எழுபதுகளில் தீவிரத்துடன் இயங்கிய இளம் எழுத்தாளர்களில் வண்ணநிலவன் முதன்மையானவர். ‘எஸ்தர்’, ‘பாம்பும் பிடாரனும்’ என்கிற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ‘கடல் புரத்தில்’ (1977) சம்பா நதி (1979) ரெய்னீஸ் ஐயர் தெரு (1981) முதலிய மூன்று நாவல்களையும் குறுகிய காலகட்டத்திற்குள் தந்தவர். பத்தாண்டுகளில் முப்பத்தைந்து கதைகள், மூன்று நாவல்கள், ‘ஒரு நாள்’ குறுநாவல் என்று சிறப்பான பங்களிப்பு செய்தவர்.

இந்த வீச்சை அடுத்தடுத்த பத்தாண்டுகளில் அவரால் நிகழ்த்த முடியவில்லை. முழு நேர எழுத்தாளனாக இருந்து இயங்க முடியாச் சூழல் அவரை நெருக்கி நெருக்கி முடக்கி விட்டது. வாழ் வதற்கான பொருள் தேடலில் பல எழுத்தாளர்கள் நிறமிழந்து பின்தங்கிப் போனது போலவே வண்ண நிலவனையும் தமிழ்ச்சூழல் செயல்பட விடாமல் செய்துவிட்டது. எண்பதுகளிலும், தொண்ணூறு களிலும் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் எழுபது களில் இருந்த இலக்கிய வீச்சு காணாமல் போய் விட்டது. தொண்ணூறுகளில் சில நேர்த்தியான கதைகள் எழுதியிருக்கிறார். பாத்திரங்கள் நுணுக்க மான அசைவுகளால் அழுத்தம் பெற்றவை அவை. ஆனாலும் எழுபதுகளில் கொந்தளித்த படைப் பெழுச்சி இல்லை.

வண்ணநிலவனின் படைப்பு மனம் என்பது நெகிழ்ச்சியான தருணங்களில் பொங்கும் மன வெழுச்சிகளைக் கலையாக மாற்றுவதில்தான் குவிந்திருக்கிறது. கதைக்குள் கதாமாந்தர்களின் பிரியத்தை நாடுவதாக மட்டும் இல்லை. வாசகனுக்குள் கருணையைச் சுரக்கச் செய்கிறது. கதைச் சூழல், பிரச்சினை, பின்னணி வாசக உலகிற்குத் தொடர்பு இல்லாதபோதும் அவனைச் சுத்திகரிப்பு செய்கிறது. அன்பிற்காக ஏங்கும் கதாமாந்தரின் உலகுடன் தன்னைக் கரைத்துக் கொள்கிறான். கதைகள் தரும் பாதிப்பு உள்ளத்தைக் கருணைமிக்கதாக ஆக்குகிறது. வாசகனின் சொந்த வாழ்க்கையில் இவ்விதமான மலர்ச்சி பெறத் தூண்டுகின்றன இவரது கதைகள். ‘விமோச்சனம்’, ‘தேடித்தேடி’, ‘உள்ளும் புறமும்’, ‘அந்திக் கருக்கல்’ கதைகளுக்குள் தீராத முரண் கீறியபடியே இருக்கிறது. மனைவிமார்களை இதில் வரும் கணவன்மார்கள் புரிந்துகொள்வதே இல்லை.

சந்தோசமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லாத கணவன்மார்களாக இருக்கிறார்கள். எல்லாவித உதாசீனங்களின் மத்தியிலும் கணவனின் அன்பிற்காக ஏங்கி வலய வரும் பெண்கள் இவர்கள். (கடுமையான வறுமையிலும் தீமையைக் கையிலெடுக்காத ஆண்கள் இவர்கள் என்ற கோணமும் உண்டு.) இப்படியான கணவனாக இருக்கக்கூடாது என்றொரு மன வெழுச்சியை வாசகனுக்கு ஏற்படுத்துகிற ஆற்றலை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. வாசகன் இடத்தில் விமர்சன கண்ணோட்டத்தோடு சத்தான மாற்றான முடிவுகளுக்கு நகர்த்துவதில்லை. மாறாக ஆன்மிக எழுச்சியைத் தூண்டி நல்லனுபவத்தை வாழ்க் கைக்குள் கொண்டு வரும் செயலைச் செய்கின்றன. அமைதியான அன்பின் வெளிப்பாடுகளால் சக மனிதனுள்ளிருக்கும் கருணையின் ஊற்றுக் கண் களைத் திறக்கின்றன. வண்ணநிலவனின் கதை களை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள் வதைவிட காந்திய அடிப்படையில் புரிந்துகொள்வது தான் சரியாக இருக்கும்.

