இந்தியா வளமான நாடு, ஆனால் இந்திய மக்களில் பெரும்பாலோர் பஞ்சைப்பராரிகள் என்று உலக நாடுகள் எல்லாம் நம்மைப் பார்த்துக் கேலிபேசும். இதேபோன்று தமிழ்நாடும், தமிழ் மொழியும் வளம் நிறைந்த கலாச்சாரப் பெருமை நிறைந்ததான வரலாற்றைப் பெற்றவை. ஆனால் பெருவாரியான தமிழர்கள் இதனை அறியாத தற்குறிகள். தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதத்தை ஒரு ஹீல்ஸ் பாதிரியார் சொல்ல வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை விளக்க ஒரு கால்டுவெல் பாதிரியார் வேண்டும். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைச் சுட்டிக்காட்ட ஒரு போப் பாதிரியாரால் தான் முடியும். இந்திய மொழிகள் எவற்றுக்கும் இல்லாத எழுத்து வரலாறு உடைய தமிழ் மொழியைப் பேசும் பெருவாரியான தமிழர்கள் எழுத்தறியாத தற்குறிகள். ஏன் இந்த அவல நிலை?

தமிழ் மக்கள் சாதிகளாகப் பிளவுபடாத காலம் ஒன்று இருந்தது. பழங்குடி இனங்களாக இருந்த தமிழ் மக்கள் சமண சமயத்தாலும், பௌத்த சமயத்தாலும் தமிழ் இனமாக ஒருங்கிணைக்கப் பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த இன ஒருங்கிணைப்பின் கலாச்சார வெளிப்பாடுகள்தான் சங்க இலக்கியங்களும் நீதி நூல்களும் காப்பியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும் ஆகும். தமிழர்களாக ஒருங் கிணைந்த இந்த மக்கள் தங்கள் மொழியை இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று செழுமைப்படுத்தினர். பொருளாதார நிலையிலும் பல நாடுகளுடன் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டினர். இதனால் இந்தியாவில் எந்தப் பகுதி களிலும் இல்லாத பெருநகரங்கள் தமிழ் நாட்டில் உருவாயின. அவைதான் இரவிலும் பகலிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்த காவிரிப்பூம் பட்டினம், மதுரை, உறையூர் போன்றவை. இத்தகைய உன்னதமான வளர்ச்சி நிலைகள் தொடர்ந்து பெருகாமல் வீழ்ச்சி அடைந்தது எப்படி என்பது நம்முன் உள்ள கேள்வி.

இந்தக் கேள்விக்கு நேரான பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் இத்தகைய வீழ்ச்சியைத் தமிழ்ச்சமூகம் அடையத் தொடங்கிய காலத்தில் பௌத்த சமயமும் சமணசமயமும் வீழ்ச்சி அடைந்து இன்று எல்லோரும் சொல்கின்ற பக்தி இயக்கம் என்ற வைதீக சமயம் வளர்ச்சி பெற்றதைக் காண்கிறோம். பார்ப்பனர்களுடன் இணைந்து வரலாற்றுக் காலம் முழுமையும் வைதீக சமயத்தை வளர்த்து வந்த உயர்சாதித் தமிழ்ச் சூத்திரர்களாகிய தமிழ் அறிஞர்கள் என்போர் இதனை ஒத்துக் கொள்வதில்லை. களப்பிரர்கள் என்ற வந்தேறிகள் தான் இந்த அழிவைச் செய்தவர்கள் என்பார்கள். இந்தக் கூற்றுக்கள் எவ்வளவு அபத்தமும், பொய்யும் நிறைந்தவை என்பதை என்னுடைய சில கட்டுரை களில் எடுத்துக் காட்டி விளக்கி உள்ளேன். தமிழ் நாடு வைதீகமான காலத்தில் தான் தமிழிசை என்பது மறக்கப்பட்டுப் போனது. இதற்கான குறிப்பிடத் தகுந்த காரணம் தமிழ் இனமாக ஒருங்கிணைந்த தமிழர்களின் குலங்கள் சாதிகளாகப் பிளவுண்டு போனதுதான். சாதிகளாகப் பிளவுண்ட தமிழ் மக்களில் இசைவாணர்களாகச் செழிப்பற்றிருந்த பாணர்களும் பாடினிகளும் கீழ்ச்சாதியினர் ஆக்கப் பட்டனர்.

