குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னா முகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். தாயார் அன்னை பாத்திமாவின் ஊர் தொண்டி. கனகாபிஷேகமாலை எழுதிய கனக கவிராயர் வழி வந்த குணங்குடியாரின் சமகாலப் படைப்பாளி தொண்டி மண்ணில் பிறந்த மோன குரு ஷைகுமஸ் தான். தந்தையூரான குணங்குடி இவரது கவிதைப் பரப்பெங்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாடலாகத் தொடர்ந்து இடம் பெறுகிறது.

குணங்குடி என்பதைக் குணங்கள் குடி கொண்ட நற்பதி / சுவனம் / கனவுலகு என்பதான அர்த்த தளங்களில் புரிந்து கொள்ளலாம். மஸ்தான் என்ற சொல்லின் உருவாக்கம் மஸ்து என்ற உருதுச் சொல்லிலிருந்து பிறப்பெடுத்துள்ளது. இதற்கு மயக்கந்தருவது, உள்ளக் கிளர்ச்சி தருவது, பித்து நிலை என்பதான அர்த்தங்களும் உண்டு.

குணங்குடியில் ஒரு கவி

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் காலம் கிபி 1788 - 1835க்கு இடைப்பட்டது. அரபியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். தாய்மாமனார் கட்டை சாகிபுவின் புதல்வி மைமூனை மணமுடிக்க குடும்பத்தார் கோரிக்கை வைத்தபோது நிராகரித்து விட்டுத் தனது 17-ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார். இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்ககல்வி பெற்றார். திரிசிர புரத்து ஆலிம் மெ-லவி ஷாம் சாகிபுவிடம் தீட்சை பெற்றுக் கொண்டு தொண்டியில் நான்கு மாதங்கள் கல்வத்து இருந்தார். தொண்டி மரைக் காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக் குகையில் தலைமேல் கால் கீழான சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறுதிக்கால 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். தொண்டியூர்க்காரரான இவர் வாழ்ந்த இடம்தான் தொண்டியார் பேட்டை. இதுவே பிற்காலத்தில் தண்டையார் பேட்டையானது. இராயபுரத்தில் இவரது அடக்கவிடம் உள்ளது.

அரபியில் முஹியத்தீன் இப்னு அறபி அப்துல் கரீம்ஜீலி, உமர்இப்னுபாரிஸ், பாரசீகத்தில் மஸ்ன விஷரீப் காவியத்தை எழுதிய மௌலானாரூமி, ஹாபிஸ், ஜாமி, உமர்கய்யாம்போலத் தமிழின் சூபிகவிஞர்கள் வரிசையில் முக்கிய இடம்பெறு கிறார்.

தமிழகத்தில் பிறந்து வாழ்ந்த காதிரிய்யா தரீகா ஞானப்பாட்டையாளர் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானியைத் தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

குணங்குடியார் இசுலாமிய சூபி ஞானியாக அறியப்பட்டாலும் கூட அவரது சீடர்களாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே மிகுதியாக இருந்தனர். ஐயாசாமி முதலியார் (குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி) எழுதியவர்) மகாவித்துவான் திருத்தணிகை சரவணப்பெருமாளையர் (நான்மணிமாலை) வெங்கட் ராயப்பிள்ளை கவிராயர், கோவளம் அருணாசலம் முதலியார் மகன் சபாபதி (தோத்திரப் பாடல்கள்) காயற்பட்டினம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை (வாயுரைவாழ்த்து) ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

சதகமும் கண்ணிகளும்

குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய தற்போது கிடைக்கும் எழுத்துக்கள் 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களாகும்.

குருவணக்கம் பகுதி பத்துப் பாடல்களைக் கொண்டது முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை முன்னிறுத்தி வஸ்துதயத்தினானந்தம், வஸ்துதய நிலத்தினானந்தம், விளையாட்டினானந்தம், தன்னிய லினானந்தம், மகிமையியானந்தம், வலிமையினா னந்தம், இரக்கத்தினானந்தம், பெருமையினானந்தம், தன்னிலையினானந்தம், காரணத்தினானந்தம் என்னும் பத்துப் பாடல் பகுதிகளைக் கொண்டது.

