தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் என்னும் பேரா.முத்துமோகனின் நூல் இருபத்தைந்து கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் குறித்த புரிதல்களுக்கான தேடலாகவும், ஈழத்து நிகழ்வுகள் பற்றிய புரிதலுக் காகவும் முக்கியமாக இவை எழுதப்பட்டதாக முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு இதழ்களில் வெளியானவை. ஆறுமுக நாவலர் முதல் அகாலி இயக்கம் வரை கட்டுரைகளின் பரப்புகள் விரிகின்றன. பெரும் பாலும் அடையாள அரசியலையும், வர்க்க அரசி யலையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதே இந்நூலின் மையப் புள்ளியாக அமைந்துள்ளது. நூலின் முற்பகுதி தத்துவக் கோட்பாடுகளைப் பற்றியும், பிற்பகுதி நூற்று அறுபது ஆண்டுக் காலத் தமிழ்ச் சூழல்களை விவாதிப்பதாகவும் அமைந்துள்ளன.

na_muthumohan_450இன்றைய மேற்கத்திய தத்துவ உலகில் அடையாள அரசியலைப்பற்றிய விவாதங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை மட்டுமல்ல, இந்திய மெய்யியலின் கருத்தாக்கங்களும் அடையாள அரசியலின் இயங்கியலைப் புரிந்துகொள்ளப் பயன் படுகின்றன என்று பேரா.முத்துமோகன் குறிப்பிடு கிறார். இந்நூல் மார்க்ஸியக் கோட்பாட்டு அடிப் படையில் அடையாளப் பிரச்சினைகளை விளக்க முற்படுகிறது. ஆசிய உற்பத்தி முறை என்னும் மார்க்சின் கருத்தாக்கத்தை ஏற்று அதனடிப்படையில் அடை யாள அரசியலை விளக்க முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.

அடையாள அரசியல் என்றால் என்ன என் பதில் தொடங்கி, வர்க்கமும் அடையாளமும், அடை யாள இயக்கங்கள், அயோத்திதாசரின் பங்களிப்பு, சிங்காரவேலரின் பார்வை, ஜீவாவின் பண்பாட்டு அரசியல் என்பனவற்றின் ஊடாக வர்க்க அரசி யலுக்கும், அடையாள அரசியலுக்கும் இடைப்பட்ட உறவம்சங்களைக் குறித்தும் விளக்குகிறார் ந.முத்து மோகன். அடையாள இயக்கங்கள் இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில், பின்னை நவீனத்துச் சூழலில் தோற்றம் பெற்றதாகப் பல மேற்கத்திய அறிஞர்கள் கூறியதை மறுத்து, அடை யாள இயக்கங்கள் ஆசிய - இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலனிய ஆட்சிக் காலத்தில் அரசியல் அரங்கிற்கு வந்தன என்கிறார் முத்துமோகன். இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பியக் கலாசாரத்தின் அறி முகத்திற்கு எதிரான எதிர்ப்புணர்ச்சியே என்கிறார்.

