சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் ஒரு தொலை நோக்குச் சிந்தனையாளர்; சிறந்த மார்க்சிய அறிஞர்; எந்தச் சிந்தனைகளையும், நிகழ்வுகளையும் மார்க்சியப் பின்புலத்திலேயே ஆய்ந்தவர்; நோக்கியவர்; பொது வுடைமை இயக்கம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே தமிழகத்தில் 1923-ஆம் ஆண்டிலேயே தொழிலாளி - விவசாயி கட்சியைத் தோற்றுவித்தவர். அவ்வாண்டிலேயே மே, முதல் தேதி அன்று இந்தியாவில் முதன்முதலாக மேதினத்தைக் கொண்டாடி வழி காட்டியவர்; அந்த நன்னாளை அரசு, விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தியவர். அந் நன்னாளில் தொழிலாளி என்ற தமிழ் இதழையும், ‘லேபர் அண்டு கிசான் கெசட்’ என்ற ஆங்கில இதழையும் தொடங்கி நடத்தியவர். கயாவில் 1922 - டிசம்பரில் நிகழ்த்திய அகில இந்திய காங்கிரசு மாநாட்டில் பூரண சுதந்திரம் குறித்து அறிக்கை வைத்ததோடு, தொழிலாளி, விவசாயி ஆகியோர் நலன் குறித்து காங்கிரசு இயக்கம் திட்டம் வகுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவர்; அதில் வெற்றியும் பெற்றவர்.

கான்பூரில் 25.12.1925 - அன்று நடந்த பொது வுடைமை இயக்க மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமையுரையை நோக்கினால், இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து மார்க்சிய கண்ணோட்டத்தில் எவ்வாறு அணுகியுள்ளார் என்பதை நன்கு உணரலாம். சுருங்கக் கூறின் அவரொரு மார்க்சிய முன்னோடி. இங்கொரு நிகழ்வை நோக்கினால் அவரது மார்க்சிய நோக்கு எத்தன்மையது என்பதை உணரலாம். 1933-ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக் கர்ப்பத்தடைச் சட்டத்தைக் கொண்டுவந்த அச்சமயத்தில், அந்தச் சட்டத்தைச் சமய நம்பிக்கையுடையோரும், பிற் போக்காளரும், கத்தோலிக்க சமயத்தினரும் எதிர்த்துக் கூக்குரல் எழுப்பினர். அந்தச் சட்டம் கடவுளுக்கும், சமயத்திற்கும் மாறானது என்றும், பாவம் மிக்கது என்றும் கூறி, அச் சட்டத்தைத் திரும்பிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, பகுத்தறிவு இயக்கத்தினர் (பெரியார் இயக்கத்தினர்) அச்சட்டத்தை வரவேற்றும், சட்டத்தை எதிர்ப்போரை எதிர்த்தும் குடியரசு இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியும், ஆங்காங்கே கூட்டங்களை நடத்தியும் வந்தனர்.

22.10.1933 முதல் வெளிவந்த குடியரசு இதழ் களை நோக்கினால், அக்காலத்தில் கர்ப்பத்தடையைக் குறித்துப் பரபரப்பாக எத்தனை வாதங்கள் நிகழ்ந் துள்ளன என்பதைக் காணலாம். அவையாவும் சிந்தனையைக் கிளறும் அறிவு சார்ந்த வாதங்களாக இருப்பதை உணரலாம். மேலும் இதில் பெண்கள் வெகுண்டெழுந்து வாதங்களில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தந்தை பெரியாரும் ஈடு பட்டு கார-சாரமான கருத்துகளைக் கூறியுள்ளார். இந்தக் கருத்துப் போரில் அனைவரையும் மறுத்துச் சிங்காரவேலர் எழுதியிருப்பதுதான் நம் கவனத்துக்கு உரியது. இவ்விவாதத்தில் முதன் முதலில் இந்திராணி என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அவர் அக் கட்டுரையில், பிரசவ வேதனை எவ்வளவு கொடுமை யானது என்பதைப் பெண்கள்தாம் அறிவர் என்றும் அந்தக் கொடுமையை அறியாதவர்கள்தான் அச் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும், தடைச் சட்டம் வந்தால் பெண்கள் ஒழுக்கம் இழப்பார்கள் என்று கூறுவது பெண் மக்களையே இழிவுபடுத்து வதாகும் என்றும், சாரதா சட்டம் வந்தபோது, பலர் மதம் அழிந்துவிடுமென்று கூப்பாடு போட்டனர்’ எனினும் மதம் அழிந்துவிடவில்லை என்றும் வறு மையைப் பெருக்காமல் இருக்கக் கர்ப்பத்தடைச் சட்டம் மிக வேண்டியது என்றும் எழுதியிருந்தார்.

