1953-57களில் பேராதனைப் பல்கலைக்கழக நாடகங்களில், வானொலி நாடகங்களில் நடித்து வந்தவரும், 1956-57களில் இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ்நாடகக் குழுவின் செயலாளராயும், 1974-77 களில் அத்தமிழ்க் கலைக்குழுவின் தலைவராயும், 1976-78களில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையின் நாடகவியல் பட்டயப்படிப்பிற் கான ஒருங்கமைப்பாளர்களில் ஒருவராயும், 1984 முதல் யாழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராயும், நுண்கலைத்துறைத் தலைவராயும், எல்லாவற்றிற்கும் மேல் தமிழ்நாடக வரலாற்றையே கலாநிதி பட்டத்திற்கான பிரதான ஆய்வுத்துறை யாகக் கொண்டவருமான (மௌனகுரு, நாடகம் அரங்கியல் பழையதும் புதியதும்; 1992; பக். xiii-xiv) கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களின் வகிபாகத்தைப் ‘பண்டைத் தமிழ் அரங்கம்’ ஊடாகப் பார்க்குமுன், நான் எனக்குள்ளே முப்பத்தாறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்வர வேண்டியதிருக்கிறது, ஒரு ஊதாரி மைந்தன் பாவசங்கீர்த்தன ஒப்புறவு பெற்ற கதையைப்போல!

கலாநிதி கா. சிவத்தம்பி, பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ‘Drama in Ancient Tamil Society’ என்ற கலாநிதிப் பட்ட ஆய்வேட்டை 1969இல் சமர்ப்பித்த வேளையிலும் 1970இல் அவர் கலாநிதிப் பட்டம் பெறுகிற வேளையிலும் நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளஅறிவியல் பயின்று கொண்டிருந்த ஒரு மாணவன்! அந்தப் பருவத்தில் அக்கறையோடு என்னுடன் கலந்துசாவி எனக்கு இடதுசாரிச் சாளரங்களைத் திறந்து காட்டிய சிலருள் முதலாமவர், என் அப்போதைய தமிழாசிரியர் முனைவர் கார்லோஸ்! திராவிட இயக்க வழக் காறுகளில் ஜீவித்துக்கொண்டிருந்த என்னைப் பொதுவுடைமை வழக்காறுகளில் திசைகாட்டித் திருப்பிவிட்ட ஒரு கைகாட்டி அவர்! இன்னொருவர் முதுகலையில் என் வகுப்புத் தோழனாயமைந்து போன முனைவர் தெய்வசுந்தரம்! எனக்கு வகுப் பெடுத்த என் ஆசிரியர்களே சரிவர அறிந்திராத ‘கொம்யூனிஸ்ட்’ ஆசிரியர்களான ‘அடியும் முடியும்’ தந்த விமர்சகர் கலாநிதி கைலாசபதியையும், ‘தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ தந்த கலாநிதி சிவத்தம்பியையும், படைப்பிலக்கியவாதி யான ‘செவ்வானம்’ கணேசலிங்கனையும் என் வகுப்பறைச் சுவர்களே பெருமூச்சு விடுமளவு பேசித் தீர்த்தவன் ‘அவன்’! அந்த வெப்பக்காற்றை அந்த வயதில் தயக்கத்தோடே சுவாசித்து.... சுவாசித்து... எதுவொன்றையும் சமூக நிறுவனமாகப் பார்க்கும் அவர்களின் இயங்கியல் அணுகுமுறையில் மயங்கி எனக்குள்ளும் புது இரத்தம் பாய்ச்சிக் கொண்டவன் நான்!

அது 1973 (அ) 1973! கலாநிதி சிவத்தம்பியையும் அவருடைய குடும்பத்தாரையும் தெய்வசுந்தரமும் நானும் நெல்லையப்பர் கோயிலைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றிருந்தோம்.  பூசாரி கொடுத்த திருநீறை அவர் பூசிக்கொண்ட போது, 1982இல் தஞ்சையில் அவரைப்பார்த்து, ‘என்ன பெரிய மார்க்ஸிய ஸ்ரண்ட் எல்லாம் பேசுகிறீர்கள்.  நீங்கள் எல்லாவற்றிற்கும் ‘முருகா’ என்கிறீர்களே’ என்று திரு.பொ.வேலுசாமி கேட்டதுபோல் (பேராசிரியர் கா. சிவத்தம்பி நேர்காணல், ஞானம் (37), ஜுன் 2003; பக்.14) நானும் பச்சைக் குழந்தை போல மனசில் எதையும் பூட்டி வைக்கத் தெரியாமல் ‘திருநீறு பூசுறீங்க....’ என்று அவரைக் கேட்கிறேன்.  ‘வேர்களிலிருந்து அறுந்தவர்களாக இருக்க முடியாது’ (மேலது) என்பது போலவே, ‘கருத்து வேறுபாடு இருப்பினும் மரியாதையை மதிக்கத் தெரியவேண்டும்’ என்று எந்த விகற்பமின்றி அவர் சொன்ன பதிலின் பொருள் அப்போதைக்கு எனக்கு உவப்பாயில்லா திருந்தது.  ஆயின் வெள்ளேந்தியாக உடம்பு முழுக்கப் பிரியத்தை அள்ளித் தெளிக்கிற அவரின் அறிவுசால் உடல்மொழி அப்போதைக்கு எனக்குப் பிடித்துப் போயிருந்தது.  அவரின் ஆய்வு, நாடக வரலாறு பற்றியது என்கிற தகவல்கூட, லேசுபாசாகக் கூட அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  என் ஈர்ப்பும் நாடகத் திசை நோக்கியே அமைந்து போகும் என்கிற திசைமுகமும் எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை!

