வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பற்றிய சமூக வரலாற்று ஆய்வுக் குறிப்பும் அவரது மதக் கருத்துநிலை பற்றிய ஓர் உசாவலும்

I

தமிழ்நாட்டின் சமூக - மத வரலாற்றிலும், அதன் கருத்துநிலை பரிமாண விகசிப்பிலும் வடலூர் வள்ளலார் பெறும் இடம்.

அ.   வாழ்ந்த காலம்  :     1823-1874

ஆ.   தொழிற்பட்ட துறை    :     மதம், சமகாலச் சமூகத் தேவைகள் இலட்சியங்களை உள்ளடக்கிய உலக நோக்கைக் கொண்டே சைவ மதச் சீர்திருத்தம்.

இ.   பிரதான சான்றுகள்    :     அவருடைய ஆக்கங் களினது தொகுப்புக்கள், அவரோடு ஊடாட்டம் கொண்டிருந்தவர்களின் பதிவுகள்.

ஈ.   செயற்பட்ட இடம்     :     சென்னைப் பட்டினம், அதன் பின்னர் சிதம்பரம், வடலூர் உள்ளிட்டதும் தென் ஆற்காடு பிரதேசம் எனக் கொள்ளப்படுவது மான ஏறத்தாழ தமிழ்நாட்டின் மேல் மத்திய பகுதி.

ஏறத்தாழ 1920களின் பிற்கூற்றிலிருந்து தொடங்கும் சுயமரியாதை, பகுத்தறிவுவாத இயக்கங் களின் பரவலாலும், சமூக மேலாண்மையாலும் நன்கு உணரப்படாது போன, ஆனால் இந்த இயக்கங்கள் நிலைநிறுத்த முயன்ற சமூக மானுட சமத்துவத்தைச் சைவத்தின் அடையாளக் குறியீடாக அமைந்திருக்கும் சிவதாண்டவ நடராஜர் வடிவத் தினைக் கட்டளைப் படிமமாகக் கொண்டு, அதனூடே தாம் வாழ்ந்த காலத்து சமூகஇடர் களைய கொள் கைகளை எடுத்துக் கூறியமை.

பகுத்தறிவுவாத அலையின் தளர்வின் பின் தவிர்க்க முடியாதபடி கிளப்பியுள்ள ஆன்மிக (உயிர்ப்பு)ப் பிரக்ஞையின் முகிழ்ப்புக் காலத்தில் மிகக் காத்திரமான முறையில் மீளாய்வு செய்யப் படுவதும், செய்யப்பட வேண்டியதுமான ஒரு வரலாற்றுப் புருஷர் இராமலிங்க சுவாமிகள் ஆவார்.

இன்னொரு வகையிற் கூறினால் 19ஆம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து தமிழ்நாடு ஒரு சமூக, பொருளாதார நவீனமயவாக்கப் பாதையில் செல்லத் தொடங்கியபொழுது, ஆன்ம உயிர்ப்புத் துறையில் நவீனமயவாக்கத்திற்கான ஒரு சமத்துவஞ்சார் மதக் கருத்துநிலையை வளர்த் தெடுத்தவர் இவராவார்.

இந்தக் கருத்துநிலை உருவாக்கத்தின் பொழுது, தமிழ்நாட்டின் (தென்னிந்தியாவின்) சித்தர் பாரம் பரியத்தினூடாக நவீனத்துவ மரபினை வந்து தொடும் ஒரு முயற்சியாக இதனைப் பார்த்தல் வேண்டும். இன்னொரு வகையிற் கூறினால், காலனித்துவத்தின் சவால்களை ஏற்று, அவற்றுக்கு முகங்கொடுத்து, தாம் எடுக்கும் நிலைப்பாடுகளைப் பாரம்பரியத்தில் இருந்தும் விடுபடாத, ஆனால் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் இயக்கங்கள் வட இந்தியாவில், மஹாராஷ்டிரத்தில் கேரளத்தில் தோன்றிய பொழுது அது தமிழக மண்ணில் அந்த மண்ணின் தேவை களுக்கேற்பவும், அதன் பண்பாடுகளுக்கு இயையவும் எவ்வாறு வளர்ந்தது என்பதைச் சித்திரித்து நிற்பது வள்ளலாரின் இயக்கம்.

தெற்கில் வைகுண்ட சாமியின் இயக்கம் ஒன்று இருந்ததெனினும் அதனிலும் பார்க்க, பண்பாட்டு இயைபுடன் வளர்ந்தமை.

