I

இந்திய மண்ணின் பெருமையை உலகறியச் செய்தவர்களில் ஒருவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். இந்தியாவின் விடுதலைப் போராட்ட காலத்தில் வாழ்ந்தவர் அவர். (1861 - 1941) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு போக்குகளை நன்கு உணர்ந்தவர் அவர். அவரது படைப்புகள் பலதரப் பட்டவை. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்ற பல துறைகளில் சாதனை புரிந்தவர் அவர். அவரது கருத்துக்களைப் பல அறிஞர்கள் கூர்மையாகக் கவனித்தனர்.

தாகூரின் நாவல்களில் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது அவரது ஏழாவது நாவலான “கூhந ழடிஅந யனே கூhந றுடிசடன” (ழுhயசந க்ஷநnசைந) என்பது. இது ஒரு அபூர்வமான நாவல். அவரது புகழ்பெற்ற நாவல்களை ‘புயல்’ “கோரா” ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நாவல் இது. இதனை ஒரு அரசியல் நாவல் என்று கூறலாம்.

இந்த நாவல் பற்றிக் காணுமுன்னர், தாகூரின் படைப்புகள் எழுந்த காலகட்டத்தினையும் காண வேண்டியுள்ளது. அவர் வாழ்ந்த காலம் என்பது கருத்தியல் ரீதியாக தேசீயம் எழுச்சி பெற்ற காலம் ஆகும். இந்திய தேசீய தலைவர்கள் அந்நிய அரசிடம் சலுகைகள் கேட்பது என்ற ஒரு நிலையினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் 1905ஆம் ஆண்டு இடம்பெற்ற ரஷ்யப் புரட்சியும், ஏறத்தாழ அதே ஆண்டில் இந்தியாவில் இடம்பெற்ற வங்கப் பிரி வினையும், தேச விடுதலைப் போராட்டத்தின் தன்மையை மாற்றியது. அது தீவிரவாதப் போராட்டமாக உருவப் பெற்றது. இதன் தாக்கத் தினைப் பாரதியிடமும் காணலாம். இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் மகாத்மா காந்தியின் வருகையுடன் இணைந்தது. இந்த மூன்று கட்டங்களையும் கண்டவர் தாகூர். இதன் வாதப் பிரதிவாதங்களை உள்வாங்கிக் கொண்டவர் தாகூர். இதன் பிரதிபலிப்பினை அவரது உரை நடை இலக்கியங்களில் காணலாம்.

அதே சமயத்தில் தாகூரின் குடும்பம் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது குடும்பம் வசதியான, பிரபலமான குடும்பம் ஆகும். அவரது பாட்டனார், துவாரகநாத தாகூர் ஒரு பெரிய வியாபாரி, அதே சமயத்தில் சநாதன மரபுகளை மீறியவரும் ஆவார். அவர் கல்வியறிவு அளிப்பதிலும், மதச் சீர்திருத்தத்திலும் அதிகம் ஈடுபட்டார். தாகூரின் தந்தை, தேவேந்திர நாத தாகூர் ஒரு சந்நியாசி போன்ற வாழ்க்கையை நடத்தியவர். அவரை, ‘மகரிஷி’ என்று மக்கள் அழைத்தனர். தாகூரின் தாயாரும் பக்தியுள்ள ஒரு பெண்ணாக இருந்தார். தாகூர் அந்தக் கால ஆங்கிலேயர்களது பள்ளியில் படிக்க விரும்பாததால் தாகூருக்கு வீட்டிலேயே கற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொழி, இலக்கியம் பல்வேறு அறிவுத் துறைகள் ஆகிய வற்றைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர். இவை அனைத்தும் அவரது படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தின.

II

தாகூரின் நூல்கள் என்ற உடனேயே ‘கீதாஞ்சலி’ மட்டும் தான் நமது நினைவிற்கு வரும். ஏனென்றால் அது ஆன்மிகத் தன்மை உள்ளது. அதனைப் பாராட்டிய அளவிற்கு அவரது மற்றப் படைப்புகள் பாராட்டப்படவில்லை. அதிலும், குறிப்பாக அவரது நாவல்கள் பற்றிப் பேசுபவர்கள் மிகவும் குறைவு. அவரது நாவல்களில் பெரும்பாலானவை மத்திய தர வர்க்க உணர்வுகளைப் பிரதிபலிப்பவை ஆகும். ‘புயல்’ என்ற நாவல் அத்தகையது. அவரது பல நாவல்களில் குடும்பம், ஆண் பெண் உறவு ஆகியன ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் “வீடும் உலகமும்” என்ற இந்த நாவல் சற்று வித்தியாசமானது ஆகும்.