ஒரு குடிகாரக் கணவன். ஒவ்வொரு நாள் இரவும் குடித்துவிட்டு வரும்போது மனைவியிடம் இனி குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய் கிறான். அதை மனைவி நம்புகிறாள். மறுநாள் அந்த நம்பிக்கை சிதைகிறது. ‘விமோச்சனம்’ கதையின் விசயம் இது. ஒரு நாள் நிகழ்வைக் காட்டி எந்நாளும் தீராத வேதனையில் அப்பெண் பட்டழுந்திக்கொண்டிருக்கும் வாதனையை வெளி யிடுகிறது. அப்பெண்ணுக்கு இந்த ஜென்மத்தில் விமோச்சனம் இல்லையோ என்ற பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. அவன் குடித்துவிட்டுச் சொல்லும் சொற்களில் இருக்கும் பிரியம் உண்மையானது தான். “ராதா, கூப்பிட்ட ஒடனே என் பின்னாடி வந்தயே ராதா. உனக்குத் துரோகம் பண்ணிட்டேன். எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்தயே ராதா. பாழாக்கிட்டேன். இனி குடிக்கமாட்டேன்” என்று சொல்லும் சொற்களில் உள்ள ஈர்ப்பு எப்படி அவளை அவநம்பிக்கை கொள்ளச் செய்யும்? நம்புகிறாள். எண்ணத்திற்கும் தாண்ட முடியாமல் சரிந்து விழும் தத்தளிப்பிற்கும் இடையில் உழலும் மனிதர்களின் மாதிரி இக்கதை.

குடிகாரனின் இன்னொரு பிரியமான இழையையும் தொடுகிறது. அவர்களின் கைக் குழந்தை அழுவதே இல்லை. தொட்டிலில் படுக்காமல் தரையில் படுக்கிற பக்குவத்தை ஏற்றுக்கொண்ட குழந்தை. சுற்றுவீட்டார்கள் எல்லோரும் தாய்க்குத் தொந்தரவு தராத குழந்தை என்று புகழ்கிறார்கள். அக்குழந்தையைக் குடிபோதையில் சீராட்டுகிறான். “ராதா என் அம்மையல்லோ. என் அம்மையின் மீது ஆணை! இனி குடிக்கமாட்டேன்” இந்த பரவசம் மிக்க கணங்கள் குடிபோதையில் சீராட்டுகிறான். “ராதா என் அம்மையல்லோ. என் அம்மையின் மீது ஆணை! இனி குடிக்கமாட்டேன்” இந்த பரவசம் மிக்க கணங்கள் குடிபோதையில் உச்சமடைகின்றன. குடியில் அவன் பேரன்புமிக்கவனாகவே இருக்கிறான். இந்த கணத்தில்தான் அவள் விமோச்சனம் அடை கிறாளா? ஒவ்வொரு நாளும் வாழ்க்கை வேதனையில் நசுங்கும்போது இந்தச் சொற்கள் மட்டுமே உயிர்ப் பைத் தருகிறதோ! அதனை நிஜத்தில் அவனால் மீட்டெடுக்கவே முடியவில்லை. இதுதானே இன்றைய மனிதனின் பிரச்சினையும். இக்கதையை ஒரு குடி காரன் படிக்க வேண்டும். அவனிடம் இருக்கும் நல்லியல்பை இனம் காட்டி உருமாற்றிவிடும் சக்தியை மறைமுகம் கொண்டிருக்கிறது. யதார்த்தம் கடுமை யானது. பரவசம்மிக்க கணங்கள் மறுநாள் பொய்த்துப் போகின்றது. எளிய பெண்ணின் உலகம் நம்மை கஷ்டப்படுத்துகிறது. கணவன் மார்களின் சிறையில் சிக்கி வதைபட்டுக்கொண்டே இருக்கிற பெண் உலகத்தைக் காட்டுகிறது.

