பொதுவாக, எதிர்ப்பு (Protest) என்பது இசை வின்மை, உடன்படாமை, மறுத்தல், மறுதலித்தல் என்று பொருள்படும்.  பல நூற்றாண்டுகளாக, எதிர்க்கும் மக்களுக்கு / குழுக்களுக்குக் கிடைத்த முக்கியமான சாதனங்களுள் ஒன்று  இலக்கியமே! அவ்வகையில் புகழ்பெற்ற எதிர்ப் பிலக்கியங் களுள் குறிப்பிடத்தக்கவை : கறுப்பின இலக்கியம், அமெரிக்கச் செவ்விந்தியர்களைப் பற்றிய பழங்குடி இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண்ணிய இலக்கியங்கள் போன்றவை.  பாப்ஸி சித்வா எழுதிய தண்ணீர் (Water) என்னும் நாவல் வட இந்தியாவின் சில பகுதிகளில் ஆணாதிக்கத்தை எதிர்த்த உயர் சமூகக் கைம்பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஒரு புதிய சமுதாய ஒழுங்கை நடைமுறையில் எதிர்நோக்குகிறது என்பதால், அது எதிர்ப்பிலக்கியம் என்ற தகுதி பெறுகிறது.

இந்திய சமுதாய - பண்பாட்டுச் சூழமைவுகளில் பெண்ணின் பணி என்பது அவளது எதிர்பாலுக்கு அடிபணிந்து இருப்பதே என்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது.  ‘தண்ணீர்’ நாவலில் பாப்ஸி சித்வா விவரித்திருக்கும் உயர் சமூகக் கைம்பெண்கள் படும் துயரத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமானால், அதற்கு வேதகாலத்தில் ஆரியர்களின் நுழைவு, இந்துமதத் தோற்றம் தொடங்கி விடுதலைக்கு முந்திய, விடுதலைக்குப் பிந்தைய சகாப்தங்கள் வரை பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதை அறியவேண்டியது அவசியம். 

ஒரு பெண்ணின் நோக்கு நிலையிலிருந்து விளிம்புநிலைப்பட்ட கைம்பெண்ணின் எண்ணங் களையும், அனுபவங் களையும் எடுத்தியம்பும் தீபா மேத்தாவின் முயற்சி என்ற அளவில் ‘தண்ணீர்’ எதிர்கொள்ளும் எதிர்ப்பு இந்து ஆணாதிக்கச் சமூகச் சூழலிலிருந்து தோற்றமுறுகிறது.  பொதுவாக, பெண்களின் மீதும், குறிப்பாக கைம்பெண்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைப் பழக்கவழக்கங்களை முழு அளவில் வெளிப்படுத்தவேண்டுமெனில் கருத்து நிலைகளின் வரம்புகளை உயர்த்தல் வேண்டும் (உமா சக்கரவர்த்தி).

பழங்காலப் பார்ப்பனியப் பனுவல்களில் இடம் பெற்றிருக்கும் மிக மலிவான கருத்துநிலைகள் முதன்மை பெற்றதையும், அவை ஒரு நிலையில் பார்ப்பனியக் கருத்துநிலைகளைப் பரப்பும் முயற்சியைப் புதுப்பிக்கும் வலிமை கொண்ட பதினெட்டாம் நூற்றாண்டைய பனுவல்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது சித்வாவின் நாவல்.  கமலாதேவி சட்டோபாத்யாயா ‘இந்தியப் பெண்களின் விடுதலைக்கான போர்க்களம்’ (Indian Women’s Battle for Freedom) என்னும் செறிவார்ந்த நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

பழங்காலத்தில் வேதகாலத்திலிருந்து (அதாவது, கி.மு.2500 முதல் கி.மு.1500 வரை) பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம் என எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமான நிலையையே அனுபவித்தனர் என்று ஆய்வாளர் களின் புலமைமிகு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  பெண்கள் மதிப்புடன், மரியாதையுடன் நடத்தப் பட்டனர்.  பெண்கள் கல்வி கற்பது என்பது அவர் களுடைய அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு கூறாகவே இருந்தது என்று குறிப்பிடுகிறது உபநயனம்.  வேத பாடல்களைப் பெண்கள் படிக்கத் தொடங்கும்போது, பானம் கொடுக்கப்படும்போது உச்சரிக்கப்பட வேண்டிய பாடல் வரிகள் அதர்வ வேதத்தில் உள்ளன.  பெண் யாக்னோபவித்தினி என்று அழைக்கப்படும் நிகழ்வே தீக்கை செய்யப் படும் தொடக்க சடங்காகும் என்று கிருக சூத்திரங் களுள் ஒன்று குறிப்பிடுகிறது.  (கமலாதேவி சட்டோ பாத்யாயா)

ஆண் அரை மானுட உயிர் என்பதால், அவன் தனியே வழிபாடு செய்ய இயலாது.  உண்மையில், திருமணமாகாத ஒரு மனிதன் குருவாக முடியாத நிலையும் இருந்தது.  இன்றும்கூட “தன்னுடைய பெண் துணை இன்றி ஆண் மட்டும் நிறைவேற்ற இயலாத சில சடங்குகளில் பெண்கள் இன்னும் விலக்கப்படுவதில்லை” (கமலாதேவி சட்டோபாத் யாயா).  திருமணத்தின்போது கட்டாயச் சடங்காக உச்சரிக்கும் பாடல் ஒற்றைமண வாழ்க்கை வழக்கத்தில் இருந்தாலும், மணமகள் பருவம் அடைந்தவளாக இருக்க வேண்டும் என்று குறிப்பாகத் தெரிவிக்கிறது.  கைம்பெண், இறந்த தன் கணவனின் சகோதரனை மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.  ரிக்வேதத்தில் கைம்பெண்ணை நோக்கிக் கூறப்படும் ஒரு வாசகத்தை கமலாதேவி சட்டோபாத்யாயா மேற்கோள் காட்டுகிறார்.

