விடியல்முதல் விடியல் வரை
கண்திறந்தும் கதவு திறந்தும் காத்திருக்கும்
மாபெரும் அங்காடி:
அமெரிக்கப் பேரங்காடிகளோடு
தொப்புள்கொடி உறவுடைய பேரங்காடி:

பணதேவதை
ஒட்டுமொத்தப் புன்னகைக் கிடங்கை
உங்களுக்காக உருவாக்கி வைத்திருக்கிறாள்:

அவள் பாதக் கொலுசுகளின் சந்தங்கள்
உங்கள் உற்சாக உற்சவத்திற்காக
ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

உங்கள்வசதிக்காக
இந்த அங்காடிக்கு உள்ளேயே உங்கள் வீடு:
உங்கள் பிள்ளைகளுக்குப்
பள்ளிக் கூடங்கள்:

உதவமுடியாத பெற்றோர்களை
ஒதுக்கிவிட முதியோர் இல்லங்கள்:

உங்களை, உங்கள் நோய்களைப்
பராமரிக்க மருத்துவ நிலையங்கள் உணவு விடுதிகள்

நீங்கள் விரும்புவதைத் தருவோம்:
உங்களுக்கே தெரியாது; பிறகு
நாங்கள் தருவதையே விரும்புவீர்கள்:

நீங்கள் கேட்கும் விலைக்குத் தருவோம்.
உங்களுக்கே தெரியாது; பிறகு
நாங்கள் சொல்லும் விலையைத்
தருவீர்கள்.

உங்களுக்கு ஏற்றதைத் தயாரிக்கிறோம்:
பிறகு எங்களுக்கு ஏற்றபடி  உங்களைத்
தயாரிக்கிறோம்.

இந்த அங்காடிக்குள் இருந்து
இந்த நாட்டையே அதற்குத் தெரியாமல்
எளிதாக விற்று விடலாம்.

என்ன கிடைக்காது இங்கு?
அடுப்பு, அணிகள் முதல் அணு ஆயுதங்கள் வரை
புத்தம் புதுப் பதிப்புகள்
அன்றாடம் விற்பனைக்குக் காட்சிப் படுத்துகிறோம்.

பூக்களைப் பார்க்கவோ
பூக்கும் காலை அந்தி நேரங்களைப் பார்க்கவோ
காத்திருக்க வேண்டியதில்லை:
தரமான முறையில் அங்காடி உள்ளேயே
தயாரித்து வைத்திருக்கிறோம்.

மழை பார்க்கவும் மின்னல் பார்க்கவும்
வெளியே போகவோ
விண்ணைத் தேடவோ தேவையில்லை
நம்புங்கள்
எல்லாமே இந்த அங்காடிக்குள் கிடைக்கும்

திரைப்படங்கள்
இரத்தத் தெறிப்புகள் முத்தப் பறிப்புகள்:
மெல்லிசை வல்லிசைகள்;
குலுக்கு நடனங்கள்;

அங்காடியின் பாதுகாப்பான அக்டோபஸ்
விரல்களுக்குள் பத்திரமாக இருந்து
அனுபவிக்கலாம்.

காசு தீர்ந்தால் கவலைப்பட வேண்டியதில்லை:
கடன் உதவி அவசர ஊர்தி 108-போல:
நகைகள் பேரில், புடவை வேட்டிகள் பேரில்,
வீட்டின் பேரில் பிள்ளைகள் பெண்டுகள் பேரில்
உங்கள் பேரில் தருகிறோம்:
எங்கு இந்த வசதி கிடைக்கும்?

எல்லாமே மூழ்கிவிட்டால்
கரையில் எடுத்துப் போடவும், இலவசக்
கண்ணீர் விடவும் ஏற்பாடுகள் உண்டு

உள்ளேயே
கடுகாடுகூட இருக்கிறது
நீங்கள் விரும்பினால் உயிரோடு நீங்கள்
இருக்கும்போதே உங்கள் சாம்பலை
உங்களுக்குத் தர எங்களால் முடியும்.

சாவுபற்றிய கவலையை
விட்டு விடுங்கள்; வாழ்வுபற்றிய கவலையை
விட்டு விட்டதைப்போல

நம்பகத்தன்மையுள்ள,
சேதாரமில்லாத மரணங்களை நாங்கள்
உங்களுக்கு நிச்சயப் படுத்துகிறோம்.

நீங்கள் இறந்த பிறகும் கூட
விற்பது வாங்குவது என்னும் இந்த
அங்காடியின்
வாணிக நடவடிக்கையில்
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்!

Pin It