இளம் மனைவியிடம் எப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர்களுக்குப் போய்விடுகிற எழுத்தாளன் (தேடித்தேடி) வீட்டில் எந்த வேலையில் பங்கெடுக்காத பத்திரிகை ஆசிரியன் (உள்ளும் புறமும்) இளம் மனைவியைவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழும் கணவன் (அந்திக் கருக்கல்) கதைகளில் உருவாகி இருக்கும் பெண்களின் உலகம் பெரும்தாக்கத்தை உண்டாக்குகின்றன. சுரணையற்று பயத்தையும் வேதனையையும் தேக்கிக் கொண்டு கணவர்களின் அனுசரணைக்காகப் பின் தொடர்கிறார்கள். அன்பைத் தர சித்தமாக இருக் கிறார்கள். ஆண்களின் விட்டேத்தியான குணம், சக மனுஷியாகப் பார்க்க மறுக்கிற ஆணாதிக்கப் போக்கைக் காட்டுகின்றன. இக்கதைகளின் தலைப்புகள் கதைகளுக்கு எதிர்நிலையில் வேறு விசயங்களைச் சுட்டுகின்றன என்பதும் முக்கியம். எழுத்தாளன் பெரிய விசயங்களை அறியத் துடிப்பவன் என்பது சரி! அனுபவங்களைத் தேடித்தேடிச் செல் கிறான். பட்டென ஒரு விமர்சனப் பார்வை துலங்கு கிறது. தேடித்தேடி எதைக் கண்டடைந்தான். வீட்டில் ஒரு அன்பைத் தேடிக் கண்டடைய முடியாமல்? அடுத்தவர்களின் வாழ்க்கையை எழுதத் தெரிந்த வனுக்கு தன் வாழ்க்கையில் ஒன்றைத் தேடி நிரந்தர மாக்கத் தெரியவில்லையே! அதேபோலப் புறத்தில் சரியான ஆளாக இணைந்துகொள்ளத் தெரிந்த மனிதனுக்கு உள்ளில் கைகோத்துக் கொள்ளத் தெரியவில்லையே! வண்ணநிலவனின் பார்வை இதுதான். ரொம்பவும் நுட்பமாகவே சொல்லப் பட்டிருக்கிறது. எளிய வடிவில் கதை சொல்லப் பட்டாலும் விசயம் அவ்வளவு எளிமையாகத் தீர்க்கக்கூடியதாய் இல்லை.

கதை நகர்விலேயே விமர்சனமென்றறிய முடியாத விமர்சனம் ஓடிக்கொண்டிருப்பதைச் சுட்ட வேண்டும். குளியல் அறைக் கதவிற்குத் தாழ்ப் பாளைச் சரி செய்யாத, அழும் குழந்தையைத் தேற்றாத, உதவி செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் களுக்குத் திரும்பச் செய்யத் தோன்றாத - மனிதனுக்கு வெளியில் நற்பெயர். பெரிய பத்திரிகையாளன். உலக மக்களுக்குச் செய்திகளை வழங்கும் நன்மை யாளன். மந்திரியோடு தொகுதிக்குச் செல்ல அழைக்கப்படுபவன். வீட்டில் எந்த வேலையிலும் பங்கெடுக்காதவனாக இருக்கிறான். மனைவியின் ஓயாச் சண்டையிலும் தன்னை அவன் மாற்றிக் கொள்வதில்லை. மந்திரியுடன் தொகுதிக்குப் போகும் அவசரத்தில் குளித்துவிட்டு மாடிப்படியேறி வரு கிறான். மனைவியைக் காணாமல் பதற்றமடை கிறான். அவனுக்காகத் தட்டில் இட்லியை போட்டு விட்டு அருகில் இட்லிபொடிக்கு எண்ணெய் ஊற்றக் குழி செய்துவிட்டு இருப்பதைப் பார்க் கிறான். (இட்டிலிப் பொடிக்கு எண்ணெய் ஊற்றக் குழி செய்யக்கூட மனைவிதான்) இதை எள்ளலுக்காக எழுதவும் இல்லை. குடும்பத்தில் எதிலும் பங்கெடுக் காத அவனுக்கு, அவன் சாப்பிட எண்ணெய் வாங்கி வர மனைவி கடைக்கு ஓடியிருக்கும் நுட்பம் தெரிய வருகிறது. ‘உள்ளும் புறமும்’ கதையில் உள்ளில் அவனின் விருப்பத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை சண்டையிலும் அவள் தொடர்கிறாள். வண்ண நிலவனின் கதைகள் உண்டாக்கும் பாதிப்பு இவ் வம்சத்தில்தான் உயிரைக் கொண்டிருக்கின்றன.

