தமிழில் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளர் நாஞ்சில்நாடன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகவும் தரமாகவும் படைப் பிலக்கியத் தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர். தன்னுடைய அறச்சார்புநிலையிலிருந்து ஒரு கணமும் பிறழாத உறுதியான மனம் கொண்டவர். அதன் காரணமாகவே, தன்னுடைய குரலைப் படைப் பிலக்கியத் தளத்திலும் சமூகத் தளத்திலும் தவிர்க்கப் பட முடியாத ஒன்றாகத் தன்னை நிறுவிக் கொண்டவர். எண்ணற்ற நெருக்கடிகளுக்கிடையேயும் இடை விடாமல் உழைக்கும் வேட்கையும் வேகமும் இயல் பாகவே இவரிடம் குடிகொண்டுள்ள குணங்கள். நாஞ்சில்நாட்டு மனிதர்களைப் பற்றிய சித்திரங்களின் பதிவைத் தமிழிலக்கியப் பரப்பில் அழுத்தமாக உருவாக்கியதை இவருடைய கொடை என்றே சொல்லலாம். 63 வயதுடைய இவருக்கு இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி விருது வழங்கப் பட்டுள்ளது. நாஞ்சில் நாடன் எழுத்துகளில் நான் முதலில் படித்தது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவல்.

ஒருநாள் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் படித்துவிட்டுத் தூங்கச் செல்லலாம் என்பதுதான் என் திட்டமாக இருந்தது. ஆனால் படிக்கப் படிக்க கதையின் வேகம் என்னை இழுத்துக் கொண்டு ஓடியது. பாதியில் நிறுத்த மனம் வரவே இல்லை. நள்ளிரவில் விழித்துப் பார்த்த அப்பா “காலாகாலத்துல தூங்காம ஏன் இப்படி ஒடம்ப கெடுத்துக்கற” என்று அலுத்துக் கொண்டார். அம்மா மட்டும் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, “இருக்கற மண்ணெண்ணய வச்சித்தான் இன்னும் கொற நாள ஓட்டணும் பாத்துக்கோ....” என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு உறங்கத் தொடங்கிவிட்டார். எதுவுமே என் இதயத்தில் பதியவில்லை. மனமெல்லாம் சிவதாணுவும் பார்வதியும் நிறைந்திருந்தார்கள். வாழவேண்டிய காலத்தில் வீம்பாகப் பிரிந்து ஆளுக்கொரு மூலையில் அல்லல்படுகிறார்களே என்கிற பரிதாப உணர்வு அதன் முடிவை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை நான்கு மணிக்குச் சங்கு ஊதுகிற சமயத்தில் முடித்துவிட்டுத்தான் எழுந்தேன். ஆனால் மனம் பரபரவென்று இருந்தது.

சிவதாணுவைப் பற்றி உடனடியாக யாரிடமாவது மனம்விட்டுப் பேசவேண்டும் போலச் சொற்கள் பொங்கிப் பொங்கி வந்தன. நேராக என் நண்பன் பழனியின் வீட்டுக்குச் சென்று, தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி வெளியே அழைத்து வந்தேன். கடைத் தெருவில் அப்போதுதான் திறந்து இயங்கத் தொடங்கி யிருந்த தேநீர்க் கடையில் சூடாக ஒரு தேநீர் வாங்கிப் பருகிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். நான் சிவதாணுவின் கதை முழுக்க அவனிடம் வரிவரியாகச் சொன்னேன். ஒரு நேர்விகிதம் புரிதலின்மையால் முதலில் தலைகீழ் விகிதமாகிப் பிறகு மறுப்பும் நேர்விகிதமாக மாற்றமடையும் இரசாயனத்தை மாற்றமில்லாமல் சொன்னேன். அன்று பகல் அவன் அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்று படித்து முடித்தான். இரவு நேரத்தில் அவன் என்னைத் தேடிக் கொண்டு வந்தான். இருவரும் மாறிமாறிக் கதையைப் பற்றி அலசினோம். எங்கள் இருவருக்குமே படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டுக்குப் பாரமாக வாழ்ந்த அனுபவம் இருந்தது. எங்கள் தாய் தந்தையர் ஒரு வார்த்தை சொன்னதில்லை என்றாலும் சுற்றி யிருந்தவர்கள் சொற்களாலும் பரிதாப வார்த்தை களாலும் ஏச்சுகளாலும் ஆலோசனைகளாலும் சிரிப்புகளாலும் வறுபட்ட அனுபவங்களும் இருந்தன. இந்த சுயஅனுபவம்தான் சிவதாணு எங்களை உடனே ஆட்கொண்டதற்குக் காரணம்.

