படித்துப் பாருங்களேன்...

தமிழர்களின் சமய வரலாறு என்பது இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட காலத்தி லிருந்தே தொடங்குகிறது.  இவ்வளவு பழமை யானதாக இருந்தாலும், தமிழரின் சமயம் குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் தற்சார்புடன்தான் அமைந்துள்ளன.  சங்க இலக்கிய நூல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள செய்யுட்களும் ஒரே காலத்தன அல்ல என்ற எளிமையான உண்மையை உணராமல் ‘தமிழர் சமயம்’ என்ற பொத்தாம் பொதுவான சித்திரத்தை வழங்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர்.

சங்க இலக்கியத்தில் சிவனைக் குறித்து இடம் பெறும் ஒன்றிரண்டு செய்யுட்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழர் சமயம் என்பது சைவமே என்று வலியுறுத்தும் போக்கும், தமிழர்களின் முழுமுதற் கடவுளாக சிவனைச் சித்திரிக்கும் போக்கும் பல மூத்த தமிழறிஞர்களிடம் காணப்பட்டது.

சங்க இலக்கியம் சித்திரிக்கும் காலம், ‘மாறுதல் நிகழும்’ காலமாகும்.  இதனால் ‘தொல் சமயம்’, ‘வைதிக சமயம்’, ‘அவைதிக சமயம்’ எனத் தம்முள் மாறுபட்ட சமய நெறிகள் வழக்கிலிருந்தமைக்கான சான்றுகளைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம்.

எனவே, தமிழர்களின் கடவுளாக ‘ஏக இறைவன்’ ஒருவனை அடையாளம் காட்டுவது வலிந்து மேற் கொள்ளப்படும் முயற்சியாகவே அமையும்.  இத்தகைய தற்சார்பு நிலையிலிருந்து விடுபட்டுத் தமிழர்தம் சமயநெறியை ஆராயப்புகின், தொல் சமயம் (Primitive Religion) என்று மானிடவியலாளர் குறிப்பிடும் சமயத்தின் தொடக்கநிலை குறித்த செய்திகள் குறிப்பிடத்தக்க அளவில் சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளதைக் காண முடியும்.

மானிடவியல் அறிவுத் துறையின் துணையுடன் இச்செய்திகளைப் பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தலாம்:

1.    ஆவியம் அனிமிசம்

2.    உயிர்ப்பாற்றல் வழிபாடு (அனிமேட்டிசம்)

3.    இயற்கைப் பொருள் வழிபாடு

4.    குலக்குறி வழிபாடு

5.    இறந்தோர் மற்றும் மூதாதையரை வழிபடல்

6.    பேய் குறித்த நம்பிக்கை

7.    மந்திரம்

8.    உயிர்ப்பலி

9.    மறுஉலகம்

10.   இறப்புச் சடங்கு

11.   இறப்புக் கடவுள்

12.   வெறியாட்டு

13.   வேலன் என்னும் பூசாரி (ஷாமன்)

இவையெல்லாம் சமயத்தின் முந்தைய வடிவங்கள்.  இவற்றுள் பல இன்றும்கூட நிறுவன சமய வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன.  இவை அனைத்தையும் ஆராயும் ஒரு முழுமையான நூல் இதுவரை தமிழில் வெளியாகவில்லை.  என்றாலும் தமிழரின் தொல் சமய நெறியை வெளிப்படுத்தும் செய்திகள் தமிழறிஞர்கள் சிலரின் கட்டுரைகளில் அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ளன.  கோ.சுப்பிரமணியபிள்ளை, க.ப.அறவாணன் ஆகியோர் பண்டைத் தமிழரின் மரவழிபாடு குறித்துத் தனிநூல்கள் எழுதியுள்ளனர்.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தம் ஆய்வேடுகளில் தமிழரின் தொல்சமயம் குறித்த செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர்.  ‘பேய்மகளிர்’, ‘நடுகல் வழிபாடு’ என்ற இரு கட்டுரைகளையும் கைலாசபதி எழுதியுள்ளார்.  இவர்களைத் தவிர நா.வானமாமலை, பி.எல்.சாமி, கா.சுப்பிரமணியன், சிலம்பு.நா.செல்வராசு, ஆ.தனஞ் செயன் ஆகியோரும் தமிழரின் தொல்சமயத்தின் சில கூறுகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

சிங்காரவேலுவின் ளுடிஉயைட டகைந டிக வாந கூயஅடைள என்ற நூலில் ‘ஆவியம்’, ‘குலக்குறியம்’ என்ற தலைப்பு களிலான இரு இயல்களில், பண்டைத் தமிழரின் தொல் சமயம் குறித்த விரிவான ஆய்வு இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாகப் ‘பண்பாட்டியல் நோக்கில் பண்டைத் தமிழர் சுயமரபுகள்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது.