வாழ்வின் ரகசியம் அந்திம காலத்தில்கூட விநோத அம்சத்தை முன்வைக்கக்கூடியது. முடி வெடுக்க முடியாத திசையைத் திறந்து வைக்கக் கூடியதாக இருக்கிறது. ‘அந்திக் கருக்கல்’ என் றொரு கதை. மகனைக் காமக்கிழத்தியிடமிருந்து மீட்டி மருமகள் ரெஜினாவிடம் சேர்ப்பிக்க நினைக் கிறார் பெரியவர். அவள் வீட்டிற்குப் பேத்தியுடன் செல்கிறார். சண்டை போடப் போன இடத்தில் அவள் பெரியவர் முன் மண்டியிட்டு ஆசீர்வாதம் செய்யக் கேட்கிறாள். கண் தெரியாத அவர் தலையைத் தேடித் தடவுகிறார். பேத்தி அவரின் கையைப் பிடித்து அவள் தலையில் வைத்துவிடுகிறாள். தன் அம்மாவிற்குத் துரோகம் செய்கிற பெண்தான் அவள். குழந்தைக்கு அது முக்கியமாகப்படவில்லை அக்கணத்தில். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது இந்த அர்த்தப் பரிமாணத்தில்தான்.

‘துன்பக்கேணி’ கதையில் ஓரிடம். காய்ச்சிய சாராயத்தைக் கேன்களில் சுமந்து வருகின்றனர். நல்ல நிலா வெளிச்சம். கர்ப்பிணியான செலாச்சியும் கேனைச் சுமந்து வருகிறாள். கணவன் ஒரு தகராறில் ஆளை வெட்டியதால் ஜெயிலில் கிடக்கிறான். போலீசுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் சாரா யத்தைக் கடத்திக்கொண்டு வருகின்றனர். கணவனின் நினைப்பு வருகிறது. வாழைத் தோட்டத்தில் வேலை செய்தவன். ஒருமுறை லாரி சாத்தன்குளம் வழியாக கன்னியாகுமரிக்கு லோடை ஏற்றிக்கொண்டு செல் வதாக அமைகிறது. உடனே வீட்டுக்கு அவசர அவசரமாக வந்து செலாச்சி விரும்பிய சாத்தன் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு லாரியில் செல் கிறான். இப்படி ஒரு குறிப்பு சாராயம் சுமந்துவந்த சிலாச்சிக்கு வருவதாக எழுதுகிறார். வண்ண நிலவனின் பல கதைகளில் இம்மாதிரியான ஓரிடம் முகிழ்த்துவிடுகிறது. பொருத்தமான பின்னணியோடு கதையில் ஒன்றுமில்லாதது போலத் தோற்றத்தில் இவ்விதமான ஆழ்ந்த தொனிப் பொருளை வெளிப் படுத்தும் கலை வண்ண நிலவனுக்கே உரியது. ஏழ்மையின் கதி மகிழ்வின் தருணங்களை நசுக்கிக் கொண்டே இருக்கிறது. ஏன் கணவன் மகிழ்ச்சியைத் தர முடியாதவனாக இருக்கிறான் என்பதற்கு ‘பிசுற முடியாத வாழ்க்கை நெருக்கடி’ என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கண் வேண்டும். இப்படி எல்லாம் நேரடியாகப் பார்க்க முடியாத தோற்றத்தில் எழுதிச் செல்வது சவாலானதும்கூட. முக்கியமாக வண்ணநிலவனின் கதைகள் வாசக பங்கேற்பின் அடிப்படையிலேயே வெற்றி தோல்வி நிகழ்கிறது.

