எழுத்தாளர்கள் பற்றிய அபிப்பிராயங்களை, புத்தக அறிமுகங்களை சுப்ரபாரதிமணியன் மனக் குகை ஓவியங்கள் என்ற பெயரில் தொகுத்துள்ளார். அவருடைய அஸ்திவாரமே விளிம்பு நிலை மக்கள், சுமங்கலித் திட்டம், குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, நதி மாசுபடல் போன்றவை. அதன் மீதான எழுத்தில் அக்கறை கொண்டவர். நிறைய பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களைத் தங்கள் வசம் ஈர்த்துக்கொண்டு இருக்கிற நேரத்தில் நிறைவான எழுத்தாளர்களைப் பற்றி மனக்குகை ஓவியங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் விரிகின்றன. தியானத்தில் உட்கார்ந்தால் முதலில் வருவது வண்ணங்களே. அது போல் எழுத்தாளன் தனக்கென்று வண்ணங்களை வைத்து ஓவியமா, காவியமா என்பதைப் பற்றிய புத்தகம்.

subrabharathi_451இதில் தலித் இலக்கிய முன்னோடி சிவராம் கரந்த் முதல் சிவகாமி வரை, தலித் படைப்புகளில் மேலோங்கிய தன் வரலாறுபற்றிச் சொல்லப் படுகிறது. பழகிய நினைவுகளின் அடிப்படையில் நகுலன், சுந்தரராமசாமி, சுஜாதா பற்றி உள்ளன. கவிதை சுதந்திரமும் சுய அடையாளமும் என்று இளம் கவிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மூத்த கவிஞர்களின் படிமங்கள் என்று சிற்பியும், வைரமுத்துவும் தென்படுகிறார்கள். தங்கர்பச்சான் முதற்கொண்டு பலரின் திரைப்பட காமிரா மொழி பேசப்படுகிறது. பசுமை மனிதர்களும் புத்தக மனிதர் களும் காட்டப்படுகிறார்கள். குழந்தை இலக்கியம் கோடிடப்படுகிறது. பாரதியும், புதுமைப்பித்தனும், தகழியும் யதார்த்தப் படிமங்களாக்கப்பட்டிருக் கிறார்கள். திருப்பூர் நாவலாசிரியர் குழந்தைவேலுவின் படைப்புகள் பற்றி எழுதியுள்ளார்.

இன்று பரபரப்பான உலகில் சில எழுத்தாளர்கள் மட்டுமே சாகாவரம் பெற்றவற்றை எழுத முடிகிறது. அதுபோல எழுத்தாளர்கள்பற்றின அபிப்பிராயங்கள் இதில் எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனுக்கே புரியும். இதுவே ‘கற்றாரே கற்றாரைக் காமுறுவர்’ என்ற சொலவடை.

கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இலக்கியவாதிகளை மதிப்பதில்லை. கட்சி களே உள்ளூர் இலக்கியவாதிகளை மதிக்காது. உயிருடன் இருந்த காலத்தில் பாரதியை மதிக்காத உலகம். அவரை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகிறார்கள்.

இலக்கியம் என்பது அரசியல், ஆன்மிகம், மதம் போன்றவற்றைத் தாண்டியது என்பது பொதுப் புத்தியில் புரிய வேண்டும். இலக்கியம், இலக்கணம், இலட்சணம் என்பது வேறு வேறு. இலட்சணம் என்பதை இலட்சியம், குறிக்கோள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இலக்கணப்பிழை, இலக்கியப் பிழை இருக்கலாம். ஆனால் இலட்சியப் பிழை இருக்கின்ற எழுத்து அல்லது கலை கால வெள்ளத்தில் நிற்காது என்பது வரலாறு. காலவெள்ளத்தில் நிலைக்கிறவர்களை இதில் மனக்குகை ஓவியங்களாக்கியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

மனக்குகை ஓவியங்கள்

ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.50.00

Pin It