அரசியல் அதிகாரம், சட்ட ஆணை போன்ற வற்றால் மக்களிடையே சாதிக்க முடியாத அனு கூலங்களை, ஆதாயங்களைப் பண்பாடு சார்ந்த யுத்திகளால் அவர்கள் மனங்களை இதமாக இசை வித்து, எளிதில் சாதித்துக்கொள்ள முடியும். இந்தப் பண்பாட்டு ஆக்கிரப்புத் தந்திரத்தில், உலகின் பிற நாடுகளைவிட இந்தியாவில் மிக எளிதாக மக்களை வென்றுவிட முடியும்.

aa_sivasubramanian_400அதற்குக் காரணம் இந்தியாவில் விரவியுள்ள இறைநம்பிக்கையும், சமயமும் சாதியமும் கொண்டுள்ள உடும்புப்பிடி இறுக்கமும்தான்! அரசியல், பொருளாதாரம், மேல் சாதி போன்ற உயர்நிலைகளில் அமர்ந்துகொண்டிருப்போர் சிறுபான்மையோராக இருந்தாலும் மேலே குறிப் பிடப்பட்ட மூன்று ஆயுதங்களையும் சூழ்நிலைக் கேற்றவாறு பயன்படுத்தி, பெரும்பான்மையான அடித்தள மக்கள் மீது கொடூரமாகத் தாக்கி, உடலிலிருந்து இரத்தம் வழிந்தாலும், ‘இது இரத்தமன்று, தக்காளிச்சாறு’ என்று இனிதுரைத்து அடிபட்ட மாந்தரையே இளிக்கச் செய்ய முடியும்.

இந்நிலையை மாற்றும் நோக்கில் பெரும் பான்மை அடித்தள மக்களின் பண்பாட்டின் சிறப்புகள் என்னென்ன, அவர்கள் பொருளாதார உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று அறிவுத்துறை வகுத்து நெறிப்படுத்துமே யானால், அது, இன்றைய முதலாளித்துவச் சமூகத்தில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். அப்படிச் செய்து அடித்தட்டு மக்களை முறையே தயார்ப்படுத்தி எதிர்கால சோஷலிச சமுதாயத்திற்கு அடிகோலும் பணியில் இது ஒரு சிறப்புக் கூறும் ஆகும்.

இப்பணியில் பிரதான பங்குவகிப்பது நாட்டார் வழக்காற்றுத் துறை என்று கண்டறிந்து, அதனை வளர்த்தெடுக்கும் பணியில் வெற்றி கண்ட பேரா சிரியர் நா. வானமாமலை நாவழி கூறி செவிவழி கேட்டு இப்படியே மக்களிடையே பரவிக்கொண் டிருக்கும் நாட்டுப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றைத் தானே தொகுத்து வெளியிட்டதுடன், அவை அச்சிலேற வேண்டிய தன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அவருடைய வழித்தோன்றல் பேரா. ஆ. சிவ சுப்பிரமணியன் அடித்தள மக்கள் வரலாறு என்னும் நூலை எழுதியுள்ளார். 2002-இல் முதற்பதிப்பாக வெளிவந்த இந்த நூல், புதுப்பிக்கப்பட்ட நிலையில் 2011-இல் பாவை பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிடப் பட்டுள்ளது.

‘மாற்று வரலாற்றைத் தேடி’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முகவுரையில் மரபு வழி வரலாற்றிலிருந்து விலகி மாற்று வரலாற்றை எப்படி எழுத வேண்டும் என்பதையும், அதற்கான தரவுகளை எவ்வாறு பெற்று, சரிபார்த்து, உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று உரைக்கும் நூலாசிரியர், நூலின் முதல் இயலை வாய்மொழி வழக்காறு, வாய்மொழி மரபுகள், வரலாற்றில் வதந்தி, வாய்மொழி வரலாறு, வாய்மொழி வரலாற்றுக் களங்கள் உள்ளிட்ட துணைத் தலைப்புகளில் எழுதி யுள்ளார். இந்த வகைப்படுத்தலும், வரலாற்றுக் களங்களில் நாட்டார் பாடல்கள், பழமொழிகள் இடம்பெறுதலைச் சுட்டிக்காட்டி ஓரிரு நொடிக் கதைகளை எடுத்துக்கூறும் பாங்கும் சிறப்பான வரலாற்று வித்துகள்.