‘கரையும் உருவங்கள்’ கதையில் வேலை கிட்டாத இளைஞனின் அந்நியத்தன்மை சித்திரிக்கப் படுகிறது. யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய அக்காள் அனுசரணையாக அழைத்து சாப்பாடு போடு கிறாள். திருமணம் அவளுக்குத் தள்ளிப் போகிறது. பொருளாதார நெருக்கடி. பிரியமாக அவனுக்கு ஐந்து ரூபாய் செலவுக்குத் தருகிறாள். வேலை வெட்டி இல்லாத இளைஞனுக்கும் செலவு இருக்கு மல்லவா? அழகான புரிதல் இது. நம் நாட்டு அக்காக்களைச் சந்திக்கிறோம். கீழைத்தேய கதை களின் அசல் என்பது இதுதான். ஈரம் வற்றிப் போன ஐரோப்பிய இதயங்களுக்கு கேலிக் கூத்தாகக் கூடப்படும். நம்மூர் நவீனத்துவ எழுத்தாளர் களுக்கு இந்த மண் சார்ந்த விசயம் தவறு என்பதாகவே பார்க்கப்பட்டிருக்கிறது.

‘ஆதி ஆகமம்’ கதையில் கணவனின் பழைய காதலியுடன் அவன் மனைவிக்குப் பேசிக் கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கிறது. எங்கு? சந்து வழியாகச் சென்று படியேறிச் செல்கிற இடத்தில். ‘அயோத்தி’ கதையில் மனைவியின் துயரத்தைப் புரிந்துகொள் கிறான். அவள் விரும்பிய பாஸ்கர அத்தானைப் “பார்த்துவிட்டு வரலாம் சந்திரா” என்று குழந் தையைத் தூக்கி நிற்கிற இடம். ‘மனைவியின் நண்பர்’ கதையில் “எனக்கும் இம்மாதிரி வயசுக்கு வந்த பெண் இருக்கு” என்றதும் நெருங்கி வந்த

காம எண்ணங்கள் இருவரிடமிருந்தும் இறங்கத் தொடங்குகிற இடம். இவையெல்லாம் மேலான தளத்தில் வைத்துப் புரிதலை ஏற்படுத்துகின்றன. நமக்கும் அதற்கொரு பக்குவம் வேண்டும். இந்தப் பக்குவத்தைத்தான் இவ்வகைக் கதைகள் பேசு கின்றன. வாசகனுக்கும் வற்புறுத்துகின்றன.

‘அயோத்தி’, ‘மனைவியின் நண்பர்’ கதை களை வேறு கோணத்திலும் அணுகலாம். எதைச் சொல்லி கோவத்தையும், காமத்தையும் அடக்கலாம் என்ற எண்ணக் கூர்மையிலிருந்தும் பார்க்கலாம். வண்ணநிலவனின் பார்வை அது அல்ல. அன்பும் நட்பும்தான் அவருடைய கோணம். ‘மனைவியின் நண்பர்’ கதையை ஆ.மாதவன் எழுதினால் வண்ண நிலவன் சொன்ன நிலையிலேயே கலவியும் நிகழ்ந்து விடும். இதுதான் எழுத்தாளர்களின் இலக்கியக் கண் என்பது. இராவணனுக்கு வாக்கப்பட நேர்ந்த சீதையின் ஓலமாக மனைவியின் வாழ்க்கை அமைந்து விட்டதை ‘அயோத்தி’ கதைநாயகன் உணர்வதற்கும் அபூர்வகண் வேண்டும்.

‘பலாப்பழம்’ கதையில் என்றில்லை. கிட்டத் தட்ட எல்லாக் கதைகளிலும் இல்லாமைதான் வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. அந்த ஏழ்மையிலும் மனிதர்களின் பிரியங்களைக் காணும் கண்களை வண்ணநிலவன் பெற்றிருக்கிறார். தமிழ்ச் செல்வன், கோணங்கியின் தொடக்ககால கதை களை இவ்விதமாகப் பார்க்கலாம். அன்பை மார்க்சிய தளம் அடிமையின் கூறாகப் பார்க்குமா? மேலோட்டமான தளத்தில் வர்க்க முரண்பாட்டின் மோதலில் அப்படி உடனடியாகத் தோன்றலாம். ஆழ்ந்த பொருளில் மார்க்சியம் மனிதநேயத்தை நோக்கியே பாய்கிறது. முற்போக்கு எழுத்தாளர் களின் குரல் உயர்த்திப் பேசும் தன்மை என்பது மார்க்சியத்தை மேலோட்டமாகப் புரிந்த நிலையில் விழைவது. இந்த இடத்தில்தான் வண்ணநிலவனின் அமைதியில் எழுதும் தொனி முக்கியமானது. முற் போக்கு எழுத்தாள நண்பர்கள் இந்த அமைதியில் எழுதும்போது மிகப்பெரிய பாதிப்பை நிகழ்த்தும். அது இங்குத் தமிழ்ச் சூழலில் நிகழவில்லை. இந்த வகையில் வண்ண நிலவனும் வண்ணதாசனும் வேண்டப்படுபவர்களாக இருக்கின்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணின் பக்கத்து வீட்டில் இருந்து பலாப்பழ வாசம் வருகிறது. கணவனுக்கு மில்லில் வேலை. வேலை நிறுத்தத்தால் பணமுடை. குளிர்ந்த தரையிலும் கணவனின் புறங்கழுத்திலும் அவள் தீண்டி விளையாடுகிறாள். பலாப்பழம் சாப்பிட வேண்டுமென்ற ஏக்கம் சொல்லப்படாமல் அவள் விளையாடும் விளையாட்டில் வெளிப் படுகிறது.

