“நாங்கள் நடனக்காரிகள். எல்லோருக்குமே நாங்கள் சொந்தம்.  ஆனால், யாரேனும் ஒரு ஆணைக் காதலிக்க மட்டும் எங்களுக்கு உரிமையில்லை.  அப்படி ஏதாவது செய்தால், அந்தக் காதலை நாங்கள் கொன்றுவிட வேண்டும்; இல்லையென்றால் எங்கள் சமூகம் எங்களை வாழவிடாது” என்றாள் நிலா இவள் குலாத்தி நாவலின் கதை மாந்தர்.

இப்படிப்பட்ட பரிதாபமான சூழ்நிலையில் வாழ்க்கை (வாழ்பவர்கள் என்றுகூடச் சொல்லக் கூடாது) நகர்த்துபவர்கள்தான் இக்குலாத்தி நாவலில் வரும் பிற கதாமாந்தர்களும்.

குலாத்தி என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்.இவர்கள் மஹராஷ்டிராவில் வாழ்பவர்கள்.  இக்குலத்தின் பிற தொழில் இக்குலப் பெண்கள் நடனம் ஆடிப் பணம் சம்பாதிக்க வேண்டும் அதைக் கொண்டு இக்குலத்தின் ஆண்கள் சுகமாக வாழவேண்டும்.

இப்பெண்கள் சிறுவயதிலேயே (தமாஷா) நடனம் ஆடக் கற்றுக்கொள்கிறார்கள்.  பின் பருவ வயதில் மேடையில் ஆடவேண்டும், அதுவும் இரவு முழுவதும்! இதற்காகப் பலர் தரும் தொகையைத் தன் தந்தையிடமோ, அல்லது சகோதரர்களிடமோ தந்துவிட வேண்டும்.  அவளை - அதாவது, இக்குலப் பெண்களை யாராவது மணக்க நினைத்தால்  (அதுவும் இங்கு பொருத்தமான வார்த்தை கிடையாது) அவளின் தந்தைக்குக் குறிப்பிட்ட தொகையைத் தர வேண்டும்.  சிறிது காலம் அவன் அப்பெண்ணுடன் வாழ்ந்து விட்டுச் சென்றுவிடுவான்.  அதை விட்டாலும் வழியில்லை, அப்புறம் போனாலும் கதியில்லை என்ற நிலையில்தான் இவர்களின் காலம் கடந்தது.

இந்த நரக வாழ்க்கை வாழ்ந்தவள்தான் சாந்தா பாய் நன்றாக படித்து ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தவளைக் காலம் இச்சுழற்சியால் சிக்க வைத்துவிட்டது.  தன்னுடைய முதல் எஜமானருக்கு (கணவர் என்று இவர்கள் சொல்லுவதில்லை) பிறந்தவர்தான் கிஷோர்.  பின்பு அவரும் அவளைக் கைவிட - வேறொருவருடன் அவர் தஞ்சம் புக - அவர் கிஷோரைத் தன் மகனாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.  எனவே தாயும் மகனும் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தாயைப் பிரிந்து தன் தாத்தாவுடன் வாழும் கிஷோர் அனுபவித்த துன்பங்கள் சொல்லியடங்கா.  அத்துனை துயரங்கள்! இவையனைத்திலும் அவரின் ஜிஜி தான் அவனுக்கு ஆதரவாய் இருந்தாள்.  இப்பேற்பட்ட சூழ்நிலையிலும் கிஷோர் நன்றாகப் படித்து டாக்டர் ஆனார் என்பது மட்டும்தான் இந்நூலைப் படித்ததில் ஒரு மன ஆறுதல்.

இந்நூல் முழுவதிலும் குலாத்திய பெண்களின் துயர்படிந்த வாழ்க்கைப் போக்கை ஒரு படமாகவே நம் கண்முன் காட்டி விவரிக்கிறார்.  சாதாரணமாய் ஒரு வழக்கத்தையும் அதன் பின்னணியையும் பற்றிக் கூறப் பலர் பலவழிகளைக் கையாளுவர்.  ஆனால், கிஷோர் அவ்வாறு போலி நடைமுறை உத்திகளை இதில் எங்குமே இணைக்கவில்லை.  ஏனெனில் அவர் இதை ஒரு நாவலாகச் சித்திரிக்கவில்லை.  தன் இளமை நாட்களின் சிதைந்து போன கனவுகளையும், பழகிப்போன அவமானங்களையும் தாண்டி தன் குலப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உயர்வான சிந்தனையை மட்டுமே கருத்திற்கொண்டு இதை, எழுதியிருக்கிறார்.

இதில் ஓரிடத்தில் கிஷோர் எண்ணுவதைப் போல ஒருவரி உண்டு: “தினம் தினம் சாகிறவர்களுக்காக யார் அழுவார்கள்?” இந்த ஒரு வார்த்தை போதும்- முழுநாவலின் துயரத்தையும் அழகாகக் கோடிட்டுக் காட்டிவிட்டார் கிஷோர்.

மேலும் இந்நாவலின் கருத்து சிறிதும் சிதைந்து விடாமல் அத்துணை துயரங்களையும் நம் மனக்கண்முன் கொண்டு வந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு.வெ.கோவிந்தசாமி.

என்.சி.பி.எச். நிறுவனம் தனக்கேயுரிய பாணியில் இந்நூலைச் சிறப்பாகத் தயாரித்துள்ளது.

Pin It