2001-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 மற்றும் 11ஆம் நாட்களில் மதுரையில் சங்கராச்சாரியார் அவர்களால் கூட்டப்பட்ட கிராமப் பூசாரிகள் நான்காவது மாநாட்டில் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு...

1.            கிராமப் பூசாரிகள் நாட்டுப்புறத் தெய்வங் களுக்கு அசைவ உணவைப் படையலாக்கக் கூடாது.

2.            கிராமப் பூசாரிகளுக்கு இந்து சமயக் கோயில்களில் ஆகம முறையிலான பூசை களைச் செய்வதற்கு முறையான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

என்பவற்றையும் அவற்றின் அடிப்படையிலான கோரிக்கைகளையும் அரசு சார்பில் ஏற்று அதே ஆண்டு அதே மாதம் 14ஆம் நாளில் அரசாணையை வெளியிடச் செய்தார். மதுரை, திருச்செந்தூர், பழனி, மருதமலை, சமயபுரம், உப்பிலியப்பன் கோயில், திருவண்ணாமலை, மயிலாப்பூர் ஆகிய கோயில் களில் ஆண்டொன்றுக்கு நான்கு முறை - ஒவ்வொரு முறையும் 50 பூசாரிகளுக்குத் தங்குவதற்கு இலவச மாக இடமும் இலவசமாக உணவும் அளித்துப் பயிற்சி கொடுக்கப்படும் என அந்த ஆணை தெரிவிக்கிறது.” (சு. வெங்கடேசன் : 2003: ப.26).

இவ்வாறு பார்ப்பனியச் சமயத்தைப் பகைத்துக் கொள்ளாதபடி நடவடிக்கைகளை எடுத்ததற்கு எதைக் காரணமாகச் சொல்வது? பார்ப்பனிய சமயத்தை மட்டுமல்ல இஸ்லாமிய, கிறித்தவ சமயங்கள் போன்ற பிற நிறுவன சமயங்களையும் பகைத்துக் கொள்ளாத நிலைப்பாட்டிற்கு எதைக் காரணமாகச் சொல்வது? முதலாளியப் பாராளு மன்ற ஜனநாயகத் தேர்தலைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டியுள்ளது. தேர்தலுக்குள்ளும் மக்களின் வாக்குகளுக்குள்ளும் பகுத்தறிவு சமரசம் செய்துகொள்கிறது. தேர்தலைப் புறக்கணித்த ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் எந்தவித சமரசமும் இல்லாமல் கடவுளை மறுத்தார். பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார். அவரைப் பொருத்த வரை ஒருவனே தேவன் என்று சொல்பவர்களும் காட்டுமிராண்டிகள்தான். ஆனால் தேர்தலில் பங்குபெறும் கட்சிகள் கொள்கைகளைச் சமரசம் செய்து கொள்கின்றன. இதற்காகத்தான் ஒரே ஒரு தேவன் தோன்றினான்.

இந்தத் தேவன் நாகரிக மானவன். அவன் நாட்டுப்புற மக்கள் வழிபடு கின்ற சங்கிலிக் கருப்போ சுருட்டு முனியோ அல்ல; சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேவன். அந்தத் தேவன் நிறுவன பலமும் அதிகாரமும் உடையவன். அந்தத் தேவனை அனுசரித்துப் போனால் தேர்தலின்போது வாக்குகளுக்கு உத்தர வாதம் தருவான். அப்படியானால் அந்த நாகரிக மான தேவனோடு சமரசம் செய்துகொள்ளத் தானே வேண்டும். நாட்டுப்புறத் தெய்வங்களும் அவற்றை வழிபடுபவர்களும் சாதி அமைப்புகளாகச் சிதறுண்டு இருப்பதால் அவர்களுடைய வாக்கு களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றிப் பெற இயலும். எனவே அவர்களோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதனால் தான் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவர் களுடைய வழிபாட்டுச் சடங்குமுறைகளை மட்டும் மூடநம்பிக்கை சார்ந்தவையாகவும் காட்டுமிராண்டித் தனமானவையாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமல்லாமல் பிற தேர்தலியக் கட்சியினரும் கருதுகின்றனர்.

சங்கராச்சாரியார் அவர்கள் ஏற்பாடு செய்த கிராமப் பூசாரிகள் சங்கக் கூட்டத்தில் (1995லிருந்து 2001ஆம் ஆண்டு வரை நான்கு மாநாடுகள் நடை பெற்றுள்ளன) கலைஞர் கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதற்கு முன்பே ஜெய லலிதா அவர்கள் உரையாற்றியிருக்கிறார். 1996ஆம் ஆண்டு சென்னையில் கூட்டப்பட்ட கிராமப் பூசாரிகள் சங்கக் கூட்டத்தில் அன்றைய நிலையில் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த ஜெயலலிதா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் “கிராமக் கோயில்களில் உயிர்ப்பலியிடுதல் போன்ற பல்வேறு பூசை முறைகள் உள்ளன. கிராமப் பூசாரிகளுக்கு முறையான பயிற்சி இல்லாததால் பல கோயில்களில் சரிவர பூசைகள் செய்யப்படு வதில்லை என்பதை நானறிவேன். ஆகையால் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.

சமீபத்தில் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள வேதாகமக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்படும் என உறுதி யளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். (சு.வெங்கடேசன் : 2003 : ப.26). அவருடைய கூற்றிலிருந்து முறையான பூசை எது என்பதையும், முறையற்ற பூசை எது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. கிராமப் பூசாரிகள் அசைவ உணவைப் படைத்துத் தெய்வங் களுக்குப் பூசை செய்வதை முறையற்ற பூசை என்றும் ஆகம விதிமுறைப்படிச் சைவ உணவு வகைகளைப் படைத்துப் பூசை செய்வதை முறை யான பூசை என்றும் புரிந்துகொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக ‘முறையற்றது’ காட்டுமிராண்டித் தனமானது என்றும் ‘முறையானது’ என்பது நாகரிகமானது என்றும் புரிந்துகொள்ளலாம்.

