கிழக்கு மாகாண நிலவரம் சிக்கலான ஒன்று.  ஒருபுறம் தமிழர், முஸ்லிம் இனக்குழுக்களுக் கிடையே இசைவின்மை தொடர, மறுபுறம் முன்னொரு காலத்தில் தாங்கள் அனுபவித்த பழம் “புராண” கால நிலங்களின் மீட்டுருவாக்கம் தான் இந்தச் சிங்கள நிலக் குடியேற்றம் என்று உரிமை கோரும் பெரும்பான்மை சிங்களச் சமூகத்திடம் நிலத்தை இழந்துவிடும் அச்சமும் உருவானது.  இவை எல்லாவற்றுக்கும் இடையில், உள்ளூரைச் சாராத ஒரு தலைமையின் மூலம் தோற்றுவிக்கப் படும் அரசியல் கற்பிதத்தின் தொனியே இது என்பது தெளிவாகிறது.  ஆகவே, இந்த நோக்கு நிலைகள் ஒவ்வொன்றும் மிகவும் ஆழமாகக் கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை யாகும்.

முஸ்லிம்கள் - தமிழர்களின் உறவு

முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தைத் தவிர மற்ற பகுதிகளில் எல்லாம் ஆங்காங்கே பரவலாக உதிரியான எண்ணிக்கையில் வசித்து வந்ததால், அவர்களால் இலங்கையின் அரசியல் நிலையில் வலிவுமிக்க ஆற்றலாக விளங்க இயலவில்லை.   ஏறத்தாழ இந்தக் காரணத்தால்தான் அவர்கள் தங்களுக்கென்று ஓர் அரசியல் கட்சியை அமைத்துக் கொள்ளவில்லை.  (SLFP ஆட்சியில் இருந்த போது அதனை ஆதரிக்கும் நோக்கில்) இஸ்லாமிய சோஷலிச முன்னணி (Islamic Socialist Front), பின்னர் (கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதற்காக) இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (Srilanka Muslim Congress) என அரசியல் மீது ஆற்றல் செலுத்தும் உட்குழுக்களை (political pressure groups) உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; எனினும், சுயேச்சையான அரசியல் இயக்கங்கள் என்கிற அளவுக்கு அவர் களால் முன்னேறிச் செல்ல இயலவில்லை.  இவ்வாறு, முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகளில் விழிப் புணர்வு ஏற்படுவதற்கான ஓர் அவசியம் உள்ளது.

இந்த விழிப்புணர்வுக்கான தேவை என்பது முக்கியமாக முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழி யாகப் பயன்படுத்துகின்றனர் என்பதுடன் கொத்வா உரைகள் (Kotwa Sermons) போன்ற அவர்களுடைய சமயச் சடங்குகளிலும் தமிழைப் பயன்படுத்துவதால் தான்.  சிங்களவர்களும் தமிழர்களும் தனித்த மொழி பண்பாடுகளை நிறுவிவருகிற இலங் கையில் மொழிவழித் தேசியம் உருவெடுக்கிற இந்தக் காலத்தில் முஸ்லிம்களின் அடையாளம் அவர்களுடைய சமயமான இஸ்லாம் மூலம் வெளிப்படுத்தப்படவும், பேணப்படவும் வேண்டி யுள்ளது.  அவர்கள் சுற்றியுள்ள உள்ளூர் / வட்டார உற்பத்தி உறவுகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள இயலாது என்பதால், அவர்கள் சமய - இன அடையாளத்தை வளமாகப் பேணிக் கொள்ள வேண்டியுள்ளது.

பூர்விகமாகத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் என்று கூறப்படும் பகுதிகளில் வசித்த முஸ்லிம்களின் மக்கள்தொகையைக் கீழ்க்காணும் அட்டவணை மூலம் அறியலாம்.