தாகூர் வாழ்ந்த காலத்தின் பல அரசியல் நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. இதன் கதை என்பது மூன்று கதை மாந்தர்கள் கூறும் முறையில் அமைந்துள்ளது. விமலா, நிகில், சந்தீப் ஆகியோர் தங்கள் அநுபவங் களைக் கூறுகின்றனர். நிகில் பெரும் பணக்காரன். விமலா அவனது மனைவி. நிகில் நவீன கருத்துக் களை ஆதரிப்பவன். தனது மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுக்க விரும்புபவன். விமலா, பழைய மரபுகளைப் பின்பற்றுபவள். முகத்திரை அணியும் வழக்கம் உள்ளவள். ஆனால் அவளைச் சமமாக நடத்தும் பண்பு உள்ளவன் நிகில். அந்த வீட்டில் உள்ள மற்றப் பெண்கள் பழைய மரபுகளை விடாமல் போற்றுபவர்கள். நிகில் இவற்றை ஆதரிக்கவில்லை. அரசியல் ரீதியாக அவன் ஒரு அகிம்சாவாதி. இந்தியாவிற்கான விடுதலை அமைதியான முறையில் தான் கிடைக்க வேண்டும் என்று அவன் கருதுகிறான்.

இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்றாவது நபர் தான் சந்தீப். இவன் ஒரு போலி தீவிரவாதி. குறுக்கு வழியில் சிந்திப்பவன். இவன் விமலாவை அடைய முயற்சிக்கிறான். விமலாவும் அதற்கு ஓரளவிற்கு இடமளிக்கிறாள். ஆனால் விபரீதம் நிகழ்வதற்கு முன்னர் அவள் விழித்துக் கொண்டு, தன்னை மாற்றிக் கொள்கிறாள். தீவிர வாத நடவடிக்கைகளுக்குப் பணம் வேண்டும் என்று விமலாவைத் திருடச் சொல்கிறான். அவள் மூலம் ஐயாயிரம் ரூபாயைப் பெறுகிறான். தீவிர வாதிகள் போராட்டம் காரணமாக நிகிலின் கஜானா கொள்ளையடிக்கப்படுகிறது. அதனை அடக்கச் சென்ற நிகில் சுடப்பட்டு காயமடைகிறான். அவனது உதவியாளன் அமுல்யா என்பவன் கொல்லப்படுகிறான். விமலா மனம் மாறுகிறாள். சந்தீப் கல்கத்தா சென்று விடுகிறான். இது தான் நாவலின் சுருக்கம்.

இந்த நாவலை முக்கோணக் காதல் கதை என்று வழக்கமான பாணியில் விமர்சகர்கள் மதிப்பிட்டுள்ளனர். நிகில் விமலாவின் மீது அன்பு வைத்திருக்கிறான். சந்தீப் விமலாவை விரும்பு கிறான். இது மேலோட்டமான ஒரு விஷயம். ஆனால் இதற்குப் பின்னால் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பெண்களது நிலை பற்றியும், உழைப் பாளிகள் நிலை பற்றியும் தாகூர் தனது விமர்சனத் தினை முன் வைக்கிறார்.