பகுத்தறிவு இயக்கத்தினரும், வேறு சில சமூகச் சிந்தனையாளரும் குடியரசில் கட்டுரைகள் எழுதி யுள்ளனர். கட்டுரைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், சென்னையில் பற்பல இடங்களில் சட்டத்தை ஆதரித்துக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். இவற்றில் நீதிபதிகளும், வழக்குரைஞர்களும், இரு வரும் மக்கள்தொகை பெருகினால் வறுமை ஏற்படுமென அஞ்சுகின்றனர்.

சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் உரையாற்றி யுள்ளனர். குறிப்பாக, டாக்டர் வரதராசலு நாயுடு, பி.சிவராவ், நீதிபதி சின்னசாமி ஐயர், சேஷ அய்யங்கார், ரபேசம், வெங்கடராம சாஸ்திரி, தாதாபாய் அம்மாள், சுபத்திரை அம்மாள் போன் றோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் திரும்பத் திரும்பப் பல கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி யுள்ளனர்.

இவ்விவாதத்தில் தமிழறிஞர் சாமி சிதம்பர னாரும் பங்கேற்றுக் கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் கர்ப்பத் தடைச் சட்டம் சமய வாதிகள் கருதுவதைப் போன்று பாவமுடையது அன்று என்றும், கருவை இடையில் கலைப்பது தான் மனித விரோதமேயன்றிக் குழந்தை உண்டா காமல் பார்த்துக் கொள்வது தவறில்லை என்றும், சட்டத்தை எதிர்க்கும் சந்நியாசிகளும், சந்நியாசினி களும்தான் அடிக்கடி கருக்கலைப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும், அவர்கள்தான் பாவம் செய்பவர்கள் என்றும், உலகு முழுவதும் இச் சட்டம் இருக்கும்போது நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுக் கீழுள்ளவாறு எழுதியுள்ளார்.

“தேசத்தின் பரப்பளவுக்கும், உணவுப் பொரு ளுக்கும், செல்வப் பெருக்கத்திற்கும் தக்கவாறு மனிதர்களின் தொகையை வைத்துக் கொள்வது எவ்வளவு சிறந்ததாகும். இவ்விவாதம் குறித்துத் தந்தை பெரியாரும் இதே கண்ணோட்டத்தில் தான் குடியரசில், தலையங்கத்தையும் கட்டுரையையும் வரைந்துள்ளார். அவற்றில், கர்ப்பத்தடைச் சட்டம் பல நாடுகளில் இருப்பதாகவும், அதனைச் சரிவர நடத்த அரசுத் துறையில் பல தனி அமைப்புகள்’ இருப்பதாகவும், சமயவாதிகள் நம்நாட்டில் எதிர்ப்பது தவறென்றும், சாரதா சட்டத்தை நிறைவேற்றியபோது பலர் எதிர்த்துப் பின்னர் அடங்கிவிட்டதையும், தேவதாசி ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் எதிர்த்துப் பின்னர் வாய் திறவாமல் இருந்துவிட்டதையும் குறிப்பிட்டு விட்டு இந்தச் சட்டத்திலும் அவர்கள் தோல்வியே அடைவார்கள் என்றும் எழுதியுள்ளார். அக் கட்டுரையில் அவர் இறுதியாகக் குறிப்பிட்டிருப்பது நம் சிந்தனைக்கு உரியது.

“இந்திய நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூக வாழ்க்கை, சுதந்திரம், ஆதாரம், உடற்கூற்று ஆதாரம் முதலியவைகளின் தாழ்ந்த நிலைக்குப் பரிகாரம் செய்ய வேறு எத்தனையோ வழிகளில் பலநிபுணர்களும், தலைவர்களும் வெகுகாலமாக முயன்றும் பயன்படாமல் போகவே வேறுவழி யில்லாமல் இந்த உண்மையைப் பின்பற்ற வேண்டி யவர்களானார்கள்.

