தமிழ் இலக்கியம் கற்பித்தல் குறித்தும், கற்ற முறை குறித்தும் நமது பாரம்பரிய இலக்கிய நூல்களில் குறிப்புகள் இல்லை. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘மன்றம்’ என்ற அமைப்பு கல்வி கற்பிக்கும் இடமாகவும் விளங்கியுள்ளமையைக் குறுந்தொகைச் செய்யுளொன்று (33) சுட்டுகிறது.

பண்டைத் தமிழர்களின் போர்த் தொழில், கைவினைத் தொழில், வாணிபம், கலையறிவு ஆகியன குறித்த செய்திகளை, சங்க இலக்கியங்கள் விரிவாகப் பதிவு செய்துள்ளன. இதன் அடிப் படையில் இத்துறை சார்ந்த கல்வி, பண்டைத் தமிழகத்தில் வழக்கில் இருந்துள்ளது என்று கருத இடமுள்ளது.

இச்செய்திகளையெல்லாம் பதிவு செய்துள்ள சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய தமிழ் இலக்கியங்கள், நம் இலக்கிய மரபின் தொன்மைக்குச் சான்றுகளாய் அமைகின்றன. இவ்விலக்கியங்கள் யாப்பிலக்கண நுட்பங்களை உள்வாங்கியே உருப்பெற்றுள்ளன. அத்துடன் அழகுணர்ச்சி, கற்பனைத்திறன் ஆகியன வற்றையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவற்றையெல்லாம் ஒரு சேர நோக்கும்போது, ஒரு முறையான இலக்கியக் கல்விப் பயிற்சியை இவற்றின் ஆசிரியர்கள் பெற்றிருப்பார்கள் என்று கருத இடமுள்ளது. ஆனால் இக்கல்விப் பயிற்சி குறித்த பதிவுகள் எவையும் இந்நூல்களில் காணப் படவில்லை.

செய்யுள் வடிவிலான இந்நூல்களின் உரு வாக்கத்திற்கு அடிப்படையான இலக்கண நூல்கள், முறையான இலக்கியப் பயிற்சியின்றி எழுதப் பட்டிருக்க முடியாது என்பதை இங்கு நினைவில் கொள்ளுதல் அவசியம்.

இலக்கண உரைகள்

ஒரு நூலைப் புரிந்துகொள்ள உதவும் உரை களை ‘பொழிப்பு’, ‘அகலம்’, ‘நுட்பம்’, ‘நூல் எச்சம்’ என நான்கு வகையாக நாலடியார் (32:9) பகுக்கின்றது.

நாலடியார் கூறும் இக்கருத்தையொட்டி நன்னூல் ஆசிரியர் பதினான்கு வகையாக உரை யினைப் பகுத்துள்ளார் (நூற்பா 21). மேலும் ‘காண்டிகை உரை’, ‘விருத்தியுரை’ என்ற இரு வகை உரைகளைக் குறிப்பிடுகிறார் (நூற்பா 22). இதன்படி காண்டிகையுரை என்பது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு என்ற மூன்றினோடு, வினா, விடை என்ற இரண்டையும் கூட்டிச் சொல் வதாகும். காண்டிகை உரையில் அடங்கும், மேற் கூறிய ஐந்து உறுப்புகளுடன் நில்லாது விரித்து உரைப்பது விருத்தியுரை ஆகும் (நூற்பா 23).

இலக்கண நூல்களுக்கான உரை குறித்த இத்தகைய வரையறைகளைப் போல இலக்கிய நூல்களுக்கான உரை குறித்த வரையறைகள் இல்லா விடினும், அடியார்க்குநல்லார், புறநானூற்றின் பழைய உரையாசிரியர், பரிமேலழகர், நச்சினார்க் கினியர், பேராசிரியர் போன்ற இலக்கிய உரை யாசிரியர்களின் உரைகள் அவர்களின் ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியை வெளிப்படுத்துவதுடன் மட்டுமின்றி, இத்தகைய பயிற்சியைத் தரும் இலக்கியக் கல்விமுறை வழக்கில் இருந்தமையையும் சுட்டு கின்றன.

