[அமிர்தம் சூர்யாவின் கவிதைகளை முன்வைத்து...]

சமீபத்தில் திரைப்படம் தொடர்பாய் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியன்றில் கூறிய கருத்தை இங்கே நினைவுகூர்வது அவசியமாகப்படுகிறது. “குறைந்த செலவில் எடுக்கப்படும் படமோ,பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் படமோ -படத்தை விளம்பரப்படுத்தக் கணிசமான தொகை செலவழிக்கப்பட்டால் மட்டுமே படம் உரிய கவனம் பெறும்”.இதை இங்கே நினைவு கூரக் காரணம்,இன்று ஒரு கவிஞர் அறியப்படுவதும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான். தரமான கவிதைகளை எழுதுவதால் மட்டுமே ஒரு கவிஞர் அடையாளங்காணப்படுவார், அங்கீகரிக்கப்படுவார் என்று எந்த உத்திரவாதமுமில்லை.

கவிதை எழுதுபவர் வசதி படைத்தவராய் இருந்தால்,உயர் பதவி வகிப்பவராய் இருந்தால்,ஒரு குறிப்பிட்ட செல்வாக்குமிக்க குழுவை-அது அரசியல் சார்ந்த குழுவோ, இலக்கியம் சார்ந்த குழுவோ இருந்தால், செல்வாக்கு மிக்க புரவலரைப் பெற்றிருந்தால்,

தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளத் தெரிந்தவராக,அயராது பாடுபடுபவராக இருந்தால்,தற்போது முக்கியகவனம் பெறும் கருப்பொருள்களில் முனைந்து கவிதை யெழுதுபவராக இருந்தால்,இதற்கு முன்பு கவிதை யெழுதியவர்கள்,போலிகள், பாசாங்குக்காரர்கள் என்று தடாலடியாக  மேடையில் தீர்ப்பெழுதும் ‘மாண்பு’டையவராக இருந்தால்,இன்னபிற,‘கவிதைக்குப்புறத்தேயான’தகுதிகளின் பயனாய் தமிழ்க்கவிதையின் முழுமொத்தப் பிரதிநிதியாய் திரும்பத் திரும்ப ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு இந்திய,சர்வதேச அரங்குகளில் பேசப்படுபவராக,சுட்டப்படுபவராக இருந்தால்-பெரும்பாலும்,இன்னபிற நிறைய ‘இருந்தால்’களைப் பொறுத்தே ஒரு கவிஞர் அடையாளங்காணப்படுவது இன்றைய நடைமுறையாக இருந்துவரும் நிலையில், மேற்சொன்ன செல்வாக்குகள் ஏதுமின்றி கவிதை மீதுள்ள பிடிப்பும் பிரியமுமாய் ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர்,நவீனக் கவிதை வெளியின் பரிசோதனை முயற்சிகளை ஆர்வமாக மேற்கொண்டு உளமார உத்வேகத்தோடு இயங்கிவருபவர் கவிஞர் அமிர்தம் சூர்யா.

இவருடைய கவிதைகளும், கதை, கட்டுரைகளும் தமிழின் குறிப்பிடத்தக்க மாற்றிதழ்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன;வெளியாகிவருகின்றன.சமீபத்தில் அமிர்தம் சூர்யாவின் இரண்டு கவிதைத் தொகுதிகளில்(முக்கோணத்தின் நான்காவது பக்கம் [2001],பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடு[2006]) வெளியான கவிதைகள், மற்றும் முகநூல், இணைய தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கவிதைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகள் 79 ‘வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்’ என்ற தலைப்பில் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தால் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

சகபயணியின் வெள்ளை அறிக்கை என்ற தலைப்பில் கவிஞரின் ‘என்னுரையும்’2000-ல் எழுத்தாளர் இவருடைய கவிதைவெளி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

“தன்னை உணரும் தருணங்கள் நிகழும் தளமாயும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு களைப்பாறும் பிரதேச மாயும் வாழ்வின் முடிச்சுகள் சிலதை அவிழ்ப்பதும், பின், முடிச்சுகள் போடுவதும்,பிறிதொரு சந்தர்ப்பத்தில் தானே முடிச்சாய் மாறி விழிப்பதுமான விளையாட்டுக்களமாயும் சமூகப் பதிவுகளினூடாய் தனக்கான தேடலைத் தொடரும் சாத்தியங்களைக் கொண்ட பகுதியாயும்”கவிதை வெளி இயங்குவதாலேயே”தனது “பதிவுகளுக்கேற்ற சாதனமாய் கவிதையைக் கையகப்படுத்தியதாய்” தனது முன்னுரையில் தெரிவிக்கும் கவிஞர் “யதார்த்த வாழ்வில் அகப்பட்ட சில வெளிச்சப்புள்ளிகள் அகத்திலும் புறத்திலும் மாறி மாறி எதிரொலித்துச் சிதறும் ஒளிக்கற்றையாய் உணர்கிறேன். அகத்தில் புறமும் புறத்தில் அகமும்.

