டெனிஸ் கொலன் (பிரஞ்சு / ஆங்கிலம்-?) எழுதி நாகரத்தினம் கிருஷ்ணா தமிழில் மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘மார்க்ஸின் கொடுங்கனவு’- என்னும் நூலைப் பற்றிய திறனாய்வு

“இந்நூல் முதலாளித்துவத்தின் தொடர் வெற்றிக்கான காரணங்களை விளங்க உரைப்பதோடு அதை மார்க்ஸியம் வெல் வதற்கான புதிய யோசனைகளையும் முன் வைக்கிறது”.

இப்படி ஒரு முகப்பு வாசகத்துடன் ஒரு நூலைக் கண்டவுடன் மார்க்ஸிய வாசகர் எவருக்குமே எழக்கூடிய ஆர்வம் எனக்கும் எழுந்தது.

kalachuvadu_450“மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரியருமான டெனிஸ் கொலன் ஆங்கிலத்தில் அளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல்”

என்று பின்னட்டைக் குறிப்பும் தொடர்ந்தது. மேலும்,

“கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழைமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீன காலத் திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் பெரும் பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம்பற்றிய மற்றொரு பரிமாணத்தைத் துலக்கமாக்கு கின்றன”.

“மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்து, பிறவற்றைப் புறந்தள்ளி விடும் முழு முயற்சியில் முத லாளித்துவம் இறங்கியுள்ள இன்றைய சமுதாய சூழல் குறித்தும் மார்க்ஸிய சிந்தனைகள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரி வாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப் பட்டுள்ள இக்கட்டுரைகள் பயனுள்ள வகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்கக்கூடியவை. மார்க்ஸிய சித்தாந்தக் கோட்பாடுகளை விமர்சனபூர்வமாக அணு கும் அதே சமயத்தில் ஆக்க பூர்வமான ஒன்றாகவும் அவற்றை உள்வாங்கி மிளிர் கிறது இந்நூல்.”

என்று பின்அட்டைக் குறிப்புரை நூலின் தன்மை, நோக்கம், பயன்பாடு ஆகியவை குறித்து நம்மிடம் சிலாகித்தது மேலும் எனக்கு ஆர்வமூட்டியது.

தன்னுடைய காலத்திலேயே இந்த நாட்டில் ஒரு சோசலிச சமுதாயம் மலர்வதைக் கண்ணால் கண்டுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் போராடிய ஆர். நல்லகண்ணு, பாலன், என். சங்கரைய்யா, டி.ஆர்.எஸ். போன்ற அன்றைய இளைய தலைமுறையினர் முதல் அவ்வாறில்லாத இன்றைய இளைய தலைமுறை வரை விடை தேடும் சிக்கல் ஒன்றிற்கு விடை சொல்ல முன்வரும் எந்தப் பிரதியும் உற்சாகமூட்டக்கூடியதுதானே!

‘முதலாளித்துவக் கொடுமைக்கும், இன்னும் தொடரும் நிலவுடைமை, சாதிய, பெண்ணடிமை மனோபாவங்களும் மடிந்து, என்று விடியும் எமது வாழ்வு?’ என்று ஏங்கும் நிலையில் கோடிக்கணக் கான ஜீவன்கள் இந்த மண்ணில் உள்ளன.

‘மனிதர்கள் மனிதர்களாக வாழும் ஒரு சமூகமாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கையுடன் அதற்கான மார்க்கத்தையும் முன் வைக்கும் தத்துவமாக மார்க்ஸியம் அல்லாது வேறொரு தத்துவம் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை. இந்த அமைப்பிலேயே ஏதாவது சிறிது மேம்படுத்திக்கொள்ள சில நலத்திட்டங்களை மட்டும் சொல்லும் தத்துவங்கள் வேண்டுமானால் ஏராளம் உள்ளன. ‘வள்ளுவனும் கம்பனும் கனவாக முன்வைத்த பொதுவுடைமையை நனவாக்கவும் முடியும்’ என்று தெளிந்த பாரதியின் நம்பிக்கையைத் தொடர மனித குலத்திற்கு மார்க்ஸியத்தைத் தவிர வேறொரு தத்துவம் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த விமரிசனத்தின் திசை

ஒரு மார்க்ஸியவாதியின் நிலையிலிருந்து முன் வைக்கப்படும் விமரிசனம் அல்ல. அதாவது, நூலாசிரியர் டெனிஸ்கொலன் முன்வைக்கும் கருத்துக்கள் மீதான ஒரு மார்க்ஸிய வாதியின் எதிர்வினையாக இது அமைக்கப்படவில்லை.

மாறாக, இந்தப்பிரதியின் இரு முக்கிய கூறுகள் முன்னிறுத்தும் தர்க்கங்களின் எதிரெதிர் நிலைப் பாடுகளை- தருக்க முரணை-குறித்து மட்டுமே பேசுகிறது. ஏனெனில், இன்றைய சூழலில் இது ஓர் அறிவியல் பிரச்சினையாக உள்ளது.

வாசகர்களுக்கு ஒரு பிரதியை, சரக்கை, அறிமுகப்படுத்திப் பரிந்துரை செய்யும் முகவுரை, முன்னுரை, பின் அட்டைக் குறிப்புரை ஆகியவை முக்கியமானவை. மையப்பிரதியின் தன்மை, இலக்கு ஆகியவை குறித்து சிலாகித்து துணைப்பிரதி முன் வைக்கும் தருக்கத்திற்கும் மையப்பிரதியின் தருக்கத் திற்கும் இடையே நிலவும் முழுமையான முரண் பாட்டை இந்த விமர்சனம் வெளிப்படுத்துகிறது. இதில் பண்பாட்டு நெறிமுறைகள் மற்றும் வணிக நெறிமுறைகளைப்பற்றிய கேள்விகளும் சம்பந்தப் பட்டுள்ளன.

இன்றைய சரக்குமய உலகில் புத்தகங்கள் என்பவை பழைய அப்பாவிகள் கருதியது போல் கருத்துகளைச் சுமக்கும் வெறும் வாகனம் மட்டும் அல்ல; மாறாக, லாப நோக்கத்துடன் உற்பத்தி செய்யப்படும் சரக்காகவும் உள்ளது.

பொருளாதார வசதியும், வாசிப்புக்கான ஓய்வு நேரமும் மிகக்குறுகிய அளவில் மட்டுமே கொண்டவர்களாகவே நல்ல வாசகர்கள் இந்தச் சமூகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தகச் சந்தையில், குவியலில், தனக்கான நூலைத் தெரிவு செய்வதில் மேற்படி பரிந்துரைகளைத்தான் முக்கிய வழி காட்டியாக நம்பவேண்டியுள்ளது.

இந்நூல், மார்க்ஸிய வாசகத் தளத்தை (சந்தையை) நோக்கி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்பது எமது கூடுதல் அக்கறைக்குக் காரணமாக அமைகிறது.

தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான மறைந்த சுந்தரராசாமி ஒரு யுகசந்தியில் எழுதிய ஒரு “புளியமரத்தின் கதை”யில் “உண்மை யான வாத்துகளைவிட ரப்பர்வாத்துகளே அழகாகத் தோன்றக்கூடிய” காலம் உருவாகி வருவதாக நம்மை எச்சரித்திருந்தார்.