ஆயினும் இக்கல்விமுறை குறித்த எழுத்துச் சான்றுகள் எவையும் நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் வடமொழிக் கல்வி ஏற்றம் பெற்று, தமிழ்க்கல்வி புறக்கணிக்கப்பட்டது தான்.

இலக்கியக் கல்வியும் சாதியும்

சங்க காலத்தில் மன்றங்களில் பயிற்றுவிக்கப் பட்ட கல்வியானது, கடிகைகள், மடங்கள் மற்றும் கோவில்களுக்குள் நுழைந்த பின்னர், அது தன் சமயச் சார்பற்ற தன்மையை இழந்து, சமயம் சார்ந்த கல்வியாக மாறிவிட்டது. அத்துடன் மனுதர்மத்தை உள்வாங்கி, கல்வியைப் பலருக்கு எட்டாக் கனியாக்கிவிட்டது. செய்யுள் இலக்கணம் கூறவந்த பாட்டியல் நூல்கள், சாதி வேறுபாடுகளை யாப்பு வகைகளிலும் புகுத்தின. பாடல்களின் எண்ணிக்கையளவும், எழுதப்படும் ஓலையின் நீளமும்கூட சாதியடிப்படையில் வரையறுக்கப் பட்டன.

சமய ஆதிக்கம்

இதன் விளைவாக நம் இலக்கியக்கல்வி கற்பித்தலில் தேக்கம் ஏற்பட்டது. இலக்கியக் கல்வியென்பது சமயம் சார்ந்த கல்வியாகப் படிப்படியாக மாற்ற மடைந்தது. சமயம் சார்ந்த புராணங்களும் சிற்றிலக்கியங்களும் இலக்கியக் கல்வியில் சிறப்பிடம் பெற்றன.

சமயக்காழ்ப்புணர்வினால் சிறந்த இலக்கியங் களைப் புறக்கணிக்கும் நிலையும்கூட உருவானது. இப்போக்கிற்குச் சான்றுகள் சிலவற்றை மயிலை சீனிவேங்கடசாமி (2001:62-63) குறிப்பிடுகிறார்.

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாததேசிகர் என்பவர் தமது “இலக்கணக் கொத்து” நூலின் ஏழாம் நூற்பாவிற்கு எழுதிய விளக்கத்தில்,

“மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம் அன்றியும், அழகிய சிற்றம்பல முடையான் (சிவபெருமான்), அவர் (மாணிக்க வாசகர்) வாக்கிற் கலந்திருந்து, அருமைத் திருக்கையாலெழுதினார். அப்பெருமையை நோக்காது, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்கு வேண் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய் யுள்களோ டொன்றாக்குவர்... அம்மட்டோ! இறையனார் அகப்பொருள் முதலான இலக் கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங் களையும் ஓர் பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங் களையும் ஒரு பொருளாக எண்ணி, வாணாள் வீணாக் கழிப்பார். அவர், இவைகளிருக்கவே அவைகளை விரும்புதலென்னெனின், பாற் கடலுட் பிறந்து அதனுள்ளே வாழுமீன்கள், அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை என்க.”

என்று எழுதியுள்ளார். இவரது காலத்தைச் சேர்ந்த சிவஞான சுவாமிகள், “சோமேசர் முதுமொழி வெண்பா” என்ற தமது நூலில்,

சேக்கிழார், சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே

தூக்கியுப தேசித்தார் சோமேசா;- நோக்கின்?

‘பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்’

என்று பாடியுள்ளார். சீவகசிந்தாமணி பயில்பவர் “மக்களுள் பதர் போன்றவர்” என்ற தமது தவறான கருத்தை வலியுறுத்தத் திருக்குறளையும் பொருத்த மற்ற முறையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

1880-ஆம் ஆண்டில்கூட இந்த நிலை இருந் துள்ளது. இதற்குச் சான்றாக சேலம் இராமசாமி முதலியார் என்பவருக்கும், உ.வே.சாமிநாத ஐயருக்கும் இடையே 21. 10. 1880-இல் ஏற்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த உரையாடலைக் குறிப்பிடலாம்.