‘அவனூர்’ கதை ‘ஆதி ஆகமம்’ கதை போலத் தான். முதல் காதலனை மறவாமல் - மறக்க முடியாமல் இருப்பது. அதனைக் கணவன் புரிந்து பெருந்தன்மையுடன் வாழ்வது. இப்படியான வாழ்க்கையும் உண்டு தானே. ‘அரேபியா’ வெளி நாடு செல்லும்முன் ஊரின் நிலக்காட்சி உயிராக எழுந்து தழுவுகிறது.

‘அழைக்கிறவர்கள்’, ‘மிருகம்’, ‘எஸ்தர்’, ‘ராஜநாகம்’, ‘பாம்பும் பிடாரனும்’, ‘நிஜநிழல்’ கதைகளில் மூர்க்கமான மனித வெளிப்பாடுகளைப் பார்க்க முடிகிறது. சாகக் கிடக்கும் மனிதனை உருட்டி எழுப்பி பிச்சையெடுக்க ஆயத்தமாக்கும் மனைவியும் குழந்தைகளும் (அழைக்கிறவர்கள்) வேலைவாய்ப்பில்லாத இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும் (நிஜநிழல்) அரைவயிற்றுக் கஞ்சி உண்டு தேகம் கொன்று வாழ நேரும் பாம் பாட்டியும் பாம்பும் (பாம்பும் பிடாரனும்) கரிசலின் கொடூர வறட்சியைக் காட்டி கிராமங்களும் குடும் பங்களும் சிதைந்து மறைகிற கோலத்தை (‘மிருகம்’, ‘எஸ்தர்’)யும் இக்கதைகளில் பார்க்கலாம்.

உயிரழியும் நிலையிலும்கூடப் பிடாரனுக்குத் தன் பாம்பின் மீது இருக்கும் பிரியம், எஸ்தர் சித்திக்கு ஈசாக், டேவிட் மீது இருக்கும் பிரியம், தற்கொலை எண்ணத்தோடு இருக்கும் நண்பன் மீது பிரியத்தோடு ஆசுவாசப்படுத்துகிற தோழன் என்று உக்கிரமான தருணங்களிலும் இவை இயல் பாக மலர்ச்சியுறுகின்றன. வறுமையின் அழுத்தத் தையும் வறட்சியின் கொடூரத்தையும் தாங்க முடியாமல் நாடான், நாயைக் கதவு சந்தில் வைத்து நெருக்குகிறான். இந்தக் கதை இந்த வகையில் தனித்துவமானது. வறுமையின் கோரப்பிடி மனிதனுள் வெறுப்பைக் கீறி விடுகிறது. வன் முறையைத் தூண்டுகிறது. மானிடப் புதிரை அவிழ்க்கிறது. வன்மம் இவ்விதமான வடிகாலாக வெளிப்படுகிறது. அழிந்துபடும் கிராமத்தினால் உண்டாகும் துயர் ஒரு வன்மத்தால் சமநிலைப் படுத்திக் கொள்கிறது.

