புதுக்கவிதை தமிழில் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில், மார்க்ஸிய முகாமிலிருந்து வெளிவந்த புத்தகம், பேரா.நா.வானமாமலையின் “புதுக் கவிதை முற்போக்கும், பிற்போக்கும்” என்பது. புதுக்கவிதை பற்றி, சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன், கோவை. ஞானி ஆகியோர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், பேரா.நா.வானமா மலை, அதில் இடம்பெற்ற பிற்போக்கான கருத்துக் களையும், முற்போக்கான கருத்துக்களையும் இனங் கண்டு இந்த விமர்சனத்தினை முன்வைத்தார். இதற்கு எதிர்வினையாகக் கட்டுரைகளும் வந்தன.

இந்த நூல் வெளிவந்து சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் முன் வைத்திருக்கும் சில அடிப்படையான கேள்விகள் இன்றும் தொடருகின்றன.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பின்புலமாக உள்ள சில கொள்கைகளைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார். மனித நேசம், போர்க்குணம்மிக்க மனிதாபிமானம், கற்பனாவாதம், புரட்சிகரக் கற்பனாவாதம், யதார்த்த வாதம், விமர்சன யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்த வாதம் ஆகிய முற்போக்கான கொள்கைகளைப் பற்றி அவர் கூறுகிறார். அதே சமயத்தில் முதலாளித்துவ சமுதாய வளர்ச்சி காரணமாகத் தோன்றிய பிராய்டிசம், சர்ரியலிசம், இருத்தலியம், போன்ற பிற்போக்கான கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில், புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ள வற்றை முற்போக்கானவை, பிற்போக்கானவை, என்று அவர் பிரித்து ஆராய்கிறார்.

புதுக்கவிதையின் கூறுகளை வாழ்க்கை, நிராசை, தனி மனிதம், உணர்வுத்தாரை, கவிஞன் தொழில், எழுத்தாளன், கோரமான உவமம், படிமம், உருவகம், சாவு, இணைவிழைச்சு (sex) கூடார்த்தம் என்ற தலைப்புகளில் ஆராய்கிறார். இவை இன்றும் பல படைப்புகளில் இடம் பெறுகின்றன.

பேராசிரியர் காலகட்டத்தில் தற்கால இலக்கியத் தினைப் பாதிக்காத ஒன்று இன்று உள்ளது. அது பின்னை நவீனத்துவம். இதன் வரவானது மேலே குறிப்பிட்ட பல கூறுகளை உள்ளடக்கியதாகவே உள்ளது. இதன் வரவுகாரணமாக இலக்கியத்தில் புதிய போக்குகள் தோன்றின.

புதுக்கவிதையின் தோற்றத்திற்கு எந்த பூர்ஷ்வா சமுதாயம் பின்புலமாக இருந்ததோ, அதே அமைப்பின் தொடர்ச்சியான பன்னாட்டு மூலதனம் பின்னை நவீனத்துவத்திற்குப் பின்புலமாக உள்ளது. சுருக்க மாகக் கூறினால், பின்னை நவீனத்துவம் பன்னாட்டு மூலதனத்தின் குரலாகவே ஒலிக்கிறது. மூலதனம் தடையின்றி எல்லா நாடுகளுக்குள்ளும் செல்ல வேண்டும். தடைகளைத் தகர்ப்பதற்குரிய வழிமுறை களை உருவாக்க வேண்டும். அதில் ஒன்றுதான் இந்தப் பின் நவீனத்துவம். இதில் மையமாக இடம் பெறும் கருத்து மையம் தகர்த்தல் ஆகும். வலு வான மையம், ஒற்றுமை என்று இருந்தால் அது தாராளமயமாதலுக்கும், உலகமயமாதலுக்கும் பெரும் எதிர்ப்பாக இருக்கும். எனவே மையத்தினைத் தகர்த்து, விளிம்புகளைப் பிரதானப்படுத்தும் கோஷம் இதில் இடம்பெறுகிறது. இது நிகழ்ச்சிகளைத் தனித் தனியாகக் காணும் போக்கினை முன்வைக்கிறது. ஒன்றிற்கொன்று இயங்கியல் உறவு உண்டு என்பதை இது நிராகரிக்கிறது. தனி நிகழ்ச்சிகளை முழுமை யாக்கிக் காட்டுகிறது. இது கம்பன் கூறும் “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற நிலையை ஒத்தது ஆகும்.

