நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளி யிட்ட ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டதையொட்டி, நூலாசிரியர் டி.செல்வராஜ் அவர்களுக்கு 17-01-2013 அன்று மாலை, 36-ஆவது சென்னைப் புத்தகக் காட்சி அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

தோல் நாவலைப் பற்றி அறிமுகம் செய்த தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் பேரா.பா.ஆனந்தகுமார், “2012-இல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தோல் நாவலின் ஆசிரியர் தோழர் டி.செல்வராஜ் ஏற்கெனவே மலரும் சருகும், தேநீர் போன்ற நாவல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.  அந்த நாவல்கள் தமிழ் நாவல் வரலாற்றில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தின.  இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பாட்டு முடியும் முன்னே, யுக சங்கமம் உள்ளிட்ட ஒரு சில நாடகங்களையும் எழுதியவர்.  சாகித்ய அகாதெமி வெளியிட்ட சாமி சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகிய நூல்களை எழுதியவர் தோழர் டி.செல்வராஜ்.  பூட்டு, தோல் தொழிற்சாலைகளுக்குப் பெயர்போன திண்டுக்கல் நகரம் இப்போது பிரியாணி நகரமாகி விட்டது.  உலகின் தோல் தொழிலில் மூன்றாவது இடத்திலுள்ளது இந்தியா.  வாணியம்பாடி, சென்னை போன்ற நகரங்களில் தோல்தொழில் நடைபெற்றாலும் திண்டுக்கல் நகரமும் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.  117 கதாபாத்திரங்களைக் கொண்டது- இந்த நாவல், திண்டுக்கல் நகரின் 1930 முதல் 1968 வரையிலான சுமார் நாற்பதாண்டுக் கால அரசியல், சமுதாய, கலாசார வரலாற்றை விரிவாகப் பதிவு செய் துள்ளது.  இப்போது தோல்பதனிடுவதற்கு நவீன தொழில்நுட்பம் கையாளப்படுகிறது.  ஆனால் 1930, 40களில் நிலைமை வேறு.  விலங்குத் தோலை சுண்ணாம்புக் குழியில் ஊறவைத்து, பின்னர் கடுக் காய் கலந்து, அதிலுள்ள உரோமத்தை நீக்க வேண்டும்.

‘முதலாளி முஸ்தபா மீரானைத் தூக்கியெறி கிறான் யோசேப்பு’ என்று ஆவேசமாகத்தான் தொடங்குகிறது, நாவல். புதுச்சேரியிலிருந்து வந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு திண்டுக் கல்லில் முறியடிமையாகிறான்.  முதலாளி முஸ்தபா மீரானைத் தூக்கியெறிந்து, தப்பியோடுகிறான்.  மீரானின் அடியாட்களிடம் சிக்குகிறான்.  சித்திர வதையை அனுபவிக்கிறான்.  பின்னர் சங்கம் உரு வாகிறது.  முதலாளிகள் தடுக்கின்றனர்.  சங்கரன் அய்யர் வந்து, வர்க்க நீக்கம் பெற்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடுகிறார்.  முஸ்தபா மீரான் இறந்துவிட, தொழிலாளர்கள் சிறை செல் கின்றனர்.  இயக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிறது.  பிறகுதான் தெரிகிறது- மீரானை யார் கொலை செய்தது என்று.  ஒடுக்கப்பட்டோர் சாதியுணர்வு இன்றி வர்க்கமாக எழுதல், கம்யூனிஸ்ட் தோழர்கள் தலைமறைவாக இருந்து அரசியல் பணியாற்றியமை, ஆகியவற்றை விவரிக்கிறது இந்த நாவல்.  வகை மாதிரியான ((Typical) கதாபாத்திரங்களைக் கொண்டு தோல் நாவல் சோஷலிச எதார்த்தவாதத்தைக் கூறுகிறது.  கார்க்கியின் கூற்றுப்படி, எதார்த்தமான வாழ்க்கையைப் பின்னி எழுதப்படுவதே உன்னத மான நாவல்.  அத்தகைய நாவல்தான் தோல்.  சமூக எழுச்சியையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரின் இரத்தம் தோய்ந்த வரலாற்றையும் பதிவு செய் துள்ளது தோல் நாவல்” என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு, நாவலா சிரியர் தோழர் டி.செல்ராஜுக்குக் கேடயம் அணி வித்து கௌரவித்தார்.