ஏடு எனப்படுவது (Text+ Para Text)

மரபுவழிப்பட்ட விமரிசனம் பிரதியின் ஒரு பகுதியை-ஆசிரியர் பகுதியை மட்டுமே முழு ஏடாகக் கருதிவந்தது. ஆங்கிலேய கு.சு.லூயிஸ் குருகுல போதனை இதற்கு முக்கிய காரணம். உள்ளடக்கவாத சிந்தனை மேலோங்க இதுவும் காரணம். பிரஞ்சு ஜெரார்டு ஜென்னத்தும் (Gerard Genette), ரோலன் பார்த்தும் (Rolland Barthes) இதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஜென்னத் பனுவலை, ஏட்டை மைய ஏடு, துணை ஏடு, (Main text+para text) ஆகிய இருபகுதிகளின் கூட்டிணைவாகக் காண வேண்டியது விமரிசனத்தின் தலையான வேலை என்றார்.

“வாசிப்பை உண்மையில் நெறிப்படுத்திக் கட்டமைக்கும் சட்டமே அதன் துணைப் பிரதிதான். மையப்பிரதியை விட ஓரப் பிரதி எந்தவிதத்திலும் முக்கியத்தும் குறைந்ததல்ல. உண்மையில் அது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது” (Para text : Thresholds of interpretation-Gerard Genette).

ஆசிரியர் ஏட்டை (Main Text) வாசகருக்கு அறிமுகப்படுத்திப் பரிந்துரைக்கும் முன்னுரை, அட்டைப்படம், அட்டைமுதல் அட்டைவரையான (Para Text) அனைத்தும் இணைந்தே ஏடாகும். அதையும் தாண்டி ஏடு குறித்த விளம்பரங்கள், விருதுகள், உட்பட அனைத்துமே இலக்கிய விமர் சனத்தின் அக்கறைக்குரிய களமாக அமையவேண்டும் என்றனர் பிரஞ்சு அமைப்பியல் - பின்அமைப்பியல் மேதைகள். ஆங்கிலேய உலகிலும் இதுதான் இப் போது விமரிசனத்தின் பிரதான பணியாக உள்ளது.

‘Liar’ என்ற நாவல் பிரதியின் அட்டைப் படத்திற்கும் மையப்பிரதிக்கும் இடையே உள்ள வேறுபாடே பெரும் விமரிசனத்திற்குரியதாயிற்று.

கட்டுடைப்பு விமர்சனம் குறித்து தெரிதா

எந்த ஒரு பிரதியும் தான் முன்வைக்கும் தருக்கத்தைத்தான் இறுதிவரை தொடர்கிறதா என்பதையும் அதன் தருக்கத்திற்கான அடிப்படை யையும் அதில் நிலவும் தருக்கமுரண்களையும் ஆராய்ந்து அதன் கட்டுமானத்தை ஆராய்வதே சரியான விமரிசனம் என்றும், அப்போது அது கட்டவிழ்ந்து விழ நேரிடலாம் என்றும், விமர்சனம் குறித்த புதிய புரிதலை நிலைநிறுத்தியுள்ளார் பின் அமைப்பியல்வாதியான தெரிதா.

முதல் நெருடல்

“மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரி யருமான டெனிஸ்கொலன் ஆங்கிலத்தில் அளித்த நூலின் தமிழாக்கம் இது.”

என்று பின்னட்டைக்குறிப்பின் முதல்வரி நமக்குச் சொல்கிறது. ஆனால், உள்ளே திறந்தவுடன் பதிப்பகக்குறிப்பில் (பக்-6) “Marksin Kotunkanavu, Tamil Translation of ‘Le Caichemar de Marx’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

டெனிஸ்கொலன் ஆங்கிலேயரல்லர்; அவர் ஆங்கிலத்தில் அளித்த நூல் எதுவுமில்லை. பிரஞ்சுக் காரரான அவர் பிரஞ்சுமொழியில் அளித்த நூலின் நேரடியான தமிழாக்கம் என்று மொழி பெயர்ப்பாளர் கூறுவதுடன், இதற்காக அவர் சிரம மெடுத்து பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள மார்க்ஸின் ‘Le Capital’-ஐயும், தமிழில் தியாகுவின் மூலதனத்தையும் படிக்கவேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்.

(மூலபாஷையான எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்பது போல்) பிரஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்கிறார்.

“ஏனைய மொழிகளுக்குக் கிடைக்காத பெருமை தமிழுக்குத் தன் மூலம் கிடைத் துள்ளதாகவும்” கூறுகிறார். (பக்-8)

இந்த நூலின் மையப்பிரதி - டெனிஸ்கொலனின் மைய ஏடு 3 பாகங்களாகக் கட்டப்பட்டுள்ளது.

முதல்பாகம்           :      முதலாளித்துவம் இன்று (5 அத்தியாயங்கள்)

இரண்டாம் பாகம்     :      உறைந்த மாயத் தோற்றங் களாகியிருக்கிற நேற்றைய சமூக உடைமை நெறியும் பொதுவுடைமையும் (6-10 அத்தியாயங்கள்)

இறுதிப்பாகம்  :      கொடுங்கனவிலிருந்து மீளல்:- மார்க்ஸின் துணை யுடன் அல்லது மார்க்ஸின்றிப் பொதுவுடைமை (11-13 அத்தியாயங்கள்)

இந்த வாசிப்பு குறித்து

எழுத்து ஒரு கலை; வாசிப்பு இன்னொரு கலை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஏட்டில் தரப்படும் தகவல்கள், விவரங்கள், தரவு கள் ஆகியவற்றிற்கும் ஒரு மதிப்பு உண்டு. ஆனால் ஒரு தந்திரமான வாதக் கலைஞன் (Rhetoric artist) தனது மையவாதத்தைக் கோக்கவும் நிலைநிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ளும் கட்டுமானப் பொருட் களாக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகிறான்.

எனவே நுட்பமான வாசகன்/வாசகி ஏடு இழுத்துச் செல்லும் திசையிலேயே இழுத்துச் செல்லப்படும் செயலற்ற வாசகனாக வாசகியாகக் கிடந்துபோகாமல் அறிவுபூர்வமாக ஏட்டை எதிர் கொள்ள வேண்டும். அதன் போக்கிற்கு எதிரே (against the grain) உரசிச் செல்லும் தனது திறன் மூலம்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

டெனிஸ்கொலனின் நூலின் மையச் சரடாக ஓடும் அவரது தருக்கத்தை மட்டும் பின்பற்றிச் சென்று அவரது வாதம் சுருக்கமாக இங்கே முன் வைக்கப்படுகிறது.

முதல் பாகம்

“முதலாளித்துவம் இன்று” என்ற தலைப்பில் ஐந்து அத்தியாயங்களில் முதலாளித்துவ உலகம் எவ்வாறு வெற்றிகரமாக, எதிர்ப்பாரின்றி இயங்கி வருகிறது என்பதைக் கூறுகிறது. முடிவற்றுத் தொடர்ந்து இனியும் இயங்கி வரும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறது.

துவக்கமும் முடிவும்

‘There is no Alternative (TINA)’: முன்னாள் இங்கிலாந்து பிரதமர் திருமதி தாட்ச்சர் உபயோகித்த வாக்கியம்... ‘தனி உடைமை தவிர்த்து நமக்கு வேறு நாதி இல்லை எனவும் கூறி நம்பவைக்கின்றனர்’. (பக்கம் -19)

முதல் அத்தியாயம் இவ்வாறு இங்கிலாந்தின் பழமைவாத (Conservative) பிரதமரின் பிரகடனத்தில் துவங்கித் தனியுடைமை தவிர்த்து நமக்கு வேறு நாதி யில்லை என்று நம்பவைப்பவர்களின் சொல்லாடல் களுக்கு எதிராக அதை மறுதலிக்கும் திசையில் நகரப்போவதைப் போல் நூல் அதன் வாசகர் களுக்குப் போக்குகாட்டுகிறது. ஆனால் அடுத்த சில பக்கங்களிலேயே டெனிஸ் கொலன் தனது நிலையைத் தெளிவாக முன்வைக்கிறார்.