தடைச் சட்டத்தின் எதிர்வினை

உயிர்ப்பலிச் சடங்கு தடைச் சட்டம் பெரும் பான்மையான பிரிவினரின் எதிர்ப்பையும் கோபத் தையும் சந்தித்தது. நாட்டுப்புறத் தெய்வக் கோயில் களின் பூசாரிகள் சங்கம், தலித்து இயக்கங்கள், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், மார்க்சிய இயக்கங்கள், மார்க்சிய சிந்தனையாளர்கள், நாட்டாரியல் மற்றும் மானிடவியல் ஆய் வாளர்கள் போன்றோர் தங்கள் தங்கள் பார்வை களில் உயிர்ப்பலித் தடைச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இப்படி எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் தங்கள் சொல்லாடல்களில் காட்டுமிராண்டித்தனம் - நாகரிகம் என்ற எதிர்வு களை நீக்கினார்கள். நாட்டுப்புறத் தெய்வங்களுக்குச் செய்யப்படுகின்ற உயிர்ப்பலிச் சடங்கு காட்டு மிராண்டித்தனமானது, மூடநம்பிக்கை சார்ந்தது என்று குறிப்பிடப்பட்டால் இந்துசமய மற்றும்

பிற நிறுவன சமயங்களின் சடங்குகளும் காட்டு மிராண்டித்தனமானவையாகவும் மூடநம்பிக்கை சார்ந்தவையாகவும் கருதப்படவேண்டும் எனக் குரல் கொடுத்தார்கள். இக்குரல்களின் நோக்கம் எல்லாச் சமயங்களையும் சடங்குகளையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலி யுறுத்துவது அன்று. மாறாக, நிறுவன சமயங் களையும் அவற்றின் சடங்குகளையும் சமய அதி காரம் படைத்தவர்களும் அரசாங்கமும் அங்கீகரித்து அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதையும் அதி காரம் இல்லாதவர்கள் என்பதற்காக அடித்தள மக்களின் வழிபாட்டுச் சடங்குகளை எவ்விதத் தயக்கமும் இன்றித் தடை செய்வதையும் கண்டிப்பதே யாகும்.

சில இயக்கத்தினர் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தின் மூலம் இந்துத்துவப் பண்பாடு திணிக்கப் படுகிறது எனக் குறிப்பிட்டு அத்தடைச் சட்டத்தை எதிர்த்தனர். சில இயக்கத்தினர் இத்தடைச் சட்டத்தை விளிம்புநிலை மக்களின் உணவுப் பண் பாட்டின் மீதான வன்முறை வெளிப்பாடாகப் பார்த்தனர். சில சிந்தனையாளர்கள் அடித்தள மக்களின் பண்பாடு அடையாள அழிப்புக்கான முயற்சியாக உயிர்ப்பலித் தடைச் சட்டத்தைக் கருதி அதனை எதிர்த்தனர். உயிர்களின் மீது கருணைகொண்டு இத்தடைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்ற கருத்தைச் சில சிந்தனை யாளர்கள் கிண்டல் செய்து அதனை அரசியலாக்கினர். இவ்வாறு பல்வேறு இயக்கத்தினரும் சிந்தனை யாளர்களும் நாட்டுப்புற மக்களின் உயிர்ப்பலிச் சடங்கிற்குத் தங்கள் தங்கள் கருத்தியலில் நிலை கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

நாட்டுப்புறக் கோயில் பூசாரிகள் உயிர்ப் பலிச் சடங்குகளைத் தெய்வங்கள் தொடர்பான தொன் மங்களோடு தொடர்புபடுத்தி அச்சடங்குகள் செய்யப்படவில்லை எனில் சமூகத்தில் உயிரிழப்பு ஏற்படும் என்றும், வேளாண்மை போன்ற தொழில்கள் பாதிக்கப்படும் என்றும், மழை பொய்த்து வறட்சியும் பஞ்சமும் அச்சுறுத்தும் என்றும் நம்பிக்கை சார்ந்து எச்சரித்துத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த தோடு அதைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் பொருட்டு நீதிமன்றத்தை நாடவும் செய்தார்கள். திருநெல்வேலி மாவட்டம் சிறுமலாஞ்சி ஊரின் சுடலை மாடன் கோவில் பாதுகாவலர் உயிர்ப் பலித் தடைச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் (அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19, 25க்கு எதிரானது என) வழக்குத் தொடுத்தார். சில பூசாரிகள் சட்டபூர்வமாக மீறாமல் சடங்குபூர்வமாக மீறினர். அதாவது, தெய்வத்திற்கு எதிரில் பலியிடு வதைத் தவிர்த்து கோயிலிலிருந்து 200 அடிகள் தள்ளிச் சென்று பலியிட்டனர். இவர்களைப் பொருத்தவரை நாட்டுப்புறத் தெய்வமும் இந்து சமயத் தெய்வமும் ஒன்றுதான். உயிர்ப் பலியிடு தலைத் தங்கள் மரபான நம்பிக்கைசார் வழிபாட்டு முறையாகக் கருதியதால் அதைத் தடை செய்ததன் காரணமாக உணர்வுநிலையில் பாதிக்கப்பட்டுத் தடைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினரே தவிர தடையின் அரசியலைப் பற்றிய புரிதல் எதுவும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பலியிடுதலைத் தடை செய்வதன் மூலம் இந்துத்துவப் பண்பாடு திணிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டு இப்படிப்பட்ட நோக்கமுடைய உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்த்தே ஆகவேண்டும் என வலியுறுத்தினார். அவருடைய மொழியிலேயே அவருடைய கருத்தைக் காணலாம். “குல தெய்வ வழிபாடு மற்றும் அதனை ஒட்டிய பண்பாட்டு நிகழ்வுகள் மட்டுமே தமிழ்ப் பெருங்குடி மக்களின் தனித்த அடையாளமும் நீண்ட நெடுங்காலத்துப் பாரம்பரியமும் கொண்ட ஒரு மூத்த இனம் என்பதற்குச் சான்றுகளாக