மேலும் என்சிபிஎச் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள், கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் சிகரம் ச.செந்தில் நாதனுக்கும், முதுநிலை மேலாளர் அ.கந்தசாமி, பேரா.வீ.அரசுவுக்கும், சென்னை மண்டல மேலாளர் என்.கோபிநாதன், ஆய்வாளர் வ.கீதாவுக்கும், பாவை பப்ளிகேஷன்ஸ் பொது மேலாளர் தி.ரெத்தினசபாபதி, பேரா.பா.ஆனந்த குமாருக்கும், அ.கிருஷ்ணமூர்த்தி, தோழர் ஆர்.நல்ல கண்ணுவுக்கும் முறையே பரிசு அளித்தனர்.

சிகரம் ச.செந்தில்நாதன் தனது வாழ்த்துரையில், “தோழர் டி.செல்வராஜ் எழுதிய தோல் நாவல் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றமைக்காக ஏராளமானோர் பாராட்டி விட்டனர்.  ஓர் அழுகுனிச் சித்தனின் குரலும் கேட்டது.  அவர் நாவலைப் பற்றிப் பேசவில்லை.  இடதுசாரி எழுத்தாளர்கள் விருது பெற்றாலே இவர் இப்படித்தான் பேசுகிறார்.  இந்தியாவில் மேற்கு வங்காளத்தை, கேரளத்தை மிஞ்சுகிற அளவுக்குச் சிறந்த நாவலாசிரியர்கள், சிறுகதாசிரியர்கள், கவிஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.  40, 50 ஆண்டுகள் போராடியதன் விளை வாகத்தான் விருதுகள் பறந்து வருகின்றன.  அழுகுனிச் சித்தன் இது இலக்கியம் அல்ல என்கிறார்.  பிறகு எது தான் இலக்கியம்? அவர் எல்லாவற்றையுமே பிரசாரம் என்கிறார்.  மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என ஒருவரையும் அவர் விட்டு வைக்க வில்லை.  செல்வராஜைக் கேட்டால் அவர் அழுத்த மாகச் சொல்வார்- இந்த நாவல் பிரசாரம்தான் என்று.

கம்பன் பிரசாரம் செய்யவில்லையா? கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், எல்லாம் பிரசாரம் தான்.  பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, செல்வராஜ் எழுதியவையும் பிரசாரம்தான்.  படைப்பு, கலைவடிவம் என்றுதான் பார்க்க வேண்டும்.  முற்போக்கு இலக்கியம் என்றாலே போராட்டம், ஊர்வலத்துடன் தான் முடியும்.  ஆனால், நாவலை முழுக்க போராட்ட மாகக் கொண்டு வந்த தோழர் செல்வராஜ், மார்க்சிய அழகியலில் கொண்டு வந்து முடித்திருக்கிறார்.  நாவலில் எப்படி சங்கம் வருகிறது? இது Formula novel என்று விமர்சிக்கின்றனர்.  இது தான் போராட்டம்.  அமைப்பின் வழியேதான் போராட்டம், சமூக இயக்கமே formula என்றாகும் போது, அந்த formula ஏன் சொல்லக்கூடாது? இது சோஷலிச எதார்த்த நாவல்.  இன்னும் 20 ஆண்டுகளுக்கு இதுதான் நாவல்!” என்றார்.

பேராசிரியர் வீ.அரசு தமது வாழ்த்துரையில், “செம்மொழி என்று போஸ்டர் அடித்து ஒட்டி யதால்தான் தமிழ்மொழி செம்மொழியா? அது 2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழிதான்.  அதுபோல சாகித்ய அகாதெமி விருது பெற்றதால் தான் ‘தோல்’ பெரிய நாவல் என்று சொல்ல மாட்டேன்.  தமிழ் நாவல் வரலாற்றில் நீண்ட நெடுங் காலமாக இயங்கி வரும் படைப்பாளி டி.செல்வராஜ்.  தமிழில் வெளிவந்துள்ள வெகுசன வாசிப்புத்தளம் கொண்ட பெரும்பாலான நாவல்கள் ஆன்மிகம், தத்துவத்தைத் தேடி, பல புராணக்கதைகளைக் கூறின.  நாவல்களுள் இடதுசாரி எழுதியிருக்கும் படைப்புகள் எதார்த்தமானவை, கூர்மையானவை.  ‘பஞ்சும் பசியும்’  நாவலில் தொ.மு.சி. நெசவுத் தொழிலாளர்கள் என்ற பொருளைக் கையில் எடுத் தாண்டது சாதாரண செயல் அல்ல.  பழங்குடி மர பினரான நெசவாளிகள் பிரித்தானிய அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டனர்.  தமிழ்ச் சமூகத்தின் புனைவியலில் புதிய அத்தியாயமாகப் பதிவு பெற்றது பஞ்சும் பசியும்.  அப்படிப்பட்டதுதான் இந்தத் தோல் நாவல்.  தோல் தொழில் இன்று கார்பரேட் செக்டார் வசம் உள்ளது.  பிரித்தானியர் காலடி எடுத்து வைத்த போது, ஒடுக்கப்பட்ட மக்களே அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