மகுலியத் தான தாத்துல்கிபுறியாவில் மறைந்த கன்ஜுல் மகுபியாம் எனத்துவங்கும் முதற்கட்ட பாடல்கள் அல்லாஹ், இருள், பிரபஞ்ச உருவாக்கம் குறித்த தோற்றவியல் அறிவை விரிவாகப் பேசுகிறது. தன் குருநாதனான முகியத்தீனை சர்வவல்லமையைப் போற்றிப் புகழ்ந்து, அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள் அடக்கி விளையாட வல்லீர், அகிலமோடு ஏழையும் ஆடும் கறங்குபோல் ஆட்டி விளையாட வல்லீர் எனப் போற்றிப்புகழ்ந்துவிட்டுக் கடலை அளக்க முற்படும் நண்டுபோலாவேனோ எனச் சொற்களால் (நண்டளந்திடு நாழியாவனோ) வெளிப்படுத்த இயலாத நம்பிக்கையுடன் தன் இயலாமையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

மட்டறு பவக்கடலலைக்குமொரு கவிழா மரக்கலமும் நீயல்லவா எனப் பலநிலை விவரணை களை, மனக்கிலேசங்களை எழுதிச்சென்ற குணங் குடியார் காரணத்தினானந்தம் இறுதிப்பகுதியில் தொன்மக் கவிதையியல் மாதிரியைப் படைத்துக் காட்டுகிறார். இது முகியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி குறித்த வாய்மொழி மரபுகளையும், கராமாத்துகள் என்னும் அதிசயச் செயல்களையும் பாடலாக்கிக் காட்டுகிறது. கடலிற் கவிழ்ந்ததோர் கப்பலாலாத்துடன் கடுகிவரவே அழைத்தீர் எனத் துவங்கும் பாடல் வரியிலிருந்து துவங்குகிறது.

கடலில் மூழ்கிய கப்பலைக் கொடிக்கம்பத்துடன் திரும்பி வரச் செய்தது, கம்பத்துடன் ஓடி வந்த ஒரு கப்பலைப் பூனையாகச் செய்தது. கர்ப்பத்தில் இருந்த போது தன்னைக் கொல்லவந்த ஒரு முனியைக் கொல்வதற்காகக் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து அந்த முனியைக் கொன்று இருதுண்டாக்கிவிட்டு மீண்டும் கர்ப்பத்திற்குள் சென்றது, பிள்ளையைப் பிடித்து சந்நியாசி ஒருவன் தின்றுவிட அப்பிள்ளையை அச்சந்தியாசியின் குடலைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்படி செய்தது என அதிசயங்கள் அனைத்தும் இப்பாடலில் பதிவாக முன் வருகின்றன.

முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமிய சமயத்தை நடைமுறைப்படுத்திய நபி முகமதுவின் அருள்கேட்டு முன்னிலைக் குருவான முகியத்தீன் ஆண்டகையிடம் குறையிரந்து உரையாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன.

அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. குருவருள்நிலை, தவநிலை, துறவுநிலை, நியமந நிலை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுகின்றன.

மகமூது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்புப் பாடல்பகுதிகளும் உண்டு.

இதைத் தவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப் பாடல்களும், பல்வித மனநிலை களையும், உணர்வுச் சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, றகுமான் கண்ணி, எக்காளக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந் துள்ளன.

குணங்குடியார் எழுத்துத் தொகுப்பும் பதிப்பும்

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைத் தொகுத்துப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த சீயமங்கலம் அருணாசல முதலியார். பிறகதனைத் தொகுத்து வெளியிட உதவியவர் சேகனாப் புலவர் என்னும் புலவர் நாயகம் அவர்கள். குணங்குடியாரின் சம காலத்தவரான இவர் பெயர் செய்தப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் என்பதாகும்.

தமிழ் நூல் விவரணப்பட்டியலைத் தொகுத்த மேற்கத்திய அறிஞர் ஜாண் மார்டாக் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களின் பதிப்பு வரலாறு பற்றிக் குறிப்பிடும்போது இந்துக்கள் குணங்குடி மஸ்தானை தம் ரிஷிகளில் ஒருவராகக் கருதியதால் அவர் பாடல்களைத் திரும்பத்திரும்ப அச்சிடுகின்றனர் எனக் கூறுவதை இரா. முத்துக்குமாரசாமி தனது சூபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும் என்ற ஆய்வில் மேற்கோள் காட்டுகிறார். அவர் சுட்டிக் காட்டும் தகவல்களைக் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளலாம்.