எஞ்சி நிற்கின்றன. அத்தகைய அடையாளங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுச் சாதி ஆதிக்க இந்துத் துவப் பண்பாடு திணிக்கப்படுமேயானால் காலப் போக்கில் வரலாற்றுப் பாரம்பரியமிக்க ஓர் இனம் வாழ்ந்ததற்கான அடிச் சுவடே இல்லாமல் அழிந்து போகும்.” (வல்லினம் (காலாண்டிதழ்): இதழ் 6-7 : ஆகஸ்டு 03-ஜனவரி 04,2003 : ப.96).

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்கள் உயிர்ப்பலி சடங்கைக் காட்டுமிராண்டிகளின் சடங்காகக் கருதவில்லை. அதே நேரத்தில் இந்து சமயக் கோயில்களில் செய்யப் படும் சடங்குகளை நாகரிகமானவை என்றும் கருதவில்லை. அவர் சொல்லுகிறார் “கம்யூனிஸ்டு களுக்கு மூடநம்பிக்கைகள் கிடையா. கடவுள் நம்பிக்கையும் கிடையாது. இதற்கு அப்பாற்பட்டு இந்த உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்ப் பதற்குக் காரணம் இது சமூக அடிப்படையில் அடித்தட்டு மக்களுக்கு விரோதமான நடவடிக்கை என்பதுதான். கடவுளுக்கு நெய்வேத்தியம் செய் வதோ கோயிலுக்கு நேர்ந்துவிடுவதோ அந்தந்த மக்களுடைய நம்பிக்கையைப் பொருத்த விஷயம்... சிவன், பெருமாள் போன்ற கடவுளைக் கும்பிடு பவர்கள் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைத்தான் படைக்கிறார்கள். அதேபோல்தான் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்க்கைக்குப் பயன் படக்கூடிய ஆடு, கோழியைப் பயன்படுத்திக்கொண்டு அதையே கோயிலுக்கு நேர்ந்து பலியிட்டு, அங்கேயே படைத்துச் சாப்பிடுகிறார்கள். நீண்ட காலப் பாரம்பரியமாக உள்ள இதை உடைக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் நினைக்கின்றன. கிடா வெட்டச் சொல்லி சாமி கேட்கிறதா? என்று இல. கணேசன் கேட்கிறார். அப்போ, நெய்விட வேண்டும் என்று எந்தச் சாமி கேட்கிறது?” (வல்லினம் (காலாண்டிதழ்): இதழ் 6-7 : ஆகஸ்டு 03-ஜனவரி 04,2003 : ப.103).

மேலே எடுத்துக்காட்டிய தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களின் கருத்துக்களையே இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சியின் உறுப்பினரும் திறனாய்வாளர் மற்றும் படைப்பாளருமாகிய சு.வெங்கடேசன் அவர்களும் தனக்கே உரிய மொழியில் விரித்துச் சொல்லி உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை இந்துத்துவ பாசிச அரசியல் சம்பந்தப்பட்டதாகப் பார்க்கிறார். “மூச்சுக்கு முந்நூறு முறை ஆகமம் பற்றிப் பேசுகிற சங்கராச்சாரி ஆகமப்படி பலிபீடம் வைத்துத்தான் கோயில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றிருப்பதை மாற்றி அமைப்பாரா? கிராமக் கோயில்களுக்குப் போய் பலியிடக் கூடாதெனப் பூசாரிகளிடம் எழுதி வாங்குகிற தமிழகக் காவல் துறை பெருந்தெய்வக் கோயில்களுக்குப் போய் பலிபீடத்தை அகற்றச் சொல்லி ஆச்சாரியர்களிடம் எழுதி வாங்குமா? தமிழக அரசின் இந்தச் சட்டம் ஆட்டுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஆகமத்திற்குப் பொருந்தாதா?” (2003 : ப.6) எனக் கேட்டுவிட்டு “இது வெறும் அஹிம்சை சம்பந்தப்பட்ட தல்ல; ஆடு, கோழி சம்பந்தப்பட்டதுமல்ல. அந்தப் போர் வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவாவின் பாசிச அரசியல் சம்பந்தப்பட்டது” (2003: 27) என்ற தன்னுடையதும் தன்னுடைய இயக்கம் சார்ந்தது மான முடிவான கருத்தைத் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு நாட்டினருக்கும், இனத்தினருக்கும், சாதியினருக்கும், வட்டாரத்தினருக்கும் உணவுப் பண்பாட்டு அடையாளம் வேறுபடுகிறது. இப்படிப் பட்ட பண்பாட்டு அடையாளங்களை வன்முறையாக அழிப்பதற்கு எந்த ஓர் அரசுக்கும் சமயத்துக்கும் உரிமையில்லை எனக் கூறி ஜெயலலிதா அவர் களின் தலைமையிலான தமிழக அரசின் உயிர்ப் பலித் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் தமிழ்த் தேசிய வாதியும் பகுத்தறிவாளருமாகிய இரோசேந்திர சோழன் அவர்கள். மேலும், ‘உயிர்ப்பலிச் சடங்கு மூடநம்பிக்கை சார்ந்தது என்பதால் அது தடை செய்யப்பட்டது’ என்றால் “குட்டி யானையைத் தாய் யானையிடமிருந்து பிரித்துக் கோயிலுக்குக் காணிக்கையாக்குவது, யாகம் என்கிற பெயரில் விலையுயர்ந்த பட்டுப் புடவைகளையும் கிலோ கணக்கில் நெய்யையும் தீயிலே போட்டுப் பொசுக்குவது, பாலாபிஷேகம், தயிராபிஷேகம் செய்வது, சுண்டல் கொழுக் கட்டை செய்து வைத்துப் படைப்பது, மகளிர் அணி, தொண்டர் அணி பால் குடம் எடுப்பது, மண்சோறு தின்பது, சர்க்கரைப் பொங்கல் புளியோதரை, நெய்வேத்யம் செய்வது இவை எல்லாமுமே மூடநம்பிக்கைதான்” (வல்லினம் (காலாண்டிதழ்): இதழ் 6-7: ஆகஸ்டு 03-ஜனவரி 04,2003 : ப.110-111) எனச் சுட்டிக்காட்டி இவற்றை யெல்லாம் ஏன் தடை செய்யவில்லை என வினவு கிறார்.

