அறிஞர் அண்ணா தமிழ்ச் சமூகத்தில் அசை வியக்கத்தை உருவாக்கியவர்.  எழுத்து, பேச்சு, நடிப்பு, செயல்பாடு..  எனப் பன்முக ஆளுமையாக மிளிர்ந்தவர்.

“குள்ள உருவம்; குறும்புப் பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலை யில்லாத தோற்றம்;நறுக்கப்பட்ட மீசை;நகை தவழும் முகம்;சீவாத தலை;சிறிதளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால், பொருத்தமில்லாத உடைகள், இடுப்பில் பொடி மட்டை,கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம். இந்தத் தோற்றத்தோடு அதோ காட்சியளித்து நிற்கிறாரே அவர் தான் அண்ணா”என அவரின் புறத்தோற்றத்தைக் காட்சிப்படுத்துவார் நாவலர் இரா.நெடுஞ்செழியன்.

அவரின் அகத்தினை,“பேரறிஞர் அண்ணா அறிவுலக மேதை,அரசியல் விடிவெள்ளி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தன்மானத் தளபதி,கலையுலகக் காவலர், திரையுலகில் திருப்புமுனையை உண்டாக்கியவர். சாதி மதப் பேதங்களைச் சாடு வதில் இங்கர்சால், இசையறிவில் ஏழிசை மன்னர், தாய்மொழி காப்பதில் தன்னிகரில்லா அரியேறு, நயம்பட நவில்வதில் நாவலர் மாமணி, எழுத்துலகிற்கு எழுஞாயிறு, உரையாடலில் அங்குப் புகழ்பெற்ற ஒளிவிளக்கு,வாதிடுவதில் வல்லமை,பேரறிஞர் அண்ணா நல்லதொரு பல்கலைக்கழகம் என்று போற்றப்படுவர்” என்று சா.மருதவாணன் அடையாளப்படுத்துவார்.

அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தை வெகு மக்கள் கருத்தியக்கமாக மாற்றிக் காட்டியவர். தந்தை பெரியார்,கல்வியறிவற்ற மக்களையும் கவரும் வகையில் தன் பரப்புகையை மிக எளிமையாக அமைத்துக்கொண்டார். அண்ணாவோ காலனியத் தாக்கத்தால் உருவான எழுத்தறிவுபெற்ற இடைத் தட்டு மக்களைத் தன் இலக்காக்கிக் கொண்டார்.  இவ்வகையில் முதல் ஓரிரு தலைமுறைகளாகக் கல்வி பெற்று அரசு தனியார் நிலைகளில் மாத ஊதியம் பெறுவோர்,வணிகர்கள்,சுயதொழில் புரிவோர்,படித்த இளைஞர்கள்,பயிலும் மாணவர்கள் ஆகிய சமூகத்தின் ‘விழிப்படைந்த’பகுதியினரிடம் திராவிடக் கருத்தியலை எடுத்துச்செல்லும் பொறுப்பு அவருக் கிருந்தது. 

நாடு விடுதலை அடையும் தருணத்திலும் அதன் பிறகான தொடக்க காலத்திலும் உருவான தமிழ் இலக்கியப் பரிச்சயமும், வாசிக்கும் பழக்கமும், நாடகம், திரைப்படம், மேடைப்பேச்சு ஆகிய காட்சி,கேள்வி ஊடகத் தாக்கமும் மக்களிடையே ஒரு வித விழிப்புணர்வை உருவாக்கின. இதனை மிகச் சரியாக அண்ணாவும் அவரின் திராவிட இயக்கத்தினரும் பயன்படுத்திக் கொண்டனர்.

அண்ணா,எழுத்தின் அனைத்து வகைமை களையும் கையாண்டவராகத் திகழ்கிறார்.  பத்திரிகை களுக்குத் தலையங்கம், கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, கடிதங்கள், உரையாடல், நாடகம், திரைப்படம், திறனாய்வு, கவிதை, மேடைப்பேச்சு, கேலிச் சித்திரங்கள், மொழிபெயர்ப்பு...  முதலிய அனைத்திலும் தடம் பதித்தவர் அண்ணா.

அண்ணா முழுநேர எழுத்தாளர் அல்லர்;களப்பணியாளர். தேவை கருதி எழுத்தைப் பயன்படுத்தியவர். “கடுமையாகப் பணியாற்றுவதற்கு இடையிலேயும் உனக்கு மடல் எழுதவும்,கதை கட்டுரை உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங் களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை. அது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினது மில்லை. 

சொல்லப்போனால் மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும் அதனாலேற்படும் சோர்வும் உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்து போவதுடன் புதிய தெம்பும் பிறந்திடுகிறது” (தம்பிக்கு அண்ணா 2008:205) எனத் தான் எழுதும் சூழலையும், அதனால் தான் அடையும் மன நிறை வையும் அண்ணா பதிவு செய்வார்.

