குடுகுடுப்பையில் ஒளிந்திருக்கும் நல்ல காலத்தை சகலருக்கும் பங்கிடும் சாமக்கோடாங்கியென வந்து விழுகிறது செல்வகுமாரனின் குரல். வெள்ளரிப் பிஞ்சு விற்கும் சிறுவனுக்காய் இரங்கும் மனசும், பற்றியெரியும் நகரம் கண்டு பதறும் மனசும் எல்லாக் கவிதைகளிலும் இறைந்து கிடக்கின்றன. ஏதுமற்றவனின் கண்களோடு வாசிக்கும் எவர்க்கும் எல்லாம் கிடைக்கும்- எந்தக் கவிதையிலிருந்தும்.

பூவரச மரத்தின் குளிர்ச்சியில் தரையில் படுத் திருக்கும் அம்மாவின் கண்டாங்கிச் சேலை பற்றிய கவிதையை வாசிக்கையில் சடாரென மனதில் பரவுகிறது - அம்மாவின் அடிவயிற்றுச் சூடு. கீற்றுகளாலான அந்த வீடும், பக்கத்து வீட்டுச் சித்தியும் ஏதோ ஒரு ஓவியமாய் மனதில் காட்சியளிக்கின்றனர். எளிய வார்த்தைகள்தான் என்றாலும்... எவ்வளவு நிம்மதி பரவுகிறது-கவிதையை வாசிக்கையில். யோசித்துப் பார்க்கையில் ‘இதுதானே வாழ்வு, இப்படி வாழத்தானே இவ்வளவும்...’ என்பன வெல்லாம் மனதில் தோன்றி ஏங்க வைக்கின்ற வரிகள்.

நொண்டங்காய்களை அரைத்துத் தின்னத் தரும் அக்கா, பொரிகடலையும் சீனியும் கலந்து அரைத்து ‘இந்தாடா ஆர்லிக்ஸ்!’ என்று தந்த என் அக்காவை நினைவூட்டினாள். எல்லா அக்காமார் களும் ஒன்று போல்தான் இருப்பார்கள் போல!

கொடுங்காட்டின் இருள் பிரியப் பாடிவரும் இராப்பாடிகளை இழந்தது நம் காலத்திய பெரும் சாபக்கேடு. சுடலையும், மாடத்தியும், முனியாண்டியும், கருப்புவும் நடமாடாத நம் நகரத்து வீதிகள் நாச மாய்ப் போகட்டும். செல்கதிர் வீச்சுகளில் சிக்கிச் சீரழிந்து போன நம் பேய்களை மீட்டெடுக்காமல் நலம் பெறப் போவதில்லை நம் காலம்.

வார்த்தைகளின் இடையே வரலாறுகளை மௌனமாய் வைக்கும் கவிதையென நிறைய கவிதைகள் ‘நான் ஒரு குழந்தை, பதுங்கு குழியில் பிறந்தேன்’ என்பதைப் போன்று.

‘அலையில் வலை விரித்தோம்

நீயோ அலையையே வலையாய் விரித்தாய்’

கடல் எனத் தலைப்பிட்ட இந்தக் கவிதையில் தலைப்பைக் கழித்துப் பார்த்தால் காதலும், காமமும் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடும் என விரிகிறது கவிதை.

கடேசி வரி கவிதையை இப்போது வாசிக் கையில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் பிழைப்புதான் மனதில் தோன்றுகிறது. தீப்பொறி கண்டாலே அன்றோடு தீர்ந்து போகும் வாழ்வு தான் கடேசி வரி.

மாடு கழுவிய

குளத்து நீரை

வாரிக் குடிக்கும் - விவசாயி

ஆலயத்து விளக்கில்

நெய் ஊற்றும் - கரங்கள்

கொட்டிய குப்பைகளில்

வாழ்வைத் தேடுகிறவர்கள்.

என்ற வரிகளில் தென்படும் செல்வகுமாரன் தான் யார் பக்கம் என்பதையும் பதிவு செய்திருக்கும் வரிகள் இவை. வாசிக்கும் எவரையும் தம் பக்கம் இழுக்கும் வலுவுள்ள கவிதைகள்.

மழலையின் பிறப்புக் காண

தவம் கிடக்கிறது தமிழ்

புதிதாய்ப் பிறப்பதற்காய்...

இனிமையான வரிகள். மனசில் நிறைந்த கவிதை.

ஈரம் கசியும் வரிகள், பாரம் சுமக்கும் வரிகள், புன்னகைக்கும் வரிகள் என வாசிக்க எளிதாய் உள்ளிழுக்கின்றன கவிதைகள்.

அரசியல்வாதி, அட்வகேட், மதவாதி, சாதிக் காரன்பற்றிப் பேசும் கவிதையில் அந்த வரிசையில் அம்மாவும் வருவது நெருடலாக உள்ளது. அதே கவிதையில் வரும் ‘விபச்சாரி’ என்ற சொல்லும், அதற்கான புரிதலும் கூட சரிதானா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் சூழலில் நீட்சியாய் எதை இழந்து, எதைப் பெறப்போகிறோம் என்ற கேள்வி. சிரிப்பின் வேராய்க் கசப்பும், தழுவலின் ஆதியாய் சந்தேகமும் இருக்க - கோபமும், வன்மமும் கொப்பளிக்க - எவரையும் நம்பாமல் எல்லோருடனும் வாழ வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில்தான் செல்வ குமாரனின் கவிதைகள் நாம் இழந்தவைகளை மீட்டெடுத்து ஆசுவாசப்படுத்துகின்றன... அம்மாவின் மடியென.

பூவரசம்பூ - மஞ்சளிலிருந்து சிகப்பாக

கவிதைகள்

சு.செல்வகுமாரன்

வெளியீடு : காவ்யா

விலை : ரூ. 90.00

Pin It