தமிழியல் புலத்தில் அண்மைக் காலமாகப் ‘பதிப்பு’ தொடர்பான - குறிப்பாகச் செவ்வியல் இலக்கிய, இலக்கணப் பதிப்புகள் குறித்தான ஆர்வமும் தேடலும் உரையாடலும் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. அவை தரவுகளாக, விவரணமாக, ,விமர்சனமாக எனப் பல நிலைகளில் நிகழ்கின்றன. தமிழ்ப் பதிப்பு வரலாற்றைத் தமிழ்ச் சமூக வரலாற்றோடு இணைத்துத் தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதில் பேராசிரியர் வீ. அரசு அவர்களின் பங்கு தனித்து அடையாளப்படுத்தத்தக்கது. அவர் இத்தனை காலம் தான் கற்றறிந்த முறைமைகளைத் தனது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வெளியிடக் காரணகர்த்தாவாக இருக்கிறார். பேராசிரியர் அவர் களது இவ்வகையான உரையாடலுடன் அமைந்த அணிந்துரையைக் கொண்டு இ.சாமுவேல் பிள்ளையின் ‘தொல்காப்பிய நன்னூல்’ என்னும் நூல் அண்மையில் மறுபதிப்பாக வெளிவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

நம் தமிழ்ச் சமூகத்திற்கு அறிந்தோ அறியாமலோ இருக்கக்கூடிய ‘இயல்பான மறதி’ தமிழ் ஆய்வு களில் செயல்பட்ட முக்கிய ஆளுமைகளை, ஆய்வு களைப் பெயரளவில் கூடப் பதிவு செய்வதில்லை. அவ்வாறு மறக்க(டிக்க)ப்பட்டவற்றுள் இ. சாமுவேல் பிள்ளை அவர்களின் தொல்காப்பிய நன்னூல் பதிப்பு (1858) குறிப்பிடத்தக்கது, இப்பதிப்பு.

-      தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் நச்சினார்க் கினியருரை மட்டுமே வெளிவந்த சூழலில் தொல்காப்பிய நூல் முழுமையையும் முதன் முதலில் வெளிக் கொண்டு வந்தது.

-      மொழிநூல் ஆராய்ச்சி அடிப்படையில் எல்லீஸ், கால்டுவெல் முதலானோர் திராவிடமொழிக் குடும்பத்தை இந்திய மரபிலிருந்து தனித்து அடையாளப்படுத்திய சமகாலத்தில் (1856) இப்பதிப்பு (1858) வெளிவருகிறது.

-      பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வடமொழி யோடும் வடமொழி மரபோடும் ஒப்பிட்டுப் பேசப்பட்டன. ஆனால் அதன் பிறகு மொழி நூல் ஆராய்ச்சி முறைமையைப் பின்பற்றித் தமிழ் மொழிக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டன. இதனால் இரண்டு விஷ யங்கள் சாத்தியமாயின. ஒன்று ஐரோப்பியர் களால் தமிழ்மொழியை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றொன்று மொழி நூல் ஆராய்ச்சி முறையையும் ஆங்கில மொழியையும் பயன்படுத்தித் தமிழ்மொழியின் தனித் தன் மையை ஆங்கிலேய - ஐரோப்பிய அறிஞர் களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்த முடிந்தது. இவ்வாறான பணியை இப்பதிப்பும் செய்கிறது. இதனை ‘இந்நூல் ஐந்திர பாணி நீயம் என்றும் சமரசபாஷிய சித்தாந்தம் என்றும் இனிப்பெயர் பெறும் பெற்றிற்கேற்ப உத்தேசித்து, வடமொழி வழக்கும் தமிழ்மொழி வழக்கும் ஐங்கிலிய வழக்கும் கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பந்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப் புகுந்திருக்கு முரை நூலுக்கு முதற் பிரயத்தனம்’ என்னும் நூலின் முகப்புரையே உறுதி செய்கிறது.

ஒரு மொழி அல்லது இனம் ஏற்றுக்கொள்ளப் படும் புதுமையான விஷயங்களைக் கொண்டிருக் கின்ற / ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற மொழி அல்லது இனத்துடன் தன்னையும் அடையாளப் படுத்திக் கொள்வதன் மூலமாக, தான் தடைகளில் இருந்து மேலெழுவதற்கான / அதிகாரம் பெறுவதற் கான சாத்தியங்கள் அதிகம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழி ஐரோப்பியத் தன்மைகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதனை இப்படியாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. (திருவள்ளுவர், சாக்ரடீஸ் முதலான தத்துவவாதிகளுடனும் கம்பர் மேலைநாட்டுக் கவிஞர்களுடனும் ஒப்பிடப்பட்டுப் பேசப்படுவது இந்நூற்றாண்டுகளில் நிகழ்ந்தன) இலக்கணப் பதிப்புகளில் இவ்வாறான (வடமொழி - தமிழ் - ஆங்கிலம்) நுட்பமான ஒப்பீட்டைச் செய்த முதல் நூல் இதுவே.