“பெண்ணே, இறந்துபோன உன் கணவனின் நினைவுகளிலிருந்து விலகி எதார்த்த உலகத்தை நோக்கி வா” (கமலாதேவி சட்டோபாத்யாயா)

பண்டித ரமாபாயும்கூட ‘உயர் சமூக இந்துப் பெண்’ (The High Caste Hindu Woman) என்னும் தனது நூலில் இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் பழங்காலத்தில் இந்து மதத்தைப் பின்பற்றிய ஆரியர்கள் கணவன் - மனைவி உறவில் வெவ்வேறு நடைமுறைகளைப் பின் பற்றினர்.  அவை : ஒருவன் ஒருத்தி என்ற ஒற்றை மணமுறை, ஒரு பெண் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளுதல், ஓர் ஆண் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளுதல்.  பராசர முனிவர் சத்யாவதியிடம் உறவுகொள்ளக் கேட்பது, தனது கணவன் பாண்டு வுக்குக் குழந்தை பெறும் தகுதி யின்மையால் குந்தி, சூரியரை உறவுகொள்ள விரும்புவது ஆகியவை பண்டைய இந்தியாவில் பலதார மணமுறை இருந்தமைக்கான உதாரணங்கள்.

மனுவின் விதிமுறைகள் அல்லது வர்ண சாஸ் திரங்கள்தாம் சாதி முறைமையையும் ஆணாதிக்கத் தையும் கொண்டு வந்தன.  ஆரியரல்லாத பெண்கள் ஆரியக் குடும்பங்களில் திருமணம் செய்துகொள்ளும் போது, அவர்கள் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த வர்கள் என்பதாலும், அதனால் உபநயனம், வேத பாடம் மூலம் அவர்கள் தீக்கை பெற இயலாது என்பதாலும் அந்தத் திருமணமே அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது.  கமலா தேவியின் பின்வரும் மேற்கோளைப் பார்ப்போம்:

இந்தத் தீக்கையிலிருந்து பெண்களை ஒதுக்கு வதற்கான வெளிப்படையான காரணம், அவர்களை அடிமை என்றும் அற்பர் என்றும் விலக்கி வைப்பதற்காகத்தான்.  சமயம் சமுதாயப் பயன் பாடுகளைத் தன்னுள் வசப்படுத்தத் தொடங்கியது.  பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் சுருங்கிப் போனது.  இப்போது வழக்கத்தில் வலிந்து திணிக்கப் பட்டுள்ள புதிய சமுதாய முன்வரைவை ஆதரிக்கிற நோக்கில் மூல ஏடுகள் சிதைக்கப்பட்டுப் பழைய பனுவல்கள் வெளிவந்தன.

இவ்வாறு சான்றோர்கள், மதிப்பார்ந்த தலைவர்கள், முனிவர்கள் வெளிப்படுத்தியதாகத் தோற்றம் கொடுத்து மூல சாஸ்திர ஏடுகளிலும் காப்பியங்களிலும் புதிய வாசகங்கள் செருகப் பட்டு, சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இது அவர்களை இழிவுபடுத்துவதற்கும் இனி இவள் தேவையில்லாத பிறவி என்று கூறி இனி கணவன் இறந்ததும் அவனது உடல் சிதையில் மனைவியைத் தள்ளிவிடுகிற அளவுக்குப் பெண்களின் நிலையை / தகுதியைத் தாழ்த்திடவும் உதவியது.  திருமணம் என்பது பெண்களுக்கு ஒரு வாழ்க்கைத் தொழில் என்பதற்கு அப்பால் வேறொன்றும் இல்லை (கமலாதேவி சட்டோபாத்யாயா).

இதன் ஓர் இயல்பான பின் விளைவாகவே குழந்தைத் திருமணம் தொடர்ந்து வந்தது.  முதலில் தந்தையின் ‘நம்பிக்கை’ என்று அடையாளப் படுத்தப்படும் மகள் பின்னர் கணவனின் ‘உடைமை’ என்ற நிலைக்கு உட்படுத்தப்படுகிறாள்.  குழந்தை மணம் என்பது ஒரு சமயக் கடப்பாடு என்ற நிலையை அடைந்தபோது, குழந்தைக் கைம் பெண்கள் உருவாவதும் இன்றியமையாததானது; மாறிய சூழ்நிலைகளின்கீழ் அவர்களின் வாழ்வு துன்பத்துக்குள்ளானது.  ரக்மாபாய் குறிப்பிட்டது போலக் குழந்தை மணம் சிறுமியர்களுக்குக் கட்டாயமானது:

குழந்தை, திருமணத்திற்குப் பொருத்தமான தாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை அதன் குறிப்பிட்ட வயதுக்குள் அதே சமூகத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணைக்குத் திருமணம் செய்துவைப்பது அவர்கள் கடமையாகும் (உமா சக்கரவர்த்தி).

கைம்பெண்களுக்கு இது அல்லது அது என இரண்டே வழிகள் இருந்தன.  ஒன்று சமூகத்திலிருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; அல்லது உடன்கட்டையேற வேண்டும். உமா சக்கரவர்த்தியின் கூற்றுப்படி:

தன் கணவன் உயிரிழந்த பிறகு கைம்பெண், தான் உள்ளாக்கப்படப் போகும் துன்பங்களைப் பற்றி அறிந்திருந்தாள்.  ஒரு கைம்பெண்ணாக வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்போகும் துன்பங்களுடன் ஒப்பிடும்போது, தீயில் விழுந்து ஓரிரு மணித்துளிகள் அனுபவிக்கும் துன்பம் ஒன்றும் பெரிய விடயம் இல்லை.

water_1_370பண்டித ரமாபாய் காலத்தைப்பற்றிய அவரது விமரிசனத்தில் ராஜாராம் மோகன் ராயின் தீவிர முயற்சிகளால் அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவால் 1829-இல் ‘சதி’ சட்ட விரோதமானது என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  அவர்களுக்காகக் கோவில்கள் கட்டப்பட்ட பொழுது, சதியின் புகழ் அதன் உச்சத்தை அடைந்தது.  வட இந்தியாவில், 250 சதிக் கோயில்கள் உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை இராஜஸ்தானில் உள்ளன.  16, ஆகஸ்ட், 2009 நாளிட்ட ‘சண்டே டைம்ஸ் ஆஃப் இண்டியா’ இதழில் “நிகழ்வுகள் அரிதாகியிருக் கலாம்; ஆனால் கருத்துநிலையின் புகழ் மட்டும் வர்த்தகக் காரணங்களுக்காகத் தொடர்ந்து நீடித்து வருகின்றது: சதி ஏன் இன்னும் எரிகிற விவகாரமாக உள்ளது?” என்ற தலைப்பில் திவ்யா எழுதிய ஒரு கட்டுரை, சதிக்கு எதிரான ‘புனிதப் போர்’ இன்னும் ஓயவில்லை என்பதை அறிவிக்கிறது.

