‘மார்க்சியம் அதன் பயன்பாட்டை இழந்துவிட்டது’, ‘மார்க்ஸ் காலாவதியாகிவிட்டார்’ போன்ற கூற்றுகள் இன்று பரவலாகிவிட்டன. ஆனால் இக்கூற்றுகள் உண்மையல்ல; இவற்றின் பின்னாலிருந்து செயல்படும் வாதங்களும் சரியல்ல என்பதை வலுவாக நிரூபிக்கும் நூல் டெரி ஈகிள்ட்டன் (Terry Eagleton) எழுதியுள்ள “மார்க்ஸ் சொன்னது ஏன் சரி” (Why Marx Was Right) (2011). அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக வெளியீடு.

மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும்” (1976) என்ற சிறிய நூல் மூலம் அறிமுகமான ஈகிள்ட்டன், அதன் பின் மார்க்சியத்திற்கும், இலக்கியத்திற்கும் இடையேயுள்ள உறவை விளக்கி, வலியுறுத்தி ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். புகழ்பெற்ற மார்க்சிய இலக்கிய விமர்சகர் ரைமண்ட் வில்லியம்சின் மாணவரான டெரி ஈகிள்ட்டன், வில்லியம்ஸ் பின்னர் பண்பாட்டு வாதங்களுக்குள் புகுந்த போது, அதைக் கண்டித்தும், வில்லியம்சின் புதிய கோட்பாடுகளை மறுத்தும் ‘நியூ லெஃப்ட் ரிவியூ” என்ற பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். பின்நவீனத்துவம் முதலாளித்துவத்தின் ஏவலாள் என்று கருதுபவர் ஈகிள்ட்டன்.

இவரது முக்கியமான பிற நூல்கள் : “இலக்கியக் கோட்பாடு” (1983), “விமர்சனமும் கருத்தியலும்” (1976), “கருத்தியல் - ஓர் அறிமுகம்” (1991), “பின் நவீனத்துவத்தின் மாயைகள்” (1996), “மார்க்ஸ்” (1997), “கோட்பாட்டுக்குப் பின்னர்” (2009).

மார்க்சியம் காலாவதியாகிவிட்டதென்பதற்கு முன்வைக்கப்படும் முக்கியமான பத்து வாதங்களை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாகத் தவறு என்று நிரூபித்திருக்கிறார் ஈகிள்ட்டன்.

மொழிபெயர்ப்பு : ரகு அந்தோணி

  1. 1.   மார்க்சியத்தின் காலம் முடிந்துவிட்டது; பெரும் தொழிற்சாலைகளும், சுரங்கங்களும், ஒன்றிணைந்த தொழிலாளரும் இருந்த காலத்திற்குரியது மார்க்சியம்; இன்று, மனிதர் வர்க்கம் விட்டு வர்க்கம் மாறும் சூழலில், வர்க்கப் போராட்டம் ஏது? உலகம் மாறிவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிடிவாதக்காரரின் சித்தாந்தம் மார்க்சியம்.

terry_eagleton_450மறுப்பு : சாகாவரம் பெற்ற கோட்பாடல்ல மார்க் சியம்; மார்க்சியத்திற்கும் முடிவு உண்டு. முதலாளித் துவம் குறித்த முழுமையான விமர்சனம் மார்க்சியம். முதலாளித்துவத்தின் தீமைகளை, அதில் காணப் படும் ஓட்டைகளை அம்பலப்படுத்துவது மார்க் சியத்தின் குறிக்கோள். முதலாளித்துவம் அழிக்கப் பட்ட பின் மார்க்சியம் தேவையற்றதாகிவிடும். அதுவரை மார்க்சியம் இருக்கும்; அதன் இருத்தலும் அவசியம்.

மார்க்சியம் அவசியம் என்பதைப் பலர் மறுப்ப தில்லை. ஆனால் மார்க்ஸ் விமர்சித்த, ஆய்வு செய்த முதலாளித்துவம் வேறு. இன்றைய (பின்) நவீன முதலாளித்துவத்தை வீழ்த்த மார்க்ஸ் முன்வைத்த மார்க்சியம் போதுமானதல்ல என்பவர் பலர்.

மாற்றம் ஏற்படாதென்று மார்க்ஸ் என்றுமே கூறியதில்லை. முதலாளித்துவத்தில் பல வகை உண்டு; வணிகம், விவசாயம், தொழில், நிதி, ஏகாதிபத்தியம் எனப் பல வடிவங்களில் முதலாளித்துவம் செயல் படுமென்பதை விவரித்தவர் மார்க்ஸ்தான். உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறையும்; மூளை உழைப்பாளி-அலுவலகப் பணியாளர் (White-Collared Workers) அதிகரிப்பர் என்பதையும் ஏற்கெனவே மார்க்ஸ் கூறிவிட்டார்.