“பிற்காலத்தில் ஒரு வீழ்ச்சி, இதனைத்தான் ‘களேபர காலம்’ என்று சொல்வது வழக்கம். கையில் யாழ் ஏந்திப் பண்ணைக் காத்த பாணர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டார்கள். இந்த அநியாயமே வீழ்ச்சிக்குக் காரணம். இதற்குத் தேவாரம், பிரபந்தம் போன்றவையே சான்று. கலையின் பாதுகாவலர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள். யாழும் தீண்டத்தகாததாக ஆக்கப் பட்டது. இதனை மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. இசைக் கருவியும் அதன் காவலரும் தாழ்த்தப்பட்டுவிட்டால் கலை எப்படி வளரும்?”1 என்று டாக்டர் மு. வரதராசனார் கூறுகிறார்.

இந்த உயர்சாதித் தமிழ்ச்சூத்திரர்கள் தங்கள் உடைய சாதி வெறியின் உச்சத்தினால் தங்களுக்குப் பார்ப்பனர்களைப் போன்ற மதத் தலைமை பெறு வதற்காக இயற்றப்பட்ட இசைத்தமிழ்ப் பாடல் களாகிய தேவாரப் பாடல்களுக்கான ‘பண்’ களையே மறந்துவிட்டனர். பின்னர் சோழர்கள் காலத்தில் மீண்டும் தங்களுடைய தேவை கருதிப் ‘பண்’களைத் தேடினர். தேடியது கிடைக்காமல் போனதால் தீண்டத்தகாதவர் என்று தங்களால் தள்ளிவிடப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு அம்மையாரைத் தேடிப் பிடித்து மீண்டும் பண் அமைத்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி. இப்படி மீள அமைக்கப்பட்ட ‘பண்’ முறைகளையும் அடுத்து வந்த தலைமுறை மறந்து விட்டது என்பது தமிழ்பேசும் சூத்திர உயர்சாதி மனோபாவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம். இந்த உயர்சாதித் தமிழர்கள் ஒரு தேவை ஏற்பட்டால் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்பார்கள். அவர்கள் தேவை நிறைவேறிவிட்டால் ‘தலையினின்று இழிந்த மயிரினும்’ கீழாகக் கருதுவர். எடுத்துக்காட்டாக இன்று சங்க இலக்கியங் களையும் காப்பியங்களையும் தமிழனின் புகழ் நிறுவும் சொத்துக்கள் என்கின்றனர். ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்களின் முன்னோர்களில் ஒருவரான ‘இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகர்’ கூறுவதைப் பாருங்கள்.

“மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய சிற்றம்பலம் உடையார் (சிதம்பரம் நடராசர்) அவர் (மாணிக்கவாசகர்) வாக்கில் கலந்து இரந்து அருமைத் திருக்கையால் (திருவாசகத்தை) எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள் மாக்கதை (பெருங் கதை) முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர்..... நன்னூல், சின்னூல் (நேமிநாதம்), அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு... முதலிய இலக்கியங் களையும் ஒருபொருளாக எண்ணி வாழ்நாள் வீணாளாகக் கழிப்பர். அவர் இவைகள் இருக்கவே (தேவாரம், திருவாகசம்) அவைகளை (சங்க இலக்கியம், காப்பியங்கள்) விரும்புதல் என்னெனின் பால் கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அந்தப் பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல அவரது இயற்கை என்க”2

