“தமிழனே நான்உலகின் சொந்தக்காரன்

                தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து

அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்

                அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்

இமை திறந்துபார் விழியை அகல மாக்கு

                என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்

திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்

                சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ”

(தமிழ் ஒளி: 1948)

இருபதாம் நூற்றாண்டின் பாரதி மரபில் உருவான பாரதிதாசனின் நேர்வாரிசாக தமிழ்ஒளியை இனம் காணமுடியும். 1920களில் உருவான சுயமரியாதை இயக்கமும் 1930களில் நிலைபேறு கொண்ட இடதுசாரி இயக்கமும் பல்வேறு புதிய சிந்தனை மரபுகளைத் தமிழ்ச்சூழலில் உருவாக்கின. வைதீக மரபுக்கு மாற்றான போக்கை தமிழ்ச்சூழல் உள்வாங்கியது. நவீன பகுத்தறிவு மரபு உருவானது. இம்மரபின் அடையாளமாக பாரதி தாசன் கவிதைகள் அமைந்தன. இடதுசாரி இயக்கம் 1940களில் தமிழகத்தில் பரவலாகியது. பாரதிதாசன் கவிதையால் தாக்கமுற்ற தமிழ்ஒளி 1940களில் இறுதியில் தன்னை இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளோடு இணைத்துக் கொண்டார். அதனை அவரது பின்வரும் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.

“இந்தத் தத்துவம் (மார்க்சியம்), உலகில் எவராலும் வெல்ல முடியாத தத்துவமும் உண்மையென்று நிரூபிக்கப்பெற்ற தத்துவமும் ஆகும். பழைய வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் இதன் முன்னே தலைக்குப்புற விழுந்து தவிடு பொடியாகி விட்டன. இதை உணர்ந்தே நான் என்னுடைய கொள்கையை வகுத்துக் கொண்டேன்.” (தமிழ் ஒளி.கடிதம்:31:2008)

1940களின் இறுதியில், மேற்குறித்த நிலைபாட்டைத் தமிழ்ஒளி கைக்கொண்டார். இந்தப் பின்புலத்தில் தமது ஆக்கங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். தமிழ் ஒளியின் ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், காப்பியங்கள் என விரிகின்றன. அவரது கவிதகள் பற்றிய புரிதல் உருவான அளவிற்கு அவரது பிற ஆக்கங்கள் குறித்தப் புரிதல் தமிழ்ச்சூழலில் உருப் பெற்றிருப்பதாகக் கூறமுடியாது. தமிழ்ஒளியின் காப்பியங்கள் தனித்துப் பேசத்தக்கவை. இப்பின்புலத்தில், அவர் உருவாக்கிய வீராயி (15.11.1947), நிலைபெற்ற சிலை (1.7.47), கவிஞனின் காதல் (15.11.47) ஆகியவை தொடக்க கால காப்பியங்கள் விதியோ வீணையோ (1954), மாதவிக் காவியம் (1988), கண்ணப்பன் கிளிகள் (1958), கோசலக்குமரி, புத்தர் பிறந்தார் ஆகியவை அவரது பிற்கால காப்பியங்கள். மேதின ரோஜாவையும் அவரது காப்பியங்களில் ஒன்றாக பெரியவர் செ.து. சஞ்ஜீவி கருதுகிறார். ஆக, தமிழ்ஒளி அவர்களால் படைக்கப் பட்ட ஒன்பது காப்பியங்கள் குறித்த அறிமுகமாக இந்நூல் அமைகிறது. தமிழ்க்காப்பிய வரலாற்று மரபில் தமிழ் ஒளி காப்பியங்களை மதிப்பீடு செய்யும் தேவை நமக்குண்டு. அந்தப் பின்புலத்தில் பின்வரும் செய்திகள் அமைகின்றன.