பின் நவீனத்துவத்தின் வருகைக்குப் பின்னர் கலை உலகில் தோன்றிய கொள்கை நேர்க்கோடற்ற எழுத்து என்பதாகும். இதனையொட்டி கனசதுரக் கோட்பாடு (Cubism), மாந்திரீக யதார்த்தவாதம் போன்றவை இடம்பெற்றுள்ளன. பன்முக நாவல், தன்பெருக்கி நாவல் (auto), காட்சி நிலை மெய்மை நாவல் (Virtual), பல குரல் நாவல் (Polyphony) என்ற வகைநூல்களும் தமிழில் தோன்றியுள்ளன.

இவற்றின் பொதுப் பண்புகளை வரையறை செய்யும் பொழுது மு.சீமானம்பலம் என்பவர் பின் வரும் கூறுகளைச் சுட்டிக் காட்டுகிறார் (இயங்கள் இலக்கியங்கள் - பாவை 2008 27-35)

1.            நிறுவப்பட்ட எல்லாவகையான சமூக ஒழுக்க மதிப்பீடுகளைச் சிதைப்பதும், யதார்த்த வாதத்தின் அனைத்து அம்சங்களிலிருந்து விடுபடுவதும்

2.            எதார்த்தப் புனைவுகளின் கால வரிசையில் கதை சொல்லல், தர்க்கரீதியான நேர்க்கோட்டுக் கதைப் பின்னலை அமைத்தல் என்பதை மறுத்து, காலத்தை முன்பின்னாக மாற்றி, பன்முகமான, ஒன்றுக்கொன்று முரண்பாடான பார்வைக் கோணங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துதல்.

3.            புனைவுகளின் மேல் தோற்றத்தில் வெளிப்படும், ஒழுக்கமைவுகளின், ஒழுங்கின்மையை வெளிப் படுத்துதல்.

4.            மரபு மறுப்பும், புனிதக் கவிழ்ப்பும் எதார்த்தத்தி லிருந்து விலகலும், கேலியும் கிண்டலும், விளையாட்டுத் தனமும்.

5.            வரிகளுக்குள் வாசகனை இழுத்துச்சென்று, சுயம் இழக்கச் செய்யும் நேரிய வரிசையிலமைந்த எதார்த்த வகை எழுத்துக்களைப் போலல்லாமல், புனைவுகளை விமர்சன பூர்வமாக அணுக வைத்தல்,

6.            விளம்பரங்கள், சனரஞ்சகமான துப்பறியும் கதை, கீழ்த் தரமான சிரிப்புத் துணுக்குகள், திரைப்பட வசனம், ஆய்வுக் கட்டுரை, வாசகம், பாடப்புத்தக வரிகள், புகழ் பெற்ற நூல்களின் வரிகள், மஞ்சள் புத்தகம் என எதிர்பார்க்கப் படுகின்ற ஒவ்வொன்றையும் கச்சாப் பொருளாகப் பயன்படுத்துதல்.

7.            ஆணாதிக்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எல்லா விதமான சமூக மதிப்புகள், சிந்தனை முறைகள், பண்பாட்டுக் கூறுகள், உறவு முறைகள் ஆகியவற்றின் ஒழுக்க மதிப்பீடுகளை விமர்சன பூர்வமாக அணுகுதல்

8.            கற்பு, ஆண் பெண் உறவு பற்றிய கருத்தாக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒருவனுக்கு ஒருத்தி, ஆண் - பெண் உறவுக்கு மாற்றாக ஓரின உறவு, சுய இன்பம், சகோதரனுக்கும் சகோதரிக்கும் உறவு (incest) ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகளைப் புனைவுகளில் வெளிப்படுத்துவதன் மூலம் அடிப்படைவாதிகளையும், ஒழுக்கவாதிகளையும், அதிர்ச்சியடையச் செய்தல்.

9.            உண்மைகளையும், பொய்களையும் திட்டமிட்டுக் குழப்புதல்; நவீன அச்சுச் சாதனங்களின் உதவி யால் பல்வேறு வடிவ எழுத்துக்களைப் பயன் படுத்துதல்; இடை வெளியிட்டு அச்சிடுதல், ஒரே எழுத்து அல்லது ஒரே வார்த்தையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துதல்.