உ.வே.சா. படித்த நூல்களின் பட்டியலைக் கேட்டறிந்த இராமசாமி முதலியார், ஒரு கட்டத்தில் ‘சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டபோது, தன் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வினை, ‘அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை, என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக் கூட நான் கண்ணால் பார்த்ததில்லை’ என்று பதிவு செய்துள்ளதோடு, மேலும் அது குறித்து,

‘எனக்கு சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங் களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்த தேசத்தில் நான் சந்தித்த வித்து வான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகத் தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை.’

என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். (1990:532-533). சிவத்தம்பியும் (2007:6)

“உ.வே.சா. அவர்களின் என் சரிதத்தைத் தளமாகக் கொண்டு திரும்பிப் பார்க்கின்ற பொழுது ஏறத்தாழ 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளி லிருந்து மரபுவழித் தமிழ், கல்வியில் சங்க இலக்கிய தாடனத்திலும் பார்க்க இலக்கண, சைவ இலக்கிய தாடனமே முதன்மைப் படுவதைக் காணலாம்.”

என்று எழுதியுள்ளார். சமயக்காழ்ப்புணர்ச்சி யானது சமண, பௌத்தம் சார்ந்த இலக்கியங் களைப் பயில்வதையும், பயிற்றுவிப்பதையும் தடை செய்துவிட்டதை மேற்கூறிய செய்திகள் உணர்த்து கின்றன.

பாடம் சொன்ன முறை

இவை ஒரு புறமிருக்க, இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்த முறை குறித்து இனி அறிந்து கொள்வோம். பாடங் கேட்டலின் வரலாறு குறித்து நன்னூலாசிரியர் (நூற்பா 40, 41) கூறும் செய்திகளை, அவர் வாழ்ந்த சோழர் காலத்திய (1178-1218) கல்வி முறை குறித்த பதிவாகக் கொள்ள முடியும்.

உரைகளின் தோற்றம்

சில வினாக்களைத் தாமே எழுப்பி, அதற்கு விடை கூறுவது போன்று உரையாசிரியர்கள் உரை யெழுதியுள்ளதை நோக்கும்போது, அக்காலக் கற்பித்தல் முறையின் வெளிப்பாடாக உரைகளைக் கருத முடியும்.

இது தொடர்பாக மு.வை.அரவிந்தன் (1966:7-8) மேற்கோளாகக் காட்டும் பின்வரும் உரைப் பகுதியைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதாள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ் வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன் போக அவன் வரவு நீட்டித்தலான். இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று இவள் கூறலாமோ? இஃது அங்ஙனம் ஆயின், குறி என்பது அனைத்தும் பொய்யே யாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று; இவளும் பொய் கூறினாள் அல்லள்; அஃது எங்ஙனம் எனின், குறி பார்க்கச் சென்றிருக்கும் பொழுதே தெய்வ முன்னிலையாகக் கொண்டு இருத்தலான். அத்தெய்வத்தின் வெளிப்பாட்டானே தலை மகனுடன் புணர்ச்சி உண்மையை அறிந்தாள். இங்ஙனம் அறிந்தாள் என்பதனை நாம் அறியாதவாறு யாதினால் எனின், இக் களவொழுக்கம் தெய்வம் இடைநிற்ப, பான்மை வழியோடி நடக்கும் ஒழுக்கம் ஆதலானும், சிற்றம்பலத்தான் இயல்பு தெரிந்திராதே என்று இவள் சொல்லுதலானும் அறிந்தோம்.”

(திருக்கோவையார்-285, பேராசிரியர் உரை)

வினாவிடை முறையில் - ஆசிரியர் தம் மாணவர் களுக்குப் பாடங் கூறும் வகையில் இப்பகுதி அமைந்துள்ளது. உரையாடல் வகையில் இதனை மு.வை.அரவிந்தன் பின்வருமாறு அமைத்துக் காட்டியுள்ளார்.

