ஆங்கில இலக்கிய உலகில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலம் மிகப் பரபரப்பான காலம்; முன் எப்போதையும்விட அதிகமாக இலக் கியத்தின் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்திய காலமும் கூட. அதற்குக் காரணம், விக்டோரியா அரசியின் காலத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், அதற்கு இசைவான குடியேற்றமும்தான். இவரது ஆட்சியில் தொழில், பண்பாடு, அரசியல், அறிவியல், இராணுவ மாற்றம் எனச் சமுதாயத்தின் பல்கூறு அடிப் படையில் மாற்றங்கள் நிகழ்ந்தேறின. இந்தச் சூழலில்தான் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கென்ஸ் (07, பிப்ரவரி, 1812 - 09, ஜூன், 1870) இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்கிறார்.

dickens_400Great Expectations, Bleak House, David Copperfield, A Tale of Two Cities, A Christmas Carol, Our Mutual Friend, Oliver Twist, Barnaby Rudge, Little Dorrit, Hard Times, Domebey and Son, Nicholas Nickleby, The Old Curiosity Shop, Martin Chuzzlewit, The Myster of Edwin Drood ஆகிய புதினங்களை ஆங்கிலம் வழியே உலகுக்கு அளித்தவர் சார்லஸ் டிக்கென்ஸ். இவற்றுள் சிறந்த புதினம் என்று David Copperfields - ஐ சார்லஸ் குறிப்பிட்டாலும், பெருவாரியான வாசகர்களைக் கவர்ந்த புதினம் Great Expectations தான்!

தம் எழுதுகோலின் மூலம் காகிதத்தில் பொருத்திய ஒவ்வோர் எழுத்திலும் சமுதாய அக்கறையை முன்னிறுத்தி இலக்கியம் படைத்த சார்லஸ் டிக்கென்ஸின் மொழியாளும் திறன், தகு பாத்திரங்களை உருவாக்கி, அவற்றை மிக இணக்க மாகப் பொருத்தி இலக்கியத்தை முழுமைப்படுத்தும் ஆளுமை ஆகியவற்றைத் திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி.கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இத்தகைய சிறப்புமிகு சார்லஸ் டிக்கென்ஸின் 200-ஆவது பிறந்த நாளையொட்டி, குக்கூ (cuckoo) இதழ் “டிக்கென்ஸ் - 200 : சிறப்பிதழாக மலர்ந் துள்ளது. மாணவர்களின் மானுடப் பண்பு, சமுதாய அக்கறை, இலக்கிய ஆளுமை போன்ற கூறுகளை நடைமுறைச் செயல்பாட்டின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதுநிலை ஆங்கிலத்துறை, 2010 - முதல் குக்கூ (cuckoo) என்னும் ஆங்கில இலக்கிய இதழ் ஒன்றைச் செவ்வையாக நடத்தி வருகிறது. இனி, குக்கூ டிக்கென்ஸ் - 200 : சிறப்பிதழைச் சற்றுப் புரட்டிப் பார்ப்போம்.

ஆங்கில உதவிப் பேராசிரியர் ஜெ.ரகு அந்தோணியை சிறப்பாசிரியராகவும், திரு.எஸ். நேருவை முதன்மையாசிரியராகவும், ஆங்கில உதவிப் பேராசிரியர் எம்.எஸ்.சேவியர் பிரதீப் சிங்கை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளி வந்துள்ள குக்கூவின் இந்தச் சிறப்பிதழ் ‘Dickens is well worth stealing”, என்ற மனத்தை ஈர்க்கும் ஜி.கே.செஸ்ட்டர்ட்டனின் மேற்கோளின் விளக்கத் துடனான தலையங்கத்துடன் தொடங்குகிறது.

சார்லஸ் டிக்கென்ஸைப்பற்றிப் பத்து வெவ்வேறு ஆளுமைகள் எழுதியுள்ள செங்கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

‘Extremes and Turbulance’ என்ற தலைப்பில் ஜெ.ரகு அந்தோணி எழுதியுள்ள கட்டுரை, விக்டோரியா அரசியின் ஆளுகையின் கீழ் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியையும் அதன் நிறை, குறையான விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறது. “நாட்டில் அறிவு வளர்ச்சியின் உச்ச கட்டம் என்றால், மறு புறம் அடிமுட்டாள்தனமான காலம், அதேபோன்று, நம்பிக்கை - நம்பிக்கையின்மை, ஒளி - இருள் என்று நேர் எதிரான இரண்டு புகழாரங்களையும் பெற்றது” என்று A Tale of two cities நாவலில் இடம்பெற்றுள்ள டிக்கென்ஸின் கூற்றை மேற்கோளாகக்கொண்டு இக்கட்டுரையைத் தொடங்கியிருக்கிறார் இதன் ஆசிரியர்.