10.          நான் லீனியர் எழுத்தில் மையம் என்பது இருப்ப தில்லை. அப்படியே இருந்தாலும் அவை குளத்தில் ஒற்றைக் கல்லைக் கொண்டு எறியும் போது தோன்றும் ஒற்றைமையம் போன்று இல்லாமல், கை நிறைய சிறு கற்களை வைத்துக் கொண்டு எறியும்போது தோன்றும் பல மையங் களைப் போல் நான்லீனியர் எழுத்துப் பனு வலில் மையம் என்பது ஆங்காங்கே சிதறிக் காணப்படும்.

11.          நான் லீனியர் எழுத்துபற்றி டெரிடா கூறு கையில் அது அமைப்பையே குலைத்து விடு கிறது. அந்த அமைப்பின் அடித்தளத்தையே சிதைத்து எதிராகக் கூறுகிறது. ஆனால், அது அதன் தன்மைக்கு மாற்று வடிவம் கொடுத்து விடுகிறது என்று குறிப்பிடுவதோடு, இது இலக்கியத் துறையில் இதுவரை இருந்த வற்றுக்கு மாறாகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்.

இந்த மேற்கோளில் உள்ள கருத்துக்கள் தோற்று விக்கும் தத்துவப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க இதில் உள்ள அழகியல் பிரச்சினைகள் நாம் கவனிக்க வேண்டியவையாகும் ஆனால் தத்துவரீதியாக இவற்றில் புதைந்துள்ளது சூன்ய வாதம் ஆகும். எல்லாவற்றையும் தகர்த்தெறிந்துவிட்டு, மையத்தைச் சிதைத்துவிட்டுக் காணப்போவது என்ன என்பதற்கு இங்கு இடமில்லை. எல்லாம் சிதைந்த பிறகு ஒரு கையறு நிலை அல்லது ஒன்றுமற்ற சூனிய நிலை தான் உள்ளது. இது இதன் தத்துவ எல்லையாகும்.

அழகியல் ரீதியாக, பேராசிரியர் புதுக்கவிதையை பற்றிக் குறிப்பிட்டவை தவிர, இங்கு உருவம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் பேசப்படுவதைக் காண முடிகிறது. இந்த வகை இலக்கியங்களில், பால் உறவு ஒழுக்கமின்மை, மரபுகளை உடைத்தல் போன்றவை அதிகம் பேசப்படுகின்றன. பேரா.நா. வானமாமலை குறிப்பிட்ட புதுக்கவிதையில் இணை விழைச்சு இடம்பெறுகிறது. ஆனால் இங்கு இது கட்டற்ற நிலையில் இடம்பெறுகிறது. வாழ்க்கை பல நெருக்கடிகளுக்கு உள்ளானதன் காரணமாக தர்க்கம் மறுக்கப்பட்டு இங்கு அதர்க்கம் பேசப் படுகிறது. ஆனால் இவையனைத்தும் உருவம் சார்ந்த பிரச்சினையாகவே பேசப்படுகின்றன.

உருவம், உள்ளடக்கம் பற்றிய விவாதம் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில் அதிகம் பேசப்பட்டது. ‘மணிக்கொடி’ இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் உருவவாதிகள் என்று அறியப்பட்டனர். சி.சு.செல்லப்பா, க. நா.சுப்பிரமணியம் போன்றவர்கள் உருவவாதத் தினை ஆதரித்தனர். இந்த உருவவாதம் உள்ளடக்கத் துடன் இணைந்து இருந்த வரை படைப்புகள் வலுவாக இருந்தன. ஆனால் உருவம் உருவத்திற்காக என்ற நிலை வந்த பொழுது, படைப்பாளி சமுதாய இயக்கங்களில் இருந்து விலகி நின்ற பொழுது, இது அகமயப்படுத்தப்பட்ட குழப்பமான சோதனை யாகவே இடம்பெற்றது. இதன் நீட்சியாகத்தான் நேர்க்கோடற்ற எழுத்தினைக் காண வேண்டியுள்ளது.