மக்களுக்கு உணவளித்தல், ஜீவகாருண்யம் காட்டுதல் என்ற சமூக நியமங்களை மதக் கடமை களாக ஆக்குகின்ற தன்மை. அதுவும் அதிகாரப் படிநிலைக்குப் பழக்கப்பட்ட ஒரு சமூகத்தில்.

தமிழகத்தின் பக்திப் பாரம்பரியத்தில் முதற் சமயக் குரவர்களான தேவார முதலிகளுக்கு அவர்கள் மறைந்ததன் பின்னர் வழங்கப்பட்ட ஓர் அந்தஸ்தை இராமலிங்கருக்கு வாழுங்காலத்திலேயே வழங்கப்பட்டமை பற்றி எழுந்த சைவ மதநிலைக் கருத்து வேறுபாடுகள்.

II

முற்றிலும் மதநிலையினதாகவே கொள்ளப் படும் ஒரு எழுவினாவை (Issue) அல்லது பிரச்சினை மையத்தைச் சமூக நிலையில் எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கார்ல் மார்க்ஸ் தரும் சில சிந்தனைகள், இங்கு மிக முக்கியமானவை.

மதத்தினது எடுகோள்களும், எதிர்பார்ப்புகளும் விஞ்ஞானபூர்வமற்றவை. எனினும், அவை சமூக நிலைப்பட்ட வழக்கங்களுக்கு உட்பட்டவையே. அந்த வகையில் மதத்தின் இயல்புகள், தொழிற் பாடுகள், பயன்பாடுகள்பற்றி நோக்கும்பொழுது வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் மதங்களினது நிலைப்பாடுகளை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

ஒருபுறத்தில் சமூக அதிகாரங்களையும், அந்த அதிகாரங்களின் வழியாகக் கிளம்பும் பெறுமானங் களையும் பேணப்பட வேண்டிய நியமங்களாக்கி, அதிகாரப் பேணுகைக்கு வழிவகுக்கும் மதங்கள் இன்னொரு நிலையில், மனிதன் தன்னைப் பற்றிய சுய கணிப்பிற்கு உதவுகின்றன.

வாழ்வின் இருப்புநிலைகள் வழிவரும் மானுட நிலைகள் ஒருபுறமாகவும், மானிட உயிர்ப்பின் இலக்கு நோக்குகள் இன்னொரு புறமாகவும் இணையும் பொழுது மதம், மனிதனை அவன் வாழும் குழுமத்தோடு இணைத்துக் கொள்கிறது. அந்த அளவில் அந்த மதம் அவனது தேவைகள் எதிர்பார்ப்புக்களுக்கான ஓர் அளவுமணியாக மாறுகிறது. அந்தப் பயன்பாட்டை மதம் செய்யத் தவறுகின்றபொழுது அது தன் வலுவை இழந்து விடுகிறது.

மதத்திற் பேசப்படும் துயரம் நிஜவாழ்க்கையில் உள்ள துயரங்களின் இன்னொரு எடுத்துரைப்பே யாகும். மதத்தின் அடிப்படை அம்சங்களான நம்பிக்கை, சடங்கு, ஐதீகம் என்பன ஒன்றுட னொன்று ஊடாடி இணைகின்ற பொழுது, அந்த விசுவாசியைப் பொருத்த வரையில் “இதயமற்ற உலகின் இதயமாகவும்” அமைந்து விடுகிறது. (Cvitique of Hegel’s Philosophy of Right Page - 171) இவ்வாறு நோக்கும்பொழுது மத எழுச்சிகள் என்பவை உண்மையான சமூகத் துயரங்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான பண்பாட்டுநிலை வெளிக்கொணர்கைகளே.

பௌத்தத்தின் எழுச்சி, மத்திய தரைப் பிரதேசத்தில் கிறிஸ்தவத்தின் எழுச்சி, அதன் பின்னர் அரேபியாவில் வரும் இஸ்லாத்தின் எழுச்சி, 7-ஆம் 8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கம், 11-ஆம் 12-ஆம் நூற்றாண்டுகளில் கன்னடத்தில் வரும் வீரசைவ இயக்கம். வங்காளத்தில் வரும் கிருஷ்ண சைதன்ய இயக்கம், மறுமலர்ச்சியின் பின் ஐரோப்பாவில் வரும் மதச் சீர்திருத்த இயக்கம். முதல் 1970, 80-களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிளம்பும் விடுதலை மறையியல் என்பன யாவுமே சமூகத் துயரங்களிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி மத எழுச்சிகளின் அடியாக வருவதைக் காட்டுகின்றன.