பெரிய தொழிற்சாலைகளும், ஆலைகளும் சிறிய தொழிற்கூடங்களாக மாறி வருகின்றன. சேவைத் துறை முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறது; தகவல்- தொடர்புத்துறை மற்ற துறைகளை விட வலுவாகி வருகிறது; இந்தச் சூழலில் தொழிற் சங்கங்கள் காலூன்ற முடியவில்லை. மேலும், இனம், பாலினம், (இந்தியாவில் சாதி) போன்ற சிறு அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றபோது தொழிலாளர் வர்க்கம் என்ற பேரடையாளம் புதைக்கப்பட்டு விடுகிறது; இச்சிறு அடையாளங் களுக்குள் தொழிலாளர் என்ற உணர்வு மறைந்து விட்டதென்று கூறுபவரும் உண்டு.

இம்மாற்றங்கள் உண்மைதான். ஆனால் இவை வளர்ச்சி அல்ல. 1980களில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முதலாளித்துவம் கண்டுபிடித்த மாற்றுவழிதான் இந்தப் புதிய உலகமயமாக்கல், சந்தைமயமாக்கல். இந்தப் புதிய வடிவங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் மார்க்சியம் காலாவதியாகி விட்டதென்று புலம்புகின்றனர்.

ஆனால் ஒரு யதார்த்தத்தைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். முன்பை விட இப்போது பணம் சேரும் மையங்கள் குறைந்து வருகின்றன; சிறிய பணக்காரர்கள் அழிந்து வருகின்றனர். பணக் காரர்கள், மிக, மிகப்பெரிய பணக்காரர்களாக மாறி வருகின்றனர்; ஏழைகளின் எண்ணிக்கையும், சமீபத்திய உலகம் தழுவிய பொருளாதார வீழ்ச்சி யால் வேலையில்லாதவரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. எனவே “சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித் தனம்” என்ற கோஷம் இன்று நிதர்சனம். ஃபிரெடரிக் எங்கல்ஸ் விவரித்த பத்தொன் பதாம் நூற்றாண்டு லண்டன் மற்றும் மான்செஸ் டருக்கும், இன்றைய பம்பாய், லாவோஸ், நியூயார்க் போன்ற பெருநகரங்களில் காணப்படும் சீரழிவுக்கும் வேறுபாடில்லை. எனவே முதலாளித்துவம்தான் பின்னோக்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

2. சித்தாந்தமாக மட்டுமே இருக்கும் வரை மார்க்சியம் நன்று; செயலுக்கு வரும்போது ஏற்படும் விளைவுகள் பயங்கரம்; அச்சுறுத்தல், சர்வாதிகாரம், மனித உரிமை மீறல் மற்றும் மறுப்பு; சந்தைப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்ட பின் பஞ்சமும், தட்டுப்பாடும்தான் மிஞ்சும்.

மறுப்பு : முதலாளித்துவத்தைக் காப்பதற்காக ஏற்பட்ட காலனித்துவம், அடிமை முறை, சுரண்டல், இனப்படுகொலை மற்றும் போர்களால் உயிரிழந் தவரின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியுமா? ஸ்டாலினையும், மாவோவையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் முதலாளித்துவ ஊடகங்கள், ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் இறந்தவரைப் பற்றி அவ்வப்போது மட்டும் பேசுவது ஏன்? அவ்வாறு பேசும்போதும் அதை அணு ஆயுதத்தின் அழிக்கும் திறனாக மட்டும் பார்ப்பது ஏன்? தென் அமெரிக் காவில் மக்களால் முறையாகத் தேர்வு செய்யப் பட்ட பல சோசலிச அரசுகளை வீழ்த்தி, அந்நாடு களில் அமெரிக்காவின் கைப்பாவைகளாக ஆண்ட சர்வாதிகாரிகளால் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்? இன்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தினமும் இறப்பவர்கள் இல்லையா?

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வெள்ளையரின் குடியேற்றத்திற்கு ஒத்தாசையாக, அக்கண்டங்களில் கொல்லப்பட்ட பூர்வக்குடி மக்கள் எத்தனைபேர்? அமெரிக்காவில் அடிமை களாக இறந்த கறுப்பரினத்தவரின் எண்ணிக்கை என்ன? இவற்றையெல்லாம் மறைக்கும் முதலாளித் துவம், இரண்டாம் உலகப் போரில் பாசிசம்-நாசிசத்தை முறியடிப்பதில் சோவியத் யூனியன் ஆற்றிய பெரும் பங்கை மறைப்பது ஏன்?

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் உணவுப் பஞ்சம் நிலவிய தாகக் கூறுவது ஒரு பக்கம்; ஆனால் இந்த நாடு களில் சோசலிச ஆட்சி உருவாகும் முன், அங்கு இருந்த நிலை என்ன? இந்நாடுகளில் அன்றும், தென் அமெரிக்காவின் பல நாடுகளில் இன்றும், சோசலிச-கம்யூனிச ஆட்சிகள் ஏற்படக் காரணம் என்ன?