முதல் உலகப் போரின் போது ஆடைகள், காலணிகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது அந்தத் தொழில் மரியாதை பெற்றது.  1920களின் இறுதி தொடங்கி 1960களின் நடுப்பகுதி வரை கம்யூனிஸ்ட் இயக்கம், தொழிலில் ஈடுபட்ட அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டது என்று பதிவு செய் துள்ளது ‘தோல்’ நாவல்.  முற்போக்கு நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள், அடிப்படைத் தொழி லாளர்களின் வாழ்வு புனைவாகக் கொண்டு வரப் பட்டது.  பஞ்சும் பசியும், பொன்னீலனின் கரிசல், சோலை சுந்தர பெருமாளின் செந்நெல் போன்ற வற்றைச் சான்றுகளாகக் கூறலாம்.  தோல் தொழி லாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்கள் மிகமிக அடிமட்டத்தில் உள்ளவர்கள்.  தோல் தொழில் சார்ந்த பழங்குடியினர் சுரண்டப்பட்டனர்.  பின்னர் 1930-60க்குள் கலை இலக்கியப் பெருமன்றம், தொழிற்சங்கங்கள் உருவாகின்றன.  இந்த நாவலில் சாதியாக வாழ்கிறவர்கள் எப்படி வர்க்கமாகத் திரளுகின்றனர் என்று கூறியுள்ளார் ஆசிரியர்.  சாதியப் பண்புகள் துல்லியமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.  ஒடுக்கப்பட்டோரிடையே மத முரண் பாடு இல்லை.  தொழிற்சங்கம், குடிசையில் வாழ் வோர், ஒடுக்கப்பட்ட பெண்களின் வெளிப்பாடு, அவர்களின் வாழ்வு முறை புனைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  புனைவின் மூலம் எப்படி கருத்துநிலை அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.  மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  சாதியம் சார்ந்த, பின்னர் அதைக் கடந்து, வர்க்கம் என்ற விவாதத்தை எழச் செய்கிறது.  அதுவே இந் நாவலின் வெற்றி.  

மொழி இயல்பாக இருக்க வேண்டும்.  வாசிக்கிற வாசகர்கள் அந்த மக்களாக மாற வேண்டும்.  நேரடியாக அந்த மக்களை நம்மிடம் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும்.  அத்தகைய புனைவை, தோழர் டி.செல்வராஜ் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்.  குறிப்பிட்ட காலம் சார்ந்த வரலாற்று நிகழ்வுகள் நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.  மணிப்பிரவாள நடையைக் கை யாண்டிருக்கிறார்.  நமஸ்காரம், பிரதோஷம் என்ற சொற்களையெல்லாம் சுட்டிக்காட்டலாம்.  அந்தக் காலத்தில், அந்த மக்கள் பயன்படுத்திய தமிழ் மொழிச் சொற்களை நாவலில் காண முடிகிறது.  தமிழ்ச் சமூக வரலாற்றில் மிக முக்கியமான புனைவு தோல் நாவல்” என்றார்.