“எல்லா முனைகளிலும் முதலாளித்துவத் திற்கு வெற்றி. ஏனென்றால் அதற்கு மாற் றென்று சொல்லிக்கொள்கிற ஐரோப்பிய இடது-சாரிகளும் தற்போதைக்கு முத லாளித்துவ ஆதரவாளர்களே!” (பக்கம்-25)

முதல் பாகத்தின் சாரம்

எல்லா முனைகளிலும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது என்பதை ஐந்து அத்தியாயங்களிலும் விரிவாக விளக்கிப் பேசுகிறார். இதற்காக ஃபிரங்க் பர்ட் மார்க்ஸியர்களான அடார்னோவின் ‘கலா சாரத் தொழிற்சாலை’ (Cultural Industry)’ ஹெர் பர்ட் மார்க்வெஸ் -ன் (One dimensional man – The paralysis of criticism:Society without opposition) ஒன்றைப் பரிமாண மனிதன்- முடங்கிவிட்ட விமர்சனம், எதிர்ப்பற்ற சமூகம், தெலூஸ் (Deluez) (பின்நவீன வாதி) மற்றும் சிலகாலம் மார்க்ஸியராக இருந்து பின்னர் பின்நவீனவாதியான மிஷல் ஃபூக்கோ ஆகியோர் தமது எழுத்துக்கள் மூலம் பிரபலப் படுத்தியுள்ள முதலாளித்துவ சமூகத்தின் கலாசாரத் தாக்குதல்களை இவர் இந்த நூலில் (மேற்கோளாகக் காட்டாமல்) பயன்படுத்தியுள்ளார்.

*      எங்கும், எதிலும் நுகர்வுக் கருத்தியலின் ஆதிக்கம் பரவிவிட்டது. (பக்-26)

*      நமது பாலியல் உந்துதல்களைத் தந்திரமாக விளம்பரங்கள் திசைதிருப்பிக் கொள்கின்றன.

*      எல்லாவற்றையும் சரக்குமயமாக்கிவிட்ட முத லாளித்துவம் மனிதர்களையும் வெற்றிகரமாகச் சரக்காக்கி விட்டது (2வது அத்தியாயம்)

வரலாறு தரும் செய்தி

இதுவரையுள்ள வரலாறு முழுவதையும் (எதிர்கால வரலாறு உட்பட என்று நாம் வாசிக்க வேண்டும். ஏனெனில் பூக்குயாமாவைப் பொருத்த அளவில் வரலாறு முடிந்துவிட்டது). அலசி அதன் செய்தியைக் கண்டுபிடித்துவிட்டார் கொலன். ‘முதலாளித்துவம் தனது எதிர்ப்பாளர்கள் அனை வரையும் வென்றுவிட்டது. அதுதான் வரலாறு தரும் செய்தி’ என்கிறார் கொலன்.

“வெகுதூரம் போவதற்கு முன்பாக உலகச் சந்தைமயமாக்கல் இந்த அளவிற்கு நன்றாக இயங்கக் காரணமென்ன என்பதை யோ சித்துப் பார்க்கலாம். அதாவது, மூலதனம் எதனால் வெற்றி பெற்றது? பூக்குயாமாவின் (Fukuyama) கூக்குரல் நியாயமானதுதான். குரலில் உண்மையின் மையக்கரு ஒளிந் துள்ளது. இதுவரை தாம் சந்தித்த போட்டி யாளர்களையெல்லாம் மூலதனம் வென்று வந்துள்ளது வரலாறு தரும் செய்தி. (பக்-57)

முதவாளித்துவத் துதிபாடகர் மார்க்ஸ்

கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும்

“முதலாளித்துவத்தின் புரட்சிப் பங்களிப்பை ஒருவகையான தற்காப்புத் தொனியில் விவரிக்கிறார்கள்” (பக்-58) என்று துவங்கி,

1848 கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் 4 பக்கங்கள் இந்த நூலில் பக் 58-61 மேற்கோளாகக் காட்டப் படுகின்றன.

முந்தைய சமூக அமைப்புகள் ஆயிரக்கணக்கான வருடங்களில் சாதிக்கமுடியாததை முதலாளித் துவம் ஒரு நூற்றாண்டிற்குள் சாதித்துள்ளதையும், முந்தைய பாசாங்கு நிறைந்த சுரண்டல்முறைகளை ஒழித்துவிட்டு அதனிடத்தில் தனது பட்டவர்த்தன மான சுரண்டல் முறையை நாட்டியுள்ளதையும் பேசும் பகுதியிது.

இந்த வரிகளோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, அதுதான் மார்க்ஸின் இறுதி வாதம் போல் எடுத்துக் கொண்டு மார்க்ஸை கொலன் இவ்வாறு குஷியாகப் புகழ்கிறார்.

“(மார்க்ஸைப்போல்) முதலாளித்துவத் திற்காக இப்படி வக்காலத்து வாங்கக் கூடிய வேறு எழுத்தாளர்களை இன்றைய தினம் தேடிப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அரசியல் மற்றும் நிதித்துறை சக்திகள் முன்னே எல்லையற்ற தங்கள் பணிவை நிரூபிக்கவல்ல பங்குச்சந்தை பத்திரிகை யாளர்களாலும், சீந்துவாரற்ற தினசரி களில் பொருளாதாரப் பக்கங்களைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறவர்களாலும் கூட இப்படி (மார்க்ஸைப்போல) மூச்சு விடாமல் முதலாளித்துவத்தைப் புகழ் வதற்கு இயலாது (பக்-62)

கார்ப்பொரேட் முதலாளிகள் முன் குழைந்து குழைந்தாடும் அவர்களது ‘ஆமாம்சாமி மேனேஜர்கள்’ கூட இப்படி மார்க்ஸ் மாதிரி ஆடமுடியாதாம்!.

கார்ப்பொரேட் அலுவலக வரவேற்பறைகளில் காரல்மார்க்ஸின் படம் ஏன் காணப்படவில்லை என்று நமக்குப் புரியவில்லை.

டெனிஸ்கொலன் அதற்கும் காரணம் கண்டு பிடித்துக் கூறியுள்ளார். காரல்மார்க்ஸின் மீசை, தாடி, பறட்டைத்தலை என்றுள்ள எதிர்மறை அம்சங்களை முழுமையாக மழித்து அவரை ‘மொழு மொழு’வென்று அம்பி மாதிரி நவீனப் படுத்த கூட்டி வரப்பட்டுள்ள கொலன் மார்க்ஸின் தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மார்க்ஸின் பெருந்தவறு

முதலாளித்துவத்திற்கு எதிராகத் தனது மீசையை முறுக்கும் இடத்தில்தான் மார்க்ஸ்’ தவறு செய் கிறார்.

“இயற்கை நிகழ்வுகளைக் கடந்து தேவை களின் அடிப்படையில் உடைமை பறித் தோரின் உடைமை பறிக்கப்படும் என அனு மானிக்கும் தகவலில் அவர் (மார்க்ஸ்) தவறிழைக்கிறார்” பக்-131.