3. மார்க்சியத்தில் தனிமனிதருக்கு இடமில்லை; வரலாற்றின் கையில் மனிதர்கள் கருவிகள் மட்டுமே; நிலவுடைமைச் சமூகம் தொழில் சமூகத்திற்கு இட்டுச் சென்றது; தொழில் சமூகம் முதலாளித்துவமாக மாறியது; முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசம் தானாகவே அதிகாரத்தைக் கைப்பற்றும். “எல்லாம் கடவுளின் செயல்” என்பர் கடவுள் நம்பிக்கையுடையவர்; “எல்லாம் வரலாற்றின் செயல்” என்று வாதிடுவர் மார்க்சியர்.

மறுப்பு : சோசலிசம் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல; மார்க்சுக்கு முன்பே, பண்டைச் சமூகத் திலேயே பொதுவுடைமை இருந்தது; மார்க்ஸ் தன் கோட்பாட்டை எழுத ஆரம்பிக்கும் முன்பே ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்கள் இருந்தன. ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’, மில்டனின் ‘கோமஸ்’, ஆலிவர் கோல்டுஸ்மித்தின் ‘டெசர்ட்டட் வில்லேஜ்’ ஆகியவற்றிலும், வால்ட்டேர் மற்றும் ரூசோவின் நூல்களிலும் வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றிக் குறிப்புகள் உண்டு. ஆனால் பல இடங்களில் சிதறிக் கிடந்த இத்தகைய கருத்துக்களை ஒன்றிணைத்து, இக்கருத்துகளில் உள்ள நியாயத்திற்கும், யதார்த்தத் திற்கும் விளக்கம் தந்தவர் மார்க்ஸ். சுரண்டல் என்பதையும், சுரண்டும் வர்க்கமொன்று உண்டு என்பதையும் மட்டும் பலர் சுட்டிக்காட்டி விட்டுச் சென்றனர். சுரண்டலுக்கான காரணங்களையும், அதை ஒழிக்கும் வழிவகையையும் அறிவியலாகக் காட்டினார் மார்க்ஸ்.

வரலாற்றில் மனிதரின் பங்கை மார்க்ஸ் என்றும் மறுத்ததில்லை. தொழிலாளர் ஒன்று சேர வேண்டும்; புரட்சி தவிர்க்க முடியாது என்றுதான் மார்க்ஸ் கூறினார்; தன்னாலேயே - மனிதரின் தலையீடு இல்லாமலேயே - சோசலிசம் ஏற்படும் என்று எங்கும் கூறியதில்லை. “வரலாறு எதுவும் செய்யாது. அது பொருள் ஈட்டாது; போர் புரியாது. இவற்றை யெல்லாம் செய்வது மனிதர்; மனிதர் பொருள் ஈட்டுவர், சேமிப்பர்; போர் நடத்துவர். மனிதரை விட்டு விலகி நிற்பதில்லை வரலாறு. மனிதரைக் கருவியாகப் பயன்படுத்தும் தனியொரு சக்தியல்ல வரலாறு. தங்களுடைய குறிக்கோள்களை நிறை வேற்றிக் கொள்வதற்காக மனிதர் செய்யும் செயல் களே வரலாறு” என்று தன்னுடைய “திருக்குடும்பம்” (The Holy Family) நூலில் குறிப்பிட்டார்.

4. மார்க்சியம் ஒரு கனவு. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடும்; கம்யூனிசத்தில் போட்டிகள் இருக்காது; எல்லோரும் நல்லவராக இருப்பர்; பொருள் தானாக உற்பத்தியாகும் - இவ்வாறெல்லாம் நம்புவது மடமை. ஆசையும், பொறாமையும், போட்டியும் மனித இயல்பு. இவை இல்லாமல் உலகம் செயல்பட முடியாது.

மறுப்பு : சோசலிச நாடுகளில் தீமைகள் எதுவும் இருக்காது. சரி. சாலை விபத்துக்களும் இருக்காது போன்ற ஏளனங்கள் ஏராளம்; டெங்கு காய்ச்சல் யாருக்கும் வராது என்று பேசும் நையாண்டியும் தாராளம்.

அனைவரும் சமமாக வாழும் சமூகம் மார்க்சின் கனவு மட்டுமல்ல. மார்க்சுக்கு முன்பு பிளேட் டோவின் ‘ரிபப்ளிக்’, பேக்கனின் ‘நியூ அட்லாண்டிஸ்’, தாமஸ் மூரின் ‘யுடோபியா’, வில்லியம் மாரிசின் ‘நியூஸ் ஃப்ரம் நோவேர்’ போன்ற நூல்கள் இதைத் தான் கூறின. ஆனால் இவர்கள் எழுதியது இவர்களுடைய விருப்பத்தை; - ஏக்கத்தை. இந்த விருப்பத்தை நனவாக்க இவர்கள் வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; இத்தகைய சமூகம் எப்படிச் செயல்படும் என்பதை வர்ணித்த இவர்கள், இந்தச் சமூகம் முதலில் எப்படி உருவாகும் என்பதை விளக்கவில்லை.