தமிழ் இலக்கிய உருவாக்க மரபு என்பது இயற்கைநெறி மரபு சார்ந்தது. இயற்கையோடு இயைந்த ஆண் - பெண் உறவு சார்ந்த மரபுகளை முதன்மைப் படுத்துவன. வைதிக சமயங்களின் அடித்தளமாக அமையும் பாரதம், இராமாயணம் ஆகிய பிற, புராணிய மரபுகளைக் கொண்டு கட்டப்பட்டவை. அதற்குள் இயற்கை மரபுகள் பேசப்படும். தமிழ்ப் படைப்பாக்க மரபில் புராணிய மரபுகள் மிகவும் பிற்காலத்தவை. தமிழின் முதல் காப்பியமாகக் கருதப்படும் சிலப்பதி காரம், சங்க இலக்கிய அகமரபின் தொடர்ச்சியாகவே அமைந்தது. காப்பியத்தின் இறுதிப் பகுதிகளில் அவைதிக மரபு சார்ந்த சமயக் கருத்துக்கள் இடம் பெற்றாலும் சமயமே காப்பியத்தின் முதன்மை நோக்கமாக அமைவதில்லை. பல்வேறு சமயச் செய்திகள் சிலப்பதிகாரத்தில் பேசப்படுவதை நாம் காண முடியும். இதன் தொடர்ச்சியாகவே மணிமேகலைக் காப்பியமும் அமைகிறது. அது பௌத்த மரபு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்காப்பிய வரலாற்றில், இவ்விரு காப்பியங்கள் மட்டுமே தமிழ்மொழியில் எழுதப் பட்டவை. பின்னர் உருவானவை அனைத்தும் பாலி, பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய வடமொழிக் கதை களின் தழுவலாகவே அமைந்துள்ளன. சீவகசிந்தாமணி, பெருங்கதை, குண்டலகேசி, வளையாபதி, நீலகேசி ஆகிய அவைதிக மரபுக் காப்பியங்களைத் தமிழில் உருவாக்கியுள்ளனர். இம்மரபை எதிர்கொள்ள பின்னர் பாரத, இராமயணக் கதைகள் சார்ந்த காப்பியங்கள் தமிழில் உருவாக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து வைதிக மரபு சார்ந்த புராணங்களும் காப்பிய மரபில் தமிழில் உருப்பெற்றன.

மேற்குறித்தத் தமிழ்க்காப்பிய உருவாக்க மரபு இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொள்ளப்பட்ட நிலையைச் சார்ந்து, தமிழ் ஒளியின் காப்பியங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய விடுதலை எனும் உருவகப் பொருளில், பாரதியின் பாஞ்சாலி சபதம் எனும் காப்பியம் உருவானது. பழைய இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட காப்பிய உருவாக்க மரபு தமிழில் வளமாக உருப்பெற்றதாகக் கூறமுடியாது. தமிழில் உருவான நவீன காப்பியங்கள், சங்க இலக்கிய மரபை, சிலப்பதிகார மரபை முதன்மைப்படுத்திய ஆண் - பெண் உறவு சார்ந்த வாழ்முறைகளை முதன்மைப் படுத்தியனவாகவே அமைந்தன. பாரதிதாசனின் காப்பியங்கள் அனைத்தும் இம்மரபை முன்னெடுத்தவை. பாரதிதாசனால் உருவாக்கப்பட்ட தமிழச்சியின் கத்தி தொடங்கி கடற்மேல் குமிழிகள் முடிய உள்ள பன்னிரண்டு காப்பியங்களும் வைதிக மரபுக் கதைகளைக் கொண்டவை அன்று. இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டு நவீனத் தமிழ்க் காப்பிய மரபு என்பது அவைதிக மரபுக் கதைகளைச் சார்ந்தது. வைதிக மரபு சார்ந்த, வைதிக சமயங்கள் சார்ந்த மரபை முன்னெடுக்

காதது. இம்மரபை கம்பதாசன் மிகச்சிறப்பாகவே முன்னெடுத்துள்ளார். அவரால் எழுதப்பட்டுள்ள பதிமூன்று குறுங்காப்பியங்களிலும் இம்மரபை நாம் காணமுடியும்.