அதாவது,

‘ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் சமூக உபரியையும், உடைமைகளையும், உற்பத்தி சாதனங் களையும் அபகரித்துக் கொண்டதோடு, இயற்கை ஜீவராசிகளுக்கு வழங்கியுள்ள வளமலைகளையும், ஆற்றையும், கடலையும், உயிர் வளிமண்டலத்தையும் நாசமாக்கியும், அபகரித்தும் கொண்டுள்ள சிறிய சுயநல சுரண்டல் குழுவிடமிருந்து மனிதகுலம் மீண்டும் அவற்றைப் பறித்தெடுக்கும். அதற்கான வலிமையையும் விழிப்புணர்வையும் அடையும். அதற்கான கீதையாக மார்க்ஸியம் இருக்கும்’ என்று காண்டீபம் முழங்கும் இடத்தில்தான் ‘மார்க்ஸ் தவறு செய்கிறார்’ என்கிறார் கொலன்.

பாகம் இரண்டு

“உறைந்த மாயத்தோற்றங்களாகியிருக் கிற நேற்றைய சமூக உடைமை நெறியும் பொதுவுடைமையும்” தலைப்பு - பக் 131-222 வரை

5 அத்தியாயங்கள் பின்வருமாறு பேசுகின்றன:

1. முதல் அத்தியாயம் கூலிகள் - முதலாளிகள் என்ற வர்க்கப் பிரிவினையை மார்க்ஸ் சொல்வது போல் ஒழிக்கவே முடியாது என்று பேசுகிறது.

2. ‘அரசுகளின் வீழ்ச்சி’ என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயம் சோசலிச நாடு களில் “அரசு” என்பது இன்னும் நீடிப்பது பொதுவுடைமை சமூகத்தில் அரசு இருக்காது என்று மார்க்ஸ் சொன்னது பொய் என்று நிரூபித்துவிட்டது என்று கூறுகிறது.

3. மூன்றாவது அத்தியாயம் ‘கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்தும் கசடுகளாகிவிட்டன. மார்க்ஸியத் தின் உள்ளார்ந்த தவறுகளே இதற்குக் காரணம்’ என்று விவரிக்கிறது.

4. நான்காவது அத்தியாயம் இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமையின் வீழ்ச்சியானது ‘மார்க்ஸின் கணிப்புகளைத் தவறு’ என்று நிரூபிப்பதாகப் பேசுகிறது.

5. ஐந்தாவது அத்தியாயம் சோவியத் யூனியனைக் குறித்த மீள்பார்வை. ‘லெனின், ஸ்டாலின் பாதையும் தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறுகிறார் நூலாசிரியர்.

சாரமாக

மார்க்ஸின் கணிப்புகளில் முதலாளித்துவப் புரட்சியை அவர் பாராட்டியது ஒன்றே ஒன்று தான் சரியாக இருந்தது. முதலாளித்துவத்திற்கு நெருக்கடிகள் வரும் என்று சொன்னதும் கூட சரியாகத்தான் படுகிறது. இதுபோன்ற விஷயங் களைத் தவிர ‘மார்க்ஸிடம் உருப்படியாக எதுவு மில்லை! முதலாளித்துவத்திற்கு எதிராக மார்க்ஸ் எழுதிய அனைத்துமே தவறானவை, அரைகுறை யானவை என்பதால்தான் அவரது வாரிசுகள் அனைவரும் தவறான பாதையில் போக நேர்ந்தது’ என்கிறார். மார்க்ஸ்சும் அவரது சீடர்களும் புதிய சுரண்டல் முறைக்கும் தேவையற்ற உயிர்ப்பலி களுக்கும் வழிவகுத்தனரே தவிர வேறு எந்நன்மையும் ஏற்படுத்தவில்லை என்கிறது.

இந்தப் பாகத்தின் வாதத்தை மேற்கோள் களுடன் மொழிபெயர்ப்பாளர் முன்னுரையுடன் ஒப்பிடவேண்டியது அவசியமாகிறது. இதற்கு மறுப்பு எழுதுகிற வேலைகூட நமக்குக் குறைந்து விட்டது.

முழுப்பூசணியைச் சோற்றில் மறைக்கும் மொழிபெயர்ப்பாளர்- கொலன் வாதம்

“மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக் காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடி யாது”.

என்று துவங்குகிறது மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை (பக்-7-8). தொடர்ந்து, 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததை ஒட்டிய வீழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு,

“இவற்றுக்கெல்லாம் மார்க்ஸைக் குறை சொல்லமுடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேடுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸியம் (லெனினிஸமும் ஸ்டாலி னிஸமும்) காரணமேயன்றி கார்ல் மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை நினைவுகூர்தல் வேண்டும்”.

“தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டெனிஸ்கொலன் கார்ல்மார்க்ஸ் சிந்தனையில் தோய்ந்தவர். மார்க்ஸிய சிந்தனையைப் பழைமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீன காலத்திற்கேற்ப மாற்றங் களைக் கொண்டுவர நினைக்கும் சிந்தனை வாதி”.

வாரிசுகளும் சிதைப்புகளும்

எந்தவொரு தத்துவமும் வெற்றிபெற அதற் கான வரலாற்றுத் தேவை மட்டுமே முதல்காரண மாக இருக்கும். அத்துடன் அதன் வாரிசுகள்தான் ஒரு தத்துவத்தை வெகுசனப்படுத்தவும், நடப்பி லாக்கவும், மாறும் சூழல்களுக்கு ஏற்ப அதை மேம்படுத்தவும் செய்கின்றனர். அதற்காகத் தமது வாழ்வை அவர்கள் அர்ப்பணிக்கவும் செய்கின்றனர்.

ஆனால், அவர்களில் பலர் மூல தத்துவத்தைத் தமது சொந்த நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிதைக்கவும் செய்துவிடுகின்றனர். பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்ஸியம் ஆகிய எவையும் இந்த விதியிலிருந்து தப்பவில்லை. அதேபோன்று சிதைவு களுக்கு எதிரான போராட்டமும் தொடர்கதையே. சிதைவுகளுக்கு எதிராக மூலபாடத்தை மீட்டெடுக்கப் போராடியவர்களின் பட்டியல் மார்ட்டின் லூதரும், “மீண்டும் மார்க்ஸை நோக்கி” என்று தனது போராட்டத்தைத் தொடங்கிய அல்தூசரும் சில உதாரணங்களாக உள்ளனர்.

டெரிஈகிள்டன் போன்ற புகழ்பெற்ற மார்க் ஸியர்கள் பலர் மார்க்ஸியத்தையும், கம்யூனிஸ்டு களின் தோல்விகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் பார்வையைக் கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் களின் தோல்வி மார்க்ஸியத்தின் தோல்வியாகாது என்று The Spectre of Marx என்ற தனது கடைசிக்கால நூலில் தெளிவாகவும் கூறினார். இப்படிப்பட்டவர் களில் ஒருவர் என்று டெனிஸ்கொலனை நமக்கு மொழிபெயர்ப்பாளர் அறிமுகப்படுத்துகிறார்.

ஆனால்...

