சீர்திருத்தக் கிறித்தவத்தைத் தமிழ்நாட்டில் பரப்புவதற்காக வந்த ஆங்கிலக் குருக்களில் இராபர்ட் கால்டுவெல் (1874 - 1891) முக்கியமானவர். இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian Languages - 1856) என்ற ஆங்கில நூலின் வாயிலாகத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஐரோப்பிய அறிஞர்களிடமும் சிறப்பாக அறிமுகமானவர்.

po_velsamy_450திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாறு குறித்து 1881-இல் இவர் வெளியிட்ட ஆங்கில நூல் அதன் ஆங்கில அரசின் சார்பையும் மீறி வட்டார வரலாற்று வரைவின் சிறப்பை உணர்த்தும் நூலாக இன்றளவும் விளங்குகிறது.

சமயப் பணியாளர் என்ற முறையில் இந்தி யாவின் வைதீக சமயத்தின் அடிப்படை நூல்களான வேதங்கள், இராமாயணம், பாரதம், புராணங்கள் ஆகியனவற்றைக் கற்றறிந்து, அவை குறித்த எளிமையான அறிமுக நூல் ஒன்றை ‘பரதகண்ட புராதனம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் மறைவுக்குப் பின் 1893-இல் வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பை ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்கள் தேடியெடுத்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளமை பாராட்டுதலுக்குரிய ஒன்று.

வடமொழி அறியாத தமிழ் வாசகர்களுக்கு வேத சமயம் சார்ந்த சில அடிப்படைச் செய்தி களையும் நூல்களையும் அறிமுகப்படுத்துவதால் இன்றும் இந்நூலின் தேவை அவசியமாகிறது.

“பரதகண்ட புராதனம்” நூல், நான்கு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதலாம் பாகம் நான்கு வேதங்களை அறிமுகப்படுத்துகிறது. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் முறையே இராமாயணக் காப்பியத்தையும், பாரதத்தையும் அறிமுகம் செய் கின்றன. நான்காம் பாகம் புராணங்களை அறிமுகம் செய்கிறது. கால்டுவெல்லின் விமர்சனமும் இடை யிடையே இடம்பெறுகிறது.

மந்திரம், பிரமாணம், உபநிஷத்துக்கள் என்பன குறித்துத் தொடக்கத்தில் விளக்கியுள்ளார். பின்னர் வேதங்களைக் குறித்து எழுதுகிறார்.

மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்திற்கு, ஆதியில் வேதமென்ற பெயர் கிடையாது. எஞ்சிய, இருக்கு, யசுர், சாமம் என்ற மூன்று வேதங்களில் இருக்கு வேதமே யசுர், சாமம் என்ற இருவேதங் களுக்கும் மூலமாகும். எனவே வேதம் என்னும் பெயர் இருக்கு வேதத்திற்கே பொருந்தும். இருக்கு என்றால் துதி என்று பொருள். துதிப் பாடல் களைக் கொண்டதால் இருக்கு என்ற பெயர் ஆயிற்று. யசுர் என்பது யாக வேதமாகும். இதில் இருக்கு வேதத்திலிருந்து எடுத்தவை பாடல் வடிவமாகவும், ஏனையவை உரைநடை வடிவ மாகவும் உள்ளன. சாமம் என்ற சொல் ஆறுதல் என்ற பொருளைத் தரும். இவ்வேதத்தில் வேதப் பாடல்களுக்குரிய இராகங்களையும் அதற்குரிய சட்டங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

கி.மு.1200க்கும் 800க்கும் இடைப்பட்ட காலத்தில் வேதம் உரு வாகியிருக்க வேண்டும். வேதம் ஆதியும் அந்தமும் (தொடக்கமும் முடிவும்) இல்லாதது என்ற கருத்தை பௌத்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மனி தருடைய பெயர்கள் வேதத் திலிருக்கிறதினால் மனிதர் உண்டானதற்குப் பின்பு வேத முண்டானதேயல்லாமல் அது அநாதியல்ல என்பது அவர்கள் கருத்தாகும் (பக்கம் 3). பிரம்ம தேவனால் வேதங்கள் இயற்றப்பட்டன என்பதை மறுக்கும் சான்றுகள் வேதங்களிலேயே உள்ளன (பக்கம். 4-5). ரிஷிகளால் கட்டப்பட்ட வேதப் பாடல்களை அவர்களது மரபினர் திரட்டியுள்ளனர். வேதவியாசர் என்ற சொல்லுக்கு வேதங்களைத் திரட்டினவன் என்று பொருள் (பக்கம் 5-6).