மாவட்டம்               முஸ்லிம்கள்                        தமிழர்கள்                      சிங்களர்கள்

யாழ்ப்பாணம்                 1.7%                                        97.7%                                    0.5%

(கிளிநொச்சி உட்பட)

மன்னார்                          26.6%                                      63.8%                                     8.1%

வவுனியா                          6.9%                                     76.3%                                   16.5%

முல்லைத் தீவு            4.8%                                       89.9%                                      5.1%

பாட்டிகாலோ              24.0%                                      72.0%                                     3.2%

அம்பாறை                     41.5%                                     21.5%                                    37.7%

திருகோணமலை      29.0%                                    36.4%                                      33.6%

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்கள்தொகை 17%; வட்டார மக்கள்தொகை என்று பார்த்தால் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அவர்களுடைய மக்கள் தொகை 32.5% ஆகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ன வகை சிறப்பு அரசியலமைப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டாலும், இப்படித் தெளிவாக வரையறுக்கப் பட்ட கணிசமான சிறுபான்மைக் குழுவினரின் அரசியல் நிலைப்பாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததே. 

இது ஒருபுறமிருக்க, தமிழர்களும் முஸ்லிம் களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இரு இனத்தவருக்குமிடையே மறுக்க முடியாத ஒரு பண்பாட்டு ஒருமைப்பாடும் இருக்கத்தான் செய்கிறது.  மொழிவழித் தேசியத்தின் உள்ளார்ந்த சிக்கல்கள் முஸ்லிம்கள் தமிழைத் தங்கள் தாய் மொழியாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை / சிறப்பைப் போதுமான அளவுக்கு வலியுறுத்த அனுமதித்திருக்கவில்லை.  சிங்கள, இலங்கைத் தமிழ்த் தேசியங்களின் பரிணாமத்தில் பங்கு பற்றும் சிங்கள - புத்தர்கள், இந்து - தமிழர்கள் வேறுபாடுகள் நிலவும் சூழ்நிலையில் இது பாராட்டுக்குரிய ஒன்று.  எனினும், சிங்கள ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூட முஸ்லிம்கள் தமிழ்வழிக் கல்வியின் தேவையை அழுத்தமாக வலியுறுத்தி யிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழர்களுக்காக அவர்கள் கொண்ட கடப்பாட்டை, நவீன இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் அளித்த கணிசமான பங்களிப்பின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

தமிழ்ப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பு அந்தப் பகுதித் தமிழர்களின் சமுதாய அமைப்புடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளது.  குறிப்பாக, கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் இதைக் காண முடிகிறது.  தமிழர் களிடையே காணப்படும் தாய்வழிச் சமூகத்துக்குரிய புறமணக் குடி அமைப்பு இந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பு முறையிலும் இடம்பெற்றுள்ளது.  சமுதாய அமைப்புமுறைப்படி பார்த்தால், வடக்கிலும் கிழக்கிலும் வசித்த முஸ்லிம்கள் திராவிடப் பண்பு ஒற்றுமையின் சாயலைக் கொண்டவர்களே என்று சமுதாய இனவரைவியல் மூலம் தெரிய வருகிறது.