பிரான்சுக்கு அரசியல் புரட்சியும், ஜெர்மனிக்கு மெய்யியல் புரட்சியும் எந்த அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்தவையோ அந்த அளவுக்கு இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முக்கியத்துவம் கொண்டது.

இங்கிலாந்து தேவாலயத்துக்கெதிராகக் கருத்து நிலையாகத் தீவிரமாகப் போராடிய சார்லஸ் டிக் கென்ஸ், வாரம் முழுவதும் உழைக்கும் பாட்டாளிகள் ஞாயிறு விடுமுறையைக் கூட மகிழ்வுடன் அனு பவிக்காத அளவுக்கு சர் ஆண்ட்ரூ ஆக்னியூ சட்டம் கொண்டுவர முனைந்தபோது, அதனால் வெகுண்டெழுந்து ‘Sunday Under Three Heads: As it is; As Sabbath Bills Would make it; As it might be made’ ஆகிய மூன்று தலைப்புகளில் சட்ட முன்வரைவை எதிர்த்த நிகழ்வின் மூலம், அவரது மானுட அக்கறையை விவரிக்கிறார் ரகு அந்தோணி.

அடுத்து, ‘A Sketch Boz’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள ஜி.ஷர்மிளியின் கட்டுரை டிக்கென்ஸின் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. “தவறான பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்து, கூடவே தவறான சகோதரர்களுடன் வளர்ந்து, தவறான மனைவியுடன் வாழ்ந்து, தவறான மகன்களுக்குத் தந்தையாகி, இறுதியில் இத்தகைய மாந்தர்களுக்கிடையே இவருடைய வாழ்க்கை சிக்கிக்கொண்டதாக வருந்தினார் டிக்கென்ஸ்” என்ற கிளெய்ர் டாமலின் எழுதிய வரிகளை மேற் கோளாகப் பொருத்தி டிக்கென்ஸின் வாழ்க்கையை விளக்கும் கட்டுரையாளர், டிக்கென்ஸ் வீட்டில் தன் குழந்தைகளைப் பற்றிய எண்ணிக்கைகூடத் தெரியாமல் ஒருமுறை திகைத்த நிகழ்வைச் சுட்டிக் காட்டியிருப்பது சோகமான சுவை!

அடுத்து, Master’s Minor Pieces என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை, தூத்துக்குடி, சாண்டி பொறியியல் கல்லூரியின் ஆங்கில உதவிப் பேராசிரியரான பி.ஜெயராஜேஷ் செல்வராஜ்.

ஓர் எழுத்தாளரின் மிகச் சிறந்த படைப்பு (Master-Piece) என்று எதைச் சொன்னாலும், அதனுள்ளே உறைந்திருக்கும் பிரதான உட்பொருள் அவருடைய வேறு படைப்பில் படைப்புகளில் - அதாவது, இந்த அளவுக்குப் புகழ்பெறாத ஒரு படைப்பின் / சில படைப்புகளின் உட்பொதிந்து, இலக்கிய உருவெடுத்த பிறகும், அந்த எழுத்தாளரின் மனத்தில் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும், அலைக் கழித்துக் கொண்டிருக்கும் அந்தக் கரு, அவரது மிகச் சிறந்த படைப்பில் முழுமையாக விரவி அந்த எழுத்தாளரை விடுதலை செய்கிறது. இதைத் தான் இக்கட்டுரையாளர் நயமாகப் பேசிச் செல்கிறார். அத்துடன், சார்லஸ் இலக்கியத்திற்காக எழுதாமல், முற்றிலும் தன் குழந்தைகளுக்காக எழுதி, அதைத் தானே குழந்தைகளுக்கு எடுத்துரைத்துவிட்டு, மிகவும் ரகசியமாக வைத்திருந்த ‘The Life of our Lord’என்னும் படைப்பு. அதில் இயேசு கிறிஸ்துவின் கதையைக் கூறும் சார்லஸ் எவ்வாறு பொருள் முதல் வாதம் பேசுகிறார் என்பதையும் இக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

நாளிதழில் இதழாளராகப் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் டிக்கென்ஸ் நோக்கம் கொண்ட தில்லை. அவருடைய பொருளாதாரச் சிக்கல்தான் அவரைப் பத்திரிகைக்காகப் பேனாவை எடுக்க வைத்தது. அவர் எப்படி பத்திரிகையாளராக எழுதினார் என்பதை விவரிக்கிறது, “A Journalist for Posterity” என்ற தலைப்பில் எம்.எஸ்.சேவியர் பிரதீப் சிங் எழுதிய கட்டுரை.