குழந்தைக் கைம்பெண்களின் வாழ்க்கை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, ஏனெனில், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வே சிதைக்கப்படுகிறது; குறிப்பாக, அவர்களில் சிலர் மிகச் சிறிய குழந்தை களாக இருந்தனர்.  அவர்கள் எந்த விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ள அனுமதி இல்லை.  நல்ல ஆடைகளையோ அணிகலன் களையோ அணிய முடியாது.  அவர்களின் தலை மழிக்கப்பட்டது.  மேலும், அவர்கள் அமங்கல அடையாளமாகக் கருதப்பட்டனர்.  யாரையாவது எதிரில் பார்க்க நேர்ந்தால்கூட, அதை முன் கூட்டியே தவிர்த்து, ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும்.  அவர்களே தங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளவும், இழிவுக்கு உட்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.  சமய வேடம் பூண்டுள்ள சமுதாயக் கொடுங்கோலர்களின் தீவிரத்தால் சமய வளையங்கள் எனப்படும் இவற்றில் சமுதாயக் கட்டமைப்பு இணைக்கப்படுகிறது.

பழங்காலத்தில், காலங்களின் தேவைகளுக் கேற்ப மக்களால் எடுத்துரைக்கப்பட்ட நடத்தைப் பழக்க விதிகளால் இந்து சமுதாயம் வழிநடத்தப் பட்டது என்பது வெளிப்படையான செய்தி.

குடியேற்றக் கொள்கை குடியேற்றத்துக்குட் பட்ட நாடுகளில் ஆணாதிக்க உறவுகளைத் தீவிரப் படுத்தியது.  அதற்கான காரணங்களுள் ஒன்று சமுதாயத்தின் புறப்பரப்பில் உரிமையிழந்து, ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த அந்த உள் நாட்டுவாசிகள் (ஆண்கள்) தங்கள் வீடுகளில் (பெண்களிடம்) கொடுமையாளர்களானார்கள்.  இந்த நடைமுறையை எடுத்துச் சொல்ல கைம் பெண்களைப் பலியாக்குவதை உதாரணமாகச் சொல்லலாம் (லூம்பா).

குடியேற்றத்துக்கு உட்பட்ட இந்தியர்களின் மத்தியில் தோன்றும் சிக்கல்கள், சச்சரவுகள் தொடர்பான முடிவுகளில் குடியேற்ற நிர்வாகம் குருக்களின் ஆலோசனைகளை மட்டுமே நம்பியது என்ற உண்மையை வலியுறுத்துகிறார் லதாமணி.

கனடாவைச் சேர்ந்த நூல் வெளியீட்டாளர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தீபா மேத்தாவின் திரைக்கதையைக் கொண்டு, பாப்ஸி சித்வா, தண்ணீர் (Water) நாவலை எழுதினார்.  மேத்தாவின் படமான ‘வாட்டர்’ திரையிடப் படுவதற்கு முன்பு, அதைப் பற்றிய சூழமைவை மேற்கத்திய ரசிகர்களுக்கு - குறிப்பாக, வாட்டர் படத்தின் அமெரிக்க ரசிகர்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில்தான் முக்கியமாக அது எழுதப்பட்டது.  மார்த்தா ஆல்டர் சென் எழுதிய இந்தியாவில் உள்ள கைம்பெண்கள் (றுனைடிறள in ஐனேயை), இந்தியச் சமுதாயத்தில் கைம் பெண்களை நடத்தும் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் பற்றிய தெளிவில் சித்வாவுக்கு உதவி புரிந்தது.

நாற்பத்து நான்கு வயது கணவன் இறந்த நிலையில் பெனாரஸ் நகரிலுள்ள கைம்பெண் களுக்கான இல்லத்தில் சேர்த்துவிடப்பட்ட குழந்தை மணமகளான எட்டு வயது சூயியாவின் வாழ்க்கையைப் பற்றிய கதையே வாட்டர் (Water) நாவல்.  சூயியா சோமநாதன் என்னும் பார்ப்பனக் குருக்களுக்கும், பாக்கியலட்சுமிக்கும் மகளாகப் பிறந்தவர்.  தன் மனைவி பாக்கியலட்சுமியின் ஒப்புதலைக் கூடப் பெறாமல், நாற்பத்து நான்கு வயதான ஹீராலால் என்பவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் சோமநாதன்.  குழந்தைப் பருவத்திலிருக்கும் சூயியாவுக்குத் திருமணம் செய்யக் கூடாது என்று பாக்கியா சோமநாதனிடம் காட்டுகிற எதிர்ப்பு தோல்வியில் முடிகிறது.  சோமநாதன் பின்வருமாறு தீர்க்கமாக அறிவிக்கிறார்:

“நீ குருக்களின் மனைவி மட்டுமல்ல; குருக் களின் மகளும்கூட.  நமது பரம்பரைப் பழக்க வழக்கங்களைப் பற்றி உனக்கு நிச்சயம் தெரியும்.  ஒரு பெண் தன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமை என்பது திருமணம் செய்துகொள்வதும் மகன்களைப் பெற்றெடுப்பதும்தான்! இந்தக் காரணத்துக்காகத் தான் அவளது படைப்பே நிகழ்கிறது.  மகன்களைப் பெற்றெடுக்க வேண்டும்; அவ்வளவுதான் (சித்வா).”

சூயியாவுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்யவேண்டிய தேவையைப்பற்றி சோமநாதனின் அதிகாரம் நிறைந்த கூற்று பாக்கியாவும் சூயியாவும் அனுபவிக்கிற ஆணாதிக்க அடக்குமுறையைத் தெளிவாகக் காட்டுகிறது.

அவர் பேசுகையில் மனுஸ்மிருதியைப் பிழையின்றி எதிரொலிக்கிறார்:

“ஒரு பெண் கணவனோடு வசிக்கும்போது மட்டுமே ஒரு மானுடப் பிறவியாக ஒப்புக்கொள்ளப் படுகிறாள்.  ஒரு பெண்ணின் உடல் அவளது உடலிச்சை கொண்ட ‘ஸ்த்ரீ - ஸ்வாவஹவா’வுக்கும், பெண்ணுக்கேயுரிய அவளது கடமையான ‘ஸ்த்ரீ-தர்ம’த்துக்கும் இடையேயான முரண்பாட்டுக்கான ஒரு தளமாகும் (சித்வா).”