சிவதாணுவின் குடும்பப் பின்னணியும் எங்கள் குடும்பப் பின்னணியும் ஒரே மாதிரியானவை. அவனுக்கு ஆதரவாகவும் எதிரியாகவும் நாங்களே மாறிமாறிப் பேசிக் கொண்டோம். வேலை வாங்கித் தருவார் என்று நம்பித் தாலிகட்டியது தவறு என்று ஒருகணம் தோன்றும். அதை நம்பாமல் புறக்கணிக்கிற அளவுக்குச் சூழல் சரியில்லையே என்று மறுகணம் தோன்றும். அந்த நம்பிக்கை, அவன் அடையும் அவமானம், பிறகு வெளியேற்றம், மோதல், இணைதல் எதுவுமே மிகையெனத் தோன்றவில்லை. இரண்டு பாத்திரங்களின் பெயர்களை மீண்டும்மீண்டும் சொன்ன கணத்தில் இறைவடிவங்களான சிவன் பார்வதியின் நினைவு சட்டென்று மனத்தில் மோதியது. சக்தியா சிவமா மோதல் கதையும் நினைவுக்கு வந்தது. புராண காலத்திலிருந்தே இந்தக் கதைக்கு ஒரு நீட்சி உள்ளதைக் கண்டுணர்ந்த போது பரவசமாக உணர்ந்தோம்.

சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவருமே இணையானவர்கள். முக்கியமானவர்கள். ஆனால் அதை உணர்வதற்கு அவர்களுக்கும் ஒரு வேளை வரவேண்டியிருக்கிறது. உக்கிரமான ஒரு மோதலுக்குப் பிறகுதான் அப்படி ஒரு வேளை பிறக்கும் என்று எழுதிவைத்திருக்கிறது போலும். நாவலிலிருந்து சின்னச்சின்ன காட்சிகளையெல்லாம் நினைவுபடுத்தி அடிப்படையில் இருவருக்கும் உள்ள சின்னச்சின்ன நல்ல குணங்களையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டோம். முப்பது ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற அந்த உரையாடல்களின் இனிய அனுபவம் இன்னும் நெஞ்சில் உள்ளது.

இதற்குப் பிறகு நான் விரும்பிப் படிக்கும் ஆசிரியர்களில் ஒருவராக மாறிவிட்டார் நாஞ்சில் நாடன். அவருடைய பாத்திரங்களிடையே நிகழும் உரையாடல்களில் உள்ள உயிர்ப்பாற்றல் எனக்கு மிகவும் பிடித்த அம்சம். அந்த உரையாடல்கள் பலவிதமான உணர்வுகளின் கலவை என்றே சொல்லலாம். எள்ளல், இரக்கம், கருணை, அழுகை, சீற்றம், காதல், சாபம், எரிச்சல், விமர்சனம் எல்லாமே தன்னிச்சையாகப் பொங்கியெழும் களங்களாக அவை உள்ளன. நாஞ்சில் நாடன் கதையுலகத்தில் இப்படிப்பட்ட களங்கள் ஏராளமாக நிரம்பி யுள்ளன. தலைகீழ் விகிதங்களைத் தொடர்ந்து என்பிலதனை வெயில் போல, மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத் திக்கும் மத யானை என நாவல் களையும் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் விருப்பத்தோடு தேடித்தேடிப் படித்தேன். அவர் எழுதும் விரிவான வர்ணனைகளுக்கு எப்போதுமே மனத்தைக் கவரும் அம்சம் உண்டு. ஒரு நிகழ்ச்சி நடைபெறும் களத்தில் காணநேர்கிற இயற்கைக் காட்சிகள். மனிதர்கள், விலங்குகள், காற்று, வெயில், மழை, மரங்கள், செடிகள் என எல்லாவற்றையும் மிகவும் நுட்பமாகத் தீட்டிக் காட்டும் வலிமை கொண்டவை அந்த வர்ணனைகள்.