அதன்பின் சனவரி 1981! மதுரையில் அய்ந் தாவது உலகத்தமிழ் மாநாடு! முதல் நாள் பொது அமர்வு! கலாநிதி சிவத்தம்பி, வழக்கறிஞர் சிதம்பரம் அமர்ந்திருந்த திசையில் அவர்களுடன் நானும்! மாநாட்டுக் கருத்தரங்க நடவடிக்கையில், திரை நடிகரும், அன்றைய முதல்வருமாயிருந்த எம்.ஜி.ஆர் பற்றிய தன் கட்டுரை தள்ளிவைக்கப்பெற்ற தகவலை மிகுந்த ஆதங்கத்துடன் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கலாநிதி சிவத்தம்பி! மேடையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் பெரியவர் வ.சுப்பையா பிள்ளை, ‘கட்டுரைகள் எதுவும் முகம் பார்த்துத் தேர்வு செய்யப்படவில்லை; அதன் தரம் பார்த்தே தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன’ என்று சொன்னபோது, ‘இல்லை; பொய் சொல்கிறீர்கள்... இவரின் கட்டுரையை யாரின் முகவரியைக் காக்க நீக்கினீர்கள்?’ என்று ஒற்றை மனிதனாய் நீண்ட அரங்கில் எழுந்துநின்று நான் குரல் எழுப்புகையில், ஒரு விநாடி அசாதாரண அமைதி அங்கு எழ, என்கை பிடித்து அமர்த்தி, ‘இது மாதிரியான கூட்டத்தில் பேசுகிற விசயமல்ல இது’ என்று உரிமையுடன் சொன்னதன் உள்ளர்த்தமும் அப் பொழுது எனக்குப் புரியவில்லை.  எல்லாமே அந்தப் பெரிய அரங்கில் ஒரு சிறு நாடகக் காட்சி போல் அத்தனை சுருக்கமாக முடிந்துவிட்டன. 

அந்த ஆண்டு டிசம்பரில்தான் நியுசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியீடாக ‘Drama in Ancient Tamil Society’யும் மாநாட்டில் நீக்கப் பெற்ற கட்டுரையும் நூல்களாக வெளிவந்திருந்தன.  அரசியல் காரணமாய் நீக்கப்பெற்ற கட்டுரை சிறுநூலானது தெரிந்த அளவு, நூலுக்காக மாற்றுருவாக்கம் செய்யப் பெற்ற அவரின் பிரதான ஆய்வேடு அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  அதற்குக் காரணம் 1978இல் நான் முனைவர் பட்டம் பெற்றபின், வாசிப்பை விடவும் ஆற்றுகைகளில் நான் அதிகம் ஆழ்ந்து போயிருந்ததாலும், வரலாற்றைவிடவும் நடிப்புக் கோட்பாட்டு வாசிப்புகளில் நான் ஆழ்ந்து போயிருந்ததாலும் இருக்கலாம்!

1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையாளனாக நான் அவரைச் சந்தித்துக் கொண்ட போதும், எவருடனும் ஒட்டாத அன்றைய என் மனநிலை காரணமாக எதுவொன்றும் என் மனத்தில் அழுத்தமாய்த் தங்கி இருக்கவில்லை.  தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு இதழான Tamil Civilization முதல் இதழில் தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத் துறையின் முதல் பேராசிரியர் திரு. இராமராசன் அவர்கள் ‘Drama in Ancient Tamil Society’ நூலுக்கு எழுதியிருந்த விமர்சனமும் கூட அப்பொழுது என் சிற்றறிவைத் தொட்டிருக்கவில்லை.  1995இல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது, அதில் கலந்துகொள்ள வந்திருந்த கலாநிதி சிவத்தம்பி, கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இம்மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘திரஜெடி’ யின் பிற்பாடு தான் அந்நூலை வாசிக்கும் வாய்ப்பு வந்தது.

1997இல் என் துணைவியார் முனைவர் செண்பகம், துளுமொழியிலமைந்த ஒரு நாடகம் (அ) திரைப்படத்தைத் தில்லி தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அது அப்படியே நம் சங்க இலக்கியப் பாடலை நினைவிற்குக் கொண்டுவருகிறது என்றும் நம் சங்கப்பாடல்களை அதுமாதிரியே சிறுசிறு நாடகங்களாகப் போடமுடியும் என்றும் ஒரு வேளை சங்க காலத்தில் நாடகம் அது மாதிரியாகத் தான் நிகழ்ந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை என்றும் என்னிடம் விவாதித்துக் கொண்டிருக் கையில் பேச்சு அப்படியே கலாநிதி சிவத்தம்பியின் ‘Drama in Ancient Tamil Society’ பற்றிச் சென்றதாக நினைவு.  அந்தக் காலத்தில் என் செண்பகத்தின் ‘கிரேக்க லிரிக் கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் ஒப்பீடு’ நூல் உருவாக்கத்தில் நான் உதவிக் கொண்டிருந்தபோது அதில் குறிப்பிட்டு இருந்த கலாநிதி சிவத்தம்பியின் ‘தொன்மைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்கிற குறிப்பு மீண்டும் அந்நூலைப் படிக்க என்னை ஞாபகப்படுத்தியது. 