தோன்றிய காலத்திலிருந்து, அவரவர் குடும்ப மரபு வழியே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இயல்பாகவே கடந்து வருவது தான் பண்பாட்டுத் தொடர்ச்சி. அடித்தள மக்களின் அந்தப் பண்பாட்டு அடையாளங்கள், எவ்வாறு தந்திரமாக இழிவுபடுத்தப்படுகின்றன என்றும் அப்பண்பாட்டு வாயிலாகவே, அவர்களுடைய பொருளாதார நிலைமை எவ்வாறு அப்படியே வறுமைக் கூட்டுக்குள் வைத்துப் பூட்டப்படுகிறது என்பதையும் அந்தப் பண்பாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து அடித்தள மக்கள் எவ்வாறு போரிடு கின்றனர் என்றும் விரித்துரைக்கிறது, இரண்டாவது இயலான ‘பண்பாட்டு அடையாளம், போராட்டங்கள்’. இதில் கணிசமான வரலாற்றுச் சான்றாதாரங்கள் சுவையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் போராட்டங்களோடும் பொருளாதாரப் போராட்டங்களோடும் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

அடுத்து, ‘கணக்கன் வழக்காறுகள்’, என்னும் தலைப்பிலான இயல் கணக்கரைப் பற்றிய பாடல்கள், விடுகதைகள் மூலமே கணக்கர் பதவியின் தன்மை யையும், கணக்கர்கள் அரசுக்கு ஒரு முகத்தையும் மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி எவ்வாறு இரண்டு தரப்பினர்களையும் சுரண்டினர் என்பதையும் விளக்குகிறது. சமுதாயத்தில் கணக்கர் பதவி எப்படித் தோன்றியது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்கள் எவ்வாறு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதை இந்த இயல் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

“கணக்கன் காலால் போட்ட முடிச்சை

கலெக்டர் கையால் அவிழ்க்க முடியாது” என்ற பழமொழி கணக்கருக்கு இருந்த செல்வாக்கினை உணர்த்துகிறது.

“கணக்கன் செத்தால் பிணம்

கணக்கன் ஆத்தாள் செத்தால் மணம்” என்ற பழமொழியைச் சிறுகதைச் சுவையுடன் இயம்பி யுள்ளார் நூலாசிரியர்.

தாது வருடப் பஞ்சத்தின் கொடுமையை விளக்குகிறது - அடுத்த இயல். நாட்டுப் பாடல் களைக் கொண்டே பஞ்சத்தைப் பற்றிக் கூறும் இந்நூலின் இயல் ‘பஞ்சம் ஆங்கில ஆட்சியின் விளைவே’ என்றே சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து இடம்பெற்றுள்ள ‘சமூகம் சார் கொள்ளையரும் நாட்டார் வழக்காறும்’ என்ற இயல் சமூகத்தில் பணக்காரர்களிடம் கொள்ளை யடித்து, ஏழைகளின் துயரைப் போக்கிய கொள் ளையர்களைப் பற்றியது. இது, நூலாசிரியர் களப் பணியாற்றி, பல்வேறு இடங்களில் சேகரித்த கொள்ளையர் கதைகளைக் கொண்டது.

இது ராபின் ஹுட் பாணி என்று அயல் நாடுகளிலிருந்து நமது மண்ணுக்குக் கருத்துப் பரவல் ஏற்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே இத்தகைய கொள்ளையர்கள் பலர் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் செறுதலைக்குடி என்னும் சிற்றூரில் ராயர் என்பவர் வசித்து வந்தார். அவர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைக் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பையே ஒழுங்காக முடிக்கவில்லை. இந்நிலையில், வாலிபப் பருவத்தை அடைந்ததும் திடீரெனத் திருடத் தொடங்கினார். பெரும் பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பார். கொள்ளையடித்த பணம், நகை மற்றும் இதர பொருட்களைத் தகுதியான ஏழைகளுக்கு வாரி வழங்குவார். “நாங்கள் வறுமையில் வாடுகிறோம். எங்களுக்கு உதவி செய்” என்று யாரும் அவரிடம் கேட்க வேண்டிய தில்லை.