அண்ணாவின் கவிதைப்பார்வை

அமைப்பு நிலையில் அண்ணாவின் கவிதைகள் எளிமையும், இனிமையும் நிரம்பியவையாக உள்ளன. இசைப்பாடல்கள், வாழ்த்துப்பாக்கள், இதழ் வாழ்த்து,பொங்கல் வாழ்த்து, கதைப்பாடல்கள், அங்கதப் பாடல்கள், போற்றிப்பாடல்கள், மொழிபெயர்ப்புப் பாடல்கள்...  என அவரின் கவிதைகள் அமைகின்றன. ‘அண்ணாவின் கவிதைகள்’என்னும் நூலில் உள்ள குறிப்புகளின் வழி அவரின் முதல் கவிதை 9.12.1937 நாளிட்ட விடுதலை (காங்கிரஸ் ஊழல்) இதழில் வெளிவருகிறது. 

இறுதிக் கவிதை ‘தென்னகம்’வார இதழுக்கு அவர் எழுதிய வாழ்த்துக் கவிதையாக 16.01.1969இல்வெளிவருகிறது. அண்ணாவின் கவிதைகள் திராவிடநாடு, காஞ்சி, விடுதலை, குடியரசு,தென்னகம்ஆகியஇதழ்களில்வெளிவந்தன. அண்ணாவின்உரைநடைதனிச்சிறப்புமிக்கது. 

“நீரோட்டம் போலத் தாவி வரும் வார்த்தைகள், வரிக்கு வரி அழகான உவமைகள்,புதிய புதிய சொல்லாட்சி,தமிழ் இலக்கணத்திற்கே அப்பாற்பட்ட புதிய பாணிகள்”என அண்ணாவின் மொழி ஆளுமையைக் கவிஞர் கண்ணதாசன் சிறப்பிப்பார். ‘அண்ணா ஒரு பேச்சுப் பாடகர்’ என்பார் கவிஞர் சுரதா.

“வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் வீரர்கள் - கை
கொட்டி நகைத்து மட்டித்தனத்தை மட்டந்தட்டும் மாவீரர்கள்
சுகபோகங்களில் சுகவாழ்வு நடத்தும் சுயநலமிகளைப்பார்த்துச்
சுருட்டிக் கொள்உன் சூதை என்றுரைக்கும் சூரர்கள்”

என்றெல்லாம்அண்ணா எழுதும்போது உரை நடைக்கும்,பாட்டுநடைக்கும் இடைப்பட்டதொரு நடை புதிதாக உருவாகி விடுவதைக் காணலாம்.  மட்டுமல்ல,

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்”
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”

என்றெல்லாம் தொடர்களை அமைப்பது ஒற்றை வரிக் கவிதைகளாகக் கருதத்தக்கன என்றாலும், அண்ணாவிற்குக் கவிதை குறித்த தனித்தனிக் கருத்துக்கள் இருந்தன.  தமிழின் சங்க இலக்கியங் களையும் காப்பியங்களையும் ஆழமாகக் கற்று அதன் நுட்பங்களை அழகாகத் தன் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தியவர். ஆங்கில மொழி இலக்கியத்திலும் ஆழங்கால்பட்ட அறிவு மிக்கவர்.  தமிழ், ஆங்கில இலக்கிய, இலக்கண, திறனாய்வு நுட்பங்கள் தெரிந்தவர். எனவேதான் பிற இலக்கிய வடிவங்களைச் சரளமாகக் கையாளும் அண்ணா கவிதையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கிறார்.  அவரே கூறுகிறார்:

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந்தோரே!
சீர் அறியேன் அணி அறியேன் சிந்தை உந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே(1969)

சீர்,அணி முதலிய யாப்புக் கூறுகள் கவிதைக்கு அடிப்படை என்பது அண்ணாவின் கருத்தோட்டம். அதே போலச் செய்யுளைக் காட்டிலும் ஓசையுடைய பாடல்கள், மெட்டுக்குரிய பாட்டு என்பதில் அண்ணா ஆர்வம் காட்டினார்.  இதுவும் கூடத் தனது கருத்து, மக்களிடம் பரவலாகச் செல்ல வேண்டும்;அதற்குப் பாமரரையும் கவரும் இசைப்பாடல் வடிவம் சிறந்தது என அவர் எண்ணியிருக்கக்கூடும்.  பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட ‘ஒரே நிலவு’என்ற கவிதையில்,தனது கவிதை குறித்த கருத்துக்களை மேலைக் கவிஞர்களின் கூற்றுக்களோடு முன்வைக்கிறார்.

“எதுகை, மோனை, எழில் தரும் உவமை
வசீகர வர்ணனை - பழமைக்கு மெருகு
இத்தனையும் தேடி, எங்கெங்கோ ஓடி
‘வார்த்தைமுடையும், வலைஞன் அல்ல!                                                                          - வால்ட் விட்மன்
“உயர்ந்த உள்ளங்களின் உன்னத நேரங்கள்!

வடித்துக் காட்டும் வரலாற்றுத் துளிகள்
அவையே கவிதை அதுவே வாழ்வின் நூல்!
                                                                                                                                                                                - ஷெல்லி
“உன்னத எண்ணம், உயர்ந்த உணர்ச்சி
எழுப்பிக் காட்டும் இனிய சங்கீதம்
அதுவே கவிதை”
                                                                                                                                                                     - வால்டேர் (ப.7)

ஆகவே, அண்ணா யாப்பமைதி கொண்ட பா வகைகளை, மரபுக்கவிதைகளை, இசைப்பாடல் களையே கவிதைகள் எனக் கொள்கிறார் எனலாம்.

