நினைவுக்கல் என்பது இறந்த மனிதனின் நினைவாக நடப்படும் கல்லாகும். இது பெரும்பாலும் இயல்பான இறப்புக்கு மாறான நிலையில், போர்க்கள இறப்பையோ, கொலையையோ, விபத்தையோ எதிர்கொண்ட மனிதனின் நினைவாக நடப்படுகிறது.  போரில் இறந்த வீரன் அல்லது காட்டு விலங்கினால் கொல்லப்பட்ட வீரனின் நினைவாக நடப்படும் நினைவுக்கல் வீரக்கல் ((Hero Stone) எனப்படுகிறது.  உடன்கட்டை ஏறிய பெண்ணின் நினைவாக நடப்படும் கல் ‘சதிக்கல்’ அல்லது ‘மாசாத்திக்கல்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இறந்த விலங்கின் நினைவாகவும் நினைவுக்கல் நடப்படுவதுண்டு.

தமிழக நினைவுக்கற்கள்:

 போர்க்களத்தில் இறந்துபோன வீரர் நினைவாகவும், பாலைநில ஆறலைக் கள்வர்களால் கொலை செய்யப்பட்ட வழிப்போக்கர் நினை வாகவும் நடப்பட்ட நினைவுக் கற்களைக் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.  ‘பதுக்கை’,  ‘நடுகல்’ என்று இக்கற்களைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.பதுக்கையும் நடுகல்லும் வழிபாட்டிற்குரியன வாய் இருந்துள்ளன.  சங்க காலத்திற்குப் பின்னரும், நினைவுக்கல் நடும் பழக்கம் இருந்துள்ளதைப் பல்லவர், சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியமுடிகிறது.  விசயநகர ஆட்சியின் கீழ்த் தமிழகம் இருந்தபோதும் இவ்வழக்கம் தொடர்ந்துள்ளது.‘தென் இந்தியக் கல்வெட்டு’த் தொகுதிகளில், நடுகற்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. 

தருமபுரி மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திலும் வீரர்களுக்காக நடப்பட்ட நடுகற்கள் வேடன்கல், கிருஷ்ணாரப்பன்கல், மினாரப் பன்கல், மூத்தான்கல், பட்டான் கல், வேதியப்பன், வேடியப்பன் என்ற பெயர்களில் வழிபாட்டிற்குரியனவாய் உள்ளன.  சில நடுகற்கள் சிறு கோவில் களாகவும் உருப்பெற்றுள்ளன.நடுகற்களைக் குறித்த ஆய்வுகளும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியும் மிகவும் கால தாமதமாகவே தமிழ்நாட்டில் தொடங்கின.  சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள நடுகல் குறித்த செய்திகளைத் தொகுத்தும், தொல்காப்பியப்பொருளதிகாரத்தில் ‘காட்சி கால்கோள் நீர்ப் படை நடுகல்’ என்று தொடங்கும் புறத்திணை யியல் நூற்பாவையும் (எண் 5) மையமாகக் கொண்டும் நடுகல் குறித்த கட்டுரைகள் வெளியாகி வந்தன.  பர்னல் போன்றோர் கல்வெட்டுக்களின் எழுத்தமைதி குறித்த ஆய்வில் நடுகற்களின் எழுத்தமைப்பையும் ஆய்வுக்குட்படுத்தினர்.

செங்கம் நடுகற்கள்

தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறையின் இயக்குநராய் இருந்த இரா. நாகசாமி நடத்திய கோடைக்காலக் கல்வெட்டுப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர் ஒருவரின் தேடலில் செங்கம் பகுதியில் நடுகற்கள் பெரும்பாலும் வீரக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவை ‘செங்கம் நடுகற்கள்’ என்ற பெயரில் 1972 இல் நூல் வடிவம் பெற்றன.  முதல் முறையாக, தமிழ்நாட்டின் நடுகற்கள் குறித்த தொகுப்பாக இந்நூல் அமைந்தது.  இந்நூலுக்கு விரிவான ஆய்வு முன்னுரையாக நாகசாமி எழுதியுள்ளார்.  இம் முன்னுரை நடுகற்களின்அமைப்பை மட்டுமின்றி, அவை உருவான சமூகப் பின்புலத்தையும் குறிப்பிட்டது.ஆநிரை என்ற சொத்துரிமை பெற்ற மலையடி வார மக்களுக்கும், அத்தனிச் சொத்துரிமை பெறாது உணவுதேடும் வாழ்க்கை வாழ்ந்த குறிஞ்சி நில மக்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரையே செங்கம் வட்டார நடுகற்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆநிரை கவரும் செய்தியைக் கூறும் தொல் காப்பியம் (புறத்திணையியல் நூற்பா:

1) ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்று குறிப்பிடுகிறது.  இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம் பூரணர் “வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வா றெனின், நிறைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்க ளாயின் பிற நாட்டு ஆநிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க” என்று குறிப்பிட்டுள்ளார்.  அவரது உரை, மேற்கூறிய செங்கம் நடுகற்களுடன் பொருந்தி வருகிறது என்பதை நாகசாமி தம் முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆய்வுகளின் தொடக்கம்

‘செங்கம் நடுகற்கள்’ என்ற நூல் வெளிவந்த பின்னர் வீரக்கற்களை மையமாகக் கொண்ட கருத் தரங்கம் ஒன்றைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் அதன் இயக்குநர் திரு.இரா. நாகசாமி நடத்தினார்.  இக்கருத்தரங்கில் படிக்கப் பட்ட கட்டுரைகளைத் தொகுத்து “Seminar On Hero Stone”” என்ற தலைப்பில் நூலாக 1974இல் வெளி யிட்டார்.

இதன் பின்னர் நடுகற்களை மையமாகக் கொண்ட ஆய்வுகள் நிகழத் தொடங்கின.  காலஞ்சென்ற பேராசிரியர் வி.கேசவராஜ் ‘தென்னிந்திய வீரக் கற்கள்’ (1985) என்ற தலைப்பில் தம் ஆய்வை, கேரளப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார்.  தொல்லியல் அறிஞர் ஆர். பூங்குன்றன் ‘செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல் தொல்குடி அரசியல்’ என்ற தலைப்பில் (1989) பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு நிகழ்த்தினார்.

இவற்றின் தொடர்ச்சியாக, கே.ராஜனின் ளுடிரவா South Indian Memorial Stones என்ற இந்நூல் அமைந்துள்ளது.

நூலாசிரியர் கடல்சார் தொல்லியல் துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  தற் போது புதுவைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டில் பூம்புகார், பெரியபட்டினம், கொடுமணல் ஆகிய ஊர்களிலும் வட இந்தியாவில் துவாரகாவிலும் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ (2004) என்ற இவரது நூல் தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறப்புடையது.  Archaeology of Tamil Nadu (1994), Archaeological Gazetteer of Tamil Nadu (1997) என்ற இவரது இரு நூல்களும் தமிழகத் தொல்லியல் அறிவுத்துறைக்கு இவரது நல்ல பங்களிப்பாகும்.

நூல் கூறும் செய்திகள்

தென்னிந்திய நினைவுக்கற்கள் என்ற இந் நூலில் தமிழ்நாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்திகளின் சாரத்தை இனிக் காண்போம்.

* * *

நினைவுக் கற்களை ஆவணப்படுத்தும் பணி, காலனிய ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது.  ஆனாலும் அவற்றை ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை.  உள்ளூர் வரலாற்றைக் கூறுவன என்று கருதியதால் அரசு, அரசமைப்பு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட அறிஞர்கள் நினைவுக் கற்கள் மீது அதிக ஆர்வம் காட்டவில்லை.  நாட்டு விடுதலைக்குப்பின் தமிழக ஆய்வாளர்களில் சிலர் நினைவுக்கற்களை ஆய்வு செய்துள்ளனர்.  இவற்றுள் பெரும்பாலானவை நினைவுக்கற்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுக்களின் உள்ளடக்கத்தையும், அவற்றை இலக்கியம், இலக்கணச் செய்திகளுடன் ஒப்பீடு செய்வதாகவும் அமைந்து, களஆய்வுத் தரவுகளின் மீது குறைந்த அளவுக் கவனமே செலுத்தி யுள்ளன.  இப்போக்குகளுக்கு மாறாக பூங்குன்றனின் ஆய்வேடானது, இவை உருவான சமூகத்தின் இயல்பை அடையாளம் காண முற்படுகிறது.