மார்க்ஸ் கூறும் எதிர்காலம் ஜோசியம் அல்ல; அதில் அவருக்கு நம்பிக்கையும் கிடையாது. மாறாக, இருக்கும் சூழல்கள் எப்படி மாற்றங்களை உரு வாக்கும்; அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் புதிய அரசியல்-பொருளாதார விளைவுகள் என்ன என் பதை மார்க்ஸ் கணித்தார். நிகழ்காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் இணைப்பாகச் செயல்படுபவர்கள் தொழிலாளர்கள் என்பதையும் கண்டார். “வீழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்திற்குள் வளர்ந்து கொண்டிருக்கும் புதிய சமூகத்தை ஸசோசலிச சமூகத்தை] வெளியே கொண்டு வருவது தொழிலாளர் வர்க்கத்தின் பொறுப்பு” என்பதை ‘ஜெர்மன் சித்தாந்தம்’ (The German Ideology) நூலில் குறிப்பிட்டார்.

நிகழ்காலத்தின் தொடர்ச்சியாக சோசலிச சமூகத்தைத் தவறாகக் கருதுவதால்தான் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. சோசலிசம் முதலாளித் துவத்தின் தொடர்ச்சி அல்ல; முடிவு. சோசலிச சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்த பின்னர், செய்வதற்கு வேறேதுமில்லை என்ற நிலையில், ‘சும்மா இருக்கும் போது’ என்ன செய் வார்கள் என்பதில் இந்த வாதத்திற்குப் பதில் உள்ளது.

இன்று, ஒரு சிலர் மிக, மிக ஆடம்பரமாக வாழ, தங்களுடைய வாழ்வின் பெரும் பகுதியை இழந்து கொண்டிருக்கும் பலர், சோசலிசம் ஏற்பட்ட பின் என்ன செய்வார்கள்? ‘பொழுதுபோக்கு’ பற்றிய இன்றைய கண்ணோட்டங்கள் அன்று மாறிவிடும்; கலைகள் வளரும்; மனிதரின் வாழ்வு மேலும் வளமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

5. உலகின் அனைத்தையும் மார்க்ஸ் பொருளாதாரமாகக் குறுக்கிவிட்டார். கலை, சமயம், அரசியல், சட்டம், ஒழுக்கம் - இவையனைத்தையும் வர்க்கப் போராட்டக் கண்ணாடி வழியாகப் பார்த்தார். மனித வாழ்வின் சிக்கலான விஷயங்களை ஆய்வுக்குட்படுத்தாமல் நழுவி விட்டார்.

மறுப்பு : இதில் என்ன தவறு? மனிதர் உலகில் முதலில் மேற்கொண்டது உணவு, உடை, உறைவிடத் தேவைகளை நிறைவு செய்ததுதானே! இசையும், நடனமும், ஓவியமும், சமயமும், ஒழுக்கநெறிகளும் பின்னர்தானே வந்தன! உணவு தன்னிறைவு இல்லாமல் நாகரிக வளர்ச்சியேது? அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றதால்தானே மற்ற ‘உயர்நிலை சிந்தனைகள்’ வரும். வெறும் வயிற்றில், பசியோடு இருப்பவரிடம் ஆன்மிகம் பேச முடியுமா? கல்வி, ஒழுக்கம், சமயம், பண்பாடு - இவையெல்லாம் மேல்கட்டுமானம்தான்; பொருளாதாரம்தான் அடிக்கட்டுமானம். பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்; அவற்றில் பலவற்றை ஒதுக்க லாம். ஆனால் முக்கியமான முதல் காரணம் சுரண் டலும், வறுமையும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மான்செஸ்டர் நகரில் எங்கல்சின் தந்தைக்குச் சொந்தமான ஆலை வருமானம் உரு வாக்கிய அடிக்கட்டுமானத்தின் மீது அமர்ந்து கொண்டுதானே மார்க்ஸ் தன் மேல்கட்டுமான அரசியல் - பொருளாதாரக் கோட்பாடுகளை வரைந்தார்.

ஆனாலும் பொருளாதார அளவுகோலை மட்டுமே மார்க்ஸ் வலியுறுத்தவில்லை. ‘சமூக உறவுகள்’, ‘சமூகக் குழுக்கள்’ பற்றியும் பேசினார். தொழிலாளர் என்ற அடையாளத்திற்குள் ஆண் களும், பெண்களும் ஒன்று திரள முதலில் தொழி லாளர் வர்க்கம் என்ற ‘உணர்வு’ தேவையென்றவர் மார்க்ஸ். அமெரிக்க சந்தை வணிகமும், உலகமய மாக்கலும் உளறித் திரியும் பொருளாதாரம் அல்ல மார்க்ஸ்-எங்கல்ஸ் ஆய்வு செய்த பொருளாதாரம். மார்க்சியப் பொருளாதாரம் பாலினம், ஒழுக்கம், சமூக உறவுகள் மற்றும் உணர்வு போன்ற அனைத்து மனிதக்குழு அம்சங்களையும் உள்ளடக்கியது.