ஆசிரியர்:

கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதாள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள்.

மாணவர்:

என்னை? வரைவுபொருட்டுத் தலைமகன் போக, அவன் வரவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று இவள் கூறலாமோ? இஃது அங்ஙனம் ஆயின், குறி என்பது அனைத்தும் பொய்யேயாம்.

ஆசிரியர்:

குறியும் பொய்யன்று; இவளும் பொய் கூறினாள் அல்லள்.

மாணவர்:

அஃது எங்ஙனம்?

ஆசிரியர்:

குறிபார்க்கச் சென்றிருக்கும் பொழுதே, தெய்வ முன்னிலையாகக் கொண்டு இருத்தலான், அத் தெய்வத்தின் வெளிப்பாட்டானே தலை மகனுடன் புணர்ச்சி உண்மையை அறிந்தாள்.

மாணவர்:

இங்ஙனம் அறிந்தாள் என்பதனை நாம் அறிந்தவாறு யாதினால்?

ஆசிரியர்:

இக்களவொழுக்கம் தெய்வம் இடை நிற்பப் பான்மை வழியோடி நடக்கும் ஒழுக்கம் ஆதலானும், சிற்றம்பலத்தான் இயல்பு தெரிந்திராதே என்று இவள் சொல்லுதலானும் அறிந்தோம்.

மனப்பாடக் கல்வி

நன்னூல் பாயிரத்தில் (40) ‘செவி வாயாக நெஞ்சுகளனாக’ என்று இடம்பெறும் தொடர், காதால் கேட்டு, மனதில் நிறுத்திக்கொள்ளும் மரபை உணர்த்துகிறது. இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டிலும்கூட நடைமுறையில் இருந்ததையும் அதற்கான காரணத்தையும் மயிலை சீனி வேங்கட சாமி (2001:51) பின்வருமாறு விளக்குகிறார்.

கணக்காயரிடம் பொருள் அறியாமல் செய்யுள் நூல்களை மனப்பாடஞ் செய்த மாணவர்கள், பிறகு, தகுந்த புலவரிடஞ் சென்று, அவர் களிடம், தாம் மனப்பாடஞ் செய்த நூல் களுக்கு உரை கேட்பர். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில், ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில், இந்த முறை, ஏற்றதாக இருந்தது. மாணவர்கள் உருப்போட்டு மனப்பாடஞ் செய்த ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, சதகம், நிகண்டு, நன்னூல் முதலியவற்றிற்குப் பொருள் கேட்டுக் கற்பர்.

மனப்பாடக் கல்வியுடன் நெருங்கிய தொடர் புடையதாக நிகண்டுக் கல்வி அமைந்தது

நிகண்டுக் கல்வி

இலக்கியநூல்கள் இரு முறைகளில் கற்பிக்கப் பட்டன. முதலாவது முறையில் சுவடிகள் எவையு மின்றி, ஆசிரியர் கூறுவதைத் திரும்பத் திரும்பக் கேட்டு ஓர் இலக்கியத்தின் பனுவல் முழுவதையுமோ, தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டுமோ மனனம் செய்வது; இரண்டாவது முறையில் ஓர் இலக் கியத்தின் ஏட்டுச் சுவடியைத் தன் உடைமையாகக் கொண்டு ஆசிரியரிடம் பாடம் கேட்பது.

இவ்விரு முறையிலும் பொருள் விளங்காச் சொற்களுக்குப் பொருள் தெரிய இடர்ப்பாடுண்டு, ஏனெனில் உரை இல்லாத இலக்கியப் பனுவல் களுக்கு, ஆசிரியர் பாடம் நடத்தும்போது, அவ்வப்போது எழுத்தாணியின் துணையால் உடனடியாகப் பொருள் எழுதுவது எளிதல்ல. மேலும் அகராதிகளும் அக்காலத்தில் கிடையாது.