அடித்தள மக்களின் உயிர்ப்பலிச் சடங்கு மூடநம்பிக்கை சார்ந்தது என்பதை இராசேந்திர சோழன் அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் அதைத் தடைசெய்தவர்களின் சமயச் சடங்குகளும் மூட நம்பிக்கை சார்ந்தவையாக இருக்கும்போது அடித்தள மக்களின் சடங்கை மட்டும் தடை செய்தது நியாய மில்லை என்றும் இவ்வாறு அடித்தள மக்களின் உயிர்ப்பலிச் சடங்குத் தடை பார்ப்பனியமாக்கும் முயற்சி என்றும் கருத்துத் தெரிவிக்கிறார். இவ்வாறு பல இயக்கத்தினரும், கல்வியாளர்களும், அறிவாளர்களும் தமிழக அரசின் உயிர்ப்பலித் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட எதிர்க் குரல்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகவே உள்ளன.

உயிர்ப்பலிச் சடங்குத் தடையை எதிர்ப்பவர் களும் ஆதரிப்பவர்களும்கூட இக்கால இந்து சமய அரசியலைக் கவனத்தில் கொண்டே தங்கள் கருத்தை முன்வைக்கிறார்களே தவிர அச்சடங்கிற்கும் மக்களின் வாழ்வியல் சூழலுக்கும் இடையிலான உறவுகளை, அதாவது, சடங்கிற்கும் தொழில்முறைக்கும் இடை யிலான உறவுகளை, சடங்கிற்கும் உணவுப் பழக்கத் திற்கும் இடையிலான உறவுகளையும், இயற்கை பற்றிய அவர்களுடைய புரிதலின் ஊடாகச் சடங் கையும் இயற்கையையும் தொடர்புப்படுத்தும் அவர்களுடைய குறியீட்டு வெளிப்பாட்டு முறை யையும் புரிந்துகொள்கின்ற பன்மைநோக்கிலான முயற்சி அவர்களிடம் இல்லை. இவர்கள் அனை வரும் நாட்டுப்புற மக்களின் சடங்குகள் மூடநம்பிக்கை சார்ந்தவைதான் என்பதை முதலில் ஏற்று அறிவித்து விட்டு அதன் பிறகே அவரவர்களுடைய அரசியலை வெளிப்படுத்துகிறார்கள்.

உயிர்ப்பலிச் சடங்கு அடித்தள மக்களின் உணவுப் பண்பாட்டோடு தொடர்புடையதாக இருப்பதாலேயே அச்சடங்கைத் தடை செய்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துப் போர் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் அனைவரும் நாட்டுப் புற மக்களின் பிற சடங்குகள் தடை செய்யப்பட்ட போது அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. வழிபாட்டு உரிமையைப்பற்றிப் பேசியவர்கள் வேறு சில நாட்டுப்புறச் சடங்குகள் தடை செய்யப்பட்ட போது மௌனமாக இருந்தாலாவது பரவா யில்லை. அத்தடையைத் தீவிரமாக ஆதரித்துக் குரல் எழுப்பினர். எடுத்துக்காட்டாக, கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பேரையூர் முத்துக்குழி மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது செய்யப் பட்ட குழிமாற்றுச் சடங்கினைக் குறிப்பிடலாம். குழிமாற்றுச் சடங்கு பற்றி இஸ்லாமிய சமயத் தவரின் கருத்தையோ கிறித்துவ சமயத்தவரின் கருத்தையோ அறிந்துகொள்வதற்கு ஊடகங்கள் முயற்சி செய்யவில்லை. அவர்களும் தாங்களாக முன்வந்து கருத்து தெரிவித்ததாகத் தெரியவில்லை.