“பட்டுப்புழு என்ன காரணத்திற்காகப் பட்டு நூல் உற்பத்தி செய்கிறதோ, அதே காரணத்திற்காகத் தான் மில்ட்டன் ‘பாரடைஸ் லாஸ்ட்’ எழுதினார்; இரண்டுமே தன் - இயல்பான செயல்கள்” என்று இலக்கியத்தை விளக்கியவர் மார்க்ஸ். ஐரோப்பிய இலக்கியத்தை நன்கு அறிந்தவர் மார்க்ஸ்; கத் தோலிக்கக் கிறித்தவம் உருவாக்கிய டான்டேயையும், நிலவுடைமை சமூகம் வடிவமைத்த ஷேக்ஸ்பியரையும் முழுமையாகப் படித்தவர். மார்க்ஸ் கவிதைகள் எழுதினார்; நகைச்சுவை நாவலொன்றைத் தொடங்கி முடிக்காமல் விட்டுவிட்டார்; கவிதை நாடகமொன் றையும் பாதியில் நிறுத்தினார்; கலை மற்றும் சமயம் குறித்து அவர் எழுதிய, பதிப்பிக்காத கட்டுரைகள் பலவுண்டு; நாடக விமர்சனத்திற்கென்று பத்திரிகை யொன்றை நடத்தத் திட்டமிட்டவர். எனவே பொருளாதாரத்தைத் தாண்டி மார்க்சுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறுபவர் பேதை அல்லது புரட்டுக்காரர்.

6. மார்க்ஸ் பொருள்முதல்வாதி. மனிதரின் ஆன்மிகத் தேவைகளைப் புறக்கணித்தவர். ஒழுக்கத்தைக்கூட தனிநபர் சொத்துரிமையின் கருவியாகப் பார்த்தவர்.

மறுப்பு : இந்த உலகின் உருவாக்கம், அதன் செயல் பாடுகள், இதில் வாழும் மக்களை இயக்கும் விசைகள் குறித்து மார்க்சுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் இந்த உலகை இயக்கும் ‘அந்த சக்தி’ எது? அது நமக்குள் இருக்கிறதா? அல்லது உள்ளேயும், வெளியேயும் இருக்கிறதா? போன்ற ‘ஆன்மிகத் தேடல்கள்’ மார்க்சைத் தொந்தரவு செய்யவில்லை; அவற்றுக்கு அவரிடம் நேரமும் இல்லை.

மார்க்ஸ் ஆய்வு செய்த ‘பொருள்’ வேறு. அது மனிதரின் அன்றாட வாழ்வுடன் இணைந்தது. சமயமும், சமயம் சார்ந்த தத்துவமும், சமய இலக் கியமும் வலியுறுத்திய ‘விதி வழி மனிதனை’ மார்க்ஸ் மறுத்தார்; அண்டசராசர சக்தியின் கையில் மனிதன் வெறும் கைப்பாவைதான் என்ற பிதற்றலைப் புறந்தள்ளிவிட்டு, தன் வாழ்வை, தன் நிலையை, தன் எதிர்காலத்தை, தானே முடிவு செய்யும் வலுவான மனிதரை மார்க்ஸ் கண்டெடுத்தார். இதுதான் மார்க்ஸ் முன்வைக்கும் ‘பொருள்’ முதல்வாதம். லாக் மற்றும் ஹியூம் போன்ற தத்துவ அறிஞர் உணர்வுகள் குறித்து ஆய்வு செய்தனர்; இவ்வுணர்வு களின் மூலம் என்ன என்பதிலிருந்து மார்க்ஸ் தன் ஆய்வைத் தொடங்கினார்.

7. மார்க்ஸ் கண்டுபிடித்த ‘வர்க்கம்’ காணாமல் போய் விட்டது. கொடுமையான முதலாளி வர்க்கமும், புரட்சி செய்யும் தொழிலாளர் வர்க்கமும் இல்லை. இரண்டும் மார்க்சின் கற்பனையே.

Terry_Eagleton_300மறுப்பு : மன்னராட்சி முறை ஒழிந்துவிட்ட தாலோ, முதலாளியும், தொழிலாளியும் ஒன்றாக கிரிக்கெட் பார்த்துவிட்டு, பக்கத்திலுள்ள உண வகத்தில் சாப்பிடுவதாலோ வர்க்கம் அழிந்து விடாது. அவ்வப்போது இருவரும் பொது இடங் களில் உரசிக் கொள்வதில் சமத்துவம் வந்துவிடாது. மறுநாள் காலை முதலாளி சுரண்டலை ஆரம்பித்து விடுவார்; தொழிலாளி உழைக்கத் தொடங்கி விடுவார். சந்தர்ப்பத்திற்கேற்ப வர்க்க பேதங்களை மறைத்துக்கொண்டு, முகமூடி அணிந்து உறவாடுவது முதலாளித்துவத்தின் யுக்திகளில் ஒன்று; முதலாளித் துவத்தின் முற்றிய நிலையின் வெளிப்பாடு; சுரண்டலை மறைக்க அரங்கேறும் நாடகம். உபரியும், லாபமும் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்தால் காணாமல் போன வர்க்கம் தானாக வெளியே வரும். எனவே முதலாளியும், தொழிலாளியும் மார்க்சின் கற்பனைக் கதாபத்திரங்கள் அல்ல; யதார்த்தம்.