இக்குறைபாட்டை ஈடுசெய்யும் வழிமுறையாக நிகண்டுகள் அமைந்தன. இலக்கிய இலக்கணக் கல்வியின் படிநிலையாக நிகண்டுகளைக் கற்பது அமைந்தது. சொற்களின் பொருளைத் தெளிவாக அறிந்துகொள்ள நிகண்டுக் கல்வி உதவியது.

முன்னாளில் தமிழ் பயின்றார் முக்கியமாகச் சூடாமணி நிகண்டு நூலை மனப்பாடஞ் செய்து ஒப்பித்தலைப் பெரிதும் வற்புறுத்தி வந்துள்ளார். திவாகரம், பிங்கலம் முதலிய பழைய நிகண்டுகளையும் மனப்பாடஞ் செய்வது அந்நாளைக் கல்வி முறையாம். நிகண்டுக்கல்விக்கு இத்துணை முதன்மை அளித்ததேன் என்று சற்றுச் சிந்திப்போம். சொற்களின் பொருள்களைத் தெளிவுற அறிவதற்கு நிகண்டு நூல் உறுதுணையா யுள்ளது. இக்காலத்தில் பெருக வழங்கும் அகராதிகளின் நிலையில் அந்நாள் நிகண்டுகள் பயன் தந்துள்ளன. எனவே, பழம்புலவர்கள் நிகண்டு பயில்வதனைப் பெரிதும் வற்புறுத்தி வந்துள்ளார்.

என்று கூறும் மு.சண்முகம் (1982:12) இருபத் தொன்பது நிகண்டு நூல்களைப் பட்டியலிட்டு உள்ளார் (மேலது 31-33). இவை பாவடிவிலேயே அமைந்தன. இது குறித்து;

முதலில் வந்த நிகண்டு நூல்கள் நூற்பா வினால் அமைக்கப்பட்ட போதிலும் காலப் போக்கில் மனப்பாடஞ் செய்வதற்கு எளிதாக இருத்தலைக் கருதி வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் முதலிய பா வகைகளாலும் நிகண்டு நூல் செய்வாரா யினார். வெண்பா யாப்பில் அமைந்தவை உரிச்சொல் நிகண்டும் நாம தீப நிகண்டும் ஆகும். கட்டளைக் கலித்துறையில் இரண்டு நிகண்டுகள் உள. ஒன்று கயாதரம்; மற் றொன்று பாரதி தீபம். பொருள் விளக்கும் முறையில் இவ்விரண்டு நூல்களும் திவாகர நூலை அடியொற்றி அமைந்துள்ளன. இவற்றுள் கயாதர நிகண்டு அந்தாதி முறையைத் தழுவியிருப்பது. தொடர்ந்து மனனம் செய் வதற்கு ஏற்ற கருவியாய் உள்ளது. விருத்தப் பாவில் அமைந்த நிகண்டுகளுள் சூடாமணி நிகண்டு முதன்மையாகக் கொள்ளத்தக்கது. அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, நாநார்த்த தீபிகை போன்றவை இவ் வகையின. நிகண்டு வளர்ச்சியில் பொருள் களை விளக்க வந்த நூல்கள் கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் முதலிய பாவினங்களையும் மேற்கொண்டுள்ளன.

என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார் (மேலது: 23-24).

ஆசிரியர் மாணவர் உறவு

அம்பலவாண முனிவர் என்பவரிடம் பாடம் கேட்கச் சென்ற, தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தை உ.வே.சா. (1965:44-46) விரிவாக எழுதியுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டின், பாடம் சொல்லும் முறையை மட்டுமின்றி ஆசிரியர்கள் சிலரின் இயல்பையும் வெளிப்படுத்தி நிற்பதால் சற்று விரிவாக இப்பகுதியை மேற்கோளாகக் காட்டுவது அவசியமாகிறது.

அம்பலவாண முனிவரிடம் பாடங் கேட்டது

பிள்ளையவர்கள் ஏனையோர்களால் தூண்டப் பெற்று அவரிடம் சமயம் பார்த்துச் சென்று வந்தனஞ் செய்து தம்முடைய மனக்குறையைத் தெரிவித்துக் கொண்டார். அவர், “மற்றொரு சமயம் வாரும்; யோசித்துச் சொல்லுவோம்” என்றார். அப்படியே மறுநாட் காலையில் இவர் போய் வந்தனஞ் செய்து விட்டு அவருடைய கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்.