அண்ணாவின் பிற படைப்புகள் பேசப்பட்ட அளவுக்கு அவரின் கவிதைகள் கவனப்படுத்தப் படவில்லை.  அண்ணா தன் அரசியல், சமூகச் செயற் பாடுகளுக்கு உறுதுணையாகவே தன் கவிதைகளைப் படைத்துள்ளார். சாதி,மத,மூடநம்பிக்கை எதிர்ப்பு,வைதீகஎதிர்ப்பு, பொருளாதார ஏற்றத் தாழ்வு எதிர்ப்பு, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, அரசியலில் லஞ்சம் / ஊழல் எதிர்ப்பு.... ஆகியன அண்ணாவின் கவிதைகளின் பாடுபொருள்களாகின்றன. மரபும், புதுமையும் சேர்ந்த கலவை யாக அவரின் கவிதைகள் மிளிர்கின்றன.

கவிதைகளின் உள்ளடக்கம்

அறிஞர் அண்ணாவின் கவிதைகள்யாவும் பகுத்தறிவு,சுயமரியாதை,சமதர்மக் கொள்கைகளைத் தாங்கியே நிற்கின்றன. இரண்டாம் மொழிப் போரில் தந்தை பெரியார் சிறைப்பட்டபோது அவருக்குப் புறாவிடம் கவித்தூது அனுப்புகின்றார். ஓர் புறம் ‘ஒழிக இந்தி’,மறுபுறம் ‘பெரியார் வாழ்க’என இரண்டு பக்க இறக்கைகளோடு புறா பறந்து செல்கிறது.

பெரியாரை,

“வாழ்ந்திட வேண்டும் வையகமெல்லாம்
தாழ்ந்தவர் மேலவர் எனும் தருக்கின்றி
உழைத்திடும் மக்களை உறிஞ்சிடு கூட்டம்
ஊரில் இருப்பது உலகக் கேடென
உரைத்திடும் பண்பினர் ஊன்று கோலினர்” (ப.18)
என்கிறது புறா.

இலஞ்சம், ஊழலுக்கு எதிரானவர் அண்ணா.  அன்றைய ஆட்சியின் அவலத்தினைக் கூறும் ஒரு கவிதையில்,

“புதிது புதிதாய் வெளிக்கிளம்புகிறது - அனுதினமும் பேப்பரில்
லஞ்சப் புரளி அதிகரிக்கிறது
..............................................
தேசிய போர்வையைப் போர்த்திக் கொண்டே
சிலர் திருடும் தொழிலாக இருந்தால்
அதைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றே” (ப.30)

என வெளிப்படையாய்ப் பேசுகின்றார்.  அதே போலப் பிடிபட்டான் என்ற கவிதையில் சூழல் காரணமாகச் சொற்பப் பணத்துக்கு ஆசைப்பட்டு இலஞ்சம் பெற்ற அரசு அலுவலர் ஒருவர் மாட்டிக் கொண்டு,தண்டனையும் பெறுவதையும், இதற்கு மேல் இவனைப் போன்றவர்களைக் கருவியாக்கிக் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்கள் தப்பித்துக் கொள்வதை நுட்பமாகவும் ருசிகரமாகவும் விளக்குகின்றார்.

மேலும் அண்ணாவின் பல கவிதைகள் வெள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் நம்மவரின் கொள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் முழங்குகின்றன. ஏழ்மை, வறுமை ஒழிந்து சமத்துவம் மலர வேண்டும்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டும் என்பது இவரின் பேரெண்ணமாக இருப்பதை இவரது கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சமூகச் சிக்கல்கள் அளவுக்குப் பொருளியல் சிக்கல்களையும் அண்ணா கவனப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
‘சீறிடும் சிட்டு’ என்றொரு கவிதை.

“பாரீர்! படுத்துறங்கும் பராரியை! எழுப்பிப்
பணக் கோட்டைகளைப் பிடித்துக் குலுக்கு!
அடிமைக் குருதி கொதித்திடும் நம்பிக்கை யூட்டிச்
சிட்டு வல்லூறை எதிர்த்திடும் வகை செய்!
மக்களாட்சி மலர்ந்ததென மொழிந்து
பழமைப் பாசிப் படத்தைத் துடைத்திடு!
உழவன் வாழ்ந்திட வழிதரா வயலின்,
செந்நெலை மிதித்து மண்ணாகச் செய்திடு!
பட்டிட்டுப் பரமனை மறைத்திடல் ஏனோ!
பக்தர் கண்படாது களித்திடத்தானே!
கோயிற் குருக்கள் கூட்டத்தை விரட்டிடும்.” (ப.124)

இது 1942இல் வெளிவந்த கவிதை. விடுதலைக்குப் பின் நடக்கவேண்டிய சமூகப் பொருளாதார மாற்றத்தை முன்மொழிகிறார். இப்படிப் பல கவிதைகள் ஒட்டுமொத்த மாற்றம் குறித்துப் பேசுகின்றன.