நாஞ்சில் நாடனின் படைப்புலகம் என்பது நாம் வாழும் உலகம் தான். அல்லபடுகிறவர்கள், அவமானப்படுகிறவர்கள், மனசாட்சிக்குப் பயந்த வர்கள், மனசாட்சியே இல்லாதவர்கள், கருணை உள்ளம் கொண்டவர்கள் என எல்லாருமே இடம் பெற்றுள்ளார்கள். இந்த வாழ்வின் சாட்சிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தம் அடிப்படை இயல்பும் நிறமும் மாறாமல் நாஞ்சில்நாடனின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது நாஞ்சில்நாடனின் முக்கியமான பலம். எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் ஒலிக்கிற ஒரு விமர்சனக்குரல் நாஞ்சில் நாடனின் மற்றொரு பலம். கண்காணிப்புக் குரலாக, கண்டிப்புக் குரலாக, எச்சரிக்கைக் குரலாக, கிண்டல் குரலாக, விமர்சனக் குரலாக இது எங்கெங்கும் ஒலித்தபடி உள்ளது. சில சமயங்களில் படைப்பின் எல்லையைத் தாண்டி இக்குரல்கள் ஒலித்தாலும் இக்குரல்களின் அடிநாதமாக உள்ள நியாய உணர்வும் நேர்மையும் அந்த விலகலை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றன.

நாஞ்சில் நாடனின் பல பாத்திரங்கள் என் நெஞ்சில் இன்னும் வாழ்கின்றன. அத்தகையவர் களில் ஒருவன் பரமக்கண்ணு. குளித்துவிட்டு வருவதற்குள் சமைத்து வைத்த கருவாட்டுக் குழம்புச் சட்டியில் வாய் வைத்து விடுகிறது ஒரு நாய். நாய் வாய் வைத்ததைச் சாப்பிடுவதா வேண்டாமா என்ற குழப்பம் ஒருபுறம். சுட்டெரிக்கும் பசியின் நெருப்பு மற்றொரு புறம். பொங்கிப் பொங்கி அடங்கிய உணர்வுகளுக்குப் பிறகு சாப்பிடுவதற்கு இலையைக் கழுவும் அந்தச் சித்திரத்தை மறக்கவே முடியாது. பசி வந்தால் பத்தையும் தொலைக்கிற உலகம்தான் இது. ஆனால் அதைத் தொலைக்கும் முன்பாக மனம் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எதிரும்புதிருமாக மனத்துக்குள் எழும் கேள்விகளுக்குப் பொருத்தமான விடைகளை வைத்து அமைதியடைவதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்த மனப்போராட்டத்தின் சித்திரம்தான் பரமக்கண்ணு. முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதால் இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிற பெற்றோர்களைத் தடுக்க வழி தெரியாமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையைச் செய்து கொண்டு வந்து நிற்கிற டப்பு சுந்தரம் மகத்தான படைப்பு.

