இன்றைய தமிழ் நாவலில் முக்கியமாக இடம் பெறும் போக்கு பின் நவீனத்துவம் சார்ந்ததாகும். மாஜிகல் ரியலிசம், மையம் தவிர்த்த நாவல், பல மையங்களில் நகரும் நாவல், விளிம்புநிலை நாவல், இனவரைவியல் நாவல் என்றெல்லாம் இதுவகை செய்யப்படுகிறது. இலக்கியம் என்பது ஒரே நேர்க் கோட்டில் இயங்குவது சரியல்ல என்று கூறும் காலம் இது. இந்த பாணியிலான நாவல்கள் புதிர் வாதமாகவும், இருண்மை நிறைந்தவையாகவும் உள்ளன. இதற்கு இடதுசாரி எழுத்தாளர்களும் இரையாகியுள்ளனர். இந்தப் போக்கினைப் பின் பற்றுபவர்கள் யதார்த்தவாதம் வன்முறையானது என்று கூறி அதனை எதிர்க்கின்றனர். அதிலும் யதார்த்த வாதத்தின் வளர்ந்த கட்டமான சோஷலிச யதார்த்த வாதத்தினை மறுக்கின்றனர். அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமல்ல சமுதாய நிகழ்வுகளைத் தனித்தனி யாகவே காண்கின்றனர். இதனை தலித் நாவல் களிலும், பெண்ணிய நாவல்களிலும் காண்கின்றனர். தலித்துகளது சாதியப் பழக்கங்கள், ஒடுக்குமுறை அனுபவங்களை நுணுக்கமாக வர்ணிப்பது, பெண் களது அவலநிலையை வர்ணிப்பது ஆகியன மட்டுமே நாவல் என்று கருதுகின்றனர். இவற்றில் இலக்கற்ற அல்லது தவறான இலக்கு நோக்கிய கலகக் குரல் மட்டுமே எழுப்பப்படுகிறது. மரபு சார்ந்த ஆக்க பூர்வமான மதிப்புகள் சிதைக்கப்படுகின்றன. மொத்தம் என்பது மறுக்கப்பட்டு, தனியன் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. இவற்றிற்கான இயங்கியல் உறவு மறுக்கப்படுகிறது. இந்த நாவல்கள் விமர்சன யதார்த்த வாதத்தினை வளப்படுத்துகின்றன. ஆனால் கருத்தியல் ரீதியாகக் குழப்பமாகவே உள்ளன.

இந்தச் சூழலில் வெளிவரும் நாவல்தான் டி.செல்வராஜின் ‘தோல்’ என்பது, “மலரும் சருகும்” “தேநீர்” “மூலதனம்” என்ற வரிசையில் வந்துள்ள நாவல் இது. இந்த நாவலின் கலை நோக்கும், இலக்கிய நோக்கும் வெளிப்படை யானது. இது பற்றி டி.செல்வராஜ் பல இடங்களில் கூறியுள்ளார். அவரது இலக்கிய நோக்கு சோஷலிச யதார்த்த வாதம் என்பதை ரியலிசம் பற்றி அவர் கூறியுள்ளதைக் காணும் பொழுது தெளிவாகிறது.

“...ரியலிசம் என்பது விஞ்ஞான பூர்வமானது; இயக்க பூர்வமானது. சமுதாயத்தையும், இயற் கையையும் விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பதே ரியலிசம்.” (தேநீர் - முன்னுரை)

“இந்த நாவலை ஒரு தலித் படைப்பு என்று கொண்டாலும் அல்லது இது வர்க்க இலக்கியம் என்று கொண்டாலும் ஒரு படைப்பாளி என்ற வகையில் நான் ஏற்றுக்கொண்ட சோஷலிச யதார்த்த வாதம் என்ற விஞ்ஞான பூர்வமான இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையிலே இந்தப் படைப்பை நான் உருவாக்கியுள்ளேன். (தோல் - முன்னுரை)

செல்வராஜின் இந்தக் கூற்றிற்கு ஏற்ப இந்த நாவல் அமைந்துள்ளது. ‘பஞ்சும் பசியும்” என்ற நாவலில் ரகுநாதன் நெசவாளர் பிரச்சினையை எடுத்துக் காட்டினார். உழைக்கும் விவசாயிகள் பிரச்சினையை பொன்னீலன் “கரிசலிலும்” கு.சின்னப்பபாரதி “தாகத்திலும்” எடுத்துக்காட்டினர். இந்த நாவலில் டி.செல்வராஜ் தோல் தொழிற் சாலையில் பணிபுரியும் உழைக்கும் மக்களது பிரச்சினையை விவரிக்கிறார். அதே சமயத்தில் 1931வது ஆண்டிலிருந்து 1951வது ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, தேச விடுதலைப் போராட்ட வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு ஆகியன பின்புலமாக இடம்பெறுகின்றன.

