நாம் இனிச் செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்வி செயலாற்றத் துடிக்கும் எல்லா இயக்கங்களும் தலைவர்களும் முன்வைக்கிற கேள்விகள்தான். தோழர் லெனின் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிற நோக்கில் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி ஒரு நூலும் கொண்டு வந்தார்.

‘தொழிற்சங்கங்களைப் புரட்சியின் பள்ளிக் கூடங்கள்’ என்பார்கள். இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேதான் பொது வுடைமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இன்று அக்கட்சித் தொழிலாளர்களுக்குச் சலுகைகள் பெற்றுத் தருவதாகவும் ஓரளவு உரிமை பேணு வதாகவும்தான் விளங்குகின்றன.

புரட்சி என்பது ருஷ்ய வடிவிலோ, சீன மாதிரி யிலோ இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியாவின் சாதிகள், மதங்கள், தேசீய இனங்கள் என்பதைக் கணக்கில் கொண்டு மாறுபட்ட போராட்டங்கள் நிகழலாம். ஆனால் மாற்றத்திற்கான நம்பிக் கையையும், போராட்டத்தையும் ஒரு கம்யூனிஸ்ட் கைவிடலாகாது.

கம்யூனிஸ்டின் நம்பிக்கை என்பது மதவாதியின் நம்பிக்கை போன்றதன்று, அது கற்பனையின் பேரில் எழுகிற கனவன்று. நடைமுறையிலிருந்து தேர்வது.

தோழர் புதிய ஜீவா அவர்கள் எழுதியுள்ள ‘இன்று... இப்போது... என்ன செய்வது?’ என்ற இந்த நூல் பல்வேறு தலைப்புகளில் தொழிற் சங்கங்களின் செயல்பாட்டையும், தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் ஆராய்கிறது.

இக்கட்டுரைகளில் மார்க்சியப் பெரு நூல்களைத் துணைக்கழைத்துக் கொள்ளாமல் தொழி லாளர் வர்க்கத்தின் நடைமுறை சார்ந்த அனுபவங் களை முன்வைத்துச் சிறு சிறு தலைப்புகளில் மாற்றத்துக்கான இலக்கை நோக்கி நகர்த்திச் செல்கிறார். இக்கருத்துக்கள் தொழிற்சங்கப் பிரச்சினைகள் என்ற வட்டத்துக்குள் சுழலாமல், தொழிலாளர் பலருள் படிந்து போயுள்ள நல்வினை, தீவினை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி ஒரு பண்பாட்டு மாற்றத்துக்கான வித்துகளையும் கொண்டு இயங்குகிறது.

‘யாருடைய உப்பு’ என்கிற கட்டுரையில் தொழிலாளிகள் முதலாளிகளுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்ற உபதேசத்தை உடைத் தெறிகிறார். இதில் தொழிலாளர்களுக்கு உப்பாகும் முதலாளியின் மூலதனம் அதன் ஆதி அந்தம் அனைத்தையும் மிக எளிமையாக விளக்குகிறார்.

தொழிலாளர்களுக்காக எழுதப்பட்ட இந்நூல் இதன் எளிய நடை, நுண்பொருளைச் சொல்லும் திறனில் நூலாசிரியரின் ஆற்றல் வெளிப்படுகிறது. அவர்களுக்கிடையிலான சொல்லாடல்கள், நம்பிக் கைகள் அவர்கள் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் இவற்றை முன்னிறுத்தி எழுத்துகளை இயக்குவது புதிய ஜீவாவின் அனுபவத்தினாலன்றி வேறு எதனாலும் சாத்தியப்பட்டிருக்காது.