அறிவுபூர்வ உழைப்பாளரும், அலுவலகப் பணியாளரும் பெருகி, உடல் உழைப்பாளிகள் (தொழிலாளர்) குறைந்து விட்டதாகப் பேசப் படுகிறது. மார்க்சியத்தைப் பொருத்தவரை எந்த வகை உழைப்பாக இருந்தால் என்ன? உழைப்பவர் அனைவரும் உழைப்பாளர்தானே? சுரண்டல் அனைவருக்கும் பொதுதானே?

உடல் உழைப்பவர் குறைந்துவிட்டதாக யார் சொன்னது? இன்று மூன்றாம் உலக (ஏழை) நாடு களில் ஏராளமான பெண்கள் தொழிலாளராக ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும், உணவு பதனிடும் தொழிற்சாலைகளிலும் சுரண்டப்படு கின்றனர். கணக்கில்லாத பெண்கள் விவசாயக் கூலிகளாகத் தேய்ந்துகொண்டிருக்கும் போது, தொழிலாளர் வர்க்கம் அழிந்து விட்டதாகக் கொட்டடிப்பது மடமை.

8. மார்க்சிஸ்ட்டுகள் வன்முறையின் ஆதரவாளர். படிப்படியாக, சீர்திருத்தங்கள் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமென்பதை மறுத்துவிட்டு, ரத்தம் கொட்டும் புரட்சியை முன்வைப்பவர். இந்த வன்முறையால்தான் மக்களாட்சி முறையுடன் மார்க்சியம் ஒத்துப் போகாது.

மறுப்பு : புரட்சி என்றால் வன்முறை, சீர்திருத்தம் என்றால் அமைதி என்று கோத்து விடுவது தவறு. சீர்திருத்தங்கள் அனைத்தும் அமைதியாக நடந் தேறியதாக வரலாறு கூறவில்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் சீர்திருத்தங்கள் அறிமுகமான போது கொல்லப்பட்ட கறுப்பினத்தவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது? இந்தியாவில் மக்கள் அகிம்சை வழியில் போராடிய போது பிரிட்டிஷ் காலனிய அரசு பேச்சுவார்த்தை மட்டும்தானா நடத்தியது?

அதே சமயம் வன்செயல்கள் இல்லாத புரட்சி களும் உண்டு. 1916 இல் அயர்லாந்தின் விடுதலைக் காக டப்லினில் நடந்த புரட்சியில் வெகு சிலரே மரணமடைந்தனர்; 1917 ரஷ்யப்புரட்சியில் இறந்த வரும் வெகு சிலர்தானே! பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அமெரிக்க விடுதலைப் போரைக் கொண்டாடும் பலரும் போல்சேவிக் புரட்சியை மட்டும் சாடுவது சரியா? அயர்லாந்துக்கு விடுதலை வேண்டும் என்று போராடிய கத்தோலிக் கரைக் கணக்கில்லாமல் கொன்ற பிரிட்டன் ஆதரவு சீர்திருத்தக் கிறித்தவ அல்ஸ்டர் யூனியன் தீவிர வாதிகளை பிரிட்டன் கண்டிக்காதது ஏன்?

பொருளாதாரச் சுரண்டல், பாலியல் கொடுஞ் செயல்கள், அரசியல் உரிமை மறுப்பு, அடக்குமுறை போன்ற மறைமுக வன்செயல்களுக்கு எதிராகத் தான் புரட்சிகள் கிளம்பும் - எடுத்துக்காட்டு ரஷ்யப் புரட்சி. ஆனால் இரண்டாவது வன்முறையைக் கண்டிப்பவர், அதற்குக் காரணமான முதல் வன் முறையைப் பேசுவதில்லை.

9. மார்க்சியம் நிலைக்க சர்வாதிகார அரசு தேவை. புரட்சிக்குப் பின்னர் சோசலிசப் புரட்சியாளர் ஆட்சி செய்வர். எல்லா எதிர்ப்புகளும், முணுமுணுப்பு களும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

மறுப்பு : அரசு என்ற அமைப்பை மார்க்சே விரும்பவில்லை; “அரசு உதிர்த்து போகும்” என்று நம்பினார். ஆனால் அவர் குறிப்பிட்டது அரசியல் அதிகாரம் பெற்ற அரசைத்தான்; நிர்வாகம் செய்யும் அமைப்பொன்று இருக்கும்.