மேலும் அது, டிக்கென்ஸ் ஆற்றிய பத்திரிகைப் பணி, 19-ஆம் நூற்றாண்டில் இலவசக் கல்வி, சுகாதாரம், பெண்களுக்குக் கல்வி ஆகிய மாற்றங்களுக்கு வழிகோலியது உள்ளிட்ட பல விடயங் களைப் பற்றிப் பேசுகிறது.

அடுத்து இடம்பெற்றிருக்கும் கட்டுரை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆங்கில உதவிப் பேராசிரியர் சாமுவேல் ரூஃபஸ் எழுதியுள்ள “Dickens’ wowen – From Paragons to Vixens” என்னும் தலைப்பிலானது. டிக்கென்ஸ் தன்னுடைய இலக் கியங்களில் வெளிக்காட்டிய பெண் கதை - மாந்தர் களெல்லாம் விக்டோரியா காலத்துப் பெண் மணிகள் தாம். காதலி, குடும்பத்தலைவி, தாய் என ஒவ்வொரு நிலையிலும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று டிக்கென்ஸ் உருவமைத்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை. ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் காட்டும் இலக்கணங்களையெல்லாம் காணும் போது, நம் தமிழகத்துத் தாய்மார்களின் பண்பு நலன்களை நகலெடுத்தது போல உள்ளது. அதே போன்று, பெண்ணுக்கு இருக்கக்கூடாத தீய குணங் களைப் பெண் கதைமாந்தர்கள் மூலம் சுட்டிக் காட்டுகிறார் டிக்கென்ஸ். இவருடைய கதை மாந்தர்கள் விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்கள் எள்றாலும் அவர்கள் இன்றும் இலக்கியத்திலும் சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை யுள்ளவர்களாகவே இருக்கின்றனர் என்பதைக் கட்டுரையாளர் ரூஃபஸ் குறிப்பிடுகிறார்.

“Please Sir, I Want Some More” என்ற புகழ்பெற்ற சொற்றொடரைக் கொண்ட Oliver Twist கதையினால் பெரிதும் தாக்கத்தைப் பெற்ற ஆங்கில உதவிப் பேராசிரியர் காலெட் ஷர்மிளா எழுதிய கட்டுரை “Kids’ Kinsman” ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர் ஒரு சிறுவனின் கூற்றாக இருந்தாலும், அது சமுதாயத்தையே பிரதிபலிக்கும் கூற்று. இவ்வாறாக, குழந்தைகளுக்கான இலக்கியங்களில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் கருத்து வழங்கியவர் டிக்கென்ஸ் என்பதைப் பேசுகிறார் கட்டுரையாளர் காலெட். குழந்தைகளின் புரிதல், குழந்தைகளைப் பற்றிய பெரியவர்களின் புரிதல், குழந்தைகள் சார்ந்த உளவியல்பற்றி டிக்கென்ஸின் இலக்கியங்கள் எடுத்தியம்புவதை இக்கட்டுரை சுட்டுகிறது.

சார்லஸ் டிக்கென்ஸ் சமூக அக்கறைகொண்டு எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; மேலும் நடைமுறையிலும் களப்பணியாற்றினார். அதனைப் பற்றி “ழளை ஹஉவiடிn ளுயீடிமந டுடிரனநச” என்ற தலைப்பில் எழுதியுள்ளார் கீழக்கரை, தஸ்ஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி ஆங்கில உதவிப் பேராசிரி யரான ஜே.ஃபரிதா பானு. ஆதரவற்ற பெண்களின் மறுவாழ்வுக்காக 1847-இல் ஆன்ஜெலா பர்டெட் கோட்ஸ் துணையுடன் டிக்கென்ஸ் தோற்றுவித்த யுரானிய மறுவாழ்வு இல்லத்தைப்பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை. அவர்களுக்காக டிக்கென்ஸ் எழுதிய எழுத்து, உலகில் ஒடுக்கப்பட்டு முடக்கப்பட்டுத் தவிக்கும் எந்தவொரு பெண்ணையும் தட்டி யெழுப்பும் என்பதை ஃபரிதாவின் கட்டுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது.

“Murdering the Innocents” என்னும் கட்டுரையில், வணிக நோக்கில் செல்லும் கல்வியை விமரிசித்து சார்லஸ் டிக்கென்ஸ் இயற்றிய “Hard Times” என்னும் நாவலைப் பற்றி எழுதியுள்ளார் திரு.ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர்.