இத்தகைய ஓர் அறிவு சார்ந்த பின்புலத்தில் தமிழகத்தில் 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமரச சன்மார்க்க மத இயக்கத்தினைப் பார்ப்பது அவசியமாகின்றது. இந்த முறைமையில் வள்ளலார் எடுத்துக் கூறிய சுத்த சமரச சன்மார்க்கத்தின் அமைவு நெறியினை நோக்குவதற்கான ஒரு வாய்ப்புண்டு.

 

III

இந்தியாவில், தமிழகத்தில் பிரித்தானியக் காலனித்துவம் ஏற்படுத்திய பிரதான தாக்கங்கள்:

19-ஆம் நூற்றாண்டு சமூக, கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்றைப் பயில அக்கால அரசியல் வரலாற்றினைப் பயிலும்பொழுது பயன்படுத்தும் காலனித்துவக் கருத்துகளைப் பயன்படுத்துவதில்லை. இது 19-ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை யதார்த்தபூர்வமாக எடுத்துக் கூறுவதிலும் விளங்கிக்கொள்வதிலும் சில சிக்கல்கள் ஏற்படுத்தியுள்ளது. காலனித்துவமயப்படுத்திய தேவைகளை வற்புறுத்தாத நிலையில், சமூகப் பண்பாட்டு வரலாற்று நிகழ்ச்சிகள் நமது பண் பாட்டின் இயல்பான மேற்கிளம்புகைகள் என்ற ஒரு பரிமாணத்தைப் பெற்று விடுகின்றன. பிராமணர் - பிராமணர் அல்லாதோரின் மோதுகைகள், இவற் றோடு சம்பந்தப்பட்ட சமூக பண்பாட்டு இயக்கங்கள் ஆகியனவற்றைப் பூரணமாக விளங்கிக் கொள் வதற்கும், இவற்றின் வழிவந்து இன்னும் முக்கிய இடம்பெறும் சமூக முரண்பாடுகள், மோதுகைகள் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதற்கும் காலனித்துவம், பின்காலனித்துவம் ஆகிய எண்ணக் கருக்கள் பெரிதும் உதவும்.

காலனித்துவம் பற்றிய சிந்திப்பின்றிச் செய்யப் படும் இத்துறை ஆய்வுகள், இப்பிரச்சினைகள் பற்றிய முழுமையான விளக்கத்தைத் தரா. குறிப்பாகத் தமிழ்நாட்டில் 1970கள் முதல் ஏற்பட்டுள்ள பல பிரச்சினை நகர்வின்மைகளை விளங்கிக் கொள்ள இவ்எண்ணக்கருக்கள் பயன்படும்.

தமிழ்நாட்டில் பிரித்தானிய ஆட்சியும், நிர்வாக ஒழுங்கமைப்பும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் தமிழ்நாடு குறுநில மன்னர்களின் ஆட்சிப் பிரதேசமாக இருந்தது. வடக்கில் நிலவிய மொகலாய ஆட்சி யொருமை போன்றோ அல்லது மகாராஷ்டிரத்தில் நிலவிய சிவாஜி ஆட்சி வழிவந்த ஆட்சியொருமை போன்றோ தமிழ்நாட்டில் இருக்கவில்லை. எனவே இங்குக் காலனித்துவத்தின் தாக்கம் ஆட்சியொருமை நிலவிய இடங்களிலிருந்ததுபோல அமையவில்லை.

ஒட்டுமொத்தமான சென்னை மாகாணத்தினுள் தமிழ்நாடு ஒரு பகுதியே. தமிழ்ப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வுகளின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் முக்கியப்படுத்தப்படுகின்றன.

1.     செய்கை பண்ணப்படாத நிலத்தின் அளவு பெரிதாக இருந்தது.

2.     இருந்த விவசாயிகள் எல்லோரும் பயன் படுத்தப்படாத நிலம்.

3.     கால்நடை குறைவு.

4.     மக்கள் வறியோர் ஆக்கப்பட்டமை.

5.     ரயத்வாரி முறைமை காரணமாக மக்களின் கடன் பளு.

6.     பஞ்சங்கள் அதிகமாகக் காணப்பட்டமை.

1729-33, 1781-1802, 1807, 1833-34, 1854, 1866, 1878.

