இன்றைக்கு உலகம் முழுக்க இரவீந்தரநாத் தாகூரின் பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறதென்பது மனிதகுலமே தாகூர் என்ற மாபெரும் கலைஞனுக்கு நினைவுப் புகழஞ்சலி அர்ப்பணிக்கிறது என்று அர்த்தம். அதுவும் இந்தியாவுக்கு தாகூர் தினம் என்பது மிகுந்த விசேஷப் பொருளுடையது. காலனியாதிக்கச் சூழலிலும் இந்தியா தனது நெஞ்சார்ந்த நன்றியை - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதி வரை வாழ்ந்த தாகூரின் நினைவு பல்லாண்டுகள் உருண்டோடி விட்ட நிலையிலும் - ‘சுய தெளிவடைதல்’ என்கின்ற அந்த மாபெரும் தேடலுக்கு காணிக்கையாக்குகிறது. சிறந்த மதவாதி என்றோ சிறந்த அரசியல்வாதி என்ற அடிப்படையிலோ அல்லாமல் லட்சோப லட்ச மக்களின் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தாகூர் - மகாகவி தாகூர் என்ற மாபெரும் கலை நிகழ்வை - எதற்காகப் போற்றிப் புகழ்கின்றனர் என்றால் இந்த நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் அவர் என்ன உணர்ந்தாரோ அதைச் செய்தார் என்பதற்காக.

உலக மகா புருஷர்களில் தாகூரும் ஒருவர் என்பது உண்மை. அதிலும் இந்திய ஜனங்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை, விசேஷ பரிவு நூற்றாண்டு காணும் இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைக்கப்படுகிறது.

பன்முகத் திறமையுள்ள மாபெரும் கலைஞன்

நாற்பத்தியெட்டாண்டு கால தாகூரின் கலைப் படைப்புக்கள் யாவும் மிகவும் அருமையானவை. மகாகவி என்று புகழப்பெற்ற தாகூரின் கவிதைகள் பிரபலமானவை. அதேபோல் அவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் என்று பல விஷயங்கள் குறித்த பன்முகத் திறன் வெளிப் பாடு ஆகும். வங்க இலக்கியத்தில் தாகூருடைய குறியீட்டு நாடகங்கள் பல பிரசித்தி பெற்றவை. சுமார் 2500 பாடல்கள் பாட்டும் இசையுமாகவே தங்க இழையோடும் பட்டுக் கம்பளமாக ஜொலிக்கச் செய்தார்.

மனித வாழ்வின் சோகங்கள், இன்னல்கள், இன்பதுன்பங்கள், வங்கக் கிராமப்புற ஏழை எளிய ஜனங்களின் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றி யெல்லாம் பாட்டிசையால் மெய்சிலிர்க்கச் செய் திருக்கிறார்; புருஷோத்தமன் புகழ்பாட வரவில்லை, மனித வாழ்க்கையின் சௌந்தர்யங்களை மீட்ட வந்திருக்கிறார்.

பாட்டில் வடிக்க முடியாத வாழ்வாதார விஷயங்களை, சொல்லுக்குள் அடைபடாத மனித உணர்வுகளைத் தமது 70-வது வயதில் திரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். அவை உலகப் புகழ் ஓவியர் வரிசையில் தாகூரை நிறுத்திற்று.

தத்துவம் தாகூரைத் தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டது; தத்துவ ஆசான்களுக்கெல்லாம் ஆசானாகத் தாகூர் திகழ்ந்தார். கிராமப்புற மறுசீரமைப்புத் திட்டத்தில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ‘வீடும் உலகமும்’ என்ற கோஷம் தாகூருடைய குரலில் ஓங்கி ஒலித்தது. தாகூருடைய உலகப் பார்வை வெகுஜன ‘மேம்பாட்டு எண்ணம் கொண்டதாக இந்தியாவின் பெருமையை உலகிற்கே பறைசாற்றும் மாபெரும் சிந்தனையாளனாகப் பரிணமித்தது.

தாகூருடைய கலைப் படைப்பை விமர்சிப் பவர்கள் குறுகிய வட்டத்துக்குள் வைத்துப் பார்க் கின்றனர்.

தாகூருடைய பல படைப்புக்கள் இன்னும் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. இதுவரை மொழிபெயர்க்கப்பட்டவைகளும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர். 1912-13இல் று.க்ஷ.யேட்ஸ், எஸ்ரா பவுண்டு மற்றும் கீதாஞ்சலி படைப்புக்காக நோபல் பரிசு பெற்ற தாகூர் - கீதாஞ்சலி படைப்பு என்பது கவிஞருடைய பெரும் இலக்கியப் படைப்பில் ஒரு சிறு பகுதியைக் காட்டும் கவிதைகளாகும்.