எப்போது போராட வேண்டும், உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தை இல்லாத அல்லது குறைவான காலத்தில், முதலாளி ஆட்குறைப்பு, கதவடைப்பு ஆகிய உத்திகளையே நிறைவேற்றக் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பான். அக்கால கட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் தொழிலாளி போராட முனைவது முதலாளிக்கு ஏதுவான காரணமாகிவிடும் என்று விளக்குவது தொழி லாளர்கள் ஏற்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

இதுபோலவே உலகமயமாக்கலில் உலக முதலாளிகள் ஒன்றுபட்டு நின்று உலகத் தொழிலாளர்களைச் சுரண்டுவது போலத் தொழிலாளர் களும் ஒன்றுபட்டு முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்க வேண்டும். இதற்குச் சென்னையில் ஹூண்டாய் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக தென்கொரியத் தொழிலாளர்கள் போராடியதைச் சான்று காட்டுகிறார். உலக மயத்துக்குப் பிறகு கம்யூனிசத்துக்கு முடிவு கட்டி யாகிவிட்டது என்ற முதலாளித்துவ கணிப்புகள், இதுபோன்ற போராட்டங்களால்தான் பொய்த்துப் போகும்.

உலகமயம், சோசலிச நாடுகளைச் சிதறடித்து விட்டது என்கிற மற்றொரு செய்தியையும், பல்கேரியா போன்ற நாடுகளில் நடக்கும் போர்க்குணம் கொண்ட போராட்டங்களை எடுத்துக்காட்டி மறுக்கிறார். கம்யூனிஸ்டுகள் ஆளும் மக்கள் சீனத்தின் முதலாளியச் சரிவுகளையும் அங்குள்ள கம்யூனிஸ்டுகள் - தொழிலாளர்கள் அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாது தொடர்ந்து போராடுவதையும் முன்வைக்கும்போது வாடிய நமது நம்பிக்கைகள் துளிர்க்கின்றன.

புதிய ஜீவாவின் இதழியல் துறை அனுபவங்கள் பாரதிக்குக் கிடைத்ததைப் போல உலக நடப்பு களைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு பார்வையை வழங்கி இருக்கிறது.

தொழிலாளர்கள், நாட்டு மக்கள் உரிமை களையும் தமது வர்க்க நலன் கருதியும், இடதுசாரிச் சார்போடு இருக்க வேண்டிய அவசியத்தை வலி யுறுத்துகிறார். நாடாளுமன்ற முறையில் - அதாவது தேர்தல் முறையில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். நாடாளுமன்ற முறையில் - அதாவது தேர்தல் முறையில் உள்ள பயன்களையும் சொல்கிறார். ஆனால் தேர்தல் முறைகளில் இது வரையிலும் முதலாளியமே வென்று வருவதையும், சில மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களும் முதலாளிய மைய அரசின் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்த முயலும் கொடுமையையும் நாம் பார்க்கிறோம். இது குறித்து இன்னும் உரத்த சிந்தனைகள் தேவைப் படுகின்றன. அத்துடன் ஆளும் கட்சியாகும் இடது சாரிகள் தொழிலாளியப் போர்க்குணத்தை வரிப் பதற்கு மாறாக முதலாளிய ஊழலையும், அழுக் கையும் சுமக்கிற அவலத்தையும் பார்க்கிறோம். ஆயுதந்தாங்கிய போராட்டமா, இல்லையா என்ற கேள்விக்கப்பால் கம்யூனிஸ்டுகளின் மக்கள் விடுதலை நோக்கும், அதற்கான அர்ப்பணிப்பும், போராட்டமும் இன்னும் கூர்மையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய சூழல் இன்று நம்முன் நிற்கிறது. இருக்கும் நிலைக்கு எதிராக எல்லா வகைகளிலும் போராடுவது என்பதே காலம் நமக்கு விதித்திருக்கும் கட்டளை.

இந்நூல் தொழிலாளர்களிடம் முதன்மையாகவும், கட்சிகளிடமும், மக்களிடமும் பொது வாகவும் சென்றடைய வேண்டும். இது குறித்து உரத்த விவாதங்கள் நாம் செய்ய வேண்டிய வழிகள் குறித்த தெளிவைக் காட்டலாம். புதிய ஜீவா இன்னும் இதுபோன்ற நூல்களை எழுத வேண்டும் என்று தோழமையுடன் வேண்டுகிறேன்.

இன்று... இப்போது... என்ன செய்வது?

ஆசிரியர் : புதிய ஜீவா

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.150/-

Pin It