இந்த நூல் ஏழு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் என்றாலும் தொகுப்பாகத் தெரியாது, ஒரு பொருளைக் கொண்ட முழுமையான ஆய்வு நூல் போன்றிருக்கிறது.

தமிழரின் சமய மரபுகளில் வெறியாட்டம் பழங்காலத்தில் எவ்வாறு கொள்ளப்பட்டது; அதனுடைய தொடர்ச்சியாகிய இன்றைய சாமியாட்டத்தோடு எவ்வாறு பொருந்தி நிற்கிறது; குறி சொல்லுதலும் பொருந்தி வருகிறது என்று காட்டப்பட்டு, இம் முறையே அக்காலத்திலிருந்து இன்று வரை சமயப் பண்பாட்டில் சடங்காகி வருவது தெளிவாக்கப் பட்டுள்ளது. நாட்டுப்புறத் தெய்வங்களில் நன்மை செய்வனவும் உண்டு; தீங்கு செய்வனவும் உண்டு. இதே தான் பண்டைய இலக்கியங்கள் முன்வைக்கும் திணைசார் சமய ஒழுங்கமைப்பில் காணப்படும் தெய்வங்களாகக் கொள்ளப்பட்ட முருகன், அணங்கு, சூர், வரையர மகளிர், கடவுள் ஆகியவை மக்களை அச்சமூட்டியும் தீண்டித் துன்புறுத்தி வந்ததாகவும் நூல் தெளிவாகக் காட்டுகிறது.

மானிடவியலாளர் பண்டைய யுகத்தில் சமய வடிவங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்துத் தத்தம் பார்வையில் வெவ்வேறு தோற்றக் கோட் பாடுகளை முன் வைத்தனர். அவை, ஆவி வழிபாடு, உயிரியம், குலக்குறியியம், இயற்கை வழிபாடு ஆகும். இவற்றில் குலக்குறியியலில் குறிக்கப்படுவதுதான் பழங்காலத்து மன்னர்கள் சூடிய மாலைகளாகும். ஆத்திப் பூவோ, பனம் பூவோ, வேப்பம் பூவோ எவையாக இருப்பினும் அவற்றாலான மாலையே குலக்குறிதான் என்று ஆசிரியர் தெளிவாக்குகிறார். அந்தந்த அரசர்களின் குலத் தெய்வங்களோடு தொடர்புடையதுதான் இந்தப் பூக் கொண்ட மரங்கள். குலத் தெய்வத்தோடு தொடர்புடையது வேந்தர் குடிகள். ஆகவே அந்தக் குடிகளைக் குறிப்பிடவே தெய்வக் குலக் குறியாகிய மரங்களின் பூமாலையை இவர்கள் சூடிக் கொண்டார்கள். மேலும் காவல் மரங்களும் அவர்களின் குலக்குறிகளே ஆகும். ஆகவேதான் போர்க்கு முன் அந்தக் காவல் மரத்தை வெட்டினால் மன்னனுக்குக் கோபம் வரும். போரிடச் செல்வான். காவல் மரத்தை வெட்டுவது குலத்தைச் சிதைப்பது போன்றது என்ற நிலையில்தான் அவனுக்குக் கோபம் வருவது. இதை ஆசிரியர் ஆ.தனஞ்செயன் எடுத்துக்காட்டி விளக்கி ஆராய்ந்திருப்பது முதன்மை ஆய்வாகும். போற்றுதற்குரியது.

பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததும், பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும் குலக்குறி தான். இதை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் சரியாகப் பொருத்திக் காட்டவில்லை. இளகிய மனத்தால் மயில் குளிரால் நடுங்குகிறதே என்று போர்வை போர்த்தவில்லை. தன் குலத் தெய்வதோடு தொடர்புடைய குலக்குறி என்பதால் தான் அதைச் செய்தான். இதே போன்றுதான் பாரியும் முல்லைக்குத் தேர் கொடுத்தான்.

“சங்க காலத் திணைசார் முதன்மைநிலைத் தெய்வங்கள், தொல்காப்பியரின் தலைமைக் கடவுள் கோட்பாடு” என்று இப்பகுதியில் ஒரு கட்டுரை உள்ளது. இந்நூலிலேயே சிறந்த ஒப்பற்ற கட்டுரை. இதை நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக்கலாம். தொல்காப்பியர் நான்கு நிலங் களுக்குத் தானே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் தெய்வங்கள் என்று குறிப்பிடுகிறார். இன்னொரு நிலத்திற்குத் தெய்வம் எங்கே? திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகியவற்றைத் தானே குறிப்பிடுகிறார். சிவன் எங்கே? இத்தெய்வம் தானே சிந்துவெளியிலிருந்து தொடர்ந்து இடம் பெற்று இருக்கும் கடவுளாகக் கருதப்படுகிறது. இந்தக் கேள்விகளைக் கேட்டு இவையெல்லாம் நிறுவனச் சமயங்கள் வந்தபின் வந்தவை. இங்கேயே இருந்த தெய்வங்களைச் சங்க இலக்கியம் பட்டியலிடுகிறது. நடுகல் போன்ற தெய்வங்களும் வழிபாடுகளும் தாம் இங்குள்ள தெய்வங்கள், இந்நிலையில் பண்டைத் தமிழகத்தில் ஒரு தெய்வக் கோட்பாடு இருக்க வில்லை என்று நூலாசிரியர் தெளிவாக்குகிறார்.