அக்டோபர் 1986 இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சே. இராமானுஜம் பொறுப்பில் நிகழ்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கான நாடகப் பயிலரங்கில் கலந்து கொண்டோர்க்கு நூல்களைத் தேர்வு செய்து வழங்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது.  வழங்கிய நூல்களுள் இதுவும் ஒன்றாக இருந்தபோது, அது என் இருப்பிலும் தானே சேர்ந்துகொண்டிருந்தது.  அமரிக்கையாய் என் நூலாக அலமாரியில் அமர்ந்திருந்த அந்த நூலை, அப்பொழுதுதான் எடுத்துப் புரட்டும் சந்தர்ப்பம் வந்தது.  காலநேரம் அப்பொழுதுதான் கூடி வந்திருந்தது.  1981இல் வெளிவந்த நூலைப் புரட்டிப்பார்க்க 16ஆண்டுகள் நான் காத்திருக்க வேண்டியிருந்ததைப் போலவே, என் செண்பகத்தின் ஆசையையும் இன்னும் என்னால் செயல்படுத்த முடியவில்லை.  அதற்கான காலநேரம் இன்னமும் வரவில்லை.  ஆனால் அந்தப் பணியைத் தோழர் இன்குலாப் அவர்கள் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு சங்க காலத்தைத் தன் பார்வையில் நாடகமாக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரக் கூடியது.

என்துறை சார்ந்த நூலாயிருந்தும், நூல் வெளி வந்தது 16ஆண்டுகள் கழித்துதான் அந்நூலைப் புரட்டினேன் என்று சொல்வது கொஞ்சம் வெட்கக் கேடானதுதான்! இப்பொழுது பகிரங்கப்படுத்தா விட்டால் அது மனசொடு கிளத்தலாகவே போய் முடிந்திருக்கும்! இப்பொழுது 2005இல் ‘Drama in Ancient Tamil Society’ நூலின் தமிழ்ப்பதிப்பு ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்று குமரன் புத்தக நிறுவனத்தால் வெளிவந்திருக்கிறது.  அந்நூலின் முன்னுரையில் ‘தமிழ்நாடக வரலாறு பற்றிய குறிப்புகள் இந்நூல் பற்றி வந்த புலமைச் சஞ்சிகை களின் மதிப்புரைகளில் பேசப்பட்டதே தவிர, தமிழில் நாடக வரலாறு பற்றி ஈடுபட்டுள்ளோர் மத்தியில் அதிகக் கவனம் பெறப்படவில்லை.  இந் நிலைக்கு ஓரளவேணும், புறநடையாக விளங்கியவர் பேராசிரியர் ஏ.என். பெருமாள் அவர்கள்’(பக். ஒஎ) என்றும் ‘தமிழ்நாடக ஆய்வாளர்களிடையே அல்லது நாடக வரலாற்றாசிரியர்களிடையே இந்நூல் கணக்கில் கொள்ளப்பட்ட’ தென்று கூற முடியாது..... அங்கும் மிகச் சிலரே இந்நூலில் வரும் நாடக அம்சங்கள் பற்றிச் சிரத்தை காட்டினர்’ (பக். ஒஎi) என்றும் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டிருப்பதுதான் இந்தப் பாவ சங்கீர்த்தன ஒப்புறவிற்கான ஒரே காரணம்! அதற்கான ஆயத்தங்களை அப்பொழுதே நான் வளர்த்துக் கொண்டிருக்கைவில்லையே என்கிற வேதனையின் வெளிப்பாடு இது! நேரம் உண்மையில் இப் பொழுதுதான் கூடிவந்திருக்கிறது.  அதற்கான பிராயச்சித்தமே இக்கட்டுரை!

‘Drama in Ancient Tamil Society’ என்னும் தலைப்பில் அவர் ஆய்வு செய்து 35 ஆண்டுகள் முழுதாக ஓடிய பின்பும், ஆங்கிலத்தில் அது நூலாக வெளிவந்து 24 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னமும் அவர் குறிப்பிடுவது மாதிரியே ‘தமிழ் நாடகம் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் நாடக நிலைநின்று ஆய்வு செய்வனவாக உள்ளதேயன்றி, நாடகத்தைச் சமூக நிறுவனமாகப் பார்க்கும் கண்ணோட்டத்தில், அத்தகைய, கூறாமல் விட்டுவிட முடியாத அளவிற்கு முக்கியமான ஆய்வுகள் எதுவும் வரவில்லை என்றே கூற வேண்டும்’ (பக். xxxv).  இது அந்த நூலின் பலமா அல்லது தமிழ்க் கல்விச் சூழலின் பலவீனமா என்பதை அவசியம் கண்டுணர வேண்டியதிருக்கிறது.  ஒருவேளை நூல் தமிழில் வந்திருக்கிற நிலையில் கணிசமான கருத்தாடல்களுக்கு உட்படும் வாய்ப்பு உண்டு என்று நம்பலாம்.

‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்பதை விடவும் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரங்கியல்’ என்பது மிக வசதியான உருவாக்கி யிருக்கும் மனப்படிப்பிற்கு ஒத்ததான - ஒரு தலைப்பாக இருந்திருக்கக்கூடும்! ஆனால் ‘ஆராய்ச்சி என்பது நிரந்தரப் புலமைத் தேடல்..... செய்யும் வேலை கூடக்கூட அந்த அவா கூடிக்கொண்டே போகும்..... ஒரு நூலுக்கோ அல்லது ஒரு கட்டுரைக்கோ தரவுகள் சேர்க்கப்படுவதுடன் அது நின்றுவிடுவ தில்லை (பேராசிரியர் சிவத்தம்பி நேர்காணல், ஞானம் (40), செப்டம்பர் 2003; பக்.19). செய்யும் வேலை கூடக்கூட அவா கூடிக்கொண்டே போகின்ற ‘மகுடி ஆட்டச் சவால்’ இந்தத் தலைப்பில்தான் இருக்கிறது.  கலாநிதி சிவத்தம்பி விவாதிக்க எடுத்துக் கொண்டிருக்கும் இலக்கிய வரலாற்றுக்கால எல்லைக்குள்ளே, ‘நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன்இயம் கடுப்பக் கயிறு பிணித்து’ (பெ.பா.ப.55-56), ‘பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்’, (பட்டினப்பாலை, 113) போன்ற நாடகம் சார்ந்த சொல்  வழக்குகள் பயின்று வந்திருப்பதாலும், இதில் வரும் ‘நாடகம்’ என்னும் சொல் நடனத்தைக் குறிப்பதாக இருந்தபோதும், ‘நாடகம்’ என்று குறிப்பிடுவதில் தவறு ஒன்று மில்லை என்றேபடுகிறது.  உண்மையில், தமிழ் நாடகம் தமிழகத்தின் மிகப்பெரிய கலைவடிவமாக முகிழ்க்காது போனமைக்கான காரணத்தையே இந்த ஆய்வு மேற்கொண்டிருக்கிறது என்று கூறுவதே சரியாயிருக்கும்!