குணங்குடியாரின் பாடல்களை அருணாசல முதலியாருக்குப் பிறகு சூன் 1874-இல் சி. நாராயண சாமி முதலியார் பதிப்பித்துள்ளார். 1875 டிசம்பரில், மிகக் குறுகிய காலத்திற்குள் இப்பாடல் தொகுப்பு பத்தாம் பதிப்பைக் கண்டுள்ளது.

கோட்டாறு கா.ப.ஷெய்குத் தம்பிப் பாவலர் பதிப்பு பார்த்து அமரம்பேடு அரங்கசாமி முதலியார் 1921-இல் மற்றுமொரு பதிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து 1923-இல் கே.வி.துரைசாமி முதலியார வர்கள் மஸ்தான் சாகிபு திருப்பாடல்திரட்டை வெளியிட்டார். மஸ்தான் சாகிபு அவர்கள் ஜீவ திசையில் அருளிச் செய்த திருப்பாடவ் திரட்டு என்பதாக வெளிவந்த பதிப்பு முதல் முறையாக பிரபண்ண வித்துவான் காஞ்சீபுரம் இராமஸ்வாமி நாயுடவர்களைக் கொண்டு பதவுரை, விஷேச உரை யோடு வெளிவந்தது. மூலத்தையும் உரையையும் செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ.நெயினா முகமது பாவலர் சரிபார்த்திருந்தார். இக்குறிப்புரை யுடன் 1905-இல் திரிபுர சுந்தரிவிலாசம் அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிப்பு 1916 மற்றும் 1925 களில் வெளி வந்தது.

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களுக் கான விரிவான உரையை இக்காலப்பகுதியில் எழுதியவர் மா.வடிவேலு முதலியார் அவர்கள். 1908-இல் பூ.ச.துளசிங்க முதலியார், விரிவுரை யோடு கூடிய பதிப்பை வெளியிட்டார். 1928-இல் இரண்டாம் பதிப்பை வடிவேலு முதலியார் உரை யுடன் சென்னை ஷாஹுல் ஹமீதியா நிறுவனம் வெளியிட்டது.

குணங்குடி மஸ்தான் மரணமடைந்து ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டிற்குப் பிறகு (144 ஆண்டுகள்) முதன்முதலாக 1979களில்தான் திருத்தணி என்.ஏ.ரஷீத் என்ற ஒரு முஸ்லிம் இலக்சியச் செல்வரின் உரை விரிவாக்கத்தோடு ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்தொகுப்பும் உரையும் வெளிவந்தது.

இத்தொகுப்பில் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் தந்த பன்னூலாசிரியர் கவிக்குரிசில் அல்ஹாஜ் அப்துற்றகீம் குணங்குடியாரின் கவிதைக்கும் அரபு, பாரசீக மரபு சூபிக்கவிதைக்குமான தொடர்பில் துவங்கி குணங்குடியாரின் வாழ்க்கைக் குறிப்பையும், பாடல்களின் வாசிப்பனுபவத்தையும் விளக்கிச் செல்கிறார். மணிக்கவி எம். சையது மூஸ அ ஆலிமின் அருளுரையும் குணங்குடியாரின் கண்ணிவகைப் பாடல்களில் இடம் பெறும் குறியீடுகளையும், அடியாரின் மனத்தேட்டத்தையும் வெளிப்படுத்தும் விதத்தைச் சித்திரிக்கிறார்.

கலைமாமணி மகாகவி கா.மு.ஷெரீப் அவர் களின் அணிந்துரை சூபிய படித்தரங்களோடு சைவ சமய நெறிகளின் கூறுகளை ஒப்பீடு செய்து, சூபிய ஞானம் குறித்த விளக்கங்களையும், குணங்குடி யாரின் எழுத்துக்குள் இருக்கும் இல்லற வாழ்வியலுக்கு எதிர்நிலை போன்ற சர்ச்சைக்குரிய அணுகு முறை களைத் தனது வாசிப்பு அனுபவ விளக்கத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறார். 1979-இல் இந்நூலுக்கு அணிந் துரை எழுதிய கவி கா.மு.ஷெரீப் தனது உரையில் ஓரிடத்தில் நானறிந்தவரை 1925-க்குப் பிறகு மஸ்தான் பாடல்களைக் கொண்ட நூல் அச்சாகி இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்.