டெனிஸ்கொலன் இந்த நூலில் இதற்கு நேர் மாறாக மார்க்ஸின் வாரிசுகள் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மூலஊற்று மார்க்ஸே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். தனது ஆய்வு களிலிருந்து மார்க்ஸ் வளர்த்து எடுத்துக்கொண்டு வந்த முடிவுகள் அனைத்தும் தவறானவை என்றும், ஆய்வே அரைகுறையானது என்றும் மீண்டும் மீண்டும் கூறுகிறார். மேலும் மார்க்ஸின் கருத் திற்கு வடிவம் தர முயன்ற முதல்முயற்சியான கம்யூனிஸ்ட் அகிலம் தொடங்கி, லெனின், மாவோ, காஸ்ட்ரோ, ஐரோப்பிய சமூக ஜன நாயகவாதிகள் (குடியரசுவாதிகள் என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) அனைவரும் செய்த தவறுகளுக்கு மார்க்ஸையே குறைகூற வேண்டும் என்கிறார். (பக் 194-95)

அவரது சொற்களில் (ஜெர்மன் பிரஞ்சு சமூக ஜனநாயகக் கட்சிகளின் தோல்விகளைக் குறிப்பிட்டு)

“சமூகக் குடியரசு நம்மை வஞ்சிக்கவில்லை. மாறாக, மார்க்ஸியம் முன்வைத்த சிந்தனை யையே அது நடைமுறைப்படுத்தியது என் பதை ஏற்றுக்கொள்வோமெனில் இரண் டாம் சர்வதேச அமைப்பிலும் அதில் அங்கம் வகித்த வெவ்வேறு கட்சிகளிலும் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்களை (வீழ்ச்சிகளைத்தான் குறிப்பிடுகிறார்) விளங்கிக் கொள்வதில் சிரமம் இராது”. (பக் 174)

இன்னும் தெளிவாக மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையைப் படித்துவிட்டு அதற்கு முகத்திலடிப் பவர்போல் மறுப்பு தெரிவிக்கிறார் மூல ஆசிரியர் கொலன்:

“தோல்வி பொதுவுடைமைக்கல்ல (மார்க் ஸியத்திற்கல்ல, ஸ்டாலினிசத்திற்கே என் பவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்கள்)”. (பக் 195)

கொலன் மார்க்ஸிய சிந்தனையில் தோய்ந்தவர்?

ஆக்கபூர்வ மார்க்ஸிய ஈடுபாடுடையவர்?

இரண்டாம் பாகம் முழுவதும் ஒன்றரை நூற்றாண்டு கால மார்க்ஸிய இயக்கப் புரட்சிகள், போராட்டங்கள் அனைத்தும் தவறானவை என்றும், மனிதகுலத்திற்குப் பெரும் உயிர் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தியவை என்றும், தாங்கள் புதிய சுரண்டும் வர்க்கமாக ஆட்சியில் உட்கார கம்யூனிஸ்டுகள் செய்த ஏமாற்று வேலைகளே என்றும் விரிவாகப் பேசுகிறார்.

புரட்சிகர மார்க்ஸிஸ்டுகளின் வழிகாட்டியான (பக் 186-இல் கிண்டலாகக் குறிப்பிடப்படும் லெனினும் போல்ஷிவிக்குகளும்,)

“சோகைபிடித்திருந்த தொழிலாளி வர்க்கத் தினரால் உடனடியாகப் புரட்சியை நடத்த இயலாதென்பதால் புரட்சியை முன் னெடுத்துச் செல்லத் தங்களைக் கேட்டுக் கொண்டதுபோல பாவனை செய்தார்கள்”. (பக் 192)

“நல்ல மார்க்ஸியவாதிகளாகிய நாம் பின் வரும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது. கடந்த நூற்றாண்டில் சமூக உடைமை வாதிகள் மற்றும் பொதுவுடைமைவாதிகள் புரட்சி என்ற பெயரில் முன்வைத்தவை அனைத்தும் புதிய வர்க்கத்தின் முதலாளித் துவமல்லாத- அதே வேளையில், தொழி லாளி வர்க்கத்தைச் சுரண்டுவதில் மாற்றுக் குறையாததொரு புதிய ஆதிக்கவர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அணிந்த முகமூடிகளே என்பதுதான் அம்முடிவு”. (பக் 187)

கொலனின் மார்க்ஸிய எதிர்ப்பும் திரித்துரைப்பு களும்

பூக்கோ தொடங்கி (பக்-11) கிராம்ஸி, எங்கெல்ஸ், மார்க்ஸ் வரை எல்லாத் தத்துவமேதைகளும் திரித்தும் புரட்டியும் நூல் முழுவதும் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.

“மிஷல்பூக்கோ ‘சொற்களும் பொருட் களும்’ என்னும் நூலில் பகடியாகக் குறிப் பிடுவதுபோல் இன்றைக்கு மார்க்ஸியத் தின் கதி கடலையொட்டிய மணல்முகம் போன்றது. எந்தநேரமும் இல்லை என்றா கலாம்”. (பக்-11)

மார்க்ஸியம் மணல் முகம் போல் அழிய வேண்டும் என்ற தனது ஆசையை ஃபூக்கோ மீது ஏற்றியுள்ளார். கொலன் ஃபூக்கோ சொன்னது மனிதவாதத்தின் அழிவைப் பற்றி மட்டுமே (விவரிக்க இடமில்லை).

சோவியத் யூனியனில் ஸ்டாலின் காலத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட அடக்குமுறைகளையும் கட்டாய உழைப்பு முகாம்களையும் கூறிவிட்டு,

“புராதன அடிமைமுறையின்றி நவீன சமூக உடைமை நெறியில்லை என்ற எங்கல்ஸ் கூற்றை மறந்துவிடமுடியாது”. (பக் 207)

அடுத்த வரியில் மீண்டுமொருமுறை மொழி பெயர்ப்பாளரை மறுத்து கொலன் கூறுகிறார். இத்தகைய மறுப்புகளை வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட நிறைய மேற்கோள்களை நேரடியாகக் காட்டமுடியும் (இடநெருக்கடி காரணமாக அப்படிச் செய்ய முடியவில்லை)

“ஆக ஸ்டாலின் மரபார்ந்த கோட் பாட்டைச் செயலில் கொண்டுவந்தார்”. (பக் 207)

எங்கல்ஸையும் இழிவுபடுத்த டெனிஸ்கொலன் இந்தப் பொய்வரியை எழுதியுள்ளார். இதுமாதிரி நிறைய உள்ளன நூலில்.

மார்க்ஸியத்தை இழிவுபடுத்த எதையும் கூறத் தயங்காத, உறுதியான மார்க்ஸிய எதிர்ப்பாளராக கொலனின் உள்ளத்தை வாசித்த எவரும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். மார்க்ஸையே

“சோவியத் ஆட்சியை ஆசிய சர்வாதி காரங்களோடு ஒப்பிடலாம், மார்க்சும் இப்படி ஒப்பிட்டு இருக்கிறார்”. என்று எழுதுகிறார் கொலன்.

மொழி(பெயர்ப்பு)க் குழப்பம்

மொழிவழியே மட்டுமே மனித அறிவு கட்டமைக்கப்படுகிறது (Linguistically Determined) என்கிறது பின்நவீனவாதம். இதன்படி, மொழிக் குழப்பம் ஏற்படுத்துவது மூலம் மூளைக்குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றாகிறது. ஆனால் மூளைக் குழப்பத்தின் வெளிப்பாடுதான் மொழிக்குழப்பம் என்றார் நவீனவாதியான சிக்மன்ட் ஃப்ராய்டு.

இரண்டுமே உண்மைதான்!