ஆட்கள் அற்ற இரவின் இருட்டைப் பற்றி ‘எஸ்தர்’ கதையில் வருமிடங்கள் கவித்துவத்தின் உச்சம். கிழவியை எஸ்தர் கொலை செய்ததற்கான குறிப்பு, மிக்க அமைதியுடன் வெளிப்பட்டிருக்கிறது. பதினைத்தாண்டுகளுக்கு முன் ‘எஸ்தர்’ கதையை வாசித்தபோது அந்த கொலைதான் மனசை இம்சை செய்தது. இப்போது இருட்டும், எஸ்தர் சிந்தியின் வாழ்க்கையும் வெளிப்படுத்த முடியாக் காமமும், அவளின் அர்ப்பணிப்பும், ஈஸாக் மீதான விருப்பமும், நிலத்தின் மீதான காதலும் பிரிந்து போன மனிதர்கள் பற்றிய ஏக்கமும்.... என்று பல வழிகளில் மனசை பாதிக்கச் செய்கிறது.

‘எஸ்தர்’ கதையை நடுத்தரமான கதை என்று வண்ணநிலவன் கூறிக் கொண்டாலும் அக்கதையே அவரின் சிறப்பான ஆக்கம். பார்சிய காப்பிரியேல் மார்க்வெஸின் ‘செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம்’ கதைக்கும் மேலானது என்றே சொல்லலாம். ‘பாம்பும் பிடாரனும்’ அற்புதமான மொழியால் படைக்கப் பட்டிருக்கிறது. முதல் வாசிப்பில் மேலதிகமாக மனிதர்களின் இருட்டையோ வெளிச்சத்தையோ தூண்டி வெளிக்கொணரவில்லை என்று தோன்றியது. உக்கிரமான மொழி நினைவின் கிடங்கில் இருந்து அழைத்துக்கொண்டே இருந்தது. திரும்பவுமான வாசிப்பு.

பிடாரன் பாம்பை நம்பியும், பாம்பு பிடாரனை நம்பியும் வாழ வேண்டிய துயரம்மிக்க வாழ்வு பிணைக்கப்பட்டிருக்கிறது. நவீனத்துவ எண்ணங்கள் படிந்துவிட்ட காலம். இந்த பாம்பு வித்தைக்குப் பொருளேது? வாழத் தேர்வு செய்த விளிம்புநிலை மக்களின் உத்திக்கு இன்று இட மில்லை. நவீன மனிதர்கள் முன் அழிந்துபடுவதைக் காட்டுவதோடு விளிம்பு மனிதர்களின் அழிவும் காட்டப்படுகிறது. மரபான தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வந்த மனிதர்கள் அழித்தொழிக்கும் அத்தொழிலிலிருந்து மீளமுடியாத பிடியில் சிக்கித் தவிப்பதை இக்கதை விரிக்கிறது. லாபம் கட்டுபவர் முதல் விவசாயிகள் வரை பாம்புப் பிடாரன் கதையாக இருப்பதைக் காணமுடியும். ‘எஸ்தர்’, ‘மிருகம்’, ‘பாம்பு பிடாரனும்’ சிறந்த படைப்புகள். ‘எஸ்தர்’ கதை எல்லா வகையிலும் படைப்பின் சாத்தியப்பாடுகளை மீட்டி மேலெழுந்த ஆக்கம் எனலாம்.

வண்ணநிலவன் நூறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். ‘துக்கம்’, ‘இரண்டு பெண்கள்’, ‘காட்டிலிருந்து ஒருவன்’, ‘மழை’ என்று இன்னும் சில கதைகளைப் பேசலாம். ‘மழை’யில் இட்டுக் கட்டப்பட்ட தன்மை இப்போது தெரிகிறது. பிறப்பாக இல்லாமல் இணைப்புகளால் அமைக்கப் பட்டிருக்கிறது. எனது சிறுவயதில் ‘மழை’ என்னைப் பாதிக்கச் செய்த கதை. இன்று அதிலொரு செயற்கைத் தன்மை தென்படுகிறது.