பச்சைக்கிளி என்ற பெண் கற்பழித்துக் கொல்லப் படுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. அறியா மையிலும் அடிமைத்தனத்திலும் மூழ்கியிருக்கும் இந்த அடித்தள மக்கள் ஸ்தாபனமாக ஒன்று இரண்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதை இந்த நாவலில் ஆசிரியர் சித்திரிக்கிறார்.

இம்மகளது ஆதரவற்ற நிலையை நேரடியாக மிகைப்படுத்தாமல் செல்வராஜ் விவரிக்கிறார். அதே சமயத்தில் இந்த ஆதரவற்ற நிலையைக் காட்டுவதற்குப் பொருத்தமான படிமங்களையும் கையாளுகிறார். உதாரணத்திற்கு ஒன்று தரலாம்.

“குளத்தில் ஒசேப்பும் அவள் சேக்காளிகளும் நிர்வாணமாக ஜலக்கிரீடை ஆடி, ஓடிப் பிடித்து விளையாடியதும், விளையாட்டின் நடுவில் தொடு வானத்து வரையில் பிச்சிட்டிச் சிதறலாகக் கிடக்கும் நட்சத்திர மண்டலத்தை அள்ளி மடியில் சொருகிக் கொண்டு மலையடிவாரத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடி வருகையில் மலைக் கோட்டையைச் சுற்றி ஆகாயத்தில் பறக்கும் கழுகுக் கூட்டம் அவளையும் சேக்காளிகளையும் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் ராட்டினம் ஆடுகையில் யாரோ ராட்சத உருவம் அவளையும் நண்பர்களையும் பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டு போவது போல் கனவு கண்டு உடல் வியர்க்கக் கண்விழித்துப் பார்க்கிறாள்” (தோல் : 36)

இந்தக் கனவுக் காட்சி அடித்தள மக்களது விடுதலை வேட்கையையும், அவர்கள் முதலாளித்துவச் சுரண்டலுக்கு உள்ளானதையும் விளக்குவது போன்று அமைந்துள்ளது.

இம்மக்களை ஒன்று திரட்டும் தலைவர்களாக சங்கரன், இருதயசாமி, வேலாயுதம், கந்தசாமி, தங்கசாமி ஆகியோர் இடம்பெறுகின்றனர். இவர் களது வழிகாட்டுதல் தோல் தொழிலாளிகளுக்கு புதிய வேகத்தினை அளிக்கிறது. ஒற்றுமையின் பலத்தினை அவர்கள் உணருகின்றனர். வர்க்கப் போராட்டம் சாதி மத பேதத்தினைக் கடந்து இடம்பெறுகிறது. மறுகோடியில் முதலாளிகள் வாளாயிருக்கவில்லை. தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையைக் குலைக்க வன்முறையைக் கட்ட விழ்த்து விடுகின்றனர். தலைவர்கள் கைது செய்யப் படுகின்றனர். தொழிலாளிகள் தாங்கமுடியாத சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். ஆனால் இறுதியில் தொழிலாளி வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுகிறது. இது நாவலின் உள்ளடக்கம் ஆகும்.

இந்த நாவலில் தலித் பிரச்சினையை ஆசிரியர் கையாண்டாலும், அது சாதீய உணர்வைத் தூண்டு வதாக இல்லை. மாறாக அது பொருளாதார நிலையில் தலித்துகளை மேம்படுத்தும் போராட்ட மாகவே அமைந்துள்ளது. இதனை வலியுறுத்துவது போன்று செல்வராஜ் பின்வருமாறு கூறுகிறார்.

“பெரும்பாலான தலித் படைப்புகள் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, இம்மக்களின் அவமானங்களையும் அவலங்களையும் மட்டுமே சித்திரிப்பதன் காரணமாக தலித் இலக்கியவாதி களில் ஒரு சாரார் தலித் இலக்கியமானது பின் நவீனத்துவ இலக்கியக் கோட்பாட்டுக்கு உட்பட்டது என்றும், நுண் அரசியலாகப் பார்க்கப்பட வேண்டிய இலக்கியப் போக்கு என்றும் வகைப்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான இலக்கியக் கோட்பாடாகும்” (தோல் - முன் : VIII).