உலகமே வியக்கும் வண்ணம் தமது இறுதிப் பத்தாண்டுக் கால வாழ்க்கையில் தாகூர் கலையின் கவிதையின் இலக்கியத்தின் சிகரங்களைத் தொட்டுப் பிடித்தார். வானம் வசப்பட்டது. மொத்த வாழ்க் கையின் முழு அனுபவத்தோடு தமது சிந்தனா சக்தியின் வீச்சில் புதிய கருத்தாக்கங்களைப் பதித்தார். தாகூர் என்ற இலக்கிய வரலாற்றின் சில பக்கங்களே இன்று வரை மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றது என்பதே உண்மை.

வங்கமொழி வாசிப்பு இல்லாதவர்களுக்குப் பொதுவாகக் கிடைக்கும் ஆங்கில மொழியாக்கமே இந்திய இலக்கிய கர்த்தா - இந்திய இலக்கிய மேதைகள் வரிசையில் தாகூரை இனங்கண்டு கொள்ள உதவியிருக்கிறது. வெறும் அறிமுகத் தளத்தில் மட்டுமே பரிச்சயமானவர்களுக்குத் தாகூர் என்ற மாபெரும் கலைஞனை, கலை நிகழ்வை முற்றாக உணர்ந்துகொள்ளப் போதிய மொழி பெயர்ப்பு இல்லை. ரவீந்திரநாத் தாகூர் என்ற பிரம்மாண்டமான சிலையை ஆகிருதியை உயிர்த் துடிப்பை வடிக்கும் சிற்பி நம்மிடையே இல்லை. கற்றாரைக் கற்றாரே காமுறுவர். தாகூரைக் காமுறும் கற்றோர் அவருடைய பொன் மொழிகளென்று சில துளிகளைக் கட்டம்கட்டி ஆங்கில இதழ்களில் வெளியிடத்தான் முடிந்தது. இந்திய மக்கள் கூர்நோக்குடையவர்கள்; படிப்பறிவு கிடைக்காத சூழலிலும் மகாகவி தாகூரின் ஆளுமையை மேத மையை உள்ளூரப் புரிந்துகொண்டனர். வங்க மொழி வரலாற்றில் ரவீந்திரர் ஓர் நவீன இலக்கிய சகாப்தம் என்பதை நம் மக்கள் தெரிந்து கொண்டனர்.

போற்றுதலுக்குரிய அர்ப்பணிப்பு:

பெருஞ் செல்வம் கொண்ட வசதியான குடும்பத்தில் பிறந்து கனவுப் பட்டறையில் வளர்ந்தது ராஜதோரணையில் கலாரசிகனாக உலகெங்கும் சுற்றிப் பார்க்கும் வசதி படைத்த போதிலும் தாகூர் எதனால் புகழ்பெற்றார் என்றால் மனித ஆளுமையின் சிகரங்களில் உலாவரும் அந்த விரிந்த உலகப் பார்வையைக் கொண்டிருந்ததால்தான். இளமைப் பருவத்திலிருந்தே தாய்நாட்டின் சுதந்திர வேட் கையை, தன்னைச் சுற்றி நடக்கும் போராட்ட வேகத்தை உணர்ந்துகொண்டதால்தான் மனித விடுதலையைப் பற்றித் தாகூரின் கவியுள்ளம் யோசிக்க முடிந்தது. ‘இந்திய சுதந்திரப் போராட்ட நினைவு களில் தாம் எவ்வாறு அந்தக் கொந்தளிப்பில் பங்கெடுத்துக் கொண்டோம் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். மனுப்போடுவதையும், அரசுக்குக் கடிதமெழுதிப் பிச்சை கேட்கும் அப்போதைய அரசியலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். கல்கத்தாவில் 1867 வாக்கில் தொடங்கிய ‘இந்து மேளா’வில் தானே அமைத்த தேசிய பாடலைச் சிறுவயதிலேயே பாடியதுதான் தாகூர் கலந்து கொண்ட முதல் சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சி யாகும். தாகூருடைய குடும்பத்திலும் சுதந்திரப் போராட்ட உணர்வுடையோரும் அடிமை வாழ்வின் வலியை உணர்ந்தோரும் அதிகம்பேர் இருந்தனர். அவர்களுடைய எதிர்ப்புக் குரலுக்கு, போராட்ட அழைப்புக்குத் தாகூர் உடனுக்குடன் பங்கேற்று இருக்கிறார். வேதாந்தச் சிமிழில் அடைபட்டுத் தத்துவத்திற்குறியாக தாகூர் போய்விடவில்லை. வேத உபநிஷத்து குருகுலக் கல்வி கற்று, வேதாந்தியாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருந்தும் தாகூர் இவற்றையெல்லாம் மீறி வங்கதேச வெகுஜன வாழ்க்கை கலாசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதிவரைக்கும் இந்தப் போற்று தலுக்குரிய அர்ப்பணிப்பு தொடர்ந்தது.

பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. 1885-இல் துவக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் 1886இல் முதல் கூட்டம் கல்கத்தாவில் நடந்தபோது நிகழ்ச்சியின் துவக்கப் பாடலை இசையமைத்துப் பாடியவர் ரவீந்திரர் தான். மட்டுமல்ல, வருடங்கள் பின்னால் கல்கத்தாவில் நடந்த மற்றொரு காங்கிரஸ் மாநாட்டில் பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இசை யமைத்து கணீர் என்ற குரலில் பாடியவரும் தாகூரே. சுருதி பிறழாமல் இனிமையாகப் பாடி தாகூர் பிரதிநிதிகள் நெஞ்சில் பதிந்துவிட்டார். வங்க மக்களவை மாநாட்டிற்கு, தேசம் முழுமைக்கும் அறியப்பட்டு விட்ட கவி தாகூர் தலைமையேற்று நடத்தினார்.

சுதேசி இயக்கம்:

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதேசி இயக்கத்தின் பங்கு மிக முக்கிய மானது. தேசம் முழுதும் வெகுஜனங்களை திரட்ட முடிந்தது. வங்க சுதேசி இயக்கம் தாகூரின் முன் நிலையில் அணி திரண்டது. கவிஞரின் சுதேசி இயக்க கால கட்டம் பெரும் பங்காற்றிய ஒன்று. பின்னால் சுதேசி இயக்கத் தலைவர்களின் குறுகிய மனப்பான்மையால், பொதுவாக அரசியலில் இது மாதிரி நிகழும், மனங்கசந்த தாகூர் தலைவர்களுக்கு வழிவிட்டாரே தவிர சுதந்திரப் போராட்ட களத்தில் இருந்து தனிமைப்படவில்லை. 1917 கல்கத்தா காங்கிரஸ் நடைபெறுவதற்கு முன்னால் அதன் தலைவர் பதவிக்கு அன்னிபெசன்ட் அம்மையாரை வரவிடக் கூடாது என்பதற்காக ‘மிதவாதிகள்’ தேர்தலை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். இது மாதிரியான பிரதேச காங்கிரஸ் கமிட்டி மனப்பான்மையைக் கண்டித்தும் குழு அரசியலை எதிர்த்தும் 1917 காங்கிரஸ் மாநாட்டில் மகாகவி தாகூர் ஆற்றிய உரை எல்லோர் மனதையும் நெகிழச் செய்தது. இந்த நிகழ்வு பதிவாகியிருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த ஆனால் அதன் முக்கியத்துவம் உணரப்படாத ஒரு நிகழ்வு உண்டு. 1919 ஏப்ரல் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து கவிதாகூர் அவர்கள், நோபல் பரிசு கிடைத்ததைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு தமக்களித்த சர்பட்டத்தைத் துறந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடு மையை வன்மையாக எதிர்த்து இந்தியாவுக் குள்ள தன்மானத்தை உலகறியச் செய்தார்.

சுதேசிய இயக்க காலகட்டத்தில் தாகூர் படைத்த கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் மிகவும் அருமையானவை. பொதுக் கூட்டங்களில் உரையாற்றியும், சமூக மறுசீரமைப்புக்கான திட்டங்கள் வகுத்தும், அவை குறித்த விழிப்புணர்வை வெகு ஜனங்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் மக்கள் உணர்வுக்கு எப்பொழுதுமே உற்ற மரியாதையளித்தும் ஒரு பேரெழுச்சிக்கான தயாரிப்பு வேலைகள் செய்தும் தாகூர் அரசியலில் சுறுசுறுப்பாகச் சுழன்றார். இக்காலத்தில் அவர் எழுதிய பாடல்கள் லட்சோப லட்ச ஜனங்களின் மனங்களைக் கொள்ளை கொண்டன. எதிர்ப்புக் குரல் இருக்கும். ஆனால் ஆக்ரோஷமான ஆதிக்கக் குரல் அவற்றில் இருக்காது. மக்கள் அணி சேரும் ஒரு உத்வேகம் தாகூருடைய ஊர்வலப் பாடல்களில் ஓங்கி ஒலிக்கும்.

உலகப் பிரஜை தாகூர்

வங்க கிராமப்புற ஜனசந்தடி, ஜனப்புழக்கம் கவி தாகூருக்கு மிகவும் பிரியத்துக்குரியது; கவி யுளத்திற்கு மிகவும் நெருங்கிய இந்திய வெகுஜன வாழ்க்கையை நேசித்தாலும் தாகூருடைய உலகளாவிய பார்வையினால் மானுட ஆசானாக - அதற்குத் தகுதியானவர்கள்தான் - உயர்ந்து நின்றார். இந்திய மண்ணின் மைந்தனாக வளர்ந்து உலகப் பிரஜை யாக மானுடகுல நாயகனாகப் பிரசித்தி பெற்றார். ஆகவேதான் இந்திய தியாக பூமியிலிருந்து மெய் சிலிர்க்கும் தேச விடுதலைப் பாடல்களும் மொத்த ஜனங்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் இந்திய தேசிய கீதமும் வங்க மண்ணின் அற்புதப் படைப்பு.