அண்ணாவின் கவிதையமைப்பும் வடிவமும்

பெரும்பாலும் ஆசிரியப்பா அமைப்பின் பல வகைமைகளில் அண்ணாவின் கவிதைகள் அமை கின்றன.  மரபுப்பாவில் படைத்தாலும் கருத்துக்களில் புதுமையே காணப்படுகின்றது.  வாழ்த்துப் பாக்களிலும் அண்ணாவின் அழகுநடை ஈர்க்கிறது. தென்னகத்தின் பெருமை கூறும் கவிதையில்

“அதிர்ந்தன நாலு திசைகள்!
அடங்கின ஏழுகடல்கள்!
பதிர்ந்தன ஓரி மலைகள்!
பிறந்தது தூளி படலம்!  (ப. 26)

என்று பா எழத்தக்க வீரம் காட்டினர்” என அடுக்கிக் காட்டுவது சுவைக்கத்தக்கது.

பொங்கல் வாழ்த்தில் கூட
“தமிழ்வாழ நாம் வாழ்வோம்
அறிவாய் நன்றாய்!
நாம் வாழ்வில் பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு” (ப. 26) இக்கவிதையில் மொழிச் சிந்தனையும் வாழ்வியல் சிந்தனையும் இணைகின்றன.

இசைப்பாடல் வெளிப்பாடு

இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள் அண்ணா இயற்றினார். நேரடி அரசியல் கருத்துக்களை அச்சமயம் புகழ்பெற்றிருந்த பாடல் மெட்டுகளில் எழுதி உள்ளமை கவனிக்கத்தக்கது.  இப்பாடல் களைச் சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, எண்சீர் விருத்தம், ஆகிய வகைமைகளில் அடக்கலாம். எனினும் எளிமையாக நடப்பு அரசியல்,சமூக நிகழ்வுகளை மக்கள் மனதில் ஓசைநயத்துடன் பதிவு செய்வதாய் அமைந்துள்ளன.

‘வெள்ளி முளைக்குது’ என்னும் பாடலில் ஆரிய திராவிடப் பகைமையைச் சுட்டுகிறார்.

“ஒன்றே குலமென்றோம் நாம் ஒருவனே தேவனென்றோம்
ஓங்கார மூர்த்திக் கன்று ஒய்யாரமில்லையென்றோம்.
ஆங்கார ஆரியர் அலைந்து திரிந்தவர்கள்
ஆபாச நியதிகள் அவர்வாழப் புகுத்தினார்.” (ப.34)

இதற்குத் தீர்வாகப் பெரியாரின் கொள்கை களை முன்வைக்கிறார்.

‘வெள்ளி முளைக்குது வெண்தாடி அசையுது!
வீணரின் விலாவெல்லாம் வேதனை மீறுது
வெள்ளையரும் அதிரவெடி வேட்டுக் கிளம்புது
வேதியக் கூட்டமெல்லாம் வியர்த்தின்று விழிக்குது” (ப. 35)

விளக்கம் தேவைப்படாத வரிகள் இவை

மகாத்மா காந்தியடிகளைக் கொன்ற கோட்ஸே குறித்த பாடலில்.

அநியாயம் தானுங்கோ
அவனிக் கடுக்காதுங்க!
அக்ரமக்காரன் பேரு
கோட்சே தானுங்க... (ப. 26)
என்று பாடுவதோடு நிற்க வில்லை.

கோட்சே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைக்காரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோனும்
குலமும் ஒண்ணு, கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதனும்” (ப. 42)
எனத் தீர்வையும் கூறுகிறார். மதவெறி கூடாது. மனித நல்லிணக்கம் தேவை என்பது அண்ணாவின் கருத்து.

கதைப்பாடல் உத்திகள்

அண்ணாவின் கவிதைகளில் அழுத்தமான இடத்தினைப் பிடிப்பது அவரின் கதைப்பாடல்கள் தாம். குறுங்காப்பியங்கள் என உணரும்வகையில் அமைந்த இக்கதைப்பாடல் வடிவத்தில் அண்ணா தான் கூற எண்ணும் சீர்திருத்தக் கருத்துக்களை அற்புதமாக முன்வைத்துவிடுகிறார்.  பாத்திர உருவாக்கம், கதைப்போக்கு, வளர்த்தெடுத்தல், திருப்பம், தீர்வு, முடிவு எனக் கச்சிதமாக இக்கதைப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்ணா எழுதியுள்ள கதைப்பாடல்கள்

1. தேம்புகின்றேன் (1956)

2. மூதறிஞர் மூவர் (1961)

3. நானே தலைவன் (1961)

4. புத்தியில்லா உலகமிது (1963)

5. அவனா இவனா அறிவாளி (1964)

6. காடுடையார் (1965)

7. வேட்பாளர் வருகின்றார் (1965)

8. கோபம் (1965)

இக்கதைப்பாடல்களின் உள்ளோட்டமாக அரசியல் அமைகின்றது என்றாலும் நேர்மையாக வாழ்தல், மூடநம்பிக்கை ஒழித்தல், உழைத்தல், சோம்பல் போக்குதல், கோபம் தவிர்த்தல், சந்தேகம் கொள்ளாமல் வாழ்தல்,பிறர்க்குதவுதல்,மொழிப்பற்றுடன் இருத்தல், நாட்டுக்குழைத்தல் ஆகிய மனிதவாழ்வின் கொள்ளத்தக்க பண்பியல்புகளை இக்கதைப்பாடல்கள் முன்னிறுத்துகின்றன.

