“உன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய வேண்டி யதன் அவசியத்தை எடுத்தியம்புவதுதான் ஜெயரதி அகஸ்டின் எழுதியுள்ள இந்த “எண்ணங்கள் ஓய்வதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு.

“தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றைத் தான் ‘சக்கரம் சுழலும்’ என்ற கதையில் சுந்தரின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். தன் பிள்ளை முட்டிப் போட்டுத் தவழும் நிலையில் கூட அவன் கால்கள் நோகக் கூடாது என்று எண்ணு பவர்கள்தான் பெற்றோர். அத்தகைய நல்ல உள்ளங்கள் முடியாத வயதில் சக்கர நாற்காலியில் வலம் வந்தால் தன்னுடைய பளிங்குத் தரை வீணாகி விடும் என்ற மனைவி சொல்லையே தெய்வ வாக்கு என எண்ணி பெற்றவர்களை உதாசீனப்படுத்திய சுந்தருக்குக் காலம் தந்த தீர்ப்பு உண்மையிலேயே உகந்தது.

மனிதனின் ஆசை சிறியதுதான் என்றாலும் அதனை அடைய அவன் எத்தனை ஆண்டுகள் காத்திருந்திருக்கிறான் என்று சுட்டிக்காட்டி, அந்த ஆசையை சிறிது நேரங்கூட அனுபவிக்காமல் போ வதற்கு என்னதான் காரணம் என்பதை விளக்கு கிறது “ராமு தந்த பொம்மை.”

பெண்களும் சரி ஆண்களும் சரி, வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கி தங்களின் வாழ்க் கையைப் பாழாக்கிக் கொள்கின்றனர். தோற்றம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட முக்கியம் அவர்களின் பண்பு. அதை அறிந்தவர்கள்தாம் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்பதை விளக்குகிறது “ஜோடிப் பொருத்தம்” என்னும் கதை.

“இன்று சனிக்கிழமை” என்ற கதையில் தாய் இறக்கும் தருவாயில் இருப்பதைப் பார்த்துக் குழுறும் மகள் தாயின் கடைசி விருப்பதை நிறைவேற்ற தன் பிள்ளைகளை அழைக்க, அந்தப் பிஞ்சு உள்ளம் நடப்பது என்னவென்று அறியாமல் பாட்டியை இரண்டு நாட்கள் கழித்து இறக்கச் சொல் அப்போது தான் எங்களுக்கு விடுமுறை என்று கூறி செல்கிற நிகழ்வின் மூலம் சமூகத்தின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

‘இறப்பு என்பது தானாக வரும்வரை நாமாகத் தேடிச் செல்வது மடத்தனம்!’ என்ற கருத்தை ஒரு முதியவரின் வாழ்க்கை முறையைக் கொண்டு ஆழ மாகப் பதிய வைக்கிறது ‘உயிர் ஊசலாடுகிறது’ என்ற சிறுகதை.

ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து நல்ல வளமான எதிர்காலத்தைக் கனவு காணும் கண்ணன் என்ற சிறுவனின் நோக்கையும், வசதியடைந்த தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த ரவியின் பிடி வாதமான போக்கையும் வெவ்வேறு கதைகளில் ‘அகல விரிந்த கண்கள்’, ‘பைவ் ஸ்டார் போராட்டம்’ என்கிற சிறுகதைகளில் வெளிப்படுத்தி மொத்த சமுதாயத்தினரின் ஏற்றத் தாழ்வுகளையும் அதில் அதிக்கமான அதிகாரத்தையும் இல்லாதவனின் ஏக்க மான மனிநிலையையும் ஆழமாகவும் அழகாகவும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

இதே போன்றதொரு கருத்தைத்தான் ‘இன்பச் சுற்றுலா’, ‘நேற்று இன்று’ என்ற இவ்விருச் சிறு கதைகள் வாயிலாகவும் விளக்கியுள்ளார். தன்னுடைய ஒருநாள் மகிழ்ச்சிக்காக தன் தந்தை பட்ட துயர மான சம்பவத்தை விளக்கும் மாணவியைப் பற்றி ஒருபுறமும், கல்லூரியில் படிப்பதே தங்களுடைய இளமைக் காலத்தை மகிழ்ச்சியாய்க் கழிக்கத்தான் என்ற நிலையில் இருக்கும் மாணவிகளைப் பற்றி ஒருபுறமுமாகவும் நுட்பமாகவும் திறமையாகவும் விளக்குகிறார்.