ஹீராலால் குடும்பத்துடன் கொள்ளும் உறவானது தனது குடும்பத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பாக்கியா நம்பிக்கை கொள்ளும் போது, சோமநாதனின் அதிகாரத்துக்கு மறுப்பு கூறாமல் பணிந்து போகிறாள்.  திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட அவளது மகளைப் பற்றிய அவ நம்பிக்கை விலகிப் போனது.  சூயியா ஹீராலாலுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.  திருமணத்துக் கான தீக்கைக்கு (தொடக்கச் சடங்குக்கு) சற்றும் பொருத்தமற்ற சூயியாவுக்கு அந்தச் சடங்குகள் புதிர்களாகத் தோன்றுகின்றன.  திருமணச் சடங்கின் போது, “சிவப்புநிறப் பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட ஒரு பூனைக்குட்டியுடன் இணைந்து நிற்பது போலத் தோன்றினார் ஹீராலால்.”  சூயியாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவளை ஒரு சடப்பொருளாகவே வருணிக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு சூயியா பூப்பெய்தாத காரணத்தால் அவளுடைய பெற்றோருடனே தங்கி யிருந்தாள்.  பிறகு, ஹீராலால் நோயில் படுத்ததும், சோமநாதன்,  ஹீராலால், சூயியாவின் மாமியார் ஆகியோர் சூயியாவைக் கட்டாயப்படுத்தி பெனாரசுக்கு அழைத்துச் சென்றனர்.  அவளுடைய கணவனின் உயிர் பிரிந்தது.  அவரது இறுதிச் சடங்குகள் பெனாரஸில் நடத்தப்படவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.  சூயியாவின் கருமத்தை எண்ணிப் புலம்பினாள் பாக்கியா.  ஹீராலாலுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் கொடூரமானவை, அதிர்ச்சி தரக்கூடியவை; பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டவை.  சூயியாவின் மாமியார் சூயியாவுக்குக் கைம்பெண்ணுக்கான சடங்கைச் செய்கிறாள் அவள்.

“அவள் கழுத்திலிருந்து மங்கலநாணைக் கழற்றினாள்.  சிவப்பு நிற வளையல்களை ஒரு கல்லைக் கொண்டு அடித்து நொறுக்கினாள்” (சித்வா).

சித்வா பின்வருமாறு எழுதுகிறார் : “இந்த அம்மையாருக்குத் தான் ஒரு பொருட்டல்ல என்று அதிர்ச்சியுடன் அறிந்துகொண்டாள் சூயியா.”  சடங்கு செய்பவர் ஒருவரிடம் சூயியாவை அழைத்துச் செல்கின்றனர்.  அவர் கைம்பெண் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அடுத்த சடங்கை சூயியாவுக்குச் செய்கிறார்” (சித்வா).  குறுகிய இடைவெளியுடன் அடுத்தடுத்த சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன.  சூயியா முற்றிலும் குழம்பிப் போகிறாள்.  இந்தத் தொடர்நிலைகளைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார் சோமநாதன்.

“பார்ப்பனக் கலாசாரத்தில், ஒரு பெண் ஒரு முறை கைம்பெண்ணாகிவிட்டால் சமுதாயத்தில் அவளுக்குரிய செயல்பாடுகளிலிருந்து - அதாவது, குழந்தை பெற்றுக்கொள்வது, தன் கணவனுக்குப் பணிவிடை செய்வது ஆகிய செயல்பாடுகளிலிருந்து விலக்கப்படுகிறாள்.  அவள் ஒரு மானிடப் பிறவியே அல்லள்; இனி அவள் மகளுமல்லள்; மருமகளு மல்லள்.  அவளுடைய சமூகத்தில் அவளுக்கு இடமில்லை.  அவளை ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது சமுதாயம்.  கணவன் உயிருடன் இருக்கும் போது அவனுக்கு மதிப்பார்ந்தவையாக இருந்த பெண்மை, மகப்பேறு ஆகியன கணவன் இறந்ததும் சமூகத்தின் ஒழுக்கத்துக்கே ஆபத்துகள் என்று மாற்றப்படுகின்றன (சித்வா)” என்பது சோமநாதனும் அறிந்த விடயம்தான்.

சூயியாவின் மாமியார் சிறிதும் இரக்கமின்றி அவளை (சூயியாவை) ஒரு கைம்பெண் இல்லத்துக்கு அனுப்பி வைக்கிறாள்.  சோமநாதன் கையறு நிலையில் நிற்கிறார்.  இந்து மரபில்:
“தன் கையிலிருந்து ஒரு பொருளைக் கொடுத்தவர் மீண்டும் அதில் உரிமை கோர முடியாது.  பாரம்பரிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த மணமகளின் பெற்றோர் தம் மகளை மணமகனுக்கு ஒருமுறை தாரைவார்த்துக் கொடுத்து விட்டால், அத்துடன் அவர்களுக்குத் தங்கள் மகள் மீது எந்த உரிமையும் இல்லை” (சித்வா).

சற்றும் பொருத்தமின்றி சூயியா மிகச் சிறு வயதில் கைம்பெண்ணானது சோமநாதனின் மனதை மிகவும் பாதிக்கிறது.  அவர்களை நேருக்குநேர் அச்சுறுத்திய சூயியாவின் பிரிவு அவர்களுக்கு ஒரு சாபம்! சூயியா கைம்பெண்களுக்கான இல்லத்தில் விடப்பட்டாள்.  அங்கே இருபது வயதிலிருந்து எழுபது வயது வரையிலான இருபது கைம்பெண்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.  இல்லத்திலிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற வேகங்களெல்லாம் தணிந்து போயின.  சூயியாவுக்கு முன்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த மிக இளம் கைம்பெண்ணான கல்யாணியுடன் சூயியா கொண்ட நட்பு, தன் தாய் வடிவத்தில் சூயியாவுக்குப் புலப்பட்ட சகுந்தலாவின் பரிவு ஆகியவை மட்டுமே சூயியாவுக்கு இல்லத்தில் ஆறுதலாக இருந்தன.