இந்தப் பஞ்சங்களின் தன்மையொன்று சில விடங்களில் செழிப்பிருக்க, சிலவிடங்களில் போக்கு வரத்துப் பாதைகள் இல்லாமையால் பஞ்சம் வரும்.

காலனித்துவ வழிவந்த ஆட்சிமுறை ஏற்படுத்திய, முன்னர் நிலவாத சில அம்சங்கள்:

1.     சட்டத்தின் முன் சமம்.

2.     அதிகாரப் படிநிலை இன்மை.

3.     காலனித்துவ நிர்வாகத்திற்கான ஆள்சேர்ப்பு முறைமை. முன்னர் சடங்காசாரமான மேன்மை யுடனும், சில விடயங்களில் நிலவுடைமை வழிவந்த மேன்மையும் காரணமாகவிருந்த சில குழுமங்களை மேல் நிலைக்குக் கொண்டுவர மக்கள் குழுமங்களிடையே அதிகார எதிர் பார்ப்புக் காரணமாக மோதல்கள் தொடங்கு கின்றன.

ஒட்டுமொத்தமாக, இடைநிலை, அடிநிலை மக்களைப் பொருத்தவரையில் ஒரு புறத்தில் ஒடுக்கு முறையும் மறுபுறத்தில் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திற்று.

IV

காலனித்துவத்தினுடைய சில இலக்குகளை அமுல்படுத்துவதற்கு உதவியாக அமைந்த புரட்ட ஸ்தாந்தக் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு:

1.     16-ஆம் நூற்றாண்டிலிருந்தே கிறிஸ்தவம் தமிழ் நாட்டில் உள்ளது. முதலில் கத்தோலிக்க மதமும், பின்னர் குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டில் டேனிஷ், மிஷனரிகள் ஆதரவுடன் வந்த ரோமன் கத்தோலிக்கமும், சுவிடிஷ் வழிவந்த புரட்டஸ்தாந்து மரபுகளும் உள்ளன. ஒருபுறம் வீரமாமுனிவர் என்றால் இன்னொரு புறத்தில் நோபட் டீ - நொபிலி (தத்துவபோதக சுவாமிகள்) இருந்தார். குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டின் புரட்டஸ்தாந்திகளின் தொழிற்பாடு காரண மாக அச்சுப் பதிவு, எழுத்தறிவு பரவத் தொடங்குகின்றன.

2.     ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிதக் காலத்திலும், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பல கிறிஸ்தவ சபைகள் தமிழ்நாடு முழுவதிலும் தொழிற்பட்டன. LMS, Society For Propogation of Christian Knowlede, Society for propogation of the Gospel என்பன மாத்திரமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் ஆகியன தொழிற்படத் தொடங்கின. போப், கால்டுவெல், ஆர்டன் போன்றோர் இந்த இயக்கங்களின் வழியாக வந்தவர்கள். இவர்கள் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டில் மிக விரிவாகத் தொழிற்படுகின்றனர். போப்பி இதனுடைய திருவாசக மொழிபெயர்ப்புக்கள், கால்டுவெல் History of the shanar of Thirunaival போன்ற நூல்கள் முக்கியமானவை.

வடதமிழ்நாட்டில், செங்கல்பட்டு போன்ற பிரதேசங்களில் ஆங்கில ஆட்சி நிருவாகம் இருந்ததால் அங்குள்ள அடிநிலை மக்கள் ஆங்கிலேயர்களுடன் உறவு கொண்டு தங்கள் நிலையை மேம்படுத்தினர். Madras baseel பிரம்மஞான சங்கத்தின் தொடர்பு மிருந்தது.

புரட்டஸ்தாந்து மத வழிபாட்டின் முக்கிய மான ஒரு அம்சம் சடங்குகளின் குறைவாகும். க்ஷiடெந வாசித்தல், பாடல்கள் பாடல் போன்ற வற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கூட்டு வழிபாடு - இந்து சமய முறைமைக்கு நேரெதிரானது.

கிறிஸ்தவம், இசுலாம் ஆகியவற்றின் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தின் இந்தத் தாக்கங்கள், மதம் பற்றிய நோக்கில் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.

காலனித்துவ நிர்வாகத்துக்கு வேண்டிய ஆங்கிலத்தைப் பயிற்றுவித்தல்.

இவர்கள், குறிப்பாக அடிநிலை மக்கள் இடையே தமது மதத்தைப் பரப்புகின்றனர். பெருந் தொகையான மக்கள் மதம் மாறவும் தொடங்கு கின்றனர்.