அவரே அப்படியொரு ‘தகுதியுள்ள ஏழைகள்’ என்ற பாணியில் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, தான் திருடிய பணத்தை, பொருட் களைக் கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வார். “நான் காவல் காக்கும் தோட்டத்தில் திருடி விட்டு என்னிடமிருந்து தப்பிச் செல்ல உன்னால் முடியுமா?” என்று அந்த ராயரிடம் சவால் விட்ட சில காவல்காரர்களால்தான், ஏழை மக்களுக்கு நிறைய திருட்டு வழிப் பணமும், பொருட்களும் கிடைத்தன. இப்படியே எத்தனை காலம்தான் திருட்டுத் தொழில் செய்துகொண்டு காவல் துறையிடமிருந்து தப்பிப்பது? இரண்டு, மூன்று முறை காவல் துறையினரிடம் சிக்கி, அடிபட்டு, அவமானப் பட்ட அவர், திடீரென்று நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார். மிக இளம் வயதில் திருமணம் கூட செய்துகொள்ளாமல் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட ராயர் இன்றும் மக்கள் மனங்களில் கதைத் தலைவனாகத் திகழ்கிறார்.

“ராயரு ராயரு வந்தானே,

ராத்திரி நேரம் வந்தானே...

‘விசுக்கு விசுக்கு’ன்னு வந்தானே,

வீரன் போல வந்தானே....

சாக்கு மூட்டையோட வந்தானே,

சரக்கப் போட்டுட்டுப் போனானே.....”

என்று பாட்டிகள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட துணைக்கருவியாக ராயரின் கதையைப் பயன் படுத்தி வருகின்றனர்.

இதைப் போன்ற நிகழ்வுகள் எல்லாப் பகுதி களிலும் நடக்கிறவைதாம்! ஆனால், அவை பதிவு செய்யப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். அதே வேளையில், நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு உண்மையும், நம்பகத்தன்மையும் சிறிதளவும் குறையாமல் பதிவு செய்வதும் முக்கியம். இது இந்நூலின் எல்லா இயல்களுக்கும் பொருந்தும்.

அடுத்த இயல் பரதவர்கள் ஒரே இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்குள்ளேயும் கம்மாரக் காரர், மேசைக்காரர் என்ற பிரிவு எவ்வாறு தோன்றுகிறது என்றும், அந்தப் பிரிவுப் போக்கில் போர்ச்சுக்கீசியரின் பங்கு என்ன என்றும் விளக்குகிறது. பாதிக்கப்பட்ட கம்மாரக்காரர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய மேசைக்காரர் களை எப்படிப் போராடி வென்றார்கள் என்று எடுத்துரைக்கிறது -‘பரதவர்களின் மேசை எதிர்ப்புப் போராட்டம்’ என்னும் இந்த இயல்.

‘துவிக் குத்தகைப் போராட்டம்’ என்ற தலைப்பிலான இயல் இடிந்தகரை என்னும் கடற்கரையூரில் தொடர்ந்து நிகழ்ந்து, வளர்ந்து, முடிவுக்கு வந்த குத்தகைப் போராட்டச் சிக்கலைப் பற்றிப் பேசுகிறது. பரதவர்களுக்குள்ளே மீன் பிடிப்போர் ஒருபுறம், வணிகர்களாகவும் வேளாண் தொழில் செய்பவர்களாகவும் விளங்கும் குழுவினர் மறுபுறம் என முரண்பாடு தோன்றி வளர்கிறது. அம் முரண்பாட்டில் கிறித்தவ சமயம் எப்படிப் பங்காற்றுகிறது என்று விளக்குகிறார் ஆசிரியர். சென்ற இயலும், இந்த இயலும் பரதவரின் வாழ்வு நெறியைக் கற்பனை கலக்காமல் விளக்கும் குட்டி இலக்கியங்கள்.

அடுத்து, ‘தமிழில் குறுநூல்கள்’ என்னும் இயல் சமூகப் பணிகளிலும் சமயப் பணிகளிலும் வகித்த பங்குகளைப் பற்றிக் கூறுகிறது. குறுநூல் களின் மூலம் நிகழ்வுகள் மக்களிடம் செய்தி களாகப் பரவிய நிலையை மிகவும் சுவையாகக் கூறும் நூலாசிரியர் சிவசுப்பிரமணியன் இந்தக் குறுநூல் பாணியைத் தொடர்ந்து தாராளமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

‘மறைந்து வரும் தானியங்கள்’ என்ற தலைப் பிலான இயல் அருகி வரும் தானியங்களைப் பற்றிப் பேசுவதுடன் அவை எவ்வாறு அடித்தள மக்களின் பண்பாட்டில் ஊடாடின என்றும் சுட்டுகிறது. அது இன்றைய விதை அரசியலை விமர்சித்து, மாற்றுவழிக்கு நாற்று விடுகிறது.