இதன் மறுபுறம் பார்ப்போம். இன்றைய அரசுகள் பல, என்ன செய்து கொண்டிருக்கின்றன? தனிநபர் சொத்துக்களின் காவல்காரராகத்தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அரசுகள் பன்னாட்டு முதலாளிகளின் தரகர்கள் என்று அன்று மார்க்ஸ் சொன்னபோது காதை மூடிக் கொண்டவர், இன்று அது உண்மையென்று வெளிப் படையாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும், சரிதான் என்பதை உணர்வர். முதலாளித்துவத்தின் நலனுக்குப் பாதகம் ஏற்படுத்தும் என்று தெரிந்தால் எல்லா மக்களாட்சி அரசுகளும் சர்வாதிகார சக்திகளாக மாறி சோசலிசத்தை அழிக்க எத்தனிப்பதை நாம் தினமும் பார்க்கிறோம். அரசு மூலதனத்தைக் கட்டுப் படுத்தும் நிலை மாறி, இன்று மூலதனம் அரசை நடத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிசத்தில் இத்தகைய அரசு உதிர்ந்து போகும் என்றார் மார்க்ஸ்.

இதே போலத்தான் அதிகாரமும். பிறரைச் சுரண்டுவதற்கும், அடக்குவதற்கும், கட்டுப்படுத்தவும் இன்று பயன்படுத்தப்படும் அதிகாரம் இல்லாமல் போகும். தன்னுடைய எதிர்காலத்தையும், கூட்டாகச் சேர்ந்து சமூகத்தின் நலனையும் தீர்மானிக்கும் அதிகாரம் கம்யூனிசத்தில் ஏற்படுமென்பது மார்க்சின் நம்பிக்கை.

10. கடந்து நாற்பது ஆண்டுகளில் எழுந்துள்ள முக்கிய மான மக்கள் இயக்கங்கள் மார்க்சியத்திற்கு வெளியே தான் தோன்றியுள்ளன. பெண்ணியம், இன அடையாளப் போராட்டங்கள், காலனிய எதிர்ப்பு, சுற்றுப் புறவியல் - இவற்றில் மார்க்சியத்தின் பங்களிப்பு மிகக்குறைவு.

மறுப்பு : பெண் அடிமைத்தனம், பெண்ணியம் போன்ற விஷயங்கள் குறித்து மார்க்ஸ் நேரடியாக, பரவலாக விவாதிக்கவில்லை என்பது உண்மை.

முதலாளிவர்க்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெண்களின் நிலை என்ன? முதலாளித்துவத்திற்கும், ஆணாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவு என்ன? மார்க்சியத்தில் வர்க்க வேறுபாடுகள் விவாதிக்கப் படுகின்றன. பாலியல் வேறுபாடுகள் கண்டுகொள்ளப் படவில்லை. ஏனென்றால், முதலாளித்துவச் சுரண்டலிலும் பாலின வேறுபாடுகள் இல்லை. பொருள் உற்பத்தியிலும், மனித உற்பத்தியிலும் ஆணும், பெண்ணும் சேர்ந்தே பணியாற்றுகிறார்கள். முதல் உற்பத்தியில் இருவரும் சுரண்டப்படுகிறார்கள்; இரண்டாவதில், பெண் மட்டும் அடிமையாக்கப் படுகிறாள்.

சார் மன்னரை வீழ்த்திய போல்சேவிக் புரட்சி 1917இல் சர்வதேச பெண்கள் தினத்தன்று ஆரம் பிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ‘சர்வதேச பெண்கள் செயலகம்’ தொடங்கப்பட்டது. இச் செயலகம் ‘முதல் சர்வதேச உழைக்கும் பெண்கள் பேரவை’ என்ற மாநாட்டைக் கூட்டியது. இதில் இருபது நாடுகளிலிருந்து பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட ‘உலகின் உழைக்கும் பெண்களுக்கு அறைகூவல்’ என்ற தீர்மானம், “கம்யூனிசமும், பெண் விடு தலையும் நெருங்கிய தொடர்புடையவை” என்று அறிவித்தது. “இனம், வர்க்கம், பாலினம், காலனி எனப் பல வடிவங்களில் மக்களை அடிமைப் படுத்திய முதலாளித்துவத்தின் முழு வடிவத்தை முதலில் முழுமையாக வெளிக்கொண்டு வந்தது மார்க்சியம்தான்” என்று ராபர்ட் சி.யங் தன்னுடைய “பின்காலனித்துவம் : ஒரு முன்னுரை” என்ற நூலில் குறிப்பிடுகிறார். பெண்ணியத்தின் பல கிளைகளில் மார்க்சியப் பெண்ணியமும் உண்டு என்பதை யாரால் மறுக்க முடியும்?

காலனித்துவம் குறித்து மார்க்சின் கண் ணோட்டம் வேறு. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்குக் காலனித்துவம் அவசியம்; மிகவும் பிற்போக்கான நிலவுடைமை அரசியல்-சமூக அமைப்புகளில் இருந்து விடுபட்டு, தொழில் சார்ந்த சமூகம் ஏற்படும்; இதனால் தொழிலாளர் வர்க்கம் உருவாகி, வர்க்கப் போருக்கு வழி ஏற்படும் என்று மார்க்ஸ் நம்பினார்.