பிரிட்டிஷ் கல்வித் திட்டத்தில் (மெக்காலே) இந்தியர்களை மேலும் மேலும் அடிமையாக்கும் மோசமான உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட கவிதாகூர் உண்மையான அறிவுக் கண்ணைத் திறக்கும் பொருட்டு போல்பூரில் தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார் - புகழ்பெற்ற சாந்தி நிகேதன் உருவானது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சாதி மத பேதமின்றி அவரவர் தாய்மொழியில் மாணவ - மாணவியருக்கு மரத்தடிக் கல்வி போதிக்கப்பட்டது. தமது சொத்தையெல்லாம் நோபல் விருதுப் பணத்தையும் சேர்த்துப் போட்டு உலகிலேயே முதல்முறையாக ஓர் சமுதாயக் கல்விக் கூடமாக நிறுவினார். உலகத்தையே ஓர் குடிலின் கீழ்க் கொண்டு வந்த தாகூரின் நீண்ட நாள் கனவான விஸ்வபாரதி என்ற சர்வதேச பல்கலைக் கழகத்தில் தான் மகாத்மா காந்தியின் பிள்ளைகளும் நேருவின் மகளும் கல்வி கற்றனர்.

தாகூரும் காந்தியும்:

விஸ்வபாரதி நிறுவப்பட்ட அதே கால கட்டத்தில் தான் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் சூடுபிடித்தது. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைமைத் திட்டத்தில் இருபெரும் சிந்தனையாளர்களுக்கிடையே கருத்து வேற்றுமை நிலவியது. அடிப்படையில் இருவருடைய இந்திய விடுதலை குறித்த பார்வையும் ஒன்றுதான். ஒத்துழையாமை இயக்கம் போன்ற நடைமுறைத் திட்டத்தில்தான் கருத்து வேறுபாடு இருந்தது.

1.     ஒத்துழையாமை இயக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்

2.     புனா ஒப்பந்தம் - நீண்ட உண்ணாவிரதப் போராட்டம்

3.     1934 பீஹார் நிலநடுக்கம்

காந்திஜியின் வயிற்றை நம்பி ஓர் இயக்கம் வெற்றியடைய முடியுமா? 1921இல் எல்லோரும் தினமும் அரைமணி நேர உண்ணாவிரதமிருந்தால் சுயராஜ்யம் எளிதில் பெற்றுவிடலாம் என்ற போராட்ட திட்டம் குருதேவ் தாகூருக்கு விஞ்ஞான ரீதியில் சாத்தியப்படாது. நடக்காது - குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் கவிதாகூர் புகழ்பெற்ற விஞ்ஞான கருத்தாக்கக் கட்டுரைகளைப் பார்த்தாலும் உண்ணா விரதப் போராட்டம் ஒரு தாற்காலிக எதிர்ப்பு உணர்வுதான் என்று எண்ணினார்.

சுயராஜ்யம் என்பது எளிதில் வென்றடையக் கூடிய ஒன்றல்ல. ஆகவேதான் தாகூர் வெளிப் படையாகவே பேசினார்: “பரலோகம் உனக்குச் சமீபத்தில் இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் சற்றும் சிந்திக்காமல் பூசாரியின் காலடியில் நான் வீழ்ந்து கிடக்க மாட்டேன். அதே போல் காந்திஜி அவர்கள் சொன்ன மாத்திரத்தில் சுயராஜ்யம் சுழன்று பின்வரும் போல் இருக்கிறது”

மொத்த இந்திய நாடே காந்திஜினுடைய மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் போது தமது ஆத்ம நண்பனுக்கு எதிராகத் தைரியமாக அறிவு பூர்வமாகத் தாகூர் பேசினார்.

அதே போல் 1921 செப்டம்பர் - அக்டோபர் விதேசித் துணி எரிப்பு, அந்நியப் பொருள் பகிஷ் கரிப்பு போராட்டம் குறித்த காந்தி - தாகூர் கருத்து வேறுபாடு விஸ்வரூபமெடுத்தது. அப்பொழுது தான் கவிதாகூரை ‘மாபெரும் காவல்காரர்’ என்று காந்திஜி அழைத்தது, அதைத் தொடர்ந்து ரோமன் ரோலந்துக்கு எழுதிய கடிதங்கள் அருமையான கருத்தாக்கங்களாலானவை. “சூரியனைப் போல் ஒளிரும் கவிதை” என்று தாகூரின் பாடல்கள் குறித்து காந்திஜி சொன்னது “என்னுடைய இருப்பிற்கே மறுப்பா?” என்ற கேள்விக்குப் பதிலாக காந்திஜி சொன்னது. “கலையுலகின் மூலம் உபதேசித்துக் கொண்டிருக்கும் மக்களுடைய துன்ப துயரங்களின் சதுக்க பூதம்.” இந்தத் தலைப்பில் ஏராளமான கருத்தாக்கங்களை விவரிக்கலாம். ஆனால் இந்த நிகழ் வரலாற்று ஆவணத்தில் இரு மகான்களுடைய நட்புறவை விவரிப்பதே சாலப் பொருத்தமாக யிருக்கும்.