எஞ்சியுள்ள தன் வாழ் நாளில் பிராயச்சித்தத்துக்கு வழி தேடுகிறாள் சூயியா.  தனக்கு நேர்ந்த கதியை சூயியா ஒப்புக் கொள்ள மறுக்கிறாள்.  அவள் கைம்பெண்களின் வாழ்க்கையை மாற்றும் ஆயுதமாக மாறுகிறாள்.  அவளுடைய தோழி, கல்யாணி அழகான இளம் கைம்பெண்.  இல்லத்தில் தலைமைப் பொறுப்பி லுள்ள பெண்மணி (அவளும் கைம்பெண்தான்)யால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கல்யாணி காந்தியக் கொள்கையைப் பின்பற்றுபவரும், உயர் சமூகத்தில் பிறந்தவருமான நாராயணனைக் காதலிக்கிறாள்.  நாராயணனின் தந்தையார் சேத் துவாரகநாத்.  இந்தக் காதல் விவகாரம் இந்து மரபையே துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.

இல்லத்தில் உள்ள நுண்ணிய அதிகார இருப்பையே அசைக்கிறது.  நாராயணனைத் திருமணம் செய்யும் நோக்கில் கல்யாணி இல்லத்திலிருந்து தப்பிச் செல்ல சூயியா உணர்வுபூர்வமாக உதவி செய் கிறாள்.  கல்யாணியைப் பாலியல்ரீதியாகப் பயன் படுத்திய செல்வந்தர்களுள் ஒருவரான சேத் துவாரகநாத்தின் மகன்தான் நாராயணன் என்ற தகவலை அறிகிறாள் கல்யாணி.  உடனே, மன முடைந்து, கங்கை நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள்.  இன்னொரு அதிர்ச்சியான செய்தி.  கல்யாணி இறந்த பிறகு சூயியா பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகிறாள்.  இதை அறிந்த சகுந்தலா சூயியாவை இல்லத்திலிருந்து காப்பாற்றி, அவளை நாராயணனுடன் பெனாரஸ் நகரிலிருந்து வெளியேற்றுகிறார்.

த்வா பொதுவாக கைம்பெண்களின் வாழ்க் கையையும், அவர்களது அனுபவங்களையும் பற்றி வாட்டர் நாவலில் பேசியிருந்தாலும், இந்த ஆய்வு சூயியா என்னும் இளம் வயது கைம்பெண்ணின் மீதே கவனத்தைக் குவிக்கிறது.  உயர் சமூகத்தைச் சார்ந்த கைம்பெண்களின் கையறு நிலையைப் பற்றிய சிறு தொகுதியை இந்த ஆய்வு முன்வைக்கிறது.  பொதுவாக கைம்பெண்கள், ஆதரவின்றி, பாதிக்கப் பட்ட நிலையில் அவதியுறுவதை, குறிப்பாக வட இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இளம் வயது கைம்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை, இதைப் போன்ற தகாத நடவடிக்கைகளைக் கண்டிப்பதன் மூலம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களின் வேதனைக் குரல்களை வாட்டர் புதினம் மேலெழுந்து வரச் செய்கிறது. 

சேத் துவாரகாநாத் போன்ற செல்வந்தர்கள் இளம் கைம்பெண்களைத் தவறாகப் பயன்படுத்தி, பரத்தைமையில் தள்ளிவிடுகின்றனர்.

கைம்பெண்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதைக் குறித்து, தாராபாயின் வாதமாக உமா சக்கரவர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:

“கைம்பெண்களின் மீது வலிந்து திணிக்கப் படும் துயரங்களெல்லாம் ஆண்கள் உருவாக்கியுள்ள சமுதாயக் கட்டமைப்புகளைச் சார்ந்தவை; கைம் பெண்கள் வாழ்நாள் முழுவதும் மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் கட்டாயமான நிலைகூட அவர்களுக்கு (ஆண்களுக்கு) சாதகமானதுதான்” (உமா சக்கரவர்த்தி).

‘தண்ணீர்’ புதினத்தின் கதையமைப்பு கற்பனையாக இருந்தாலும், அது உண்மைகளின் பிரதிபலிப்பே.  மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைம்பெண்கள் ‘புனித நகரங்களில் கடவுள் யாரையும் பட்டினி போடமாட்டார்’ என்ற நம்பிக்கையுடன் பிருந்தாவன், மதுரா, வாரணாசி போன்ற நகரங்களில் உள்ள இல்லங் களை நோக்கிச் செல்கின்றனர்.  அங்கே இன்றும் கூட இளம் கைம்பெண்கள் விலங்குகளைப் போல விலைபேசி விற்கப்படுகின்றனர்.  செல்வமும் செல் வாக்கும் கொண்ட பயணிகளுக்குச் செய்யப்படும் சேவை என்ற அளவில் ‘சேவாதாஸி முறை’ ஒரு கடமையுணர்ச்சியுடன் செய்யப்படும் தொண்டாகக் கருதப்படுவது இன்றும் நிலவி வருகிறது.  பஜனாஸ்ரமங்களில் இன்றும் பாலியல் வன் முறைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வடஇந்தியாவில் உள்ள பிருந்தாவன் நகரம் உயர் சமூகத்தைச் சேர்ந்த கைம்பெண்களுக்கான புகழ்பெற்ற ஒரு புகலிடமாக விளங்கிவருகிறது.  பிருந்தாவனைப் பற்றி அனீஸ் ஜங்க் பின்வருமாறு விவரிக்கிறார்: “இடைக்காலத்தில் புனித நகரமான இந்த ஊரில் உள்ள தெருக்களெல்லாம் அன்பு, குடும்பம், வீடு அனைத்தையும் இழந்து அழுக்குப் பிடித்த வெண்ணிற ஆடைகளில் உடலெல்லாம் ஒட்டி உலர்ந்து, தோல் சுருங்கிய பெண்களால் மாசடைந்துள்ளன”.  இந்தக் கைம்பெண்களில் பெரும்பாலோர் பிருந்தாவன், வாரணாசி, மதுரா, ஹரித்துவார், பூரி போன்ற சமயப் புகழ்பெற்ற நகரங்களில்தான் வசித்து வருகின்றனர்.  இவர் களைப் போன்றவர்களின் வருகைகள் இந்த நகரங்களில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நகரங்களெல்லாம் கைம்பெண்களை அதிக எண்ணிக்கையில் கொண்டவை மட்டுமல்ல; ஏராளமான கைவிடப்பட்ட பெண்களுக்கும் தஞ்சம் அளிக்கின்றன.  கடவுளுக்கான அர்ப்பணிப்பு, மோட்சத்துக்கான வழி என்றெல்லாம் வெவ்வேறு நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன.  இந்தக் கைம் பெண்களும், கைவிடப்பட்ட பெண்களும் பிச்சை எடுத்தும், பஜனைகள் பாடியும், பரத்தைமையில் ஈடுபட்டும் மிகவும் இழிந்த நிலைமைகளில் உயிர் வாழ்கின்றனர். வயது முதிர்ந்த, ஆதரவற்ற பெண் களின் இந்தப் புலம்பெயர்வில் அதிக எண்ணிக் கையைப் பெற்று அவப்பெயரை வாங்கியுள்ளது மேற்கு வங்காளம் என்று தெரியவருகிறது. 