ஆனால் உயிர்ப்பலிச் சடங்கு தடை செய்யப் பட்டபோது இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சமயத்தவரும் முன்வந்து கருத்து தெரிவித்ததோடு அத்தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். ஏனெனில் உயிர்ப் பலித் தடைச் சட்டத்தை ஆதரித்துக் குரல் கொடுத்த இந்து சமய இயக்கத்தினர் இஸ் லாமிய மற்றும் கிறித்தவ சமயத்தினரின் உணவுப் பண்பாட்டையும் கேள்விக்கு உட்படுத்தியதையும் சைவ உணவை இந்து சமய உயர்ந்த சாதியினரின் குறியீடாகவும் அசைவ உணவைப் பிற சிறுபான்மைச் சமயத்தினர் மற்றும் அடித்தள மக்களின் குறியீடாகவும் நிறுவும் அரசியல் ஈடுபட்டதையும் புரிந்துகொண்ட இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சமயத்தினர் அவர்களுக்கு எதிரான அரசியல் செயல் பாடாக உயிர்ப்பலிச் சடங்கு தடை செய்யப் பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். ஆனால் குழிமாற்றுச் சடங்கோடு தங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சமயத்தினர் நினைத்துக் கொண்டதால் அதை அரசு தடை செய்தபோது மௌனமாக இருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளும், பல சமூகச் சிந்தனையாளர்களும்கூட குழி மாற்றுச் சடங்கு தடை செய்யப்பட்டதை நேரடி யாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கவே செய்தனர். இவர்களுள் தலித் இயக்கத்தினர் மட்டுமே குழி மாற்றுச் சடங்கு தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் இயக்கத்தினர் முதலாளிய பாராளுமன்ற ஜனநாயகத் தேர்தல் அரசியலின் தாக்கத்தினால் பிளவுபட்டு நின்றாலும் இந்துத்துவ ஊடுருவலைத் தடுத்தே வருகின்றனர். எனவே தான் விளிம்புநிலை மக்களின் வழிபாட்டுச் சடங்குகள் தடை செய்யப்படும்போது அதை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்.

நாட்டுப்புற மக்களின் சடங்கு நிகழ்வுகள் மட்டுமன்றி அவர்களுடைய பிற பண்பாட்டு நிகழ்வுகளும் காட்டுமிராண்டித்தனமானவை யாகவே கருதப்படுகின்றன. அவர்களுடைய கோழிச் சண்டை, கிடாய்முட்டு, சல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களில் விலங்குகள் துன்புறுத்தப் படுவதாகக் குறிப்பிட்டு அவை காட்டுமிராண்டி களுக்கு உரியவையாகக் கருதப்பட்டுத் தடை செய்யப் பட்டன. நாட்டுப்புறச் சடங்குகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதைப் போன்றே நாட்டுப்புற மக்களின் விளையாட்டு வகைகளும் தடை செய்யப் பட்டன. குறிப்பாக, சல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டதை இங்குக் குறிப்பிடலாம். இந்தத் தடையை விதித்தது அரசாங்கம் அல்ல; இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம். இந்தத் தடையைப் பற்றிப் பல்வேறு அச்சு ஊடகங்களும் மின்னூடகங் களும் செய்தி வெளியிட்டன.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் - தடை

jallikattu_630

“சிக்கல்-ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை: காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டிப்பு” என்ற தலைப்பில் 12.01.2008இல் வெளிவந்துள்ள தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வெளி யிடப்பட்டது. அதே நாளிதழில் இரண்டாவது பக்கத்தில் “இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான, நாகரிகமற்ற செயல்கள் தொடர்ந்து நடக்கக் கூடாது. பிராணிகள் நலன்மீதும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். சினமூட்டப் பட்ட காளை கூட்டத்துக்குள்ளே அவிழ்த்துவிடப்படுவதும் அந்தக் காளை மீது பலர் ஏறித் தொங்கியபடி அடக்க முற்படுவதும் ஆரோக்கியமான விளையாட்டல்” என நீதிபதிகள் கூறியதாகவும் செய்தி யாகக் குறிப்பிட்டுள்ள அதே செய்தியைத் தினகரன் நாளிதழ் “தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு-ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை - தென் மாவட்ட மக்கள் அதிருப்தி - இன்று கடைகள் அடைப்பு” (12.01.2008) என்ற செய்தித் தலைப்பை முதல் பக்கத்தில் வெளியிட்டுவிட்டு இது தொடர் பான விரிவான தகவலை முதல் பக்கத்திலும் அதன் தொடர்ச்சியை ஒன்பதாவது பக்கத்திலும் வெளியிட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு: “ஜல்லிக்கட்டு ஒரு காலத்தில் வீர விளையாட்டாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போதும் அதை வீரவிளையாட்டாகக் கருத முடியாது. விலங்குகள் சித்திரவதை செய்யப்படும் எந்த நிகழ்ச்சியையும் அனுமதிக்க முடியாது.

காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இதைப் போன்றே பிற தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் களும் (The Hindu: 12.01.2008) ஜல்லிக்கட்டு விளையாட்டைக் காட்டுமிராண்டித் தனமானது என நீதிபதிகள் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள மிகச் சரியான வாசகங்களை அறிய இயலவில்லை. ஆனால் நாளிதழ்கள் அனைத்தும் “ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது” என நீதிபதிகள் தெரிவித்ததாக ஒரே மாதிரியான செய்தியையே வெளியிட்டிருப்பதால் அதனை உண்மை என்று நம்பலாம். ஆனால் இதே உச்சநீதிமன்றம் மாட்டு வண்டிப் பந்தயத்தில் (ரேக்ளா வண்டிப் பந்தயம்) மாடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் தடையை ஒரு சில அமைப்புகளே ஆதரித்தன. விலங்குகள் நலனில் அக்கறை காட்டி வரும் மேனகா காந்தி அவர்கள், விலங்குகள் நலவாரியத் தலைவர் டாக்டர் கார்ப், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்புகளைச் சேர்ந் தோர் ஆகியோர்தான் தடைக்கு ஆதரவும் மகிழ்ச்சி யும் தெரிவித்துள்ளனர். இவர்கள் சல்லிக்கட்டைக் காட்டுமிராண்டித்தனமானது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை ஆதரித் தவர்களைவிடத் தடையை எதிர்த்தவர்களே அதிகம். அதாவது, சல்லிக் கட்டு நாகரிகமான வீர விளை யாட்டுதான் எனச் சொன்னவர்களே அதிகம். தமிழகத்தின் தென்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உணர்வுகளை உண்ணாவிரதப் போராட்டம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்தல், தலையை மொட்டையடித்துக் கொள்ளுதல், தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்துதல் (சிங்கம் புணிரி என்ற ஊருக்கருகிலுள்ள சூரக்குடி கிராமத்தில்) எனப் பல வழிகளில் வெளிப்படுத்தினர். சல்லிக்கட்டு நடத்தாவிட்டால் காலரா போன்ற கொடிய நோய்கள் கிராமத்து மக்களைத் தாக்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அச்சத்தின் மூலமாகவும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது போன்றோ விலங்குப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுவது போன்றோ சல்லிக்கட்டு மாட்டைத் தாங்கள் துன்புறுத்து வதில்லை என்றும் அதை மிக அக்கறையோடு வளர்ப்பதாகவும் பராமரிப்பதாகவும், சல்லிக்கட்டு மாடு அதனை வளர்ப்பவரின் பண்பாட்டு மதிப்பின் அடையாளமாகக் கருதப்படுவதாகவும் தடையை எதிர்த்தவர்கள் வாதாடினர். உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் எனக் குறிப்பிட்டதற்கு மிகவும் வருந்துவதாக வீர விளையாட்டுக் குழு என்ற அமைப்பின் தலைவர் இராசசேகரன் செய்தித்தாள்களுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

சல்லிக்கட்டு தடை எதிர்ப்பு அரசியலும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. தடையை எதிர்த்த பொதுமக்கள் பெரும்பாலானோர் இடைநிலை சாதியைச் சேர்ந்த பொருளாதார வசதியற்ற ஆண் உழைப்பாளர்களே. சல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதிலும் அடக்குவதிலும் முக்குலத்தோர் சமூகத்தினரே மிகுதியாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அடுத்து, நாயக்கர், நாடார், கோனார், வலையர் ஆகிய இடைநிலைச் சாதியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தலித் சமூகத்தினரின் இடம் மிகக் குறைவே. பொருளாதார வசதியுடைய தேவேந்திர குல வேளாளர் சிலர் வளர்க்கும் காளை சல்லிக்கட்டில் பங்கு பெறுகிறது. சல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளை வெறியூட்டுவதற்குப் பறையர் சமூகத்தினரின் பறையிசை பயன்படுத்தப் படுகிறது. இந்த அளவில்தான் அவர்களுடைய பங்களிப்பு உள்ளது. தலிச் சமூகத்தினர் சல்லிக் கட்டு விளையாட்டைத் தங்களுடைய பண்பாட்டு அடையாளமாகக் கருதியதில்லை.

சங்க இலக்கியங் களில் முல்லை நில மக்களாகிய கோவலர், இடையர், ஆயர் சமூகத்தினரின் திருமணமுறையோடு தொடர் புடைய வீர விளையாட்டாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இக்காலத்தில் கோனார் அல்லது இடையர் சமூகத்தினரின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுவதில்லை. இக்காலத்தைப் பொருத்த வரையில் சல்லிக்கட்டு விளையாட்டு முக்குலத்தோர் சமூகத்தினரின், அதுவும் குறிப்பாகக் கள்ளர், மறவர் சமூகத்தினரின் பண்பாட்டு அடையாள மாகவே கருதப்படுகிறது. எனவே இந்தச் சமூகங் களைச் சேர்ந்த உழைப்பாளர்களே சல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்; கொடுத்து வரு கின்றனர். பிற சமூகத்தினர் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதுபற்றி அக்கறையற்றவர்களாக இருந்தனர். சல்லிக்கட்டு விளையாட்டில் பங்கு பெறும் சமூகங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் காட்டுமிராண்டிகளாகக் கருதப்படுவதோடு அவ் விளையாட்டும் காட்டுமிராண்டித்தனமான தாகக் கருதப்படுகிறது.

சல்லிக்கட்டு விளையாட்டில் பார்ப்பனர், வேளாளர் போன்ற சமூகத்தினர் எந்த வகையிலும் பங்கு பெறுவதில்லை. மேற்சுட்டிய சில குறிப்பிட்ட சாதியினரே சல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப் பதிலும் காளைகளைப் பிடிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண்களே இவ் விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களுக்கான வீர விளையாட்டாகவே கருதப் படுகிறது. சல்லிக்கட்டுக் காளையைப் பெண்கள் பராமரித்தாலும்கூட விளையாட்டுக் களத்தில் பெண்கள் இடம்பெற இயலாது. பெண்கள் காளையை அடக்க இயலாது என்பதைவிட அடக்கக்கூடாது என்பதுதான் ஆண்களின் விருப்பம். இதைப் போன்றே சல்லிக்கட்டில் பசுமாடு கலந்து கொள்ளத் தகுதியற்றது என்பதைவிட அது கலந்து கொண்டு ஆண்களால் அடக்க இயலவில்லையெனில் அது ஆண்சமூகத்திற்குக் கேவலம் என்பதால்தான் அதைச் சல்லிக்கட்டில் அனுமதிப்பதில்லை. இப்படி சாதி மற்றும் ஆண்பாலின அதிகார அரசியலுக்கு உரிய சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் அல்லது குரல் கொடுப்பதற்குத் தூண்டியவர்கள் ஆண்களே.