தந்தை பெரியார் - குடியரசு - தலையங்கம் - 5.11.33 கர்ப்பத்தடைச் சட்டத்தால், பெண்கள் அளவுக்கு அதிகமாகப் பிள்ளைகளைப் பெறாமல் இருப்பதுபோன்ற பலனும், அடிக்கடி ஏற்படும் பிரசவ வேதனையைத் தடுக்கும் பயனும் பெண் தன் உடல் நலத்தை நன்கு பேணும் வழியும், சமூக வாழ்க்கையில் பலதுறைகளில் ஈடுபடும் நிலையும் ஏற்படும் என்பதில் யாருக்கும் கருத்து வேறு பாடில்லை; ஆனால் ஜனத்தொகைப் பெருக்கமே, நாட்டின் வறுமைக்குக் காரணமாக இருந்து வருகிறது என்று இவர்கள் குறிப்பிடுவதுதான் இங்குக் கருத்து வேறுபாட்டிற்குரியதாக உள்ளது. அக்காலத்தில், தந்தை பெரியார் உட்பட எல்லாச் சிந்தனையாளர்களும் அக்கருத்தைத்தான் முடிவாகக் கூறியுள்ளனர். இது சரியானதன்று என்பதை விளக்கவே சிங்காரவேலர் கர்ப்பத்தடைப் பித்தம் என்னுங் கட்டுரையை வரைந்துள்ளார். அதில், மற்றவர்களின் கருத்தை அறிவியல் அடிப்படையில் மறுத்துள்ளார். காலங்காலமாகக் கூறிவரும் பொய்ம்மையைக் கட்டுடைக்கிறார். இது குறித்து இக்கட்டுரையாசிரியர் சிங்காரவேலரின் சிந்தனைகள் என்னும் நூலில் விரிவாக ஆய்ந்துள்ளார். விளக்கத்தை அந்நூலில் காண வேண்டுகிறேன்.

பிரசவத்தில் பெண்களுக்குச் சொல்லொண்ணா வேதனையும், மரண வாயிலில் சென்று திரும்பும் நிலையும் இருந்தாலும், பிள்ளைப் பேறு தவிர்க்க முடியாத ஒன்றென்று கூறுகிறார் சிங்காரவேலர். பிள்ளைப்பேறு என்பது மனித இனம் தோன்றியதி லிருந்து யுகயுகமாகத் தொடர்வது என்றும், உடற் கூற்று முறையில் முற்றிலும் தவிர்க்க முடியாதது என்றும், பிரசவத்தில் பெருந்துன்பம் உள்ளதென் றாலும் ஊட்டச் சக்தியுள்ள உணவை, உண்ணு வதாலும், புதிய அறிவியல் கருவிகளாலும் சிறந்த மருத்துவ சிகிச்சையாலும் நாளடைவில் பிரசவத்தை எளிதாக்கிவிடலாம் என்றும் கூறுகிறார். குழந்தை எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, கர்ப்பத்தடை யால் மட்டுமன்றி ஆண் - பெண்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதாலும் அரசு, நலத்திட்டங் களை நன்முறையில் செயல்படுத்துவதாலும் வழி காணலாம் என்கிறார்.

பிரசவத்தில் துன்பம் இருந் தாலும், அவர்கள் மீண்டும் கர்ப்பம் அடைவதற்குக் காரணம், பிள்ளைப்பேறு பெறுவதில் குடும்ப மகிழ்ச்சி இருப்பதும், சமூக மதிப்பு இருப்பதும் காரணமாகும் என்கிறார். உடற்கூற்று அடிப்படை யிலும், உளவியல் அடிப்படையிலும் பிள்ளைப் பேறு சமூகத் தேவையாக உள்ளதென்றும் வளர்ந்து வரும் அறிவியலாலும், நல்ல கல்வியாலும் அதனை எளிதாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். எனினும் நாட்டின் வறுமைக்கு மக்கள் பெருக்கமே காரணமென்றும், அவ்வறுமையை ஒழிக்கக் கர்ப்பத் தடையே சிறந்த வழியென்றும் பலர் கூறுவதை அவர் கடுமையாக மறுக்கிறார்; சாடுகிறார்.