இந்த விமர்சனத்தினை முன்வைக்கும் டி.செல்வ ராஜ், இதற்கு மாற்றாக சோஷலிச யதார்த்த வாதத்தினைக் காண்கிறார். இதன்படி, இந்த நாவலில் கதைமாந்தர்களைப் படைத்துள்ளார். இதன் கதைமாந்தர்களின் எண்ணிக்கை 117. இதுவே இது ஒரு இதிகாசத் தன்மையுள்ள நாவல் என்பதைக் காட்டுகிறது. இதன் கதைமாந்தர்கள் வகைப்பாடானவர்கள். இதன் மையமான பாத்திரமான சங்கரன் என்பவருக்குப் பின்னால் ஒரு பி.ராமமூர்த்தியோ, என்.டி.வானமாமலையோ, சண்முகமோ ஒளிந்துகொண்டிருக்கலாம். இந்த நாவலில் இடம்பெறும் வேலாயுதத்திற்குப் பின்னால் ஜீவாவோ, பி.சீனிவாசராவோ, நல்லகண்ணுவோ ஒளிந்துகொண்டிருக்கலாம். தங்கசாமிக்குப் பின்னால் பாலன் ஒளிந்து கொண்டு இருக்கலாம். இதேபோன்று தான் ஒசேப்பு போன்றவர்கள். இவர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.

இந்த நாவலில் சமுதாய ஆய்வு ஆழமாக இடம் பெறுகிறது. அதன் தொடர்பாக விமர்சனமும் இடம் பெறுகிறது. சுபாவ யதார்த்தவாதம், விமர்சன யதார்த்த வாதம், சோஷலிச யதார்த்த வாதம் ஆகியவற்றை வேறுபடுத்திக் கூறும் பொழுது பேரா.நா.வானமாமலை பின்வருமாறு கூறுவார். “சுபாவ யதார்த்த வாதத்தின் சமூக நிகழ்ச்சிகள் புறவயமாக அணுகப்பட்டுப் பதிவு செய்யப்படு கின்றன. விமர்சன யதார்த்தவாதத்தின் இத்துடன் நிகழ்காலம் பற்றிய ஆழமான விமர்சனம் இடம் பெறுகிறது. இவையனைத்தினையும் உள்வாங்கிக் கொண்ட சோஷலிச யதார்த்த வாதத்தில், புறவய அணுகுமுறை, பழங்காலம், நிகழ்காலம் ஆகியன பற்றிய விமர்சனம், வருங்காலம் பற்றிய தீர்வு ஆகியன இடம்பெறுகின்றன.”

இந்தக் கூற்றின் படி கண்டால் இந்த நாவலில் பழங்காலம் பற்றிய விமர்சனம் இடம்பெறுகிறது. நிகழ்காலம் பற்றிய விமர்சனம் இடம்பெறுகிறது. வருங்காலம் உழைக்கும் மக்களது கரங்களில்தான் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சங்கரன் வடிவாம்பாள் திருமணம் மரபுகளை உடைத்துக் கொண்டு வருங்காலத்தினை நோக்கும் ஒரு பார்வை முன்வைப்பதாக உள்ளது. இந்த விமர்சனமானது வெறும் சாதீய எதிர்ப்புத் தன்மையுள்ள விமர்சனம் அல்ல. இது சாதிகளைக் கடந்த வர்க்க ரீதியான விமர்சனம் ஆகும். சாதீய எதிர்ப்பு விமர்சனத்திற்கும், வர்க்க ரீதியான விமர்சனத்திற்கும் வேறுபாடு உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே தான் உழைக்கும் வர்க்கச் சார்பான போராட்டத்தில், பிராமணர்களும், பிள்ளை மார்களும், முதலியார்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். இவர்கள் முற்போக்கானவர்கள். இந்த ஒற்றுமைதான் உழைக்கும் மக்களது போராட்டத்திற்கு வெற்றியைத் தரும் என்பது இந்த நாவலில் எடுத்துக்காட்டப்படுகிறது.

இந்த நாவல் ஒரு புதிய பாதையை ஆழப்படுத்துவதாக உள்ளது. சோஷலிச யதார்த்த வாத நாவலின் வளர்ச்சிக் கட்டத்தில் இது வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் இடம்பெறும் நிகழ்ச்சிகளுக்குப் பின்புலமாக உள்ளது பொதுஉடைமை இயக்கத்தின் வரலாறு. இதில் இடம்பெறுபவர்கள் அந்த இயக்கத்தினை நினைவுபடுத்துபவர்கள் ஆவர். இவர்கள் மூலம் இந்த நாவல் நகருகிறது. இதனை சோஷலிச யதார்த்தவாத வரலாற்று நாவல் என்று அழைக்கலாம்.

இந்த அருமையான நாவலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தார் பாராட்டுதலுக் குரியவர்கள்.

தோல்

ஆசிரியர் : டி.செல்வராஜ்

வெளியீடு : என்.சி.பி.எச்

விலை : ரூ.375/-

Pin It