறார்... என்கிற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறி 1845 ஆம் வருடம் ஜனவரி மாதம் 11-ஆந்தேதி பிரெஞ்சு எல்லையை விட்டு மார்க்ஸ் வெளியேற உத்தரவிட்டார்கள். மார்க்ஸ் எண்ணியிருந்தால் சற்று வளைந்து கொடுத்து பாரிஸ் நகரிலேயே தங்கி இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய மார்க்ஸின் மனசாட்சி இடந்தர வில்லை. எனவே அரசாங்க உத்தரவு கிடைத்த அன்றே பாரிஸைவிட்டு வெளியேறிவிட்டார் மார்க்ஸ்.

Pin It