போலிச்சாமியாரிடம் ஏமாந்து இல்லறம் துறந்து அவர் வழியில் சென்ற ஒருவன் உண்மை உணர்ந்து, திருந்தி இல்லறம் திரும்புவதைக் கூறும் ‘தேம்புகின்றேன்’ கதைப்பாடலில். . .

கட்டுவது காவிதான்
கருத்தோ ஆதிக்கம் தாவும் காணீர்!
உருட்டுவதும் உருத்திராக்க மாலை யேதான்,
உருட்டு விழிப் பாவையர்-மேலே நாட்டம்!
அருட்கடலே! என்றேத்தி வருவோர் பல்லோர்.
அவர் தாமும் அடித்தாட் கொள்வார்.
வெருட்டுவார், வெஞ்சினங் கொண்டு,
மருட்டுவார், மாடென்பார் மனிதர் தம்மை. (ப.44)
எனப் போலிச்சாமியாரின் ‘சித்துவேலைகளைத்’ தோலுரிக்கின்றார்.

“மூதறிஞர் மூவர்” கதைப்பாடல், மருத்துவம், சோதிடம், இசைஞானம், கைவரப் பெற்ற மூவரைப் பற்றியது. மூவரும் சமையல் செய்யத் திட்டமிடுகின்றனர். காய்கறி வாங்க மருத்துவரும்,அரிசி வாங்க சோதிடரும்,அடுப்பு மூட்ட இசை கற்றோரும் ஒத்துக்கொள்கின்றனர். மூவரும் தத்தமது புலமைச் செருக்கால் உணவுக்கு வழிஇன்றி நிற்பதை எள்ளலுடன் அண்ணா பகர்கின்றார்.

“இடரை வரவழைத்து இலட்சியம் இழந்திடுதல்
எற்றுக்கு என்பதனை எண்ணிடுவீர் எல்லோரும்
சாதாரண சமையல், அதனைச் செய்திடவோ
சங்கீதம் கற்றவனும் ஜாதகம் கணிப்பவனும்
நோய் தீர்க்கும் மருத்துவனும் கூடி முடியவில்லை, காரணமோ,
குறிக்கோள்தனைக் கெடுக்கும் குறை அறிவு கொண்டதுதான்.
                                                                                                                                                                                       (ப.49.50)
மற்றும் தமக்கென்று மாமேதாவித் தன்மை
மெத்த இருக்குதென்ற பித்தத்தி னாலுங்காண்”

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.  கொள்கை இலட்சியம் வேறு.  நடைமுறை அறிவு வேறு.  அண்ணா உள்அரசியலை மையப்படுத்தினாலும்கூட இக்கவிதை இன்றைக்கும் வாழ்வியலுக்குச் சிறந்த சான்றாக அமைகின்றது.  நானே தலைவன் - கதைப்பாடல் எட்டாம் ஹென்றி வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்வை எடுத்துத் தமிழகத்து அரசியலுடன் ஒப்புமை செய்து அங்கதச் சுவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

‘புத்தியில்லா உலகமிது’ கதைப்பாடல் சமூக அவலத்தை ஏழ்மைக் கொடுமையினால் நவீன நல்ல தங்காள் ஆகிப்போன வேணி என்னும் பெண்ணின் சித்திரத்தை அண்ணா சித்திரிப்பதில் கலையியல் செறிவினைக் காணமுடிகிறது.  பொறுப்பற்ற கண வனால் தனது குழந்தைகளில் இரண்டைக் கொன்று விட்டு மூன்றாம் குழந்தையோடு தானும் உயிர்துறக்க நினைக்கும்போது, ‘கொலைக்காரி’ என்னும் பட்டத்தைச் சமூகம் அளிக்கிறது.  வாழ்வதற்குப் போராடிச் சாகலாம் என முயன்று அதற்காகவும் போராடும் அவலம், அப்பெண்ணுக்கு.  ‘இது பொல்லாத உலகம் மட்டுமல்ல,புத்தியில்லாத உலகமும்தான்’எனச் சூடு போடுகிறார் அண்ணா.

“மலர்கள்தரும் கொடியதுவும் காய்ந்து - போனால்
மணம் விரும்பும் மக்கள் அதை நாடு வாரோ?

ஏழை அனாதைப் பெண்ணிற்கு அண்ணா காட்டும் உவமை இது.

யாழ் இனிது,குழல் இனிது என்றெல்லாம் குழந்தைகளின் மழலையைக் கொண்டாடும் சமூகம்.  அண்ணா அதைப் பற்றி வேறு சித்திரத்தைத் தருகிறார்.

குழலப்பா...  யாழப்பா என்று யாரும்
குழந்தைகளின் ஒலிபற்றிச் சொன்னாரில்லை
அவன் செவிக்கு அவ்வொலியே நாராசமாக” (ப.60)

வறுமை,ஏழ்மை,வாழ வழியற்ற நிலைமையில் மழலை மதிப்புகள் நாராசமாக மாறுகின்றன.  அப்பெண் குழந்தைகளைக் கொன்று தானும் சாக முடிவெடுப்பதை அண்ணா,

“பூவும் பிஞ்சும் போகும் முதலில்
பின்னர் சாயும் கொடியே வேரும் அறுத்து” (ப.67)

எளிமையான நெருடலற்ற உருவகம்!