இந்த தேசிகர்தான் ஐந்தெழுத்தால் ஆன ஒரு மொழி என்று தமிழை இழிவுபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் எல்லாம் பார்ப்பனர் களுடன் இணைந்து, அவர்களைக் குருவாகக் கொண்டு மனுநீதியின் அடிப்படையில் பெரு வாரியான தமிழ்ச்சாதியினரை ஆட்சி அதிகாரத் தாலும் பொருளாதார நிலையிலும் சுரண்டி வந்தவர்கள் உயர்சாதி உயர்வர்க்கச் சூத்திரத் தமிழர்கள் என்பது வரலாறு கூறும் உண்மை3 இத்தகையவர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பார்ப்பனர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். ஆங்கில ஆட்சியாளர் களுடன் தங்களை இணைத்துக்கொண்டனர். சடங்கின் அடிப்படையிலான வாரிசுகளின் ஆட்சி என்பது தேர்தலின் அடிப்படையிலான வாரிசு களின் ஆட்சியாக மாறிவிட்டதே இதற்குக் காரண மாகும். அரசர்கள், ஜமீன்தார்கள் ஆட்சிக்குச் சடங்குகளும் பார்ப்பனர்களும் தவிர்க்க முடியாத தேவை. தேர்தல் வழி ஆட்சியாளர்கள் ஆவதற்கு ஊடகங்களும் பிரச்சார உத்திகளும்தான் தேவை. அத்தகைய உத்திகள் என்பன இந்தியா முழுமையும் ஒன்றுபோல அமையவில்லை. ஒரு இடத்தில் மதவெறி ஊட்டுவது வெற்றி தரும், பிறிதோர் இடத்தில் இனவெறி பயன்தரும். தமிழகத்தில் மொழிவெறி என்பது வெற்றியைத்தரும் உத்தி யாகிறது. இன்றைய நிலையில் அந்த மொழிச் செயல்பாட்டில் உள்ளார்ந்திருந்த சாதி ஆதிக்கம் தன்னை வெளிப்படையாகவே காட்டிக் கொள் வதை நாம் பார்க்கிறோம். அந்த மொழிச் செயல் பாட்டின் ஒரு அங்கமாகத் தமிழிசையும் கையாளப் பெற்றது.

இத்தகைய செயல்பாடுகளைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டுமானால் இந்த உன்னதமான செயல்களைத் தடுக்கும் பகைவர்கள் சிலரை உருவாக்க வேண்டும். அந்தப் பகையாளி களாக அதற்கு முன்நிமிடம்வரை இவர்களுடைய குருக்களாகவும் கூட்டாளிகளாகவும் இருந்த பார்ப் பனர்களும் இந்தச் சூத்திர உயர்சாதியினருக்குச் சடங்குகளின் வழியாக மேலாண்மையும் ஏற்பும் பெற உதவிய சமஸ்கிருத மொழியும் உள்ளாக்கப் பட்டன. இத்தகைய ‘உள்குத்து’ வேலைகளைப் புரிந்துகொள்ளாமல் உண்மைகளைப் பேசிய சிறந்த தமிழறிஞர்கள் கூடப் பொது மேடைகளில் இழிவுபடுத்தப்பட்டனர். அத்தகைய இழிவுக் குள்ளாக்கப்பட்டவர்களில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும்4 ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உயர்சாதி உயர்வர்க்கத் தமிழ் பேசும் சாதியினர் தமிழ் மொழியை வளர்ப்பதற்காகப் பேசுவதற்கு ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் பாகவே மேனாட்டு கிறித்தவப் பாதிரியார்களும், எல்லீஸ் போன்ற ஆங்கிலேயர்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து விட்டனர். 1742இல் 9000 சொற்கள் கொண்ட தமிழ்இலத்தீன் அகராதி, 1744இல் தமிழ்-பிரென்ச் அகராதி, போர்த்துகீசியஇலத்தீன் -தமிழ் அகராதி போன்றவற்றை வீரமாமுனிவர் என்ற பெஸ்கி பாதிரியார் வெளியிட்டுவிட்டார். முதல் தமிழ்-ஆங்கில அகராதியை 1779-இல்தான் சான்பிலிப் பெப்ரீசியஸ், ஜான் கிறித்தியான் பெரெய்தாப்டும் வெளியிட்டனர். தொடர்ந்து இராட்லர் (1830) வின்ஸ்லோ (1862) போன்றவர்களின் புகழ்பெற்ற தமிழ்-ஆங்கில அகராதிகள் வெளியிடப்பட்டன.