கொற்றவை வழிபாடு பழந்தமிழ்த் தொகை நூல்களில் இல்லை. ஆனால் ஆசிரியர் தொல் காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியல் குறிப்பிடும் (4) கொற்றவையைக் குறுந்தொகை (345 : 3-5)யில் வரும் “விடர்முகை அடுக்கத்து விறல் கெழு சூலி” வரியிலுள்ள சூலியைக் கொற்றவையாகக் கொள்கிறார். இது கொற்றவை ஆகாதே.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்” என்று மருத நிலக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடப்படும் வகையில் வேந்தன் புனித நிலை ஊட்டப்பட்டதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதே போன்று சங்க இலக்கியங்களின் பின்புலத்தில் ஆதார வேர்களோ, சமயத் தொடர்ச்சியோ இல்லாமல் தனித்து நிற்பது தொல்காப்பியர் குறிப்பிடும் நெய்தல் நிலக் கடவுள் வருணன் ஆகும் என்கிறார்.

“இலக்கியத்தில் மக்கள் வாழ்க்கை : தொல்லியல் பண்பாட்டு நிலவியல் அணுகுமுறையில் பட்டினப் பாலை” என்ற கட்டுரையில் இலக்கியம் குறிப்பிடும் பட்டினம் - காவேரிப் பூம்பட்டினம் இன்றுள்ள பட்டினம் போன்று இருக்கிறது என்று காட்டப் பட்டுள்ளது. மீனவர் வாழ்க்கை, குடியிருப்பு போன்ற எல்லா நிலைகளும் ஒப்பிடப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல கட்டுரை. இதே போன்றதுதான் “பண்பாட்டுச் சூழலியலும் நெய்தல் திணைப் பாடல்களும்” என்ற கட்டுரை. ஐவகை நிலங்களின் பண்பாட்டுச் சூழல் தெளிவாகக் காட்டப்பட்டு அதில் நெய்தல் திணைப் பாடல்கள் குறிப்பிடும் பண்பாட்டுச் சூழலில் மக்கள் வாழ்க்கை காட்டப் பட்டிருக்கிறது.

“இலக்கியத்தில் பழமரபுக் கதைகள்” கட்டுரையும் நல்ல கட்டுரை. பழமரபுக் கதைக்கும் புராணக் கதைக்கும் உள்ள வேறுபாடு காட்டி, பழமரபுக் கதையில் ‘சிபி’யின் வரலாறு சிவபுராணத்திலும் புத்த ஜாதகக் கதையிலும் கூறப்பட்டிருப்பதையும் தொடர்புப்படுத்துகிறார். புறநானூற்றில் நான்கு பாடல்களில் இக்கதை வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். சிலப்பதிகாரத்தில் வருவதையும் குறிப்பிடுகிறார். மேலும் இக்கதை கூறும் நிகழ்வு சோழ நாட்டில் தொடறிப்பட்டு என்னும் ஊரில் நடந்தேறிய இது பற்றிய வாய்மொழிக் கதையையும் ஆசிரியர் கூறுகிறார். தொடை அறுபட்டுத் தான் தொடறிப்பட்டு ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் மனுநீதிச் சோழன் கதை, நன்னன் பெண் கொலை புரிந்தது, பொற்கைப் பாண்டியன் கதை ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றன. சிலப் பதிகாரத்தில் கூறப்பட்ட சிவபுராணக் கதை, புறநானூற்றின் பழமரபுக் கதையாக ஆக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகார காலத்தில்தான் இந்தக் கதையுள்ள பாட்டு புறநானூற்றில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆகவே இது இடைச் செருகலாகும்.

சங்க இலக்கியத்தில் பண்பாட்டுச் சூழலியல் கோட்பாட்டைக் கொண்டு ஆராயப்பட்டிருக்கும் இந்நூல் ஆய்வாளர்களும் இலக்கிய மாணவர்களும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

ஆசிரியர் : ஆ.தனஞ்செயன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.80.00

Pin It