பண்டைக் காலத் தமிழரின் நடன, நாடகக் கலை மரபுகளின் முக்கியத்துவம் பற்றி, தமிழறிஞர்கள் பலர் அழுத்திக் கூறியுள்ளரெனினும் கி.மு.க்களில் நிகழ்ந்த கிரேக்க நாடகப் பதிவுகளைப் போல அத்தனை துல்லியமான பதிவுகள் எவையும் நம்மிடம் கிடையாது.  மத்திய கால உரையாசிரியர்களால் குறிப்பிடப்பட்ட, மறைந்துபோன நூல்களைத் தவிர நம்மை நிரூபிக்க நம்மிடம் வேறு எதுவும் இல்லை.  கிடைக்கின்ற சான்றுகளிலிருந்தும் சில குறிப்பிட்ட தகவல்களையே பெற முடிகிறது.  இந்நிலையில் நாடகம் என்பது சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்ட

ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாக ஆராயப்பட வேண்டும் என்பதால் நாடகத்தின் தோற்றம் பற்றிய கொள்கைகள் இவருக்குத் தேவைப்படு கின்றன.  அதற்கான கொழுகொம்பாக அமைந்தது, கிரேக்க நாடகங்களின் தோற்றம், அவர்களின் மதநம்பிக்கையின் தளமாக அமைந்த சடங்குகளின் ஊடாகவே நிகழ்ந்தது என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிற கொள்கையாகும்.  இதற்கான முறை இயலாக, பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனின் தயோனிசியஸ் வழிபாட்டில் இடம்பெற்ற ‘டிதிறாம்ப்’ என்னும் பாடல் ஈஸ்கிலஸின் நாடகவாக்கக் கட்டத்துக்கு வரும்பொழுது பெறும் மாற்றங் களுக்கான வரலாற்று இயங்கியல் பொருள் முதல் வாதஅணுகுமுறையாகும்.  அம்முறையைச் சரியாக உபயோகிப்பதற்குக் கிரேக்க நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியைப் பூர்வாங்கமாக எடுத்துக் கூறி, அதன் பின்னர் தமிழில் கிடைக்கக்கூடிய சான்றுகளை மதிப்பிடுவதும், எடுத்துக்கொள்ளப் பட்ட காலத்துக்குரிய தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றியதொரு பருவரைவுச் சட்டகத்தைத் தருவதும் அவசியமாகின்றன.  கிரேக்க நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியின் தேவையின்றியுமேகூட, தமிழ்நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட முடியும்.  தமிழ் நாடகத்தைக் கொண்டு நிறுவுகிற முதல் தேவை யிருக்கிறபடியால், அதை ஒப்புமையாக்கம் என்னும் ஆய்வு முறையியலின் வழி நிறுவ முயலும் அறிவியல் பண்பு இங்குக் காணப்படுகிறது.  அது உவப்பைத் தரக்கூடியது.  இவ்வாறு ஆய்வு முறைமையைத் தீர்மானித்த பிறகு கி.பி.600 வரையிலான காலத்துத் தமிழ்க்கூத்து நிலை வளர்ச்சிகளை இனங்காணுவதாக அமைகிறது இவ்ஆய்வு!

‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்னும் இவ்ஆய்வு பத்து இயல் பகுப்புகளைக் கொண்டிருக்கிறது.  அவையாவன

1.     ஆய்வுப் பிரச்சினைகளும் முறைமையும்

2.     கிரேக்க நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

3.     ஆய்வு மூலங்கள்

4.     ஆய்வுக்குரிய காலத்துத் தமிழகச் சமூக வரலாறு : பின்புலக் கட்டமைப்பு

5.     வீரயுகத்தில் நடனமும் நாடகமும்

6.     நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும்

7.     வணிக மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும்

8.     நடன நாடக வடிவங்களின் இயல்பும் தொடர்ச்சியும்

9.     கிரேக்கத்திலும் தமிழ்நாட்டிலும் நாடகக் கலை நெறி முறைகள் பற்றிய நோக்கு.

10.    தோற்றம் வளர்ச்சியில் தொழிற்பட்ட காரணிகள்

என்பவையாகும்.