வண்ணநிலவனை, வெறும் சம்பவங்களை மட்டும் எழுதுகிறவர் என்றொரு விமர்சனத்தை எஸ்.ராமகிருஷ்ணன் வைக்கிறார். முக்கியமாகப் பிற்காலக் கதைகளில் ஆனால் ‘உள்ளும் புறமும்’, ‘மனைவியின் நண்பர்’, ‘அந்திக் கருக்கல்’, ‘தேடித் தேடி’ கதைகள் சம்பவங்களைத் தாண்டி சில அடிப்படைக் கேள்விகளைத் தன்னை நோக்கித் திருப்புவதைத் தலைப்புகள் செய்கின்றன. எனவே அவை நல்ல சிறுகதைகளாகவே எனக்குப் படு கின்றன. சம்பவங்களுக்குள் ஓடும் முரணை நான் சிறுகதையின் அம்சமாகப் பார்க்கிறேன். அதனை வண்ணநிலவன் குரல் இல்லாத தொனியில் இழை யோட விட்டிருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் பரப்பை இந்த வகையில்தான் விரிவுபடுத்திய வராகக் கொள்ள முடியும். வண்ணநிலவனுக்குப் பெருமை சேர்க்கும் இருபது கதைகள் இருக் கின்றன. அவை குறித்துத்தான் இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.

வண்ணநிலவன் தனது கதையுலகத்திற்குத் தத்துவ சாரங்களையோ பண்பாட்டுக் கருத்தியல்களின் நெருக்குதல்களையோ அடிப்படையாகக் கொள் வதில்லை. வாழும் வாழ்க்கையில் ஊடாடும் நெருடல் களைச் சொல்கிறார். நம் வாழ்க்கையைச் சொல் கிறார். விதிக்கப்பட்ட வாழ்வின் கண்ணியில் சிக்கியபடி தவிக்கும் தவிப்புகளைச் சொல்கிறார். முக்கியமாக குடும்ப உறவிற்குள் எழும் முரண் களையும், கசப்புகளையும், வருத்தங்களையும் பரிதவிப்புமிக்க மொழியில் எழுதுகிறார். பிரச்சினை களுக்கு அடிப்படையாக இருப்பது இல்லாமை தான். ஏழ்மையின் சாபம்தான். என்றாலும் வறுமை, நேசங்களைக் குலைத்து உண்டாக்கும் வலிகளைப் பகிர்ந்துகொண்டு மீளமுடியாமல் இருக்க முடிகிறது. மார்க்சிய விமர்சகர்கள் வறுமையின் சிக்கல்களுக்கு ஏழை பணக்காரன் என்ற பொருளியல் அடிப்படையை இக்கதைகளில் ஆராயக்கூடும். முதலாளிகளின் சுரண்டல்களால் இவர்களின் ஏழ்மைக்குக் காரணம் காண முடியும்.

வண்ணநிலவன் வறுமையின் பின்னணியைப் படைப்பின் உடலாக ஆக்கிக் கொள்கிறார். எளிய மனிதர்களின் துல்லியமான வரைபடங்கள் வண்ணநிலவன் கதைகள். எழுபது, எண்பது காலகட்டத்து வாழ்க்கைக் கோலங்கள். இந்த அடிப்படையில் மனங்களின் திரிபுகளையும், ஆசாபாசங்களையும் முன் வைத்திருக்கிறார். பொறுப்பற்ற ஆண்களின் குணம் பெண்களின் கண்ணீருக்குக் காரணமாவதை இக்கதைகள் சொல்கின்றன. காலூன்ற முடியாது தவிக்கும் ஆண்களின் துயரங்களைச் சொல்கின்றன. வண்ண நிலவன் எளியவர்களின் மனசாட்சியாகப் புனை கதை உலகத்தைப் படைத்திருக்கிறார். அவர்களின் கருமையான பக்கங்கள் திறக்கப்படாதது ஒரு குறைதான்.

இயல்புவாத நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும் அசலான நவீனத்துவக் கதைகள். நவீன வாழ்வின் நெருக்குதலில் வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. உறவுச் சிக்கல்களைச் சொல்கின்றன. முக்கியமாகப் புற உலகம் நிர்ப்பந்திக்கும் மதிப்பீடுகளின் அழுத்தங் களால் சிக்கித்தவிக்கும் மனிதர்கள்; மீள முடியாது தொடுக்கும் அடிகளைப் பெற்று சுமந்தபடியே நகர்கிற அவலத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இதற்குக் காரணம் நமது குடும்ப அமைப்பு முறை தான். அதனை விமர்சிக்கவில்லையென்றாலும் எளியவர்களின் பக்கமே நிற்கிறார் வண்ணநிலவன். யேசுவின், வள்ளலாரின் காந்தியின் பார்வையில் இருந்து எடுத்துக்கொண்ட சாராம்சம் இது. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்பது தான் வண்ணநிலவனின் படைப்பு சுருதி.

Pin It