இருவருடைய மங்காத நட்புறவைப் புகழ்ந்து சொல்வதற்கு முக்கிய சம்பவங்கள் பல உண்டு. காந்திஜியினுடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவருடைய படுக்கையருகே அமர்ந்து தாகூர் பஜனைப் பாடல்களைப் பாடிய காட்சியையும் போராட்டத்தை முடிக்கும் வேளையில் கையில் ஆரஞ்சு பழச்சாறு ஏந்தி காந்திக்குப் புகட்டிய காட்சியையும் பார்த்தவர்களுக்கு இரு தலைவர் களுக்கிடையே யாதொரு பகை உணர்வோ வெறுப்புணர்வோ இருந்திருக்க முடியாது என்று சபதம் செய்வர். 1934 பீஹார் நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் இன்னலுக்கு ஆளாயினர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட காந்திஜி சொன்னது : “பீஹாரிகள் செய்த பாவத்தின் சம்பளம் இது.” உடனே கவி தாகூர் வெறுப்பு கலந்த உணர்வில் “உங்கள் தீர்ப்பு எவ்வளவு குரூரமானது தெரியுமா” என்று காந்திஜியிடமே கேட்டுவிட்டார்.

சோர்வற்ற ஊர் சுற்றி:

முதிர்ந்த வயதிலும் மகாகவியின் கீழை நாடுகள் முதல் மேலை நாடுகள் முழுக்க பயணித்த நிகழ்வே அற்புதமானது. இருகரம் நீட்டி ஆலிங்கனம் செய்த நாடுகளும் உண்டு, வெறுப்புணர்வு கலந்த வரவேற்பும் இருந்தது. ஆனால் தாகூருடைய மனிதகுல உன்னத குறிக்கோளை உலகெங்கும் பரப்பும் லட்சியத்திற்குப் பெரும் ஆர்வமும் உத்வேகமும் மக்களிடையே இருந்தது.

1929 மார்ச் கோமின்டாங்க் பத்திரிகை தலை யங்கத்தில் “இன்றைக்கு டாக்டர் தாகூர் நம்மிடையே பரப்பி வரும் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவை தெரியுமா? ஆபத்தானதும் சீரழிவானதுமான கார்ல்மார்க்ஸினுடைய தத்துவத்தைத்தான் தாகூர் பரப்பி வருகிறார்” என்று எழுதியது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்காக இருந்த தாகூருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை, அவ மானத்தால் அமெரிக்க விஜயத்தையே ரத்து செய்து விட்டார். இது குறித்து 1929 இல் அமெரிக்க சுங்க இலாகா அதிகாரி ஒருவர் தாகூரிடம் விளக்கமும் மீண்டும் வருவதற்கான காரணத்தையும் கேட்டறிந்தார்.

ஆன்ட்ரூஸ் என்பாருக்கு கனடாவிலிருந்து எழுதிய கடிதத்தில் தாகூர் : “இந்தக் கீழைத்தேய சித்தனின் வருகையைக் குறித்து இங்குள்ள பத்திரி கைகள் புளகாங்கிதம் அடைந்து படோடோபமாய் விளம்பரம் செய்கின்றன. அதேபோல் “கீழைத் தேய முட்டாள் சிலரை இழுத்துப் பிடித்து, சுய நலமிக்க பிறரைப் பற்றிக் கவலைப்படாத பிறர் தயவில் வாழும் நார்டிக் இனத்தாரோடு கீழைத்தேய வாத்தியமிசைக்க நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் தலைமையேற்றிருக்கிறார்.

மகாகவி தாகூர் குறித்த முஸோலினியின் மதிப்புரையை ரோமன் ரோலந்து சொன்னதற்குப் பிறகு தம்முடைய கருத்துரையை மாற்றிக் கொண்டார் முஸோலினி. இத்தாலிய பாசிசப் பத்திரிகைகள் “இந்த ஸ்திரமற்ற வழவழ கொழகொழவான ‘டார்டுஃபேயின்’ முட்டாள் தனத்தைப் பெரிதாகப் புகழ்ந்து பேசுகிறார்கள்” என்று வசைபாடியது.

வேறு வேறு அரசியல் போர்த் தந்திரமிக்க நாடுகளில், வேறெந்தப் புலவனுக்கும் வரலாற்றில் இதுபோன்ற பெரும் புகழும் அதே சமயம் மறுப்பு தெரிவிக்கும் வெறுப்புணர்வும் வாய்த்தது கிடையாது. ஏனெனில் தாகூருடைய மனிதநேய திக்விஜயம் என்பது பிற்போக்காளருக்கு அவருடைய படைப்பு களின் பேரபாயம் அச்சுறுத்தியிருக்கிறது.

