ஆன் ஃபிராங்க்

ஏதோ காரியமாய் வாயிலில் தென்பட்டவள்
இரண்டு மூன்று முறை என்னைப் பார்த்திருக்க வேண்டும்
“என்னாயிற்று” எனத் திடுக்குற்ற அந்தச் சிறுபெண்ணிடம்
அந்நியம் அச்சமெனும் பண்புகள் தீண்டியிரா
அபூர்வ மணம், சுடர் ஒளிக் கண்கள்
இன்பமே வடிவான வாழ்வினைப்
பாடும் புன்னகை, என் பொருட்டே சாம்பிய இதழ்களில்
அக்கணமே என் உயிர் பற்றிக் கொண்ட உறவை
நான் பதிலளித்த விதத்தில்
அவளும் தான் உள்ளுணர்ந்திருக்க வேண்டும்
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும்
என் நெஞ்சைவிட்டகலாத நினைவுப் புதையலே!
என் செல்வமே!
இன்று இக்கவிதைக்காக வேண்டி
உனக்கு ஒரு பெயர் சூட்டுகிறேன் : “ஆன் ஃபிராங்க்”
அந்த மாநகரத் தெருக்களில்
என் நண்பன் வகிக்கும் இல்லமதைக்
கண்டாக வேண்டிய நெருக்கடியில்
இடக் குழப்பமாகி
நான் சுற்றிக்கொண்டிருந்தைக் கண்ட போதுதான்
என் உயிர்தொடும் குரலில்
நீ என்னை வினவினாய்
பளு நீங்கிய உள்ளத்துடன் நானும் என்னைப்
பகிர்ந்துகொண்டேன் உன்னிடம்
ஆனால் எனக்காக இரங்கிநின்ற
உன் அருள்முகத்தின் எல்லையற்ற தீவிரம்தான்
இந்தப் பேரண்டத்தில் உயிர்கள் உள்ளவரை
தொடர்ந்து வரும்
அணையா காதற் கனல் என்பதையும்
வேதனையாலும் இவ்வுலகத் துயர்களாலும்
மாந்தர் துன்புறும் வேளைகளெங்கெங்கும் தோன்றி
அருட்பணியாற்றும் பேராற்றல் என்பதையும்
வாழ்வை, என்றும் வாழ்வதற்குரியதாக்கும் பெருங்கருணை என்பதையும்
அன்று
இத்துணை முற்றுறுதியுடன்
நான் அறிந்திருக்கவில்லையோ, ஆனி?

* இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன சிறுபெண். 13, 14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள்.


அன்றாட வாழ்வின் ஆகாசவெளியில்

புதிராய் எரிந்துகொண்டிருந்த
என் துயரின் இரகசியம்
அறிந்துகொண்டேன் என் அன்பா
தன் மறைவையே
ஓர் அழிவின் சமிக்ஞையாக்கி
நீ உருவாக்கிய வெற்றிடம்
எம்மைத் தகிக்கிறது
எமது அன்றாட வாழ்வின் ஆகாசவெளியில்
சிறகசைத்துக் கொண்டிருந்த பாடல் நீ
எம் அனைத்து அறியாமைகளினதும்
புறக்கணிப்புக்காளான எம் உள்ளொளி
எம்மைத் தகிக்கிறது அன்பா
நீ உருவாக்கிய வெற்றிடம்
சின்னச் சின்னத் தானியமணிகளையும்
சிறுசிறு புழுக்களையும்
எரிபொருளாய்க் கொண்டு
கனன்று கொண்டிருந்த
நின்பாய்ச்சல்கள் எங்கே?
பால் மணக்கும் சிசுவின்
பட்டுக் கன்னங்களில்
தாய் பதிக்கும் முத்தம்போல்
மென்மையான உன் அமர்வுகளால்
எம் பசிய உணர்வுகளின்
மரகதப் பூங்கிளைகள்
அசைந்தாடியது எங்கே?
உறவின் வாழ்வின்பத்தை
எமக்குக் கற்றுத் தந்தபடியே
எம்மைக் கண்காணித்தபடியே
எங்களோடு எங்களாய்
இயைந்து வாழ்ந்துகொண்டிருந்த
எம் நலவாழ்வின்
ஆதார சுருதி எங்கே?
இராட்சச உருவமும்
கொடூரமான கால்நகங்களும்
கில்லட்டின் வரிசைபோன்ற தாடைகளும்
விண்ணிற் பறக்கும் புள்ளினத்திற்குப்
பொருத்தமானதில்லை என
உள்ளி உள்ளி உள்ளி
உரு சிறுத்த உடலுடன்
மனிதர்களை நெருங்கிவந்த
சின்னஞ்சிறு புள்ளே
உனது குட்டி அலகினில்
நீ கொத்திக் கொண்டு வந்திருக்கும்
சேதியினுக்குச் செவி திறக்கா
மனிதர்களை எண்ணி எண்ணி மாய்ந்தோ
நீ மறைந்து போனாய்?
விழிகளற்றுச் சுழலும்
மின்விசிறிகளைக் கண்டஞ்சினையோ?
மனிதர்களின் பேராசைகளைக் கண்டஞ்சினையோ?
எங்கு சென்றிருப்பாய் நீ?
காடுகளில் வசிப்பதில்லை
பாலைகளில் வசிப்பதில்லை
மனிதர்களின் வாழ்விடங்களில் மட்டுமே
வாழும் அபூர்வ சொந்தம்
அன்பும் தயையுமாய் வாழ்ந்த சான்றோரோ
உன்னை அடைக்கலாங் குருவி
என்றழைத்தார்கள்?