‘அவனா இவனா அறிவாளி?’ என்னும் கதைப் பாடல் அருணகிரி, பெரியண்ணன் என்னும் இரு எதிர் எதிர் பண்புடையாரைப் பற்றி உரைக்கின்றது.  ஏழை ஓ பணக்காரன்; அறிவாளி ஓ முட்டாள்; நல்லவன் ஓ கெட்டவன் என முரண்களில் வளரும் வாழ்க்கை.  காலமும் சூழலும் நல்லதை அழித்து அல்லதைச் செழிக்கச் செய்கிறது. நேர்மை, உழைப்பு, திறமை இவற்றுக்குச் சமயங்களில் பின்னடைவு ஏற்படலாம் என்ற கருத்து இப்பாடலில் எதிரொலிக்கிறது.

“மோட்டார் வருகுது ஊர் சுற்ற
நோட்டாய்க் குவியுது இலஞ்சமுந்தான்.
பாட்டாய்ப் படிக்கிறார் உடன் உள்ளார்
பழிபாவம் கண்டு பயம் கொள்வார்” (ப.76)

இப்படிச் சந்த நயத்தோடு பாடல் முழுமையும் அமைக்கப்பட்டுள்ளது.

‘காடுடையார் என்னும் கதைப்பாடலில் காட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட புலிக்குட்டியானது ஒரு சீமானின் வீட்டில் வளர்கிறது. அங்கு நகரத்தின் அசிங்கத்தைத் தரிசிக்கிறது.  அங்கிருந்து தப்பிப் போகிறது. நடந்தவற்றைத் தன் இனத்திடம் கூறி,பின் கடவுளைச் சந்தித்து மனிதர்களின் மோசமான பண்புகளைப் பட்டியல் போடுகிறது. இதனைக் கேட்டு நொந்துபோன இறைவன் இனி நாடு உதவாது எனக் ‘காடுடையார்’ ஆகிறார். இதனைக் கனவு காணும் உத்தியில் அண்ணா படைத்துள்ளார்.

விலங்குகள் இரை தேடும் நிலையைப் புலி,
வயிற்றுக்கு வழி தேட
மோப்பம் பிடித்தறிந்து, மெல்ல
நடை நடந்து
இடம் பார்த்துப் பாய்கின்றோம்
இடறியும் வீழ்கின்றோம்
எத்தனையோ இன்னல், பிறகே
இரைதனைப் பெறுகின்றோம். (ப.83)

எனக் கூறித் தான் பார்த்த மனிதரின் நிலையைப் புலி ஒப்பிடுகிறது.

உழைக்காமல் உருசியான
பண்டம் பானமெலாம்
வேண மட்டும் உட்கொண்டு
வீணாக்கியும் போடும்
வித்தையினைக் கற்றவர்கள்
மாளிகையில் வீற்றுள்ளார்.
.............................
சிரித்தபடியே அவர்கள்
சித்ரவதை செயவல்லார்!
சொல்லாமலே சாகடிக்க
வல்லாரும் ஆங்குள்ளார்.
.............................
உண்டு மகிழ்வதுடன்
ஊர்க் குடியைக் கெடுப்பதற்கு
விழித்துக் கிடக்கின்றார். (ப.83-84)
.............................
என வரிசையாக மனிதரின் இழிசெயல்களைப் புலி பந்தி வைக்கிறது.கடவுள் கலக்கமுறுகிறார்.  நாடு வெறுத்துக் காடடையத் தயாராகிறார்.

கடவுள்:

நாடு கைவிடினும் காடுளது
களிப்புற்றேன் மிகவும் என்றார்.

அதற்குப் புலி:

காடுடைப் பொடி அலவோ
பூசிடுவதுமய்யா!
ஆடையும் எமதினம்
அளித்தது அன்றோ! (ப.92)
என்கிறது.

சிரித்தார் சிவனார்.  சிரித்தேன் நானும்.

எனப் பொருத்தமாக முடிக்கிறார். நடப்பைக் கற்பனையாய் உருவகம் செய்து கவி புனைந்திருப்பது சிறப்பு.

‘வேட்பாளர் வருகின்றார்’ - கதைப்பாடல் இன்றைய தேர்தல் முறை, வேட்பாளர் தகுதிப்பாடு குறித்ததாக அமைகின்றது.  குறுக்குவழியில் பணம் சேர்த்தவர்கள் தேர்தலில் கொடி நாட்டும் இழி நிலையை அண்ணா கவிதைகளாகப் படைத்துள்ளார்.

‘கோபம்’ என்னும் கதைப்பாடல் சுப்பன்-குப்பி என்னும் இருமாந்தர்களை வைத்து நடத்தப் பெறுகின்றது. வறுமையும் ஏழ்மையும் வாட்டும் குடும்ப நிலை. வேலையில்லை இருவருக்கும். குடும்பம் காக்க பெண்ணான குப்பி,விறகு சுள்ளிப் பொறுக்கச் செல்கிறாள் தோப்புக்கு. கண்ணப்பர் என்னும் பண்ணையாரோ குப்பியைச் சுற்றுகிறார். ஒரு நாள் முயற்சியிலும் இறங்குகிறார். தப்பி வருகிறாள் குப்பி. கணவனிடம் கயவனைக் குறை சொல்ல அச்சம். இந்நிலையில் கண்ணப்பருக்காகச் சொக்கன் என்பவனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுப்பன் சிறைக்குச் செல்கிறான். இத்தருணத்தைத் தோட்டக்கார முதலாளி பயன்கொள்ளக் கருத, குப்பி சென்னைக்கு மில் வேலைக்குப் பயணமாகிறாள்.