“நல்லது; இரும்” என்று அவர் சொல்ல, இவர் இருந்தார். “நீர் என்ன என்ன படித் திருக்கிறீர்?” என்று அவர் கேட்டார். இவர் தாம் படித்தவற்றுள் சில நூல்களின் பெயர் களைச் சொன்னார். “அவற்றைச் சிறந்த கல்விமான்களிடம் முறையாகப் பாடங் கேட்டிருக்கிறீரா?” என்று அவர் வினாவினர்.

இவர், “இவ்விடமிருந்து திருச்சிராப்பள்ளிக்கு எழுந்தருளிச் சில மாதங்கள் இருந்த ஸ்ரீ வேலாயுத சாமியிடத்தும் வேறு சிலரிடத்தும் ஏதோ ஒருவாறு சில நூல்களைக் கேட்ட துண்டு. எனக்குள்ள சந்தேகங்கள் பல; அவற்றையெல்லாம் சாமிகளே தீர்த்தருள வேண்டும்” என்று விநயத்தோடு தெரிவித்தார்.

வேறுபலரிடம் இவர் பாடங்கேட்டிருந்தன ராயினும், அந்த மடத்தின் தொடர்புடை யோரைச் சொன்னால் முனிவருக்குப் பிரீதி (அன்பு) உண்டாகுமென்று எண்ணியே இங் ஙனம் கூறினார். அவர் “இந்த ஆதீனத்துச் சிஷ்யர்களுக்கே நாம் பாடஞ் சொல்லுவோமே யல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்லுவ தில்லை; அது முறையுமன்று” என்று கண்டிப்பாகச் சொன்னார்.

இவர், “அடியேன் சாமிகளுடைய சிஷ்ய பரம் பரையைச் சார்ந்தவன்தானே? இப்பொழுது அடி யேன் கேட்கப்போவதும் சாதாரணமாக நூல் களிலுள்ள சிலவற்றின் கருத்துக்களேயல்லாமல் சைவ சாஸ்திரங்களல்ல” என்று பலமுறை மன்றாடவும், சிறிதும் இணங்கவில்லை.

ஒவ்வொரு நூலையும் எவ்வளவோ சிரமப் பட்டு நாங்களெல்லோரும் கற்றுக் கொண்டு வந்தோம்; அவற்றை மிகவும் எளிதிற் கற்றுக் கொண்டு போகலாமென்று வந்திருக்கிறீரோ” என்று சொன்னார். (அழுத்தம் எமது)

சொல்லியும் இவர் முயன்று சென்று பாடங் கேட்பதற்கு முயன்று கொண்டே வந்தார்; சில தினங்கள் இங்ஙனம் சென்றன.

விடாமல் அலைந்தலைந்து இவர் கேட்டுக் கொள்ள முயல்வதை அறிந்து ஒரு நாள் மனமிரங்கி அவர், “இங்கே நீர் முதலிற் படிக்க வேண்டிய நூல் என்ன?” என்று கேட்டனர். “இப்பொழுது கம்பரந் தாதியே” என்றார் இவர். முனிவர், “நல்லது: ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு வாரும்” என்றார்.

அப்படியே நல்ல நாள் பார்த்துக்கொண்டு இவர் சென்றார். அப்போது அவர் புத்தகங் கொணர்ந்தீரா வென்று கேட்கவே, இவர் இல்லை யென்றார். அவர் சென்று தம்முடைய புத்தகத்தை யெடுத்து வந்து கொடுத்தார்.