தமது சொந்த மரபுகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னுணர்வு இந்த அடையாள அரசியலின் அஸ்திவாரம் என்கிறார் முத்துமோகன். இந்தக் கட்டத்தில்தான் ஆசிரியர் ஆசிய உற்பத்தி முறை குறித்து மார்க்ஸ் கொடுத்த விளக்கங்களைக் கையாளுகிறார். ஆசிய சமூகங்களில் குழும வடி விலான சுரண்டல் முறைகளே இருந்தன என்று மார்க்ஸ் குறிப்பிடுவதை விளக்கமாக எடுத்துரைக் கிறார் முத்துமோகன். ஆசிய உற்பத்தி முறையில் மார்க்ஸ் கண்டறிந்த பன்மியக் கட்டமைப்பும் படிநிலை அமைவுமே காலனி ஆட்சிக் காலத்தின் அடையாள இயக்கங்கள் உருவாவதற்கான வரலாற்று முன்னோடிகளாகவும், சமூக அடிப்படையாகவும் அமைந்தன என்று முத்துமோகன் குறிப்பிடுவது மிகவும் முக்கியமான விளக்கமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனிய ஆட்சிக்கு எதிர் விளைவாக அடையாள இயக்கங்கள் தோன்றினாலும் அவை தமக்குரிய உலக அளவிலான தத்துவக் கோட்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அடையாள இயக்கங்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை மரபு குறித்து அதிக ஈடுபாடு கொண் டிருந்தாலும், தமது மரபு குறித்த திட்டவட்டமான, முடிந்த ஒரு மதிப்பீடு அவற்றிடம் இல்லை என்று குறிப்பிடுவது யோசிக்க வைக்கிறது. இந்த நிலையில், மரபு என்பது திரவ நிலையிலுள்ள ஒரு குறிப்பானாகச் செயல்படுகிறது என்றும், மரபும், வரலாறும் மீண்டும் மீண்டும் மறு வாசிப்பிற்குரிய மறு மதிப் பீட்டிற்குரிய திறந்த புத்தகங்களாக அமைகின்றன எனவும் முத்துமோகன் குறிப்பிடுவது புதிய விசால மான பார்வையை ஏற்படுத்துகிறது எனலாம். அடையாள இயக்கங்களின் பிரச்சினைகளைப் பற்றியும் இக்கட்டுரை விவாதிக்கின்றது. இதில் பல அடையாள இயக்கங்கள் ஒற்றுமை என்னும் பெயரில் வேற்றுமைகளை உள்ள முக்கி எவ்வாறு சனநாயக விரோதத் தன்மையைக் கொள்கின்றன என்ற கருத்து மிகவும் நுட்பமானது மட்டுமல்ல; கடுமையான விமர்சனமும்கூட ஆகும்.

‘வர்க்கமும் அடையாளமும்’ என்னும் கட்டுரை ஆஸ்திரிய மார்க்சியர்களின் கருத்தாக்கங்களின் துணையோடு விவாதிக்கிறது. பொதுமொழி, ஒரே நிலத்தில் சேர்ந்து வாழ்தல், பொதுப் பொருளாதாரம் ஆகியவை இல்லாமலும்கூட தேசிய இனம் இருக்க முடியும். ஒரு தேசிய இனம் பண்பாட்டுரீதியாகவே அடையாளப் படுத்தப்படவேண்டும். சோசலிஸ சமூக அமைப்பில் தேசிய இன வேறுபாடுகள் அழி வதற்குப் பதிலாக அவை சோசலிஸத்தை உறுதிப் படுத்தும் என்பன போன்ற ஆஸ்திரிய மார்க்சியர் களின் கருத்துக்களை முன்வைத்து இந்தியாவின் சாதி சார்ந்த அடையாளப் பிரச்சினைகளை இடது சாரிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான கருத்தையும் பூடகமாக முத்துமோகன் குறிப்பிடு கிறார்.

‘வர்க்க அரசியலும் தேவை, அடையாள அரசியலும் தேவை’ என்னும் முத்துமோகன் அடையாள அரசியலின் வேறுபாடுகளை ஈடுகட்டும் அரசியலை இடதுசாரிகள் முன்னிலைப்படுத்தினால் அடையாளக்குழுக்களின் அடித்தள மக்கள் பிரிவினர் இடதுசாரிகளை ஆதரிப்பார்கள் என்கிறார். இதில் சிக்கலே என்னவென்றால் எவ்வகையான ஈடுகட்டும் அரசியலைக் கொள்ளவேண்டும் என்பதே! திணை களின் கொந்தளிப்பிற்கு மார்க்சிய அரசியல் முகம் வேண்டும் என்னும் முத்துமோகன் அந்த முகம் எத்தகைய முகம் என்பதற்கான செயல்திட்டங் களையும் வரும் நாட்களில் முன்வைத்தால் சிறப்பாக அமையும்.

‘அடையாள அரசியல் என்றால் என்ன?’ என்னும் கட்டுரை, கேள்வி பதில் பாணியில் அமைக்கப் பட்டுள்ளது எனலாம். தனியுடைமை வளர்ச்சி யடையாத ஆசிய சமூகங்களில், காலனிய ஆட்சிக் காலத்தில் நேரடியாக அரசியல் திரட்சி சாத்திய மில்லாமல் இருந்த காலங்களில் மரபு ரீதியாகப் பழக்கப்பட்டிருந்த சாதி, மதம், இனம் போன்ற வடிவங்களின் அடிப்படையிலான திரட்சிகளாக அமையாமல் சமூகக் கலாசார அடிப்படையிலான திரட்சியாகவும் அமைந்தன என்னும் முத்துமோகன் ‘கலாசாரத்திற்குச் சமயப் பண்பு உண்டு. சமயம் என்பது ஒரு பதுங்கு குழி’ என்னும்போது நயமாக சமூக அறிவியலை எப்படிக் கையாளுகிறார் என்பது புலப்படுகிறது.