பூர்வீக இந்துக்கள் வணங்கிய தேவர்கள் யார் என்பதை ரிக்வேதம் குறிப்பிடுகிறது. வேதகால மக்கள் ‘திரிமூர்த்திகளையும் வீரனையும் வணங்காமல் வானம், அக்கினி, சூரியன், காற்று முதலான பூதங் களைத் தேவர்களென்றெண்ணி வணங்கினார்கள். மழை பெய்கிறதற்கு வானமே காரணம் என்று நம்பி யதால் அதனை இந்திரன் என்றழைத்து வணங் கினார்கள். இந்திரனது சிறப்பு மழை பெய்யச் செய்வதுதான் (பக்கம் 9).

இந்திரனுக்கு அடுத்து அக்கினி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தான். உலகத்தை உண்டாக்கிய தேவன் யார்? என்று தேடும் முயற்சியும் அக்காலத்தில் இருந்தது. மொத்தத்தில் ரிக்வேதம் குறிப்பிடும் தெய்வங்கள் பஞ்சபூதங்கள்தான். ரிக்வேதகால வழிபாட்டில் மேலோங்கியிருந்தது யாகம் செய்வது தான். யாகத்தில் மிருகபலியும் சில நேரங்களில் மனித உயிர்ப்பலியும் கொடுத்தனர்.

உணவு, உடல்நலம், செல்வம், மக்கட்பேறு, ஆடு மாடுகள், குதிரைகளின் பெருக்கம், பகைவரிடமிருந்து பாதுகாக்கப்படல், பகைவரை வெற்றி கொள்ளல் என்பனவே வேதகால மக்களின் வேண்டுதல்களாக அமைந்தன. பாவங்களில் இருந்து விடுபடல், ஆன்ம நன்மை வேண்டுதல் தொடர்பான வேண்டுதல்கள் மிகவும் குறைவாகவே வேதங்களில் இடம்பெற்று உள்ளன. (பக்கம் 18-19).

“இருக்கு வேதத்திலுள்ள ஆயிரத்து இருபத் தெட்டுப் பாட்டுக்களிலும் சிவனென்கிற பெயர் இல்லை. பார்வதி, உமையவள், துர்க்கை, காளி முதலான பேர்களுடையவளும் அப் போதில்லை. அப்பொழுது பிள்ளையாரும், சுப்பிரமணியனும் இல்லை. வீரபத்திரனும் வயிரவனும் ஐயனாரும் அப்பொழுது இல்லை. அக்காலத்திலே லிங்கமும் தெரியாது. விபூதியும் ருத்திராட்சமும் தெரியாது... இராமனும் கிருஷ்ணனும் இல்லை. இலட்சுமியும் இல்லை. அனுமானும் இல்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப்பொழுது தெரியாது; கயிலாசமும் வைகுண்டமும் அப்போதில்லை (பக்கம் 19).

மாட்டிறைச்சி உண்ணும் வழக்கமிருந்தது (பக்கம் 20). உடன்கட்டையேறும் வழக்கமில்லை. சூரியனுக் குரிய பன்னிரண்டு பணியாளர்களில் ஒருவனாகவே விஷ்ணு இருந்துள்ளான். காற்றுகளுக்குத் தகப்ப னாகவே ருத்திரன் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளான். பசுபதி, சடையன் என்பன இவனது பிறபெயர்கள். இன்று இருக்கும் உயரிய நிலையில் விஷ்ணுவும், சிவனும் ரிக்வேதத்தில் இடம்பெற வில்லை.

பிராமணர் என்னும் பெயர் சாதிப்பெயராக இல்லாமல் தொழில் பெயராக இருந்தது. தீண்டாமை என்ற கருத்தியல் இல்லை.