இவர் இருந்தபடியே அதை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தபொழுது அவர், “என்னங்காணும், உமக்குச் சம்பிரதாயமே தெரியவில்லையே! நீர் முறையாகப் பாடங் கேட்டவரல்லரென்பது மிகவும் நன்றாகத் தெரிகின்றது. இதற்காகத்தான் நாம் பாடஞ் சொல்ல மாட்டோமென்று முன்னமே சொன்னோம். நமக்குக் குற்றமில்லை. இப்படிப் பட்டவர்களுக்குப் பாடஞ் சொன்னால் இடத்தின் கௌரவம் போய்விடுமே” என்று சினக்குறிப்புடன் சில வார்த்தைகள் சொன்னார்.

இவர், வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி யுடைந்தது போல் நாம் நல்ல பயனையடையக் கூடிய இச்சமயத்தில் கோபம் வந்துவிட்டதே! என்ன விபரீதம்? இதற்குக் காரணம் தெரிய வில்லையே! என்று மனம் வருந்தி, “சாமி, அடியேன் புத்தி பூர்வமாக யாதொரு தவறும் செய்யவில்லையே; அப்படி ஏதேனும் அடியேன் செய்திருந்தால், அதனை இன்னதென்று கட்டளை யிட்டால் நீக்கிக் கொள்ளுவேன். அடியேன் நடக்க வேண்டிய நல்வழிகளையும் கற்பித்தருளல் வேண்டும்” என்று பலமுறை பிரார்த்தித்தார்.

அவர், “நாம் கொடுத்த புத்தகத்தை நீர் இப்படியா வாங்குகிறது?” என்றார். இவர் “எப்படி வாங்குகிறது? கட்டளையிட்டருள வேண்டும்” என, அவர், “இங்கே தம்பிரான்களிடத்திற் படித்துக் கொண்டிருக்கும் குட்டித் தம்பிரான்கள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு வாரும், போம்” என்றார்.

இவர் அங்குத்தியே1 இந்த ஸம்பிரதாயத்தை விளங்கச் சொல்ல வேண்டும் என்று பலமுறை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர், “நூதன மாகப்2 படிக்கத் தொடங்கும் பொழுது ஆசிரியர் களைப் பத்திர3 புஷ்பங்களால் முதலில் அர்ச்சித்து வந்தனங்கள் செய்து புத்தகத்தைப் பெற வேண்டும்; அப்பால் சொல்லெனச் சொல்லல் வேண்டும்” என்று சொன்னார். உடனே இவர் பத்திர புஷ்பங் களைக் கொணர்ந்து அர்ச்சித்து வந்தனங்கள் செய்து நின்றார். அவர் புத்தகத்தைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்டு மறுமுறை வந்தனஞ் செய்து புத்தகக் கயிற்றை அவிழ்த்துப் படிக்கத் தொடங்கிய பொழுது அவர், “நில்லும்; பூசைக்கு நேரமாகி விட்டது; நாளைக் காலையில் வாரும்” என்றார்.

இவர், “நல்ல வேளையில் தொடங்கிவிட வேண்டாமோ?” என்றார். “நாம் நல்ல வேளையிற் புத்தகத்தைக் கொடுத்துவிட்டோம். அதுவே போதியது” என்று சொல்லி உடனே அவர் எழுந்து போய்விட்டனர்.

அம்பலவாணமுனிவரின் இச்செயல்பாடு அவருக்கு முந்திய மரபின் தொடர்ச்சிதான். பாடம் கேட்டலின் இலக்கணத்தை,

கோடல் மரபே கூறுங் காலைப்

பொழுதொடு சென்று வழிபடல் முனியான்,

குணத்தோடு பழகி, அவன் குறிப்பிற் சார்ந்து,

இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப்,

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்

சித்திரப் பாவையின் அத் தகவு அடங்கிச்,

செவி வாயாக, நெஞ்சு களன் ஆகக்,

கேட்டவை கேட்டவை விடாது, உளத்து அமைத்துப்

போ எனப் போதல், என்மனார் புலவர்.

என்று நன்னூல் (40) குறிப்பிடுகிறது.

ஆசிரியர் மாணவர்களுக்கு இடையேயான உறவுமுறை குறித்த இச் செய்திகள் இலக்கியத்தைச் சுவைக்கும் மற்றும் ஆராயும் அணுகுமுறைக்கு உகந்ததாக இருக்கவில்லை.