வெவ்வேறு காரணங்களால் கைம்பெண்களும், கைவிடப்பட்ட பெண்களும் மேற்கு வங்காளத்தி லிருந்து பிருந்தாவனுக்கும் அதனை அடுத்துள்ள பிரஜ்பூமி என்று தொகுப்பாக அழைக்கப்படும் கோகுல், பர்சனா, கோவர்தன், ராதாகண்ட் ஆகிய நகரங்களுக்கும் புலம்பெயர்ந்தனர்.  சேவாதாஸி அமைப்புக்கும் - அது எந்த நிலை வரை நடந்தாலும் - அப்பால் பாலியல் ‘தொழில்’களின் பிற வடிவங்களும் இன்றும் தொடர்ந்து வருகின்றன.  பிருந்தாவன் நகரில் பாலியல் தொழில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ஜனவரி, 2000-இல் தீபா மேத்தாவின் சாதனையான ‘வாட்டர்’ திரைப்படம் வெளிவந்த பிறகுதான் செப்டம்பர், 2011-இல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.  மனிதவள மேம்பாட்டு அமைச்ச கத்தின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பிரதிநிதிகளும், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள அரசுப் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டனர்.  இந்தக் கூட்டத்தில் நீதியரசர் ஜே.எஸ்.வர்மா பின்வருமாறு கூறினார்: “நாட்டில் உள்ள மக்கள் ஒருவர் மற்றவருக்கு உதவக்கூடிய எதார்த்த மனிதநேயத்துக்கு அப்பால் பிருந்தாவன் நகருக்கு வருகிற பெண்களின் நிலை மையைச் சீர்திருத்த எந்தவோர் அடிப்படையான நடவடிக்கையும் எடுக்காதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது.  ஒருபுறம், இவ்வாறு பிருந்தாவனுக்குப் பெண்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதைத் தடுக்கவும், இன்னொருபுறம் இந்தப் பெண்களின் துயரைத் தீர்ப்பதற்கான மறுவாழ்வுத் திட்டங் களைச் செயல்படுத்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றைய உடனடித் தேவை யாகும்.”

இலவசமாக சுகாதாரமான தங்குமிடம், முறையாக உடல்நலம் பேணுதல், நிதியுதவி, இறந்ததும் கௌரவமான இறுதிச் சடங்கு போன்ற நலஉதவிகள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல் தீர்மானங்களுள் இடம்பெற்றன.  இந்தியாவில் ஒரு சதி முயற்சி நடக்கிறதென்றால், உடனே உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுகிற வேளையில், அன்றாடம் இலட்சக்கணக்கான இந்தியக் கைம் பெண்கள் ‘உயிர் வாழ்கிறோம்’ என்ற பெயரில் இந்தச் சமுதாயத்தில் அனுபவித்து வரும் துன்பங்கள் மீது கவனம் செலுத்துவார் யாருமில்லை.

கைம்பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப் பட்டு, மிகவும் ஏழ்மையில், விளிம்புநிலையில், இழிந்த நிலையில் இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளிக்கவேண்டும்.  பெண்களில் ஒரு பிரிவினருக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது நாட்டின் எல்லா நிலைகளிலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

Kosswamy_250இந்திரா கோஸ்வாமி, ஒரு கைம்பெண்ணாகவும், ஓர் ஆய்வாளராகவும் அனுபவித்தவற்றை நீல்காந்தி ப்ரஜ் (Neelkanthi Braj) என்னும் அவரது புதினத்தில் எழுதினார்.  பின்னர் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு ப்ளூ நெக்ட் ப்ரஜா (Blue Necked Braja) (1975) என்ற பெயரில் நூலாக வந்தது.  ஏழ்மையில் அவதியுற்று, பாலியல் ரீதியாகத் துயருற்று வாடிய பிருந்தாவனைச் சேர்ந்த ராதேஸ்வாமிஸின் துன்ப நிலையைப் பற்றியதே இந்தப் புதினம்.  இளம் கைம்பெண்களுக்கு இல்லத்தின் கெடுபிடிகளுக்கு அப்பால் கிடைக்கும் நட்பு, சக பெண்களுக்கு அப்படிக் கிடைக்காமல் அவர்கள் அவதியுறுவது ஆகியவற்றைப்பற்றி நாவல் பேசுகிறது. 

வாழ வேண்டும் என்ற உந்துதல், சமய ஒழுங்குமுறைகள் வாயிலாக அவர்கள் சந்திக்கும் நெறிசார் குழப்பங்கள் ஆகியனவெல்லாம் இந்தப் புதினத்தில் வியக்கத்தக்க அளவுக்குத் தெளிவாகவும் உணர்வுடனும் வெளிக் கொணரப்பட்டுள்ளன.  கடவுள் கிருஷ்ணாவின் நகரான பிருந்தாவனின் அசிங்கமான முகத்தை இந்திரா தனது நாவலில் வெளிக்காட்டுகிறார்.  இந்தப் பேசுபொருளில் எழுதப்பட்ட முதல் புதினம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்திரா டெல்லிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியில் சேர்வதற்கு முன்பு 3, 4 ஆண்டுகள் செய்த ஆய்வும் தம் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவையுமே இந்த நாவலின் சாரம்!

