தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கியச் செல்வங்கள் கிடைத்த பெருமை உண்டு. தொல்காப்பியத்தில் உரைநடையைப் பயன் படுத்துவது குறித்து விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் இடம்பெற்றுள்ளது. நக்கீரர், நச்சினார்க் கினியர் முதலியோர் அக்காலத்திலேயே உரை யெழுதத் தொடங்கிவிட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் சாசனக் கல் வெட்டுக்களிலும் உரைநடை கையாளப்பட்டன என்று சான்றுகள் காட்டப்பட்டு உள்ளன.

இவ்வளவு கூறப்பட்டிருப்பினும், தமிழ் உரை நடை வளர்ச்சி இருநூறு ஆண்டுகள் வரம்புக்கு உட்பட்டதுதான் என்றே சொல்ல வேண்டும். உரைக்கப்படுவதுதான் உரைநடை. ஆகவே பெரும் பகுதி மக்கள் தினசரி தங்கள் கருத்துக்களைப் பரி மாறிக் கொள்ளக் கையாண்டு வரும் வாய்மொழி வழக்கு அல்லது பழகு தமிழில் எழுதப்படுவதே உண்மையான ஜீவனுள்ள உரைநடையாக விளங்க முடியும்.

பண்டைய உரையாசிரியர்கள் வாய்மொழி வழக்கை இலக்கியத்துக்குள் புகுத்தவில்லை. கொண்டு வரவில்லை. வாய்மொழி வழக்காக வழங்கும் பழகு தமிழில் உரைநடை இலக்கியம் படைக்கும் போது, அது வாழ்க்கையோடும், வழக்கோடும் ஒட்டி வளர முடியும். இத்தகைய உரைநடை வளர்ச்சி தமிழில், ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டுவந்த காலத்தில்தான் தொடங்கியது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதத்தைப் பரப்புவதற்காக விவிலிய நூலைத் தமிழில் மொழி பெயர்த்தனர். நம்மவர் ஆங்கிலேய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்தனர். மொழிபெயர்ப் பாளர்களாக விளங்கினார்கள். இவர்கள் காலப் போக்கில் ஆங்கில மொழியிலுள்ள நல்ல உரை நடை இலக்கியங்களையும், அறிவியல் நூல்களையும் கற்றுக் கொண்டது, தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவியது. மேலும் அச்சு இயந்திரம் வந்தவுடன், புத்தகங்களும் பத்திரிகைகளும் பிரசுரமாயின. இதனால், வாசகர்கள் கூட்டமும் பெருகியது. இந்த வாசகர்களுக்குப் பழக்கமான, அவர்களது வாய்மொழி வழக்கிலுள்ள நடையிலேயே பெரும் பாலான நூல்கள் வெளியாகின. தமிழ் உரை நடை வளர்ச்சி இவ்வாறுதான் தொடங்கியது.

இத்தகைய உரைநடைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் பலர். அவர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றவர்கள். இது அவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை. இந்த ஆங்கில அறிவும், ஆங்கில உரை நடையில் பரிச்சயமும், அவர்களது தமிழ் உரை நடையை வளம் பெறச் செய்தன என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு தமிழ் உரைநடையை வலுவும், வளமும் பெறச் செய்த முன்னோடிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை.

1826ஆம் ஆண்டில் பிறந்த வேதநாயகம் பிள்ளை தமது மாணவப் பருவத்திலேயே தமிழில் கவிபாடும் திறமை பெற்றிருந்தார். எனினும் அவர் ஆங்கிலத் தையும் கற்றுக்கொண்ட காரணத்தினால், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்மொழிபெயர்ப் பாளர் பதவியும் பெற்றார். இதன்பின்பு, முன்சீப் பதவியும் பெற்று ஓய்வு பெற்றார். இவர் முன்சீப் பதவி வகித்த போதே, உயர்நீதிமன்ற ஆங்கிலத் தீர்ப்புக்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அத்துடன் ஆங்கிலத்தில் கூறப்பட்டிருந்த சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதன்முதலில் வெளியிட்டார்.