தமிழகக் காவல்துறையின் முன்னாள் இயக்கு நரான அலெக்ஸாண்டர், காக்கிச் சட்டையை அணி வதற்கு முன்பு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், சென்னை இலயோலா கல்லூரியிலும் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் இலக் கியத்தில் ஈடுபாடு காட்டி வந்த இவர், சார்லஸ் டிக்கென்ஸின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப் பட்டவர். ‘மாணவ மாணவிகளுக்கு உண்மையைத் தவிர வேறெதையும்” கற்றுக் கொடுக்க வேண்டாம். உண்மைகள்தாம் வாழ்க்கையில் அவர்களுக்கு இன்றியமையாதவை’என்ற Hard Times நாவலின் தொடக்க வரிகளை வலியுறுத்திப் பேசும் அலெக் ஸாண்டர் கிராட்கிரைண்ட் தனது மகன் (டாம்), மகளை (லூயிசா) நடத்தும் விதத்தைத் தொட்டுக் காட்டுகிறார். கிராட் கிரைண்ட் தன் வயதை யொத்த மாப்பிள்ளையை லூயிஸா திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று (வற்புறுத்தப் படுவதே தெரியாமல்) மிக நயமாக, இதமாகக் கருத்தை ஏற்றும் நிகழ்ச்சியைக் கட்டுரையாளர் விரித்துரைத்திருப்பது சிந்திக்க வைக்கும் சோகம்!

“Nicholas Nickleby” நூலுக்கான முன்னுரையில் பள்ளித் தலைமையாசிரியர்களைக் கடுமையாக விமரிசனம் செய்து எழுதினார் டிக்கென்ஸ். 1838, 1839 ஆண்டுகளில் தொடராக வெளிவந்த இந்த நாவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பள்ளித் தலைமையாசிரியர்கள் பலர் ‘சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்று டிக்கென்சுக்கு மிரட்டல் விடுக்கிற அளவுக்குச் சென்றது பிரச்சினை. ‘இந்த நிகழ்வையும் கட்டுரையாளர் எடுத்துக் காட்டியுள்ளார்.

சார்லஸ் டிக்கென்ஸின் எழுத்தில் ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையே தொடர்ந்து விரிந்து சென்ற வர்க்கப் பிரிவினை யாலும், கல்வி வணிகத்தாலும் மிகவும் பாதிப் படைந்தவர் “What the Dicken....” என்னும் கட்டுரையை எழுதியிருக்கும் சென்னை, செவாலியே டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் பீனா தாமஸ்.

தொழில்மயமாக்கத்தால், முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்படும் சமுதாய மாற்றங்களைப் புலப்படுத்தும் பௌண்டர்பை-யின் (Boudrey of Hard times) சுபாவத்தைச் சுட்டுகிறார் பீனா தாமஸ்! விக்டோரியா அரசி காலத்து இங்கிலாந்து சூழலையும், டிக்கென்ஸின் இலக்கியச் செல் நெறியையும் பேசும் இக்கட்டுரையாளர். இன்றைய நடுத்தர வர்க்கத்தின் தன்னலப் போக்கையும் இடித்துரைக்கிறார்,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறைச் செயல்பாடுகளின் மீதான தனது நோக்குநிலையை சார்லஸ் டிக்கென்ஸ் எவ்வாறு வெளிப்படுத்து கிறார் என்று விளக்குகிறது - கீழக்கரை தஸ்ஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, ஆங்கில உதவிப் பேராசிரியர் ஏ.கன்சூல் மஹிரிபா எழுதிய கட்டுரை. கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சீர்திருத்த வாதிகள் சிறை அமைப்பை எவ்வாறு அணுகினர், மறுபுறம் பகுத்தறிவார்ந்த சீர்திருத்தவாதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த விரும்பினர் என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர். டிக்கென்ஸின் தந்தையார் 1824இல் கடன் வாங்கிய வழக்கு தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டதால், மிகவும் இளம் வயதிலேயே மனம் பாதிக்கப்பட்ட டிக்கென்ஸ் சிறை எப்படி மானுடத்தைச் சிதைக்கிறது என்று அளிக்கிற விளக்கம் இக்கட்டுரையில் மேற்கோளாக இடம்பெற்றுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவம் தனது கொடு முகத்தை வெளிப்படுத்திய காலம். அத்துடன் குடியேற்றம் உலகெங்கும் வெற்றியறி குறியுடன் பரவத் தொடங்கியது. இந்தச் சூழலுக் கெதிராகக் கிளர்ந்தெழுந்த இலக்கிய மேதை களுள் ஒருவர் சார்லஸ் டிக்கென்ஸ். அவரது இலக்கியச் செல்நெறி இன்றைய இந்தியாவுக்கும் பொருந்துகிறது. எனவே டிக்கென்ஸின் இலக்கியங் களிலிருந்து நாம் கற்றறிய வேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. அதற்கான உந்துதலை ஏற்படுத்துகிறது - ‘குக்கூ’ என்னும் இந்த ஆங்கில இலக்கியக் குயில்!

Pin It