எல்லீசின் உருவாக்கமான புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி என்ற சென்னை கல்விச் சங்கத்தில் பணியாற்றிய அப்புமுத்துசாமிப்பிள்ளை என்ற கிறித்துவர்தான் முதன் முதலாகத் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டும் பணிக்காக 1816-இல் தமிழ்நாடு முழுமையும் கல்லூரியால் அனுப்பப் பட்டவர்.5 இந்தக் கல்லூரியில் பணியாற்றிய சரவணப்பெருமாள் ஐயர், துறுபாதிரியாருடன் இணைந்து திருக்குறள் பரிமேலழகர் உரையை முதன்முதலாக அச்சிடுகின்றனர். தொல்காப்பி யத்தை 1858 முழுமையாக அச்சிட்டு வெளிப் படுத்திய சாமுவேல் பிள்ளை ஒரு கிறித்தவர். யாழ்ப் பாணம் ஆறுமுக நாவலர் பாதிரிமார்களுக்கு உதவியாகப் பைபிள் மொழிபெயர்ப்பிலும், பைபிள் பதிப்பிலும் ஈடுபட்ட அனுபவம்தான் பிற்காலத்தில் அவரைப் புகழ்பெற்ற பதிப்பாசிரியர் என்ற நிலைக்கு உயர்த்தியது. சி.வை. தாமோதரம் பிள்ளையும் கொஞ்சகாலம் கிறித்தவராக வாழ்ந்தவர் தான். தமிழ்ப்புலவர் வரலாற்றை முதன்முதலாக எழுதிய சைமன் காசிச்செட்டி (1859) இவருடைய ஆங்கில நூலை மேலும் விரிவாக்கித் தமிழில் ‘பாவலர் சரித்திர தீபகம்’ (1886) என்று வெளியிட்ட அ.சதாசிவம் பிள்ளை என்ற து.சு. அர்னால்டு ஆகிய இருவரும் கிறித்தவர்கள் என்பது கருதத் தக்கது.

19ஆம் நூற்றாண்டு முழுமையும் தமிழ்நாட்டு இசை அரங்குகளில் தமிழ் மொழியில் யாரும் பாடுவதில்லை. தெலுங்கு மொழியில்தான் பாடி வந்தார்கள் என்று குறை கூறப்படுவதுண்டு. பார்ப் பனர்கள் அவ்வாறு பாடி இருக்கின்றனர். ஆனால் கிறித்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் தமிழ்க் கீர்த்தனைகளைத்தான் பாடி வந்தனர். கிறித்தவர்கள் பாடுவதற்கான கீர்த்தனைப் பாடல்களைப் பலரும் இயற்றி உள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றி ஆல்பிரட் கிருட்டினப்பிள்ளை (இவரை ழ.ஹ. கிருட்டினப்பிள்ளை என்பார்கள்) தஞ்சாவூர் வேத நாயக சாஸ்திரி, மாயூரம் வேதநாயகம்பிள்ளை (பிரதாபமுதலியார் சரித்திரம் எழுதியவர்) போன்ற வர்கள் ஆவர். மு. அருணாசலம்பிள்ளை தன்னுடைய தமிழ் இசை இலக்கிய வரலாற்றில் கிருட்டினப் பிள்ளை போன்றவர்களைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதே போன்று தமிழ் நாட்டில் இசை பற்றிய மாபெரும் ஆய்வை முதன்முதலாகச் செய்து பெருநூல் எழுதிய தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதரைப் பற்றி யாழ்நூல் எழுதிய சுவாமி விபுலானந்தர் தன் நூலில் எவ்விதச் சிறுகுறிப்பும் எழுதவில்லை. இவையெல்லாம் ஏதோ தற்செயலான விடுபடல்கள் என்று கருதமுடியாது.

பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாள மனோபாவத்தின் சாதியப் போக்கு என்று நாம் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். சுமார் இருநூறு ஆண்டுகாலமாக இசைத்தமிழைப் போற்றிப் பயின்று வந்தவர்கள் கிறித்தவர்கள் மட்டும்தான். இசைத்தமிழ் தொடர் பான ஆய்வுகளிலும் அவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. கருநாடக இசை என்பதற் கான மூலம் என்பது தமிழிசை தான் என்று நிறுவியவர் ஆபிரகாம் பண்டிதர். பண்டிதரின் ஆய்வால் உந்தப்பட்டுப் பண்டைக்காலப் பண்கள் எப்படி இசைக்கப்பட்டன என்பதை நம்காலத்துக் கருநாடக இசைவடிவங்களுடன் ஒப்பிட்டு ஓரளவு விளக்கிக்காட்டியவர்கள் தமிழிசைச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறலாம். ஆனால் இன்னும் வலுவான ஆதாரங்களுடன் தங்கள் ஆராய்ச்சியை விரிவுபடுத்திக் கருநாடக இசை என்பது தமிழி சையே என்று நிறுவியதில் பெரும்பங்காற்றியவர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம். நான்கு தொகுதிகளான “தமிழிசைக் கலைக்களஞ்சியம்” என்ற அவருடைய படைப்பு இதனை விளக்குகிறது. வீ.ப.கா சுந்தரம் கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் பயின்ற இசுலாமிய மாணவர் நா. மம்மது “தமிழிசைப் பேரகராதி” வெளியிட்டுள்ளார். இந்த நூல் வெளி வருவதற்கு முழுமையாகப் பொருளுதவி புரிந்தவர் புரவலர் பால்பாண்டியன். இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் தமிழ்க் கிறித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நூல் தமிழ் இசைக்கான முதல் அகராதியாகும்.

தமிழிசை பற்றிய ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான நூல்கள் வெளிவந்தன. அவை ஆப்ரகாம் பண்டிதரின் ‘கருணாமிருத சாகரம்’, சுவாமி விபுலானந்தரின் ‘யாழ்’நூல், தமிழ் இசைச் சங்கத்தின் வெளி யீடான “பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும்” (தொகுப்பாசிரியர்: இசைப்பேரறிஞர் ம.ப.பெரியசாமித்தூரன்) இந்நூல்கள் அனைத்தும் கருநாடக சங்கீதத்தில் இருந்து தமிழிசை பிறந்தது என்ற கூற்றுக்கான மறுப்புகளைத் தருவதில் முதல் இடத்தை வகித்தன. ஆனால் தமிழ் இசை என்பது இதுதான் என்று வரையறுத்தும் அத்தகைய வரை யறுப்புக்கான ஆதாரங்களைத் தமிழ் இலக்கியங் களிலும் இலக்கணங்களிலும் இருந்து பிரித்து எடுத்து முறைப்படுத்துவதில் பின்தங்கியே நின்றன. அதனை நிறைவு செய்யும் விதமாக இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மூன்று முக்கிய நூல்கள் வந்துள்ளன. 1. வீ.ப.கா.சுந்தரத்தின் தமிழிசைக் கலைக் களஞ்சியம் 2. மு.அருணாசலத்தின் இசைத் தமிழ் இலக்கிய வரலாறு, இசைத் தமிழ் இலக்கண வரலாறு 3. நா.மம்மதுவின் தமிழிசைப் பேரகராதி.

இதில் இசைத் தமிழ்ப் பேரகராதி என்பது தமிழிசை பற்றிய சொற்களுக்கு விளக்கங்கள் தருவது என்பதோடு மட்டும் அமையாது தமிழ் இசையின் ஊற்றுக்கண் என்பது தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை என்று மிகப் பழமையான நூல்களில் இருந்தே பிறந்து வளர்ந்தது என்பதையும் பின்னர் அது தேவாரம் திருவாய்மொழியில் வளம் பெற்று வளர்ந்தது என்பதையும் நிறுவுகின்றது. இந்தத் தமிழிசை வளர்ச்சிக்கான இலக்கணக் கூறுகளை உரைகள் வழியாக எடுத்துக்காட்டி விளக்கி நிற் கின்றன. அத்தகைய குறிப்பிடத்தகுந்த விளக்கங் களில் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.