இவரது உரைநடைச் சிறப்புக்குச் சான்றாக விளங்குபவை இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி, பெண்கல்வி குறித்து இவர் எழுதியுள்ள கட்டுரைகள் முதலியவையாகும். பெண் கல்வி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பெண் கல்வியோடு, தாய்மொழிப்பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் எனப் பல்வேறு செய்திகளையும் உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கின என்றே சொல்லவேண்டும்.

இவ்வாறு பல உரைநடை நூல்களை எழுதி யிருப்பினும், வேதநாயகம் பிள்ளையின் பெயரும் புகழும் நிலைத்திருப்பதற்கும், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் உரைநடை முன்னோடிகளில் ஒருவராக மதிப்பதற்கும் அவரது பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலே முதற்பெரும் காரண மாகும். தமிழில் தோன்றிய முதல் நாவல் இலக்கியம் என்ற பெருமையும் அதற்குண்டு. நாவல் என்ற முறையில் பிரதாப முதலியார் சரித்திரம் ஓர் ஆரம்ப முயற்சிதான் என்றாலும், உரைநடை இலக்கியம் என்ற முறையில் அதன் சிறப்பு இவருக்குப் பின்வந்த உரைநடை ஆசிரியர்களுக்குரிய சிறப்புக்களுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. நாசூக்கான நகைச்சுவையும், யதார்த்த வாழ்க்கையில் காணும் வேடிக்கை மனிதர்களும், அவர்களது வாழ்க்கை விசித்திரங்களும் நாவலில் மிக அழகாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. இத்தனைக்கும் மேலாக இனிமையும், எளிமையும், வலுவும், வளமும் நிறைந்த பழகு தமிழ் நடையும், குட்டிக் கதைகளும், பழமொழிகளும் சேர்ந்து இந்த நாவலை அரியதோர் உரைநடைக் களஞ்சியமாகவே ஆக்கிவிடுகின்றன.

வேதநாயகம் பிள்ளையின் உரைநடைச் சிறப்புக்குப் பல காரணங்கள் கூறலாம். அவரது உரைநடை, பேச்சு வழக்கு கொண்டது. வழக்கோடு ஒட்டாத சொற்களை வலிந்து திணித்து எழுதும் நடையும் அவருக்கு இல்லை. சொல்ல வந்த செய்தியைக் கேட்பவரின் மனதில் ஆணித்தரமாகப் பதிய வைக்கும் விதத்தில் பெரும்பான்மையான மக்கள் பேசும் வழக்குத் தமிழில், அந்த மக்களோடு பேசும் விதத்தில் எழுதப்பட்ட நடையே வேதநாயகம் பிள்ளையின் உரைநடை. கடினமான சொற்கள் இல்லாமல் வழக்கோடு ஒட்டிய வலிமையும், ஓசை நயமும் மிக்க தெளிந்த தேர்ந்த உரைநடையாகும்.

தமிழில் முதல் முறையாக வெளியான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நவீனத்திற்கு எழுதிய ஆங்கில முன்னுரையில் அதன் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை பின் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்: ‘தமிழில் இதுமாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகை யால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் விளங்கும் எனப் பெருமை கொள் கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்கள் இருப்பின் பொறுத்தருளுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கிறேன்’. வேதநாயகம் பிள்ளையின் இக்கூற்று, நவீனத்தின் புதுமையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்வது ஒரு புறமிருக்க, சுவையும் போதனையும் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்பதும், சிறப்பாக பொதுமக்கள் படிக்கும் இலக்கியவகை என்பதும் ஆசிரியர் கூற்றிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உரைநடை தோன்றியதன் காரணத்தை இக்கூற்று ஓரளவு தொட்டுக் காட்டுகிறது எனச் சொல்லலாம்.