தாகூருடைய ஆத்ம நண்பர்கள் அவரைச் சிறந்த முற்போக்கு வாதியாகப் பார்த்தனர். ரோமன் ரோலந்தோடு இணைந்து ஒரே குரலில் ஆழ்ந்த கவியுளத்தோடு சோவியத் யூனியனைப் புகழ்ந்து மனதாரப் பாராட்டியிருக்கிறார். இந்தோ சோவியத் நட்புறவை வரவேற்று 1930இல் ‘ருஷ்யாவிலிருந்து கடிதங்கள்’ என்று வங்கமொழியில் எழுதிய தாகூரின் நூலை ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிட பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. இதுவே தாகூரின் சோசலிச சிந்தனைகளைக் குறித்த சிறந்த எடுத்துக் காட்டு. “எவ்வளவு மகத்தான வீரஞ்செறிந்த போராட்டம்! உலகிலேயே மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோலாகல விழாவில் (யக்ஞம்) மட்டும் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் என்னை நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று உணர்ந்து ருஷ்யாவிலிருந்து எழுதினார். தொடர்ந்து இந்தியாவும் உன்னத லட்சியத்துக்காகப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார் - காந்திஜியின் இரண்டாவது கட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலமது - “உண்மையில் நாம் உலகெங்குமுள்ள பசிபட்டினியில் உழன்று உதவி கோரி நிற்கும் ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று விடுதலைப் போராட்டம் நடத்துவோம்” என்று தாகூர் சூளுரைத்தார்.

சோவியத் யூனியனில் எல்லாமே சரியாக நடத்தப்படுகிறது என்பதற்கில்லை. ஆனால் இன்றைய தினத்தில் விஞ்ஞான உலகத்திலும் கலையுலகிலும் எது பிரசித்தி பெற்றிருக்கிறதோ அதுவரை சோவியத் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி, ஆசிய ஜனங்களுக்கு விவசாயி களுக்கு, தொழிலாளர்களுக்கு - எங்கும் எந்த விதத்திலும் இவர்களுக்கு மானக் குறைவு ஏற்படாத வண்ணம் - சரிசமமாகப் பங்களிக்கப்படுகிறது. இதைக் கண்டு தாகூர் மிகுந்த பரவசமடைந்திருக்கிறார்.

1930 செப்டம்பர் மாஸ்கோவிலிருந்து விடை பெறும் நாளன்று தாகூர்: “மிகப் பெரும் மாய நிகழ்வு சாதிக்கப்பட்டிருக்கிறது; நான் கண்ட பெருங் கனவு கண்முன்னே நனவாக்கப்பட்டிருக்கிறது. இதே போல் என்னுடைய பழம் பெரும் பூமியும் நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையையும் ஒடுக்குமுறையையும் வீறு கொண்ட எழுச்சியின் மூலம் “அடிமைச் சங்கிலியையும் உடைத்தெறிந்து விடுதலை பெறும்” என்று உரையாற்றினார். 1930க்குப் பிறகு தாகூருடைய சிந்தனை மேலும் கூர்மையடைகிறது - எழுபது வயதிலும் அவர் எதைச் செய்தாரோ அதை எழுதினார். சொல்லுக்கும் செய்கைக்கும் உள்ள தூரம் குறைந்தது. அவருடைய எண்ணமும் எழுத்தும் எளிய பலவீனமான ஜனங்கள் பக்கம் இருந்தது. ஒடுக்கும் அதிகாரத்தை வெறுத்தார். அதே சமயம் கோழைத்தனத்தை, புல்லுருவிகளைக் கடுமையாகச் சாடினார்.

இப்போது வெளிப்படையாகவே பாசிசத்தின் குரூர மனோபாவம் உலகெங்கும் தெரிந்துவிட்டது. சாளரத்தின் வழியே கூர்ந்து பார்க்க வேண்டிய தேவையில்லை. இந்திய விடுதலைக்காகவும் உலக விடுதலைக்காகவும் தாகூருடைய, கலைஞனுடைய சிம்மக்குரல், இனிமேலும் பொறுக்க முடியாத கட்டத்தில், கலையுலகில் இதைப் போன்ற போர்க் குரல் இதற்கு முன்பும் சரி தாகூருக்குப் பின்பும் சரி கேட்டிருக்கவே மாட்டோம் - இரண்டு உலக யுத்தங்களின் விளைவு மனித நாகரிகத்தையே உருக்குலைத்த பாசிச அரக்கன், சீனா, அபிசீனியா, ஸ்பெயின், செக் போன்ற நாடுகளை மானபங்கம் செய்த, சின்னா பின்னமாக்கிய பாசிசத்தை எதிர்த்து கோபாவேசத்துடன் தாகூர் முழங்கினார். தாகூருடைய கடைசி ஐந்தாண்டுக் கால 1936-1941 படைப்பு மூர்க்கம் என்பது உச்சகட்டப் போர்க் குண வெளிப்பாடு ஆகும். ‘ஆப்பிரிக்காவுக்கு’ என்ற கவிதையில்,

“மனிதக் கன்னி வெடி வீசிக் கொல்லும்

இந்தப் பிணந்தின்னிகள்.....

