சமூக, பொருளாதார விடுதலைக்கான வர்க்கப் போராட்டம், தலைமறைவு வாழ்க்கை, வழக்குகள், சிறை என ஒரு பொதுவுடைமையாளருக்கே உரித்தான அத்தனை பொதுவாழ்வுத் துன்பங்களையும் அனுபவித்து அரசியல், கருத்துநிலைத் தளத்தில் நிறைவான மார்க்ஸியவாதியாக வாழ்நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருந்த தோழர் எல்.ஜி.கீதானந்தன் 13-12-2011 அன்று தமது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

கோவை, நல்லாயன் ஆரம்பப் பாடசாலையிலும், திருப்பூர் பிஷப் உபகாரசாமி உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்ற கீதானந்தன் பள்ளியில் படிக்கும்போதே ‘மாணவர் முன்னேற்ற மன்றம்’ அமைத்து அதன் செயலாளராகவும், பிஷப் பள்ளியில் ‘வீரமாமுனிவர் இலக்கிய மன்றச் செயலாளராகவும்’ இயங்கியவர்.  உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் சண்முக சுந்தரம் பொதுவுடைமைக் கருத்துகளைச் சொல்லிக் கொடுத்து சாமிநாத சர்மாவின் நூல்களைப் படிக்கத் தூண்டியதோடு, தினசரி பத்திரிகை படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்.  அப்போதே மார்க்ஸ், வால்டேர், ரூசோ போன்ற சிந்தனை யாளர்களைப்பற்றிப் படித்துவிட்டிருக்கிறார் கீதானந்தன்.

1958-இல் கோவை கோட்டைமேட்டில் இஸ்லாமியர்கள் பகுதியில் ‘இக்பால் மன்றம்’ கிருஸ்தவர்கள் வசிக்கும் பகுதியில் ‘மக்கள்

மன்றம்’ என்று இரண்டு மன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.  இவற்றில் கீதானந்தன் உறுப்பினராக இருந்தபோதுதான் தோழர் எல். அப்பு அறிமுக  மானார்.

குழந்தைகளுக்கு மாலை நேரப் பள்ளி நடத்திக் கொண்டிருந்ததன் மூலம் அங்கு வசிக்கும் மில் தொழிலாளர்களிடையே தொடர்பு ஏற்பட்டது.  அவர்களின் மூலமாகப் பொதுவுடைமைச் சிந்தனை வந்தது.  அதன் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர் ரமணியைச் சந்தித்து 1958-இல் கட்சி உறுப்பினரானார்.  அப்போது அவருக்கு வயது 19.

keedhananthan_250இயக்கத்தில் முனிசிபல் தொழிலாளர் சங்கத்தின் ஊழியனாகவும், பிறகு நகரக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் கீதானந்தன்.  கட்சி 1964-இல் உடைந்தாலும் அதன் கூறுகள் 1962-லிருந்தே துவங்கி விட்டன.  கீதானந்தனும், அப்புவும், தோழர் ஏ. கே. கோபாலனைப் பாலக்காட்டில் சந்தித்து, அவரின் ஆலோசனைப்படி ‘தீக்கதிர்’ பத்திரிகையைக் கோவையில் துவங்கினர். 

பிறகு கீதானந்தன் நகரச் செயலாளராகவும், மோட்டார் சங்கம் மற்றும் ஓட்டல் சங்கச் செயலாளராகவும் பணியாற்றினார்.

“என் இதயத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க இயக்கம் என்று சொன்னால், அது தோழர் சீனிவாச ராவ் தலைமையில் 1961 இல் நிகழ்ந்த ‘நிலச்சீர்திருத்தம்’ கோரி நடைபெற்ற பாதயாத்திரை தான்!  கோவை முதல் சென்னை வரையிலான நெடும் பயணம்.  அதில் நான், அப்பு மற்றும் இருபது தோழர்கள் கலந்துகொண்டோம்.  பாதயாத்திரை பங்கேற் பாளராகவும், ஜனசக்தி நிருபராக மட்டுமல்லாமல் பேச்சாளனாகவும் இருந்தேன்.  அப்போது, நான் திருச்செங்கோடு வரையில் காலில் செருப்பில்லாமல் நடந்தேன்.  சீனிவாசராவ் பார்த்துவிட்டு செருப்பு வாங்கிக் கொடுத்தார்.  எனது கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கையில் உள்ளத்தைத் தொட்ட இயக்கம் என்றால் இதைத்தான் குறிப்பிடுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார் தோழர் கீதானந்தன். 

இரண்டாவது இயக்கம், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ‘நில மீட்சிப் போராட்டம்’.  இப் போராட்டம் தொடர்பாகத் தோழர் பாலதண்டா யுதத்துடன் ஒன்றரை மாதம் சிறையில் இருந்தார் கீதானந்தன்.  பிறகு, பஞ்சாலையைத் தேசிய மயமாக்கச் சொல்லி நடைபெற்ற போராட்டத்தை யொட்டி 15 நாட்கள் சிறை.... இப்படிச் சிறு சிறு போராட்டங்களில் ஏராளமாகக் கலந்துகொண்டிருக் கிறார் கீதானந்தன்.