கிரேக்க இலக்கியத்தின் பிரதான செய்யுள் வடிவங்கள் அவை முதிர்வுற்ற கால அமைப்பின் படி காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல், நாடகம் எனப்படும்.  கி.மு. 1600-800 வரை காணப்பட்ட காலம் கிரேக்கத்தின் வீரயுகம் எனப்படும்.  வீரயுகம் மன்னராட்சியின் வெற்றியையும் வீழ்ச்சியையும் கொண்டது.  காப்பியம் மன்னராட்சியுடன் வளர்ச்சி பெற்று மன்னராட்சியுடனேயே தானும் வீழ்ந்து விடுகிறது.  கிரேக்க இலக்கியத்திற்கு நிலப்பிரபுத்துவ யுகத்தின் பங்களிப்பு தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகும்.  அடுத்து, தெளிவாகக் காணத்தக்க கிரேக்க வரலாற்றுக் காலகட்டம் வல்லாட்சியுகம் (Tyrants).  கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிரபுத்துவ ஆட்சியின் வீழ்ச்சியுடன் நடுத்தர, வணிக வர்க்கக் குடிமக்களின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்ட காலம் இது! இக் காலத்தில் நாடக வடிவங்களில் ஒன்றான ‘திரஜெடி’ கலை வடிவமாக மேற்கிளம்பியது.  கிரேக்கக் கடவுள் தயோனிசிய விழாவின் பல நிகழ்ச்சிகளுள் ‘திரஜெடி’யும் ஒன்று! பின் ‘திரஜெடி’ கலை வடிவத்தின் வரலாற்றில் தயோனிசியஸ் பண்பு படிப்படியாகக் கைவிடப்பட்டது.  சடங்கு, சமயச் சார்பற்றதாக மாறியதை இது காட்டுகிறது.  இவ் விவரங்கள் நாடக வளர்ச்சிக் காரணிகளாக

அமைகின்றனவே தவிர, நாடகத்தைப் பற்றி, உதாரணமாக அதன் கட்டமைப்பு, ஆற்றுகை போன்ற விடயங்களைப் பற்றிக் கூறவில்லை.  ‘திரஜெடி’ தயோனிசியஸைக் கௌரவிக்க எழுந்த ‘டிதிறாம்’பிலிருந்து தோன்றியதெனில் அதன் கருப்பொருள் தயோனிசியத்தன்மை வாய்ந்ததாக அல்லாது வீரயுகத்து ஐதீகங்களை ஏன் கொண்டிருக்க வேண்டுமென்பதற்கு விளக்கம் கூறுவது கடினம்.  ‘திரஜெடி’க்குப் பின்பு ‘கொமேடி’ (மகிழ்நெறி நாடகம்) தோன்றியது.  கிரேக்க நாடகம் தூய அதீனிய வளர்ச்சியாகவே தென்படுகிறது.  எனவே கிரேக்கத்தின் மற்ற அரசுகளில் நாடகம் வளர்ச்சி பெறவில்லையோ என்ற கேள்வி எழுவதும் இயற்கை! இந்த வகையில் தமிழ்நாடகத்திற்கான சடங்கு மூலங்களைத் தேடி நகர்கிறது இவ்ஆய்வு.

முதலில், கி.பி. 600 வரையிலான தமிழ் இலக்கியச் சான்றுகளை இலக்கியம், நாணயவியல், தொல் பொருளியல், சாசனவியல் அடிப்படையில் ஆய்வு மூலங்களைக் காலச் சட்டகங்களுக்குள் பொருந்த வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  கிரியா 2003இல் வெளியிட்டுள்ள திரு ஐராவதம் மகா தேவன் அவர்களின் தமிழ்ப் பிராமி பற்றிய ‘Early Tamil Epigraphy’ என்னும் பெருநூலை ‘பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல் - ஐராவதம் மகாதேவனின் ஆய்வு வெளிக்கொணரும் சில முக்கிய விடயங்கள் பற்றிய ஓர் ஆய்வுக் குறிப்பு’ என்று ஏறக்குறைய 50 பக்கங்களில் தமிழ்ப் பதிப்பில் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் விவாதித்து இருப்பது தமிழ்ச்சூழலில்  - தமிழறிஞர்கள் சூழலில் - மிகவும் முக்கியமானது.  இந்த விவாதம் 1981 இல் வெளிவந்த ஆங்கில நூலில் காணமுடியாதது.  ஆயினும் ஐராவதம் மகாதேவனின் கால முடிவு களுடன் கலாநிதி சிவத்தம்பியின் முடிவுகள் பெரும் பாலும் ஒத்துவருவதானது அவரின் ஆய்வு முறையின் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்துகிறது.  அந்த வகையில் மரபுத் தமிழறிஞர்களின் பதைபதைப்பிற்குத் தீனிபோடும் விதமாக, நூல்களின் இயல்புகளின் ஒப்புமை அடிப்படையில் கால வகைப்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

1.     கி.மு.100முதல்கி.பி. 250 வரை-எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (கலி, பரிபாடல், திருமுரு காற்றுப்படை தவிர) நூல்கள்.

2.     கி.பி. 250 முதல் கி.பி. 450 வரை - தொல்., திருக்குறள், கலி, பரிபாடல், திருமுருகாற்றுப் படை.

3.     கி.பி. 450 முதல் கி.பி. 600 வரை - சிலப்பதி காரம்.

அரசியல் வரலாற்றில் மூன்று காலகட்டங்களில் இலக்கியங்களைச் சமப்படுத்துவதன் மூலம் அவற்றின் சமூக வெளிப்பாடுகளைப் பொருத்து, அவை வீர யுகம், நிலப்பிரபுத்துவம், வணிக மேலாண்மைக் கால நூல்களாக இனங்காணப்படுகின்றன.  அவ்வக் காலங்களின் சமூக வரலாற்றுப் பின்புலங்களும் பேசப்படுகின்றன.