* * *

பஞ்சபூத வணக்கத்தைக் குறிப்பிடும் ரிக் வேத கால இந்து மதத்திற்கு மாறாக வீரர்களை வணங்கும் வழக்கத்தை இராமாயணமும் பாரதமும் குறிப்பிடு கின்றன. சீதையும் பலராமனும் உழுதொழிலுடன் தொடர்புடையவர்கள்.

வேதகாலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வேள்விகள் இராமாயண காலத்தில் தொடர்ந் தாலும் தவம் முக்கியமானதாக மாறியது.

* * *

பழங்கதைகளின் தொகுப்பே பாரதம். வேத கால மதக்கொள்கையில் இருந்து இது மாறுபட்டு உள்ளது. பாரதத்தில் இடம்பெறும் கிருஷ்ணன், விஷ்ணுவின் அவதாரமாக எண்ணப்பட்டாலும், அவன் இறந்த பின்பு வைகுண்டத்துக்குப் போக வில்லை. வீரர்களும் தேவர்களும் வாழும் சுவர்க்கத்துக்கே போனான். பாரதத்தில் எழுதப்பட்ட பகவத் கீதை பின்னால் எழுதிச் சேர்க்கப்பட்டது. தன் சொந்த உறவுகள் மடிவதைப் பற்றிக் கிருஷ்ணன் கவலைப்படவில்லை. ‘ஆத்மாவுக்கு நோயும் இறப்பு மில்லை. அது வதைக்கப்படவும்; வதைக்கவும் மாட்டாது. அதற்கு மாறுதலில்லை. அதனால் என்ன நடந்தாலும் ஞானமுள்ளவர்கள் கவலைப்படாமல் உயிரோடிருக்கிறவர்களைக் குறித்தாவது, இறந்து போனவர்களைக் குறித்தாவது, துக்கிக்க மாட்டார்கள்’ என்று கூறி, அர்ச்சுனன் உள்ளத்தில் தோன்றிய இரக்க உணர்வைப் போக்கினான் (பக்கம் 95).

கிருஷ்ணனின் இப்போதனையை ஏற்றுக் கொண்டால் பொய், களவு, பரத்தமை, கொலை என்பன எல்லாம் உடலுக்கே உரியன. எனவே, இவை குறித்து ஆத்மா கலங்கவே வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வரநேரிடும். எனவே ‘கிருஷ்ணன் போதித்த கொடுமையான ஞானத்தைப் பார்க்கிலும் அர்ச்சுன னிடத்தில் காணப்பட்ட மனுஷீக இரக்கம் நல்லது’ (பக்கம் 95-96).

* * *

புராணங்கள் உருவான காலத்தில் தவம், தீர்த்த யாத்திரை என்ற இரண்டும் இந்து மதத்தில் மேலோங்கியிருந்தன. மொத்தம் பதினெட்டு புராணங்கள் உருவாயின (பக்கம் 103-104). வாயு புராணம் (பக்கம் 123-129), அருணாசலபுராணம் (129-133), கந்தபுராணம் (135) என்ற மூன்று புராணங் களையும் நுட்பமாக ஆராயும் போது (பக்கம் 133-136) பின்வரும் உண்மைகள் புலனாகின்றன.

அவிப்பலி பெறும் உரிமையற்றவனாக வேதத்தில் இடம்பெற்றிருந்த சிவனை முழு முதற் கடவுளாக மாற்ற பிற்காலச் சிவபக்தர்கள் எண்ணியுள்ளனர். இதற்குத் தடையாகப் பின்வரும் வேத உண்மைகள் இருந்தன (பக்கம் 136).

i.              வேதங்களில் சிவன் தெய்வமாகக் காட்டப்பட வில்லை.

ii.             வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களில் ‘சிவயாகம்’ இல்லை.

iii.            சிவனைத் துதிக்கும் வேத மந்திரங்கள் எவையும் இல்லை.

iv.           இந்திரன், அக்கினி, விஷ்ணு முதலான தேவர்களுக்கென்று நடத்தப்பட்ட யாகங்களில் சிவனுக்கு அவிப்பலியில்லை.

இத்தடைகளைப் போக்கும் வகையில் சிவனுக்கு மெஞ்ஞானமாகிய யாகமுண்டு’, என்றும், வீரபத்திரன் என்பவனைப் படைத்து அவன் வாயிலாகப் பலவந்தமாக அவிப்பலியைப் பெற்றான் என்றும் எழுதி வைத்தார்கள்.