* * *

நூலின் முன்னுரை ஓர் ஆய்வுக் கட்டுரை யாகவே அமைந்துள்ளது.  அத்துடன் நூலின் உள்ளடக்கத்தின் அறிமுகம் போன்றும் உள்ளது.  பண்டைத் தமிழர்களது தொல் சமயத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இம்முன்னுரையில் இடம்பெற்றுள்ள செய்திகளின் சாரம் வருமாறு:

*     சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது என்ற கருத்து இருந்தாலும் பண்டைத் தமிழரின் சமயம் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.  ஆவி வழிபாடு (அனிமிசம்) உயிர்ப் பாற்றல் வழிபாடு (அனிமேட்டிசம்) என்ற கருத்தமைவின் அடிப்படையில் வழிபாட்டு மரபுகள் தொல்தமிழரிடம் உருவாயின.

*     இயற்கையும் வழிபாட்டிற்குரியதானது.  கருப்பு என்னும் பொருளுடைய கார் என்பதி லிருந்து திரிந்த ‘கால்’ என்ற சொல் அச்சத்தின் குறியீடானது.  இதிலிருந்தே காலன், காலி என்ற சொற்கள் உருவாயின.  காலி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே காளி என்ற வடமொழிச் சொல் உருவாகியது.  இதுவே பின்னாளில் காளியம்மன் என்ற பெண் தெய்வமாகியது.

*     மூதாதையர் வழிபாடும், வீரர் வழிபாடும் இயற்கை வழிபாட்டை அடுத்து உருவாயின.  இதன் வளர்ச்சிப் போக்கில், மனிதப் பண்பேற்றமும், மனித உருவேற்றமும் பால் சார்பும் நிகழ்ந்தன.

*     ஓர் இடத்தில் நிலையாகத் தங்காத அணங்கு சூர் போன்ற இயற்கையிகந்த ஆற்றல்களுக்கு மாறாக ஒரே இடத்தில் கடவுளை நிலைக்கச் செய்யும் போக்கும் உருவானது.

*     ‘அச்சம் தரும் தெய்வங்கள்’, ‘அன்பு காட்டும் கடவுள்கள்’ என்ற கருத்தாக்கங்கள் உருவாயின.

*     எதிர்மறைச் சடங்குகளாக உயிர்ப்பலியும் ஆக்கமுறைச் சடங்காகப் பூச்சொரிந்து வழிபடலும் உருவாயின.

*     அச்சம் தரும் அணங்கு படிப்படியாகப் பெண் தெய்வமாக மாற்றம் பெற்றது.

*     தொடக்கத்தில் பெண் பூசாரிகளும் பின்னர் ஆண் பூசாரிகளும் உருவாயினர்.

*     தெய்வத்தை வரவழைக்கும் சடங்குகளும் பின்னர் விதிமுறை சார்ந்த சடங்குகளும் உருவாயின.

*     இவையெல்லாம் சுருக்கமான செய்திகள்.  இவற்றின் விரிவாக்கம் போன்று இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் உள்ளன.  இக்கட்டுரைகளில் ஒன்றிரண்டு நீங்கலாக ஏனைய கட்டுரைகள் அனைத்தும் தலைப்புக்கேற்ற வகையில் தொல் சமயம் குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் முன்வைக்கின்றன.  இவையனைத்தையும் ஒருசேர நோக்கும்போது, தமிழரின் தொல்பழஞ்சமயம் குறித்த சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.  இது இத்தொகுப்பு நூலின் சிறப்பாகும்.  காளிதாசனின் ‘குமாரசம்பவம்’ என்ற நூலில் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்ளதை எடுத்துரைக்கும் பேராசிரியர் மருதநாயகத்தின் கட்டுரை ஆங்கிலத்திலும் வெளி யாவது அவசியமான ஒன்று.

*     தோற்றம் - வளர்ச்சி - மாற்றம் என்ற மூன்று பழநிலைகள் சமயத்திற்கும் உண்டு என்ற உண்மையை இந்நூலைப் படிப்பவர்கள் உணர்வர், தமிழரின் தொல்சமயம் குறித்த நூல் ஒன்று இல்லாத குறையை இத்தொகுப்பு நூல் போக்கியுள்ளது.

Pin It