திருஞானசம்பந்தர் பாடிய பாடலைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணர் தன்னுடைய யாழில் இசைக்க முடியவில்லை என்று கவலைகொண்டு தன்னுடைய யாழை முரித்துப் போட்டார். எனவே அத்தகைய பாடல்களுக்கு யாழ்முரி என்று பெயர் சொன்னார்கள். ஆனால் அப்படிச் சொல்வது பொருத்தம் இல்லாதது. யாழ் என்பது பண் என்றும் அந்தப் பண்ணினை முறித்துப்பாடுதல் யாழ்முரி என்றும் வழங்கப்படும். இச்செய்தி சிலப் பதிகாரத்தில் கானல்வரியின் வரிப்பாடல்கள் 14, 15, 16 என்பவை முரிப்பாடல் வகைகள் என்பதை அரும்பத உரைகாரர் எழுதுவதைக்கொண்டு புரிந்து கொள்கிறோம். இயற்றமிழ் மட்டும் கற்றவர்களுக்குப் புதிய விளக்கத்தைத் தருகின்றது.

யாழ்முரி:

யாழ் என்பது பண். பண்ணினை முரித்துப் பாடுதல் யாழ்முரி அதாவது இசைபாடும்போது எடுத்த பண்ணினைப் பாடி அதை விடுத்து வேறு பண்பாடுதல்.

‘எடுத்த இயலும், இசையும் தம்மில் முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே’ (சிலப்.7) (14) - (16) அரும்.மேற்.)

மொந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிர ஓர் வாய் முரிபாடி (தேவா. 45: 5)

(இன்றைய ‘இராக மாலிகை’ ஆகலாம்.)

(பக்கம்.433)

தொல்காப்பியம் அகத்திணை இயலில் தெய்வம் உணாவே (சூ.18) என்ற சூத்திரத்தில் யாழின் பகுதி யொடு என்ற தொடர் வருகிறது. இயற்றமிழை மட்டும் கற்றவர்கள் யாழ் என்ற கருவியும் அதன் பகுதிகளும் என்றுதான் பொதுவாகக் கருதினர். யாழின் பகுதி என்பது பண். அது சாதாரி என்று இளம்பூரணர் கூறுவதைக்கூடக் கவனத்தில் கொள் வதில்லை. அந்த இடத்தைக் கவனப்படுத்தும் பகுதியைக் கொடுத்துத் தொல்காப்பிய இலக் கணத்திலே பண்களைப் பற்றிய குறிப்புகள் நிறைந்து இருக்கின்றன. அதுதான் தமிழ் இசை வரலாற்றில் தொடரவும் செய்தது என்ற பகுதி கவனிக்கத் தக்கது.

யாழின் பகுதி:

1.     யாழின் பகுதி - யாழ்த் தொகுதி - பண் கூட்டம்

(பகுதி - அணி வகுப்பு)

       கைம்மணிப் பகுதி, முருடியல், திமிலை முழக்கமும் கரடிகைத் தொகுதியும் (தெ.இ.க. 7:863 த.க.சொ.380)

2.     சேப்பண், திறம் (ஜன்யராகம்)

       பகுதி = பாகம். யாழின் பகுதி பெரும்பண்ணின் பகுதி (ஜன்யராகம்)

       ஒப்பு : வர்ஜ ராகம் (தாய்ப் பண்ணிலிருந்து ஒன்றிரண்டு சுரங்கள் குறைந்தது)

       தெய்வம் உணா.... யாழின் பகுதியொடு.......... (தொல்.அகத்.18)

3.     யாழும், பகுதியும்

       யாழ் - பெரும்பண் (7 சுரப்பண்): கர்த்தாராகம்) (Generatives)

       பகுதி - திறப்பண் (Derivatives)

       பகுதி - கூறு

       .............. யாழின் தொகுதியும் (சிலப்.10:கட்டுரை 13)

       யாழின் தொகுதி - யாழின் பகுதி (பாடபேதம்)

       (பக்கம்.433)

பழமையான பண்கள் என்பன தற்காலத்தில் வழங்கும் ராகங்களில் உள்ளார்ந்து இருப்பதை விளக்கும் பகுதி இது.