பாலியலை உளவியல் நோக்கில் நுட்பமாகக் கூறுகின்றார் அண்ணா.

ஊருக்குப் பெரியவராம்
உண்மை நீதி அறிந்தவராம்
ஏருக்கு மாடாக உழைக்கும்
ஏழைக்குக் கூற்றாவார்.
பெண்பித்துக் கொண்டலையும்
பேயெனத் தெரிந்திருந்தால்
பொன்விறகு கிடைத்தாலும்
புகுவேனோ மாந்தோப்பு!
பாம்பு சீறுமுன் பசுப்புல்
வெளியதுவும் பாங்குதான்.  அதுபோல
பாவி இப்பார்வை காட்டு முன்னே
என்தந்தை போல் தெரிந்தார். (ப. 102-103)

மிக எளிமையாகச் சூழலைக் காட்சிப்படுத்தும் பாங்கு அண்ணாவின் படைப்புத்திறனாக மிளிர்கிறது.

பல்சுவைப் பாடல்களின் தனித்தன்மைகள்:

பல்சுவைப்பாடல்கள் பகுதியில் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் சில புதுக்கவிதை வடிவங்களும் இடம்பெறுகின்றன.

சூரிய குட்டியைத் தேடிய மாப்பிள்ளை

“மாடு இல்லா வண்டி
மானத்திலே போவுதாம்!
மைதானத்திலே ஒரு கம்பி!
எண்ணை இல்லே திரியுமில்லை
எரியுதாம் விளக்கு!
என்னென்னமோ இருக்குதாம்
என்மாமன் வாழும் சீமையிலே.” (ப.123)

விடுகதையைப் போல அமைக்கப்பட்ட கவிதை.  இது 30.08.1942-இல் வெளிவந்தது.  விமானம், வானொலி, மின்விளக்கு ஆகியவற்றைச் சுட்டும் கவிதை இன்புறத்தக்கது.

‘சின்னான் சிந்து’ என்னும் கவிதை ஏற்றத் தாழ்வுற்ற சமுதாயத்தின் அவசியத்தைச் சிந்து வடிவத்தில் தருகிறது.

“வெள்ளைக்காரக் கூட்டமெல்லாம் வெளியேறிப் போகணும்!
சள்ளைப்பிடிச்ச வாழ்வுபோயி ஒரு சவுகரியம் பிறக்கணும்!
கொள்ளையிடும் கும்பலது கூண்டோடே தொலையணும்!
பள்ளுபறை என்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்க வழிதேடணும்!
‘வெள்ளை - சள்ளை கொள்ளை.....
பள்ளு பறை.....
ஏழை எளியவங்க....” (ப.133)
“என்சாதி உசந்ததென்னும் எண்ணக்காரன்
ஒழியனும் எல்லாரும் ஒண்ணு என்னும்
எண்ணம் உதிக்கணும்.”

போன்ற எதுகை, மோனை சந்தச் சொல் அமைப்புகள் பாடலில் இயல்பாக அமைந்து, சிறப்புத் தருகின்றன.  சாதியற்ற சமூகம் உருவாக அண்ணாவின் கவிதை அறைகூவி நிற்கின்றது.

புதுக்கவிதை

அண்ணா மேலைக் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புதுக்கவிதை போன்ற யாப்பு மீறிய கவிதை அமைப்புகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஒரு சில கவிதைகள் புதுக்கவிதை களாகக் கருதத்தக்கவை.

மனிதன்

மனிதா!
நீ யாருக்கும் தலைவணங்காதே.
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை செருக்குள்ளவரை
மதவெறியரைத் தள்ளி எறி
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே! (ப.135)
சிந்தனை செய்! செயலாற்று!

வண்டிக்காரன் மகன்

ஓயாமல் உழைக்கின்றாய்!
உன் மகனை ஆளாக்க
ஊர் மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக்கின்றாய்!
பேர் சொல்லி மகன் வாழ்வான்
பெருமை மிகும் என்றெண்ணிப்
பேய் மகனும்உனை மறந்தால்
நாய் மகனே ஆவான் காண்! (ப. 152) என்பன போன்ற அறச்சீற்றங்களும் அண்ணாவின் கவிதையில் காணக்கிடைக்கின்றன.

அண்ணா தனது கருத்துநிலைகளைப் பரப்புகை செய்யும் விதமாக இசையும் சந்தமும் மிக்க பாடல் களைப் படைத்துள்ளார். அண்ணாவின் உலக நோக்கையும் சமூக நோக்கையும் அறிந்திட அவரே தன்நிலை அறிமுகமாக ஒரு கவிதையில் கூறுகிறார்.

மனித மேம்பாடு

மனித மேம்பாடே என் இயக்கம்
தோழமையே என்மேடை
தூய மனத்தினர் என்பேன்
உழைத்திடின் மக்கள் நன்மைக்கே
தொலைவிலே சிறு பொறி கண்டு
துடித்தெழும் போக்கினர் யாரும்
தோழர்களையும் எந்தனுக்கே
துணைவராம் புனிதப்போர் தனக்கே. (ப.198)

இக்கவிதையில் தன் பயணம்,பாதை,வழித் துணை ஆகிய யாவற்றையும் அண்ணா சுட்டி விடுகிறார்.  இதுதான் அண்ணாவின் இலட்சியம் எனலாம்.