இம்மரபு சைவ மடங்களில் நிகழ்ந்த இலக்கியக் கல்வியில் தொடர்ந்தது என்பதை உ.வே.சா. வின் ‘என் சரித்திரம்’ வாயிலாக அறிகிறோம்.

இலக்கியக் கல்வியின் வளர்ச்சி

ஆங்கில ஆட்சிக்குப் பின்னர் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களும், சென்னைப் பல்கலைக் கழகமும் உருப்பெற்ற பின்னர், ஏட்டுச்சுவடிகள் படிப்படியாக மறைந்து அச்சிடப்பட நூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின.

இதனால் மனப்பாடக்கல்வியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. பாடபேத உருவாக்கம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய நூல்கள் அனைவர் கையிலும் தவழும் நிலை உருவானது. அத்துடன், ஒரு நூல் முழுமையையும் மாதக் கணக்கில் தொடர்ந்து கற்கும் முறைக்கு மாறாகத் தேர்ந்தெடுத்த பகுதி களை மட்டும், கால அட்டவணைகளில் குறிப் பிடப்பட்ட நேரத்தில் மட்டுமே கற்கும் முறை அறிமுகமானது.

சமய எல்லையைத் தாண்டிப் பல்வேறு இலக் கியங்களைப் பயில்வதும், அவற்றைப் பிற இலக் கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அணுகுமுறையும் நடைமுறைக்கு வந்தன.

மனப்பாடம் செய்ய உதவியாய் இருப்பதன் அடிப்படையில் செய்யுள்கள் செல்வாக்குப் பெற்றிருந்த நிலை மாறியதால் உரைநடை வளர்ச்சியுற்றது. நாவல், சிறுகதை, கட்டுரை என்ற புதிய வகைமைகள் அறிமுகமாகி வளர்ச்சியடைத் தொடங்கின.

உரையுடன் கூடிய இலக்கியப் பனுவல்களும், அகரவரிசையில் அமைந்த அகராதிகளும், அச் சுவடியில் கிடைக்கத் தொடங்கிய பின்னர் நிகண்டு களை மனப்பாடம் செய்யும் முறை மறைந்தது. காலப்போக்கில் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற் குரியதாக மட்டும் நிகண்டுகள் மாறின.

எல்லாவற்றிற்கும் மேலாக சமய மற்றும் சாதிய நோக்கிலான அணுகுமுறையில் இருந்து இலக்கியம் விடுபட்டது. அத்துடன் பதவுரை, பொழிப்புரை கூறுவதுடன் நின்றுவிடாமல், சமூகக் கண்ணோட்டத்துடனும், ஒப்பியல் நோக்கிலும் தமிழ் இலக்கியங்களை அணுகும் முறை அறிமுக மானது. இவை தமிழ் இலக்கியம் கற்பிக்கும் முறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி முறையாகும்.

(உருமு தனலெட்சுமி கல்லூரி (திருச்சி) தமிழாய்வுத் துறை 2008 டிசம்பரில் நடத்திய கருத்தரங்கில் படித்த கட்டுரை. கட்டுரை படிக்கும் வாய்ப்பை நல்கிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ.கருணாநிதிக்கு என் நன்றி உரியது).

துணை நூற்பட்டியல்

அரவிந்தன் மு.வை. (1968)              -              உரையாசிரியர்கள், சென்னை.

சண்முகம் பிள்ளை (1982)                -              நிகண்டுச் சொற் பொருட் கோவை, மதுரை

சாமிநாதையர் உ.வே. (1965)          -              ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரச் சுருக்கம் (முதற் பாகம்), சென்னை.

சாமிநாதையர் உ.வே. (1990)          -              என் சரித்திரம், சென்னை.

சிவத்தம்பி கா. (2007)            -              சங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்.

                                சங்க இலக்கியமும் சமூகமும் (பதிப்பாசிரியர்)

                                பத்மநாதன், சி.கொழும்பு.

Pin It