கி.பி.1462ஆம் ஆண்டில் செட்டியார் ஒருவர் சாம்பவர் சாதியைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்.  இது தொடர்பாக அச்சில் வராத ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது.  ஒடுக்கப்பட்ட சாதியினருக்குச் சொந்தமாக வீடோ நிலபுலன்களோ கிடையாது; ஒடுக்கப்பட்டவருக்குப் பிற சமூகத்தினர் நில பரிவர்த்தனை செய்வதில்லை என்ற திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் சிலரின் கருத்துக்கு மாறானது இந்த ஓலை.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரம் ஊரில் உள்ள அண்ணாமலைப் பெருமாளான சுந்தரச் செட்டியும் தென்னவன் செட்டியும் கேசவன் சாம்பான் என்பவனுக்கு கலியுகராமன் பணம் நான்கிற்கு ஒரு நிலத்தை ஒற்றி எழுதிக் கொடுத்தனர்.  செட்டியார்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  இந்த குத்தகை ஆவணம் வழி (வழிக் கலமுறி) நிலத்தைக் குத்தகை எடுக்கும் அளவிற்கு சாம்பவர் சாதிக்காரர் வசதியுடன் இருந்தார் என்பதும் சாம்பவருக்கு நிலம் வாங்க யாரும் தடை செய்யவில்லை என்பதும் தெரிகிறது.

இந்த ஓலை ஆவணம் கி.பி.1462ஆம் ஆண் டினது.  அப்போது வேணாட்டரசர் வீரராம மார்த்தாண்டவர்மா குலசேகரர் ஆட்சி செய்தார்; கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வரையுள்ள பகுதிகள் வேணாட்டின் கீழ் இருந்தது.

வழிக்கலமுறி என்ற இந்த ஓலை, கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டது.  கவிமணி, 1903-இல் இதுபோன்று வேறு ஆவணங் களையும் பிரதி செய்திருக்கிறார்.  கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் ஊன் முதலியார் குடும்பங்கள், தென் திருவிதாங்கூர் நாஞ்சில் நாட்டு நிர்வாகத்தில் பங்கு கொண்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஓலைகள் இவை.  இவர்களிடமிருந்த 600 ஓலைகள், இப்போது திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் உள்ளன.

மூல ஆவணம்

637ஆம் ஆண்டு ஆடி மாதம் 10ஆம் தேதி நாஞ்சில்நாட்டு அதியனூரான அழகிய பாண்டிய புரத்துப் பெருமாள் அண்ணாமலைப் பெருமாளான சுந்தரபாண்டியச் செட்டிக்கு தடுத்தாட்கொண்ட மேற்படி ஆள் தென்னவன் செட்டியாம் கேசவன் சாம்பானுக்கு வழிக் கலமுறி எழுதிக் கொடுத்த பரிசாவது இந்த நான் இவன் பக்கல் வாங்கின நெல்மேனி கலியுக இராமன் 4 இப்பணம் நாலுக்கு இவனுக்கு ஒற்றி உள்ள புதுக்குளம் மேல மட தடி 12 அளவின்படி உள்ள நிலம் முன்னொற்றி மீளும் பொழுது இப்பணம் முன்குடுக்க பின்னொற்றி கொள்ளுவோமாகவும் மேற்படி சம்மதிச்சு வழிக் கலமுறி எழுதிக் கொடுத்தோம்.  சுந்தரபாண்டியச் செட்டியும் தென்னவன் செட்டியும் கேசவச் சாம்பானுக்கு இப்படிக்குத் தென்னவன் செட்டி எழுத்து.

இந்த ஓலையாவணம் 7 வரிகளில் எழுதப் பட்டது.  ஆண்டு, தேதி, எண் போன்றவற்றிற்கு 15ஆம் நூற்றாண்டு அடையாளங்களே உள்ளன.  இங்குக் குறிப்பிட்ட வருஷம் 638 மலையாள ஆண்டு ஆகும்.  (கி.பி.1462)