படித்துப் பாருங்கள்...

அடிமைப்படுத்தப்பட்ட நாடோடிகள் - நிஜாம் ஆட்சியில் லம்பாடிகள்

(Bhangya Bukya (2010) subjugated Nomads

The Lambadas Under The Rule of The Nizams – Orient Blackswan)

bhangya_bhukya_450இந்திய நாட்டின் எழுத்து வடிவப் பதிவுகள் இந்தியச் சமூகத்தின் உடல் உழைப்பாளிகள் குறித்து எதுவும் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், மேலெழுந்த வாரியாக சில செய்திகளை மட்டுமே கூறுகின்றன. ஆங்கிலக் காலனிய ஆட்சியின்போது அறிமுகமான இன வரைவியல் என்ற அறிவுத்துறை இம்மக்களைக் குறித்துச் சில பதிவுகளைச் செய்தாலும் அப்பதிவானது மேட்டிமை அணுகுமுறையிலேயே இருந்தது. இதனையொத்ததாகவே அய்ரோப்பிய கிறித்தவ மறைப்பணியாளர்களின் பதிவுகளும் அமைந்தன. வரலாற்றில் இடம் மறுக்கப்பட்ட நாடோடிகள், குடியானவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டோர், கைவினைஞர்கள் ஆகியோரைக் குறித்த ஆய்வுகளை நோக்கி இன்றைய வரலாற்றுக்கல்வி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இத்தகைய அறிவுச் சூழலில்தான் பங்கய்யா புகுயா எழுதிய ‘அடிமைப்படுத்தப்பட்ட நாடோடிகள்’ என்ற இந்நூல் வெளிவந்துள்ளது. இது இங்கிலாந்திலுள்ள வார்விக் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வின் நூல் வடிவமாகும். இங்கிலாந்திலுள்ள நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆந்திர மாநிலத்தின் ஆவணக் காப்பகம் ஆகியனவற்றிலிருந்து சேர்க்கப்பட்ட ஆவணச் செய்திகளுடன் லம்பாடிகளின் வாய்மொழி இலக்கியங்களையும் நேர்காணல் செய்திகளையும் இந்நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

லம்பாடிகள்:

ஆங்கில அரசின் ஆவணங்களில் குறிப்பாக அன்றைய அய்தராபாத் மாநில அரசின் ஆவணங் களில் லம்பாடிகள், லம்படாக்கள், பிரிஞ்சாரிகள், பிரிஞ்சாரர்கள், லாமனிகள், பஞ்சாரிகள், மதுரா பஞ்சார்கள், சரன்பஞ்சார்கள், சுகாவிஸ் எனப் பல்வேறு பெயர்களில் லம்பாடியினத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நூலில் ஒரே சீராக லம்படாக்கள் என்ற சொல்லை நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். (பக் - 1)

மத்தியகால இந்தியாவில் மாடுகள் பூட்டிய கூண்டு வண்டிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகச் சாத்தினராக லம்பாடிகள் விளங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போது உருவான சந்தைப் பொருளாதாரம் வாணிப ஒழுங்கு முறைகள், நவீன போக்குவரத்து வளர்ச்சி ஆகியன இவர்களின் வாணிகசாத்தின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையிட்டன.

நூலின் மையச் செய்தி :

இவ்வாறு ஆங்கிலக் காலனிய ஆட்சியின் தாக்கத்தினால், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1948 வரையிலான காலத்தில், அய்தரபாத் நிஜாமின் ஆட்சியில் லம்பாடிகள் சமூகத்தில் நிகழ்ந்த வரலாற்று மாறுதல்களை இந்நூல் ஆராய்கிறது.

லம்பாடிகளின் பாரம்பரிய வாழ்க்கைமுறை, ஆங்கிலக்காலனியம் அதைச் சீர்குலைத்தமை அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்ற இந்தியாவில் தம் அடையாளத்தை அவர்கள் நிலைநாட்டிக் கொண்டமை என்பன இந்நூலின் மையச் செய்தியாகும்.

