சங்க இலக்கியங்கள் காலத்தாலும் பொருளமைப் பாலும் பழமையானவை. சங்க கால நாகரிகமும் பண்பாடும் மிகச் சிறந்தவை என்பதற்குச் சங்க இலக்கியமே சான்றாகும்.

படிப்படியாக வளர்ந்து வந்த தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியலாம். அக வாழ்விலும் புற வாழ்விலும் சங்கத் தமிழர் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.

“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன்தோன்றி மூத்த குடி.”1

சமுதாயம் என்பது பலரும் கூடி வாழும் ஓர் அமைப்பாகும். மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு வண்ணங்களால் ஆன மலர்கள் ஒன்றிணைந்து மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றி ணைந்து வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை கண்டு வாழ்வதே சமுதாயம்.

“தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக மன அளவில் வளர்ச்சி பெற்று ஆண் பெண் இணைந்து சந்ததிகளை உருவாக்கிப் பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு வித்திட்டது எனலாம்.”2

என்னும் கருத்து சமுதாய அமைப்பை விளக்குகிறது.

சமூகம் என்பது செயல்பாடுள்ள ஒரு குழுவாகும். பல மனிதர்களைக் கொண்டு சமூகம் உருவாக்கப் பட்டிருப்பினும் சமூக அமைப்பில் தனிமனித நலன் கள் சமூக நலன்களுக்கு உட்பட்டு அமைகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாடும் அச்சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது. இத்தன்மைகளால் கூட்டமைப்பின் நன்மைக்காக ஒவ்வொருவரும் கடமையாற்றவும் கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற மனப்பான் மையைப் பெற வேண்டும் என்பதே சாலச்சிறந்தது.

பாகுபாடு

சமூகங்கள் தோன்றுதலும் வளர்தலும் அழி தலுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக் கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர்.

சங்க கால மக்கள் தாங்கள் செய்யும் தொழிலையே நம்பி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் துணையாக இருந்தது. குறிஞ்சி நிலத் திலே குறவர், முல்லை நிலத்திலே இடையர், மருத நிலத்திலே உழவர். நெய்தல் நிலத்திலே பரதவர் என நில அமைப்பிலே நிபந்தனையின்றிக் கிடைத்த தைக் கொண்டு வாழ்க்கை அமைத்தனர்.

“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடை சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குறவர், குறத்தியர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகன், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், கடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவணர், யாழ்ப் புலவர், யானைப்பாகர், யானை வேட்டுவர், வட வடுகர், வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்”3 எனப் பல தொழிற்பிரிவுகள் அக்காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் அவர்களின் பெயர்கள் அமைந்துள்ளமையை அறியலாம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் வாழ்ந்த குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் ஆகியோர் தொழிலில் சிறந்து விளங்கினர். அவர்கள் செய்த தச்சுத் தொழில், நெசவுத் தொழில், துணி துவைத்தல், குயவுத் தொழில், அணிகலன்கள் செய்யும் தொழில் ஆகிய தொழில்கள் சங்கச் சமூகப் பாகுபாட்டில் காணப்படுகின்றன.

தச்சுத் தொழில்:

தச்சுத் தொழிலின் சிறப்பை நெடுநல்வாடை உணர்த்துகிறது. அரசனின் கட்டிலைத் தச்சர் செய்தனர். அதன் கால்கள் வன்மை மிகு போரில் பொருதுபட்ட யானைக் கொம்பினால் திண்மை யுடன் ஆக்கப்பட்டன என்பதை அறியமுடிகிறது.

கதவு நிலை பல மரங்களை இறுகச் சேர்த்து அமைத்தது போலவும், அக்கதவின் நிலைக்கு மேலே குவளைப் பூவும் திருமகள் குலவும் பெண் யானைகள் சித்திரவடிவில் விளங்கியதையும் அறியலாம். யவனநாட்டுத் தச்சர்கள் தச்சுத் தொழிலில் திறமையுடன் விளங்கியமையால் இவர்கள் தச்சுத் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பதை அறிய முடிகிறது.

“பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.”4

என்று தச்சர்கள் செய்த தேரையும் சிறுவர்களின் முக்கால் வண்டியைப் பற்றியும் நாம் அறிகிறோம்.

நெசவுத் தொழில்:

சங்க காலத்தில் நெசவுத்தொழிலில் ஆண் களும் பெண்களும் ஈடுபட்டிருந்தனர். அதிலும் பெண்கள் நூல்நூற்கும் பணியில் அதிகம் ஈடு பட்டனர். கணவனை இழந்த பெண்டிர் நூல் நூற்பர். புறநானூற்றிலும் ‘பருத்திப் பெண்டிர் பனுவலன்ன’ என்னும் தொடர் இடம் பெறுகிறது.