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா முழுவதும் ஆயிரம் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டார்கள்.  கோவையில் கீதானந்தன், ரமணி, பூபதி, அப்பு, கண்ணாக்குட்டி உள்பட தமிழகம் முழுவதும் எண்பது தோழர்கள் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஒன்றரை ஆண்டு கடலூர் கொட்டடி நிகழ்வுகள் கீதானந்தனின் வாழ்க்கையின் புதிய பரிமாணம் எனலாம். 

கீதானந்தனுக்கு ஆங்கில இலக்கணத்தைச் சொல்லிக்கொடுத்தவர் இன்றைக்கு இருக்கிற மத்தியக் குழு உறுப்பினர் திருச்சி தோழர் ராமச் சந்திரன்.  பிறகு கீதானந்தன் தனது சுயமுயற்சியால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார்.  திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தோழர் பாலவிநாயகம் மொழிபெயர்ப்புப் பணியில் தமது கீதானந்தனைப் பயன்படுத்திக் கொண்டார்.  அப்போதுதான் ‘சாவோ பீச்சில் இளம்பெண்’ (Young woman of sao beach) என்ற வியட்நாமிய நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டது.  கீதானந்தனுக்கு மொழி பெயர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது.  பிற்காலத்தில் பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார்.  இது அவரது சிறை அனுபவம் அவருக்குத் தந்த கொடை.

“உடன்குடியில் ஒரு பொதுக்கூட்டம் நடை பெற்றது.  எனது உரையை சி.ஐ.டி. ஒருவர் குறிப் பெடுத்துக் கொண்டிருந்தார்.  கூட்டம் 10 மணிக்கு முடிந்தது.  ஒருவர் பஸ்ஸை விட்டு இறங்கி அவசரமாக ஓடிவந்து ‘ஐந்து நிமிடம் பேசுகிறேன்’ என்றார்.  வட்ட அமைப்பாளர்கள் மறுத்தார்கள் ‘நான் பேசிவிட்டுப் போகட்டும்’ என்றேன்.  அவன் மேடையில் மைக்கைப் பிடித்தவுடன் ‘கொலை செய்ய வேண்டும்... கொலை செய்ய வேண்டும்... எதைக் கொலை செய்ய வேண்டும்? மத்திய, மாநில சர்க்காரைக் கொலை செய்ய வேண்டும்....’ இப்படிக் கொலை கொலை என்றே இருந்தது அவன் பேச்சு.  அது போலீஸ் வேலை என்பது பிறகுதான் தெரிந்தது.  ‘வன்முறையில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி’ என்று என்மீது ராஜ துரோக வழக்குப் போடப் பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார் கீதானந்தன்.

மாவட்டச் செயலாளராக 1982 முதல் 1992 வரை பத்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தார் கீதானந்தன். மாநிலக்குழு, மாநிலச் செயற்குழு மற்றும் தேசிய குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.  என்.சி.பி.எச் - இன் இயக்கு நராகவும் செயல்பட்டுள்ளார்.

1980-இல் தத்துவார்த்தப் பயிற்சிக்காக, சோவியத் நாடு சென்று மாஸ்கோ லெனின் இன்ஸ்டிட்யூட்டில் ஓராண்டுப் பயிற்சி பெற்றார்.

‘மூன்றாவது அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்’ என்ற லெனின் நூல், ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சினைகள்’, ‘கலை இலக்கியம் பற்றி லெனின்’, ‘தேசிய இனப் பிரச்சினைபற்றி லெனின்’ போன்ற நூல்களையும், தோழர் என். கே. கிருஷ்ணன் எழுதிய ‘TESTAMENT OF FAITH’ என்ற ஆங்கில நூலையும் ‘நம்பிக்கை ஒளி’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ள கீதானந்தன் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, ‘சமதர்ம சிந்தனை’, ‘எதிர்காலம்’, ‘அரசியல் இலக்கியச் சிந்தனைகள்’ ஆகிய நூல்களையும், ‘மார்க்சிய சிந்தனை’ என்ற நூலையும் படைத்துள்ளார்.

தோழர் நல்லகண்ணுவுடன் இணைந்து சென்னையில் தமிழ்ஒளியின் 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தார் கீதானந்தன்.

மார்க்சிய சிந்தனைகள் இளம் தலைமுறையினரிடம் முழுமையாகச் சென்றடைய வேண்டும்.  அதில் அவர்களை உருக்கொள்ளச் செய்யவேண்டும்.  அதிலிருந்து சோசலிச திசைவழி நோக்கி இந்நாடு செல்லவேண்டும்.  கருத்து ரீதியான ஆளுமை ஏற்படாமல் - அந்த அடிப்படை அமையாமல், வலுவான இயக்கமில்லாமல் அது சாத்தியமா? அந்தத் திசையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.  இதையே கீதானந்தன் தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

Pin It