இருபதாம் நூற்றாண்டில் நவீன காப்பியங்களை உருவாக்கிய ஆளுமைகளைப் பின்கண்டவாறு பட்டிய லிடலாம். பாரதிதாசன் (12 காப்பியங்கள்) கம்பதாசன் (13 காப்பியங்கள்) ச.து.சு.யோகி (தமிழ்க்குமரி), முடியரசன், வாணி தாசன், கா.மு.ஷெரீப், கண்ணதாசன், நா.காமராசன், பெருஞ்சித்திரன் ஆகியோரைக் கூறமுடியும். நாமக்கல் கவிஞரின் ‘அவளும் அவனும்’, புலவர்குழந்தையின் இராவண காவியம், ஞானியின் கல்லிகை ஆகிய காப்பியங்களும் குறிப்பிடத் தக்கவை. இருபதாம் நூற்றாண்டுக் காப்பிய உருவாக்க மரபில் ஈழத்து மகாகவியின் காப்பிய ஆக்கங்கள் தனித்துப் பேசத்தக்கவை. பாரதிதாசன் வழி உருவான இருபதாம் நூற்றாண்டின் அவைதிகக் கதைகள் சார்ந்த நவீன காப்பிய மரபு, தமிழ் ஒளியின் மூலம் புதிய மரபாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாகக் கருத முடியும். தமிழ் ஒளியின் காப்பிய உருவாக்க மரபை பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

-              வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்திய காப்பிய கதைமாந்தர்களை உருவாக்கியதில் தமிழ் ஒளியின் தனித்த இடம்,

-              அகமரபை முன்னெடுத்த இருபதாம் நூற்றாண்டின் நவீனக் காப்பியங்களில் தமிழ் ஒளி காப்பியங்களின் ஆக்க முறைமை,

-              சிலப்பதிகாரக் கதைமரபை, தமது காப்பிய ஆக்கங்களுக்குள் உள்வாங்கி பாங்கு.

தமிழ்ஒளியின் ஒன்பது காப்பியங்களையும் மேற்குறித்த வாறு உரையாடலுக்கு உட்படுத்த முடியும். இதில் அவரது மரபின் தொடர்ச்சியையும் புதுமை உருவாக்கத் தையும் இனம் காணமுடியும். வர்க்கப் போராட்ட மரபு சார்ந்து தமிழில் காப்பியங்களை உருவாக்கியவர் தமிழ்ஒளி என்று கூறமுடியும். சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பதிவு செய்தாலும், மார்க்சியம் எனும் தத்துவம் சார்ந்த வர்க்கப் போராட்டம் எனும் கருத்தாக்கத்தைக் காப்பிய வடிவில் பதிவு செய்தவர் தமிழ்ஒளிதான். இதனை உறுதிப்படுத்த அவரது ‘வீராயி’ காப்பியத்தின் முன்னுரைப்பகுதி உதவும். அப்பகுதி வருமாறு:

“தமிழ்நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்க் கையை வளப்படுத்தும் கலையைத்தான்; ‘கலை கலைக்காகவே’ என்று சொல்லும் கற்பனைச் சித்தாந்தத்தை அல்ல. சிறுபிள்ளைகளிடம், ‘பலூன்’களை ஊதவிட்டு வேடிக்கை காட்டுவது போல் வெறும் உவமைப் பிதற்றலும் கனவுலக மாயாவாதக் கதைகளும் இன்றையத் தமிழ் நாட்டை சாவுப்படுக்கையில் வீழ்த்தும் கொடிய தொத்துநோய்களைப் போன்றவை. நம் கண் ணெதிரே, நம் உடன்பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான்; அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக் கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் ‘சுரீர் சுரீர்’ என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.” (வீராயி: கவிஞர் கூறுவது:1947)

1930களில் இந்தியா முழுவதும் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் உருவானது. 1940களின் தொடக்கத்தில் தமிழகத்தில் விவசாயிகள் போராடத் தொடங்கினர். விவசாயக் கூலிகள் தொண்ணூறு சதவீதம் ஒடுக்கப் பட்ட பறையர் இன மக்களே. இவர்கள், சொந்த நாட்டில் பிழைக்க வழி இல்லாமல், கங்காணிகளால் ஏமாற்றப்பட்டு, தென் மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடு களுக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் மற்றும் பல்வேறு சிறு சிறு தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வகையான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீராயி. அவர் குடும்பம் கடல்கடந்து சென்று அடைந்த துன்பத்தையும் மீண்டும் வந்தபோது, ‘பறையர்’ என்பதால் ஒடுக்கப்படுவதையும் கதைப் பின்புலமாகக் கொண்டது வீராயி காப்பியம். முதல் தலித் தமிழ்க் காப்பியம் என்று கூட கூற முடியும்.