சமுதாய அமைப்புமுறை என்று பார்க்கையில், முஸ்லிம்கள் தங்களுடைய தனித்த அடையாளத்தைப் பேணிக்கொள்ள இயலவில்லை என்று சொல்ல வரவில்லை.  அவர்களிடம் அதற்கான கூறுகள் இருந்தன.  ஆனால் கூர்ந்து நோக்கினால் பகைமை கொள்கிற அளவுக்குக் கொள்கை வேறுபாடு இல்லை என்பது புலப்படும்.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்த அளவில், முஸ்லிம்கள் அதன் நிலவுடைமை அமைப்பு முறையின் (feudal system) மிக முக்கியமான ஒரு பங்கை உருவாக்கினர் என்பது கவனிக்கத்தக்கது.  முஸ்லிம்களில் பொடியார்களும், வயற்காரர்களும் (பொடியார்கள் என்றால் நிலவுடைமையாளர்கள்; வயற்காரர்கள், பொடியார்களின் வேளாண் மையையும் அறுவடையையும் மேற்பார்வையும் கண்காணிப்பாளர்கள்), பண்ணையாட்களும் உண்டு.  பாட்டிகாலோ முஸ்லிம்களின் இந்தச் சமுதாய அமைப்புமுறை, இலங்கையின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களின் அமைப்புமுறையைவிட வெகுவாக வேறுபட்டது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஒரு கருத்துநிலையை வளர்த்திருக்க வேண்டும் என்று கருதத்தக்க அளவிலான இந்தச் சமுதாய ரீதியான பிணைப்புக் கூறுகள் ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் - தமிழர்கள் அவநம்பிக்கை என்னும் சூழல் - குறிப்பாக, அரசியல் விவகாரங்களில் இருந்து வருகிறது.  இந்த அரசியல் அவநம்பிக்கை வட்டார அளவிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்று அனுமானிப்பது தவறாகவே இருக்கும்; அது, தேச அளவில் உணரப்பட்டு, வளர்க்கப்பட்டிருக்கிறது.  அது கொழும்பில் தோன்றிய “தேசிய” அரசியலின் விளைவாகவும் மற்றும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தமிழர்களின் ஆதிக்கத்தின் மீது முஸ்லிம் கொண்ட அதிருப்தியின் வெளிப் பாடாகவும் வளர்ந்தெழுந்தது.  ஆங்கில ஆட்சியின் தொடக்கக் காலத்தைக் காட்டிலும் ஆங்கில ஆட்சி முடிவுறுகிற வேளையில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் இருந்தாலும்கூட, அவர்களுடைய குற்றச் சாட்டுகளெல்லாம் பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.

பொன்னம்பலம் ராமநாதன் முதலில் 1885-இல் இலங்கைச் சட்ட மேலவையிலும், பின்னர் ராயல் ஏஷியாடிக் சொஸைட்டி (இலங்கைக் கிளை)யில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் ‘சோனகர்’ (இலங்கை வாழ் மூர்கள் தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டபடியும், இலங்கை வாழ் தமிழர்களால் குறிப்பிட்டபடியும்) தேசியத்தால் தமிழர்கள் என்றும் சமயத்தால் முஸ்லிம்கள் என்றும் பறைசாற்றியதால் தமிழர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த அரசியல் அவநம்பிக்கை தன்னைத் தானே வெளிப்படுத்தத் துவங்கியிருந்தது. 

ராமநாதனின் நோக்குநிலைகளை “முஸ்லிம் நேசன்” இதழின் புகழ்பெற்ற ஆசிரியரான எம்.சி.சித்தி லெப்பே, முன்னணி முஸ்லிம் செயல்வீரரும் மூர்ஸ் யூனியன் (1900) நிறுவனத் தலைவருமான ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் இருவரும் மறுதலித்தனர்.  அஸீஸ் தாம் எழுதிய “திரு.ராமநாதனின் ‘இலங்கை மூர்களின் இனவரைவியல்’ பற்றிய திறனாய்வில் பின்வருமாறு வெளிப்படையாகவே துணிந் துரைத்தார் : ‘ராமநாதனின் ஆய்வுக் கண்டுபிடிப்பு களுக்குப் பின்னால் ஓர் அரசியல் உள்நோக்கு இருந்தது; சட்ட மேலவையில் தனிப்பிரதி நிதித்துவம் கொண்ட முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்தக் கருத்து உருவாக்கப் பட்டுள்ளது.