கர்நாடகத்தில் மிகுதியான அளவில் நினைவுக்கற்கள் காணப்பட்டாலும் நீண்டகாலமாக அதில் அதிகக் கவனம் செலுத்தப்படவில்லை.  செட்டர், சாந்திமோர் ஆகிய இருவரும் இணைந்து 1982 இல் வெளியிட்ட Memorial Stones என்ற நூல் தென்னிந்திய நடுகற்களின் இயல்பு குறித்துப் பொதுவான செய்தி களைக் கூறுவதுடன் கர்நாடக நினைவுக் கற்களின் மீது அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.ஆர்.சந்திரசேகரரெட்டியின் Heroes, Cults and Memorials (1994)என்ற நூல் ஆந்திரப் பகுதியின் நினைவுக் கற்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளது.

* * *

சங்ககால நினைவுச் சின்னங்கள்

பெருங்கற்காலத்தைச் சார்ந்த பிணக்குழிகளில் தொடங்கி, பின்னர் நினைவுக்கற்களாக சங்ககால நினைவுக் கற்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.சங்க இலக்கியங்களில் ‘பதுக்கை’, ‘நடுகல்’ என்ற இரு சொற்கள் இறந்தோருடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

டால்மன் (Dolmen) - என்று தொல்லியலாளர் குறிப்பிடும் கற்குவியல்களே சங்க இலக்கியத்தில் பதுக்கை, பதுக்கு எனப்படுகின்றன.  பதுக்கையின் வளர்ச்சி நிலையே நடுகல் ஆகும்.

பதுக்கையிலிருந்து நடுகல்லுக்கு

பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும்.  நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது.  நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும்.  கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.  ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) நடுகல்லின் மூன்றாவது கட்ட மாகும்.  கைவிடப்பட்டு இறந்த வீரர் நினைவாகக் கல் நடப்படுகிறது.  இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இரண்டாவது நூற்றாண்டு ஆகும்.நான்காவது வளர்ச்சி நிலையில் கல்லின் உயரம் குறைந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள் உருவாகின்றன.  இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு ஆகும்.  வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை ‘எழுத்துடை நடுகல்’ என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரும் நடுகல் நடும்போது,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்”

என்று (புறத்திணையியல்: 5) நடுகல் நடுவது தொடர் பான சடங்குகளை வரிசைப்படுத்திக் கூறுகிறார்.  இந்நூற்பாவிற்கு உரை எழுதியோர் மூலமரபை அறியாது உரையெழுதியுள்ளனர்.  உருவம் அல்லது எழுத்து பொறிப்பது குறித்து எதுவும் தொல்காப்பியர் கூறாத நிலையில் இறந்தவனின் உருவத்தைக் கல்லில் பொறிப்பது குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.  பெருங் கற்கால (மெகலத்திக்) நினைவுச் சின்னங்கள் வாயி லாகக் கிடைத்துள்ள சான்றுகளும், இன்றும் நடை முறையிலுள்ள சில இறப்புச் சடங்குமுறைகளும் பின்வரும் விளக்கத்திற்குத் தூண்டுகின்றன.

இறந்தவனைப் படுக்க வைத்தல் காட்சியாகும்.

ஐம்பூதங்கள் அவ்வுடலை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது கால்கோள் ஆகும்.  மற்றொரு வகையில் ஐம்பூதங்களுடன் இணைதல் என்பதைக் குறிப்பதாகும்.  தேர்ந்தெடுத்த சில எலும்புகளை நீரால் தூய்மைப்படுத்தல் நீர்ப்படையாகும்.  அவ்வாறு நீராட்டப்பட்ட எலும்புகளின் மீது கல்லை நடுதல் நடுகல் ஆகும்.அக்கல்லின் முன்னால் சோற்றுத் திரளையைக் குவித்து வைத்தல் பெரும்படையாகும். நடப்பட்ட கல்லின் முன் அதைப் புகழ்ந்து பாடியாடுதல் வாழ்த்துதல் ஆகும்.போர்க்களத்தில் இறந்த வீரர்களின் நினை வாகவே நடுகற்கள் நடப்பட்டுள்ளன.  ஆநிரை கவர்தலுடன் அல்லது கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்டலுடன் தொடர்புடையதாகவே இப்போர்கள் பெரும்பாலும் அமைந்தன.  புலி போன்ற கொடிய காட்டு விலங்குகளுடன் போரிட்டு மரணமடைந்தோருக்காகவும் நடுகற்கள் நடப் பட்டன.  உடன்கட்டை ஏறிய பெண்களுக்கும் பொது நன்மைக்காக உயிர்துறந்தவர்களுக்கும் நடுகற்கள் நடப்பட்டன.