உங்கள் ஓநாய்களின் கோரப் பற்களைவிடக்

கொடுமையானது இவர்களுடைய ரத்தவெறி

உங்கள் இருள்சூழ் அடர்காடுகளைவிட

இருண்டது இவர்களுடைய குருட்டுத்தனம்.....”

.......................................

.......................................

நீங்கள் அழுதபோது உங்கள் ஏக்கக் கதறல்கள்

ஆசுவாசப்படுத்தப்பட்டது.

உங்கள் காட்டுவழிப் பாதை ரத்தக்காடாகியது

உங்கள் கண்ணீர் பாதையை நிரப்பியது

உங்களை ஒடுக்கிய வரலாற்றில் உங்களை

மானபங்கப் படுத்திய வரலாற்றில்,

எப்பொழுதும் கடல்களினூடாகவும், பூட்ஸ்கால்களால் ஆணிபதித்த

இந்தக் கயவாளிகளின் ரத்தக் குரூரம்

வரலாறு நெடுக கறைபடிந்திருக்கிறது.

அவர்களுடைய கிராமப்புற நகர்ப்புற

தேவாலய மணியோசை பாட்டிசைக்கின்றது,

அன்னையின் அரவணைப்பில் குழந்தைகள்

தூங்கப் போகின்றனர்

கவிதை அழகை ஆராதிக்கப்

போய்விட்டன.............”

இன்றைக்கும் ஒடுக்குமுறைக்குப் பழகிப்போன ஆப்பிரிக்காவிடம் இந்த உலகமே மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டும் என்று முடித்திருந்தார்.

பாசிசத்தின் கொடுங்கோன்மையை, குரூரத்தை கண்டித்து குரல் எழுப்பாமலிருந்த ஜப்பானிய கலைஞர்களைச் சாடி எழுதிய தாகூரிடம் ஜப்பானிய கவி நோகுச்சி கேள்வி கேட்டதற்கு:

“உங்கள் கடிதம் என்னுடைய இதயத்தை ஆழ அறுத்தெறிந்து விட்டது கவிஞரே...... நீங்கள் மண்டையோடுகளின் மீது உங்கள் ஆசியாவைக் கட்ட நினைக்கிறீர்கள்....” என்று பதில் எழுதினார்.

சமூகத்தின் வாழ்வியக்கத்தைக் குறித்த முந்தைய ஆரம்பநிலைப் பார்வையைப் பின்னால் மாற்றிக் கொண்டார் தாகூர். 1931-இல் ஏகாதிபத்திய அடக்குமுறை இந்தியாவில் நிகழ்ந்ததைக் கண்டு மனங்கசந்து நம்பிக்கை என்ற தெய்வத்திடம்:

“உன்னுடைய காற்றை மாசுபடுத்தியோரை

உன்னுடைய ஒளியை மங்கச் செய்தோரை

நீ மன்னிப்பாயா?

அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க

உன்னால் முடியுமா?........”

மன்னிப்பில், அன்பினால் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலும், தாகூருக்குப் பிடித்த ‘மனிதனின் மதம்’ என்ற தலைப்பில் அவர் அப்போதைக்கப் போது உரை நிகழ்த்தி வந்தாலும் நெஞ்சம் ஆற்றாமையால் ஈடுபடவில்லை. ஆகவேதான் 1933 - கவிதையில்,

“வழிநெடுக விஷத்தைக் கக்கி வைத்திருக்கும்

பாம்புகளுக்கு மத்தியில்

சமாதானத்தின் இனிய குரல் விழலுக்கிறைத்த

நீரோ?...”

“ஆகவேதான் நான் போவதற்கு முன் என்னுடைய

சேதியைச் சொல்லிவிடுகிறேன்”

வீடுதோறும் தயாராகும் அந்த வீரர்களுக்கு,

‘வீழ்த்துங்கள் அந்த தீய அரக்கனை...”

என்றெழுதினார்.

உலகமே கீதாஞ்சலியில் எதை ஏற்றுக்கொண்டது என்றால் தாகூரிடம் அந்தப் பழைய புனிதத்துறவிக் கோலம் இல்லை, இனிமேலும் பார்க்க முடியாது என்பதைத்தான். “நானே உலகக் கவிஞன்” என்று 1941 ஜனவரி 21-இல் புகழ்பெற்ற கவிதையொன்றில் சொல்கிறார். அதன் முழுப் பொருளை இந்த உலகமே ஏற்றுக்கொண்டு, புறங்கை கட்டி கூனி நிற்கும். அங்கி சார்த்திய தாகூரை அல்ல, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத தலைநிமிர்ந்த தீட்சண்யப் பார்வை, பண்டைய இந்திய ஞானத் துறவியின் நோன்பியின் லட்சிய வாதியின் தீப்பார்வை கொண்ட தாகூரைத் தான் உலகம் ஏற்றுக்கொண்டது.

