ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களை நிபுணர் குழு அமைத்து ஆராயப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நிறுத்தி வைத்துள்ளாரா, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாரா என்று தெரியவில்லை. இது பற்றி வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு இணையங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்துள்ளனர். அவற்றிலிருந்து பார்ப்பனியக் கருத்துநிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் குதூகலிக்கின்றனர் என்று தெரிகிறது. சமச்சீர் கல்வித் திட்டம்பற்றிய கொள்கை முடிவை, அதாவது இத்திட்டத்தை ஜெயலலிதா அரசு ஏற்கிறதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரியுள்ளார்.

ஜூலை 2007-இல் அளிக்கப்பட்ட முத்துக் குமரன் குழு கல்வியறிக்கையை அடிப்படையாகக் கொண்டது இந்தச் சமச்சீர் கல்வித் திட்டம். கருணாநிதி அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மெத்தனம் காட்டியது; ஆட்சிக்கட்டிலிலிருந்து வெளியேறும்போதுதான் பாடப் புத்தகங் களை அச்சடித்தது; நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இப்போது இந்தச் சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படுவதற்கு அந்தப் பாடப் புத்தகங்களே ஒரு காரணமாகி உள்ளது. அப்பாடப் புத்தகங்களில் செம்மொழித் தமிழ் இலச்சினை இடம்பெற்றிருப்பதும், கருணாநிதி இயற்றிய வாழ்த்துப்பாடல் இடம் பெற்றிருப்பதும் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றது. பாடத்திட்டங்களில் குறைகள் இருப்பதாகக் கூறப் படுகின்றது. இவையெல்லாம் இருந்தாலும்கூட சிக்கலுக்குரியவற்றை நீக்கிவிட்டு உடனே சமச்சீர் கல்வி முறையை நடப்புக்குக் கொண்டுவர வேண்டும்; போகப்போக பாடத்திட்டக் குறைகளைக் களைந்து கொள்ள முடியும் என்பது கல்வியாளர்கள், சமூகநல விரும்பிகள் ஆகியோரின் கோரிக்கை; இதுவே நமது கோரிக்கையும் கருத்தும் ஆகும்.

இந்தப் பிரச்சினை பற்றிப் பேசும்போது இன்னொரு விசயத்தையும் பேசியாக வேண்டும். தின மலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்துநிலை சார்ந்த ஊடகங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை; அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது. தகுதி, திறன் என்பன பற்றியெல்லாம் வாய்கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொரு புறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்துநிலையையே பெரும் பகுதியினரின் கருத்துநிலையாகக் காட்ட முயற்சிக் கின்றனர். தகுதி, திறன் பற்றிய பொய்மைகளைக் கிழித்தெறிய வேண்டியது நமது கடமை. இதில் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது சக மனிதனை அடித்து நொறுக்கித் தள்ளும் போட்டியாளனை உருவாக்கும் ஒன்றன்று; சக மனிதனை நேசிக்கும் மனிதனாகக் குழந்தையை மலர வைப்பது; எச்சூழலிலும் மனிதத் தன்மையிலிருந்து இடறாமல் வாழக் கற்றுத் தருவது. கல்வி பற்றி இப்படிப்பட்ட கருத்தாக்கத்தை ஆசிரியர் களாகப் பணியாற்றும் எல்லோரிடம்கூடக் காண முடிவதில்லை. உலகமயச் சூழலில் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சிறந்த போட்டியாளனாக சிறந்த போட்டியாளன் என்பதற்குக் கொடூரமான போட்டி யாளன் என்று பொருள் உருவாக்க விரும்புகின்றனர். அதற்காகவே ஸ்டேட் போர்டு, ஓரியண்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்ஈ பாடத்திட்டக் கல்வி முறைகள். இந்தப் பாடத்திட்டக் கல்வி முறைகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி நிலையங்கள்.

தரமான கல்வியை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் கல்வி நிலையங்கள் தரமான போட்டியாளனையே உருவாக்குகின்றன; தரமான மனிதனை உருவாக்கு வதில்லை. தரமான போட்டியாளனை உருவாக்கும் எல்லாக் கல்வி நிலையங்களுமே கொடூரமான கொள்ளை நிறுவனங்கள். மனிதனை உருவாக்காத எந்தக் கற்பித்தலையும் கல்வி என்றே சொல்ல முடியாது. இப்போது தமிழ்நாட்டில் நடப்பி லிருக்கும் கற்பித்தல் முறைகள் எவையும் கல்வி முறைகளே இல்லை. நாம் ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்குவதற்கான முதல் அடிவைப்பு தான் சமச்சீர் கல்வித் திட்டம். நம் இளம் குழந்தை களை வலிமையான, உண்மையான மனிதனாக வளர இடமளிப்பதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது.