சங்க காலத்தும் சங்கம் மருவிய காலத்தும் எழுந்த இலக்கியங்களில் பெண்ணடிமை நிலையும், சில சூழல்களில் பெண்ணுரிமை நிலையும் காண முடிகிறது. பெண் விடுதலை அமைப்புகளை முதலில் அமைத்தவர் பாரதியாரே ஆவார். தொல்காப்பியர் தொடங்கி இலக்கியவாதிகள் பலர் ஆணாதிக்கவாதிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழிலக்கியம் முழுவதும் ஆணாதிக்கப் பார்வைதான் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

பெண்ணுரிமை, ஆணாதிக்கம், என்றெல்லாம் பேசுகிறோம்; ஒரு காலகட்டத்தில் நம் சமூகம் ‘பெண் வழிச் சமூகம்தான்’. ‘மூன்றாம் விழி சிவனுக்குரியது’ என்றாலும் அவ்விழியைச் சிவனுக்கு அளித்ததே ‘பார்வதிதான்’ என்கிறது புராணக்கதை. ஆகவே நம் சமூகம் பெண்வழிச் சமூகமாக இருந்துள்ளது.

மேலும் ஆணின் துணை இல்லாததுகூடப் பெண் ‘படைக்கும்’ தன்மையுடையவளே என்கிறது மற்றொரு புராணம். அது ‘பகீரதன்’ தொடர்பானது. சாபம் ஒன்றினால் ‘சாகரர்’ வம்சம் அழிந்து போயிற்று. வாரிசு இல்லாதிருந்த மன்னனும் இறந்துபடவே. அவனது மனைவியர் இருவரும் வேதனை கொள் கின்றனர்.

வம்சத்தை விருத்தி பண்ணுவது எப்படி என்று தம் குலகுருவிடம் யோசனை கேட்கின்றனர். ‘ஒரு நன்னாளில் இருவரும் நிர்வாணக் கோலத்தில் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டால் சக்தி உண்டாகும் என்கிறார் குலகுரு’. ஆணின் பங்கு இல்லாது பிறந்த ஆண் குழந்தை எலும்புகளின்றி இருந்தது. நாணிக் கோணி நடக்கும் அவன் தன்னைப் பரிகாசிக்கின்றார்கள் என்று சபிக்க உடனே ‘சுஷ்பவக்திரர்’ என்னும் முனிவருக்கு விஷயம் தெரியவந்ததும் அவன் குறைபோக்கி இயல்பானவனாக ஆக்கிவிடுகிறார். அவனே ‘பகீரதன்’ ஆவான்.

கர்த்தரால் முதலில் ஆதாம் படைக்கப்பட்டு ‘ஆதாமின்’ விலா எலும்புகளிலிருந்து உருவானவள் ‘ஏவாள்’ என்று கிறிஸ்து மரபு கூறுகிறது. ஆனால் ‘ஹிப்ரு’ தொன்மத்தின்படி முதலில் தோன்றியவர் ‘ஏவாள்’ அல்ல. அதற்கு முன் ‘லிலித்’ என்ற பெண் என்கிறது. இப்படி பலதரப்பட்ட கருத்துகள்படி ‘பெண்தான்’ முதலில் படைக்கப்பட்டாள் என்று அறியப்படுகிறது.

ஆங்கிலத்தில் பெமினிசம் (Feminism) என்ற சொல்லுக்குத் தமிழில் பெண்ணியம், பெண்ணிய வாதம், பெண்ணிலை ஏற்பு, மகளிரியல், பெண்ணியக் கொள்கை எனப் பல சொற்கள் வழங்கப்படுகின்றன. 1890-க்கு முன்பு ‘Womanism’ என்றிருந்தது. பிறகு ‘Feminism’ என அழைக்கப்படுகிறது. 1894-இல் வெளிவந்த ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘பெமினிசம்’ என்ற சொல்லுக்குப் பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது என்று பொருள் கூறப்படுகிறது.

மரபு ரீதியான பெண்ணடிமைக் கருத்துக்கள் தொல்காப்பியரின் நூற்பாக்கள் வழி நின்று அறியமுடிகிறது.

“பெருமையும் உரனும் ஆடூஉமேன”

(தொ -பொரு -களவியல் -7)

இதன் அடிப்படையில் ஆண்மகன் உரனுடைய வனாகப் பெருமைக்குரியவனாக உருவாக்கப்படு கிறான்.

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும்

 பெண்பாற் குரிய” 19

என்று பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப் படுகிறது. மேலும் ‘கற்பு’ பெண்ணிற்குக் கட்டாய மாக்கப்படுகிறது.

பெண்மகள் அச்சம், நாணம், மடம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக, இரக்க முடையவளாக, அடக்கம், அமைதியின் உருவாகவும், ஆற்றல் இல்லாதவளாக, செயல் திறனற்றவளாக உருவாக்கப்படுகிறாள்.

மேற்கூறிய மனோபாவத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண்தான் மெல்லியள், இப்படித்தான் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று எல்லாம் கூறி வளர்க்கப்படும்போது அக்கருத்துக்கு மாறாக பெண் தன்னை மாற்றிக் கொள்ளாது தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள்

“பொம்பளை சிரிச்சாப் போச்சு

 புகையிலை விரிச்சாப் போச்சு”

என்றும்

‘கல்லானாலும் கணவன்

 புல்லானாலும் புருசன்’

என்றும்

பேதைமை என்பது பெண்ணிற்கு அணிகலன் (ஒளவையார்)-என்றும் இகழ்வனவே காதலன் தான் செய்யும் கொண்டாளை யல்லால் யறியாக் குலமகள் (குலசேகர ஆழ்வார்) என்றும்,

பழமொழிகளும், புது மொழிகளும் தோன்றிப் பாலியல் சார்ந்த கருத்துக்களைப் பரப்பின. இவ்வாறாக ஆண்களை ஆள்பவனாகவும் அதிகாரம் செய்பவ னாகவும் உருவாக்கிப் பெண்களை அடக்கி, ஒடுக்கி முடக்குகிறது.

சங்கக் காலப் பெண்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம்தரக் குடிமகளாக, கணவனே தெய்வம் என்று கொண்டாடுபவர் களாக ஆணின் தேவையை மட்டும் நிறைவேற்றும் பணிப் பெண்களாக வாழ்ந்தார்கள்.

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்

மனையற மகளிர்க்கு ஆடவர் உயிர்

(குறுந் - 135)

இவற்றிலிருந்து தொழில் செய்தல் ஆடவர்க்கு உயிர் வீட்டில் வாழும் பெண்ணிற்கு ஆடவர்தான் உயிர் என அக்கால சமுதாயம் கருதி வாழ்ந்தது. கணவனைப் பின்பற்றித்தான் மனைவி வாழ்தல் என்பதனைவிட அடிமைகளாக இருந்தது தெரிய வந்தது.

கேட் மில்லட் என்பவர் பெண்ணடிமைப் போக்கு வளர்ந்த வரலாற்றைப் பால் வகை அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண் பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஆணாதிக்க சமூகம் வகுத்ததுதான் பால் வகை என்பது ஆண் தனக்குரிய சமூகக் கனவாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்ற வற்றைத் தெரிந்து கொண்டான். பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளை ஆட்படுத்துகிறான். ஆதலால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுக, அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. ஆதலால் அவள் சுயசிந்தனை இல்லாதவளாக ஆடவன் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. ஆண், பெண் இடையே அதிகார உறவுகள் வளர்ந்து பெருக குடும்பம் என்ற அமைப்பும் காரணமாயிற்று.

தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி.100 - 500-இல் தோன்றி இரட்டைக் காப்பியத்தில் ஒன்றான ‘மணிமேகலையின்’ நாயகி மணிமேகலை தனது தாய் மாதவியின் குலத்தொழில் செய்யாது, குடும்ப வாழ்க்கையைத் துறந்து நாட்டு மக்களின் பசி தீர்த்தும் மக்களுக்கு அறமொழிகளை எடுத்து உரைத்தும் பல நல்லறங்களையும் செய்து பௌத்த நெறியின்படி ‘முத்தி’ பெற்று அறச் செல்வியாகக் காணப்பட்டாள்.

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

 மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

 உண்டியும் உடையும், உறையும் அல்லது

 கண்டதில்லை.”

காப்பியத்திலேயே பெண்ணியம் மணிமேகலை வாயிலாகப் பேசப்பட்டது அறியலாம்.

தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறிய வர்களுள் தேசிய போராட்ட கால கட்டத்தைச் சேர்ந்த பாரதியும், சுயமரியாதை இயக்கத்திற்காகப் போராடிய பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள். பெண் விடுதலை குறித்து பாரதியார் எழுதிய கவிதைகள் பெண்ணியக் கருத்துக்களை அறிவதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

‘அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம்’

என்று சாடுவதோடு நில்லாமல்

‘மாதர் தம்மை இழிவு செய்யும்

  மடமையைக் கொளுத்துவோம்’

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’

கி.பி.19-ஆம் நூற்றாண்டில் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பே பெண்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்குச் சங்ககாலப் பெண்பால் புலவர்களை ஒளவையார். ஆதிமந்தியார், நச்செள்ளையார் போன்றோர் பெண்ணுரிமை, கையறுநிலை போன்ற பல்வேறு பாடு பொருளில் பாடியுள்ளார். இருப்பினும் அவர்கள் ஆணாதிக்க சமூகத்தில்தான் வாழ்ந்துள்ளனர்.

பெண்ணுரிமை இயக்கங்கள் மேலை நாடுகளில் செல்வாக்குப் பெற்று விளங்குவதோடு, பிறநாடு களிலும் பாரதத்திலும் கால்கொண்டு வரத் தொடங்கியது. மேலை நாடுகளில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் வரவால் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை இலக்கியங்கள் எடுத்துக் காட்ட முனைந்தபோதுதான் பெண் முன்னேற்றமும் முளைவிடத் தொடங்கியது. பெண்ணியம் பெண் ணுரிமை பற்றி இன்று நிலவிவரும் சிந்தனைகள் அறுபதுகளின் தொடக்கத்தில் வடிவு கொண்டு மலர்ந்துள்ளதெனப் பெண்ணியம் குறித்த அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தமிழில் முதன் முதலில் எழுந்த புதினமான வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) தொடர்ந்து வந்த மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) இரண்டும் பெண் கல்வி, விதவை மறுமணம் முதலியவற்றைப் பேசுகின்றன.

பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்திருத்த இலக்கியங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து ஆணின் பாதி என்பதை மாற்றி ‘பெண்ணினம்’ தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவி செய்தது. பெரியாரை ‘தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி’ எனக் கூறுகிறார்கள்.

சங்க காலத்தையும், இடைக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண் கல்வியின் சதவீதத்தில் பெரும்பான்மை உடையது தற்காலம் என்றாலும் மற்றொரு புறம் ஒரு சாராரிடம் ஒரு பகுதியினரிடம் விழிப்புணர்வு இல்லை எனலாம்.

“கல்வியில்லாத பெண்கள்

 களர்நிலம்! அந்நிலத்தில்

 புல் விளைந்திடலாம்! நல்ல

 புதல்வர்கள் விளைதல் இல்லை”

(கு.வி.ப.69)

கல்வியறிவு கொண்டுள்ள பெண்கள் நன்றாகத் திருத்தம் செய்யப் பெற்ற கழனியை ஒப்பார் என்று பாவேந்தர் பெண் கல்வியைச் சிறப்பித்துப் பாடினார்.

பெண் கல்வியைப்பற்றிப் பல கவிஞர்கள் கனவோடு பாடினார்கள். அக்கனவு 50 சதவீதம் நிறைவேறினாலும், 50 சதவீதம் கனவாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் கிராமப்புறப் பெண்களின் கல்வி நிலையானது சமுதாயத்தில் மிக மோசமாக உள்ளது. கட்டாந்தரையாகக் கிடக்கின்றது. இக்காலக் கிராமத்துப் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி சிறப்பாக உள்ளது. உயர்கல்வி எட்டாக் கனியாக உள்ளது.

‘பெண்ணியம்’ என்ற சொல் சமூகத்தில் தவறாகப் புரிந்துகொண்ட நிலையில் வாழ்வியலி லிருந்து விலகிவிடுவதற்கான அபாய நிலை ஏற்படு கிறது. அந்த அபாயத்தைப் போக்கும்படி பல பெண் கவிஞர்கள் தங்களது தெளிவான கருத்துக்களைக் கவிதைகள் மூலம் தடம் பதித்துள்ளன.

பெண்ணுரிமை குறித்த பெண்ணியச் சிந்தனைகள் இன்று உலகமெங்கிலும் பரவி நிற்கின்றன. பெண்ணியத்தைச் செயல் வடிவ மாக்கிட விழையும் பெண் புதுக் கவிஞர்களாக ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட பெண் படைப் பாளர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

இன்றைய நிலையில் குடும்பம், சமூகம் போன்றவற்றில் சமத்துவம், விடுதலை, மதிப்பு போன்றவற்றைப் பெற்றுத் தங்கள் வாழ்வைச் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதைப் பெண்ணியம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

பெண் கவிஞர்கள் காதல், பெண் சிசுக் கொலை, வேலையில்லாத் திண்டாட்டம், மனிதம், வரதட்சணை, நடப்பியல் கூறுகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்களாக உள்ளார்கள்.

‘பெண் என்பவள் மென்மையானவள்’ என்று கூறுவது அவளுக்கு எதிரான ஆயுதம். பெண் களுக்கு எல்லா வகையிலும் உரிமையுள்ளது. தங்கள் கல்வி நிலை, திருமணம், வேலை இவற்றைத் தேர்வு செய்வதில் தெளிவாக இருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு தங்களின் கனவுகள், ஆசைகள் நிறைவேறாமல் போகும் போது,

“என் பெயரே மறந்து போனேன்

 என் மணவிழாவில்

 நான் தொலைந்து போனேன்

 ஆனாலும் யாருமே என்னை

 தேடவேயில்லை.”

ஆணாதிக்க சமூகத்தில் தொலைந்து போகும் பெண்ணின் அவலத்தைக் கவிஞர் தாமரை அழுத்தமாகக் கூறியுள்ளார்.

“நீந்த தெரியாவிட்டால் என்ன?

 வெள்ளம் சொல்லித்தரும்

 வா!”

என்று ஆணாதிக்க அடிமைகளால் ஒடுக்கப்பட்ட பெண்களின் கைவிலங்குகளை உடைத்தெறியும் சப்தமாக உள்ளது கவிஞர் தாமரையின் கவிதை.

மௌனம்தான் பெண்; அவளது சிக்கல்களும் சிந்தனைகளும் மொழியின் அடி ஆழத்தில் மௌனமாய் உறைந்து கிடக்கின்றன. உதடுகள் பிரிந்து பேச முடியாமல் மனதில் கட்டுண்டு கிடக்கும் பெண்ணின் உணர்வுகள் மொழியில் தங்களைப் பதிவு செய்துகொள்ளும் உரிமையை இழந்து நிற்கின்றன. ஒரு ஆணுக்குப் பெண் தொண்டு செய்வது என்பது கடமை. ஆனால் அடிமைகளாக வளர்த்தெடுக்கப்படுவதை ‘தேடல்’ என்ற கவிதையில்,

“அர்த்த நாரீஸ்வரனின்

 அழகிய பாதியாய்

 அமர்ந்திருப்பவள்

 அவனுள் அடங்கிப்போனது

 போல்தான் நாமும் ----------

 ஏற்றி வைக்கப்பட்ட தென்னவோ

 உச்சாணிக் கொம்பில்

 உள்ளதென்னவோ துணை மந்திரியாய்”

இப்படிப் பெருமை பாராட்டப்பட்டுச் சிறுமைப்படுத்தப்படும் பெண் குடும்ப அமைப்பில் இவ்வாறாக இருப்பதைக் கவிஞர் கனிமொழி கவிதையிலிருந்து அறியலாம்.

இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்களில் பெண்களைப் பெரும் சுமையாகக் கருதும் போக்கே நிலவுகின்றன. இதன் இறுதிக் கட்ட நிகழ்வே, நமது மானுடத்தை உலுக்கி எடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பெண் சிசுக் கொலை என்ற சமுதாய சீர்கேடு ஆகும். இச்சீர்கேட்டின் தாக்கம்பற்றிக் கனிமொழி குறிப்பிடுகையில்,

பெண் குழந்தைகள் இருந்தால், நாளை அவர்களுக்குத் திருமணம், செய்யவேண்டிய சீர், வரதட்சணை இவற்றால் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நினைத்தே நமது குடும்பங்களும் பெண் குழந்தை என்றாலே நிராகரிக்கின்றன.

கருவின் இனப் பரிசோதனை செய்து, அதைக் கலைக்கவும் செய்யும் சில மையங்கள். இதை 50 ரூபாய் முதலீடு செய்யுங்கள் 50,000 ரூபாய் மிச்சப் படுத்துங்கள் என்று அறிவுபூர்வமான தொழில் முதலீடு போல விளம்பரம் செய்கின்றனர்.

அகிம்சா மூர்த்திகளையும், வீதிக்கு ஆயிரம் பெண் தெய்வங்களையும் கொண்ட நம் அன்னை இந்தியாவில்தான் பெண் குழந்தையா, கொன்று போடு என்ற நிலை நிலவுகின்றதையும் மன வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.

இந்நிலையில் நம் சமூகம் இருந்தால் மக்கள் தொகையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஆண் களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புண்டு. இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலையில் பெண்ணுக்காகப் போட்டி அதிகமாகி அவளது நிலையும் மதிப்பும் உயரலாம். எனவே இச்சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்ணினத்தை மதித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு குறிக்கோள் இருத்தல் என்பது அவசியமாகிறது. பெண்கள் இச்சமூகத்தில் தங்கள் காலில் நிற்பது என்பதுதான் அவர்களின் எதிர்காலத்தில் ஏற்பு உடையது. அதன்படி பெண்கள் கல்வியில் உயர்ந் தாலும்

‘இலக்கிலாமல்

அம்புகளை

எய்து

இற்று விழுந்தன

நம்பிக்கைகள்’

வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதையும், அம்சப் பிரியா விளக்கியுள்ளார்.

பெண்களாகப் பிறந்துவிட்டு பெண்களிடமே வரதட்சணை வாங்குவது என்பது வேடிக்கையான ஒன்று.

‘ரோஜாக்களே

இதழ்களைக் கொட்டி

தேய்ந்து போவதைவிட

இதழ்களோடு காய்ந்து

போவது மேல்’

‘பணமாக அல்லாமல்

மணமாக முடிக்கும்

ஆண்களை மட்டும்

பெற்றெடுங்கள்

பெண்களே’

என்று கவிஞர் தீபா வரதட்சணையால் பெண் களுக்கு ஏற்படும் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் வரதட்சணை வாங்குதல் குற்றம், கொடுப்பது குற்றம் என்று சட்டம் பிறப்பித்து, தகுந்த தண்டனையை அளித்தால் மட்டுமே பெண் களைக் காப்பாற்ற முடியும். அதற்கான அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

புதுக்கவிதை கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டு பெண் கவிஞர்களின் கவிதைகளின் கருத்துக்கள் புது வெள்ளமாய்ப் பொங்கி வருகிறது. பழம் மரபுகள், சடங்குகள் வாழ்வியல் முறைகளை விளக்கும் புதிய புரட்சியுடன் கவிதைகள் அமைந் துள்ளன. இருப்பினும் பெண் கவிஞர்களின் கவிதையில் அவ நம்பிக்கையின் குரலே ஒலிக்கிறது.

பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றால் பெண்ணுரிமை சாத்தியம், அதற்குப் பெண் எல்லாமாக மாற வேண்டும். அதே போல் பெண் ‘பேதை’ மென்மையானவள் என்று சில வேளை களில்தான் ஈடுபட முடியும் என்ற எண்ணங்களை மாற்ற வேண்டும்.

பெண் முன்னேற்றத்திற்கு சமூகம் தடையாக இல்லாமல் அவர்கள் வளர்ச்சியை பெருமையோடு வரவேற்க வேண்டும்.

‘பெண்ணியம்’ என்பது ஆண்களை எதிர்ப்பதும் வீட்டு வேலை செய்யாமல் இருப்பதும், ஆண் களை விட மேலோங்கி இருப்பதும், என்று எப்படி, எப்படியோ புரிந்துகொள்கிறார்கள். மேலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதும் தவறான கருத்து, ஆண், பெண் இருவரும் தங்களது சுதந்திர உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக அவரவர் எண்ணங்களுக்குத் தகுந்தாற்போல சமூகப் பிரச்சினைகளுக்காகத் தீர்வு காண்பதற்குப் போராட வேண்டும். சமூக நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆணுக்கு ஒரு பெண் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

“பெண்ணடிமை தீரும் மட்டும்

 பேசுந் திரு நாட்டில்

 மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே”

என்ற பாவேந்தரின் கூற்றை நினைவில்கொண்டு பெண்ணடிமை நீக்கிப் பெண்களைக் காப்போமாக.

Pin It