-      தமிழரின் தொன்மையையும் (அக,புற) பண் பாட்டையும் மீள்கட்டமைக்கப் பயன்படும் பழந்தமிழ் இலக்கணத்தை மக்கள் பயன்பாட்டு இலக்கணமான நன்னூலுடன் ஒப்பிட்டு இந்நூல் வெளிவருகிறது. தமிழ் மரபின் தொன்மை யான அடையாளமான தொல்காப்பியத்தையும், தொல்காப்பியத்துள் நுழைவதற்கான திறவு கோலாக நன்னூலையும் இந்நூல் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளது. அதேபோல் தொல் காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இந்நூல் தெளிவாகச் சுட்டு கிறது. இலக்கண நூல்களுள் முதல் ஒப்பீட்டு நூலாகவும் இது விளங்குகிறது.

இந்நூல் தொல்காப்பிய நன்னூல் மூலத்தை மட்டும் கொண்டிருந்தாலும் சாமுவேல் பிள்ளைக்கு உரைகள் குறித்த விரிவான பயிற்சியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முடிபியலில் ‘Standard Authors and Commentators’’ என்னும் தலைப்பின்கீழ் சுப்பிரமணியன், அகஸ்தியன், தொல்காப்பியன் உள்ளிட்ட பன்னிரு படலத்தின் பன்னிரு ஆசிரியர்கள் தொடங்கி இரேனியூசையர், பாவரீசையர் வரை யிலான நூலாசிரியர்கள் மற்றும் உரையாசிரியர்கள் குறித்து அறிமுகம் தருகிறார். அதேபோல் 1847 இல் நன்னூல் மொழிபெயர்ப்புப் பதிப்பொன்றை வால்ற்றர் ஜாய்ஸுடன் இணைந்து சாமுவேல் பிள்ளை வெளியிட்டுள்ளதனைப் பதிப்புரை பதிவு செய்கிறது. இம்மொழிபெயர்ப்பில் இடம்பெற்ற சங்கரநமச்சிவாயர் உரை இந்நூலில்தான் முதன் முதலாக அச்சாகிறது என்பதே இவரது உரைப் பயிற்சியைப் புலப்படுத்தும். அதேபோல் இவர் ‘தொல்காப்பிய நன்னூலில்’ ஒப்பிடுவதற்குப் பயன் படுத்திய இலக்கணக் கொத்து (1886), இலக்கண விளக்கம் (1889) முதலான நூல்களும் இந்நூல் வெளி வரும் காலத்தில் (1858) அச்சாகாமலேயே இருந்தன என்பது அவரது இலக்கணப் பயிற்சியையும் சுவடிப் பயிற்சியையும் உணர்த்தும்.

சாமுவேல் பிள்ளை இந்நூலில் ‘Prospectus’ என்னும் பகுதியில் பன்னிரண்டு செயல் திட்டங் களைக் குறிப்பிட்டுள்ளார். நூல் வடிவம் பெறாத சுவடிகளைப் பதிப்பிப்பது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத வளங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது, ரிக்வேதத்தைத் தமிழில் கொண்டுவருவது, பழந் தமிழ் மற்றும் தற்கால நூலாசிரியர்கள் குறித்த மதிப்புரைகளைச் செய்வது முதலான செயல் திட்டங்கள் அவரது பரந்த செயல்திட்டத்தையும் சிந்தனையாழத்தையும் அடையாளப்படுத்தும். தனது பதிப்பகத்தைக் ‘கிரந்தமந்தணகூடம் - Tamil Museum and Review of Oriental Philology’’ என அறிமுகப் படுத்துவதன் மூலம் மொழிநூல் ஆராய்ச்சி வழியே அவர் தமிழ் அடையாளத்தைக் கண்டடைந்த விதத்தை அறியமுடிகிறது. மேலும் தனது பதிப்பகத்தை Tamil Museum எனக் குறிக்கும் ஓர் அறிவுஜீவியின் பிரம்மாண்டமான கனவையும் உணரமுடிகிறது.