காலனியமும் லம்பாடிகளும்:

லம்பாடிகளின் சமூக வாழ்வில் காலனியம் தொடுத்த பெரிய தாக்குதல் அவர்களின் பொருளியல் வாழ்வைச் சீர்குலைத்ததாகும். சான்றாக ஒரு செய்தியை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

ஆந்திரமாநிலத்தின் கஞ்சம் தொடங்கி நெல்லூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் விளையும் உப்பை வாங்கிச் சென்று மராட்டிய மாநிலத்தில் மரத்வாடா பகுதியில் விளையும் பருத்திக்கு அதைப் பண்டமாற்று செய்து ஆந்திரத்திற்குத் திரும்பி வருவர். ஆந்திரத்தின் நெசவுத்தொழில் பெரும்பாலும் லம்பாடிகள் கொண்டுவரும் பருத்தியையே நம்பியிருந்தது. இதனால் இப்பண்ட மாற்று வணிகத்தில் லம்பாடிகள் நல்ல ஆதாயம் அடைந்து வந்தனர்.

1805-06இல் உப்பு வாணிபம் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையானது, உப்பளங்களும் உப்புத் தொழிற்சாலைகளும் கடற்கரையோரங்களில் நிறுவப் பட்டதுடன் அதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப்பின் விலை அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டதுடன் அதற்குச் சுங்கவரியும் விதிக்கப் பட்டது. இதன் பொருட்டுச் சுங்கச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. லம்பாடிகளின் உப்பு வணிகச் சாத்துக்கள் இச்சுங்கச் சாவடிகளில் சோதனைக்குட்படுத்தப் பட்டன. சுங்கச் சோதனைச் சாவடி ஊழியர்களுக்கு ‘மாமூல்’ (கையூட்டு) கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுக்க மறுத்தால் அவர்களது சாத்துக்கள் அதிகாரிகளால் கொள்ளை யடிக்கப்பட்டன.

லம்பாடிகளின் வணிகச் சாத்துக்கள் கடந்து செல்ல வேண்டிய பாதைகளும் வரையறுக்கப் பட்டன (பக்கம் 56-57). இவ்வணுகுமுறையால் லம்பாடிகளின் வாணிபம் பாதிப்புக்குள்ளாகியது. படிப்படியாக அவர்கள் அதைக் கைவிட்டுக் கூலிக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வணிகச் சாத்தினர் என்ற நிலையில் தம் போக்குவரத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு உரிமையாளர்களாக லம்பாடிகள் இருந்தனர். இக்கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலம் காலனியத்தின் வருகைக்கு முன்னர் தங்கு தடையின்றி இவர்களுக்குக் கிட்டியது. காலனிய ஆட்சியில் மேய்ச்சல் நிலங்கள் அரசின் உடைமையாயின. இதனால் மேய்ச்சலுக்காக வரி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர்.

நாடோடி வாழ்க்கை வாழ்ந்த சமூகங்களைச் சந்தேகத்துக்குரியவர்களாகவே காலனிய அரசு கருதியது. இதன் அடிப்படையில் அவர்களைக் கண்காணிக்கப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்கியது. இந்நெருக்குதலைத் தாக்குப்பிடிக்க இயலாத நிலையில் தம் நாடோடி வாழ்க்கையைத் துறந்து வேளாண்குடிகளாக லம்பாடிகள் மாறினர். இப்புதிய வாழ்க்கைமுறை அவர்களது பாரம்பரியப் பண்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தம் வணிகச்சாத்து வாழ்க்கையிலிருந்து விலகி கால்நடை வளர்ப்பிலும், வேளாண்மையிலும் ஈடுபட்டனர். நிலமும் கால்நடையும் இல்லாதோர் வேளாண் கூலிகளாயினர். காடுகளில் தம் கால்நடைகளை மேய்க்கும் உரிமையை இழந்தமையாலும் அடிக்கடி நிகழும் பஞ்சங்களினாலும் உணவு கிட்டாத வறுமை நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இதிலிருந்து மீளும் வழிமுறையாகத் தானியங்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். லம்பாடிகளைப் போன்றே காலனிய ஆட்சியில் தாம் பாரம்பரிய வாழ்க்கை முறை களையிழந்த வேறு சில வகுப் பினரும் இத்தகைய கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டனர்.