அகம் எனக்கான தாக இருந்தாலும் புறம் பிறரையும் உள்ளடக்கியது தானே!”என்றும் சுட்டிக்காட்டுகிறார்.மேலும்,“சட்டென அதற்கான மொழியோடு இயல்பாய்ப் பூத்த கவிதைகளை மட்டுமின்றி... ‘வெயில் ஒரு சுவையான பதார்த்தம்’ என்று எழுதிய பாரதியின் துணிவை நானும் சிலாகித்தபடியே குறிப்பு, கதை, விவரிப்பு, உரை, உரையாடல் போன்ற சில சொல்யுக்திகளை முயற்சித்துள்ளேன்”என்று தன் கவிதைப்பயணப் போக்குகளின் தடங்களையும் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.

அமிர்தம் சூர்யாவின் கவிதைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவற்றில் அவர் கையாண்டுள்ள கவிதாமுயற்சிகள் கவிதையில் பேசப்படும் பொருளைத் துல்லியமாக, கவித்துவம் குறையாமல் வெளிப்படுத்துவதில் வெற்றி யடைந்திருக்கின்றன என்று சொல்ல முடியும்.

‘அன்று நீ நகரமான தினம் [பக்கம்.21] அற்புதமான குறியீட்டுக்கவிதை என்பதோடு கூட, கவிஞரின் ஆழமான சமூகப்பிரக்ஞையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் படைப்பாகும். பின்வரும் வரிகள் எடுத்துக்காட்டு:

‘மேற்கு மாட வீதியில்...
புட்டத்தைத் தட்டும்
கடைக்காரனின் அவமதிப்பை
உதறிவிட்டு
ஒற்றை ரூபாய் பிச்சையை
வாங்கிச்செல்லும் அரவாணிக்கு எதிரே
பக்தி வழிய பல்லக்கில்
தூக்கி வருவர்
அர்த்த நாரீஸ்வரரை.’

‘குலதெய்வங்களின் ஆல்பம்’ அன்பும் மனத் திடமும் கொண்டு விசாலமான பார்வையோடு வாழ்வை அணுகிய பெண்மணிகளைப் போற்றும் கவிதை.

‘உண்ணி பற்றிய ஒரு குறும்படம்’  கவிஞரின் அகவய, புறவய வாழ்வை அற்புதமாய்க் காட்சிப்படுத்துகிறது. அம்மாவைப் பற்றிய இரு கவிதைகளும் ஆழமானவை.

‘சொந்த நிழலுக்கு/ ஆள்வைத்து அரிதாரம் பூசியோர்/அகன்றனர் ஆகிருதி விட்டு/ நகராமல் நிற்கிறது சாயப்படலம்/பாதச்சுவடுகளின் நீட்சியாய்’என்ற வரிகளைக் கொண்ட ‘நிழல்’ கவிதை[பக்கம்.104]நிழல் என்ற சொல்லின் பல்பரிமாணங்களின் உதவி யோடு தனிநபரையும், சமூகத்தையும் புலப்படுத்தி விரிகிறது!

‘மாயமாதல்’ என்ற தலைப்பிட்ட கவிதையில் ‘அம்மா பொம்மை’ என்ற சொற்றொடரே கவிதையை நிறைவாக்கிவிடுகிறது எனலாம்.இரண்டாம் பத்தியாக வரும் ‘அம்மாவின் பொம்மையாய்/அம்மாவே பொம்மையாய்/அம்மாபொம்மையாய்-கவித்துவம் குறைந்த கூடுதல் விவரிப்பாகவும் ஒரு வாசிப்பில் தோன்றியது.அதுவே மறுவாசிப்பில் மேற்குறிப்பிட்ட இரண்டாம் பத்தியில் இடம்பெறும் மூன்று வரிகளே கவிதையின் கூடுதல் அர்த்தப்பரிமாணங்களை சாத்திய மாக்குவதாகத் தோன்றியது!

‘மாமு சாவுக்கூத்துக்கு என்னடா அர்த்தம்?’ என்று பேச்சுவழக்கிலான தலைப்பைத் தாங்கியுள்ள கவிதை ‘இறந்தவனின் இருப்பின் வன்மம்/எழுகிறது பல்வேறு ரூபங்களில்/ பறைமேளம் உசுப்பி உசுப்பி/கட்ட மைத்திருந்த எல்லா வற்றையும்/கலைத்துப்போட..../ செத்தவனிலிருந்து மீண்டும்/உயிர்த்தெழுந்து ஆடுகிறார்கள்-/தெருவெங்கும்....’ என்று மிக ஆழமான கவிதையாக முடிவுறுகிறது.


இந்தத் தொகுப்பில் முழுக்கவிதையாகத் தனிக் கவனம் பெறும் கவிதைகளோடு அப்படி பெறத் தவறும் கவிதைகளிலும்கூட மனதைக் கவரும் வரிகளும் வாசகங்களும் இடம்பெறுகின்றன.அமிர்தம் சூர்யாவின் கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:  “தெரிந்தும் தெரியாததுமான செடிகளும் உயிரினங்களும் முடிவின்றி தங்களை நிகழ்த்துமோர் அடர்ந்த காடுபோலிருக்கும் நான் விரும்பும் கவிஞரின் அகம்.எனது கவிஞன் என்னிடம் எதையும் கூறுவதில்லை, வெளிப்படுத்து வதில்லை.அவன் மௌனமாக நிகழ்ந்துகொண்டிருக் கிறான்.” முழுநிறைவான உண்மை!

Pin It