இந்திரா கோஸ்வாமி எழுதிய ‘தி மாத் ஈட்டன் ஹவ்டா ஆஃப் தி டஸ்கர்’ (The Moth Eaten Howdah of the Tusker) மூன்று கைம்பெண்களின் வாழ்க்கையைப் பற்றியது.  இந்நூலில், சத்ரா (ளுயவசய) என்னும் அசாமிலுள்ள சமய நிலையங்களில் அஸாம் பார்ப்பனக் கைம்பெண்கள் படும் துயரத்தைப் பற்றி எழுதியுள்ளார்.  இது இந்திய இலக்கியத்தின் சிறந்த நூல்கள் (The Masterpieces of Indian Literature) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.  இந்தக் கதை அடஜ்யா (Adajya) என்ற பெயரில் திரைப் படமாக எடுக்கப்பட்டு, அப்படம் பல திரைப்பட விழாக்களில் பல தேசிய, சர்வதேசிய விருதுகளைப் பெற்றது.  இரண்டு நாவல்களுக்கிடையில் சில ஒத்த கருத்துகளைக் காணலாம்.  கோஸ்வாமியின் நாவலில் வரும் மூன்று கைம்பெண்களில் இளைய வளான கிரிபாலாவை, கைம்பெண் நிலையில் மாற்று வழியே கொடுக்கப்படாமல் ஆணாதிக்க முறைமையால் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுகிற சூயியாவை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

சூயியா நாராயணனின் தந்தையால் பாலியல் ஆசைக்குப் பயன்படுத்தப்படுகிறாள்; கிரிபாலாவின் கதை தன்னைத்தானே எரித்துக்கொள்வதில் முடிகிறது.  கைம்பெண்கள் ஒருபுறம், அடிப்படையான எல்லா மகிழ்ச்சிகளையும் துறந்து ஒரு புனித வாழ்க்கை வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இன்னொரு புறம் இளம் கைம்பெண்களைப் பாலியல் ஆசைக்குப் பயன்படுத்திக் கொள்வது எனக் கைம்பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் உயர் சமூக ஆணாதிக்க முறைமையை சித்வா, கோஸ்வாமி இருவரும் நன்றாக வெளிப்படுத்துகின்றனர்.  ஆணாதிக்க முறைமையால் ‘பண்பாட்டைக் கட்டிக் காப்பவர்கள்’ என்று போற்றப்படும் பெண்கள் அதே ஆணாதிக்க முறைமையால் சீரழிக்கப்படுகின்றனர்.  இளம் கைம்பெண்கள் பாலியல் வன்முறை அச்சத்தைச் சந்திப்பதன் மூலம் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் தீராத வடுக்களை இரண்டு நூலாசிரியர்களும் விவரிக் கின்றனர்.

கைம்பெண் நிலையைப்பற்றிய அறிதல் என்ற நிலையிலிருந்து கைம்பெண் சூழலின் அனுபவங் களுக்கு நமது கவனத்தை மாற்றுவதற்கு தீபா மேத்தாவும் பாப்ஸி சித்வாவும் வலியுறுத்தும் சிக்கல்களை நாம் கூர்ந்து கவனிப்பது முக்கியம்.  கைம்பெண்களிடம் வலிந்து திணிக்கப்படும் மரபு வழியான சடங்குமுறைகளையும், இன்றும் நீடித் திருக்கும் பார்ப்பன ஆணாதிக்கச் செயல்முறை வடிவங்களையும் பற்றிய ஒரு விமரிசனமாக சித்வாவின் ‘வாட்டர்’ நாவல் செயலாற்றுகிறது (உமா சக்கரவர்த்தி).  இளம் கைம்பெண்களின் அனுபவங்களைப்பற்றிய சித்வாவின் விளக்கம் எவ்வகையான தொடர்புகளில் இத்தகைய அனு பவங்கள் நிகழும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 

பாப்ஸி சித்வா அல்லது தீபா மேத்தா மட்டுமே கைம்பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள் அல்லர்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு களைச் சேர்ந்த பல பெண் சீர்திருத்தவாதிகள் கைம் பெண்கள் சந்திக்கும் துயரங்களுக்கெதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.  பண்டித ரமாபாயின் தி ஹை காஸ்ட் இண்டு உமன் (The High Caste Hindu Woman), ரக்மாபாய் கட்டுரைகள், தாராபாய் ஷிண்டேயின் ஸ்திரீ புருஷ துலானா (Stri Purusha Tulana),  காஷிபாய் கனித்கரின் கட்டுரை போன்றவை இந்துக் கைம்பெண்களின் நிலைமையை முனைந்து எடுத்துரைக்கின்றன.  உயர் சமூகத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண், சமுதாயத்தில் தீண்டத்தகாத வளாகவும் வீட்டிலேயே வெறுக்கத்தக்கவளாகவும் கருதப்படுகிறாள்.

ரமாபாய் பெண்கள் அடக்குமுறை, சமுதாயப் பழக்கவழக்கங்கள், சாஸ்திர அனுமதி ஆகிய வற்றுக்கிடையே தனது கவனத்தைத் திருப்பும்போது மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார் (உமா சக்கரவர்த்தி).

விளிம்புநிலைப்பட்ட கைம்பெண்களுக்கு மத்தியில் குழந்தைக் கைம்பெண்கள் மிகவும் மோச மாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று இரங்கி, அவர்களுக்கு நேரும் இழிநிலை, சமுதாய அடக்கு முறையின் மீது நம் கவனத்தை ஈர்க்கிறார்.  பண்டித ரமாபாய் ‘தி ஹை காஸ்ட் ஹிண்டு உமன்’ நூலில் பார்ப்பனப் பெண்களின் கைம்பெண் நிலைமையின் மீது சிறப்புக் கவனம் கொண்டு பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டைய பார்ப்பனப் பழக்கவழக்கங்களை விமர்சனம் செய்கிறார்.  குழந்தை மணத்தால் பாதிக்கப்பட்ட ரக்மாபாய் ‘அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் எந்தத் திருமணமும் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும்’ என அரசிடம் கோரிக்கை விடுக்கிறார் சக்கரவர்த்தி.  கைம்பெண் நிலையைப் பற்றிய, குறிப்பாக, குழந்தைக் கைம் பெண்களைப் பற்றிய பொது விவாதங்களில் பெண்கள் கலந்து கொள்ளாததால், அவர் களுடைய மௌனத்தை சம்மதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது; எடுத்துக்கொள்ளக்கூடாது.  தீய பழக்கவழக்கங் களின் ஒரு தொடர்ச்சியாகப் பெண்கள் துன்பத்தைத் தாங்கிக் கொள்வார்கள் என்று அனுமானிக்கவும் கூடாது.

water_250_copyரைஸிங் மூன் (Rising Moon) என்ற பெயரில் வெளியான தீபா மேத்தாவின் வாட்டர் (Water) திரைப்படம் இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ள கைம்பெண்களின் இழிநிலைமை மீது உலகத்தின் கவனத்தைக் குவியச்செய்து அந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியது.