செந்திறம்:

= செந்துருதி, செருந்தி, செந்திருதி, செந்துருத்தி, துருத்தி, செருந்து, மதுமாதவி, செந்தி, செந்து, செந்திசை, குறிஞ்சிப்பாணி, மத்யமாவதி என்ற பண்

செந்திறம், செந்துருதி (பிங்க.1395)

செந்திறம், குறிஞ்சியாழ்த்திறம் (சிலப்.13:106 உரை.)

செந்துஇசை பாடும்... (தேவா.1092)

செந்திறத்த தமிழோசை.... (திருமங்கை. நெடுந்தாண்ட.4)

சுந்தரரின் 95ஆம் பதிகம் (திருவாரூர்) பண் செந் துருத்தியில் அமைந்துள்ளது. ‘துருத்தி உறைவீர்’ (95:4/8191) என்ற பாடலிலும், செருந்திசெம்பொன் (95:10/8197) என்ற பாடலிலும் ‘துருத்தி’, ‘செருந்தி’ என்று இப்பண்ணின் பெயரைச் சுந்தரர் கோடிட்டுக் காட்டுகிறார்.

சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி அறைந்து

(பெரியபு. சம்பந்த. 6:1:1129)

நாரத சங்கீத மகரந்தத்திலே கண்ட மதுமாதவி... (யா.நூ.266)

குறத்தியர் பாடிய குறிஞ்சிப்பாணியும் (சிலப்.27:224)

குறிஞ்சியாழ் செந்திறப் பண்ணின்... செந்திறம் என்னும் திறமே

பிற்காலத்தில் செந்துருத்தி என வழங்கப்பட்டது (யா.நூ.288)

செருந்தி - குறிஞ்சி யாழ்த்திறம் (பிங்க.1382)

செம்பாலையுள் பிறக்கும் பண்கள்.... செந்துருத்தி.... (சிலப்.8:35.அடியார்க்.)

“திருமுறை கண்ட புராணத்தில் சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறைப்

பண்களை நிரல்படக் கூறுமிடத்துக் குறிஞ்சிப் பண்ணின் பின்

செந்துருத்தியும்.... (பன்னிரு.திரு.வர.பக்.534)

எனவே செந்திறம் (மத்யமாவதி) என்ற திறப்பண், குறிஞ்சி (நடபைரவி)

யாழின் சேய்ப்பண் ஆகும்.

மதுமாதவி. ழூ மத்யமாவதி (யா.நூ.266)

(பக்கம்.246)

சங்கராபரணம் என்று இன்று அழைக்கப்படும் ராகம் பண்டைய காலத்துப் பாலையாழ் தான் என்பதை விளக்கும் பகுதி இது.

பாலை யாழ், அரும்பாலை, சங்கராபரணம் (Melody of the Barren tract)

பாலை நிலப் பெரும்பண். இடமுறைத்திரிபின் தலைமைப்பாலை

வேனில் குன்றத்துப்பாலை (மதுரைக்.313)

அந்நிலமப்பாடலும், பாடற்சுவையும் பாலை (திவா.2211)

நைவளம் பழநிய பாலை வல்லோன் (குறிஞ்.146)

பாலை என்றது அரும்பாலையையும் சுட்டும் (ப.இ.இ.31)

தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி (பதிற்.46:5)

விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி (பதிற்.57:8)

வல்லோன் தைவரு வள்ளுயிர்பாலை (அகம்.355:4)

தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன் (பதிற்:65:14)

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (பொருந.22)

(மலை நாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தில் ‘பாலை’ என்ற பண் வழக்கு பெரும்பாலும் அரும்பாலையைச் சுட்டுவதாகும்.

(பக்கம்.372)

இன்றைய அரிகாம்போதி ராகம் என்பது பண்டைய முல்லை யாழ் தான் என்பதை விளக்கும் முக்கியமான பகுதி இது.

முல்லை

= முல்லையாழ், செம்பாலை, குலமுதல்பாலை, மங்கலப்பண், பாலையாழ் (அரிகாம்போதி), குரல், குரல்பண், தொல் ஏழிசை, குழல்பண், முல்லைப் பண்.