இக்குற்றச் செயலுக்கான சமூக பொருளாதார காரணங்களைக் கண்டறிய விரும்பாத காலனிய அரசு, இச்செயல்களை மேற்கொண்ட சமூகங்களை, உடற் கூறு அடிப்படையிலும், பாரம்பரியம் அல்லது பிரிவு அடிப்படையிலும் குற்றம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் என்று தவறாகக் கணித்தது. இச்சமூக உறுப்பினர்களின் அங்க அடையாளங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்யும்படி ஆணை பிறப்பித்தது. அவர்களது குடியிருப்புகள் குற்றச் செயல் செய்வோர் உறையும் குடியிருப்புகளாக அடையாளம் காணப்பட்டன. காலையிலும் மாலையிலும் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று தம் இருப்பைப் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இத்தகைய நெருக்கடிகளினால் நிலப்பிரபுக் களிடம் ஒப்பந்தக் கூலிகளாக மாறினர். ஒப்பந்தக் கூலி என்பது அடிமைமுறையின் ஒரு வடிவம்தான். சிறு நிலஉடையார்களாக இருந்த லம்பாடிகளின் நிலங்களை வட்டித் தொழில் செய்வோரும் ஆதிக்க சாதியினரும் பறித்துக் கொண்டனர். சொந்தமாக நிலமின்றிப் புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வந்த லம்பாடிகளை சமிந்தாரர்கள் நெருக்கடிக் குள்ளாக்கினர். தம் வாழ்க்கையாதாரங்களை இழந்து குற்றப் பரம்பரையினர் என்று பெயரிடப்பட்ட லம்பாடிகளால் இடப்பெயர்ச்சி மேற்கொண்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை.

இத்தகைய நெருக்கடியான சூழலில் நிஜாமுக்கு எதிரான தெலிங்கானா ஆயுதப் போராட்டம் தொடங்கிய போது அதில் தம்மை இணைத்துக் கொண்டனர். 1946, 1951 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நலகொண்டா, வாரங்கல் பகுதியில் நிகழ்ந்த தெலிங்கானா ஆயுதப் போராட்டத்தில் ஏறத்தாழ பத்து லட்சம் ஏக்கர் அளவிலான நிலம் பெருநிலக்கிழார்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிலமற்ற உழவர்களுக்கு வழங்கப்பட்டது. சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துச் சாதியினரும் இணைந்து இப் போராட்டத்தை நடத்தினர். இதில் லம்பாடிகளும் அடக்கம்.

இவ்வுண்மையை, தெலிங்கானா ஆயுதப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான ராஜேஸ்வரராவும் சுந்தரையாவும் தம் நூல்களில் விரிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்நூலாசிரியர் இவ்விருவரது நூல்களையும் படித்துள்ளதைத் தம் நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் சாதிகளின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி இப்போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பின்னுக்குத் தள்ளும் செயலை மிக நளினமாக நூலாசிரியர் செய்துள்ளார் (பக் 192 - 200). இவரது அரசியல் சார்பை இது வெளிப்படுத்துகிறது. மேலும் நூலின் முன்னுரையில் அடித்தள மக்கள் வரலாற்றாய்வு குறித்தும் வாய்மொழி வரலாறு குறித்தும் விவாதித்தாலும் மார்க்சிய வரலாற்று வரைவியலை ஓரங்கட்டும் போக்கும் காணப் படுகிறது (பக்கம் 1-123). ஃபோர்டு பவுண்டேசனின் நிதிநல்கையை இவ்ஆய்வுக்காகத் தாம் பெற்றதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளமை (பக்கம் - xxii) இவ் அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம்.

இக்குறைபாடுகள் இருப்பினும், லம்பாடிகள் மீதான ஆதரவுப் போக்கும், காலனிய ஆவணங்களை எச்சரிக்கையுணர்வுடன் பயன்படுத்தியுள்ளமையும் லம்பாடிகளின் வழக்காறுகளைப் பயன் படுத்தியுள்ளமையும் இந்நூலின் சிறப்புகளாக அமைகின்றன.

லம்பாடிகளின் சமூக அமைப்பு, அதில் ஏற்பட்ட மாறுதல்கள், மேல் நிலையாக்கத்தின் நுழைவு ஆகியன குறித்தும் ஆசிரியர் விவாதித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கைமுறை காலனியத்தின் நுழைவால் சீரழிந்துபோன வரலாற்றையும் லம்பாடிகளின் பண்பாட்டையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

Pin It