நடுகல்காட்டும் சமுதாயம்

நடுகற்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் மேய்ச்சல் நில வாழ்க்கையைக் கூறும் முல்லை நிலத்துடன் தொடர்புடையனவாய் பெரும்பாலும் உள்ளன.  கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பதின் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முல்லை நிலத்துடன் தொடர்புடையனவாய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகற்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் அதிகமானவை மலையை ஒட்டி யுள்ள நிலப்பகுதிகளிலேயே கிட்டியுள்ளன.  ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளிலும் கடற்கரைப் பகுதி களிலும் அரிதாகவே காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நடுகற்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வட்டெழுத்து வரி வடிவிலேயே எழுதப்பட்டுள்ளன.  கி.பி. எட்டாவது நூற்றாண்டிற்குப் பிந்தைய கல்வெட்டுக்கள் தற் போதைய தமிழ் எழுத்து வடிவிற்கு மாறியுள்ளன.சாளுக்கியர், கங்கர் ஆகியோருடன் பல்லவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளனர்ஆனால் அவர்களது படையெடுப்பின்போது இறந்துபோன படை வீரர்களை நினைவுகூரும் வகையில் நடுகற்கள் எழுப்பப்படவில்லை.பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த பெண்ணையாற்றின் நடுப்பகுதியில் இவை மிகுதி யாகக் காணப்படுகின்றன.  இப்பகுதி மேய்ச்சல் நிலப்பகுதியாகும்.

பல்லவமன்னர்கள், தம் கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டையங்களிலும் தமிழ் எழுத்தையும் வளர்ச்சி பெற்ற கிரந்த எழுத்தையும் பயன்படுத்தி யுள்ளனர்.  தமிழ் எழுத்தின் முந்தைய வடிவமான வளர்ச்சி பெறாத வட்டெழுத்து வடிவத்தைப் பயன் படுத்தவில்லை.  அவர்கள் ஆளுகையின் கீழிருந்த பொதுமக்களோ வட்டெழுத்து வடிவத்தையே பயன்படுத்தியுள்ளனர்.கவிதைகள், காப்பியங்கள், இலக்கணங்கள், ஆகமங்கள், புராணங்கள் ஆகியன சராசரி மனிதன் மீது அதிகக் கவனம் செலுத்தவில்லை.  இதற்கு மாறாக நினைவுக் கற்களில் தம் வட்டார மொழி யையும் வட்டெழுத்து வடிவையும் மக்கள் பயன் படுத்தியுள்ளனர்.

அரசியல் சார்ந்த போர்களைச் சில நடுகற்கள் மட்டுமே குறிப்பிடுகின்றன.  பெரும்பாலான நடுகல் கல்வெட்டுக்கள், உள்ளூர்ப் பூசல்களையும், ஆநிரை கவர்தல் தொடர்பான போர்களையும் குறிப்பிடு கின்றன.  போருக்கு முந்தைய அடிப்படை நடவடிக் கையாக ஆநிரை கவர்தலைச் சங்க மரபுகள் குறிப்பிட இதை ஆதரிக்கும் போக்கு நடுகற்களில் காணப்படவில்லை.

பல்லவர் ஆட்சிப்பகுதியில் இந்நடுகற்கள் உருவானாலும், இப்பகுதியில் நடந்த போர்களில் பல்லவர்கள் நேரடியாக ஈடுபட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இந்நடுகற்களில் இல்லை.  தம் ஆட்சிப்பகுதியின் பரப்பளவை நிலைநிறுத்திக் கொள்வதில் மட்டுமே பல்லவ மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.  உள்நாட்டுப் பகுதியின் சமூக வாழ்வில் அவர்கள் தலையிடவில்லை.  வட்டார அளவிலான ‘நாடு’ என்ற பிரிவின் தலைவர்களுக் கிடையில் ஆநிரை கவரும் போர்கள் நிகழ்ந்துள்ளன என்பதை நடுகல் கல்வெட்டுக்கள் உறுதி செய் கின்றன.