ஆய்வாளர் வ.கீதா தனது உரையில், “தோல் நாவலைப் படிக்கையில் தெபேகா புரட்சிதான் நினைவுக்கு வந்தது.  நாவலின் காலகட்டம் இந்திய சுதந் திரத்தினை மாய்மாலமாகப் பார்க்கலாம்.  யாருக்கு சுதந்திரம்? 1940களின் கடைசி முதல் 50களின் முதல் பகுதி வரை கலை இலக்கியப் பெருமன்றம், மாற்று அரசியலை முன்வைக்கும் அனைத்து இயக்கங் களையும் அங்கீகரித்து, சாதி எதிர்ப்பு அரசியலுக்கு இந்நாவலைப் பயன்படுத்துகிறார்.  சாதியமும் வர்க்கமும் இணையும் புள்ளியை நாவலில் காண முடிகிறது.  வரலாறு என்ற அளவில் கம்யூனிச இயக்கப் பணிகள், அதன் தலைவர்கள் தலைமறைவு என்று பல்வேறு தளங்களில் நாவலை அணுகலாம்.  நாவலின் கதைக்களம் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருக்கும் புவிசார் அமைப்பு, பறையர், அருந்ததியர் இணைப்பு என்று நகர்கிறது.  இவர்களின் தொழில், சமூக வாழ்க்கை இந்தப் புவியமைப்புக்கு ஒத்துத்தான் போகிறது.  நாவலில் விவிலியத்தின் சாயல் தெரிகிறது.  விவிலியத்தை உள்வாங்கி, இலக்கியமாக்குகிறார், நாவல் ஆசிரியர்.  கத்தோலிக்கக் கிறித்தவ சமுதாயத்தின் வாழ்வு, அவர்கள் தொல்நினைவாகக் கொண் டாடும் கல்லறைப் பூசை, அதனை முதலாளித்துவம் தடுத்தல், மனிதனை மனிதனாக்குகிற ‘சித்திரிப்பு ஆகியன மனதை நெகிழச் செய்கின்றன.  

சிலர் இந்த நாவலை மதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.  பொருண்மைக் களத்தில் மதத்தின் செயல்பாடு என்ன என்று பார்க்க வேண்டும்.  சமூகப் பண்பு களைக் கட்டமைக்க மதத்தால் முடியும்.  சமய உணர்வு வேறு, திருச்சபையின் அரசியல் என்பது வேறு.  ஆளும் வர்க்கத்தை ஆளச் செய்வது எது? நாவலில் வரும் பிள்ளைச் சாதியைச் சேர்ந்த ஒருவர் அழகியல் உணர்வு மிக்கவர்; சுரண்டவும் செய்கிறார்.  மூச்சுக்கு மூச்சு அல்லாவைத் துணைக்கு அழைத்துக் கொள்பவர், உபரியைச் சேர்க்கிறார்.  நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களின் உடலைப் பற்றிய வர்ணனையை நாவலில் காண முடிகிறது.  நாவலில் பெண்கள் உறவுகளைக் கையாளும் விதம், சமுதாய ஆதாரத்துக்குப் பெண்கள் ஆற்றும் பணிகள் குறிப் பிடத்தக்கவை.  காதலி காதலனிடம் காட்டும் அன்பு, தாய் மகனிடம் காட்டும் அன்பு எனப் பெண்களின் அன்பு சார்ந்த பணிகள், மறைந்திருக்கும் தலைவர் களுக்குத் தொழிலாளி வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுசெல்லும் அரசியல் பணிகள் என நாவல் களில் பல இடங்களில் காண முடிகிறது.  

பெண் என்றாலே கற்பு, குடும்பம், பத்தினித்தனம் என்று சொல்லிவிடுகிறது சமுதாயம்.  அதைத் தாண்டி, அருமையான தோழியராக, பெண்களின் செயல் பாடுகளை மாண்போடு கையாண்டிருக்கிறார்.  பாலியல் வன்முறை என்னும்போது, எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது.  ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பாலியல் வன்முறை என்பது வெறும் காமம் தானா? காமம், கோபம் என்பவை ஆரோக்கியமாக இருக்கலாம்.  இங்கு ஆதிக்க ஆணவம் தான், பாலியல் வன்முறையாகிறது.  சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் மீதோ, அழகு மீதோ ஆர்வமோ ஆசையோ இல்லை.  நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ள உடல் சார்ந்த பணிகள், உடல் சார்ந்த அரசியல் போன்றவையும் கவனிக்கத் தக்கவை.  மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியது போல, முற்போக்கு நாவலில் பல குரல்கள் இடம்பெற வேண்டும்.  பொதுவுடைமைக் கொள்கையின் வரலாறு, மனிதர் களின் சமூக வரலாறு என இரு வேறு வரலாறு களைத் தோல் நாவலில் காண முடிகிறது” என்றார்.