வீரயுகச் சமூகம் என்பது குலக்குழு நிலையி லிருந்து சில்லோராட்சிக்கு அல்லது தனியாட்சிக்கு மாறுகின்ற நிலையைக் குறிப்பதாகும்.  ஒரு மன்னனுக்கு அதிகாரம் சேர்ந்தவுடன், அவன் தன் சமூகத்திட மிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள் கிறான்.  அவ்வேளை, குலக்குழு அமைப்புக்கே உரிய தனிச் சமூக அமைப்பு சிதறுகின்றது.  எனவே இந்த மாற்றம் காரணமாக, பழைய சமூகப் பெறு மானங்கள் மாறத் தொடங்குகின்றன.  பழைய நிறுவனங்கள் புதிய சூழலுக்கேற்ப அமைத்துக் கொள்ளப்படுகின்றன.  சில புதிய நிறுவனங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன.  இவ்வாறாக ஒரு யுக மாற்றம் நிகழ்ந்தேறுகின்றது.

சங்கப்பாடல்கள், அக்காலத்து முக்கியமான (நாடகச்) சடங்குகள் பல பற்றிய தெளிவைத் தருகின்றன.  ‘வெறியாட்டு, வள்ளைக்கூத்து (வாடா வள்ளி) போன்ற சடங்கியல் நிகழ்வுகள் நாடகங் களாக வீரயுகத்தில் இருந்தன’ (K. Sivathambi, 1981; 231) என்பது ஆய்விற்குரியது.  இலக்கியத்தின் வீரயுகச் சார்பினை வைத்து அக்காலத்துக்குரிய போர்க்கள அனுட்டானங்களைப் பற்றி ஒரு முழுமையான பார்வையைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.  அவ்வாறான சடங்குகளில் பேய் மகளிரின் ‘களவேள்வி’, பெண்கள் பங்கேற்கும் ‘வெறியாட்டு’, கன்னிப் பெண்களின் ‘தைநீராடல்’, ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் திருமண ஆதீகத்துடன் தொடர்புடைய ‘வாடாவள்ளி’, விவசாயச் சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகள், பெண்கள் பங்குபெறும் ‘குரவை’, ‘துணங்கை’ ஆகியவற்றை விவாதிப்பதன் மூலம், அவை பாடுநர் களையும் அவர்களின் அளிக்கைகளையும் இனங் காண உதவுகின்றன. 

பாணர், புலவர், அகவுநர், புலவர், (புலவர்களின் பெயர்களில் கூத்து கலந்து வந்திருந்தபோதும், அப்புலவர்கள் கூத்து மற்றும் நாடகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாக எந்தப் பதிவும் இல்லை.) கோடியர், வயிரியர், கண்ணுளர், (கோடியர், வயிரியர், கண்ணுளர் என்போரில் கோடியரும் வயிரியரும் உபயோகித்த இசைக் கருவியின் பெயரால் அழைக்கப்பட்டனர்’ (ஐbனை; 231) என்பதும் விவாதத்திற்குரியது.) விறலியர், கூத்தர் ஆகிய குழுவினரைப் பற்றிய ஆழமான ஆய்வு அச்சமூகத்து ‘நாடகம்’ - ‘நடனம்’ பற்றி விளங்கிக்கொள்ள நம்மை இட்டுச் செல்கிறது.  இவற்றிலிருந்து, நாடக - நடன அளிக்கை வடிவங்கள் சில, நிச்சயமாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. நடனத்தையே குறிக்கிறது என்றாலும் அது வெறும் நடனத்தைக் குறிக்கிறதா அல்லது காட்சி நடனமாகக் காட்டுகிறதா என்பதற்குத் தெளிவான பதில் இல்லை.

‘.................................................... கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே’      (புறம். 28)

என்னும் பாடல் கூத்தாடு களத்தைப் பேசுகிறது.  ஆனால் ஆடுகளம் என்பது உயர்ந்த மேடையா அல்லது தரையா என்பதற்கு எந்தக் குறிப்புகளு மில்லை.  ஆயின் ‘வெறியயர் களம்’ என்னும் சொல் லாட்சியைக் கொண்டு ‘களம்’ என்பது உயர்ந்த மேடையைச் சுட்டவில்லை என்னும் கருத்திற்கு வருகிறார்.  ஒப்பாக்கத்தின் அடிப்படையில் முடிவிற்கு வரும் முறையியலைக் கொண்டிருக்கிறார்.  இது எல்லாமேகூட நீண்ட ஆய்விற்குரிய களமாக அமையக்கூடியது.  நாடக மகளிர், ஆடல் மகளிர், ஆடுகளமகள் என்று குறிக்கப் பெற்றுப் பெண்கள் பங்கேற்கும் பல சடங்கு நிகழ்வுகள் எல்லாம், நாடகம் என்பதை விடவும் நடனங்களாக இருந் திருக்க வாய்ப்புண்டு.  நாட்டிய சாஸ்திரத்திலும் ‘நாட்ய’ என்பது நாடகத்தையே குறித்து நின்றது.

‘வள்ளிக்கூத்து’ போன்ற சடங்குகள், பாடுநர் களின் அளிக்கைகள்கூட, சமயப் பின்னணியை வெளிப்படுத்துகின்றன.  ஆனால் இவ் அளிக்கை களின் உள்ளடக்கம் பற்றி யாதும் அறிய முடியாது உள்ளது.  கூடவும், நமக்குக் கிடைத்த மிகப் பழைய இலக்கியங்களும் சில சடங்குகளை முழுமையாகப் புனர் நிர்மாணம் செய்வதற்கான பொருத்தமான தகவல்களைக் கொண்டிருக்க வில்லை என்பது தெளிவாகின்றது.  ஆயினும், ஊக உலகிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் சில நாடகத் தொடர்பு உடைய சான்றுகளும் காட்டப்படுவது மிக முக்கிய மானதாகும்.