நினைவுக்கற்கள் உள்ளூர் மக்களுடன் தொடர் புடையனவாய் உள்ளதால் வடமொழிச் சொற்கள் கலவாத வட்டார மொழியையே அவை பயன்படுத்தி யுள்ளன.  வடமொழிச் சொற்களைப் பயன்படுத்த நேர்ந்ததால் தமிழ் வடிவிலேயே அவற்றைப் பயன் படுத்தியுள்ளனர்.  ஆநிரை மந்தையைக் குறிக்க ‘தொறு’ என்ற சொல் பதிற்றுப்பத்தில் (13:1) இடம் பெற்றுள்ளது.  இச்சொல்லே நடுகற்களில் இடம் பெற்றுள்ளது.  கர்நாடகம், ஆந்திரப் பகுதிகளில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுடன் கூடிய நடு கற்களிலும் ‘தொறு’ என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.  செங்கம் பகுதியில் உள்ள நடுகற் களிலும் ‘தொறு’ என்ற சொல் காணப்படுகிறது.ஆநிரையைக் குறிக்கும் ‘தொறு’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக ‘நிரை (கூட்டம்) என்ற சொல் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.  நிரை என்ற சொல்லும் நடுகற்களில் இடம்பெற்றுள்ளது.  தொடக்கத்தில் ‘தொறு’, ‘நிரை’ என்ற இரு சொற்களும் விலங்குக் கூட்டத்தைக் குறிக்கும் சொற்களாக இருந்துள்ளன.  இதனால் ஆன்தொறு (பசுக் கூட்டம்) மறிதொறு (ஆட்டுக் கூட்டம்) எருமை தொறு (எருமைக் கூட்டம்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.  பின்னர் ‘தொறு’, ‘நிரை’ என்ற இரு சொற்களும் மாடுகளை மட்டுமே குறிப்பதாயின.

தம் காலத்தில் நிலவிய அரசியல் அல்லது சமூகப் படிநிலையை நடுகற்கள் உணர்த்துகின்றன.  ‘பருமர்’ (வர்மன்), ‘அரைசர் ‘சேவகன்’ என்ற சொற்கள் நடுகற்களில் இடம்பெறுவதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.  மன்னர்கள் பருமர் என்றும், குறுநில மன்னர்கள் அரைசர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளனர்.  சான்றாக, சிம்மவர்மன் என்ற  பல்லவ மன்னன் சிங்கவின்னப் பருமர் என்றும், பாணர் என்ற மக்கள் பிரிவின் தலைவன் அரைசர் என்றும், நினைவுக் கல்வெட்டில் பூசலில் கொல்லப் பட்ட வீரன் ‘சேவகன்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளான்.ஆநிரை கவர்தலில் அரைசர் ஈடுபட்டது குறித்து ஏராளமான பதிவுகள் உள்ளன.  ஆனால் அச்செயலின்போது அவர்கள் கொல்லப்பட்டமை குறித்த பதிவுகள் இல்லை.  ஆநிரைகளை மைய மாகக் கொண்ட போர்களில் சேவகர்களே பெரும் பாலும் இறந்துள்ளனர்.

சங்ககாலத்தில் மன்னர்களும் போரில் நேரடி யாக ஈடுபட்டுப் போர்க்களச் சாவை எதிர்கொண்டனர்.  இதனால் இவர்கள் நினைவாக நடுகற்கள் நடப் பட்டன.  சங்ககாலத்தில் தகடூர் நாட்டையாண்ட அதியமானுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது.  ஆனால் சங்ககாலத்துக்குப் பின் போர்க்கள இறப்பிற்காக ஒரு நினைவுக்கல் கூட எழுப்பப்படவில்லை.  இம் மாறுதலானது சமூகப் படிநிலை, தகுதி ஆகிய வற்றின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது.

சங்ககாலத்தில்தான் ஆளும் சமூகத்தின் உறுப்பினனாக ஆளுவோன் இருந்தான்.  சமூகத் தினரின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றே ஆநிரை கவர்தல்.  பிற்காலத்தில் சமூகத்தின் மேல் நிலையில் உள்ளவனாக ஆளுவோன் கருதப்பட்டான்.  எனவே அவனது நேரடிப் பங்கேற்பென்பது தேர்ந் தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமேயிருந்தது.சங்க காலத்தில் ஆநிரை கவர்வோருக்கும், அதை மீட்போருக்கும் நடுகற்கள் நடப்படவில்லை.  சங்ககாலத்திற்குப் பின் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்கும் முயற்சியில் இறந்தோருக்கு மட்டுமே நடுகற்கள் நடப்பட்டன.