மார்க்ஸின் கறார்- மொழி

இயற்கை விஞ்ஞானிகள் கையாளும் கறார்-மொழிக் கொள்கையை (ஒருசொல்-ஒருபொருள், One signifier one signified) இயல்பாகவே கடைப் பிடித்தவர் மார்க்ஸ், சோசலிசம் என்ற சொல் பொருட்சொதப்பலுக்கு உள்ளாகிவிட்டது என்று கூறிப் பொருள் தெளிவுக்காக கம்யூனிஸம் என்ற சொல்லைத் தான் பயன்படுத்துவதாக 1848-இல் கூறினார். தொழிலாளி வர்க்கம் (Working class) என்ற பொருளுள்ள சகஜமான ஜெர்மன் சொல் இருந்தும் துல்லியம் வேண்டி Proletarist என்ற பண்டைய ரோமானிய சட்டச்சொல்லை (லத்தீன்) தேடிப்பிடித்துப் பயன்படுத்தினர், மார்க்ஸ். இந்த எடுத்துக் காட்டுகளிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்- எளிமையைக் காட்டிலும் துல்லியமே முக்கியம் என்பதில் மார்க்ஸ் உறுதியாக இருந்தார் என்பதை.

குளறல் மொழி

ஆனால் மார்க்ஸைப்பற்றிப் பேசும் இந்த நூலில், அதுவும் துறைச்சொற்கள் மிகக்கறாராகக் கையாளப்பட்டிருக்கவேண்டிய நூலில் குளறு படிகள் மலிந்து கிடக்கின்றன. பொதுவுடைமை என்ற சொல் ஏற்படுத்தும் குழப்பம் கொஞ்ச நஞ்சமல்ல, குறிப்பாக, கடைசிப்பகுதியில். சில இடங்களில் அது மார்க்ஸியத்தைக் குறிக்கிறது; சில இடங்களில் கட்சிக் கம்யூனிஸ்டுகளைக் குறிக்கிறது; சில இடங்களில் சோசலிச சமூக அமைப்பைக் குறிக்கிறது. மார்க்ஸியத்தையும் பொதுவுடைமையையும் பிரித்துக்காட்ட டெனிஸ் கொலன் மிகவும் சிரமமெடுக்கும் நூலில் இந்தக் குழப்பம் மன்னிக்கப்படக்கூடியதல்ல.

உதாரணமாக, மிஷன்பூக்கோவின் புகழ் பெற்ற “The Ordwer of Things” என்ற நூலின் தமிழ்ப் பெயர் “சொற்களும் அர்த்தங்களும்” - (பக் 11), Dialectical Materialism - பொருள்முதல்வாத உரை யாடல் (பக்- 163), Dialectics - உரையாடல் (பக்- 163) என்று உள்ளது. அப்படியானால் பிளேட்டோவின் “டயலாக்” எப்படி மொழிபெயர்க்கப்படும்? இது போன்றவை, பெரிதுபடுத்தப்பட வேண்டாதவை என்று விட்டுவிடக்கூடியவை ஏராளமாக இந்நூலில் உள்ளன.

சமூகக் குடியரசு (Social Democracy) பக்-23... கடைசிவரை ‘குடியரசு’ என்பது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் Democracy யாக உள்ளது. அப்படியானால் ஜனநாயகம் என்று நேரடியாக வருகிற இடங்களில் உள்ளவை Republic? - என்ற பொருளில் இடம் பெற்றுள்ளனவா? தமிழ் நாட்டுப் பள்ளிச்சிறுமிகள் Republic Day என்பதைக் குடியரசு தினம் என்று குறிப்பிடுகின்றனர். இது போன்ற துறைச்சொற்களை (terms) அதுவும் இந்த நூலின் விவாதத்திற்கே அடிப்படையாக உள்ள சொற்களைக் குழப்புவது, சகிக்கக்கூடியதாகப் படவில்லை. அர்த்த விபரீதம் அனுமதிக்கத்தக்க தல்ல.

விரல்கள் அபஸ்வரம் எழுப்பினால் அவற்றை வெட்டி வீசிவிடவேண்டும் என்று லட்சிய நிலையில் கோபப்பட்ட சு.ரா.வின் நினைவு வந்துவந்து போவதைக் தவிர்க்க முடியவில்லை.

கடைசிப் பாகம் - மார்க்ஸை விலக்கிவிட்டுப் புதிய பொதுவுடைமை

“1989-ஆம் ஆண்டில் 20-ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் இடம்பிடித்த பொதுவுடை மையின் வீழ்ச்சியைக் கண்டோம். வீழ்ச்சி யென்றால் அது பொதுவுடைமைக்கு நேர்ந்ததல்ல” (பக்-225) என்று துவங்கு கிறது இந்தப் பகுதி.

“எத்தகைய விலையும் கொடுத்து நெருக் கடியிலிருந்து மீள்வதற்குரிய சக்தியும் முதலாளித்துவத்திற்குமுண்டு” (பக்-225)

இந்த இரண்டாவது வாசகம் பல்லவிபோல் முதல் அத்தியாயத்திலிருந்தே தொடர்ந்து கடைசி வரை வலியுறுத்தப்படும் அடிப்படைக் கருத்தாகும். அதாவது, எந்த நெருக்கடியும் சமூகம் முதலாளித் துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை நோக்கிச் செல்லும் நிலைக்கு சமூகத்தை இட்டுச்செல்லாது என்று பொருள்.

இந்த நூலின் முகப்பு வாசகம் - பொய்?

“முதலாளித்துவத்தின் தொடர் வெற்றிக் கான காரணங்களை உரைப்பதோடு அதை மார்க்ஸியம் வெல்வதற்கான புதிய யோ சனைகளையும் முன்வைக்கிறது.”

என்று வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந் ததைப் பார்த்தோம். ஆனால் டெனிஸ்கொலன் இதற்கு நேர்எதிராக முதல் அத்தியாயம் தொடங்கி இறுதிவரை பன்னிப்பன்னிச் சொல்வது இதுதான்.

“எந்த நெருக்கடியும் முதலாளித்துவத்தை வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லாது”

இதைவிட முக்கியமானது ‘மார்க்ஸியம் அதை வெல்வது என்பது கற்பனை கூட செய்யமுடியாதது’ என்பதுதான்! இன்னும் முக்கியமானது டெனிஸ் கொலன் மார்க்ஸியத்தை வீழ்த்தி வரலாற்றி லிருந்து அதன் செல்வாக்கைத் துடைத்து அகற்றி விட்டு ஒரு புதிய பொதுவுடைமைச் சிந்தனையை உருவாக்க வேண்டும் என்று கூறுபவராக உள்ளார் என்பதுதான்! அதற்காக அவர் முன்வைக்கும் வாதத்தைச் சுருக்கமாகவாவது பார்ப்போம்.

“பொதுவுடைமை மார்க்ஸின் கண்டுபிடிப் பல்ல” (பக் 225)

இந்தத் தலைப்பில் ஒரு அத்தியாயமே எழுதி யுள்ளார் கொலன். இதில் பொதுவுடைமை என்ற சிந்தனை மார்க்ஸின் கண்டுபிடிப்பல்ல என்றும், பிளேட்டோ முதல் இயேசு என்று தொடர்ந்து பலர் பொதுவுடைமை குறித்து ஏற்கெனவே பேசி யுள்ளதாகவும், இயேசு இது விஷயத்தில் கூடு தலாகவே வேலை செய்திருப்பதாகவும் விவரிக் கிறார்.

இந்தக் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்குப் பதில்தர இத்தாலிய மார்க் ஸியரான ‘கொஸ்டான்ஸோ பிரவ்’-ஐ சாட்சிக்கு அழைக்கிறார்.