“மேலும், அரசாங்கம் மூர்களில் ஒருவரைச் சட்ட மேலவை உறுப்பினராக உத்தேசித்திருப்பதாகத் தகவலைக் கசியவிட்டு, மூர்கள் தனித்த ஒரு கால் வழியிலிருந்து வந்தவர்கள் அல்லர் என்பதால், அப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லி, மூர்களில் ஒருவரை உறுப்பினராக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவிடாமல் தடுப்பதே அவர் மூர்களைத் தமிழ்க் கால்வழியினர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் என்று கருதப்பட்டது; இன்னும் சொல்லப் போனால் அப்படியே நம்பப் பட்டது.”

“திரு.ராமநாதன் இலங்கைத் தீவில் வசித்த அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் சட்ட மேலவையில் பிரதிநிதியாக இருந்தார்” என அஸீஸ் மேற்படி வாசகத்துக்கு அடிக்குறிப்பில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  எனினும், அடுத்து வந்த அரசியல் வரலாறு தெரிவிப்பதன்படி பார்த்தால், 1889-இல் சட்ட மேலவையில் முஸ்லிம்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து, முஸ்லிம்கள் - தமிழர்களின் நல்லுறவில் ஏற்பட்ட கசப்புணர்வில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை 1915-இல் நடைபெற்ற கலவரங் களே.  இந்தக் கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக - குறிப்பாக, “கடற்கரைப் பகுதிகளில் வசித்த முஸ்லிம்களுக்கு” (தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள்) எதிராக நடைபெற்றன என்பதும் அவை விரைவில் சிங்கள - புத்தத் தலைவர்களின் கைதுக்கு வழிவகுத்தன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.  ராமநாதன் சிங்களத் தலைவர் களுக்குப் பாதுகாப்பாகக் கிளர்ந்தெழுந்து, கலவரத்தைப் பற்றியும் அதனை அடக்குவதற்குக் கையாளப்பட்ட முறைகளைப் பற்றியும் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  சிங்கள அரசியல் தலைவர்களும் அவர் களுக்கு ஆதரவாக இருந்த தமிழர்களும் இதற்கான கிளர்ச்சியைப் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தக்க வைத்தனர்.  அதன் விளைவாக, முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கான ஆதரவில் உறுதியாக நின்றனர்.

ராமநாதனின் நிலைப்பாட்டினால், அவர் மீது முஸ்லிம்கள் வெறுப்புற்றிருந்தனர்.  முஸ்லிம் களுக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் தமிழர்கள் அவர்களைக் கைவிட்டுவிட்டனர் என்ற கசப்புணர்வு அவர்களின் (முஸ்லிம்களின்) மனங்களில் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருந்தது.  அந்த நிகழ்விலிருந்து, அவர்கள் ஆங்கிலேய அரசோ  சிங்கள அரசோ எதுவாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதாகத் தீர்மானித்தனர்.  1970-77-இல் பதவி வகித்த ஒரு மூத்த முஸ்லிம் அமைச்சர் தமிழ்க் கல்வி யாளர்கள், முஸ்லிம் கல்வியாளர்களிடையேயான ஒரு கூட்டத்தில் பேசுகையில், பின்வருமாறு குறிப் பிட்டார் : “முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிற வரை, 1915-இல் அவர்களை ராமநாதன் தூக்கியெறிந்ததைப் போன்ற சூழலில் மீண்டும் சிக்கிக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள் : “அப்போது தமிழர்கள் எங்கள் மீது அக்கறை காட்டவில்லை; எனவே, எங்கள் மீது நாங்களே அக்கறை கொள்ள வேண்டி யுள்ளது.”