உள்வேறுபாடுகளை அங்கீகரிக்காத அடையாள உருவாக்கங்கள் பிற அடையாளங்களை அழித் தொழிக்கும் அளவிற்குப் பாசிச தன்மை கொண்ட வையாக மாறிவிடும். தமிழ் ஈழப் புலிகளின் குறை பாடாகவும் இதை முத்துமோகன் சுட்டிக்காட்டுவது அடையாள அரசியலின் முக்கிய தத்துவப் பிரச் சினையை செயல்பாட்டுத் தளத்தில் விளங்க வைக் கிறது எனலாம். அது மட்டுமல்ல; அடையாளமும், வேறுபாடுகளும் என்கிற விவாதத்தைவிட அடை யாளமும் வர்க்கமும் என்ற விவாதம் கூர்மையானது என்பதே மார்க்சிய நிலைப்பாடு என்று முத்துமோகன் பிரகடனப்படுத்துகிறார்.

நமது சமகாலத்திய வரலாற்றுப் பொருள் முதல்வாதப் புரிதலின் முக்கிய பிரச்சினையாக அடையாள இயக்கங்களைப் பார்க்கிறார் முத்து மோகன். மார்க்சின் ஆசிய உற்பத்தி முறை கருத் தாக்கம் இந்தியாவின் அடையாள இயக்கங்களைப் புரிந்துகொள்ளவைக்கும் என்னும் ஆசிரியர் அடை யாள அரசியலை மார்க்சியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான முன்னோடிக் கருத்துக் களை லெனினிடமிருந்து பெறலாம் என வழி காட்டுகிறார். சோஷலிச சக்திகள் அடையாள அரசியலைப் புறக்கணித்துச் செல்ல முடியாது என்றும் அடையாள இயக்கங்களோடு பயணம் செய்தே, சோஷலிசத்திற்கான சக்திகளைக் கண்டு கொள்ள முடியும் என்றும் உரைக்கும் முத்துமோகன் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் தேசிய இனங்களின் சமத்துவத்தையும் அங்கீகரிக்காமல் நாம் சர்வதேசியவாதிகளாக இருக்க முடியாது என்று லெனின் எழுதியதைக் குறிப்பிடுவது இங்கு மிகவும் பொருத்தமான வழிகாட்டுதலாக உள்ளது.

இந்நிலையில், மற்றுமொரு கட்டுரையில் தமிழ்மொழியையே தமிழரின் அடையாளமாகக் காணலாம் என்றும், சமயம் சாராத, சாதி சாராத மொழியை அடையாளமாக்கியது தமிழரின் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளது ஆய்வாளர்களுக்கான முக்கிய புள்ளியாகும். தமிழ்மொழி என்றாலும் கூட அதனுள்ளும் கிளர்ந்து வரும் பலவகை அடை யாளச் சிக்கல்களையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆறுமுக நாவலரைத் தமிழ்ப் பண்பாட்டு அடை யாள அரசியல் செயல்பாட்டிற்கான தொடக்கப் புள்ளியாகக் காணும் முத்துமோகன் இராமலிங்க வள்ளலாரை ஒரு ஆன்மிகக் கலகக்காரராகவும் மானுடத்தின் பசி பற்றி ஆன்மிகத்தில் அக்கறை கொண்டவராகவும் மட்டுமல்ல... ‘உழுபவனுக்கு நிலம்’ என்ற சொற்களை முதலில் உச்சரித்தவர் அவரே என்று விளக்கியுள்ளது கம்யூனிஸ்ட் அறிஞர் களின் தேடல்களுக்கு ஒளி விளக்கு எனலாம்.