மக்கள் தொகை பெருகினால், அவர்களுக் கேற்ற உணவுப் பொருள் நாளடைவில் கிடைக்காது என்பது பலரின் வாதம். இது இவர்களின் சொந்த வாதம் அன்று; இந்த வாதத்தை உலகில் முதலில் விதைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் ராபர்ட் தாமஸ் மால்தூஸ் (1766 - 1834) என்பவர் ஆவார். அவர் தமது நூலில், உணவுப் பொருள் 1,2,3,4,5,6 என்ற அடிப்படையில் பெருகு கிறதென்றும், இதற்கு அரித்மெடிக் வகைப்பாடு என்றும் மக்கள் பெருக்கம், 1,2,4,8,16,32, என்ற அடிப்படையில் பெருகுகிறதென்றும் இதற்கு ஜியா மெட்ரிக் வகைப்பாடு என்றும் குறிப்பிட்டார்; அவர் காலத்திலேயே அக்கருத்து மிகத் தவறானதென உறுதி செய்துள்ளனர். இருந்தும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் சுரண்டலுக்கும், கொள்கைக்கும் உரித்தான உண்மைக் காரணத்தை மறைப்பதற் காகவே வறுமைக்குக் காரணம் மக்கள் பெருக்கமே என்றனர். இங்கிலாந்தின் முதலாளித்துவ ஆட்சி, பிற நாடுகளை ஒட்டச் சுரண்டிக் கொள்ளை அடிப்பதற்கும், மக்களின் கவனத்தை வேறு முறையில் திருப்புவதற்கும் அக் கொள்கையைத் தம் காலனி நாடுகளில் பரப்பியது. அதனை இந்தியா விலும் பரப்பியது. இந்த உண்மைக் காரணத்தை அறியாமல் பகுத்தறிவு இயக்கத்தினரும் துணை போவதைத்தான் அவர் மறுத்துள்ளார். வறுமைக் கான காரணத்தை அவர் மேலெழுந்தவாறு மறுக் காமல் அதன் வேரை அடையாளம் காட்டும் முறையில் மால்தூசை நமக்குக் காட்டுகிறார்.

நாட்டின் வறுமைக்கும், மக்களின் பின்னடை வுக்கும் மூல காரணம் தனிச் சொத்துரிமை கொண்ட முதலாளித்துவ அமைப்பேயாகும். இந்த அமைப்பை மாற்றினால்தான் வறுமையும் இல்லாமையும், சுரண்டலும் கொள்ளையும் ஒழியும் - இதனை அறியாமல், வறுமைக்குக் காரணம் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுவதாகுமென்று கூறுவது இல்லாத ஊருக்கு வழி காட்டுவதாகும். இது குறித்துச் சிங்காரவேலர் எழுதியிருப்பது நம் சிந்தனைக்கு உரியது.

“தற்போதுள்ள வறுமைக்குக் காரணம் அதிக மான ஜனத்தொகை அல்ல; மட்டுமின்றிப் பிள்ளை களைப் பெறுவதாலும் அல்ல; விளைபொருளும் செய்பொருளும் பெற்ற கூட்டத்தவரால் விநி யோகிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், ஜனங்களுக்குப் போதுமானவரை உணவை உண்டாக்காமல் நிறுத்தி விடுவதாலும் பலருக்கு உபயோகுமாகும்படி விடாமல் தடை செய்து வருவதாலும் என்றார்.

கர்ப்பத்தடையோர் கொண்டுள்ள பயங்களுக்கு இல்லாமையை உண்டாக்கும் சில மனிதர் (முதலாளிகள்) திட்டம் காரணமே ஒழிய இயற்கையில் யாதொரு ஆதாரமும் கிடையாது. இந்தச் சமதர்ம நியாயங் களைச் சற்றுத் தீர விசாரிப்போம். (குடியரசு - 19.11.33)

இப்படி வறுமைக்குக் காரணத்தையும், கர்ப்பத் தடையால் பொருளாதாரக் கஷ்டங்களைத் தீர்த்து விடலாம் என்பதையும் பலர் கூறுவதைச் சமூக அறிவியல் அடிப்படையில் அவர் இக்கட்டுரையிலும் வேறுகட்டுரைகளிலும் திறம்பட மறுத்துள்ளார். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் சுரண்ட லையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால், பொதுச் சொத்துரிமை, சமத்துவ விநியோகம், சமத்துவ லாப உரிமை, ஜனநாயக ஆட்சிமுறை, பாட்டாளிகளின் ஆட்சியே தேவையாகுமென்று மார்க்சிய வழியில் விளக்குகிறார். மக்கள் தொகைப் பெருக்கமே வறுமைக்குக் காரணமென்று பலர் கூறுவனவற்றை ஆதாரங்களோடு மறுக்கிறார். பொய்ம்மையை அறிவுச் சுடரால் பொசுக்குகிறார்.

Pin It