எனினும், இலங்கை தேசிய காங்கிரஸின் தொடக்கக் காலத்தில், அதாவது, 1921/22-இல் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.  “சிங்களப் பெரும்பான்மைக்கு எதிராகத் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் முஸ்லிம்கள் ராமநாதனுடன் இணைந்து முனைப்பாகச் செயல்பட்டனர்.  ராமநாதனின் தலைமை ஏற்பும், தேசியப் பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினத்தவரிடம் ஓர் இளைய பங்களிப் பாளர் என்ற நிலையும் 1930-இல் ராமநாதன் இறக்கும் வரையிலும், அதற்கு அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் நீடித்தன.  முஸ்லிம் தலைமையின் ஒரு பிரிவின் தமிழர் எதிர்ப்புணர்வு ஏ.ஆர்.ஏ.ரஸீக்கின் எழுச்சியுடன் கவனத்துக்குரிய சமுதாய - அரசியல் காரணியாக உருவெடுக்கத் தொடங்கியது.  சட்ட  மேலவையின் கல்விக் குழு உறுப்பினர் என்ற முறையில், அவர் முஸ்லிம் பள்ளிகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்; முஸ்லிம் பள்ளிகளில் தமிழர்கள் தலைமையாசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும் அதிகாரத்தில் இருந்தமையை எதிர்த்தார்.  சிங்கள மொழி ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்று 1945 முதல் போராடினார்.

முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று ஏற்கெனவே பார்த்தோம்.  முதலில் டி.பி.ஜெயா (T.B.Jayah), பின்னர் டாக்டர் எம்.சி.எம்.கலீல் (Dr.M.C.M. Kaleel) ஆகியோர் தலைமையில் இயங்கிய அகில இலங்கை முஸ்லிம் லீக்கும் (All Ceylon Muslim League) ஏ.ஆர்.ஏ.ரசிக் (A.R.A.Razik), பின்னர் சர் ரசிக் ஃபரீத் (Sir Razik Fareed) தலைமையில் செயல்பட்ட அகில இலங்கை மூர்கள் சங்கமும் (All Ceylone Moors Association) தங்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் (United National Party) இணைத்தே அடையாளப் படுத்திக் கொண்டன.  ஆனால், பின்னர் சர் ரசிக் இலங்கை விடுதலைக் கட்சியுடன் (Sirlanka Freedom Party) இணைந்து தன்னை அரசியலில் அடையாளப் படுத்திக்கொண்டு எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டார நாயக இறந்தவுடன் வலிந்து ஆட்சியைப் பிடித்து மிகக் குறுகிய காலம் அதிகாரத்தில் இருந்த டபிள்யூ தகநாயக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

1956-ஆம் ஆண்டு, எஸ்.டபிள்யூ, ஆர்.டி.பண்டார நாயக தலைமையிலான மகாஜன ஏக்சத் பேரமுனா அரசாங்கம் (Mahajana Eksath Peramuna Government) சிங்கள மொழி மட்டுமே தேசிய ஆட்சிமொழி என்று சட்ட முன்வரைவைக் கொண்டு வந்த போது முஸ்லிம்கள் - தமிழர்கள் நல்லுறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.  அப்போது தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியாக இருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (சமஷ்டிக் கட்சி) நோக்கு நிலையில் இது ஒருமைப்பட்ட முழுமையான ஓர் இலங்கையை முடிவுக்குக் கொண்டு வரும் செயல் பாட்டின் தொடக்கம் ஆகும். 

சமஷ்டிக் கட்சி, “சிங்களர்களிடமிருந்து தனித்த ஒரு தேசமாக நிறுவப்பட்டு ஒன்றுபட்ட இலங்கைக் கூட்டாட்சியின் சட்ட வரைவுக்குள் தன்னாட்சி கொண்ட தமிழ் மொழிவழி அரசினை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.  இந்த முன்மொழிவை சிங்களர்கள் எதிர்த்தனர் என்பது நன்றாகத் தெரிந்த ஒன்றே.  “தமிழ் பேசும் இலங்கைக் குடிமக்கள்” என்ற இந்தக் கருத்தாக்கத்துக்குள் முஸ்லிம்களும் உள்ளடங்கலாகக் கொள்ளப்பட்டனர்.  முஸ்லிம்கள் - குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வசித்தவர்கள் இந்தக் கருத்து மொழிவை மறுதலிக்கத் தொடங்கினர்.  சமஷ்டிக் கட்சியின் கோரிக்கை தேசப் பிரிவினைக்கு ஒப்பானது என்ற கருத்தை அவர்களும் பின்பற்றினர்.