மொழிப்பயன்பாடு

மொழிப்பற்று மிக்குடையவரான அண்ணா தம் படைப்புகளில் பிறமொழிச் சொற்களையும், வட்டார வழக்குச் சொற்களையும் வசதி கருதியும் சராசரி மக்களுக்கு விளங்கும் தேவை கருதியும் பயன்படுத்துகிறார்.

ஓய்ந்தது பாளை உட்கார்ந்தா(ள்) சாணாத்தி” (பழமொழி)
கரடுமுரடான பாதையிலே அந்தக் கறுப்புக் கண்ணாடி கோச்சு மானும்’ (பிறமொழிச்சொல்)
நாமே நம் ‘ஓட்’ கொடுத்து நல்லவரென்றே எடுத்து’ (ப.32) 
                                                                                                                                                            (பிறமொழிச்சொல்)
‘கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே’
‘அடுப்பிலிட்ட கட்டைபோல்’                                                                                                (வட்டார வழக்கு)
சர்க்கார் மோட்டார் (பிற மொழிச் சொற்கள்)
‘ஏனப்பா எம்மான் பேச்சு எப்படி இருந்த தென்றேன்?
தேனப்பா! தெவிட்டா தப்பா! தேகமே கூசு தப்பா!
ஆமாப்பா! என்றான் நண்பன்’                                                                                                  (பேச்சு வழக்கு)

மொழித்தூய்மை நோக்கு அண்ணாவின் கவிதை களில் இல்லை. மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை அப்படியே எடுத்தாளும் போக்குக் காணப்படுகிறது.

எச்சரிக்கையுணர்வு

தமிழ்க் கவிதையியலின் ஆழங்களை உணர்ந்தவர் அண்ணா. எனவே மேம்போக்காகக் கவிதை போலச் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. மரபு தழுவிய இசைப்பாடல் வகையினையே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.  பேச்சிலும், மடல், சிறுகதை, நாடகம், போன்ற உரைநடை வடிவங் களிலும் தன்னியல்பாக வீரியத்தோடும் துணி வோடும் வெளிப்பட்ட இவர் கவிதையில் மட்டும் உள்வாங்கிச் செயல்படுகிறார்.  தன்னடக்கம் என் பதைக் காட்டிலும் இலக்கண - இலக்கியச் செழுமை மிக்க மொழியின் மீதான கவனத்தையே இது காட்டுகிறது.

‘இது கவிதை அல்ல - புலவர் துணை கொண்டு
கவிதையாக்கிக் கொள்க’.

‘தமிழாசிரியர்துணைகொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறை நிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்’என் றெல்லாம் ஆங்காங்கே குறிப்பிடுவது அண்ணாவின் படைப்பு நேர்மையைக் காட்டுகிறது.

முடிவாக

* ஆசிரியப்பாவின் வகையினங்கள், சிந்து, கண்ணி, வாயுரை வாழ்த்து, கும்மி... என மரபோடு எழுதப் பட்ட கவிதைகள் அண்ணாவினுடையவை.

* எளிதில் புரியும் மொழியும், மனதில் நிற்கும் ஓசை ஒழுங்கும் இவரின் பொதுவான கவிதை இயங்குதளங்கள்.

* அரசியல் சார்ந்த கருத்துகளை வலிமையோடு மக்கள்திரள் முன்படைத்திடும் தன்மை இவரின் கவிதைகளின் அடிப்படையாகின்றது.

* எதுகை, மோனை, அடுக்குமொழி, பேச்சு, வழக்கு, பிறமொழிச் சொற்கள் விரவி நின்று அண்ணாவின் கவிதைகளுக்கு அணி செய்கின்றன.

* உவமைகள், உருவகங்கள் மிக எளிய அடிப் படையில் கவிதைகளில் ஆங்காங்கே தென்படுகின்றன.

* அண்ணாவின் கதைப்பாடல்கள் தனித்துவ மிக்கவை.  குறுங்காப்பியங்களாக விரியும் தன்மை கொண்ட இவற்றில் கதைகளில் இவரின் கற்பனையாற்றலும் படைப்புத்திறனும் வெளிப் படுகின்றன. கதைக்கருத்தேர்வு, பாத்திர வளர்ப்பு, நிகழ்வுக்கோவை, சொல்லாட்சி, நடத்திச்செல்லுதல்,எடுத்துரைப்பு,முடிவுஆகியகூறுகள்யாவும்ஓர்மையுடன்தொழிற்படுகின்றன.  தமிழ் மரபுக் கவிதைகளில் அண்ணாவின் பங்களிப்பு என  யோசித்தால் அவரின் கதைப்பாடல்களாகவே அமையும் சிறப்புப் பெறும்.

* ஒட்டுமொத்த சமூக மாற்றம் என்கிற கருத் தியலே அண்ணாவின் கவிதைகளின் இயங்கு தளமாக உள்ளது.

நன்றி:அண்ணாவின் கவிதைகள்,பூம்புகார் பதிப்பகம்,பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

Pin It