கிடைத்துள்ள 317 நடுகற்களைப் பட்டியலிட்ட போது அவற்றுள் 214 நடுகற்கள் ஆநிரை கவர்தலை மையமாகக் கொண்டு நிகழ்ந்த பூசலில் கொல்லப் பட்டோருக்கு நடப்பட்டுள்ளன.  எஞ்சிய எழுபத் தைந்து நடுகற்கள் காலத்தால் பிற்பட்டவை, வேட்டையின் போது இறந்தோர், தம்மைத் தாமே பலிகொடுத்துக் கொண்டோர், உடன்கட்டை ஏறியோர் ஆகியோருக்கும், வளர்ப்புப் பிராணி களுக்கும் நடப்பட்டவையாகும்.317 நடுகற்களில் 180இல் மன்னர்கள் அல்லது மன்னர் மரபு குறித்த பதிவுகள் உள்ளன.  இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

பல்லவர்: 86, சோழர்: 4, கங்கர் 26, நுளம்பர்: 11, பாண்டியர்: 4, விசயநகரம்: 4, பாணர்: 2, ராஷ்டிர கூடர்: 1 ஹொய்சாளர்: 1

தமிழக நினைவுக் கற்களை அவற்றால் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தின் வரிவடிவம், அவை அமைக்கப் பட்டதன் நோக்கம், உள்ளடக்கம், உருவ அமைதி ஆகியனவற்றின் அடிப்படையில், முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டாகப் பகுக்கலாம்.

நினைவுக்கல் வீரர்கள்

ஆநிரைகவர்தல், ஆநிரைமீட்டல், படை யெடுப்பைத் தடுத்தல், நாட்டையும் தலைவனையும் பாதுகாத்தல், பெண்களைக் காப்பாற்றல், ஆகிய செயல்களில் உயிர்துறந்தோருக்கு நினைவுக் கற்கள் நடப்பட்டுள்ளன.  காட்டுப்பன்றி, புலி, யானை, மான், குதிரை ஆகிய விலங்குகளால் தாக்குண்டு இறந்தோருக்கும் நினைவுக் கற்கள் நடப்பட்டுள்ளன.

சேவற்சண்டையில் இறந்துபோன சேவலுக்கும் நினைவுக்கல் நடப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகிலுள்ள ஓர் ஊரில் நினைவுக் கல் ஒன்றுள்ளது.  இதன் காலம் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.  இந்நினைவுக் கல்லில் காளைமாட்டின் கொம்பைத் தன் இடக் கையால் பிடித்தவாறும் வலக்கையால் நெஞ்சின் வலப் பகுதியில் வெளியேறும் இரத்தத்தைத் தடுப்பது போன்று அழுத்திப்பிடித்துக் கொண்டும் வீரன் ஒருவன் காட்சியளிக்கிறான்.  அவன் அருகில் இசைக் கருவியொன்றும் பறையும் கிடக்கின்றன: இது தொடர்பாக இப்பகுதிமக்களிடம் பின்வரும் வழக்காறு வழக்கிலுள்ளது.

அருந்ததியர் ஒருவர் பொங்கல் திருநாள் அன்று, காளைமாடு ஒன்றைக் கோபமூட்ட அதன் முன் நின்று இசைக்கருவியை இசைத்துக் கொண் டிருந்தார்.  அப்போது அக்காளையால் அவர் குத்திக் கொல்லப்பட்டார்.  அவருக்காக மேற்கூறிய நினைவுக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  இந்நினைவுக் கல்லுக்கு வழிபாடு நிகழ்த்தும் உரிமை அருந்ததி யருக்கே உரியதாகும்.புலியும் காளையும் செதுக்கப்பட்ட, கல் வெட்டு இல்லாத நினைவுக்கல் ஒன்று குடியாத்தம் அருகிலுள்ள செம்பள்ளக் கிராமத்தில் உள்ளது.  புலியைக் கொன்ற காளைக்காக நடப்பட்ட நினைவுக் கல் என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

உழுது கொண்டிருக்கும்போது உயிர் துறந்த ஒருவருக்கு, பெண்ணாகரம் வட்டம் நெல்லிபுரத்தில் நினைவுக்கல் நடப்பட்டுள்ளது.  அதில் அவன் உருவத் துடன் இரண்டு காளைகள் உழுது கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.மகேந்திரவர்மனின் 34 ஆவது ஆட்சி ஆண்டில் கருத தேவக்கட்டி என்பவன் போர்க்களத்தில் இறந்து போனான்.  அவனுடன் கோவிலன் என்ற பெயருடைய அவனது நாயும் இறந்துபோனது.  அவனுக்கு எழுப்பப் பட்ட நினைவுக்கல்லில் அந்நாயின் உருவமும் பெயரும் இடம்பெற்றுள்ளன.ராஜபாளையம் அருகிலுள்ள முதுகுடியில் அணையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறந்த ஒருவருக்கு நினைவுக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  இதன் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டாகும்.