தமிழ் அடையாளம் அடித்தள மக்கள் சார்ந்த தாக அமையவேண்டும் என்பதற்கான போராட்டத்தின் ஓரணியைக் குறித்து நிற்பவர் அயோத்திதாசத பண்டிதர் எனக் குறிப்பிடும் முத்துமோகன், அயோத்திதாசர் எவ்வாறு மேட்டுக்குடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விவசாயத்தைத் துறந்து கல்வியையும், அரசுப் பணியையும் நோக்கி நகர்ந்தார்கள், அந்த நகர்வு அரசு அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்றும் விளக்குவதை அயோத்திதாசரைப் பற்றிய இக் கட்டுரையில் விவாதித்துள்ளது சிறப்பானது. இதைத் தொடர்ந்து அகாலிகள் - திராவிட இயக்கங்கள் பற்றிய ஆய்வுகளையும், தமிழர் - சீக்கியர் அடையாள இயக்கங்கள் குறித்தும் விளக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றைத் தொடர்ந்து தோழர் சிங்கார வேலரைப்பற்றி விளக்குகையில், ‘நாம் விரும்பும் சுயராஜ்யம் பகட்டாகக்கூறப்படும் பாராளுமன்ற சுயராஜ்யமாகப் போய் விடக்கூடாது, அது மக்கள் சுயராஜ்யமாக அமையவேண்டும்’ என்று சிங்கார வேலர் எழுதியதைக் குறிப்பிடுகிறார். சிங்கார வேலரைத் தொடர்ந்து தோழர் ஜீவாவின் பண் பாட்டு அரசியல் பங்களிப்பை விரிவாகப் பேசும் கட்டுரை இடம்பெறுகிறது.

‘கிராமப்புற இந்தியாவும் கம்யூனிஸ்டுகளும்’ என்னும் கட்டுரை இத்தொகுப்பில் மிகவும் முக்கிய மானதொரு கட்டுரையாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 85 ஆண்டு காலப் போராட்ட வரலாற்றுக்குப் பின் இன்றைய சூழலில் என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகள் மிகவும் முக்கியமானவை எனலாம். அதில் தொழிலாளர் - விவசாயிகள் என்னும் இரட்டை நிலை தவிர்க்கப்பட்டு இருவருக்குமான ஒற்றை நிலை கொள்ளப்படவேண்டியதன் அவசியம் விளக்கப்படுகிறது. சோசலிஸத்திற்கு இட்டுச் செல்லும் சனநாயக வேலைத்திட்டம் தேவை - மேலும், இந்தியச் சூழலில் சனநாயகப் புரட்சி என்பது நிலவுடைமை மற்றும் சாதி ஒழிப்பு ஆகும். அது சோஷலிஸப் புரட்சியைவிட தீவிரமான தாகவும், வன்முறை கொண்டதாகவும் அமையலாம். இத்தகைய சூழலில் மார்க்சிய-அம்பேத்கரிய உரை யாடல் முக்கியப்படுகிறது என்ற கருத்தாக்கம் விவாதத்திற்குப் பரவலாக உள்ளாக்கப்படவேண்டும்.

கடைசியாக, விளிம்பு நிலை மார்க்ஸ் என்ற கெவின் ஆண்டர்சன் எழுதிய நூலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மார்க்ஸ் மேற்கல்லாத நாடுகளுக்கான மற் றொரு வரலாற்றுப் பாதையை முன்மொழிந்தார் என்ற தகவலையும், இந்நூலில் காலனிய எதிர்ப் பியக்கங்கள் மற்றும் நிறவெறி எதிர்ப்பியக்கங்கள் பற்றியும் அவதானித்து இவை குறித்த புதிய வெளிச்சங் களைப் பாய்ச்சுகிறார் எனக் குறிப்பிடுகிறார். மூலதனத்திற்கு எதிரான போராட்டங்களில் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளாக இனவெறி, நிறவெறி, காலனிய ஆதிக்க எதிர்ப்பாளர்கள் ஆகியோர் இருப்பார்கள் என மார்க்ஸ் விளக்குவதாக முத்துமோகன் குறிப்பிடுவது மார்க்ஸியப் புரிதலுக்கான முக்கிய புள்ளிகளாகும்.

மார்க்சியம் என்பது முடிந்த கதையல்ல. அது பண்பாட்டுத் தளத்திலும், பல்வகை வழிகாட்டு தலைத் தருகிறது என்ற நம்பிக்கையையும், அதற்கான புரிதலின் அவசியத்தையும் இத்தொகுப்பில் ஒவ்வொரு கட்டுரையும் வேண்டுகிறது. அடையாள அரசியலைப் பற்றித் தமிழில் வெளிவந்த விரிவான மிகவும் முக்கியமான நூல் இது!

தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்

ஆசிரியர்: ந.முத்துமோகன்

வெளியீடு: என்.சி.பி.எச்.

விலை ரூ.215

Pin It