மறுபுறம், இந்தியா உட்பட, ஏராளமான ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைக்கு சோசலிச சோவியத் யூனியன் உந்துதலாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில் சுபாஷ் சந்திர போசும், ஜவஹர்லால் நேருவும், கானாவில் நுக்ரு மோவும், அல்ஜீரியாவில் பிரான்ட்ஸ் ஃபானனும் பல்வேறு நிலைகளில் சோசலிச-கம்யூனிசவாதிகள் தான். தான்சானியாவின் ஜூலியஸ் நயரேரே சோசலிச வாதிதானே; வியட்நாமில் அமெரிக்காவின் ஆக்கிர மிப்பையும், படையெடுப்பையும் எதிர்த்த ஹோ-சி-மின்னுக்குத் துணை நின்றது சோவியத் யூனியன்; தென் அமெரிக்காவின் ஃபிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் காலனியத்துவத்தை வீழ்த்தப் பாடு படவில்லையா? “அயர்லாந்திலும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மத்தியிலும், காலனிகளிலும் ஏற் பட்டுள்ள விடுதலை இயக்கங்களுக்கு அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளும் நேரடி உதவி செய்ய வேண்டும்” என்று 1920 இல் லெனின் குறிப்பிட்டதாக கெவின் ஆண்டர்சன் எழுதுகிறார். 1857 முதல் இந்திய விடுதலைப்போரை ஆதரித்து மார்க்ஸ் எழுதியதை யாரும் குறிப்பிடுவதில்லை.

மனிதரின் வளர்ச்சியை மையப்படுத்தி மார்க்ஸ் எழுதியதால், இயற்கை மீது மனிதர் ஆதிக்கம் செலுத்துவதை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டதாக வாதிடப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளின் தீமை குறித்தும், ஓசோன் படலம் சிதைந்து வருவதைப் பற்றியும் மார்க்சும், எங்கல்சும் எழுதவில்லை. ஆனால் “பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூக சிந்தனைகளில், இயற்கை-மனிதர்-சுற்றுப்புறம் குறித்த சிக்கலான உறவுகள் பற்றிய ஆழமான கண்ணோட்டம் உள்ள சித்தாந்தம் மார்க்சியம் மட்டும்தான்” என்று ஜான் ஃபாஸ்டர் தன்னுடைய “மார்க்சியமும், சுற்றுப்புறச்சூழலும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது மிகைப் புகழ்ச்சியல்ல. “நமக் கிருப்பது ஒரு பூமி; நம் வாழ்வின் முதல் முழு ஆதாரமும் இதுதான். இதைச் சீரழிப்பது நம் வாழ்வின் இறுதி நிலையாகிவிடும்” என்று எங்கல்ஸ் “டயலக்டிக்ஸ் ஆஃப் நேச்சர்” என்ற நூலில் எழுதியது மார்க்சின் கருத்துதான். “முதலாளித்துவ விவசாய முறை, நிலத்தையும், விவசாயத் தொழிலாளியையும் உறிஞ்சி வளரும்” என்று மார்க்ஸ் “மூலதனம்” நூலில் குறிப்பிட்டார். தொழிற்சாலை சார்ந்த முதலாளித்துவம் பற்றிய ஆய்வுகளில், கழிவு அகற்றம், காடுகளின் முக்கியத்துவம், நதிகள் மாசுபடுவது, காற்றின் நச்சுத்தன்மை பற்றியும் விவாதித்தார்.

“என்றுமில்லாத அளவிற்கு இன்று மார்க்சியம் அவசியம்” என்று வால்டர் பெஞ்சமின் கூறுகிறார். சுரண்டலை மார்க்சை விடத் தெளிவாகப் புரிந்து கொண்டவர் இல்லை. உழைப்பவருக்காக, பெண் களுக்காக, ஒடுக்கப்பட்ட இனத்தவருக்காக, இயற்கைக் காக மார்க்சைவிட அதிகம் வாதிட்டவரும் இல்லை. இப்படிப்பட்ட மார்க்ஸ் காலாவதியாகிவிட்டார் என்று கூவுபவரைக் கண்டால் கோபப்பட வேண்டாம்; இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லலாம். மனித குலத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்பவரும், அதைச் சந்தேகிப்பவரும் இந்நூலைப் படிப்பது அவசியம்.

பின் குறிப்பு : முதலாளித்துவத்தின் மூலஸ்தானமான அமெரிக்காவின் மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில் ஒன்றான யேல் பல்கலைக்கழகம் மார்க்ஸ் காலாவதியாகி விட்டார் என்ற கருத்தை மறுத்து, ‘மார்க்ஸ் சொன்னது சரி ஏன்?’ என்று வாதிடும் இந்தப் புத்தகத்தை ஏன் வெளியிட வேண்டும்? வர்த்தக ரீதியாகவும், மார்க்சின் செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்பதைப் பறைசாற்ற இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. இன்றும் உலகமெங்கும் விவிலியத்திற்கு அடுத்து மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், விற்பனையாகும் நூல்கள் மார்க்சின் புத்தகங்கள்தான்.

Pin It