நதியில் குளித்துக் கொண்டிருக்கும் ஒற்றைப் பெண்

நதிநோக்கி நடந்துவந்துகொண்டிருந்தேன்.
நதியிலறங்கும் படிக்கட்டுகளின்
தாளம் கேட்டபடி
படிக்கட்டுகள் நோக்கிக்
குளிக்கத் தொடங்கியிருந்த நீ
என்னை நதியாக்கவோ
நதிநோக்கித் திரும்பிக் கொண்டாய்?
எத்தகைய நற்பேற்றினை
நல்கினாய் நீ எனக்கென்பதறியாதே
ஒற்றையாய்க் குளித்துக்கொண்டிருக்கும் பெண்ணே!
ஒரு பெருவிதிக்குள் ஆட்பட்டவனாய்
நான் உன்னை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தேனோ?
பாதாதி நெஞ்சம் நதிஅணைந்த உடலுடன்
எனைக் குறித்த விநோதம் எண்ணியோ
ஓர்கணம் உள்மடிந்தாய்?
மூச்சற்று மூழ்கி எழுந்த காலை
நீ நனைய, உன் கூந்தலும் நனைய
சுற்றியுள வயல்களும் தென்னைகளும் புன்னைகளும்
பாசத் துடிதுடிப்பால் தாங்களும் நனைந்ததறியாயோ?
உன்னைத் தன் கண்ணுக்குள்
பொதிந்து காக்கும் பேரியற்கையின்
செல்லப் புதல்வியே,
எப்படி உனை இந்தப் பேரண்டம்
நெக்குருகிப் பார்த்துக் களித்துக்கொண்டிருக்கிறதென்பதை
அறியாயோ?
திடீரென விழிப்புற்று
உன் அழகு உடலினுக்காய் நெய்யப்பட்ட
ஆடையினை ரசிப்பதுபோல்
நதியைச் சுற்றி மிளிரும்
தாவரங்களையும் உயிர்களையும் காண்கிறாய்
இப்பேரண்டத்தின் ஆதார ஒண்பொருளாய்
நான் உன்னைக் காண்பது பொய்யோ?
அவளது ஒரே செல்லமாய்
அவளது சாரமெல்லாம் கொண்டு படைக்கப்பட்ட
உனது மாண்பொளியை நீயே அறிந்துகொண்டாற்போன்ற
வெட்கத்தாலும் பெருமிதத்தாலும் தானே சிரித்துக்கொள்கிறாய்
ஆதி நீர்நிலையில் பூத்த முதல் தாமரை போலிருக்கிறாய்
எல்லையற்ற இப் பெரு மாளிகையிலே
நிகழும் உன் நீராடலை வாழ்த்த
மீட்டப்படாத பேர் யாழின் தந்திகளை
மீட்டிப் பார்க்கும் பறவைகளிருந்தன
திகட்டாத இன்பக் களிப்பால்
பாடத் தொடங்கும் பறவைகளுமிருந்தன
புல்திரட்டில் நிற்கும் எருமைகள் சுற்றி
வெண் கொக்குகளின் அமர்வுகளிருந்தன
மேலும் உன்னழகிலேயே நீ திளைத்து மகிழ
உனக்கு உதவுவதற்காகவே பயிற்றுவித்து அனுப்பிக்கப்பட்ட
ஆணும் ஆங்கிருந்தான்
என்றாலும் இவை எதனையும் கண்டு கொள்ளாமல்
கண்டும் காணாமல்
நீ செய்துகொண்டிருப்பதென்ன!
துவைத்தெடுத்த ஆடைகள்
உன் தோள் துயிலும் குழந்தைகளாய்ச் சாய்ந்திருக்க
நான் உன்னைப் பின்தொடர்வேன் என்பதில்
அசைக்கமுடியாப் பிறவி நம்பிக்கை கொண்டவள் போலும்
தன்னில்தானே நிறைந்தொளிரும்
பேராண்மை கொண்டவள் போலும்
சொட்டுச் சொட்டான நதித் துளிகளால்
பூமியை நனைத்தபடி
நதியில் பதப்படுத்திக் கொண்ட உன் எழில்கண்டு
மனநிறைவு கொண்ட விண்ணையோ ஒளியையோகூட
உரிமை மிகுதியாற் கண்டுகொள்ளாத
மிதப்புடன் செல்கிறாய்