காட்டுமிராண்டித்தனமானது எனக் குறிப் பிடப்பட்டு உச்சநீதிமன்றத்தால் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதைத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தன. இத்தகைய எதிர்ப்புக்கு ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனிக் காரணம் இருந்தது. திராவிடக் கட்சிகள், குறிப் பாகத் திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடர் கழகமும் சல்லிக்கட்டு நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளோடும் சடங்குகளோடும் சாதி உணர்வுகளோடும் தொடர்புடையது என்பதற்கு முக்கியத்துவம் தராமல், அவற்றைக் கண்டு கொள்ளாமல் அதனைத் தமிழ்ப் பண்பாட்டு மரபுத் தொடர்ச்சியாகவும் தமிழர் வீரத்தின் குறி யீடாகவும் கருதியதால் உச்சநீதிமன்றத் தடையை ஆதரிக்கவில்லை. இதே கருத்து பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இருந்ததால் அவையும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்துக் குரல் கொடுத்தன.

jallikattu_279ஓர் அரசு என்ற முறையில் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்க இயலாது என்ற போதிலும் அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கருணாநிதி அவர்களின் தலைமையிலான அரசு நீதிமன்றத்தை வேண்டி விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது. குழிமாற்றுச் சடங்கையும் உயிர்ப்பலிச் சடங்கையும் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு தடை செய்த போது அதனைக் கி.வீரமணி அவர்களின் தலைமை யிலான திராவிடர் கழகம் வரவேற்றது. திராவிட முன்னேற்றக்கழகம் மௌனமாக இருந்தது. ஆனால் ஜல்லிக் கட்டுக்கான தடையை இரு கழகங்களும் வரவேற்கவில்லை. மாறாக, எதிர்த்துக் குரல் கொடுத்தன. உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்த்துப் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை குரல் கொடுத்தன. அது காட்டுமிராண்டித்தன மானது என இக்கட்சிகள் கருதவில்லை. ஆனால் குழிமாற்றுச் சடங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை ஆதரித்ததன் மூலம் அச்சடங்கு காட்டுமிராண்டித் தனமானது என்பதை இக்கட்சிகள் ஏற்றுக் கொண்டன.

அண்மைக் காலங்களில் நாட்டுப்புற மக்களின் வழிபாட்டுச் சடங்கு முறைகளில் தலையிட்டு அவற்றை இந்து சமயத்திற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்து முன்னணி, சிவசேனாக் கட்சி, விஸ்வஹிந்து பரிஷத் போன்ற இந்து சமயம் சார்ந்த அமைப்புகள் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துக் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. தென்தமிழ் நாட்டு இந்துக்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டை அரசியல்படுத்தி அதற்கான தடையை இவ்வமைப்புகள் எதிர்த்தன. அதனைக் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டாகக் கருதவில்லை. ஆனால் இவை உயிர்ப்பலிச் சடங்கையும் குழிமாற்றுச் சடங்கையும் காட்டுமிராண்டித்தனமானவையாகக் கருதியதால் அவற்றைத் தீவிரமாக எதிர்த்தன.

நாட்டுப்புறச் சடங்குகள் இந்தியாவின் தமிழகத்தில் மட்டுமின்றி ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் (இலங்கையில் விலங்குப் பலிச்சடங்கைத் தடை செய்தமைபற்றி முன்னரே விளக்கப்பட்டு உள்ளது) அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடு களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்க நாட்டு புளோரிடா நகர நிர்வாகம் 1993 ஜூலையில் விலங்குகள் பலியிடப்படும் சடங்குகளைத் தடை செய்தது (Washington Post 06.12.1993- இணைய தளத்திலிருந்து பெற்றது). அமெரிக்காவைப் போன்றே பிரிட்டிஷ் நாட்டிலும் 16.03.1999இல் விலங்குப் பலிச் சடங்கிற்குத் தடை விதிக்கப் பட்டது. இவற்றைப் போன்றே உலகின் பல நாடு களிலும் பலிச் சடங்குகள் தடையைச் சந்தித்திருக் கின்றன.

பொதுவாக, உலகின் பல்வேறு நாடு களின் அரசுகளும் அரசுசார் நிறுவனங்களும் அந்தந்த நாட்டு நிறுவன சமயங்களின் சடங்கு களை மூடநம்பிக்கையால் உருவாக்கப்பட்டவை யாகவோ காட்டுமிராண்டித்தனமானவையாகவோ கருதுவதில்லை; அவற்றைத் தடை செய்வதும் இல்லை. ஆனால் நாட்டுப்புற மக்களின் அல்லது அடித்தள மக்களின் சடங்குகளை எவ்விதத் தயக்கமும் இன்றி மூடநம்பிக்கை சார்ந்தவை யாகவும் காட்டுமிராண்டிகளுக்கு உரியவையாகவும் கருதி அவற்றைத் தடை செய்திருக்கின்றன. இந்தி யாவில், குறிப்பாகத் தமிழகத்தில் நடந்ததும் இதுதான்!

உலகம் முழுவதிலும் உடல் உழைப்போடு நேரடித் தொடர்பில்லாதவர்களும் உயர்ந்த இனத்தினர் என்றும் உயர் சாதியினர் என்றும் கட்டமைப்பட்டவர்களுமே உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்டோரின் பல்வகைப்பட்ட சடங்கு களைக் காட்டுமிராண்டித்தனமானவை எனக் கூறி அவற்றைத் தடை செய்திருக்கிறார்கள். இவ்வாறு தடை செய்தல், தடையை ஆதரித்தல், எதிர்த்தல் ஆகிய ஒவ்வொன்றும் இன உணர்வாளர்களின், சாதிப் பற்றாளர்களின், பகுத்தறிவு இயக்கத் தினரின், மார்க்சிய இயக்கத்தினரின், மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பினரின், சமயப் பற்றாளர்கள் மற்றும் வெறியர்களின் அதிகார அரசியல் செயல்பாடே தவிர சடங்குகளைச் செய்கின்ற மக்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி இல்லை.