இத்தொகுப்பில் இடம் பெற்ற சிலம்பொலி சு.செல்லப்பனார், குணங்குடி மஸ்தானின் பாடல்கள் குறித்த விரிவான விளக்கங்களைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களைத் தாயுமானவர், இடைக்காடர், ஒளவையார், மற்றும் பட்டினத்தார் பாடல்களோடு ஒப்புமை செய்து அரியதொரு ஆய்வுக் கண்ணோட்டத்தை எழுதியிருந்தார். முனைவர் சி.பாலசுப்பிரமணியனின் அணிந்துரையும் சைவ, சூபிய சொல்லாடல்களுக்கு என்.ஏ.ரஷீது வழங்கியிருக்கும் விளக்க உரையை முதன்மைப்படுத்திப் பேசியிருப்பார். இத்தோடு இந்நூலுக்கான விளக்கவுரை எழுதிய என்.ஏ.ரஷீதின் முன்னுரையும் குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு திறப்பை உருவாக்கியது. இந்நூல் ஏறத்தாழ 552 பக்கங்களைக் கொண்டிருந்தது.

திருத்தணி என்.ஏ.ரஷீதின் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடலும் உரையும் 1979-இல் ஞானவள்ளல் பதிப்பகத்தின் வழி வெளிவந்ததற்குப் பிறகு டிசம்பர் 1980-இல் குணங்குடியார் பாடற்கோவை டாக்டர் அப்துல் ரகுமானின் குறிப்புரைகளோடு வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1990-இல் வெளியானது. குணங்குடியார் பாடல்களை அறிமுகம் செய்துவைத்த கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆய்வுரை மிகச் சிறந்த அரிய தகவல்களை உள்ளடக்கிய ஆளுமை நிறைந்த எழுத்தாகும். சூபித்துவம், காதிரியாநெறி, அவதாரக் கோட்பாடு, ஆன்மாவின் துணிகரப்பயணம், நாயக நாயகி பாவம், யோக பரிபாஷை சொற்கள் குறித்த விளக்கம் என ஏராளமான தகவல்களையும், முன்னிலைப் படுத்திப் பேசியது. ஒவ்வொரு பக்கத்திலும் பாடல் களுக்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்ட குறிப்புரைகள் வாசகனுக்காகப் புதிய வாசிப்பு அனுபவத்தை வழங்கின. எனினும் இப்பதிப்பு இதற்கு முன்னால் குணங்குடி மஸ்தானின் பாடல்களைப் பதிப்பித்த வரலாற்றையும், பதவுரையையும் விரிவான விளக்க உரையையும் எழுதிய இராமஸ்வாமி நாயுடு, வடிவேலு முதலியார் திருத்தணி என்.ஏ.ரஷீது உள்ளிட்ட உரையாசிரியர்களின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் கவனமாகத் தவிர்த்தது பதிப்பு நேர்மைக்கு உகந்த செயலாகத் தோன்றவில்லை.

இதன் தொடர்ச்சியாக 1997-இல் வெளியிடப் பட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடான சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் நூலில் குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றியதொரு விரிவான ஆய்வுரையை டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் எழுதியுள்ளார். குணங்குடி மஸ்தான், சாகிபு தொடர் பான அறிஞர்களின் ஆய்வுகள் மணவை முஸ்தபா நவம்பர் 1981-இல் வெளியிட்ட தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்ற எஸ்.எம்.சுலைமான் எழுதிய குணங்குடி மஸ்தான் கவிக்கோ எஸ்.அப்துல் ரகுமான் எழுதிய குணங்குடியார், இரா.முத்துக்குமாரசாமி எழுதிய சூபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும் முக்கிய ஆக்கங்களாகும். இவை தவிர, குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை கே.பி.எஸ். ஹமீது, அதிரை அஹ்மது உள்ளிட்ட பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். திருமதி.க.பிரபாகரி எழுதிய தாயுமானவர் - மஸ்தான் சாகிபு பராபரக் கண்ணி ஒப்பீட்டுக் குறுநூலையும் இந்த வரிசையில் குறிப்பிடலாம்.

Pin It