நவகண்டம் கொடுத்தல்:

தம்மைத் தாமே பலி கொடுத்துக் கொள்ளும் தற்பலியே நவகண்டம் கொடுத்தலாகும்.  தம் உடலின் ஒன்பது உறுப்புகளைத் துண்டித்துக் கொடுத்தலால் நவகண்டம் கொடுத்தல் (நவம்: ஒன்பது, கண்டம்: துண்டு) எனப்பட்டது.  கடவுள் அல்லது தலைவன் அல்லது சமூகத்தின் நன்மைக்காக நவகண்டம் கொடுத்தல் மேற்கொள்ளப்படும். மணிமேகலை, சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி ஆகிய தமிழ் இலக்கியங்கள் தற்பலி குறித்துக் கூறுகின்றன.  திருவான்மூரிலுள்ள கி.பி.  889 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பட்டிப்பொத்தன் என் பவன் நவகண்டம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. அம்பலக் கூத்தன் என்ற வீரன் தன் படைத் தலைவனின் நோய் குணமாக நவகண்டம் கொடுத்துள்ளதை முதலாம் குலோத்துங்க சோசோழன் காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. கல்வெட்டு பொறிக்கப்படாத நவகண்டக் கற்கள் கரூர், பேரூர், அவினாசி, ஆறூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன.

செழிப்புக்கற்கள்

தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் ஊர் மாட்டு மந்தைகளில் ‘சந்நியாசிக்கல்’, ‘கோவுக் கல்’, ‘மந்திரக்கல்’, ‘சீலக்கல்’, ‘ஜகானி’, ‘மந்திரக்கல்’ என்ற பெயர்களில் கற்கள் காணப்படுகின்றன.தை அல்லது ஆடி மாதத்தில் இக்கற்களை மையமாகக் கொண்டு சடங்குகள் நிகழ்கின்றன.  இது தவிர கொள்ளை நோய்த் தாக்குதலுக்குக் கால் நடைகள் ஆளாகும்போது இக்கற்களுக்கு உடனடியாக வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.  உயிர்ப் பலி கொடுத்தலும் நிகழும். நடப்பட்டுள்ள சந்நியாசிக் கல்லின் கீழ்ப் பகுதியில் கற்பலகையிலான பாதாள அறை நான்கு பக்கங்களிலும் உண்டு.  ஆடு, சேவல், பன்றி ஆகிய மூன்றையும் இதில் உயிருடன் விட்டு பாதாள அறையைப் பலகைக் கல்லைக் கொண்டு மூடி விடுவார்கள். கால்நடைக்கு நோய் வராமல் தடுக்கவும் இனப் பெருக்கம் அதிகரிக்கவும் சந்நியாசிக்கல் வழிபாடு நிகழ்கிறது.

சதிக்கல்

உடன்கட்டை ஏறிய பெண்ணின் நினைவாக நடப்படுவதே சதிக்கல்.  இவை கல்வெட்டுக்களுடனோ கல்வெடுக்கள் இன்றியோ காணப்படுகின்றன.

* * *

தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ள 317 நினைவுக்கற்கள் குறித்து, அவை காணப்படும் ஊர், நிறுவப்பட்டுள்ள இடம், அவற்றின் காலம், அமைப்பு, நிறுவப்பட்டதன் நோக்கம் ஆகிய விவரங்களுடன் கூடிய பட்டியல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.  இதுபோன்றே கர்நாடக மாநிலத்திலுள்ள 930 நினைவுக் கற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.  எதிர்கால ஆய்வாளர் களுக்கு இவை பெரிதும் பயன்படும்.  இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் நினைவுக் கற்கள் குறித்து இடம்பெற்றுள்ள செய்திகளின் தொகுப் பாக அமையாமல், கள ஆய்வுத் தரவுகளுடன் அவற்றை இணைத்துக் கூறும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது.

சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வில் தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் பயன்பாடு அவசியமானது என்பதை இந்நூல் உணர்த்துகிறது. இந்நூல் தமிழிலும் வெளிவருவது அவசியமானது.

Pin It