ஒவ்வொரு பிரிவினரும், இயக்கத் தினரும் தங்களுக்கு எதிரே தங்களுடைய எதிரி களை நிறுத்தி வைத்துக்கொண்டு அவர்களை நோக்கி கை உயர்த்தி விமர்சிக்கிறார்களே தவிர தங்களுடைய விவாதத்திற்கு மையமாக இருக்கும் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்படும் மக்களின் சடங்குகளின் குறியீட்டுப் பொருண்மைகளையோ சடங்குகளில் புதைந்திருக்கும் துயரச் சுவடுகளையோ மகிழ்ச்சி முகங்களையோ ஒடுக்கப்படுகின்ற உணர்வு களின் தழும்புகளையோ அவ்வுணர்வுகளுக்கான மருந்திடும் முறையையோ உற்பத்தி முறைகளின் கீறல்களையோ கூட்டு அடையாளங்களைக் கட்ட மைக்கும் முறையையோ சமூக அதிகாரத்தை உணர்த்தும் முறையையோ அழகியல் உணர்வு வெளிப்படும் முறைகளையோ புரிந்துகொண்டு அப்புரிதலின் பின்புலத்தில் அம்மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத் தங்கள் அரசியல் அதிகாரத்தை யோ அதிகார அரசியலையோ பயன்படுத்தினால் வரவேற்கலாம்.

சல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்றுதான் மனித உரிமைக் காப்பாளர்களும் விலங்குகளை நேசிப்பவர்களும் கவலைப்படுகிறார்களே தவிர உழைத்து உண்ணுகின்ற மனிதர்களைப்பற்றியோ, அந்த விளை யாட்டின் மூலம் வெளிப்படும் ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஆணாதிக்க வாதிகளின் அதிகார முகங் களைப் பற்றியோ, வீரம் என்றும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் என்றும் சொல்லாடலை நிகழ்த்தி உழைத்து வாழும் மக்களை உசுப்பேத்தி விட்டு அவர்களுடைய வாழ்க்கையில் துயரங் களைத் திணிக்கும் ஆதிக்க சாதியினர் மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் அரசியலைப் பற்றியோ சிந்தித்துப் பார்ப்பதில்லை.

சல்லிக்கட்டு விளையாட்டைச் சட்டத்தின் மூலமாக மட்டும் தடுத்து நிறுத்திவிட இயலாது. அவ்விளையாட்டோடு தொடர்புடைய நம்பிக்கைகளின் வேர்களையும் அவ்வேர்களிலிருந்து கிளைத்திருக்கும் சடங்கு களையும் அச்சடங்குகளைச் சார்ந்து இருக்க வேண்டிய வாழ்க்கைப் பரிமாணங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திப் புரிந்துகொண்டு பரிகாரங்களைத் தேடினால் தவிர எப்படிப்பட்ட அடக்கு முறையினாலும் சல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்ய இயலாது. உயிர்ப்பலிச் சடங்குகளும் எந்த அடக்குமுறைக்கும் கட்டுப்படாது. இந்தச் சடங்கு திடீரென்று வானத்திலிருந்து குதித்து மக்களோடு கலந்துவிடவில்லை. மக்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அச்சடங்குகளை உருவாக்கிக் கொண்டார்கள். மாறிவரும் சமூகத்திலும் அந்த அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்றால் அச்சடங்குகளும் தொடரவே செய்யும். மாறி வரும் சமூகத்தில் சமூக அனுபவங்கள் தேவையற்றன

வாகப் போகும்போது அவை சார்ந்த சடங்குகளும் மறைந்து போய்விடும். எந்த மக்கள் கூட்டமும் தங்கள் வாழ்க்கை இயங்குதலுக்குத் தடையாக இருக்கும் சடங்குகளை வீணே சுமந்துகொண்டிருப்பதில்லை. எத்தனையோ சடங்குகள் இயற்கை மரணத்தைச் சந்தித்திருக்கின்றன. அதற்காக அச்சடங்குகளைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்பதில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதற்கான விவாதத்தைத் தொடங்க லாமே தவிர புரிதல் இல்லாத போதனையையும் அடக்குமுறையையும் தொடர்வதால் உழைக்கும் மக்களுக்குப் பயன் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.

பார்வை நூல்களும் கட்டுரைகளும்

இராசுகுமார், மே.து., சமூக-பொருளியல் நோக்கில் சித்தர் பாடல்கள், நா.வா. -வின் ஆராய்ச்சி 51, ஜனவரி 2007 ப. 75-96.

Thurston, Edgar. Ethnographic Notes in Southern India, Asian Educational Services Publications, Madras, 1989.

முத்தையா, இ., அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை ப.134-149.

மறைமலையடிகள், அறிவுரைக் கொத்து, பாரி நிலையம், சென்னை 1970 (ஏழாம் பதிப்பு)

வீரமணி, கி., (தொகுப்பாசிரியர்), பெரியார் களஞ்சியம் - கடவுள் (முதல் தொகுதி), பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை, 1994 (நான்காம் பதிப்பு) இ ப. 272-274.

ஆனைமுத்து, வே., பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (2ஆம் தொகுதி), சிந்தனையாளர் கழகம் வெளியீடு, திருச்சி, 1974 (முதல் பதிப்பு).

Pin It