அரசியலமைப்புக் கோரிக்கைகளாக அன்றைய காலகட்டத்தில் அனலைக் கிளப்பிய அரசியல் பிரச்சினையாக உருவான அரசியலமைப்புத் திட்டமாக அது புலப்படவில்லை; அதைக் காட்டிலும் இனக்குழு அடையாளமாகத் தோன்றிய மொழிசார் உணர்வாகவே உருவெடுத்தது.  சிங்கள மொழிக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்மொழிக்கு அது மறுக்கப்பட்டதும் இலங் கையில் தமிழர்கள் மீது சிங்களர்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் அடையாளமாகவே தமிழர்களால் கருதப்பட்டது.  மொழிப் பண்பாடு சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இனக் குறியானது.  அப்போதி லிருந்து, அவர்கள் சிங்களர்கள், தமிழர்கள் என்ற நிலையில் முரண்படத் தொடங்கினர்.

வெளிப்படையாகத் தெரிகிற அளவில், முஸ்லிம்கள் ‘மொழிப் பிரச்சினைக்குள் தங்களைச் சிக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை.  முஸ்லிம் மக்கள் இலங்கைத் தீவு முழுவதும் பரவியிருக்கவே விரும்பினர்.  அதனால், தமிழர்கள் கேட்க முடிந்ததைப் போல, தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதி வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பவோ, அல்லது அப்படியொரு கோரிக்கையை ஆதரிக்கவோ முஸ்லிம்களால் இயலவில்லை.  மொழியுணர்வு சிக்கல் நிறைந்த ஓர் அரசியல் சூழலில், ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, தாய்மொழி அடிப்படையில் மோதல் உருவானபோது, முஸ்லிம்கள் தமிழ்மொழியிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ளத் தொடங்கினர்.  மலேய முஸ்லிம்களைத் தவிர, இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் தமிழ்மொழி தாய்மொழியாக இருந்தும்கூட, முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.  தாய்மொழி, மொழிக்கான ஊடகமாகவும், கல்வி கற்பிக்கும் ஊடகமாகவும் வேலைவாய்ப்பு நியமனத்தில் நிர்ணயக் காரணியாகவும் ஆன நிலையில் சிங்களர்கள், தமிழர்களுக்கிடையேயான பிரிவுநிலை நிறைவுற்றது. 

முஸ்லிம்கள் ஒரு குழப்பத்தில் தள்ளப் பட்டனர்; அவர்கள் தமிழ் பேசினார்கள்; ஆனால் தமிழர்கள் அல்லர்; அவர்கள் சிங்கள மொழியைக் கற்க விரும்பினார்கள், ஆனால் சிங்களர்களாக விரும்பவில்லை.  ஆனால் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்த மொழிப் பிரச்சினை, சில முஸ்லிம் கல்வியாளர்கள் தமிழைத் தாய்மொழியாக அல்லாமல், வீட்டு மொழி என்று பேசச் செய்தது.  அப்போதைய முன்னணிக் கல்வியாளரான ஏ.எம்.ஏ. அஸீஸ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தமிழ்ப் புலமைக்காகப் பாராட்டப் பெற்றவர்.  இந்த அடிப்படையில் எழுதத் தொடங்கினார்.  முஸ்லிம்களின் கலைக் களஞ்சியத்துக்கு இலங்கை முஸ்லிம்களைப் பற்றி எழுதிய கட்டுரையில் அவர் தமிழை “முஸ்லிம்களின் வீட்டு மொழி” என்று குறிப்பிட்டார்.  முஸ்லிம்கள் தமிழ், அராபி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளைக் கற்க வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழில் : சா.ஜெயராஜ்

தொடரும்

Pin It