‘வெறியர் வியன்களம் பொற்ப வல்லோன்

பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின்’  அக. 98)

என்னும் வரியில் பொம்மையாட்டம் பற்றிய பதிவு அமைந்திருக்கிறது.  ‘ஆடுமகள் கயிறாடும் ஆரியக் கூத்து’ ஆடிய குறிப்பு நற்.95, குறி.பா. 189-192 வரிகளில் காணமுடிகிறது.  பொம்மலாட்டம் தொடங்கிக் கழைக்கூத்து வரை, தொழில்முறைக் குழுவின் சான்றுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது, நிகழ்த்துகலை ஓரளவிற்குச் செழிப்பான மரபாக வளர்ச்சியுற்றிருந்தது என்று கொள்ள முடியும்.  ஆயினும், கிடைக்கக்கூடிய சான்றுகள், செழிப்பான நாடக மரபாக அது உருவாக

ஏன் சமூகம் ஊக்குவிக்கவில்லை என்பதையும், கிரேக்கத்தில் நாடகக்கலை பேணப்பட்டது போலத் தமிழ்நாட்டில் ஏன் முழுமையாகப் பேணப்பட வில்லை என்பதையும் உணர்த்த முயல்கின்றன.

நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் பிராமணிய வழிபாடு, பிரதேசப் பாரம்பரிய வழிபாட்டுடன் இணைக்கின்ற முயற்சிகளுடன் காணப்படுவதாகவும், சில பழைய வழிபாடுகள் மெல்ல மறைந்ததன் பின்னால், பிராமணிய வழிபாடு விரைவாக வளர்ச்சி பெறுவதையும் காணமுடிகின்றது என்கிறார் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள்! தத்துவப் பின்னணியில் ‘கூத்தாட்டு அவைக்குழாம்’, திருக்குறள் (332), பழமொழி (343) ஆகியவற்றில் பதிவாகி இருப்பதை எடுத்து விளக்குகிறார்.  வெறி யாட்டு (பரி.5;115), குரவைகள் - குறத்தியரின் குரவை (கலி. 39), வேட்டுவர் குரவை (திருமுருகு. 194-7), ஆய்ச்சியர் குரவை (கலி. 102, 103, 104, 106), துணங்கை (கலி. 66, 70,73; திருமுருகு. 17-57), தை நீராடல் (கலி. 58; பரி.11) என்று பழைய மரபுகள் தொடர்வதைக் காணமுடிகிறது என்கிறார். 

பாணர், விறலி, புலவர், கூத்தர் ஆகியோரும் தொடர்கின்றனர்.  ‘நாடக வழக்கு’ என்பது புனைந்துரை வகை என்பதாகக் கொள்ளப்பட்டு பரதருடைய ‘நாட்யதர்மி’யுடன் இணைந்து பொருள் கொள்வதைக் காணமுடிகிறது.  ‘பண்ணை’ என்பதற்குப் பேராசிரியரின் கருத்தான நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டு என்பதனுடன் ஒத்துப்போகிறார், பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் (ஐbனை; 250)! இது விவாதத்திற்குரியது.  கலித்தொகை, பரிபாடல்களில் நாடகத் தன்மைகள் மிகுந்திருப்பதை அவற்றின் சொல்லாடல்களைக் கொண்டு விளக்கும் பேராசிரியர் ‘வீழ்கைப் பெருங் கருங்கூத்து’ (கலி.65) என்பது கருத்தளவில் காம இச்சையைத் தூண்டும் ஆட்டமாக இருக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறார் (ஐbனை; 251-271).  இந்தக் காலகட்டத்தில் ஆடுவோரிடையே பரத்தமை முக்கிய இடம்பெற்றிருப்பதை, தொல்., கலி., பரிபாட்டு, குறள் ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கிறார்.

சாதிமுறை சமூகத் தீண்டாமைக்கு உதவியதுடன், உள்தொடர்புகளையும் தடுத்தது.  அசமத்துவ வளர்ச்சி, புவியியல் அம்சமாகத் தொடங்கி, சமூகப் பண்பு களைப் பெறத் தொடங்கிற்று.  அது கலைகளையும் விட்டு வைக்கவில்லை.  கலைகளின் அசமத்துவ வளர்ச்சி, அடுத்த காலகட்டத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கிறது என்கிறார் (கா. சிவத்தம்பி, 2005; 275).

வணிக மேலாண்மைக் காலத்தில், பௌத்த, சமணத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக, இந்து மதம், பிராமணிய - சுதேசிய வழிபாடுகளினது இணைவுகளுடன் மொத்தப்பேறாகப் பிரசித்தி பெற்ற மதமாகவும், இயக்கமாகவும், பக்தி இயக்க மாகவும் வளர்ந்தது.  இக்காலப் பிரிவின் முடிவில் அந்த வளர்ச்சியைக் காணலாம்.  இக்காலத்திற்குரிய எல்லா நூல்களிலும் சிலப்பதிகாரம், அதனுடைய விடயம், நோக்கு என்பவற்றால் அக்கால நாடக மரபு பற்றிய மிக அதிகமான தகவல்களைத் தருகின்றது (மேற்படி; 279).