தோழர் ஆர். நல்லகண்ணு தமது உரையில், “2010-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்ற தோல் நாவலைப் படித்து முடித்தேன்.  எவ்வளவு பெரிய போராட்டங்கள்! திண்டுக்கல் நகரத் தோல் தொழிலாளர்களின் போராட்டங்களையும், அந்த நகரத்தின் சமூக வரலாற்றையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது நாவல்.  நினைக்கையில் நடந்திருக்குமா என்று தோன்றுகிறது.  படித்ததை  நினைக்கையில் கண்ணீர் வருகிறது.  தோழர் செல்வராஜ் முத்திரை மரக்கால் போராட்டத்தைத் தனது மலரும் சருகும் நாவலில் எடுத்து வைத்தார்.  தேயிலைத் தோட்டத் தொழி லாளர்களின் போராட்டங்களைத் தமது தேநீர் நாவலில் கூறினார்.  தோல் தொழில் இன்று இருப்பதுபோல் அப்போது இல்லை.  தோலின் மீது சுண்ணாம்பைத் தடவி, கையினால் அதில் உள்ள உரோமத்தை எடுப்பது என்பது எவ்வளவு கொடூரம்! இந்த வரலாற்று நாவல் கற்பனையில் வந்ததல்ல; கதைமாந்தர்கள் களத்தில் போராடி யவர்களே! திண்டுக்கல் பூட்டுக்குப் பெயர் பெற்று, டிரங்க் பெட்டிக்குப் பெயர் பெற்று இப்போதோ கமிஷன் மண்டி நகரமாகிவிட்டது.  அப்போ தெல்லாம் தொழிற்சங்கத்திற்கு அனுமதி கிடை யாது.  சாதிய ஒடுக்கு முறைக்கும் குறைவில்லை.  எனவேதான் வெளியூரிலிருந்து தொழிலாளர்களைத் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார்கள்.  திடீரென சங்கம் தோன்றிவிடவில்லை.  அதில் வாழ்ந்து அனு பவித்தவர்களால்தான் சங்கம் தோன்றியது.  1940-1947 இடைப்பட்ட காலத்தில்தான் சங்கம் இயங்கியது.

1947இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கொடிய அடக்குமுறை வந்தது.  சங்கம் அமைத்துத் தொழி லாளர்களுக்காகப் போராடிய மதனகோபால் பிடிபட்டார்.  தொழிற்சங்கம் போராடியது, தொழி லாளர்களுக்காக மட்டுமல்ல; சமூக மாற்றத்திற் காகவும்தான்.  நாவலில் வரும் சங்கரன் அய்யர் என்னும் கதாபாத்திரம் பாலசுப்பிரமணி ஆவார்.  சுந்தரேசனாக வருபவர் பாலசுப்பிரமணியின் அப்பா அமிர்தலிங்கம்.  பிறகு அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து எம்.எல்.ஏ.  ஆனவர்.  நாவலில் சின்னக்கிளி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்.  அவர் இறந்தபிறகு, அவரது சடலத்தை யாரும் தூக்க முடியாது.  அப்படித் தூக்க முன்வந்தால், போலீஸ் அவர்களைப் பிடித்துவிடும்.  அப்போது மனிதாபி மானமுள்ள இளைஞர் ஒருவரும் அவரைப் போலவே மனிதாபிமானமுள்ள அதிகாரி ஒருவரும் இணைந்து அந்த சடலத்தைத் தூக்குவார்கள்.  பிராமணனாகப் பிறந்தவர் தலித் பெண்ணின் உடலைத் தொடலாமா?  குடும்பம் அக்ரஹாரத்தால் ஒதுக்கப்பட்டது.  ஊரில் சலசலப்பு.  ஒவ்வொரு சம்பவமும் நேரில் பார்ப்பது போல உள்ளது.  சின்னக்கிளி நிகழ்வை நினைத்தால் கண்ணீர் வருகிறது.  மனிதாபிமானமுள்ள அதிகாரி களை இன்று காண முடியுமா? தமிழ்நாட்டில் மற்ற எல்லா இடங்களையும்விட திண்டுக்கல்லில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.  இப்படித்தான்  தொழிற் சங்கங்கள் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தின.  வாழ்க் கையின் எதார்த்தங்கள் மேலும் மேலும் எழுதப் பட வேண்டும்.  வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதனைத் தடுக்கக்கூடாது.  இதில் சாதி கொண்டுவரப்படுகிறது.