இந்த எழுத்திற்கும் முன்னோடியாக இருக்கும் அமைப்பியல் மொழியை மையப்படுத்தி, உள்ளடக்கத் தினைப் பின்தள்ளியது. தத்துவரீதியாக பொருள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வடிவம் முன்னுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்த பின் நவீனத்துவ வாதிகள் உருவப் பரிசோதனையில் இறங்கினர். அதன் விளைவுதான் இந்த எழுத்துக்களில் காணப் படும் அதர்க்கமான உருவ அமைப்பு ஆகும். பல அடுக்கு, மொழியைச் சிதைத்தல், காலத்தினை மறுத்தல், வரிசையைக் குலைத்தல் என்று உருவ ரீதியாகப் பல முயற்சியை இவர்கள் செய்கின்றனர். இது உருவவாதத்தின் உச்சகட்டமாக உள்ளது

இந்தப் போக்கின் காரணமாக வலுவான சமுதாய உள்ளடக்கம் உள்ள யதார்த்தவாதப் படைப்புகள் மறுக்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக சிறு சிறு நிகழ்வுகளே பிரதானமாக இடம் பெறுகின்றன. மேலே உள்ள மேற்கோளில் 6,9,10 ஆகிய பகுதிகள் உருவம் பற்றியவை ஆகும்.

இந்தத் தன்மையுள்ள நான்லீனியர் (நேர்க் கோடற்ற) எழுத்து தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை பூர்ஷ்வா எழுத்தாளர் கள் அதிகம் கையாளுகின்றனர். இதன் தாக்கத்திற்கு உள்ளான இடதுசாரி எழுத்தாளர்களும், உள்ளனர், பெண்ணிய எழுத்தாளர்கள், தலித்திய எழுத்தாளர்கள், ஆகியோரும் இந்த முறையைக் கையாளுகின்றனர். இங்கு இவர்களைப் பற்றி விரிவாக ஆராய இட மின்மையால் ஒருசில உதாரணங்கள் மட்டுமே தர இயலும்.

பூர்ஷ்வா படைப்பாளிகளில், இன்று இந்த முறையைப் பின்பற்றுபவர்களாக சாருநிவேதி தாவைக் குறிப்பிடலாம். இவர்கள் தவிர, தமிழவன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி, ஜெயமோகன் ஆகியோர் கோணங்கியின் ‘பாழி’ என்ற நாவல் லக்தானியத் தினை அடித்தளமாகக் கொண்ட நாவல். லக்கான் பிராய்டிய வழியைப் பின்பற்றியவர். ஆனால் லிக் தான் மொழிக்கு முதலிடம் அளிப்பவர்; நினைவிலி மனதிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்; மானுடச் செயல்களை மொழிவழி காண முயன்றவர்.

‘பாழி’ நாவல் பின் நவீனத்துவப் படைப்பின் பல கூறுகளைக் கொண்டது. இருண்மை நிறைந்தது. அதிக உதாரணம் அளிக்க முடியாவிட்டாலும் ஒன்று மட்டும் தரலாம்.

“நதிகள் நிரம்பி ஓடும் நதி கங்கை கூடும் பிரிவை எண்ணி சங்கமத்தில் சரஸ்வதியின் அரூபம் தண்டவாள இரும்பு ஈரத்தில் நனைந்த ஊழியின் பாழ் உரகம் ஊளைகளுடன் கலக்கிறேன் பிறகு... உங்கள் பாடு”

இந்த நாவலை ஆராய்ந்த கி.கு.இரவிச்சந்திரன் அவர்கள் இதற்குப் பின்புலமாக பிராய்டிசம், தாதாயிசம், சர்ரியலிசம் ஆகியன இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் (அண்மைப் புனைவுகள் நவீன வாசிப்பு காவ்யா 476 -80) பேரா. நா.வானமா மலை புதுக்கவிதைக்குப் பின்புலமாகக் காட்டிய உளவியல் போக்குகள் இங்குத் தொடர்வதைக் காண்கிறோம்.