‘சமாதானம் எங்கே’, ‘தியாகச் சுடர்’ ஆகிய சிறுகதைகளில் இலங்கைச் சூழலை மையமாக வைத்துள்ளார். கலவரத்திலிருந்து தன் பிள்ளை களைக் காப்பாற்ற துடிக்கும் இரு தாய்களின் மன நிலையையும் அவர்களின் பரிதவிப்புகளையும் மிக நேர்த்தியாக வெளிக் கொணர்கிறார். முதலாவது கதையில் வரும் குழந்தை தன்னைக் காப்பாற்ற நினைக்கும் தன் தாயிடம் தன் தோழியையும் தன்னுடன் அழைத்துப்போக அடம்பிடிக்க - தாயோ அவர் சிங்களவர் என்று கூற - அதற்கு அறியாத அந்தப் பிஞ்சு, ‘ஏன், சிங்களவர்களுக்கு மட்டும் குண்டடி படாதா?’ என்று கேட்க... வாசகர்களின் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி வைக்கிறார் ஆசிரியர்.

புகுந்த வீட்டில் கோபித்துக்கொண்டு அங் கிருந்து மகள் வந்தால் அவளுடன் சேர்ந்து சம்பந்தி வீட்டாரைக் குறை சொல்லி மகளின் வாழ்க்கையைப் பாழாக்கும் தாய்மார்களுக்கு நல்ல அறிவுரை ‘கடன்’ என்னும் கதை.

ஐந்தறிவு ஜீவராசியிடம் காட்டும் கருணையைக் கூட தன் மனைவியிடம் காட்டாத ஒரு கணவரின் செயலையும் தன்னுடைய குறிக்கோளான படிப்பைப் படிக்க முடியாமல் போனதற்காக தவறான முடிவை எடுக்கும் சதா அதே போன்றதொரு தவறான முடிவை எடுத்த தன் அண்ணனால் தன் குடும்பம் படும் அவல நிலையை விளக்கும் வின்னியையும் வைத்து “மனிதம்” என்ற கதை பயணிக்கிறது.

‘வெந்து தணிந்தது’ என்னும் கதையில் குழந்தை பாக்கியத்தை அழிக்க நினைக்கும் தன் மருமகளைத் திருத்தும் மாமியார் அந்த மருமகளின் கண்களுக்குத் தாயாகவே தோன்றுகிறாள்.

‘அறுபதும் இருபதும்’ என்ற கதையில் தங்களின் இளமைக் காலத்தில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியைத் தொலைத்து அதை அறுபதில் அடைய ஆசைப்படும் நிலையில் “சந்தர்ப்பம் கிடைத்தும் முடியாமற் தவிக்கும் போது, “காலத்தே பயிர் செய்” என்ற முதுமொழி நினைவிற்கு வருகிறது.

வெளிநாட்டினரின் நாகரிகமான வாழ்க்கைச் சூழ்நிலையைப் பார்த்து நமக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு நிர்மலாவின் வாழ்க்கைச் சம்பவம் ஒரு சரியான பாடம்.

இந்நூலாசிரியர் பெரும்பாலான கதைகளைக் கல்லூரியை மையமாக வைத்தே கூறியிருந்தாலும், ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனையும் தனிமனிதர் பண்பு நலன்களையும் வலியுறுத்துகிறார். இந்நூலை நியூ செஞ்சுரி நிறுவனம் அழகாகவும் சிறப்பாகவும் அச்சிட்டு வழங்கியிருக்கிறது.

எண்ணங்கள் ஓய்வதில்லை

ஜெயரதி அகஸ்டின்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.70.00

Pin It