“துன்னற் கிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கி”5

என்னும் தொடர் மூங்கில் சோறு, பாலின் நிறம் போன்ற வெண்மையான நிறத்தை உடைய ஆடை களும், எலி உரோமத்தால் ஆன ஆடைகளும் நிறைய இருந்தன என்பதை உணர முடிகிறது.

துணி வெளுக்கும் தொழில்:

சங்க காலத்தில் துணிகளைத் துவைக்கும் பணி களைச் செய்வோரும் இருந்தனர். பூ வேலைப் பாடுகள் அமைந்த ஆடைகளை இரவிலே களர் நிலத்து உவர்மண்ணில் ஊற வைத்துத் துவைத்துச் சோற்றின் கஞ்சியினைக் கொண்டு உலர்த்துவர். பகலிலே சாயம் போனால் அதன் தன்மை கெடும் என்று புலத்தி நினைத்தாள். அதை,

“நலத் தகைப் புலத்தி பசை தோய்த் தெடுத்து”6

என்றும்,

“வறனில் புலத்தி யெல்லித் தோய்த்த

புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்க மொடு”7

என்று நற்றிணை உணர்த்துகின்றது.

குயவுத் தொழில்:

குயவர்களைப் பற்றி அவர்கள் செய்த மட் பாண்டம், தாழி போன்றவற்றின் செய்திகளைச் சங்கப்பாடல்களில் அறிகிறோம்.

“இலங்கு மலை புதைய வெண் மழை கலைஇக்

கலஞ் சுடு புகையிற் றோன்றும்”8

என்று மட்கலம் சுடுகின்ற பொழுது நெருப்பினால் ஏற்படும் புகை வெள்ளிய மேகம் போன்று தோன்றி மலையையே மறைத்து நிற்கும் அளவில் தாழி செய்தனர். அகழ்வராய்ச்சியின் மூலம் ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு, மதுரை, கரூர், பூம்புகார் போன்ற இடங்களில் காணப்பட்ட தாழிகளும் இதற்குச் சான்றுகளாகும்.

அணிகலத் தொழில்:

அணிகலன் செய்பவர்களைப் பொற்கொல்லர் என்பர். பொற்கொல்லர்களை உருக்குத்தட்டார், பணித்தட்டார் என்னும் இருவகைகளாகப் பிரிக் கலாம். பொற்கொல்லரைப் பற்றியும் அவர்கள் தொழிலுக்கு உபயோகப்படுத்திய உரைகல்லைப் பற்றியும் “பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி”9

என்னும் தொடர் மூலம் அறியலாம்.

இவ்வாறு சங்க கால சமுதாயத்தில் நிலப் பிரிவுகளுக்கு ஏற்ற தொழில் முறைகள் மாறு பட்டாலும் ஒரு நிலத்தாருக்கும் மற்றொரு நிலத்தாருக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. வருண அடிப்படையில் அவர்களிடையே உயர்வு தாழ்வு உண்டானது. ஒரு நிலத்தில் கிடைக் கும் பொருள்களை ஏனைய நிலத்திற்குக்கொண்டு சென்று பண்டமாற்று முறையில் வாழ்ந்து வந்தனர். அதனால் பண்டைக்காலத்தில் உணவு, பொருள், மொழி ஆகியவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டது.

இதனால் சங்கச் சமூகம் மறுமலர்ச்சி கொண்ட சமூகமாக உருவானது.

முடிவுரை:

* சங்ககாலச் சமுதாயம் என்பது பண்டைக்கால சமுதாயம் ஆகும்.

* சமுதாய அமைப்பு அவர்களிடையே காணப் பட்டது.

* சாதி அடிப்படையில் பல பிரிவினர்கள் இருந் தனர் என்பதை அறிய முடிகிறது.

* தொழில் துறையிலும் சிறந்து விளங்கினர் என் பதற்குச் சான்றாகத் தச்சுத் தொழில், நெசவுத் தொழில், துணி வெளுக்கும் தொழில், குயவுத் தொழில், அணிகலன்கள் செய்யும் தொழில் போன்ற தொழில்களிலும் சிறந்து விளங்கினர். இவ்வாறு பல்வேறுபட்ட தொழில் புரிந்தாலும் அவர்கள் அனைவரும் பண்டமாற்று முறை யிலேயே வாழ்ந்து வந்ததாக அறிய முடிகிறது. மக்கள் தம்முள் ஒன்றுபட்டு வாழ்ந்தனர் என்பது சங்க கால சமூகத்தின் உயர்வாகும்.

அடிக்குறிப்புகள்

1. புறப்பொருள் வெண்பாமாலை

2. ஆர். அனுராதா - சங்க இலக்கியங்களில் அறக் கருத்துக்கள் - பக்கம் -81

3. உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, விசேடச் செய்திகள் பக்கம்-85

4. பட்டினப்பாலை - 24- 25

5. பதிற்றுப்பத்து -12

6. குறுந்தொகை - 330

7. நற்றிணை -90

8. அகநானூறு -330

9. அகநானூறு -317

Pin It