முல்லை நிலத்திற்குரிய பெரும்பண். (7 சுரப்பண்) இது குரல் குரலாக வரும் பண்.

முல்லை நல் யாழ்ப்பாண (ஐங்.478:5)

பாணர் முல்லை பாட (ஐங்.408:1)

தாரத்து உழை தோன்றப் பாலை யாழ் (பஞ்சமரபு.22)

முலையாழ் கெழும மொந்தை கொட்ட (தேவா.ந:63:7)

(முல்லையாழ் ழூ முலையாழ்)

பரிபாடலில் முதல் பன்னிரு பாடல்களும் முல்லை (பாலை) யாழில் இசையமைக்கப்பட்டவை.

(பக்கம்.417)

குறிப்புகள்:

1.     பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும் - ப.21, தமிழ் இசைச்சங்கம், ராசா அண்ணாமலை மன்றம் - சென்னை, முதல்பதிப்பு 1974, தொகுப்பாசிரியர் இசைப் பேரறிஞர் ம.ப.பெரியசாமிதூரன்.

2.     இலக்கணக் கொத்து - பக்.102-103, சரசுவதி மஹால் நூலகம், தஞ்சாவூர், இரண்டாம் பதிப்பு 1990.

3.     பார்ப்பனர்களைப் புறக்கணித்துவிட்டு எந்த அரசனும் தன் ஆட்சியை நடத்த முடியாத நிலை இந்தியாவின் பெரும் பகுதிகளில் இருந்தது. 400 ஆண்டு கால சோழப் பேரரசில் பார்ப்பனர்களால் முடிசூட்டப்பெற்ற நபர்கள்தான் பேரரசாகக் கருதப்பட்டனர். மராட்டிய சிவாஜி தன்னுடைய வீரத்தாலும் விவேகத்தாலும் அரச நிலையை அடைந்தாலும் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்ததால் அடைந்த கலக்கத்தை அம்பேத்கர், ஊ.சூ.அண்ணாதுரை போன்றோர் விரிவாக எழுதி உள்ளனர்.

4.     மறைமலை அடிகள் வரலாறு பக்.521-535, சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், ஆசிரியர் மறைமலையடிகள் மகன் மறைதிருநாவுக்கரசு - 1959.

5.     திராவிடச்சான்று ப.244.

       தமிழ் இலக்கிய ஆய்வை மேற்கொண்டவர்கள் இசைத் தமிழும் தமிழ் இசையும் வளர்ந்து வந்த விதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களை இயற்றமிழாகவே கருதிப் பெரும்பாலோர் ஆய்வு செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் நுண் கலையாகத் தமிழ்மொழியில் இசை வளர்ந்த வரலாற்றைக் காணத் தவறவிட்டது. எனவே அறிவியல் பூர்வமான தமிழ் ஆய்வு என்பது இன்றைய நிலைவரையும் நிறைவு பெறாமல் உள்ளது. அதுமட்டு மல்லாது தமிழிசையின் வளர்ச்சி தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வழியாக சிலப்பதிகாரத்தில் ஒரு வடிவம் பெற்று நின்றதையும் காணத்தவறியது. வீ.ப.கா.சுந்தரம் அவர்களை அடியொற்றி நா.மம்மது உருவாக்கியுள்ள இந்த அகராதி மேற்கூறிய விடுபடல்களை நிறைவு செய்யப் பேருதவியாக அமையும் என்று கூறலாம். இந்த நூலை மிக அழகான வடிவத்தில் பிழையின்றிச் செம்மையாகத் தயாரித்து வெளியிட்டு இருக்கும் இன்னிசை அறக்கட்டளையினரைப் பாராட்ட வேண்டும். வேற்று நாட்டில் வசித்தாலும் தமிழ் மொழியின் மீது உண்மையான பற்றுக்கொண்டு இந்நூல் வெளிவரப் பொருளுதவி செய்த திரு.பால்பாண்டியனும் பாராட்டுக்குரியவர். இத்தகைய ஒரு பணிக்கு அவரை ஆற்றுப்படுத்திய திரு.கு.ஞான சம்பந்தன் நினைக்கத்தக்கவர்.

Pin It