ஜனவரி, 2000-இல் மேத்தா இந்துக்களின் புனிதத்தலமான வாரணாசியில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தபோது, அவருக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புகள் கிளர்ந்தெழுந்தன.  இந்துமத ஆசாரத்துக்கு வக்காலத்து வாங்கும் பழைமைவாதிகள் திரைப்படத்தின் கதையை மட்டும் எதிர்க்கவில்லை; படத்தின் தலைப்புக்குக் கூட மறுப்பு தெரிவித்தனர்.  புனித கங்கை சாதாரணமாகத் ‘தண்ணீர்’ என்று குறிப்பிடப் படுகிறதாம்! தீபா மேத்தா ஏற்கெனவே எர்த் (Earth), ஃபயர் (Fire) என்று இரண்டு படங்களை எடுத்தவர்.  அந்த வரிசையில் மூன்றாவது ‘வாட்டர்’ (Water) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தாரே தவிர கங்கையைச் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல.

மேத்தாவின் மகள் தேவயானி, ‘வாட்டர்’ திரைப்படப் பிடிப்பின் போது பெற்ற அனுவங்களைத் தொகுத்து எழுதிய நூல் 2006-இல் பெங்குவின் புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.  இவை தவிர, இந்தியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாயா அவருடைய ‘தோஸ் டேய்ஸ்’ (Those Days) என்னும் நூலிலிருந்து கதைக் கருவை எடுத்து மேத்தா திரைப்படம் எடுத்ததாகக் குற்றம் சாட்டியபோது மேத்தாவுக்கு இடையூறுகள் மேலும் குவிந்தன.  பின்னர், மேத்தா சட்டப்படியாகப் போராடி, ஒரு வழியாகப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.  படத்துக்காக மொட்டையடித்துக்கொண்ட ஷபானா ஆஸ்மிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் ஆவேசம் கொள்ளுகிற அளவுக்குச் சென்றன.

“மீள் சுழற்சிக்கான விவாதம், அமைப்பு மூலமான முன்னேற்ற முனைவு என்று இல்லாமல் ஆய்வு செய்தல், தருக்கம் செய்தலின் பன்முகம் கொண்ட தளங்களில் முறையான விரிந்த மனப் பாங்குடைய, புறநிலையான, அனுபவ அடிப்படையில் நடைமுறைப் பரிசோதனை செய்யக் கூடிய நிலையில் இணங்கியுள்ள “திருப்புமுனை ஏற்படுத்தும் அரசியல் ஆற்றல்களின்” பிரதிநிதித்துவம்தான் வாட்டர் (லூம்பா)”

ஒடுக்கப்பட்ட இந்துக் கைம்பெண்களுக்காகக் குரல் கொடுத்து மனுஸ்மிருதியின் மரபுரிமை களை / மரபுவழிப் பழக்கங்களை விலக்கி, இந்து ஆணாதிக்க அமைப்பை மாற்றி ஒழுங்குபடுத்து கிறது வாட்டர்.  இந்து மதத்தின் ஆணாதிக்க விதிமுறைகளிலிருந்தும், பெண்ணை ஆணுக்குக் கீழாகத் தாழ்ந்த நிலையிலேயே இருப்பு கொள்ள வைக்கும் ஒரு சமயம் என்ற அளவில் இந்த மதத்தி லிருந்தும் பெண்ணை விடுவிக்கும் முயற்சிதான் வாட்டர் படத்தின் பிரதான நோக்கம்!

ஆணாதிக்க முறைமை குடிமக்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் குலைக்காமல் தனது அதிகாரப் பரவலைச் செயல்படுத்துகிற வேளையில், (மேத்தாவின்) சித்வாவின் வாட்டர் போன்ற முயற்சி ஆணாதிக்கத்தின் அந்த நிலை நாட்டல் முயற்சியை உடைக்க முனைகிறது.  உறுதியான, செறிவான சமுதாயச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளாமல் கைம்பெண்களின் நிலைமை களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இயலாது.  சமுதாயச் சீர்திருத்தத்தின் மூலமே உயர் சமூகத்தைச் சார்ந்த கைம்பெண்களின் வாழ்க்கைச் சூழலுக்குப் புத்துயிரளிக்க முடியும். 

தீபா மேத்தாவின் ‘ரைஸிங் மூன்’, பாப்ஸி சித்வாவின் ‘வாட்டர்’ போன்ற சமுதாய அக்கறை யுள்ள ஊடக, இலக்கிய முயற்சிகளால் மட்டுமே உயர் சமூகக் கைம் பெண்களின் வாழ்வை மலர்விக்க முடியும்.  கைம் பெண்கள் ஒடுக்கப்படும் அவலநிலை பெண்களுக் கான நவீன சீர்திருத்தச் செயல்திட்டத்துக்குள் இடம்பெறாவண்ணம் இந்து ஆணாதிக்கம் இந்தியாவின் பொதுவான சமுதாயத் தளத்தினுள் சாமர்த்தியமாக ஊடுருவியுள்ளது.  ஆணாதிக்கக் கட்டமைப் பினால் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு, சில வேளைகளில் பெண்களே எதிர்க்க விரும்பாது இணங்கிப் போகிற அளவுக்கு மிகவும் நயமாகப் பரப்பப்பட்டுள்ள கருத்துநிலைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, சீர்திருத்தும் இன்றியமையாப் பணியில் நம் நாட்டுப் புலமையாளர்களும் பெண்கள் சீர்திருத்த அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட வேண்டும். 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட ‘Protest Literatures’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ள ‘Patriarchal Suppression on Upper-Caste Widows and the Resultant Inviolable Voices : A Study of Bapsi Sidwa’s ‘Water’ - என்னும் கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்ப்பு : ஜெ.கலைச்செல்வன்

Pin It