பூப்பு தொடர்பான நம்பிக்கைகள், செழிப்பின் குறியீடாகப் பூப்பு, பூப்பு தீட்டாக மாறுதல், பூப்புச் சடங்கு வாழ்வியல் சடங்காதல் ஆகிய துணைத் தலைப்புகளின் வாயிலாகப் பூப்பு பற்றிய அறிவியல் பூர்வமான செய்தியையும், அதுசார்ந்த பண்பாட்டுத் தகவல்களையும் ஆதாரங்களுடன் கூறுகிறது - இதுசார்ந்த இயல். சிரிக்க வைக்கும் செய்திகள் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.

எளிய வரலாற்று நூல் என்றாலும் இதை மிகக் காத்திரமாக வாசித்துவரும் வாசகர்களுக்கு இடை வேளை விடுகிற தொனியில் நகைச்சுவையாக மிளிரும் இயல் ‘சாமியாடும் மனைவி’ என்னும் தலைப்பிலானது.

கணவன் எதிரில் மிகவும் பணிந்து நடக்கும் மனைவி, ‘கணவன் சாப்பிட்ட பிறகே தான் சாப்பிட வேண்டும்’ என்ற மரபை மீறி, கணவனுக்கு வைக்கப்பட்ட உணவை உண்டுவிட்டு அதற்குக் கணவனிடம் பெறப்போகும் தண்டனையிலிருந்து சாமியாடுதல் மூலம் எப்படி தந்திரமாகத் தப்பிக் கிறாள், அத்துடன் இயல்பாக வீராவேசமாகச் செயல்படும் அவனை எப்படிப் பணியவைத்துத் தன் காலில் விழச் செய்கிறாள் என்று நூலாசிரியர் கூறியிருக்கும் செய்தி மிகவும் சுவையானது. ஆனால், அதன் உள்ளே ஒளிந்திருக்கும் பெண்ணடிமைச் செய்தியும், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தந்திரமாகவாவது காட்டும் அதன் எதிர்ப்புணர்வும், அதுதொடர்பான உளவியல் கூறுகளும் மிக நயமாக வெளிக் கொணரப்பட்டுள்ளன. இந்த இயலிலும் நாட்டுப் பாடல்களுக்குப் பஞ்சமில்லை.

தொடர்ந்து வரும் இயல்களான ‘எரிமூழ்கு பெண்டிர்’, ‘பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறுகளும்’ ஆகிய இரண்டும் அந்தந்தத் தலைப்பு களின் தளம் விலகாது பெண்ணியம் பேசுகின்றன. ஆனால், இவற்றிலும் அடித்தள மக்கள் மீதே கவனத்தைக் குவித்துள்ளார் நூலாசிரியர். பாலியல் கொடுங்கோலர்களுக்கு அஞ்சி, பெண்ணைப் பெற்ற குடும்பங்கள் புலம்பெயர்ந்தமை, குறி வைக்கப் பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டமை, குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டமை, அவர்கள் பொன்னுமாரியம்மன், போத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன் என அம்மன்களாக மாறியமை எனப் பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது -‘பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறுகளும்’ என்னும் நிறைவான நிறைவு இயல்.

மோட்டர் வாகனம் போக இயலாத இடத்துக்கு மிதிவண்டியிலும், மிதிவண்டி செல்ல முடியாத இடத்துக்கு நடைப்பயணமாகவும் சென்று வாய்மொழி, கல்வெட்டுத் தரவுகளைத் தேடி, பிற சான்றுகளுடன் ஒப்பிட்டு, அவற்றைச் சரிபார்த்து, உருக்கொடுத்து, எழுத்துக்குக் கொண்டு வருவதில் வல்லவரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தனது அந்த வல்லமையை ‘அடித்தள மக்கள் வரலாறு’ நூலிலும் பயன்படுத்தியுள்ளார். மாற்று வரலாற்றை எழுதுவோர் எப்படியெல்லாம் உழைக்க வேண்டும் என்று விளம்பி, அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது - இந்நூல்!

Pin It