தந்தை பெரியார் கலப்புத் திருமணம் என்ற, வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.  ஆடு மாடு களையா திருமணம் செய்துகொள்கிறீர்கள்? ஆடு, மாடுகளுடன் மனிதர்கள் திருமணம் செய்து கொண்டால்தான் கலப்புத் திருமணம் ஆகும்; இது சாதி மறுப்புத் திருமணமாகும் என்றார்.  1947-இல் அண்ணா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன போது தோழர் ஜீவா அவர்களின் மகள் திருமணம் நடைபெற்றது.  அது சாதி மறுப்புத் திருமணம்.  திருச்சியில் நடைபெற்ற அந்தத் திருமணத்திற்கு, பெரியார், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் வந்திருந்தனர்.  அதில் கலந்துகொண்ட முதல்வர் அண்ணா “இதுபோன்ற திருமணத்தை ‘சமூக சீர்திருத்தத் திருமணம்’ என்று அங்கீகரிக்க சட்டம் கொண்டு வருவோம்.”  என்று கூறினார்.  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வீட்டுத் திருமணத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தோழர் செல்வராஜின் மாமனார் வழிவிட்டான் - மாமியார் லஷ்மி இருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பணியாற்றியவர்கள்.  வழிவிட்டானுக்கும், கே.டி.கே. வுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு.  இவர்கள் வேறு சாதி. டி.செல்வராஜ் வேறு சாதி.  சாதியைப் பற்றிச் சொல்லக்கூடாது.  கம்யூனிஸ்ட் ஆகிய நான் அதைச் சொல்லவே கூசுகிறது.  அவரிடம் அனுமதி கேட்டுத் தான் இங்கே அவருடைய சாதியின் பெயரைச் சொல்கிறேன்.  வழிவிட்டான் - தேவர் சாதி, டி.செல்வராஜ் ஒரு தலித்.  வழிவிட்டான் -   லஷ்மி தம்பதியரின் புதல்வி பாரதிபுத்திரிக்கும், செல்வராஜுக்கும் நடந்த திருமணம் காதல் திருமணம் அல்ல; வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரியவர்களே பார்த்துத் திருமணம் செய்துவைத்தனர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும்பகுதித் தலை வர்கள் சாதியை மறுத்தவர்கள்; சாதிக்குள்ளே நிற்காதவர்கள்தான்.  தோல் நாவலை எழுதி சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள தோழர் டி. செல்வராஜ் மேலும் விருதுகள் பெற வேண்டும்.  இயக்கச் சிந்தனைப் போக்கினை உருவாக்கும் நாவல்கள், நல்ல படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும்” என்றார்.

நாவலாசிரியர் டி.செல்வராஜ் தமது ஏற்புரையில், “நான் படித்துக் கொண்டிருந்தபோது, முத்திரை மரக்கால் போராட்டத்தில் தோழர் நல்லகண்ணு அவர்கள் கலந்துகொண்டவர்.  அவற்றையெல்லாம் பார்த்துத்தான் நான் இயக்கத்தின்பால் ஈர்க்கப் பட்டேன்.  இந்த நாவலைப் பற்றிச் சிலர் செய்த விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லத் தேவை யில்லை.  ஆய்வாளர் கீதா சொன்னதே போதும்.  அவர்களெல்லாம் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள்.  60 ஆண்டுகாலப் போராட்டம் இது.

கலை கலைக்காகவே என்ற இயக்கம் இன்னும்  போஸ்ட் மாடர்னிஸம் என்றெல்லாம் எத்தனையோ அமைப்புகள்.  எந்த இசமும் நிற்க முடியவில்லை.  தோல் நாவல்தானா? என்றால், ஆமாம், நாவல் தான்! பிரசாரமா? என்றால் ஆமாம், பிரசாரம் தான்! இலக்கியமா? ஆமாம் இலக்கியம்தான்.  வெளிப் படையாகச் சொல்லவேண்டுமென்றால், கொள் கையை நிலைநாட்டத்தான் இந்த நாவல் எழுதப் பட்டது.  பரிசுக்காக என்றால், சாமியார்களின் காலிலோ அரசியல்வாதிகளின் காலிலோ விழுந் திருப்பேனே! தொழிலாளர்களின் அங்கீகாரம் தான் முக்கியம்.  அடிமைகள், இஸ்லாமியர்கள், பெண்களைப் பற்றி எழுதும் இளம் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் தோழர் அ. கந்தசாமி நன்றியுரை கூறினார்.

Pin It