சைவ வைணவ சமயங்களுக்கிடையிலான மோதலில் வைணவத்தை எதிர்கொள்ளும் வழிமுறை களில் ஒன்றாகப் பூதவணக்கத்தைச் சிவபக்தர்கள் தம் உட்சமயமாக்கிக் கொண்டார்கள். ஆரிய பரம் பரையினர் அல்லாதார் மேற்கொண்டிருந்த பூத வணக்கத்தையே தட்சனின் யாகத்தை அழிக்கும் வீரபத்திரன் அடையாளப்படுத்துகிறான். சிவனை விட விஷ்ணு பெரியவன் என்று தட்சன் கருதியதால் பூதகணமான வீரபத்திரனால் அவன் அழிக்கப் பட்டான் (பக்கம் 135-136).

சிவன் குறித்து, கால்டுவெல் குறிப்பிடும் செய்திகளைத் தமிழ்ச் சமய வரலாற்றுடன் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்ய இடமுள்ளது. சங்க காலத்தில் அய்ந்திணைகளுக்கும் உரிய தெய்வங்களும், நடு கற்களும், அணங்கு என்ற ஆவி வடிவ தெய்வமும் மட்டுமே சிறப்பிடம் பெற்றிருந்தன. சிவன் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தாலும் அவன் பெருந் தெய்வமாகச் சுட்டப்படவில்லை.

* * *

இந்திய நாட்டின் தொன்மை நூல்களான வேதம், இராமாயணம், பாரதம், கீதை, புராணங்கள் ஆகியன குறித்து அறிமுக நூலாகவும், ஆய்வு நூலாகவும் கால்டுவெல் எழுதிய இந்நூல் அமைந் துள்ளது.

இந்நூலைப் படித்து முடித்த பின் காலந்தோறும் இந்து சமயத்தில் உருவான கடவுளர்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்த புரிதல் வாசகனின் உள்ளத்தில் உருவாகும். இந்து மதத்தில் இன்று இருப்பது போன்ற கடவுளர்களும், வழிபாட்டு முறைகளும் தொடக்கத்தில் இல்லை என்பது கால்டுவெல்லின் கருத்தாகும். இது தொடர்பாக அவர் கூறும் செய்தியின் சாரம் வருமாறு:

1.            வேத காலம் : பஞ்சபூத வணக்கம் (பக்கம் 9)

2.            இராமாயண காலம் : வீரர் வணக்கம் (பக்கம் 28)

3.            பாரத காலம் : வீரர் வணக்கம் (பக்கம் 28)

4.            புராண காலம் : பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற தெய்வங்கள் (பக்கம் 97)

“வேதகாலத்துக்குரிய ஆசாரம் யாகமே. இராமாயண காலத்துக்குரிய ஆசாரம் தவமே. பாரத காலத்துக் குரிய ஆசாரம் தீர்த்த யாத்திரையே, புராண காலத் திற்குரிய ஆசாரம் கோயில் பூஜையே (பக்கம் 87-88).

* * *

கால்டுவெல்லின் இந்நூல் அறிமுக நூலாகவும், ஆய்வு நூலாகவும் அமைந்துள்ளது. மிக எளிமையான முறையில் நுட்பமான பல செய்திகளைக் கூறிய கால்டுவெல் வடமொழி ஸ்மிருதி நூல் களைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சமயப் பணியாளராக இருந்தமையால் அது குறித்து அவர் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் அம்பேத்கர் ஸ்மிருதிகளைக் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். சமயப் பணியாளருக்கும் சமூகப் புரட்சியாளருக்கும் இடையிலான வேறுபாடாக இதைக் கொள்ள முடியும்.

பரத கண்ட புராதனம்

வடமொழி வேதங்கள் மற்றும் உபநிடத்துகள் குறித்து அறியும் ஆவலில் அய்ரோப்பிய ஆய்வாளர்கள் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். இதற்கு இரண்டு முறைகள் (1) தொன்மை வேறுபாடுகள் (2) சமயப் பரப்பாளர் நிறை குறை விமர்சனம் உள்வாங்கல் மொழிபெயர்ப்பு.

Pin It