விமலா, விமலாவின் நாத்தனார் ஆகியோரது நிலைமை வர்ணிக்கும் பொழுது பெண்கள் பற்றி தாகூர் சிந்திக்கிறார். விமலா பழைய மரபு வழியில் வந்தவள். ஆனால் அவளது கணவன் அவளுக்கு விடுதலை அளிக்க விரும்புகிறான். இது அரசியல் ரீதியாக இந்தியாவையும், இந்திய விடுதலையையும் குறிப்பதாக உள்ளது. சந்தீப் விமலாவை பாரத மாதாவாகக் காண்கிறார். நிகில் அவளது சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. ஆனால் அவளது புகுந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சுதந்திரம் இல்லை. அந்தப் பெண்களது நிலைமையை சீனப் பெண்களுடன் ஒப்பிட்டு நிகில் பேசுகிறான். சீனப் பெண்களது கால்கள் கட்டப்பட்டு இருப்பது போன்று, இந்திய சமுதாயத்தின் ஆதிக்கமானது இப்பெண்களைச் சிறுமைப்படுத்திவிட்டது என்று அவள் கூறுகிறாள். விமலாவின் மூலம் பெண் விடுதலையை தாகூர் முன் வைக்கிறார். நவீன காலத்திற்கு ஏற்ப பெண்கள் மாற வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இந்த நாவலில் இடம்பெறும் மிக முக்கிய மான விஷயம் தேச விடுதலைப் போராட்டம். தாகூர் காலத்தில் தேச விடுதலைப் போராட்ட மானது தீவிரவாதப் போராட்டமாக மாறிக் கொண்டிருந்தது. அதன் உருவகமாக இடம்பெறும் பாத்திரம் தான் சந்தீப். அவன் தீவிரவாதம் பேசு கிறான். விமலாவையும் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான். ஆனால் தீவிரவாதப் போராட்டத் தினை விமர்சனம் செய்கிறான். சந்தீப் தன் சுய நலத்திற்காக தீவிரவாதியாக விளங்குகிறான். அவனே ஒரு ஏமாற்றுக்காரன்.

தீவிரவாதப் போராட்டத்தினை வலியுறுத்து பவன் நிகில். அவன் அஹிம்சாவாதம் பேசும் அதே சமயத்தில் தீவிரவாதிகள் நடத்திய அந்நியத் துணிப் புறக்கணிப்பினை நிகில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவன் ஒரு பொருளாதாரக் காரணத்தினைக் கூறுகிறான். அதாவது துணி நெசவு செய்து வெள்ளையர்களுக்குக் கொடுப்பவர்கள் முஸ்லிம் உழைப்பாளிகள் ஆவர். அந்நியத் துணிப் புறக் கணிப்பினால் அவர்களது தொழில் பாதிக்கப் படும் என்பது அந்தக் காரணம். இந்தப் பிரச்சினை யானது தீவிரவாதிகளால் வேறு விதமாகப் பயன் படுத்தப்படுகிறது. அந்நியத் துணிப் புறக்கணிப்பினை முஸ்லிம் உழைப்பாளிகள் எதிர்க்கின்றனர். அது பலாத்காரப் போராட்டமாக மாறுகிறது. இதற்கு மதச்சாயம் பூசப்பட்டு, வேறு விதமாக மாறுகிறது. இதன் விளைவு நிகிலின் கஜானா கொள்ளை யடிக்கப்படுகிறது. நிகில் குண்டடிபட்டு மயக்க மடைகிறான். அகிம்சாவாதம் பின்னடைந்தது என்பதை தாகூர் இதன் மூலம் எடுத்துக் காட்டு கிறார். ஆனால் தாகூர் தீவிர வாதத்தினை ஆதரிக்க வில்லை.

இந்த நாவலில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சிறு கதாபாத்திரம் பஞ்சு என்பது. பஞ்சு ஒரு பண்ணையடிமை. அவனது பண்ணையார் அவன் பட்ட கடனுக்காக அவனைக் கொடுமைப்படுத்து கிறார். நிகில் அவனை விடுவித்து தலைச்சுமை வியாபாரம் செய்ய அவனுக்கு உதவுகிறான். அவன் மூலம் தாகூர் உழைப்பாளிகள்பால் உள்ள தனது அனுதாபத்தினை வெளிக் காட்டுகிறார்.

தாகூரின் இந்த நாவல் சற்று வித்யாசமானது. மேல் தட்டு மக்களின் பார்வையிலிருந்து எழுதப் பட்டிருந்தாலும், இந்த நாவலில் தாகூர் பல முற்போக்கான சிந்தனைகளை முன் வைக்கிறார். பெண்களைப் பற்றிச் சிந்திக்கிறார், போராளி களைப் பற்றிச் சிந்திக்கிறார். போலிகளை அம்பலப் படுத்துகிறார். சந்தர்ப்பவாத அரசியலை விமர்சனம் செய்கிறார். பஞ்சு போன்ற கிராமப்புற உழைப் பாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள இன்னல்களைப் பற்றிச் சிந்திக்கிறார். வசதியுள்ளவர்கள் இவர் களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றிச் சிந்திக்கிறார். எனவே இது வித்யாசமான நாவல் என்று தாகூர் ஆய்வாளர்களால் இது கருதப்படுகிறது.

Pin It