இந்தப் பின்புலத்திலே தான் இந்து மதத்தில் தோன்றிய புதிய எழுச்சிகளை நோக்க வேண்டும்.

V

இஸ்லாம், கத்தோலிக்கத்திலும் பார்க்க இந்த 19-ஆம் நூற்றாண்டு மிஷணரின செயற்பாடுகள் தமிழகத்தின் பாரம்பரியமான சமூக அடுக்கு நிலையைப் பாதிக்கும் முறைமையில் தாக்கங் களை ஏற்படுத்தின. சமூக அசைவியக்க நிலையில், சமூக மேல்நிலையாக்கத்திற்கு இந்த மத மாற்றங்கள் உதவின.

இதுகாலம் வரையில் காணப்படாத ஒரு மதப் பிரக்ஞை ஏற்படுகிறது அந்த மதப் பிரக்ஞையில் பங்கு பற்றல் உணர்வு முக்கியமாகின்றது. பாரம் பரிய இந்துமதம் அடிநிலை மக்களுக்கு ஏறத்தாழ இடங்கொடுக்காமலேயே இருந்தது. அவர்கள் நிலையிலுள்ள வழிபாடுகள் வித்தியாசப்பட்டவை. தெய்வங்களை வழிபடும் முறைகள், உணவு முறை மைகள் ஆகியவற்றில் இவற்றைக் கண்டு கொள்ளலாம். இந்த நிலைமை பாரம்பரிய இந்து மதத்திற்கெதிரான பாரிய சவால்களை கிளப்புகின்றது.

இந்தக் கிறிஸ்தவ தாக்கச் சூழலிலேதான் வைகுண்டசாமியின் எதிர்ப்பியக்கம் ஆரம்பிக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் சிலவற்றை மனத்திருத்தல் வேண்டும்.

1.     வைகுண்டசாமியின் காலம் : 1809-1851.

2.     இயக்கத்தின் பெயர் : அன்பு வழி (1840).

3.     செயற்பட்ட இடம் : சாத்தான் கோயில் விளை (தற்போதைய சாமித் தோப்பு).

4.     பிரதான அம்சங்கள் : i. சிலைகள் இல்லை; கண்ணாடியும் அதற்கு முன்னால் ஒரு சுடரும் வைக்கப்பட்டிருந்தது ஒளிவழிபாடு. (இது நாடார் மக்களிடையே நின்றுவிட்டது) (பொன்னீலன் தெற்கிலிருந்து ஞப : 83) ii. கூட்டு வழிபாடு iii. கல்வியறிவை வளர்த்தல்.

5.     நூல் : அகிலத் திரட்டு

இந்த முன்னுதாரணம் மிக முக்கியமானதாகும். ஏனெனில் இது அடிநிலை மக்கள் பற்றியது. சமூக சமத்துவம் கூட்டு வழிபாட்டைக் கொண்டு வருகிறது. கண்ணாடியை, ஒளிச்சுடரை வணங்குவது. எல்லா வற்றிலும் முக்கியமானது.

வள்ளலார் காலம் : 1823

1865  -      சன்மார்க்க சங்கம்

1867  -      சத்திய தர்ம சாலை

1872  -      சத்திய ஞான சபை - வழிபாட்டிடம்

இதன் பிரதான அம்சங்கள் :

பால், சமய, சாதி வேறுபாடின்மை - பொதுவான வழிபாடு - ஒளி வழிபாடு (7 திரைகள்) - அன்னதானம் வழங்கல்.

சேர்வதற்கான குறைந்த தகுதி : புலால் உண்ணாமை, கொலை செய்யாமை

இதன் வளர்ச்சியில் காணப்படும் பிரதான அம்சங்கள் தமிழுக்கு முக்கியத்துவம்.

-      பிராமணர்களோடு எதிர்ப்பில்லை. ஆனால் இந்த வழிபாட்டு முறை வேறு.

-      வேளாண்மை வேளாளர்களுக்கு முக்கியத் துவம், ஆதீனங்களோடு நல்லுறவு.

-      இவருடைய திறமை காரணமாக இதற்கான தத்துவத்தை உருவாக்கல்.

-      கவித்திறன்.

(மருதூர் வள்ளலார் - கிருஷ்ணன்), சமரச சன்மார்க்கத்தின் அடிப்படைகள் (யீப.96).

பாடல்

i. மற்றவர்களுடைய துன்பங்களைக் கண்டு சகிக்க முடியாத தன்மை.