இக்காப்பியத்தைப் புரிந்துகொள்ள கவிஞரின் பின்வரும் வரிகள் உதவலாம்.

“சேரியெனும் இடமில்லை காட்டினிலே

                அதுவன்றிக் கற்பைத்தின்னும்

பூரியர்கள் அங்கில்லை; சட்டத்தால்

                பொய்சொல்லி புன்மைசேர்க்கும்

ஆரியர்கள் அங்கில்லை! யாவையுமே

                பொதுவுடைமை; பாலை தன்னில்;

நீரிருக்க முடியாது; மனிதரிடம்;

                நீதியிலை; நீங்கிச் செல்வோம்.”

(வீராயி:1947:46)

வாழவழியின்றி, கடும்வெளப் பெருக்கால் அழிந்து போன சிற்றூரை விட்டு, ஆப்பிரிக்க நாட்டுக் கரும்புத் தோட்டத்திற்குப் பிழைக்கச் செல்லும் குடும்பம் ஒன்றின் குரலாக மேற்குறித்த வரிகள் அமைகின்றன. இவ்வகையில் சாதிய முரண்களை உள்ளடக்கிய வர்க்க முரணை ஆழமாகக் காப்பியத்தில் தமிழ்ஒளி உருவாக்கியுள்ளதைக் காண் கிறோம்.

‘நிலைபெற்ற சிலை’ காப்பியத்தில் அவரது வர்க்கச் சார்பை வெளிப்படையாகவே எழுதியுள்ளார். அந்த வரிகள் வருமாறு:

“இடியும்வரை பணக்காரக்கோட்டை சாதி

ஒடியும்வரை தொண்டாற்றும் பெரும்பணிகள்

இழிவுடனே பொருள் ஏற்றத் தாழ்வ னைத்தும்

உயிர்தந்தேன்; தமிழ் நாடே ஏற்றுக்கொள், நீ”

(நிலைபெற்ற சிலை:1947)

1920 - 1940 தொடங்கி, தமிழ்ச்சூழலில் இடதுசாரி இயக்கம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தது. இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத் திற்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. 1940களில் இடதுசாரி இயக்கம், வீறுகொண்ட விவசாய இயக்கமாகத் தென்னிந்தியச் சூழலில் வளர்ச்சி பெற்றது. இந்தக் காலச் சூழலில் அவ் வியக்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கவிஞர் தமிழ்ஒளியின் வெளிப்பாடாகவே அவரது அக் காலத்தில் காப்பியங்கள் அமைந்துள்ளன. இவ்வகையான காப்பியங்களை, இந்தக் காலச்சூழலில் தமிழ்ஒளி மட்டுமே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பிய உருவாக்கத்தில் காதல் கதைகள் இடம் பெறுவது தொடக்க காலம் முதல் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் என்னும் மரபுகள் உலகம் தழுவியவை. இவ் வகையான காதல் மரபுகளை வெளிப்படுத்தாத கவிஞர்கள் உலகில் மிகக் குறைவு. கவிஞர் தமிழ்ஒளி அவர்களும் இம்மரபில் சில காப்பியங்களை உருவாக்கி யுள்ளார். ‘கவிஞனின் காதல்’, ‘கோசலக் குமரி’ ஆகியவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. காதல் உணர்வை தமக்கேயுரிய சந்தங்கள் நிறைந்த வரிகளில் கவிஞர் வெளிப்படுத்துகிறார். உணர்வுத் தளங்களை வெளிப்படுத்தும் வகையில் யாப்பில் உள்ள சந்தங்களை இவர் கண்டுபிடித்துள்ளார்; வெளிப்படுத்துகிறார். இவரது கவிதைகளின் மிக முதன்மையான ஆளுமைக் கூறுகளில் ஒன்றாக இதனைக் கூறமுடியும். ‘கவிஞனின் காதல்’ காவியத்தில் அமைந்துள்ள பின் காணும் வரிகள் கவித்துவ ஆழம் மிக்கவை.

“கண்ணீரை அவளுக்குக் கடைசி காலக்

                கவிமலராய்ச் சொரிகின்றான்;

 காதல் கொண்டே

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி வாழ்ந்தான்

                இடையூறு வருமென்றே எதிர்பார்த் தானா?