“மார்க்ஸ் நவீன பொதுவுடைமைச் சிந்தனைக்குத் தந்தையே தவிர பொது வுடைமையின் தந்தையல்ல என்பது கொஸ் டான்ஸோ பிரவினுடைய திட்டவட்ட மான மறுப்பு” பக்-226

பொதுவுடைமை மார்க்ஸின் கண்டுபிடிப்பு என்று எந்த மார்க்ஸிஸ்ட் உரிமை கோரினார் என்று நமக்குத் தெரியவில்லை.! மார்க்ஸிய பால பாடம் படித்தவர்களுக்குக் கூடத் தெரியும் - மார்க்சுக்கு முன்பே உட்கற்பனைவாத (Utopian) சோசலிசம் இருந்தது பற்றி. மார்க்ஸே தனது சோசலிசத்தை உட்கற்பனைவாத சோசலிசத்தின் பின்புலத்தில்தான் வரையறுத்துக் கூறினார். இது தவிர, ஆதிமனித சமூக அமைப்பு பொதுவுடைமை அமைப்பாக இருந்தது என்று கண்டுபிடித்துக் கூறியதற்காக மானுடவியலாளர் மார்கனை மார்க்ஸ் பாராட்டியது தெரிந்ததே. வர்க்க சமூகம் தோன்றியபோதே பொதுவுடைமைச் சிந்தனையும் தோன்றிவிட்டதாகச் சொன்னார் வி.ஐ.லெனின்.

“ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் அதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோசலிச போதனைகள் உடனே தலை தூக்கத் துவங்கின”

லெனின். தெரிவு நூல்கள் - முதல்பாகம் பக்-23 இதெல்லாம் தெரிந்தும் கொலன் வீண்வாதம் செய்து நேரத்தை வீணடிப்பது காரணத்தோடு தான். வாசகனை இழுத்தடித்துக் கடைசியாக விஷயத்திற்கு வருகிறார்.

மார்க்ஸின் செல்வாக்கு, மார்க்ஸிய வரை யறுப்பு ஆகியவற்றால் பொதுவுடைமைச் சிந்தனை கறைபட்டுவிட்டதாகவும் அந்தக் கறையைப் போக்கிட அதைக் கழுவிச் சுத்தப்படுத்தப்போவ தாகவும் கூறுகிறார்.

“ஒரு புதிய பொதுவுடைமைச் சிந்தனை நமக்குத் தேவைப்படுகிறது” -பக்-236

கொலனின் புதிய பொதுவுடைமை.

மார்க்ஸின் கருத்துக்கள் அனைத்தும் கற்பனா வாதத் தன்மையுடையவை என்று கூறிக் களைய வேண்டிய மார்க்ஸியக் கற்பனைகள் எவை யென்றும் பட்டியலிடுகிறார். பக் 237-ல்

“உண்மையான பொதுவுடைமை... மூன்று கருதுகோள்களை விலக்கிவைத்தல் (பக்-237)

1.எதிர்காலத்தில் சமூகமுரண்களை இல்லா தொழிப்பதால் அரசையும் இல்லாதொழித்து விட முடியுமென ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டதைச் செயல்படுத்துவதற்கு சாத்தியங்களில்லை. எனவே, மோதலும் அரசும் இல்லாத உலகைப்பற்றிய கற்பனா வாதக் கனவிலிருந்து மீளுதல் முதலாவது.

2.அரிதான மூலாதாரங்களையும் பகிர்ந்தளிப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பவேண்டிய அவ சியம் இல்லாத வகையில் உற்பத்தி சக்திகளைத் தங்குதடையின்றி அதிகரிக்கவேண்டுமென்ற கற்பனாவாதக் கனவிலிருந்து மீள்வது இரண் டாவது.

3. மீண்டும் ஈடன் தோட்டத்திற்குத் திரும்புதலே பொதுவுடைமை என்ற கற்பனாவாதக் கனவிலிருந்து மீள்வது மூன்றாவது.”

கடைசியாகத் தனது முடிவையும் கூறுகிறார்.

“சமூகம் இனி ஒற்றைத் தன்மை கொண்ட தாக மாறுமென்றோ அங்கு மாறுபட்ட நலன்களை அடிப்படையாகக்கொண்ட சமூகக் குழுக்களுக்கு இடமில்லையென்றோ கூறுவதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை.” (பக்-238)

அதாவது, மார்க்ஸியம் சொல்வதுபோல் வர்க்கமற்ற சமூகம் வரவே வராது. தனியுடை மையைப் பாதுகாக்கும் அரசு முடிவற்றுத் தொடர்ந்து நீடிக்கும். உற்பத்தி சக்திகள் முடிவற்று வளர்வதால், சமூகத்தின் உற்பத்தி சமூகம் முழு வதற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நீதியை அடைய முடியும் என்ற மார்க்ஸியக் கோட்பாடு நடை முறைக்கு வராது. ‘புராதனப் பொதுவுடைமையை மனித சமூகம் அதன் உயர்ந்த வடிவில் மீண்டும் அடையும்’ என்ற மார்க்ஸியக் கூற்று சாத்திய மற்றது.

அதாவது, கொலனின் புதிய பொதுவுடைமை என்பது முதலாளித்துவத்தைத் தவிர்க்கமுடியாத பகுதியாக - விதியாக - ஏற்றுக் கொண்டு அடங்கிக் கிடக்கும் பழைய பொதுவுடைமை போல், கொலனின் பொதுவுடைமை முதலாளித்துவத்திற்கு எதிரான தாக இருக்காது. அதாவது ஆடும், புலியும் ஒன்றை யொன்று புரிந்துகொண்டு அன்னியோன்னியமாக வாழும் என்ற கற்பனையற்ற யதார்த்தவாதப் பொதுவுடைமையை நமக்குத் தருகிறார்.

அண்ணாயிசம்

தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் என்றழைக்கப் பட்ட எம் ஜி ஆர் அ.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கிய பிறகுதான் அதற்கு ஒரு கொள்கை தேவை என்று கண்டறிந்தார். ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன? என்று அவரை நோக்கிக் கேட்டவர்களிடம் ‘அண்ணாயிசம்’தான் தனது கொள்கை என்றார். எம்ஜிஆர் எவராலும் புரிந்து கொள்ளமுடியவில்லையென்பதால் விளக்கம் கேட்டனர். உடனே, இதுபோல் 300 பக்க நூல் எழுதி மக்களைத் துன்பப்படுத்த விரும்பாத அந்தப் பொன்மனச் செம்மல் ஒரேவரியில்

“சோசலிசம், கம்யூனிசம், கேப்பிடலிசம் ஆகிய மூன்றும் கலந்ததுதான் அண்ணா யிசம்” என்று எளிமையாகக் கூறினார்.

பல்கலைக்கழகப் பண்டித மொழியில் இதை விளக்கி எம்.ஜி.ஆர் ஒரு புத்தகம் தயாரித்து வெளியிட்டிருந்தாரேயானால், ‘பிரெஞ்சு நாட்டின் எம்ஜிஆர்’ என்று டெனிஸ்கொலன் இன்று பெருமை பெற்றிருப்பார்.

கானானிலிருந்து கானலுக்கு

மார்க்ஸை பைபிளின் ஈடன் கனவுவாதி என்று கூறும் கொலன் நம்மை நிஜமான கானான் தேசத்திற்கு அழைத்துப் போவதுபோல் இழுத் தடித்துக் கடைசியில் பாலைவெளியில் நிறுத்தி விட்டுச் செல்கிறார். பொதுவுடைமை என்பது நவீன மானுடவியலாளர் சொல்வதுபோல் மனித குலத்தின் ஒரு நிரந்தர ஏக்கம், ஒரு ஆசை அவ்வளவே! என்கிறார் கொலன். அநீதியான சமூகத்தில் அறம் தேடும் மனிதர்கள் ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் பொதுவுடைமை என்பதை வைத்துக்கொள்ளலாம், அவ்வளவு தான். நூலின் கடைசிப்பத்தியில் இந்த உண்மையை உடைக்கிறார்.