1941-இல் எழுதுகிறார்: “சவலைக் குழந்தைகள் பசிக்கு ஏங்கி அழுகின்ற. ஒரு சொட்டு தண்ணீருக்காக நிலமகளைப் பிறாண்டிக்கொண்டிருக்கும் நம் தேசத்துப் பெண்களைப் பார்க்கிறேன். ஏனெனில் பள்ளிக்கூடங்களைவிட நம் கிராமங்களில் கிணற்றுக்குக் கடும்பஞ்சம். என்னைச் சுற்றிலும் இதைத்தான் நான் பார்க்கிறேன்.”

ஏகாதிபத்தியத்தின் கொடும் சுரண்டலை எதிர்த்துக் கோபக்கனல் தெறிக்கும் தாகூர் என்ற தனிமனித சீற்றம் என்ன செய்துவிடமுடியும்? இந்தியப் பொருளாதார மேதை வங்கத்து பி.சி.மகலானோ பிஸ் சொன்னது போல அவர் சாகக் கிடந்தாலும் சோவியத் - ஜெர்மன் போரில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் இன்னல்கள் குறித்துக் கேட்டால் தனிப்பட்ட சம்பவங்களைவிட சோவியத் யூனியனுக்கு பலம் சேர்க்கும் சம்பவங்கள் எதுவோ அது மேலானது என்பாராம். ஆம் நம் வங்கத்து மகாகவியும் மரணப் படுக்கையில் கிடந்த போதிலும் உன்னத உத் வேகத்தில் செயலூக்கத் துடிப்புடன் எழுத்துலகின் பிரபுவான இலக்கிய ஆசான் தாகூர் சகமனிதத் தோழமை உணர்விலிருந்து அந்நியமாகிப் போகாமல் ஜனசமுத்திரத்தில் முக்குளித்தெழுந்தார். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் 1941, ஜனவரி 21 இல் கவிதையாக,

“நான் தனிமைப்பட்ட தருணங்கள் பல உண்டு

என்னுடைய வீணையில் அபஸ்வரங்கள் ஒலித்தது உண்டு

பல வழிகளிலும் என்னுடைய சரணம் பயணித்தது உண்டு

ஆனால் எங்கெங்கும் சென்றதில்லை.

என்பதனை நானறிவேன்.

ஒரு விவசாயியின் வாழ்க்கையைப் பகிர்ந்து

கொண்ட, கவிதையில் படம் பிடித்த

அந்தப் புலவனின் - அவனே உண்மையான

தோழன் - பாட்டை மிக நுட்பமாகக் கேட்க

காதுகளைத் தீட்டிக் காத்திருந்தேன்.

அவனே மண்ணின் மைந்தன்.”

என்று வடித்தார். தாகூர் அமைதி இழந்தார். இதயம் துடிதுடிக்க 1941 பிப்ரவரி 13-இல் திரும்பத் திரும்ப எழுத முயற்சிக்கிறார்.

“காதை முறுக்கி விட்டு ஏரை ஓட்டிச் சென்றனர்.

சால் மாற்றி சாலாக உழுதனர்.

கிராமத்திலும் நகரத்திலும் உழைப்பு, உழைப்பு.

ஜனங்கள் உழைத்துக்கொண்டே

இருந்தனர்...”

சாம்ராஜ்யங்கள் தகர்ந்தன சிதிலங்கள் மீது

ஜனங்கள் உழைத்துக் கொண்டே

இருந்தனர்.”

1941, ஆகஸ்டு இருள்சூழ் நாளன்று உயிர் பிரிந்தது - இந்த மண்ணின் ஒளி, அக்னி ஜுவாலை அணைந்தது. இந்த தேசத்தின் விடுதலையைப் பார்க்கக் கிடைக்காமல் போனாலும் தன்னுடைய விடுதலையைப் பார்த்துவிட்டார் தாகூர். எண்ணமும் இயக்கமும் சொல்லும் செயலும் இந்திய மண்ணில் வேர் பிடித்து வளர்ந்தோங்கிய இம்மாமனிதன் தாகூர் என்ற வானளாவிய ஆலவிருக்ஷத்தின் கிளை தோறும் புதிய புதிய சந்ததிகள் காலந்தோறும் வந்து தங்கி ஞானம் பெற்றுச் செல்லக்கூடிய அளவுக்குத் தாகூருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக, அபரிமிதமான அற்புதமான வாழ்க்கை, கஷ்டப்பட்டாவது மொழிபெயர்ப்பின் மூலம் அவர் சாதித்தவற்றை அந்த செயலாக்க ஒருங்கிணைப்பை, பிறந்தவுடன் பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயருக்கேற்ப அறிவு ஒளி வட்ட அந்த சூர்ய பிரகாசத்தை நாமும் உள்வாங்கிக் கொள்ளப் போராடுவோம்.

ஹிரேன் முகர்ஜி

தமிழில் : இசக்கி

(1961 மே 7 ‘நியூ ஏஜ்’ இதழில் வெளியானது)

Pin It