புண்ணாகப் போயிற்றே நெஞ்சம்! வண்டி

                போகிறது மேடுபள்ளம் கடந்து கொண்டு

மண்மீதில் வாழ்க்கையுமே அவ்வாறே, தான்!

                மற்றதனைத் திருத்திடலாம் ஒருகா லத்தில்!”

 (கவிஞனின் காதல் :1947)

சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் பலவாகும். பாரதிதாசன் அதற்கு முன்னோடியாகத் திகழ்கிறார். கவிஞர் தமிழ் ஒளி அவர்களும், ‘விதியோ வீணையோ?’, ‘கண்ணப்பன் கிளிகள்’, ‘மாதவி காவியம்’ ஆகிய மூன்று காப்பியங்களைப் படைத்துள்ளார். சிலப்பதிகாரக் கதையை எடுத்துக்கொண்டு சமகால மரபு சார்ந்த காப்பியத்தை உருவாக்கியுள்ளார். சிலப்பதிகாரக் காப்பியம் சார்ந்த தமிழ் நவீனக் காப்பிய உருவாக்கத்தில் தமிழ் ஒளி அவர்களின் இடம் மிகத் தனித்தது. இவரது ‘மாதவி காவியத்தை’ இருபதாம் நூற்றாண்டின் நவீன சிலப்பதிகாரம் என்று கூற முடியும். தமிழ் ஒளி படைத்துள்ள ‘மாதவி’ இளங்கோவடிகளின் மாதவியை விட சமகால உணர்வுப் பாங்கான பாத்திரமாக மிளிர் வதைக் காண்கிறோம். தொல்பழம் இலக்கிய மரபை, சமகாலத்திலும் உயிரோட்டத்துடன் உருவாக்கமுடியும் என்பதற்கு ‘மாதவி காவியம்’ நல்ல எடுத்துக்காட்டு. கவிஞர் மறைவிற்குப் பின்பு மிக அண்மைக்காலத்தில் (1995), இதனை வெளிக்கொண்டு வந்த பெரியவர் செ.து.சஞ்ஜீவி பெரிதும் பாராட்டுக்குரியவர். மாதவி காவிய அமைப்பு குறித்து தமிழ்ஒளி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“என்கதையில், மாதவி மனம் மாறும் நிலையை மட்டுமே காட்டி, செல்வங்களைத் தானஞ் செய்யும் நிகழ்ச்சி, பௌத்த சங்கத்தை அடையும் நிகழ்ச்சி ஆகியவற்றை உய்த்துணருமாறு விட்டுள்ளேன்” (மாதவி காவியம்:1995)

இக்காவியத்தில் மாதவியை ஒரு புதிய பாத்திர மாகவே கட்டமைத்துள்ளார். இருபத்தேழு காதைகளாக இக்காவியம் படைக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டு நவீனக் காப்பிய வரலாற்றில் இக்காவியம் தனித்தே பேசப்படும்.

பெரியவர் செ.து.சஞ்ஜீவி அவர்கள் உருவாக்கியுள்ள ‘தமிழ்ஒளி காவியங்கள் - ஓர் அறிமுகம்’ எனும் நூல், தமிழ் ஒளி காவியங்களைப் பயில விரும்புவோர்க்கு அரிய கையேடாக அமைகிறது. ஒன்பது காப்பியங்களையும் தேடிப்படிக்கும் சிரமத்தை இந்நூல் குறைக்கிறது. செ.து.சஞ்ஜீவி அவர்களும், இந்நூல் உருவாக்கு தவதற்கான காரணமாக மேற்குறித்த செய்தியைக் கூறுகிறார். அதனுடன் முழுமையாக உடன்படுகிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக, தொடர்ந்து தமிழ் ஒளியின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதே தமது பணி எனச் செயல்படும் பெரியவர் செ.து.சஞ்ஜீவி அவர் களுக்கு எனது வணக்கங்களும் நன்றியும் என்றும் உரியது. அவரது பணியைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

(குறிப்பு : செ.து.சஞ்சீவி தமிழ்ஒளியின் காவியங்கள் குறித்து எழுதிய நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை.)

Pin It