“உடைமைகளைப் பொதுவில் வைப்பதும், பிறருடைய கவலைகளைப் பகிர்ந்துகொள் வதும் சமத்துவமும் சகோதர சமுதாய மெனச் சொல்லிக்கொள்வதும் மிகவும் உயர்ந்ததே.” (கடைசிப் பக்கம் 271)

முத்தாய்ப்பாக,

“இயேசு சிலுவையிலிருந்து மீண்டும் எழுந்து வருவார் என்று நம்புவதுபோல் இறந்துபோன மார்க்ஸ் திரும்பிவந்து முதலாளித்துவத்தை ஆட்டிப் படைத்தால் நல்லதுதானே...” என்று, விடியலுக் காக ஏங்கும் கோடான கோடி மக்களிடம் கிண்டலாகக் கேட்டு முடிக்கிறார்.

டெனிஸ்கொலன் பற்றி

நூலாசிரியரான இவர் நூல் முழுவதும் முதல் வரி துவங்கி கடைசிவரிவரை வெளிப்படையாகவே பேசுகிறார். மார்க்ஸ் என்பவரைத் தான் ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை, மார்க்ஸியவாதியைப் போல் வேடமணியவில்லை. அதைத் திருத்தப்போவதாகவோ, வளர்க்கப் போவ தாகவோ, நவீனப்படுத்தப்போவதாகவோ ஒரு வரிகூட எழுதவில்லை.

அத்துடன் நில்லாமல், பொதுவுடைமை என்ற சிந்தனை இந்த அளவுக்கு உலகில் வலுப் பெறு வதற்குக் காரணம் அது சாத்தியமாகக் கூடியது என்ற பிரமையை மார்க்ஸ் ஏற்படுத்திவிட்டதுதான் என்று மார்க்ஸைக் குற்றம்சாட்டி நூலாசிரியர் கொலன் அவரைச் சுத்தமாக நிராகரித்தால் மட்டுமே பொதுவுடைமை என்பது வெறும் பேச்சுக்கு மட்டுமே உரியது, நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஆகும் என்று தெளிவாகக் கூறுகிறார்.

வர்க்க சமூகம் நீடிக்கும் வரை ஒடுக்கப் பட்டவர்களின் விடுதலைக்கான ஆயுதமாக உள்ள மார்க்ஸியம் அதன் எதிரிகளால் தாக்கப்படவே செய்யும். இது எதிர்பார்க்கக் கூடியதே. மெய்யியல், பொருளாதாரம், மானுடம் போன்ற அறிவுத் துறைகளில் கொலனை விடக் கூர்மையானவர்கள் பிரஞ்சிலும், தமிழிலும் உள்ளனர்.

மொழிபெயர்ப்பாளரைப் பற்றி

நாகரத்தினம் கிருஷ்ணா என்பவர் ஒரு வணிகர் என்றும் பிரான்ஸில் வாணிகம் செய்பவர் என்றும் நூலில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் வாசகச் சந்தையில் மார்க்ஸிய எதிர்ப்பு நூல் என்று சொல்லி விற்பதைவிட மார்க்ஸியத்தை வளர்த் தெடுக்க முயலும் நூல் என்று விளம்பரப்படுத்தி விற்பதுதான் லாபகரமாக அமையும் என்று இவரது வணிக மூளைக்குத் தெரிந்திருக்கிறது. லாபத்திற்காக எதையும் செய்யலாம் என்று பிரஞ்சு வணிக சாஸ்திரமும் கூறுகிறது.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது. தட்டச்சு செய்தவர் மொழிபெயர்த்தவர் என்பதற் காக ஒருவர் அந்தப் பிரதியைப் புரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது வியாச மகிரிஷி விநாயகப் பெருமானுக்கே சொன்னது.

காலச்சுவடு - நமது கேள்வியும், யோசனையும்

அப்பட்டமான, தெளிவான மார்க்ஸிய எதிர்ப் பாளர், பொதுவுடைமை என்ற சிந்தனையைக் கூட அடிப்படையில் கூட ஏற்காத ஒருவரின் நூலைத் தமிழ் கூறுநல்லுலக வாசகர்களிடம் இது,

* “மார்க்ஸியம் வெல்வதற்கான புதிய யோசனைகளையும் முன் வைக்கிறது”,

* “மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழைமைவாதி களிடமிருந்து மீட்டு நவீன மாற்றங்களைக் கொண்டுவருகிற நூல்”,

* “மார்க்ஸிய சித்தாந்தக் கோட்பாடுகளை ஆக்கபூர்வமாக உள்வாங்கி மிளிர்கிறது இந்நூல்”

என்று கூவி விளம்பரப்படுத்தி விற்பது எந்த வகையில் அறநெறிப்பட்டது?

அறநெறியென நாம் குறிப்பிடுவது உயர்ந்த நெறிகளையல்ல! மாறாக, முதலாளித்துவச் சந்தை வாதிகள் நுகர்வோரிடம் கடைப்பிடிப்பதாகக் கூறும் குறைந்தபட்ச சந்தையறத்தைத்தான்!. சந்தை யறம் மீறப்படும்போது கூடச் சொரணையற்றுக் கிடக்காமல் ஒருசமூகம் புரட்சிப்போரில் ஈடுபட வேண்டும் என்று நகைக்கடை கல்யாண்-பிரபு உரத்தகுரலில் அறைகூவி அழைக்கிற காலம் இது. ஆனால் காலச்சுவடு...

மூலநூல் எந்த மொழியில் வெளிவந்தது என்றுகூடக் கவனிக்காமல், ஆங்கில நூலுக்கு பிரஞ்சு அரசு ஏன் நமக்கு மானியம் தருகிறது என்று கூட யோசிக்காமல், டெனிஸ்கொலன் என்பவரை உலகில் ஒருவராவது மார்க்ஸியவாதி என்று ஒப்புக்கொண்டுள்ளாரா என்று விசாரிக் காமல் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த, அதுவும், மார்க்ஸியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், சு.ரா. அனுமதித்திருக்கவே மாட்டார்.

சிறு பிசிறு கூடத் தனது எழுத்தில் தட்டுப்படக் கூடாது என்று கருதி ஒரு நாவலுக்கே இருபது வருடம் கூட எடுக்கத் தயங்காத மகா யக்ஞர் அவர்; சந்தை வேகத்திற்கு சரக்கு சப்ளை பண்ணுவதைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்; அந்த இழிநிலையை எதிர்த்து மட்டுமே பக்கம் பக்கமாக எழுதியவர்; புதுமைப்பித்தனின் தொடர்ச்சியாகத் தன்னைக் கருதியவர்.

சு.ரா. என்ற அந்த மகா வைணிகரின் (Maestro) லட்சியத்தோடும் புகழோடும் தொடர்புடையதாக காலச்சுவடு என்ற பெயர் உள்ளது. அந்தத் தொடர்புக்கே ஒரு கலாசார மதிப்பு உள்ளது. அதைவிட முக்கியமாக வணிகமதிப்பும் உண்டு. எனவே அது பாதுகாக்கப்படவேண்டியது மிக மிக முக்கியம்!.

மற்றபடி, மார்க்ஸியத்தைப் பழைமைவாதி களிடமிருந்து மீட்பது, ஒட்டடையடிப்பது, நவீனப் படுத்துவது போன்ற வேலைகளைச் சம்பந்தப் பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டுவிடலாம்.!!