நகர வாழ்வில் இரண்டாண்டு சிரமப்பட்டு சம்பாதித்ததைக் கிராமத்தில் நாலே நாட்களில் பெருமைக்காகவும் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்பதற்காகவும் செலவழித்துவிட்டு, கடன்பட்டு ஊருக்குத் திரும்புகிற முத்து நுட்பமான ஒரு மனச் சித்திரம். சொந்த ஊருக்கும் பிழைக்கப் போன ஊருக்கும் இடையே தறிக்குண்டுபோல ஓடிஓடிக் களைத்தவர்களால் மட்டுமே அப்பாத்திரத்தின் வேட்கையையும் வேதனையையும் உணரமுடியும். நாஞ்சில்நாடன் கண்டெடுத்துச் சொன்ன இன்னொரு முக்கியமான பாத்திரம் இடலாக்குடி ராசா. கேலி வார்த்தைகளால் பந்தியிலிருந்து துரத்தியடிக்கப் படும் அவனை எப்படி மறக்க முடியும்? பந்திச் சாப்பாடு கிடைக்கும் என்று புறக்கடையில் காத் திருக்கும் பண்டாரம், முழு ஆளுக்குரிய வேலையைச் செய்துவிட்டு அரை ஆள் சம்பளத்தை அதிர்ச்சி யோடும் கசப்போடும் பெற்றுக்கொண்டு மனம் குமுறும் சிறுவன், மொழி தாண்டி, இனம் தாண்டிப் பழக நேர்ந்த ஒருவனை, அன்பை மட்டுமே முதல் காரணமாகக் கொண்டு “என் சகோதரன் நீ” என்று உரிமையோடு சொல்கிற மொகித்தே, நம்பிக்கை யோடு தன் மனைவியைத் தன் நண்பனுடன் ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிற கான்சாகிப், இலையில் எஞ்சிய சப்பாத்தியை யாம் உண்பேம் என எடுத்துண்ணுகிற கிழவர் என ஏராளமான வரைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

நாஞ்சில் நாடனின் புனைவுலகில் இப்படிப் பட்ட பல பாத்திரங்களின் பதிவுகள் பல்வேறு கோணங்களில் காணக்கிடைக்கின்றன. சிவதாணுவில் தொடங்கி கான்சாகிப் வரை எண்ணற்ற முகங்கள். புகைப்படத் தொகுப்பொன்றில் உள்ள பல்வேறு புகைப்படங்கள் போலப் புரட்டப்புரட்ட பல நினைவுகள் என் நெஞ்சில் அலை மோதுகின்றன. நாஞ்சில்நாடன் கண்களும் மனமும் அபூர்வமான பாத்திரங்களைக் கண்ட கணத்திலேயே படம் பிடித்து வைத்துக் கொள்கின்றன என்றும் எழுத நேரும் தருணத்தில் அவர்களில் யாராவது ஒருவரைப் பற்றி ஒரு கோட்டோவியத்தைத் தீட்டித் தருகிறார் என்றும் பல தருணங்களில் தோன்றியதுண்டு. அத்தனை பாத்திரங்களையும் இணைத்தபடி நீளும் கனிவு என்னும் மையத்தில் நாஞ்சில் நாடன் படைப்புகள் குடிகொண்டுள்ளன என்று நிச்சயமாகக் கூறலாம்.

புனைவுலகில் சாடைமாடையாகத் தொடுகிற அம்சங்களை நாஞ்சில் நாடன் தன் கட்டுரைகளில் மிக விரிவாகப் பேசுகிறார். அவர் பேசாத தலைப்பே இல்லை என்று சொல்லலாம். ஆண் உலகம், பெண் உலகம், முதியோர் உலகம், குழந்தைகள் உலகம் என எல்லா உலகங்களிடையேயும் அவர் காற்றைப் போலப் புகுந்து வெளிப்படுகிறார். நமக்குக் கவனப்படுத்த அவரிடம் எப்போதும் ஒரு விஷயம் எஞ்சியிருந்தபடியே உள்ளது. இன்று சாகித்திய அகாதெமி விருதின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் ஒரு தொடக்கம் மட்டுமே. இதைவிடவும் உயர்ந்த பல கௌரவங் களுக்கு அவர் படைப்புகள் தகுதியானவை.

Pin It