1.     வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

              வாடினேன் பசியினால் இளைத்தே

       வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

              வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

       நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

              நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

       ஈடின்மா னிடர்களாய் ஏழைகளாய்நெஞ்

              சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

2.     கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்

              கண்ணுதற் கடவுளே என்னைப்

       பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்

              பெருகிய பழக்கமிக் குடையோர்

       மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து

              மறைந்திட்ட தோறும் அப் பிரிவை

       உற்றுநான் நினைக்குத் தோறும் உள் நடுங்கி

              உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

3.     மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்

              வருத்தத்தை ஒரு சிறிதெனினும்

       கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

              கணமும் நான் சகித்திட மாட்டேன்.

       எண்ணுறும் எனக்கே நின்னருள் வளத்தால்

              இசைந்தபோ திசைந்தபோ தெல்லாம்

       நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான்

              நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

VI

சிதம்பர நடராஜரை - நடனத்தை மையமாகக் கொண்டு அதனுள் இந்தப் புதிய விடயங்களை உள்ளடக்கல்.

பசியொழிவு, தீண்டாமை ஒழிப்பு, பால் வேறுபாடு ஒழிப்பு.

நடராஜர் சிலை இல்லாத வழிபாடு.

ராஜ்கௌதமன் சொல்வது போல 4வது திருமுறை வரை ஒரு போக்கும் 5, 6வது திருமுறை களில் வேறொரு போக்கும் காணப்படுகிறது. 6வது திருமுறையில் தொன்மங்கள் பற்றிய குறிப்பு மிகக் குறைவு, அருள்வழி ஜோதி தொடர்பான தகவல்கள் அதிகம். பிற்கட்டத்தில்தான் மரணமிலாப் பெரு வாழ்வு முக்கியப்படுகிறது. சித்தர் பாரம்பரிய வழியாக வரும் இப்போக்கு கவனிக்கப்பட வேண்டியது. தாயுமானவரைப் போன்று, சித்த நிலையினை பக்தி நிலையாக்குவது ஆயினும் அவரிலும் பார்க்க உணர்வு வெளிப்பாடு உணர்ச்சி பூர்வமான பாடல்கள் அதிகம். பாடல்களில் Human suffering முக்கியமாகிறது.

-      Father image.

-      ஜீவ, ஆன்ம, புலன், மன ஓழுக்கங்கள்.

வள்ளலார் பாடல்களைச் சைவ சித்தாந்தம், போகாந்தம் ஆகியவற்றினுள் வைத்துப் பார்க்கும் ஒரு தன்மை காணப்பட்டாலும், அவர் வேதாந்தம், சித்தாந்தம், நாகாந்தம், காலாந்தம், போகாந்தம், யோகாந்தம் என ஆறுவகைப்பட்ட அந்தங்களைக் குறிப்பிடுகிறார்.

இவரின் பாடல்களைப் பகுப்பாய்வு செய் வதற்கு, வேறு சில தடங்களையும் நாம் உரை கல்லாகக் கொள்ள வேண்டும்.

1.     God as light.

2.     சித்தர் மரபுவழிப் பாடல்களையும், இவரின் புதிய பாடல்களையும் இணைத்து நோக்கல்.

(இவரது எழுத்துக்கள் மூலம் இவரைப் பார்ப்பது முக்கியம். அது சரிவரச் செய்யப்படவில்லை)

-      கிறிஸ்தவம் பற்றிய தெள்ளத் தெளிவான தொடர்புகள் இல்லையெனினும், கிறிஸ்தவத்தில் விதந்து கூறப்படும் பல இங்கு இடம்பெறுகின்றன. ழுடின யள டiபாவ, இறையராட்சி, கூட்டு வழிபாடு.

-      Re Birth அல்ல Resurrection.

VII

சனாதன இந்து தர்மத்தின் வருகை, எழுச்சி, பிரச்சினையாகவிருக்கின்ற இந்தக் காலத்தில் வள்ளலாரின் Concept of Hinduism is a challenge.

அரசியல் இயக்கமொன்றை நம்பி பண்பாட்டு இயக்கங்களைக் கைவிட்ட நிலையில், அரசியல் இயக்கம் தளர்வுற்றதன் பின் பண்பாட்டுத் துறையில் Sanskritization தலைதூக்கி நிற்கின்றது.

இந்த இடத்தில் சமூக சமத்துவத்தைப் பேசிய மதப் பண்பாட்டிற்கு உரிய இடம் கொடுக்காததால் அது முக்கியத்துவப்படாமற் போகின்றது.

Pin It