இத்தனை சிரத்தையாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட ஓர் அறிஞரை, அவரது பதிப்பை அவரது சமகாலம் தொடங்கி இன்றுவரை உரை யாடலுக்கு உட்படுத்தாதது ஏன் என்னும் கேள்வி எழுகிறது. ஒருவருடைய செயல்பாட்டை எதிர் மறையாகப் பதிவு செய்வதைவிடப் பலமடங்கு கொடுமையானது அதனை மௌனப்படுத்துவதே. சாமுவேல் பிள்ளைக்கு அது நிகழ்ந்திருக்கிறது. அவர் தனது சமகாலத்தவர்களான சரவணப் பெருமாளையர், தாண்டவராய முதலியார், மகா லிங்கையர் உள்ளிட்டோரை ஆய்வாளர்களாகத் தனது நுலில் பதிவு செய்கிறார். ஆனால், இவரது சமகாலத்தில் வெளிவந்த தொல்காப்பியம், நன்னூல் பதிப்புகளிலோ அல்லது பின்னர் வந்த தொல் காப்பிய நன்னூல் ஒப்பீட்டுப் பதிப்புகளிலோ இவரது பெயரைக் குறிப்பிடவில்லை. இந்த மௌனப் படுத்துதல் குறித்த விரிவான உரையாடல் அவசியம்.

இத்தனை விவாதங்களையும் புரிதல்களையும் உருவாக்கும் வரலாற்று முக்கியத்துவமுள்ள நூலை ஆய்வாளர்கள் இரா. வெங்கடேசனும் வெ. பிரகாஷும் மறுபதிப்புச் செய்துள்ளனர். தமிழாய்வுலகத்தில் மறக்கப்பட்ட நூலைப் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட தோடு அதனைச் சமகாலப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இவர்கள் பதிப்பித்ததும் குறிப்பிடத் தகுந்தது. அச்சுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் சுவடியில் இருந்தது போலவே பத்தி பத்தியாகச் சாமுவேல்பிள்ளை வெளியிட்ட நூற் பாக்களைச் சீர் பிரித்துப் பதிப்பித்திருப்பது, மூல நூலில் இல்லாத செய்யுள் முதற்குறிப்பகராதி, செய்யுள் குறியீட்டு விளக்கம் முதலானவற்றைச் சேர்த்திருப்பது அவர்களின் பதிப்பு நுட்பத்திற்குச் சான்று. தெளிவும் நுட்பமுமற்று ஏற்கனவே வெளி வந்த ஒரு நூலைப் பணம்போட்டு வெளியிட்டு விடுவதனாலேயே தங்களைப் பதிப்பாசிரியர்களாக அறிவிக்கும் தன்மையினால்தான் பதிப்புக்கும் பதிப்பாசிரியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ‘தொல்காப்பிய நன்னூல்’ போன்ற பதிப்பாசிரியர்களின் வருகைதான் பதிப்புக்கும் பதிப்பாசிரியர்களுக்குமான மரியாதையையும் புரிதலையும் வழங்கும்.

இந்நூலில் தமிழ்ச் சமூக வரலாற்றுப் பின் புலத்தில் இப்பதிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பேரா. வீ. அரசுவின் அணிந்துரை, தமிழ்ப் பதிப்பு வரலாறு குறித்த தரவுகளின் அட்டவணையைப் போற்றும் ‘ஒற்றைப் புரிதலை’ தகர்க்கும். இவரது, தமிழ்ப் பதிப்பு வரலாற்றைத் தமிழ்ச் சமூக வரலாற்றோடு இணைத்த தொடர்ச்சியான உரை யாடல்கள் தனித்து அடையாளப்படுத்தத்தக்கன. அதேபோல் ஆய்வாளர்களின் பதிப்புரை தன் அனுபவமாக மட்டுமல்லாமல் நூல் உருவாக்கப் பின்புலம் மற்றும் நூலின் கட்டமைப்பு உள் அடக்கங்களைத் தெளிவுபடுத்துகிறது. மேலும், மிகக் குறைவான பிழைகளுடனும் நேர்த்தியான முகப்பட்டையுடனும் என்.சி.பி.எச். நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது மதிக்கத்தக்கது. நூலின் பின்னட்டையில் செவ்வியல் தமிழ் நூல் வரிசையின் கீழ்ப் பத்து நூல்களின் பெயர் தரப் பட்டுள்ளன. அவை பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சு வடிவம் பெற்ற பின்னர், ஒரே மூலநூல் எவ்வாறு வெவ்வேறு வகையான அடையாள அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை வெளிப்படுத்தும் ஆவணங்களாக அமையும் என அவற்றை எதிர்பார்க்கிறோம். பேராசிரியர்களை மட்டுமல்லாது தகுதிமிக்க இளம் ஆய்வாளர்களையும் இனம் கண்டறிந்து அவர்களின் நூல் களையும் வெளியிடும் என்.சி.பி.எச் - இன் பணி என்றும் மதிக்கத்தக்கது.

தொல்காப்பிய நன்னூல்

ஆசிரியர் : இ.சாமுவேல் பிள்ளை

பதிப்பாசிரியர் : இரா.வெங்கடேசன்

வெ.பிரகாஷ்

வெளியீடு : என்.சி.பி.எச்

விலை : ரூ.225/-

Pin It