தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு “அண்மைக்காலத் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள்” குறித்த இரண்டு நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கத்தை மதுரை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரைக் கல்லூரி வாசகர் வட்டம், மற்றும் சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து 21 மற்றும் 22-3-2012 (புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் மதுரைக் கல்லூரியில் நடத்தியது. மாநில அளவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களும், படைப்பாளிகள் மற்றும் பேராசிரியர்களுமாக சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

ponnelan_380முதல் நாள் தொடக்க விழா மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் மருத்துவர் டி.ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் மு.செல்லா வரவேற்றார். மதுரைக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் இரா.முரளி வாழ்த்துரை வழங்கினார். நாவலாசிரியர் பொன்னீலன் தொடக்கவுரை ஆற்றினார். கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் தி.சு.நடராசன் கருத்தரங்க மைய உரையாற்றினார். மதுரைக் கல்லூரி வாசகர் வட்டத் தலைவர், நூலகர் திருமதி சி.ஹேமா நன்றியுரையாற்றினார்.

பேராசிரியர் ந.ம.வீ. இரவி தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில் மதுரை மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னாள் உறுப்பினர், சிறுகதை ஆசிரியர் சந்திரபோஸ் அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாவலாசிரியர் பொன்னீலன் அஞ்சலி உரையாற்றினார். இந்த அமர்வில் “தமிழ்ச் சிறுகதைகளின் எடுத்துரைப்பியல்”என்ற தலைப்பில் புதுச்சேரி விமர்சன அறிஞர் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களும், “குழந்தைகள் குறித்த பதிவுகள்”என்ற தலைப்பில் மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ச.பாலகிருஷ்ணனும் ஆய்வுரை வழங்கினார்கள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தத்துவத்துறைப் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் “தலித்தியச் சொல்லாடல்கள்”என்ற தலைப்பிலும், நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர் மீரான் மைதீன் அவர்கள் இஸ்லாமியப் பதிவுகள்”என்ற தலைப்பிலும் மதுரைக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.ரத்தினக்குமார் “புதிய கதை சொல்லிகள்”என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினார்கள்.

இரண்டாம் நாள் நடைபெற்ற மூன்றாம் அமர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் முன்னாள் பேராசிரியர் இ.முத்தையா அவர்களின் தலைமையில் மேலைச் சிவபுரி கணேசர் கல்லூரி விமர்சகர் ந.முருகேச பாண்டியன் “நவீனத்துவமும் பின் நவீனத்துவமும்”என்ற தலைப்பிலும், சென்னையைச் சேர்ந்த விமர்சகர் ச.விஜயலட்சுமி “பெண்ணிய வெளிப்பாடுகள்” என்ற தலைப்பிலும், மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் சு.இரவிக்குமார் “மார்க்சிய ஒளியில் தமிழ்ச் சிறுகதைகள்” என்ற தலைப்பிலும் கோவையைச் சேர்ந்த விமர்சகர் எஸ்.பாலச்சந்திரன் “மொழிபெயர்ப்புக் கதைகள்” என்ற தலைப்பிலும் ஆய்வுரையாற்றினர்.

பேராசிரியர் தி.சு.நடராசன் தலை மையில் பிற்பகல் நடைபெற்ற நான் காம் அமர்வில் பொள்ளாச்சி சிறுகதை ஆசிரியர் சு.வேணுகோபால் “சிறுகதை என்னும் எல்லையைத் தாண்டி”என்ற தலைப்பிலும், பேராசிரியர் பா.ஆனந்த குமார் “புலம்பெயர்ந்தோர் வாழ்வியல்”என்ற தலைப்பிலும், சிறுகதை ஆசிரியர் சுரேஷ்குமார் இந்திரஜித் “நானும் எனது கதையாக்கமும்”என்ற தலைப்பிலும் சிறுகதை ஆசிரியர் களந்தை பீர் முகம்மது “எனது கதைக்களங்கள்” என்ற தலைப்பிலும் உரை வழங்கினர்.

இரண்டாம் நாள் பிற்பகல் நிறைவு விழாவிற்கு மதுரைக் கல்லூரி வாரியச் செயலாளர் திரு.எம்.எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மதுரைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இரா.முரளி முன்னிலை வகித்தார். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் க.முத்துவேல் வரவேற் புரையாற்றினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் அ.கிருஷ்ண மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். கோவில் பட்டியைச் சேர்ந்த புனை கதை ஆசிரியர் சோ.தருமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிறைவுப் பேருரை ஆற்றினார். கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டப் பொருளாளர் நா.பாண்டுரங்கன் நன்றி யுரையாற்றினார்.

கட்டுரையாளர்களின் உரைகளின் மீது பேராசிரியர்கள் கூ.முத்தன், நா.கருணாமூர்த்தி, ரபீக்ராஜா, சாகுல்ஹமீது, பூமிச்செல்வம், நா.காந்திமதி, தோழர் விச்சலன், கவிஞர் அழகுபாரதி, ஆய்வாளர் கி.சிவா ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை மதுரைக் கல்லூரி வாரியச் செயலாளர் திரு.எம்.எஸ்.மீனாட்சி சுந்தரம் வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.ஆனந்தகுமார், தத்துவத்துறைப் பேராசிரியர் ரபீக்ராஜா, வாசகர் வட்டம் தலைவர் நூலகர் திருமதி ஹேமா, பேராசிரியர் ந.ரத்தினக்குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Pin It