சடங்கு நிகழ்வுகளில் வேறுபட்ட ஐதீகங்கள் அடங்கியுள்ளதானது, சமஸ்கிருதமயமாக்கம் வலுப் பெற்றதைக் காட்டுகிறது.  ஆடல் மட்டுமல்லாது, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி போன்றனவும் இந்நிலையைத் தெளிவுறுத்துகின்றன என்கிறார் (மேற்படி; 329).  பண்டைய தமிழகக் கலைஞர்கள் எப்பொழுதும் முழவுடனேயே பேசப்படுகின்றனர்.  இதைக் கேரளத்தில் இன்றும் சாக்கையர் கூத்தில் பயன்படும் ‘மிழவு’டன் பொருத்திப் பார்க்கிறார்.  பிண்டி, பிணையல் மேலும் ஆய்விற்குரியதாய் இருக்கிறது.  வட கேரளத்தின் பெருஞ்சடங்கான திரையாட்டம், வேட்டுவ வரியுடன் ஒப்புமையுடைய தாயிருக்கிறது என்பதையும் குறிக்கிறார்.  ‘நலம் பெறு கண்ணுளர்’, ‘சாந்திக் கூத்தி’ன் ஒரு பிரிவினராகக் கொள்ளப்படுவதால், கண்ணுளர் ஒரு காலத்தில் குழுவினராக இருந்து இக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்னும் கருதுகோளை முன் வைக்கிறார்.  பாணர், தொழிற்கலைஞர் வாழ்கின்ற அதே வீதியில் வாழ்ந்திருந்தும், கலைஞர்களில் ஒருவராகப் பாணர் கருதப்படவில்லை; இழிந்த பார்ப்பன‌ராக, அம்பணவர் என்று குறிக்கப்படு வதாகக் குறிக்கிறார்.  இது பாணரின் சமூக அடை யாளம், வீரயுகக் காலத்தில் காணப்படுவதினின்றும் மங்கிப் போயிருப்பதாகக் கொண்டு கூட்டிப் பொருள் தருகிறார்.  இவை மிகக்குறைவான எடுத்தாளுகைகள்.  இவை அனைத்துமே மீள்ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை!

தமிழ் இலக்கியத்தில் சங்ககாலம் தொடங்கி சிலப்பதிகாரம் வரையிலான நெடும்பரப்பை எழுத் தெண்ணிப் பார்த்து அதில் நடனம், நாடகம் பற்றிய பல்வேறு பதிவுகளையும் அவற்றின் கொண்டு கூட்டலாய்ப் பொருத்திக் காட்டுவதிலாகட்டும், அவற்றின் சமூகப் பின்புலத்தைக் கைக்குக் கிடைத் திருக்கும் சான்றுகளின் அடிப்படையிலும் கிரேக்க, தமிழ்ச் சமூகங்கள் நடனங்களை, நாடகங்களை வடிவமைத்தமுறைமைகளை ஒப்புமையாக்கங்களின் படியும் விளக்கிக் காட்டுவதிலாகட்டும், புதிய ஆய்வுக் களங்களுக்கான தூண்டுதலை இந்நூலில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு கருத்தும் உருவாக்கித் தருவதிலாகட்டும், ‘Drama in Ancient Tamil Society’ என்னும் இந்நூல் மிகவும் முக்கியமான நூல்!  இதற்கு இணையான நிலையில், தமிழ்நாடக வரலாறு பேசும் நூல் இதற்கு முன்னும், இந்நூல் வெளிவந்த பின்னும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.

நாடகத்துறையினர் மட்டுமின்றி, தமிழ் இலக்கியத் துறையினருக்கும் இந்நூலின் மேல் விவாதம் புரிய எண்ணற்ற காரணங்களிருக்கையில், ‘முத்தமிழ்’ பற்றிப் பேசும் அவர்களும் இந்நூலை ஏன் காணாது விட்டனர் என்பதற்குத் தெளிவான பதிலில்லை.  ஒருவேளை, நூல் ஆங்கிலத்தில் வந்தது ஒரு காரணமாயிருக்கலாம்.  ஆயின் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிற நிலையிலுங்கூட இந்நூலின் மேலான ஆய்வியல் பார்வை, இலக்கியத்துறையினரிடமிருந்தும், நாடகத் துறையினரிடமிருந்தும் எழுந்திருக்காதது, காலந் தாழ்ந்தே இங்கு எழுத்தாகியிருப்பது, நம் அறிவுத் துறையினரின் செயல்பாட்டை ஐயங்கொள்ள வைக்கிறது என்பதைக் கூறத்தான் வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் 2005 டிசம்பர் 12-14 தேதிகளில், பேராசிரியர் முனைவர் வீ.அரசு முயற்சியால், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசை வழிகளும்’ என்னும் தலைப்பில் விவாதத்திற்கு வழியமைத்துக் கொடுக்க, வகை செய்திருந்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.

இந்நூலின் கருத்துகள் எழுப்பும் புதிய புதிய சிக்கல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களுக்கும் வழி ஏற்படுத்தித் தரக்கூடியவையாய் உள்ளன.  ஆயின், அத்தகைய தரத்திலான ஆய்வுக் கட்டுரைகளும் இங்கு அதிகம் வெளிவந்திருப்ப தாகவும் தெரியவில்லை.  ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தலைப்புகளாக இந் நூலின் பல சிக்கல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இக்கருத்துக்களின் மீது புதிய ஒளி பாய்ச்சப் பட்டிருக்கும்.  அதுவும் நடைபெற்றதாகத் தெரிய வில்லை.  இந்நூலின் கருத்துகளை மீள் பரிசீலனை செய்வதற்காக எழுதப்பெற்ற கட்டுரைகளே இதைத் தொடர்ந்து அமைந்திருக்கும் மூன்று கட்டுரை களுமாகும் என்பதே ‘Drama in Ancient Tamil Society’ நூலின் மேலான என் எளிய பங்களிப்பாயிருக்கும்.

நோக்கீட்டு நூல்கள்

1.     சிவத்தம்பி, கார்த்திகேசு., பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2005.

2.     Sivathambi, K., Drama in ancient Tamil Society, NCBH, Chennai, 1981.

Pin It