மேலும் பிரதாப முதலியார் சரித்திர நாவலின் கதாபாத்திரம் ஞானம்மாள் ஒரு இடத்தில் பின் வருமாறு கூறுகிறாள்: ‘இங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாம லிருக்கிற இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடை யாதென்பது நிச்சயம்’ என்று சொல்வதிலிருந்து உரைநடையின் முக்கியத்துவத்தை, அவசியத்தை ஆசிரியர் சுட்டிக்காட்டுவதை நாம் பார்க்க முடியும்.

அதேபோல் தமிழின் சிறப்பையும், மகத்துவத் தையும், மேன்மையையும் தனது நவீனமான பிரதாப முதலியார் சரித்திரத்தில் வேதநாயகம் பிள்ளை கூறுவது கவனிக்கத்தக்கது. பிரதாப முதலியார் வாயிலாக அதைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார். ‘நம்மைப் பெற்றது தமிழ். வளர்த்ததுந் தமிழ், நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததுந் தமிழ். நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பித்ததுந்தமிழ். நம்முடைய அன்னையும், தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டியதுந்தமிழ். தாய், தந்தை, குரு முதலான வர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததுந் தமிழ். நம்முடைய வீட்டு பாஷையுந் தமிழ். நாட்டு பாஷையுந் தமிழ்’ எனத் தமிழின் அருமையை அழகுற எடுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.

நவீனத்தில் வேதநாயகம் பிள்ளை கையாண்ட இன்னொரு சிறப்பம்சத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது நவீனத்தில் கையாண்ட துணைத்தலைப்புகள். இவை நாவலைப் படிக்கும் முன்பே கதை, உள்ளடக் கத்தைத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன.

அவரது உரைநடைக்கு உதாரணமாக பிரதாப முதலியார் சரித்திரத்தில் வரும் குட்டிக் கதையில் சில வரிகளைப் படிக்கிறேன். கேளுங்கள்.

“ஆதியூரில் அருமைநாத பிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல் ஏக காலத்தில் இரண்டு தாரங் களை மணம் செய்து கொண்டான். அந்தத் தாரங்கள் இருவரும் சகோதரிகள். கல்யாணம் நடந்த மறு வருஷத்தில், மூத்தவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள். பிறந்து ஒரு மாதத்துக்குப் பின்பு இளையதாரமும் ஒரு புத்திரியைப் பெற்றாள். மூத்த தாரத்தின் மகள் பேர் குண பூஷணி. இளைய தாரத்தின் மகள் பேர் மோகனமாலை. அந்தப் பெண்களுக்குப் பத்து வயசு நடக்கும் போது மூத்த தாரம் இறந்து அவளுடைய முன்னோர்கள் போன இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்து போன பிறகு, அவளுடைய மகளான குண பூஷணி இடத்தில் கஷ்ட காலம் வந்து கஷ்டம் செய்ய ஆரம்பித்தது. சிறிய தாயாருக்கும் அவளுடைய மகளுக்கும் வேலை என்னவென்றால், குண பூஷணியைத் திட்டுகிறதும், அடிக்கிறதும், கொடுமை செய்கிறதுமேயன்றி வேறொரு வேலையும் இல்லை. அவளுடைய தகப்பன் இளைய தாரத்தினுடைய கோளைக் கேட்டுக் கொண்டு மகளுக்கு நடக்கிற அநியாயங்களை விசாரிக்காமல் இருந்துவிட்டான். அதனால் அருமைநாத பிள்ளைக்கு எருமை நாத பிள்ளை என்கிற பட்டப் பெயர் கிடைத்தது”.

இந்தக் கதையை நாம் கேட்கிறபொழுது, வேத நாயகம் பிள்ளையே நம் முன்வந்து கதை சொல்லுகிற மாதிரி இல்லையா? ஆம். அவரது உரைநடை அத்தகைய தன்மை வாய்ந்தது. எனவேதான் வேத நாயகம் பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை ஆசிரியராக இருந்தபோதிலும், சென்ற நூற்றாண்டுத் தமிழ் உரைநடைக்கும், இந்த நூற்றாண்டின் உரைநடைக்கும் பாலமாகவும், இன்றைய தமிழ் உரைநடை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்கி வருகிறார்.

Pin It