ஜெய மோகனின் ‘கொற்றவை’, ‘விஷ்ணுபுரம்’ போன்ற நாவல்கள் தொன்மங்களையும், நிகழ்காலச் சிந்தனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட மாந்திரீக யதார்த்தவாத நாவல்கள் ஆகும். விஷ்ணு புரம் நாவலில் சூன்ய வாதத்தினை முன்வைக்கிறார். கொற்ற வையில் திராவிடர் இயக்கத்தவர் ஒரு காலத்தில் பேசிய ஆரிய - திராவிட இனப் பிரச்சினையை கண்ணகி கதை மூலம் வெளிப்படுத்துகிறார். தமிழர்கள் தாய்வழிச் சமுதாய அமைப்பில் உள்ளவர்கள். ஆரியர்கள் தந்தைவழியினர் என்ற இந்தக் கருதுகோள் நாவல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இது எந்த அளவிற்கு மானுடவியல் ரீதியான சரியானது என்பது கேள்விக்குரியது ஏனென்றால் உலகம் முழுவதிலுமே ஒருகால கட்டத்தில் தாய்வழி அமைப்புதான் இருந்தது. ‘வேலைப்பிரிவினை காரணமாக இது தந்தை வழி அமைப்பிற்கு மாறியது’ என்பது எங்கல்சின் கருத்து (Origin of Family, Private property and state - Engels) இது ஆரியர், திராவிடர் ஆகிய எல்லோருக்கும் பொருந்தும். இதற்குமாறாக ஒரு இனத்திற்குத் தாய் வழியையும், மற்றொன்றிற்குத் தந்தைவழியையும் சுட்டிக்காட்டுவது விஞ்ஞான ரீதியானதல்ல எனலாம். இருப்பினும், கனமான உள்ளடக்கத் தினை, தொன்மங்கள் மூலம் இவர் விளக்கும் முறையானது உருவம் சார்ந்த ஒன்று. இது உருவ வாதத்தின் வெற்றியே அன்றி உள்ளடக்கத்தின் வெற்றி அல்ல.

நான்லீனியர் எழுத்துகளில் முத்திரை பதித்தவர் சாருநிவேதிதா ஒருவர் “இவரது 00 - ம்“ நோ, நோ” ஆகியன இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும். இவரது படைப்புகளில் பால் உறவு சுதந்திரம் (கலகக்குரல்) அதிகம் இடம் பெறுகிறது. இவரது ‘ராய லீலா’ இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது பற்றி மொ. இளம்பரிதி கூறுகிறார் (அண்மைய புனைவுகள் - நவீன வாசிப்புகள் - காவ்யா, 348)

“பெருமாளின் சுயபோக இரவுகளின் கற்பனா வுலகில் நடமாடிய ஒரு பெண் அந்த ஆபீஸிலிருந்த ஸ்டெனோவாகிய புவனேஸ்வரி. சற்றேகுள்ளமான உருவம். பளீர் வெள்ளை. பிருஷ்ட பாகங்கள்...” அதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.... போஸ்ட் மாடர்ன் ஃபிக்ஷனில் வாசகர்களும் சிருஷ்டி கர்த்தாக்கள்தாமே. அதனால், நீங்களே பிருஷ்ட ரூபம், பிருஷ்ட லாகிரி பற்றியெல்லாம், சிருஷ்டித்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லாமல் இருக்க முடியாது. பெருமாள் தனது நித்திரலோக சல்லாபங்களில் புவனேஸ்வரியின் பிருஷ்டபாகங்களை ஒரு நாள் கூட.... விட்டதில்லை’ சாருநிவேதிதாவின் இந்த வரிகளில் பால் உறவு, புற உலகத்தினைப் புறக் கணித்தல், கனவு உலகத்தினை நிஜ உலகத்திற்கு மாற்றாகக் காட்டுதல் போன்ற கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் மேலாங்கியுள்ளதைக் காணமுடிகிறது.

இந்த வலதுசாரி எழுத்தாளர்கள் பின் நவீனத்துவ முறையை அதிகம் கையாளுகின்றனர். இதன் தர்க்கத்திற்கு உள்ளான இடதுசாரிப் படைப் பாளிகள் சமுதாயப் பிரச்சினைகளை மையப் படுத்தி நாவல்கள் எழுதுகின்றனர். பொன்னீலனின் ‘மறுபக்கம்’ இத்தகையது. இது ஒற்றை மையத் தினைத் தவிர்த்து பலமையங்களைக் கொண்ட நாவல். நாவலின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களது வளர்ச்சி வரலாறு பற்றியது. இதனைப் பல மையங்களில், தொன்மங்கள், மரபுகள் கலந்த ஒருமுறையில் பொன்னீலன் எழுதுகிறார். இங்கு அகவயப்படுத்தப்படும் போக்கினைவிட, சமுதாயத் தினைப் புறவயமாக ஏற்றுக்கொள்ளும் போக்கே இடம்பெறுகிறது. இது இந்த முறையை ஏற்றுக் கொண்டு, நாவல் இலக்கியத்தினை இடது பக்கம் திருப்புவது போன்று அமைந்துள்ளது. அந்தப் பாதை செழுமைப்படுத்தப்படவேண்டும். அதே சமயத்தில் நேர்க்கோட்டு எழுத்தில் பல அருமையான படைப்புகள் வந்துள்ளதை மறந்துவிடக்கூடாது.

Pin It